இரவுக்கு அம்மாவின் சாயல் | அமுதா ஆர்த்தி
ஓவியம்: ரம்யா சதாசிவம்
காணாமல் போனவர்களை ராஜாவூர் தாத்தா கண்டுபிடித்துத் தருவதாக சுஜியிடம் தோழி ஜெஸிகா சொன்னாள். ஊருக்குள் ராஜாவூர் தாத்தா வருகிறார் என்றவுடன் குழந்தைகளுக்கெல்லாம் ஏக குஷி.
இதுவரையிலும் பார்த்திராத தாத்தாவைப் பார்ப்பதற்கு ஏழு வயது நிரம்பிய சுஜி ஆவலாக இருந்தாள். தாத்தா வரும்போது நிறைய ஆரஞ்சு மிட்டாய் பலூன்களும் வாங்கி வருவார். வருவதை எதிர்பார்த்தபடியே வீட்டுத்திண்ணையில் சுஜியும் ஐந்து வயதான தங்கையும் இருந்தார்கள். பல முறை ஊருக்குள் வந்துபோயிருக்கிறார். ஆனால், சுஜியின் வீட்டுப் பக்கத்தில் இன்றுதான் வருகிறார்.
ஆறடி உயரம் கொண்ட பருத்த உடல்வாகுடன், இரண்டு துணிப் பைகள் தோளில் தொங்க, கையில் ஒரு பையை பிடித்து, குச்சி ஒன்றை ஊன்றியபடி ஆறுபது வயதைக் கடந்த முதியவர் நடந்து வந்தார். அவரைச் சுற்றி சுஜியின் தோழிகள் வந்தவண்ணம் இருந்தார்கள். எல்லோர் கையிலும் ஒன்றிரண்டு ஆரஞ்சு மிட்டாய்கள் இருந்தன. பெரிய வட்டமான கண்ணாடி போட்டிருந்தார். கண்ணாடிக்குள் இரண்டு வாத்து முட்டைகள் நீரில் மிதப்பதைப்போல் கண்கள். அழுக்கடைந்த ஆடை. மூக்குக் கண்ணாடியைக் காதோடு சேர்த்து நூல் வைத்துக் கட்டியிருந்தார். உருண்டையான கைவிரல்களும் பெரிய பாதமும் தளர்ந்த நடையுமாக சுஜி வீட்டு நீண்ட வராண்டாவில் வந்து உட்கார, சுற்றி நின்ற குழந்தைகளை அருகில் அணைத்துக்கொண்டார்.
அடுத்த வீட்டுப் பாட்டி நரங்கியபடியே வந்து தாத்தாவை நலன் விசாரித்துவிட்டு, ஒரு செம்பு தண்ணீர் கொடுத்தாள். தாத்தா ஒரு வாரம் இந்த ஊரில் இருப்பதாகச் சொல்ல, சுஜி அருகில் நெருங்கிவரப் பயந்து ஓரமாக தன் தங்கையின் கையைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தாள். அதைக் கவனித்த தாத்தா இருவருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார். இதுவரையிலும் முகர்ந்திராத வாசனையொன்று அவரிடமிருந்து வந்தது. அருகில் செல்லாமல் விலகியே நின்றாள். அடுத்த வீட்டு பாட்டி தாத்தாவோடு பேச்சுக் கொடுத்தாள்.
“வேலைக்குப் போன வீட்டாளுவ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. திண்ணையில ஒரு ஒறக்கம் போடும். ராஜாவூர்ல இருந்து நடவண்டியில வந்துருப்பிய.”
தாத்தா தலையை அசைத்தார். சுஜியும் அவள் தங்கையையும் பார்த்து பாட்டியிடம் கேட்டார்: “இதுக யாரு.”
“இதுகளா… பேரபிள்ள மாரிதான். தள்ளையும் தவப்பனும் ஒவ்வொரு தெசையில போயிட்டாங்க. அந்தச் சின்னத ஆறு மாசத்துல போட்டுட்டு போயிட்டா தள்ளக்காரி. அப்பனப் பெத்தவதான் வளக்கியா.”
“பாவம் இதுக. பாட்டிக்காரி வேலைக்குப் போயிட்டு வாரது வரைக்கும் பாத்துக்கிட்டேயிருக்கும்.”
“எப்பவாச்சும் தகப்பன் வருவான். எதாவது வாங்கிப் போடுவான். அம்மக்காரி எதாவது கேட்டா கோபப்படுவான். அதுனால அவளும் எதுவும் கேக்கமாட்டா.”
தாத்தா பையிலிருந்து ஊதா நிற பலூன் ஒன்றை ஊதி அவள் தங்கையிடம் கொடுத்தார்.
சரியாக பிடிக்க முடியாமல் பலூன் பறந்து மூச்சிழந்து கிழே விழுந்தது. பலூனைத் துடைத்து. ஊதி நூல் வைத்துக் கட்டி தங்கையின் கையில் கொடுத்தாள்.
தாத்தா கொண்டு வந்த பையிலிருந்து துணியை விரித்து, பையைத் தலையணையாக வைத்து சரிந்து படுத்தார்.
“எல்லாரும் போங்க சாயங்காலம் ஆறு மணிக்கு வாங்க” என பாட்டி சுற்றி நின்ற குழந்தைகளைத் துரத்தினாள்.
சுஜிக்கு அவள் தங்கையின் கையில் இருக்கும் ஆரஞ்சு மிட்டாயைத் தின்ன ஆசை. தங்கையிடம் இருந்து எதையாவது வாங்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தூரம் உன்னைத் தூக்கிச் சுமக்கிறேன் என்று சொன்னால் கொடுத்துவிடுவாள். சிறிது நேரம் மூச்சு இரைக்க தூக்கிச் சென்று மிட்டாயை வாங்கிக்கொண்டாள்.
சாயங்காலம் கலகலப்பும் சந்தோஷமும் குழந்தைகளிடம். அந்திக் கடைக்குப் போகும் பாட்டி சுஜிக்கும் அவள் தங்கைக்கும் பண்டம் வாங்கிக்கொண்டு வருவாள். சூடான மீன் குழம்பும் சோறும் கிடைக்கும். பாட்டி சமைக்கும் வரை நிலா வெளிச்சத்தில் விளையாடலாம். இரவில் வீட்டுத் திண்ணைகளில் கூடியிருந்து பேசுபவர்களின் கதைகளைக் கேட்க ஆவலாக இருப்பாள்.
நீங்காத சந்தோஷத்தைக் கொடுத்தது இரவு. அம்மாவின் சாயல் இரவுக்கு.
பாட்டி வேலைக்குச் சென்ற பின்பு, பகல் அவளுக்குள் பசியும் தீரா வெம்மையோடு கூடிய தனிமையான தாகத்தை கொடுத்தது. யாருமற்ற ஊரில் தனித்துவிடப்பட்டோம் என்ற எண்ணம் அவளுக்குள் பயத்தையே உண்டுபண்ணின. அதனாலேயே எப்போதும் தங்கையை அணைத்தபடியே இருப்பாள். பள்ளிக்குச் செல்லும் போது பல நாட்கள் தங்கையையும் அழைத்துச்செல்வாள். சுஜியின் ஆசிரியர் தங்கையை வகுப்பறைக்குள் வர அனுமதிக்காத நாட்களில் பள்ளிக்கூட வராண்டாவில் அவளை அமர்ந்திருக்கச் செய்வாள். அவளுக்காகவே பள்ளிச்செல்லாத பல நாட்கள் உண்டு. ஊரே அமைதியாக இருக்கும்போது, எங்கேயோ முட்டையிட்டு கத்தும் பெட்டைக் கோழிகளின் சத்தம். கூடவே தனிமையின் அவகாசத்தை கூட்டிக்கொடுக்கும் உக்குலுவின் குரல். நரங்கி நடக்கும் கிழவியின் வெத்திலை இடிக்கும் சத்தமே ஊருக்கு உயிர் இருக்கு என்ற ஆறுதலைக் கொடுத்தது.
விடுமுறை நாட்களில் ஜெஸிகா வீட்டில் ஒன்று கூடி விளையாடுவார்கள். வீட்டைச்சுற்றி கொன்னைமரங்கள் காணப்படுவதால் அவர்கள் விளையாட இதமான சூழல் இருந்தது. விளையாட்டில் அதிகம் இடம்பெறும் கஞ்சியும் கறியும் விளையாட்டு. சமையல் செய்து சுஜி எல்லோருக்கும் பரிமாறுவாள்.
மதியம் எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு போய்விடுவார்கள். சுஜியும் அவள் தங்கையும் அங்கேயே வெகு நேரம் உட்கார்ந்திருப்பார்கள். சமைத்த மண்சோற்றையும் கறியாக மாறிய இலைதழைகளை பார்த்தவாறே.
ஜெஸிகாவின் இரண்டு அக்காக்கள் பெரியவர்கள். வீட்டில் உண்மையான சமையல் செய்யக்கூடியவர்கள். இவர்களோடு விளையாட வருவதில்லை. ஜெஸிகா வீட்டின் மீன் குழம்பு வாசனை சுஜியின் மனதிற்குள் புகுந்து ஏங்க வைக்கும். கொஞ்சமேனும் தனக்கு சாப்பிட தரமாட்டார்களா என அங்கேயே நிற்கும் சுஜியை, ஜெஸிகா, “போய் உங்க வீட்ல சாப்பிட்டு வா” என கதவடைப்பாள். வெகுநேரம் நிற்பதை கதவின் ஓட்டை வழியே பார்ப்பாள் ஜெஸிகா. இன்னும் நின்றால் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளமாட்டாள் என்றெண்ணிப் போய்விடுவாள், சுஜி.
காக்கை, கோழிகளை அவளுக்கு பிடிப்பதில்லை. ஆளில்லாத பகல் பொழுதுகளில் தங்கை ஆய் இருக்கும்போது சத்தமாக சுஜி அழுது விடுவதுண்டு. தங்கை ஆய் இருக்கும்போது வெளியே தள்ளிக்கொண்டு ரத்தம் சொட்டும் மூலத்தை என்னச் செய்வதென்ற அறியாமல் திகைத்து நிற்கும் பொழுதுகள். வெளியில் தள்ளிக்கொண்டிருக்கும் மூலத்தை கவனியாத நேரம் கோழிகள் கொத்திவிடும். சிலநேரங்களில் துரத்தி கொத்தும் காக்கையும். அப்போது கால்வழியே பாயும் இரத்தமும் மலமும்.
அருகில் நிற்கும் பூவரசன் இலையை எடுத்து கைபடாமல் உள்ளே அமுக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று பாட்டி சொல்லிக் கொடுத்திருந்தாள். சில நேரங்களில் பூவரசன் இலை கிடைக்கவில்லை என்றால் வாழையிலை எடுத்து தள்ளிவிடச் சொல்லுவாள் பாட்டி. கோபம் கொண்டு காக்கையும் கோழிகளையும் கல்லெடுத்து விரட்டி அடிப்பாள். தங்கையின் நிலையை பார்த்து வழிப்போக்கர்களாகப் போகும் சில பெண்கள் அவள் தாயைத் திட்டுவதுண்டு.
“கல் நெஞ்சுக்காரி பிஞ்சு பிள்ளையள தள்ளிட்டா போவா, என்ன மனசு வந்துச்சோ.”
மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கண்களை மூடி, பாசிமாலையை உருட்டியபடியே முணுமுணுத்தார் தாத்தா. அக்கம் பக்கத்து வீடுகளிலுள்ள பெண்கள் மற்றும் வயதானவர்கள் அவரிடம் ஆசி வாங்கிவிட்டு, தேங்காய் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றைக் கொண்டு வந்து ஜெபித்து வாங்கிச் செல்லுவார்கள். சிலரது நோய்களைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் சொல்லுவார். வயது வருவதுபோன்ற பெண் குழந்தைகளைப் பேய் பிடித்துவிட்டதாகச் சொல்லுவார். பாசிமாலையை வைத்து அவர்கள் மேனியெங்கும் தடவி விடுவார். சுஜி வீட்டுத் திண்ணையைக்காட்டி, “இந்த திண்ணையில் என்னோடு பெண் பிள்ளைகளை தூங்க வையுங்கள். இவர்களை இரவில் துரத்தும் பேய்களை கண்டறிந்து விரட்டுவேன்” என்றார்.
மறுநாள் காலையில் அவர் அருகில் படுத்திருந்த ஜெஸிகா மற்றவர்களிடம் சொன்னாள்: “அந்த தாத்தா என் தொடைகளுக்கு இடையில் மூத்திரம் விட்டார்.” அதனால் ஊரைவிட்டு போகும்வரை தாத்தாவிடம் யாரும் நெருங்கவில்லை.
சுஜி மெதுவாக கேட்டாள்: “தாத்தா இந்த மாலையில் காணாமல் போன எங்க அம்மாவை கண்டுபிடிச்சி தருவீங்களா.”
அவள் தலையில் கைவைத்து முணுமுணுத்து சொன்னார்: “உங்க அம்மா வரணும்னா அன்னா வானத்துல தெரியுதுல்லா நிலா, அது முழுசா தெரியும்போது கேளு. அதுதான் ஊரையெல்லாம் சுத்தி வருது. கண்டிப்பா கண்டுபிடிச்சிரும்.”
அவளும் வானத்தை நோக்கினாள். நிலா முழுமையாக இல்லை.
“ஏன் தாத்தா முழுசா எப்பத் தெரியும்?”
“இன்னும் நாலுநாள்ல தெரிஞ்சிரும். நீ எண்ணைக்கும் வானத்தப் பாரு. ஆனா… நீ அதோடு தனியாத்தான் பேசணும்.”
மறுநாள் தாத்தா ராஜாவூர் போய்விட்டார். அவர்போன பிறகும் அவளுக்கு பிடிக்காத அந்த மணம் திண்ணையெங்கும் நிரம்பியிருந்தது. பலநாட்கள் முழுநிலவும் மேகமும் மறைந்து விளையாடியபடியே இருந்தது. எத்தனையோ முறை பார்த்தாலும் தாத்தா சொன்னபிறகு முழுநிலவு அவளுக்குள் நம்பிக்கையைக் கொடுத்தது.
முதல்முறை நிலவைப் பார்த்து அவளால் அழ மட்டுமே முடிந்தது. நிலவும் அவளும் நெருக்கம் கொண்டார்கள். அம்மாவை காண, நம்பிக்கை அவளுக்குள் ஆவலைத் தூண்டின. அம்மாவின் போட்டோ இருக்காவெனப் பாட்டியிடம் கேட்டாள்.
பாட்டி டிரங்கு பெட்டியில் இருந்து கருப்புவெள்ளைப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொடுத்தாள். அதில் அவளும் அப்பாவும் மட்டும் தெளிவாகத் தெரிந்தார்கள். அம்மாவின் முகம் மழைநீர் வழிந்து மறைந்திருந்தது.
எப்போதாவது வரும் அப்பாவை அம்மாவிடம் கூட்டிச் செல்லும்படியாக. கேட்டாள். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் போகும், “அப்பாவையும் காணாமல் போக வை” என்று நிலவிடம் பராதி சொன்னாள்.
சிறுமிகள் விளையாடும் டீச்சர் விளையாட்டு சுஜிக்கு பிடித்தமானது. அதில் ஆங்கில டீச்சராகிவிடுவாள். ஏன்னா ஆங்கில டீச்சர்தான் மூன்று மணிவாக்கில் தினமும் டீயும் பருப்பு வடையும் தின்பார். பாடத்தை கவனிப்பதைவிட பருப்பு வடையும் டீயும் எப்படி ருசித்து தின்கிறார் என்றே கவனிப்பாள். கீழே வடை விழுந்து விடாதபடி ஸ்டைலாக நின்று கடித்து மென்று டீயையும் உறிஞ்சிக்கொள்வார். அவளுக்குள்ளும் ஒரு ஆங்கில டீச்சர் வடை டீ குடிக்கத்தொடங்கி விடுவாள். பருப்பு வடையின் மொறு மொறுப்பு காதுக்குள் இறகு குடைவதுபோல் சத்தம். டீச்சர் தலையில் வைத்திருக்கும் வாடிய பிச்சிப்பூவின் வாசனையோடு பருப்பு வடையின் வாசனையும் வகுப்பறையிலேயே தங்கிப்போகும்.
விளையாட்டில் சுஜிக்குள் இருக்கும் ஆங்கில டீச்சர் ஒரு துண்டு சின்னக் கல்லும் சிறு மரக்குச்சி ஒன்றையும் வைத்து டீயும் வடையும் சாப்பிடுவதைப்போல் பாவனை செய்வாள்.
எப்போதாவாது வரும் அப்பா அவளைக் குளிக்க குளத்துக்குக் கூட்டிச் செல்வார். அவர் அழைத்துச் செல்லும் நேரம் மதியமும் இல்லாமல் மாலையும் இல்லாமல் இருக்கும். இடைப்பட்ட நேரம். அந்நேரம் கைலி மீன்களைப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்கும். குளிக்கச் செல்லும்போதே ஒரு பிடி சோற்றுப் பருக்கையை எடுத்துச் செல்வாள். ஒவ்வொரு பருக்கைக்கும் சண்டையிடும் கைலி மீன்கள் வெள்ளியைப் போல் பளபளத்து மினுங்கிக் கொண்டிருக்கும். ஆள்காட்டி விரல் அளவே வளரக்கூடிய கைலிமீன்கள் யாருக்கும் பயப்படாமல் தன் இஷ்டத்துக்கு கும்மாளமிடும். வாய்பிளந்து நீர் குடிக்கும் மீன்கள். சுலபமாக பிடிபடும்.
சோற்றுப் பருக்கைகள் காலியானதும் எச்சில் துப்பி விளையாடுவாள். வீடு திரும்பும் நேரம் அப்பாவின் கைகளைப் பற்றி, “ஒரே ஒரு தடவ அம்மாவ பாக்கனும்” என கெஞ்சுவாள். ஒருநாள், “சரி நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றார்.
அன்றிரவு பிறை நிலவிடம் ரகசியமாக சொன்னாள்: “பாத்துக்கிட்டு வந்து உங்கிட்ட சொல்லுவேன்.” தங்கையிடம் கூறினாள்: “அம்மாவை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வருவேன். அப்போ நாம நல்லா சாப்பிடலாம். ஒன்ன கோழி காக்க கொத்தாது. தலவாரி பின்னிவிடுவாங்க. ஒனக்கு ஜட்டி வாங்கித் தருவாங்க. எப்பவும் ஒன்ன தூக்கி இடுப்புல வச்சுக்குவாங்க. முதல்ல நா மட்டும் போய்ப் பாத்துட்டு வாரேன்.”
இடுப்புல வச்சிக்குவாங்க என்றதும் எதையோ புதிதாகக் கேட்பதைப் போல் அக்காவைப் பார்த்தாள். பாட்டி சலித்துக்கொண்டே, “கொப்பன் ஒரு ஏமாத்துக்காரப் பய. ஆமா இப்ப ஒடனே அடிச்சிபுடிச்சி ஓடி வந்துருவா கல் நெஞ்சுக்காரி.”
பாட்டியின் வசவுகளைக் காதில் வாங்காமல் வீட்டின் மூலையில் பாயைச் சுருட்டி அதனுள் பதுங்கிக் கொண்டே, அம்மாவைப் பார்த்ததும் எப்படி கூப்பிடவேண்டும் என பயிற்சி எடுத்தாள். மெதுவாக “அம்மா…” அதற்குமேல் அந்த வார்த்தையில் உயிர் இல்லாமல் இருந்தது.
தோழிகள் எல்லோரிடமும், “நா எங்க அம்மாவ பாக்கப் போறேன்” என்றாள். அவள் அம்மாவைப் பார்க்க அவர்களும் ஆவலாகத்தான் இருந்தார்கள்.
அப்பா, அவளை சைக்கிளில் உட்கார வைத்து ஆற்றங்கரை வழியாகச் சென்றார். சைக்கிளின் முன் பையொன்றில் இரண்டு தேங்காய், கீரை, மீன் மற்றும் வாழைப் பழங்கள் இருந்தன. அவள் இதுவரையிலும் சாப்பிட்டிராத ஏத்தன் வாழைப்பழம். கொஞ்ச தூரம் சென்றதும் இறங்கியே இருவரும் நடந்தார்கள். வழியெங்கும் புன்னைமரப் பூக்களும் இளம் காய்களுமாக மரக்கிளைகளில் தொங்கின. ஒவ்வொரு மரங்களை எண்ணியே கைகளைக் காற்றில் அகல விரித்து நடந்தாள். செம்மண் தரை மழையில் சிறிது நனைந்திருந்தது. ஆற்றங்கரையில் உள்ள பல செம்மண் குடிசைகள் இடிந்து கிடந்தன. சில குடிசைகளில் தோள்பை மற்றும் பழைய இத்துப்போன குடை, துணிகள், கரையான் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தன. குடிசைகளுக்கு உள்ளும் புறமும் காட்டுச் செடிகள் வளர்ந்து அழகாகப் பூத்திருந்தன. பல வண்ண வண்ணத்துப்பூச்சிகள் பறந்தவண்ணம் இருந்தன. ஆற்றின் கரையோரம் விழுந்துக் கிடக்கும் புன்னக் காய்களைப் பாவடையில் சேகரித்தபடி நடந்தாள். ஆற்றில் வெள்ளம் இல்லை. மழை நீர் மட்டும் ஆங்காங்கே தேங்கி நின்றது. புன்னைக்காய்களை மறைவிடம் பார்த்துப் பதுக்கி வைத்தாள், வரும்போது எடுத்துக்கொள்ளலாமென்று.
அப்பா சைக்கிளை ஒதுக்கி விட்டுட்டு ஆற்றையொட்டிய திருப்பு வந்ததும். ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தார். தயங்கியவளாக சுற்றும் முற்றும் பார்த்து திண்ணையில் கால் வைக்க, உள்ளே இருந்து வெளுத்த தேகம் கொண்ட ஒல்லியான பெண் ஒருத்தி வெளியில் வந்தாள். சிரித்த முகத்துடன் சுஜியை அணைத்தபோது நிரப்பமுடியாத இடைவெளி இருந்தது. “அம்மாவ பாக்கனும்னு சொன்னா அதான் அழைச்சிட்டு வந்தேன்” என அந்தப் பெண்ணிடம் சொன்னார்.
பாட்டி சொன்னதை நினைத்துப் பார்த்தாள். வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தாள். வீட்டில் விதவிதமான சமையல் நடந்தது. அந்த பெண் அவளுக்குக் கொலுசு வாங்கித் தருவதாகச் சொன்னாள். வெளியில் வந்து நின்ற சுஜியைப் பார்த்து பக்கத்துவீட்டு வயதான பெண் அழைத்து ரகசியமாகச் சொன்னாள்.
“ஏட்டி இது ஒனக்க அம்ம கெடையாது, கொப்பனுக்க கூத்தியா.”
“அப்டின்னா?”
“மயிரு, வந்த வழியே வீடு போய் சேருட்டி. கொப்பன் ஒன்ன ஏமாத்தி கூட்டி வந்திருக்கான்.”
எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வந்த வழியே திரும்பி நடந்தாள். பாதி வழி சென்றதும் அணை திறந்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தது. ஓடும் ஆற்றை நின்று கவனித்தாள். தலை சுற்றுவதுபோல் இருந்தது. புது வெள்ளத்தில் குப்பை கூழங்களும் கசடுகளும் சவாரி செய்தன. மெதுவாக நடந்தவள், மறைத்து வைத்திருந்த புன்னக்காய்களை எடுத்து ஆற்றில் ஒவ்வொன்றாக வீசி எறிய அவை மிதந்து செல்லுவதைப் பார்த்தே நடந்தாள்.
ஆற்றை ஒட்டி இரண்டு சாலைகள் பிரிந்தன. எது வழியாகப் போக வேண்டுமெனக் குழம்பிய பின், இடதுபுற சாலையில் சென்று மெயின் ரோட்டைக் கடந்து ஊர் வந்தடைந்தாள்.
அன்று பாட்டி வேலைக்குச் செல்லவில்லை. தங்கை தூங்கிக் கொண்டிருந்தாள். நடந்தவற்றைச் சொல்ல, பாட்டி திட்டித் தீர்த்தாள். “அவனுக்க எளவுதான் தெரிஞ்சதாச்சே. பச்ச புள்ளைய தனியா விட்டுருக்கான், வரட்டு” என உறுமிக்கொண்டாள்.
தங்கையின் அருகிலேயே அவளும் படுத்து உறங்க. சில மணிநேரம் கழித்து வந்த மகனோடு சண்டையிட்டாள். சிறிது நேர மெளனத்திற்கு பிறகு, “ஆத்துல அண தெறந்து விட்டுருக்கானுவ பயந்துட்டேன்” என்றார்.
சுஜியை எழுப்பி உட்கார வைத்து சொன்னார்: “கண்டிப்பா நாளைக்கு சாயங்காலம் போலாம், அவள பாக்க. பஸ் ஏறி டவுனுக்கு போறோம்.”
பஸ்சில் போகலாம் என்றதும் புது உற்சாகம். அப்பாவின் மீதுள்ள கோபம் சற்றுக் குறைய, எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.
மறுநாள் சாயங்காலம் அவளை அழைத்துச் சென்றார். மாலைநேரம் மழை மேகம் சூழ சற்று வலுத்த காற்றும் வீசிக்கொண்டிருந்தது. காற்று அவளின் பாவாடையில் நடனமாடியது. படிக்கட்டின் பக்கத்து இருக்கையில் இருந்தவாறே சக்கரங்களுக்கு இடையில் வேகமாக மறையும் தரையைப் பார்த்தவாறே இருந்தாள். முகத்தில் மோதும் காற்றோடு பேசியது கூந்தல். நடுங்கும் சிறிய கைகளை இறுக்கமாகப் பொத்திக் கன்னத்தில் ஒத்திக்கொண்டாள். பஸ் நாகர்கோவில் பஸ்டான்டை வந்தடைந்தது. கடைகளில் வண்ண விளக்குகளின் அலங்காரம். புதிய நகரம் ஒன்றை கண்டுபிடித்தவளாக வியந்தாள்.
அவள் கைகளைப் பிடித்தவாறே அப்பா நடந்தார். எங்கிருந்தோ வந்த பருப்புவடையின் வாசனை ஆங்கில டீச்சரை நியாபகப்படுத்தியது. கடைகளை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நடந்தாள். அருகிலிருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஒரு சில இருக்கைகளே காலியாக இருந்தது. இரண்டு பருப்பு வடையும் இரண்டு சாயாவும் கேட்டார். சற்று நேரத்தில் வடை வந்தது. ஒரு வடையை பேப்பரில் வைத்துக் கொடுத்தார். அவள் அந்த பேப்பரை கீழே போட்டுவிட்டு வெறும் கையில் வடையை கமத்தி நிமிர்த்தி உற்று கவனித்தாள்.
சிறிது நேரம் கழித்து ருசித்துச் சாப்பிட்டாள். ஆனால், வடை சீக்கிரம் காலியாக கூடாதே என்ற ஏக்கமும் கூடவே வந்தது. மறுகையில் வடையை மாற்றிப் பிடித்து கையை மோப்பம் பிடிப்பதை அப்பா கவனித்தார். சாப்பிட்டுக்கொண்டே இருந்தபோது ஒரு துண்டு வடை கீழே விழுந்தது. அந்த ஒரு துண்டை சட்டென குனிந்து எடுக்க, அப்பா கையை தட்டிவிட்டு எடுக்கக் கூடாது என மிரட்டினார். கீழ் விழுந்த வடைத் துண்டுலேயே கண். அதைக் கவனித்த அப்பா, “இன்னொரு வடை வேணுமா” என்றார்.
அவள் தலையசைத்ததை அவர் கண்டு கொள்ளவில்லை. அவராகவே சொன்னார்: “போகும்போது வாங்கிக்கலாம் வா.”
சாயா குடித்து கிளம்பும் போது அவர் பார்க்காத நேரம் அந்த ஒரு துண்டு வடையைக் கையில் எடுத்து மறைத்து வைத்தாள்.. இரண்டு குறுக்குச் சாலையை கடந்து ஒரு பெரிய கட்டிடம் கறுப்பு கண்ணாடி போட்டிருந்தது. அதன் வாசலின் முன்னே பல வாகனங்கள் விடப்பட்டிருந்தன.
மருத்துவமனை என பெரிய எழுதுப் பலகை ஒன்று மாட்டியிருந்தது. வெள்ளுடை தரித்த பெண்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
சுஜியை காத்திருப்பு அறையில் உட்கார வைத்துவிட்டு, ஒரு பெண்ணிடம் அம்மாவின் பெயரைச் சொல்லி கேட்டார்.
“ஓ கொஞ்சம் நேரம் உட்காருங்க.”
சிறிது நேரம் கழித்து வந்த பெண், “அவங்க மாடியில இருக்காங்க. இப்போ வந்துருவாங்க” என்றாள்.
எல்லோரும் ஒரே உடை தரித்தவர்களாக இருப்பதால் அவர்களின் முகங்களும் கூட ஒன்றுபோல இருப்பதாகவே சுஜிக்கு தோன்றின. காத்திருப்பு அறையில் சற்று பெரிய, அழகிய மீன்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. பாட்டி உலை வைக்கும்போது பானை குமிழி விடுவதைபோல் விட்டுக் கொண்டிருந்தது. மீன்கள் பல கலர் ஆடை உடுத்தி ஒய்யாரமாக வலம் வந்தன.
மீன்களைக் கண்டதும் சுஜி வந்தவேலை மறந்து அதிலேயே மூழ்கி இருந்தாள். யாரையும் அவள் கவனிப்பதாக இல்லை. கைலி மீன்கள் மேல் வந்து சட்டென நீரின் அடியில் சென்றுவிடும். இந்த மீன்களோ தனது அழகான ஆடையை நீரில் அலசி சமாதானமாக நீந்துகிறது. பல கலர்களில் நீந்தும் மீன்களைக் கைகளால் பிடிக்க முயற்சி செய்தாள். ஒரு பெண் ஓடிவந்து மீன் தொட்டியில் கை வைக்காமல் பாரு என்று அதட்டினாள். இன்னொரு பெண் இந்த புள்ள யாரு சிஸ்டர் என கேட்டாள். அருகில் வந்த அப்பா அவள் கைகளைப் பிடித்து இழுத்து, “இங்க நில்லு. அவ இப்ப வந்துருவா பாக்க வேண்டாமா” என கண்களை உருட்டினார்.
வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார். கையில் ஊசியும் பஞ்சும் இருந்தது. அருகில் வந்ததும் சுஜி அம்மாவின் முகத்தை பார்க்காமல் பாதத்திலிருந்தே கவனிக்கத் துவங்கினாள். அதற்குள் அம்மா சத்தமாக திட்ட ஆரம்பித்தாள்.
“ஏ ராஸ்கல் ஒன்ன இங்க யாரு வரச்சொன்னா. போயிரு நிக்காத. ஒனக்குத்தான் ஊரெல்லாம் பொண்டாட்டி இருக்காளே என்ன எதுக்கு பாக்க வந்த.”
அப்பா, சுஜியின் கைகளை பிடித்தபடி அமைதியாக நின்றார்.
“ஓ ஒனக்க பிள்ளையக் கூட்டிக்கிட்டு வந்து படம் காட்டுதியா? வேல நேரத்துல, ஆளுகள பைத்தியமாக்காத போ” எனக் கத்தவும், இரண்டு தாதிகள் வந்து, “ஐயோ பாவம் சிஸ்டர், அந்த பிள்ளய பாருங்க” என சமாதானம் சொன்னார்கள்.
காத்திருப்பு அறையில் இருந்து நோட்டு ஒன்றை எடுத்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு சுஜியைத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.
சுஜி, அப்பாவின் கைபிடியில் இருந்து நைசாக நழுவி ஓடிச்சென்று மீன்தொட்டிக்குள் கையைவிட்டு ஒழித்து வைத்திருந்த வடைத்துண்டை போட்டாள். வடைதுண்டு மிதந்து சென்று அடியில்போகும் போது மீன்கள் கொத்த வருவதைத் திரும்பித்திரும்பி பார்த்தே மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.
அமுதா ஆர்த்தி <amuthaarthi7870@gmail.com>