சப்தமற்ற இரண்டாம் மொழி | ஜான் போஸ்

 சப்தமற்ற இரண்டாம் மொழி | ஜான் போஸ்

ஒரே வாக்கியத்தில் 800 பக்கங்களை அடக்கிய நோபல் பரிசு நாவலாசிரியர்!

ஸிந்துஜா 

 

லை, கடவுள், குடும்பம், இளம்பருவம், இருமைக்கும் ஊழ்வலிக்கும் இடையே வெளிவர முயற்சிக்கும் நம்பிக்கை ஆகியவற்றைச் சார்ந்து எழுந்துள்ள சுமார் எழுபது படைப்புகளை ஜான் போஸ் உருவாக்கியுள்ளார். நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறார் இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் என்று பரந்துபட்ட வெளியில் அவரது எழுத்துலகம் நடமாடுகிறது. அவருடைய படைப்புகள் சுமார் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

நார்வேயைச் சார்ந்த அறுபத்தியாறு வயது நிரம்பிய ஜான் போஸ் ஆரம்பத்தில் ஒரு கிடார் வாசிக்கும் கலைஞனாகத்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஃபிடில் கூடக் கற்றுக்கொண்டார். ஆனால், வாழ்வின் திசை மாற்றிவிடும் போக்கில் அவர் பனிரெண்டு வயதிலிருந்தே எழுத ஆரம்பித்து விட்டார். இளம் வயதில் தன்னை மார்க்சிஸ்ட்டாகவும் நாத்திகனாகவும் அறிவித்துக் கொண்டார். ஒரு சமயம் அவர் தன்னை ஹிப்பி என்றும் அழைத்தார். அப்போது அவர் சமூகம் நிலைநாட்டியிருந்த வரம்புகளை மீறும் மனப்பான்மையுடன் வளைய வர முயன்றார்.

அவரது ‘சிவப்பு, கறுப்பு’ என்னும் முதல் நாவல் அன்றைய நார்வேயின் வழக்கமான யதார்த்த, சமூகக் கதைகளுடன் இயைந்து போகாது, மொழியின் செழுமைக்கும் கதைக் கருவை விட நடைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது. நாடகங்களில் அவர் கவனம் சென்ற பின்னர், உலகப் புகழ்பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நார்வேக்காரரான இப்சனின் நாடகங்கள் மேடையேறின அளவுக்கு ஜான் போஸின் நாடகங்கள் அரங்கேறின. அவர் இரண்டாம் இப்சன் என்று அழைக்கப்பட்டார். அவரது எழுத்தில் சமகால எழுத்தாளர்களான தர்ஜே வேசா, சாமுவெல் பெக்கெட், பெர்னார்ட், டிராக்கி ஆகியோரின் தாக்கம் காணப்பட்டது.

ஜான் போஸின் தலைசிறந்த நாவலாகக் கருதப்படும் ‘செப்டாலஜி’ ஏழு பாகங்களை எண்ணூறு பக்கங்களில் ஒரே வாக்கியமாகக் கொண்டு வெளி வந்து உலகைப் பிரமிக்க அடித்தது.

முதுமையில் அஸ்லே என்னும் ஓவியன் – மனைவியை இழந்தவன் – நார்வேயின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் வசிக்கிறான். ‘நாம் யார்? இந்த வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம்? ஏன் மற்றொரு வாழ்க்கையை வாழாமல்?’ என்ற கேள்விகளில் விடை தேடுகிறான். அவன் இருக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளியுள்ள பெர்ஜென் நகரத்தில் அஸ்லே என்னும் மற்றொரு ஓவியன், மனைவியை இழந்தவன், குடிகாரன் வசிக்கிறான். இந்த இரண்டு அஸ்லேக்களும் ஒருவரேதான். ஒரே வாழ்க்கையை இரண்டு விதமாக வாழ்கிறார்கள். சாவு, காதல், நம்பிக்கை அவநம்பிக்கை ஒளி, இருள் என்று அவர்கள் இருத்தலியலின் அடிப்படைக் கேள்விகளுடன் சிந்திக்கிறார்கள். வாழ்க்கை என்னும் ஆழ்கடலின் கண்டறிய முடியாத ஆழத்தை ஒரு மந்திரவாதியைப் போல், ஹிப்னாடிசக்காரனைப் போல் கண்டுபிடித்துவிட அலைகிறார்கள்.

தனக்கு நோபல் பரிசு கிடைத்ததைக் கேட்டு ஜான் போஸ் சொன்னது: “எனது மட்டற்ற மகிழ்ச்சியுடன் பயமும் சேர்ந்துகொள்கிறது. வேறு எந்தவிதப் பிரதிபலனையும் பாராமல் இலக்கியமே முதலும் கடைசியுமான குறியென்று உருவாக்கப்படும் இலக்கியத்தை இப்பரிசு அடையாளம் கண்டு கௌரவிக்கிறது.”

ஜான் போஸின் வாழ்க்கையையும் வாக்கினையும் வெளியுலகின் முன் வைக்கும் நேர்காணல் இனி…

jon fosse

நேர்கண்டவர்கள்: ரினே வெர்டிக்ட், எமில் ரூதோட்

தமிழில்: ஸிந்துஜா 

 

மூன்று பாகங்களை உள்ளடக்கிய ‘செப்டாலஜி’ (Septology) என்னும் உங்கள் நாவல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஒரு கமா, முற்றுப்புள்ளி எதுவும் இல்லாமல் முழுப் புத்தகமும் வெளியாகியிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான வாசக அனுபவத்தைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இந்த நாவலை முழு நிறைவு பெற்ற ஒரு புதினமாகத்தான் எழுத நினைத்து ஆரம்பித்தேன். பின்னர் என் பதிப்பாளர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு ஏழு பிரிவுகள் அடங்கிய மூன்று நாவல்களாக எழுதினேன். தனித்தனியான பாகங்களாக அமைக்கப்பட்டிருந்தாலும், மூன்றுக்கும் பொதுவான ஒரு சரடில் நாவல் இயங்குகிறது. முதல் பிரிவு எழுப்பும் கேள்விகளுக்கு விடை உங்களுக்கு ஏழாம் பிரிவில் கிடைக்கும். தனியாக உதிரிகளைப் போல் காட்சியளிக்கும் பிரிவுகள் வேறுபட்ட பாகங்களில் ஒன்று சேர்ந்துகொள்கின்றன. ஒருவர் முதல் இரண்டு பிரிவுகளை மட்டும் படித்து நிறுத்திக்கொள்ள முடியும்; அல்லது கடைசி இரண்டு பிரிவுகள் மட்டும். இப்படியிருந்தாலும் உங்கள் வாசிப்பு அனுபவம் பூரணத்துவம் நிரம்பிய ஒரு புத்தகத்தைப் படித்த நிறைவைக் கொடுக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரிவுகள், பாகங்கள் எல்லாம் இணைந்த ஒரு முழு படைப்பைத்தான் நான் எழுதியிருக்கிறேன்.

உங்களின் மற்றைய கதாபாத்திரங்களைப் போல செப்டாலஜியில் கதை சொல்லியாக வரும் அஸ்லே பெரும்பாலும் பயணத்தில் இருக்கிறான். பிரயாணம் என்பது ஒரு வகையில் ஒருவர் தன்னை உணர்ந்துகொள்ளும் வாய்ப்பைத் தருவதாக எடுத்துக்கொள்ள முடியும். அதே சமயம் அது குறிக்கோளற்று அலைவதையும் சுட்டிக்காட்டும் ஆபத்து இருக்கிறது. இது ஒரு எதிர்மறை வியாக்கியானத்துக்கு இட்டுச் செல்லக்கூடும். உங்களைப் பொறுத்தவரை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

நான் உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கையில் ஏதாவது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதுவதில்லை. என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கிறது. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இதை விளக்குவது என் வேலையல்ல என்றே நினைக்கிறேன். நான் ஒரு எழுத்தாளன். அவ்வளவுதான். என் வியாக்கியானம் உங்களுடையதை விட மதிப்புக் குறைவுதான் (சிரிக்கிறார்). ஆனால், நான் நன்றாக ஒரு படைப்பைச் சாதித்தால் அப்போது அதற்கு ஒரு அர்த்தம் உண்டு என்றும் அது ஒரு செய்தியைச் சொல்ல விழைகிறது என்றும் கூறத் துணிவேன். சாதாரண வார்த்தைகளில் என்னால் கூறி விட முடியாது. உங்களுடையது போலவே எனது யூகமும் இருக்கும்.

நீங்கள் ஒரு கட்டுரையில் மொழியை அடக்க முயற்சித்து மொழியைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றும் அப்போது வித்தியாசங்கள் எதுவுமற்று இறைவனைத் தரிசிக்க முடியும் என்றும் எழுதியிருக்கிறீர்கள். மொழியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் போது நாம் தெய்வீகத் தன்மைக்கு அருகில் சென்றுவிடலாம் என்று கூறுகிறீர்களா?

கடவுள் என்னும் வார்த்தையை உபயோகிக்க நான் மிகவும் தயங்குகிறேன். எப்போதாவதுதான் இறைத்தன்மை பற்றிப் பேசுகிறேன். அப்போதும் என் எழுத்து என்று வரும் போது பேசுவதில்லை. கடவுள் என் பேச்சின் எல்லைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பவர் (சிரிக்கிறார்). நான் நன்றாக எழுதும்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கையில் அங்கே இரண்டாவதாக மௌனம் நிரம்பிய ஒரு மொழியைக் கேட்கிறேன். இந்த மௌன மொழி கதையை அல்ல, அதைத் தாண்டிச் செல்வதை நீங்கள் கேட்க முடியும். மௌன மொழி, பேசுகிறது! என்னைப் பொறுத்தவரை இந்தக் கட்டம்தான் என் படைப்பைச் சிறந்ததொரு ஆக்கமாக நிலைநிறுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

செப்டாலஜியின் ஏழு பிரிவுகளையும் ஒரே வாக்கியத்தில் அமைத்திருக்கிறீர்கள். இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?

நான் எழுதும் எதுவும் அதைச் சார்ந்த உலகுடன் தொடர்பு உடையது. நிர்ணயிக்கப்பட்ட அதன் விதிகளின் அடிப்படையில் என் எழுத்து இயங்குகிறது. ஆகவே இம்மாதிரி உலகில் நான் உள்ளிருந்து தான் பணியாற்ற வேண்டும். எழுதும் போது இடைவேளை ஒய்வு என்று நான் எடுத்துக்கொள்ளும் பட்சத்திலும் அவ்வுலகிலிருந்து என்னை முற்றிலும் விடுவித்துக்கொள்ள முடியாது. ஒத்திசைவான லயத்திலிருந்து நான் வெளி வருவதில்லை. இதை விவரிப்பது கஷ்டமான காரியம்தான். ஆனால், அதன் ஓட்டத்துடன் நான் பயணிக்கிறேன்.

என்னுடைய ‘யாரோ வரப் போகிறார்’ என்னும் பிரபல நாடகத்தை நான்கைந்து தினங்களில் எழுதி முடித்துவிட்டேன். எழுதிய பிறகு எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை. எப்போதும் என் எழுத்து என்பது இப்படித்தான். செப்டாலஜி வேறு விதமாக அமைந்து விட்டது. வியன்னாவுக்கு வெளியே நானும் என் மனைவியும் ஹெயின்பர்க் என்னுமிடத்தில் வசித்தோம். இரவு முழுவதும் எழுதினேன். ஒவ்வொரு தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து மறுநாள் காலை ஒன்பது மணி வரை. பிறகு படுக்கச் செல்வேன். ஒரு மணி நேரத் தூக்கம். மதிய வேளைகளில் நான் எழுதுவதில்லை.

உங்கள் எழுத்து மிக மெதுவாக நகர்கிறது என்று சொல்கிறார்கள். எங்களுக்கோ பெரும்பாலான உங்கள் எழுத்துக்கள் அப்படியில்லை என்று தோன்றுகிறது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் ஒரு கவிஞனாகவும் நாவலாசிரியனாகவும்தான் என் பயணத்தை ஆரம்பித்தேன். திடீரென்று நாடங்கங்கள் எழுதும் ஆசை எனக்கு ஏற்பட்டது. பதினைந்து வருடங்கள் எனக்கு நாடகங்கள் எழுதுவதில்தான் மிகுந்த ஈடுபாடு இருந்தது. இது எனக்கே ஆச்சரியமூட்டிய விஷயம். ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு சாதித்தேன். பெரும்பாலும் கோடைகளில்தான் நாடகங்களை எழுதினேன். வருடத்தின் மீதமுள்ள நாள்கள், பயணம் செய்வதிலும் நாடகங்களைக் காண்பதிலும் நேர்காணல்கள் கொடுப்பதிலுமாகக் கழிந்தன.

திடீரென்று ஒரு நாள் போதும் என்று பயணங்களை நிறுத்தினேன். குடிப்பதை நிறுத்தினேன். இம்மாதிரி பல விஷயங்களை நிறுத்தினேன். நான் ஆரம்பித்த இடமான – கவிதை, கட்டுரை, கதைகளை மறுபடியும் எழுத ஆவல் பிறந்தது. முதலில் ‘விழித்தல்’ என்னும் படைப்பை எழுதி முடித்தேன். பிறகு சற்றுக் காலம் எதுவும் எழுதாமலிருந்தேன். ஒரு மாதிரி வலிமையற்றவனாக என்னை உணர்ந்தேன். எழுத்து என்பதே அறிமுகமற்ற பிரதேசத்தில் செய்யும் பயணம்தானே? ஆனால், அதற்கு நான் வலிமையற்றவனாக உணர்ந்து என்ன பிரயோஜனம்? அந்தத் தனித்த உலகில் பிரவேசிக்க, உள்ளே சென்று மாய்ந்து கிடக்க திடகாத்திர மனமல்லவா வேண்டும்? மறுபடியும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

என் எழுத்து நடை மெதுவாக இருக்கிறது என்றால் அதற்கு என்னையேதான் குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும் (சிரிக்கிறார்). நாடகங்களிலிருந்து கட்டுரை, கவிதை, கதை ஆகியவை வேறுபட்டிருக்க வேண்டும் என்று அவதானித்தேன். என் நாடகங்கள் குறும் படைப்புகள். அவற்றை முயல்வதற்கு உக்கிரமாக வேலை செய்யும் மனநிலை தேவை. நாடகத்தில் உங்கள் இஷ்டப்படி சாவதானமாக உரையாடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், நாடகம் தவிர என் மற்றைய எழுத்துக்களில் நான் சொல்ல விரும்புபவற்றை மிகுந்த நிதானத்துடன் அலசலுடன் எழுதுவது என் வழக்கம். மொழி அமைதியாகப் பக்கங்களில் இறங்க வேண்டும். செப்டாலஜியில் இதை நான் சாதித்திருப்பதாக நினைக்கிறேன்.

செப்டாலஜியில் கதைசொல்லி ஒரு பாலுறவு காட்சியைப் பார்ப்பதாக வருகிறது. ஆனால், கற்பனையாக. நீங்கள் உங்கள் மனதில் இம்மாதிரி நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்ததுண்டா? பார்க்கக் கூடாத காட்சி என்று உங்கள் மனம் சொன்னாலும் அம்மாதிரிக் காட்சியை காணும் ஆர்வம் தவிர்க்கப்பட முடியாததாக உணர்ச்சியில் கலந்திருந்ததா? 

ஓ, இருந்ததே! ஆனால், எப்போதும் என்று சொல்ல முடியாது. கதையில் விளையாட்டு மைதானத்தில் அந்த பாலுறவு காட்சி வருகிறது. அதை எழுதிய அன்றும் இன்றும் சந்தோஷமாகவே உணர்கிறேன். கதாநாயகனான அஸ்லே, அவனது இளம்பிராயத்து அஸ்லேயும் அவன் மனைவியும் பலவருஷங்களுக்கு முன்பு உடலுறவு கொண்ட காட்சியைக் காண்கிறான். கதாநாயன் தன்னை வேறொருவனாகப் பாவித்து அக்காட்சியைக் காண்பதாக எழுதியிருக்கிறேன். கதைசொல்லி அவர்கள் இருவரையும் சந்தித்துப் பேசுகிறான். செப்டாலஜி, காலத்தின் ரேகைகளை அழித்து ஒன்றிணைந்த நிலையில் வாழ்க்கையை நிறுத்தும் ஒரு கட்டத்தைக் காண்பிக்கிறது.

ஐந்தாவது பிரிவிலோ அல்லது ஆறாவது பிரிவிலோ அஸ்லே ஒரு கார் தெருவில் செல்வதை ஜன்னல் வழியாகப் பார்க்கிறான். முன்பொரு நாள் காரில் தன் ஓவியங்களை எடுத்துக்கொண்டு அஸ்லே பெர்ஜன் நகரத்துக்குச் சென்றதை இப்போது இவன் பார்க்கிறான். இத்தருணம் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஒரு தருணம். நாவலே ஒரு முக்கிய தருணம்தான்.

நீங்கள் எப்போதும் நீனாஸ்க் மொழியில்தான் எழுதுகிறீர்கள். ஒரு பொழுதும் பூக்மால் மொழியை உபயோகித்ததில்லை. நீனாஸ்க்கில் மட்டுமே எழுதுவதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் உண்டா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை. அது என்னுடைய மொழி. நான் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் பள்ளியை விட்டு வெளியே வரும் வரை கற்றதெல்லாம் இந்த மொழியில்தான். ஒரு எழுத்தாளனாக அது எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. அது வணிக மொழியாக ஒரு பொழுதும் உபயோகிக்கப்படவில்லை. உண்மையில் அது பெரும்பான்மையான கல்விக்கூடங்களில், இலக்கியத்தில், தேவாலயங்களில் பயன்படுத்தப்படவில்லை. பூக்மாலைப் போலன்றி அதிகம் பேர் இந்த மொழியை உபயோகிக்காததும் என்னைக் கவர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஜில்ஸ் டெல்சும் ஃபிலிக்ஸ் கட்டாரியும் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘Kafka: Towards a Minor Literature’. அதைப் படித்த பின் நான் நீனாக்ஸில் எழுதுவது காஃப்கா எதிர்கொண்ட சூழலை ஒத்திருந்தது போல உணர்ந்தேன்.

jon fosse

செப்டாலஜியில் கதைசொல்லி ஜெர்மானிய கலைஞனும் சித்த புருஷருமான மாஸ்டர் எக்கார்ட் பற்றி அதிக அளவில் பேசுகிறான். உங்களைப் போன்ற இன்றைய எழுத்தாளர்கள் மீது எக்கார்ட் மிகுந்த செல்வாக்கு உடையவராக இருக்கிறார். எதனால் உங்களுக்கு அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டது?

1980களில் மாஸ்டர் எக்கார்ட்டைப் படிக்க ஆரம்பித்தேன். அது மிகவும் சிறப்பான அனுபவம். என் பல்கலைப் படிப்பு முடிந்த பின்னர் அவரையும் மார்ட்டின் ஹெடக்கரையும் (ஜெர்மனியத் தத்துவஞானி) படித்தேன். எக்கார்ட்தான் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர். அவரது பார்வை தனிப்பட்டதும் அவருக்கு உரித்தானதுமானது. என் இளம் வயதில் நான் ஒரு முட்டாள்தனமான மார்க்சீயவாதியாகவும் நாத்தீகனாகவும் இருந்தேன். இது பொதுவாக அந்த வயதில் இளைஞர்கள் மீது படர்ந்திருக்கும் வியாதிதான். எழுத ஆரம்பித்த பின்தான் எனக்குப் புலப்படாத மாயம் ஒன்று என்னைப் பின்னிருந்து இயக்குவதை உணர்ந்தேன். இந்த எழுத்து எங்கிருந்து வருகிறது? நிச்சயமாக இங்கிருந்து அல்ல (இதயத்தைச் சுட்டிக் காண்பிக்கிறார்). இல்லை, இது அங்கிருந்து வெளியிலிருந்து வருகிறது.

ஒரு மனிதனாக இன்று நான் கடவுளை நம்புகிறேன். கடவுளை நம்புபவனாக என்னை அடையாளம் காண்கிறேன். அவர் அங்கும் இங்கும் எங்கும் இருப்பவர்தான். ஆனால், எக்கார்ட் போல எனக்குப் பிடிவாதமான கோட்பாடுகள் கிடையா.

என்னுடைய இந்த உணர்வுகளை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. எனவே இறைவழிபாட்டு நண்பர்கள் அடங்கிய க்வாக்கர்ஸில் சென்று சேர்ந்துகொண்டேன். இந்தக் குழுவில் உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றும் தருணமெல்லாம் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். சொல்ல ஒன்றும் இல்லையென்றால் சும்மா இருக்கலாம். ஒரு கட்டத்தில் இது எனக்குத் தேவையற்றது என்று தோன்றிவிட்டது. என் எழுத்தே ‘அமைதிக் கூட்டங்’களுக்கு நிகரானது என்று எனக்குத் தோன்றியதும் காரணமாயிருக்கலாம். நானே எனக்கான வழிபாட்டு முறைகளை அடக்கிய க்வேக்கர் என்று உணர்ந்தேன்.

பிறகு சில காலம் எழுத்தில் மட்டும் என் கவனத்தைச் செலுத்தினேன். 1980களின் நடுவில் ஒரு கத்தோலிக்கத் தேவாலயம் நடத்திய இறை வணக்க நிகழ்ச்சிக்குச் சென்றேன். அதை நான் விரும்பியதால் கத்தோலிக்கனாக மாறுவதற்கான ஒரு பயிற்சியில் சேர்ந்தேன். இதற்கும் பல வருடங்கள் கழித்து நான் கத்தோலிக்கனாக மாறினேன். எக்கார்ட் இல்லாவிட்டால் இது எனக்கு நிகழ்ந்திருக்காது. அவர் கத்தோலிக்கராகவும் ஞானியாகவும் விளங்கினார்.

நீங்கள் உங்களைக் கத்தோலிக்கராக, புனித எழுத்தாளராக நினைக்கிறீர்களா?

எனது ஏழாவது வயதில் உயிர் பிரிந்து விடும் நிலைக்கு ஒரு விபத்தைச் சந்தித்தேன். என்னை அப்போது நான் வெளியிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. நான் தங்கியிருந்த மருத்துவமனை இருந்த இடத்தில் பரவியிருந்த வெளிச்சம், அமைதி, மனமகிழ்ச்சியை ஊட்டும் இயற்கையின் அழகு இவையெல்லாம் என்னை வெகுவாகப் பாதித்தன. சாவுக்கு அருகில் சென்ற அந்தத் தருணம்தான் என்னைப் பின்னாளில் எழுத்தாளனாக்கியது என்று நினைக்கிறேன். அவ்வாறு நேர்ந்திராவிட்டால் இன்று நான் இம்மாதிரி நிலையை அடைந்திருக்க மாட்டேன். அவ்வளவு ஆழமான வடுவை ஏற்படுத்திய அனுபவம். இந்த உணர்வை நான் மார்க்சிஸ்ட்டாக இருந்த நாள்களில் வெகுவாக மறுதலிக்க முயன்று தோற்றேன்.

என் எழுத்துதான் என் மனநிலையை மாற்றியது என்று சொல்ல வேண்டும். நான் கத்தோலிக்க இறை வணக்கத்தை விரும்பினாலும் என்னை வெகுவாகக் கவர்ந்தது என்னவோ மரபுவழித் திருச்சபையின் இறை வணக்கமே.

சக எழுத்தாளர்கள் தாங்கள் மெய்யியல் புனைவுகளை எழுதுவதாகக் கூறிக்கொள்கிறார்கள். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

எனக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளன், மினிமலிஸ்ட் என்ற அடைமொழிகள் தரப்பட்டுள்ளன. ‘மெதுவான உரைநடைக்காரன்’ என்ற பட்டத்தையும் கூட. என்னை யாரும் எதுவாகவும் அழைக்க வேண்டியதில்லை. நான் என்னைக் கிறிஸ்துவனாக அறிவித்துக்கொள்கிறேன். ஆனால், அதுவும் கஷ்டமாகத்தான் எனக்கு இருக்கிறது. அது ஒரு குறுகிய வாதம் போலாகிக் காணப்படுகிறது. ஒரு விதத்தில் நான் மினிமலிஸ்ட்; இன்னொரு விதத்தில் நான் பின்நவீனத்துவவாதி – ஏனென்றால் எனக்குத் தெரிதாவைப் பிடிக்கும்! என்ன வேண்டுமானாலும் அழைக்கட்டும். ஆனால், என் எழுத்து ‘அதுமாதிரி இருக்கிறது’ என்று குறிப்பிடப்படுவதை நான் விரும்பவில்லை.

உங்களின் மாற்றம் அஸ்லேயினுடையதா?

இப்போதெல்லாம் உங்கள் அனுபவங்களை உங்கள் எழுத்தில் கொண்டு வருவதும், நடப்புக்கு அருகே பிரதிபலிப்பதாகக் காட்டிக்கொள்வதும் பிரபல உத்திகளாகி விட்டன. ஆனி எர்னாக்சின் படைப்புகளைப் போல. அவருடைய ‘ஆசை’ என்னும் குறுநாவலை சமீபத்தில் படித்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. அது நல்ல படைப்பு. ஆனால், என்னைப் பொறுத்தவரை என் அனுபவங்களை அப்படியே என் எழுத்தில் கொண்டு வர இயலாது. ஏனென்றால் எழுத்து என்பதே ஓர் பரிணாம வியக்தி. என் எழுத்தின் மூலம் என் உலகிலிருந்து வேறுபட்ட இன்னொரு பிரபஞ்சத்தைப் பார்க்கிறேன். இருக்கும் இவ்வுலகிலிருந்து தப்பி வெளியேறிச் செல்ல எழுத்து உதவுகிறது. எழுத்தின் மிகப் பெரிய சாதனையே அதுதான். நான் என்னிடமிருந்து வெளியே போய் என்னைப் பார்க்க விரும்புகிறேன். இருக்குமிடத்தில் அமிழ்ந்துகொண்டு பேசுவதற்கு அல்ல.

என் வாழ்க்கையை நான் எழுத உபயோகிக்கிறேன் என்பது உண்மைதான். நான் சொல்வது என்ன என்று எனக்குத் தெரிகிறது. இருந்தாலும் செப்டாலஜி ஒரு கண்டுபிடிப்பு – இவ்வளவுக்கும் நான் ஒரு சித்திரக்காரனல்ல. என் வாழ்க்கையை உபயோகிக்கையில் நான் படித்து அறிந்தவைகளை எழுத விரும்பவில்லை. ஒவ்வொரு செயலுக்கும் பரிணாம வளர்ச்சி இருக்கிறது. நான் எழுதுகையில் என் அனுபவங்கள் ஒன்றுமில்லாமல் போகின்றன. தட்டையாகக் காட்சியளிக்கின்றன. என் அனுபவங்களுக்குச் சிறகுகள் கிடையா. ஆனால், என் எழுத்து சிறகடித்துப் பறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் எழுத்து சுயசரிதையின் நிழல் அல்ல. மாறாக நான் எழுதுவது புனைவுகளை மட்டுமே.

ஆனால், நீங்கள் எழுதுவது சுயபுனைவுதான் என்று கூறுகிறார்களே?

சிலர் அம்மாதிரி நினைத்துக்கொண்டு படிக்கிறார்கள். என் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்திருந்தால் அம்மாதிரிக் கூற மாட்டார்கள். நான் ஒரு தாயைப் பற்றி எழுதினால் அது என் அம்மாவைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது உண்மை அல்ல. ஒருக்காலும் அம்மாதிரி நான் எழுத மாட்டேன். நான் அம்மாதிரி செய்ய அனுமதிக்கப்படவில்லை. மற்றொருவரின் வாழ்க்கையை என் கதையில் கொண்டு வர என்னால் இயலாது. சில குணாம்சத்தைச் சாயலாகக் கொண்டு வரலாம். ஆனால், அது பரிணாம வளர்ச்சியை சுட்டிக் காட்டுவதாக இருக்க வேண்டும். சுயபுனைவில் ஒருவித நெறிமுறை தவறிய அம்சம் அடங்கியுள்ளது.

மறுபடியும் நீங்கள் ஏன் நாடகம் பக்கம் திரும்பினீர்கள்?

செப்டாலஜியை எழுதி முடித்த பின் நாடகம் ஒன்று எழுத வேண்டும் என்று அடக்க முடியாத ஆவல் எழுந்தது. மிகப் பெரிய புத்தகம் ஒன்றை எழுதிய பின் ஒருவித வெறுமை உங்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்போதுதான் நாடகம் எழுதினால் என்ன என்று நினைத்தேன். ‘பெருங்காற்று’ என்னும் அளவில் சிறிய நாடகத்தை எழுதினேன். அதை எழுதி முடித்த போது அடுத்த ஒன்று மனதில் தயாராக இருந்தது. இன்னும் பிரசுரத்துக்கு அனுப்பாத நான்காவது நாவல் கூடத் தயாராகி விட்டது. இப்போது நான் என் மேஜை மீது முகத்தைக் கவிழ்த்து கொண்டுதான் உட்கார்ந்திருக்கிறேன். எதிர்காலத்தில் முன்பைப் போல அதிக நாடகங்கள் எழுதப் போவதில்லை, எப்போதாவது தோன்றினால் ஒழிய.

செப்டாலஜியில் நீங்கள் ‘இலக்கியத்தில் அழகாகத் தென்படுவது ஓவியத்தில் அலங்கோலமாக இருக்கிறது. ஏனெனில் இலக்கியம் அடக்க முடியாத அவ்வளவு அழகைத் தன்னுள் தேக்கியிருக்கிறது’ என்கிறீர்கள். இலக்கியத்துக்கு அளவற்ற அழகு என்று ஒன்று இருக்கிறதா?

ஆம், அவ்வாறுதான் நினைக்கிறேன். நீங்கள் எல்லாவிதத்திலும் சரியான கவிதை ஒன்றை எழுதுகிறீர்கள். அதைப் படிக்கும் போது அதன் அழகு உங்களைத் தாக்குகிறது. ஆனால், அதே சமயம் ஒரு எழுத்து புத்திசாலித்தனத்துடன் காணப்பட்டாலும் ஆன்மாவை கொண்டிரா விட்டால் அதை உங்களால் ரசிக்க முடிவதில்லை. விளம்பரங்களில் காணப்படும் சமச்சீரான முகங்களை எனக்குப் பிடிப்பதில்லை. ஒரு அழகான முகம் என்பதே சற்றுக் கோணலான சமாச்சாரம்தான். இலக்கியத்திலும் கலையிலும் அழகு என்பது கோணலில் தென்படுகிறது.

எங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.

உங்களுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. உங்களுக்கு வாழ்க்கையில் அமைதியும் எல்லா நலங்களும் விளையட்டும்.


ரினே வெர்டிக்ட், பெல்ஜிய பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்

எமில் ரூதோட், பெல்ஜிய எழுத்தாளர்

“ஸிந்துஜா” <weenvy@gmail.com>

sinthuja
ஸிந்துஜா

Amrutha

Related post