ச. ஆனந்தகுமார் கவிதைகள்
ஓவியம்: பால் க்ளீ
1. தொலைத்தல்
தொலைந்து விட்டது
தொலைத்தலென்பது
அவ்வளவு இனிமையான
நினைத்து நினைத்து
மகிழ்கிற நினைவுகளுக்குள் ஒளித்து
தேவைப்படுகிற போது
திரும்ப புரட்டிப் பார்க்கிற
புத்தகத்தின் பக்கங்களை போல்
நெகிழ்வான அனுபவமல்ல
தேடுதலென்பது அதைவிடவும்
கடினம்
மனதின் ஞாபக அடுக்குகளை
எலியைப்போல ஒழுங்கற்று
விடாமல் கிளறி கொண்டேயிருக்க
வேண்டும்
தேவைப்படாத வன்ம குரோத
ஏமாற்ற கடந்தகாலம் தான்
முதலில் குதித்துக் கொண்டு
வரும்
மற்றவற்றை புறந்தள்ளி
திரும்ப திரும்ப தொலைந்ததை
சிந்திக்க வேண்டும்
சில நேரங்களில் தொலைந்தது
உடனே தெரியாமலும்
போகலாம் புரிந்துகொள்ள
சில காலம் தேவைப்படலாம்
இப்படித்தான் புரியாமலே
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நிலையற்றவைகளை நினைத்து
வாழ்க்கை தொலைந்தது
புரியாமல்
2. வெற்றி
எதிர் வாதத்துடன் துவங்கும் உரையாடல்கள்
பெரும்பாலும் வாத
ஒவ்வாமையோடுதான்
முடிவுக்கு வருகிறது
எது சரி என்கிற பகுப்பாய்தலை விட
தவறு யாரிடம் என்கிற
வலியுறுத்தலில் தான்
வன்மம் நிறைகிறது
வார்த்தைகளில்
மீண்டும் மற்றுமொரு உரையாடலின்
ஆரம்பபுள்ளியாகவும்
அது மாறக்கூடும்
சட்டென தொலைந்து போனது
தலைக்கேறிய வெற்றிகள் உன்
தற்காலிக மௌனத்தில்
வாதங்கள் அநாதையானதில்
வெற்றிகளென்கிற முகமூடி
கிழிந்து ஒளிந்து கொண்டிருக்கும்
தோல்வி மெதுவாய் வெளிவருகிறது
அப்போதுதான் புலப்படுகிறது
உன் தயவில்தான்
வென்றதாய் நான் நினைத்தேனென்று
3. கடல்
பல்லாயிரம் துமிகள் நெய்த
சமுத்திரகிலுக்கம்
குதித்தெழும்பும் அலைமனச்சிதறல்கள்
ஆழ்கடல் அமைதி அரவத்தில்
ஆட்கொண்டு பணிந்தேகிய சங்கமம்
விரிந்து பரந்திருக்கிற
ஆசைக்கடலுக்குள் ஆர்ப்பரிக்கிற
மிதவை
நங்கூர பார்வையில்
நடுக்கடலிலும் ஊசலாடுகின்றேன்
வெட்கச்சுழியில் ஆழிப்பேரலையாய்
அடித்து செல்லும் பாய்மரகலத்தின்
பகுதியாகின்றேன்
ஒற்றைப்புன்னகையில் கரைகடந்து
உடைத்துப்போட்ட கலத்திற்கு
உயிர்பிச்சை
கடலுடன் எனக்கு காந்தர்வம்
என் கடல் நீ
4. ஆக்கிரமிப்பு
பெரும் மழை வந்தவுடன்
உள்ளே முதலில் சாரல் வந்தது
பின்பு நடுங்கி கொண்டிருந்த
பூனையை உள்ளே விட்டேன்
வெளியே எங்கே பார்த்தாலும்
வாலாட்டும் டைகரை
அனுமதித்தேன்
கூடையை விட்டு கோழிகள்
வீட்டை முற்றுகையிட்டது
எனைக் கேட்காமலேயே சாளரத்தின்
வழியே எலி ஒன்று
உள்ளே புகுந்தது
இப்போது மழை நின்றுவிட்டது
வெளியே போக யாரும்
தயாரில்லை
அடுத்த முறை பொறாமை கோபம்
ஆத்திரம் காமம் எல்லாம்
மனதிற்குள் அனுமதிக்கையில்
கொஞ்சம் கவனமாக இருங்கள்
5. சுதந்திரம்
பட்டாம்பூச்சிகள்
வானைத்தொடுகிற
ஆசையுடன்தான்
பறக்க துவங்குகிறது
பறத்தலின் அனுபவத்திற்கென
சிறகுகள் வைத்து
அரங்கேறும் கொண்டாட்ட
பண்டிகை
காற்றில் மிதக்கிற
வித்தைகள் கைவந்ததில்
மகிழ்ச்சியில்
தேனெடுத்து கடக்கிறது
மகரந்த சேர்க்கை
அகப்படுவதும் அப்போதுதான்
கயிறு கட்டியவன்
கையில் சிக்கிக்கொள்கிறது பட்டாம்பூச்சி
இப்போது வான்தொடும்
ஆசையெல்லாம் மறந்து போனது
வெறுமனே கட்டியவன் விருப்பத்திற்கு
கயிறின் நீளத்திற்கு
பறக்க முயற்சிப்பதே
சாதனையாகிறது
6. ஏமாற்றம்
போனமுறை பழனிக்கு
மாலை போட்டதாக
காணிக்கை வாங்கியவர்கள்
இன்று கன்னி சாமியாக
ஏமாற வேண்டாம் என
கண்காட்டிய நண்பனை மீறி
உண்டியலுக்கு வைத்த
பணத்தை கொடுத்து நகர்ந்தேன்
ஒருவேளை உணவுக்கு உதவியதற்காய்
அநேகமாய் கடவுள் என்னைப் பார்த்து
புன்னகைத்திருக்கக்கூடும்
7. நடிப்பு
தெருக்கூத்தில் இரண்யன்
ஒவ்வொரு முறை வயிறு
கிழிபடும் நடிப்பில்
வீறிட்டு தேம்புவாள் மகள்
இப்போதெல்லாம்
வீட்டிற்குள்ளேயே நான்
பசியில்லையென சிரித்து
கடக்கிறாள்
வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு
அவளுக்கும் நடிப்பு தெரிந்திருக்கிறது
இந்த முறை எனக்கு பதில்
என் கலை அழுகிறது
“ச. ஆனந்தகுமார்” <vidaniru@gmail.com>