பாத்திரங்கள் என்னும் எஜமானர்களும் படைப்பாளி என்னும் கற்றுக்குட்டியும் | சரமாகோ

 பாத்திரங்கள் என்னும் எஜமானர்களும் படைப்பாளி என்னும் கற்றுக்குட்டியும் | சரமாகோ

நோபல் உரைகள் | 1 | தமிழில்: ஸிந்துஜா

நோபல் கமிட்டியின் செயல்பாடு, அதைச் சார்ந்துள்ள நடுநிலைமை அல்லது இல்லாமை, படைப்பு உயர்ந்ததா அல்லது மட்டமா என்று ஒவ்வொரு முறையும் பரிசு முடிவைத் தெரிவிக்கும் போது எழும் சர்ச்சைகள் எழுந்து, எழுந்தது போல் அடங்கியும் விடுகின்றன. ஆனால், உலக இலக்கியங்களுக்குத் தரப்படும் பரிசுகள் பலவற்றுக்கும் முன்பாக நோபல் பரிசு இன்றும் ஓர் உயர்ந்த பீடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நோபல் உரைகள் எப்போதும் இலக்கிய ஆசிரியனின் காலத்திய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலைச் சூழல்களைப் பிரதிபலிக்கும் விதத்தில்தான் வெளிப்படுகின்றன. இந்த உரைகளில் காணப்படும் ஒரு பொது அம்சம் படைப்பாளிகளின் இளமைக் காலமும் அவர்களின் படைப்புகளில் ஆழமாக அது பதிக்கும் விவரணைகளும்தான். இவ்வுரைகள் வாசகர் மனதில் எழுப்பும் சீரிய சிந்தனைகளும் ஆழமான புரிதல்களும் அவற்றைப் பேருரைகளாக மாற்றி விடுகின்றன. ஆனால், அவற்றை என்றும் மாறாத புனித வாக்குகளென சடுதியில் தீர்மானத்துக்கு வரவேண்டிய அவசியத்தை உண்டாக்காது, படைப்பாளியின் நோக்கம், அவன் எழுத்து பிரதிபலிக்கும் சமூகச் சூழல், இலக்கியப் பரப்புக்குள்ளேயே நிகழும் ஒத்த அல்லது மாறுபட்ட கருத்தாழங்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்கின்றன.

நோபல் உரைகளை அம்ருதா வாசகர்களின் முன் வைக்கிறோம் – மாதம் ஒன்றாக.

ஸிந்துஜா

 

பாத்திரங்கள் என்னும் எஜமானர்களும் படைப்பாளி என்னும் கற்றுக்குட்டியும்

சரமாகோ

 

என் வாழ்க்கையில் நான் அறிந்த மிகப் புத்திசாலித்தனமான மனிதருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. வயல்களை ஸ்பரிசிப்பதற்காக, எழுவதற்கு முயலும் தினத்தின், அதிகாலை நான்கு மணிக்கு அவருடைய படுக்கையிலிருந்து எழுந்து வயலுக்குக் கிளம்பி விடுவார். கூடவே வயலில் மேய்ச்சலில் இறங்கட்டும் என்று ஆறு பன்றிகளையும் அழைத்துச் செல்வார். அவைதான் அவருக்கும் அவரது மனைவிக்கும் உதவும் விதத்தில் குட்டிகளை ஈன்றெடுப்பவை.

போர்ச்சுக்கல்லின் ரிபாட்ஜோ பிரதேசத்தில் இருந்த அசின்ஹாகா கிராமத்திலே என் தாயின் பெற்றோர் வசித்தார்கள். அவர்கள் பால்குடி மறக்கும் வரை பன்றிக் குட்டிகளை வளர்த்துவிட்டு மற்றவர்களிடம் அவற்றை விற்றுவிடுவார்கள். அவர்களின் பெயர்கள் ஜெரோனிமோ மெய்னோ, ஜோசஃப் கெய்சினா. அவர்கள் இருவரும் கல்வியறிவு பெறாதவர்கள். வீட்டின் குடுவைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் நீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும் பனிக்காலத்தில் வெளியே உள்ள பன்றிக் கிடையிலிருந்து பலவீனமான குட்டிகளை எடுத்து வந்து அவர்களது படுக்கையில் போடுவார்கள். போர்வையிலிருந்தும் மனித உடல்களிலிருந்தும் கிடைக்கும் வெப்பத்தின் அரவணைப்பில் அவை சுருண்டு படுத்திருக்கும். சாவைத் தவிர்க்கும் வகையில். அவர்கள் இருவரும் எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டுபவர்கள்தான். ஆனால், பன்றிக் குட்டிகளைக் காப்பாற்றும் அவர்களது செயலுக்குப் பின்னிருந்தது மனிதாபிமானம் என்று தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம். அவர்களது தின வாழ்க்கைக்கான உணவை சம்பாதித்துத் தரும் வல்லமையை அப் பன்றிக் குட்டிகள் பெற்றிருக்க வேண்டும் என்பதினால்தான். அவர்களையொத்த மனிதர்கள் அனைவரிடமும் இத்தகைய நினைப்புதான் வாழ்க்கையை ஒட்டிச் செல்ல உதவியாக இருந்தது.

என் தாத்தாவிற்கு நான் பல தடவைகள் உதவி புரிந்திருக்கிறேன். வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்தைப் பலமுறைகள் கொத்திப் போட்டிருக்கிறேன். தீ மூட்டுவதற்காகக் காட்டிலிருந்து மரக் கட்டைகளைச் சுமந்து வந்திருக்கிறேன். தண்ணீர்க் குழாய்கள் மூலம் நீர் பாய்ச்சுவதற்கு ஏதுவாகப் பெரும் சக்கர உருளைகளைத் தீயில் காய்ச்சினேன். கிராமத்துப் பொதுக் கிணற்றிலிருந்து நீர் சேந்தி என் தோளில் சுமந்து வீட்டுக்குக் கொண்டு வந்தேன். சோளக் காட்டுக் காவலாளிகளை ஏமாற்றிப் பல தடவை அதிகாலைகளில் என் தாத்தாவுடன் ரேக்குகளை எடுத்துக்கொண்டு போய் சோளத் தட்டைகளையும் கருதுகளையும் கயிறுகளில் கட்டித் திருட்டுத்தனமாக வீட்டுக்குக் கொண்டு வந்தேன்.

கோடையில் சில நாள்கள் இரவு உணவு முடிந்த பின் என் தாத்தா “ஜோஸ், இன்றிரவு நாம் இருவரும் அத்தி மரத்தினடியில் படுத்துத் தூங்கப் போகிறோம்” என்பார். அங்கிருந்த மூன்று மரங்களில் பெரிதாகவும் நாள் பட்டதாகவும் இருந்த மரத்தைத் தெரிவுசெய்து படுக்கப் போவோம். இரவின் அமைதியில் மரக்கிளைகள் மட்டும் அசைந்து தரும் லேசான ஒலியைக் கேட்க முடியும். அப்போது ஒரு நட்சத்திரம் எழுந்து வந்து ஒரு இலையினடியில் பதுங்கிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். என் பார்வையை வேறொரு பக்கம் திருப்பினால் வெளுத்துப் போன வானத்தில் ஓர் ஆற்றைப் போல் அந்த நிலவு நகர்ந்து போகும். பால் நிலவுப் பாதை! அது சாண்டியாகோவுக்கும் இட்டுச் செல்லும் என்று கிராமத்தில் நாங்கள் நம்பினோம். தூக்கம் வரும் வரை தாத்தா சொல்லும் கதைகள் சுவாரஸ்யமானவை; புனைவுகள், புராணங்கள், தரிசனங்கள், வன்முறைகள், தனித்தவொரு நிகழ்வுகள், மரணங்கள், போராட்டங்கள், மூதாதையர்களின் உபதேசங்கள், நூற்றுக்கணக்கான பொய்ச் சரடுகள் நிரம்பிய கதைகள் – இவை என்னைத் தூங்க விடாமலடிக்க வரும் வல்லமை பெற்றிருந்தன. அதே சமயம் அவை தாலாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாதிரி என் கண்களை முயற்சி செய்யும். என்னிடமிருந்து வரும் அரைகுறைக் கேள்விகள் நின்றதை அறிந்து நான் தூக்கத்தில் மூழ்கிவிட்டதை அவர் தெரிந்து கொள்வார். “அடுத்து என்ன?” என்று நான் கேட்கும் கேள்வி வராமலே தாத்தா தன் கதையை நீட்டிச் செல்வார். ஏதோ மறுநாள் அதை மறந்து விடுவோம் என்று பயந்தவர் போல. அந்த வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல நானும் என் தாத்தா ஜெரோனிமோவுக்குத் தெரியாத விஷயம் என்று இந்த உலகில் எதுவும் கிடையாது என்று நம்பினேன்.

அதிகாலைப் பறவைக் கீதங்கள் என்னை எழுப்பும் போது என் தாத்தா படுக்கையில் என் அருகில் இருக்க மாட்டார். அவருடைய பிராணிகளை ஒட்டிக்கொண்டு வயலுக்குப் போய் விடுவார். நானும் எழுந்த பின் போர்வையை மடித்து வைத்துவிட்டு வெறுங்காலுடன் வீட்டுக்கு வெளியிலிருந்த தோட்டத்தில் நடப்பேன். என் பதினாலு வயது வரை நான் வெறுங்காலுடன்தான் நடந்தேன். என் பாட்டி என் தாத்தா வயலுக்குச் செல்வதற்கு முன்பே செய்து வைத்திருந்த காப்பியை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி எனக்குக் கொடுப்பாள். சில சமயம் கூடவே ரொட்டியும். “நான் நன்றாகத் தூங்கினேனா?” என்று விசாரிப்பாள். என் கனவுகளைப் பற்றிச் சொன்னால் பாட்டி, “இது தாத்தா சொன்ன கதைகளின் விளைவாய் இருக்கும். கெட்ட கனவு என்றெல்லாம் பயப்படாதே. கனவு என்பதே வெறும் மயக்கம்தான்” என்பாள். அந்த சமயங்களில் பாட்டியும் புத்திசாலிதான் என்றாலும், அவள் தாத்தா எட்டிய உயரங்களை அடையவில்லை என்று நினைப்பேன். அந்த மனிதன், ஓர் அத்தி மரத்தினடியில் பேரனை அணைத்துக்கொண்டு இந்த உலகமே அவர் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போன்ற கதைகளைச் சில வார்த்தைகளில் சொல்லும் திறமை பெற்றவர் என்று நானும் அவரைப் பார்ப்பேன்.

என் தாத்தா இறந்த பிறகுதான் – அப்போது நான் வயதுக்கு வந்துவிட்டேன் – அவருக்கும் கனவுகளில் பெரும் நம்பிக்கை இருந்தது என்று உணர்ந்தேன்.

ஒருநாள் மாலையில் வாசல் கதவுப் பக்கம் உட்கார்ந்தபடி வானத்தில் தென்பட்ட நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டு என் பாட்டி – இப்போது தனிமையில் வாழ்ந்தாள் – “உலகம் அற்புதமானது. அதை விட்டுவிட்டு நான் மரணம் அடைய வேண்டியிருப்பது பெரும் கொடுமை” என்றாள். அவள் சாவதற்குப் பயப்படுவதாகச் சொல்லவில்லை. வாழ்நாள் முழுவதும் உழைத்தே வளர்ந்த அவளுக்குக் கண்ணுக்கெட்டாத சக்தியின் அருளும் அமைதியும் தனது வாழ்நாளின் இறுதியில் பிரியா விடை தருவது போலத் தோன்றிய தருணத்தைத்தான் சாவு பரிதாபத்துக்குரியது என்று சொன்னாள் போலும்! அவள் வாசல் கதவருகில் உட்கார்ந்து கொண்டிருந்த போது அம்மாதிரிக் காட்சியை இவ்வுலகில் நான் வேறெங்கும் காண முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், அவள் வளர்ந்த அந்த வீட்டில் பன்றிக் குட்டிகளைத் தன் குழந்தைகள் போல அரவணைத்துக்கொண்டு, அழகான இவ்வுலகத்தைப் பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தை மனதில் இருத்திக்கொண்டு இருந்த தருணத்தை அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். என் தாத்தா ஜெரோனிமோ – அந்தப் பொல்லாத கிழவனோ – சாவு தன்னை நெருங்கி வருவதை முற்றிலும் அறிந்தவரைப் போலத் தோட்டத்தில் வளர்ந்து நின்ற ஒவ்வொரு மரத்துக்கும் அருகில் போய் நின்று அவற்றை அணைத்துக் கட்டிக்கொண்டு கதறினார். ஏனென்றால், அவற்றைவிட்டு நிரந்தரமாகப் பிரிய வேண்டுமே என்கிற சோகத்தில் மூழ்கி இருந்தார்.

பல வருடங்கள் கழித்து என் தாத்தாவையும் பாட்டியையும் (அவள் சிறு வயதில் சொல்லவொண்ணாத அழகியாகத் திகழ்ந்தாள் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்) – சாதாரணர்களாகிய அவர்களை இலக்கியக் கதாபாத்திரங்களாக மாற்றிக்கொண்டிருந்தேன் என்று இறுதியில் தெரிந்தது. ஒரு வகையில் இது நான் அவர்களை என்றும் மறக்கக் கூடாது என்று செய்த முயற்சியென நினைத்தேன். அவர்களது முகங்களைத் திரும்பத் திரும்பப் பென்சிலில் வரைந்து வண்ணம் ஊட்டி நினைவில் எப்போதும் தங்கியிருக்கும்படி செய்தேன். தடுமாற்றமுடைய வரைபடத்தில் அவர்கள் என் வாழ்க்கையின் சலிப்பான பகுதிகளை நீக்குவதற்கு உதவினார்கள். கவர்ச்சியையும் உத்வேகத்தையும் எழுப்பும் பெர்பெர் வம்சத்துக்கு கிழவரை நினைத்து அந்த நினைவால் தாக்கப்பட்டு என் பெற்றோரையும் இவ்வாறு சித்தரித்தேன். ‘எங்களிடமிருந்த ஒரு பழைய புகைப்படத்தில் (எடுத்து எண்பது வருஷங்களாகியிருக்கும்) என் அழகான இளமையான பெற்றோர் காமிராக்காரரை நோக்கி நின்றிருக்க, அவர்கள் முகம் சற்று சீரியஸாக இருக்கிறது. ஒரு வேளை காமிராவுக்கு முன்பு முதல் தடவையாக நின்ற போது படபடப்பு ஏற்பட்டுவிட்டது போலும்! அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு முறை வர வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றஞ்சியது போலப் பிடிக்கப்பட்ட அப்புகைப்படம்! ஏனெனில், மறுநாள் வழக்கம் போல அவர்கள் வேலைப் பளுவில் மூழ்கி விட அது மற்றுமொரு நாளாகக் கழிந்துவிடும். என் அம்மாவின் முழங்கை அருகிலிருந்த உயரமான தூணில் பதிந்திருக்க வலது கையில் ஒரு பூவை ஏந்தியிருக்கிறாள். என் தந்தையின் கை என் அம்மாவின் முதுகில் பதிந்திருக்கிறது. . அவர்களின் முகங்களை வெட்கம் சூழ்ந்திருந்ததும் தெரிகிறது. புகைப்படத்தின் பின்னணி ஏதோ ஒருமுரண்பட்ட நவீனக் கட்டிட அமைப்பை வெளிப்படுத்துகிறது.’

பிறகு இவ்வாறு முடித்தேன்: ‘இதைப் பற்றிச் சொல்ல ஒரு நாள் வரும். இது என்னைத் தவிர இது வேறு யாரையும் ஈர்க்ககாமல் இருக்கக் கூடும். வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த, பன்றி மெய்ப்பாளரான பெர்பெர் வம்சத்து என் தாத்தா, மிகவும் அழகு வாய்ந்த என் பாட்டி, சீரியஸ் முகபாவத்துடன் எழில் ததும்ப நின்ற என் பெற்றோர், படத்திலிருந்து பூ, – வேறெந்த வம்சாவளியை நான் நாட வேண்டும்? வேறெந்த மரத்தின் மீது நான் சாய்ந்து கொண்டு இளைப்பாற?’

முப்பது வருஷங்களுக்கு முன்பு நான் இவ்வரிகளை எழுதினேன். என்னை உருவாக்கிய, எனக்கு நெருக்கமான இந்த மனிதர்களை அவர்கள் வாழ்க்கையை வெளியுலகம் அறிய வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதினேன். நான் எங்கிருந்து வந்தேன், எந்த மாதிரியான மனிதனாக நான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உருவாக்கப்பட்டேன் என்பனவற்றை அறிவிக்க இதைத் தவிர நான் வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றியதால் எழுதினேன். ஆனால், உயிரியல் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதல்ல. மரபணுவியலோ புதிரான பாதைகளை அடக்கிக்கொண்டு நெடும் தூரம் செல்லும் வலிமையுடையது என்பதைப் பின்னாள்களில்தான் புரிந்துகொண்டேன். என் மரபணு மரம் (இந்த வார்த்தையை நான் உபயோகிக்கத் தயங்கினாலும், அதனுடைய சாறு என்னை ஊக்குவிக்கன்றது) காலத்துடன் ஏற்பட்ட போராட்டங்களினால் அதன் பல கிளைகளை இழந்துவிட்டாலும், அதன் வேர்கள் நிலத்தடியை ஆழப் பிளந்து சென்று ஒருவரை அதைப் பற்றிய புரிதலுடன் இயங்க வைக்கின்றது. அத்தகைய ஆழ்ந்த புரிதல் உடையவர் நறுமணமிக்க பழத்தின் மேற்புறம் பறவை இனங்களுக்கான தங்குமிடம்போலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதைக் காண்கிறார். என் பெற்றோரையும் அவர்களின் பெற்றோரையும் இலக்கிய வர்ணைகளால் தீட்டும் போது அவர்களை சதையும் ரத்தமும் கொண்ட சாதாரண மனிதர்களிடமிருந்து மாற்றுகிறேன், என் வாழ்க்கையைக் கட்டமைத்த கட்டிடக்காரர்கள் என. இந்த உருவாக்கும் பணியில் நான் செல்லும் பாதையை நான் கவனிப்பதில்லை. அப்பாதைகள் கொண்டு சேர்க்கும் இடத்தில் நான் காணும் பாத்திரங்கள் தரும் செல்வங்கள், போதுமானவையோ அளவற்றவையோ, லாபமோ நஷ்டமோ, நல்லதற்கோ கெட்டதற்கோ, நான் என்கிற என்னை உருவாக்கி விடுகின்றன. அவர்களை உருவாக்கும் நான் கடைசியில் உணருவது என்னையே உருவாக்கிக்கொண்டு விட்டதைத்தான். ஒரு விதத்தில் சொல்லப் போனால் ஒவ்வொரு எழுத்தும் வரியும் வாக்கியமும் பக்கங்களும் புத்தகங்களாக வெளிப்படுகையில் நான் கையகலப்படுத்தியது என்னையேதான். அவர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் இல்லாமலிருந்திருந்தால் என் எழுத்து பழுதுபட்ட ஓவியம் என, காப்பாற்றப்படாத வாக்குறுதியென, நிலைத்துவிட்டது என்று நினைத்தது நிலைக்காமல் தடுமாறுகிறது எனத் தோற்றம் கொண்டிருக்கக் கூடும்.

இன்று அவர்கள் என் வாழ்வின் எஜமானர்கள். கடும் உழைப்பு தரும் வாழ்க்கையின் செல்வத்தைக் கற்பித்தவர்கள். நான் டஜன் கணக்கில் உருவாக்கிய பாத்திரங்கள் என் கண் முன் நடந்து செல்கிறார்கள். பேப்பரில் மசியில் உருவாகிய அவர்கள் என்னைச் சுற்றிப் படர்ந்திருக்கிறார்கள். நான் சற்றுக் கர்வத்துடன் படைப்பாளி என்று அவர்களின் கட்டளைகளுக்கு இணங்க வைத்தேன். ஆடும் பொம்மைகள் என நான் ஆட்டும் கயிற்றுக்கு ஏற்பயிருந்து அவர்கள் மீது நான் செலுத்தும் ஆக்கிரமிப்பையும் இழு விசையையும் ஏற்று ஆடுபவர்களாகி விடுகிறார்கள். இவர்களில் முதலானவனும் முக்கியமானவனுமாகிய ஒரு சாதாரண ஓவியன் – அவனை நாம் ‘ஹெச்’ என்று அழைப்போம் – ஒரு கதையின் இலக்கியப் பாத்திரமாக வருகிறான். அவனது துவக்கம் அவனாலும் ஓரளவு என்னாலும் இயக்கப்படுவது. ‘மேனுவல் ஆஃப் பெயின்டிங் அன்ட் காலியோ கிராபி’ என்னும் நாவலில் வருகிறான். எந்த விதக் கோபமோ சலிப்போ இன்றி என் எல்லைகளை வரம்புகளை அவன் நேர்மையுடன் எனக்கு உணர்த்துகிறான்.

என்னுடைய சிறிய நிலத்தைப் பதப்படுத்தி விவசாயம் செய்வதைத் தவிர வேறெதிலும் நாட்டம் காண்பிக்காத நான், அந்நிலத்தின் ஆழத்தை அதன் வேர்களைக் காண முயற்சித்தால் எனக்கும் ஏன் உலகத்துக்கும் அது தெரிவிக்கும் சாதனைகள் எப்பேற்பட்டதாக இருக்கும்? அதன் பயன்களை மதிப்பிடும் திறன் என் வசத்தில் இல்லை என்பதும் உண்மை. இத்தகைய சூழலைத் திரும்பிப் பார்க்கையில் அவனது உணர்வுகளும் எச்சரிக்கைகளும் என் வாழ்வை நிர்ணயித்த வழிகளாயின என்று உணருகிறேன்.

அலன்டேஜோவிலிருந்து வந்த ஆண்களும் பெண்களும் என் தாத்தா ஜெரோனிமோ மெய்னோ, என் பாட்டி ஜோசஃப் கெய்சினா போல உலகம் ஒதுக்கியிருந்த தாழ்த்தப்பட்டவர்களெனத் தங்கள் உழைப்பைத் தர முன்வந்து நின்றார்கள். தங்களது வலிமையான தோள்கள் கூலியைப் பெற்றுத் தரும் என்று நம்பினார்கள். அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ தகுதிக்கும் கீழான கூலிதான். நாகரிகம் மிக்க மனிதர்கள் என்று நம்பிய பணக்கார, வசதிகள் மிக்க உயர்மட்ட மனிதர்கள் எம்மவர்களின் வாழ்க்கையை ஒடித்துப் போட்டார்கள். அரசுடன் சமரசம் செய்துகொண்டு எண்ணற்ற நன்மைகளை அடைந்த தேவாலயக்காரர்கள் சாதாரண ஏழை ஜனங்களை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டார்கள். நிலச்சுவான்தார்கள், அவர்கள் பங்குக்கு ஏழைகளை ஒடுக்குவதே தமக்கு விதிக்கப்பட்ட விதி என்பது போல நடமாடினார்கள். பொய் நிரம்பிய நீதி பரிபாலனம், நிராதரவான உழைக்கும் மக்களை, அப்பாவிகளை, குடியானவர்களைத் தண்டிப்பதில் குறியாயிருந்தது. மூன்று தலைமுறை குடியானவக் குடும்பங்கள், 1974 ஏப்ரல் புரட்சியின் மூலம் சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்படும் வரை அடைந்த இன்னல்கள்… அந்த மனிதர்கள் ‘ரிஸன் ஃ பிரம் தி கிரவுண்டு’ நாவலில் உலவுகிறார்கள்.

இம்மாதிரி மண்ணிலிருந்து எழுந்து நடமாடிய மனிதர்கள் மூலமும் பின்னர் அவர்களாகி விட்ட கதாபாத்திரங்கள் மூலமும் பொறுமை காப்பது எப்படி, காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன். காலமே நம்மை உருவாக்கிப் பின்னர் அழித்து மறுபடியும் உருவாக்கி மறுபடியும் அழிக்கும் விநோதத்தை அறிந்தேன். தமது அனுபவத்தில் விளைந்த கஷ்டங்கள் இந்தப் பெண்களிடமும் ஆண்களிடமும் வாழ்க்கையின் மீது இரக்கமற்ற வெறுப்பு நிறைந்த மனோநிலையை உருவாக்கி விட்டன என்பதுதான் உண்மை. இப்போது இருபது வருடங்களுக்குப் பின்னும் இவ்வனுபவங்கள் கற்றுத் தந்தவை என் மனதில் நிலைத்து நிற்கின்றன. தினமும் நினைவில் எழுந்து அவை எனக்கு உணர்த்துவது: அலன்டேஜோவின் மிகப்பரந்த நிலங்களிலிருந்து நான் பெற்ற மரியாதை என் வாழ்வில் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் அந்த அனுபவங்கள் என்னைக் கட்டிப்போட்டுக் கட்டளை இடுகின்றது. வாழ்வில் மதிப்பைப் பெற்றுத் தரும் அனுபவங்கள் போற்றுதலுக்குரியவை.

பதினாறாம் நூற்றாண்டில் அந்தப் போர்த்துக்கீசியரிடமிருந்து – ரிமாஸ் பாடலையும் எங்கள் சமூகத்தின் மகிமைகளையும் சமூகம் எதிர்கொண்ட கடற் சேதங்களைப் பற்றியும் அரசியல் நிபுணத்துவத்தில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற இலக்கியவாதியான பெர்னான்டெ பெசோவாவிடம் இருந்து – நான் பெற்ற பாடங்கள் எவ்வளவு முக்கியமானவை! கவி லூயி வாஸ் த கேமியோஸிடம் இருந்து அவரது எளிமையைக் கற்றுக்கொண்டது எந்தவிதக் கல்வியாலும் எனக்குத் தர முடியாதது. தன் படைப்புகளை எளிமையுடன் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, தனது படைப்புகளைப் பிரசுரம் பெற உதவி கேட்டு நின்ற போது, அவற்றின் அருமை தெரியாத மூடர்களால் நிராகரிக்கப்பட்டார். கவிகளை நிராகரித்து அவர்களைக் கேலி செய்து சந்தோஷப்பட்டுக்கொண்ட முட்டாள்களாலும் கிறுக்கர்களினாலும் இவ்வுலகு நிரம்பிக் கிடந்தது. அரசனும் அவன் பரிவாரங்களும் கூட இத்தகைய மோசமான நடத்தைகளில் ஈடுபட்டவர்களாகத்தான் இருந்தார்கள். எந்தப் படைப்பாளியும் கவி லூயி வாஸ் த கேமியோவாகத்தான் அவனது வாழ்க்கையில் இருக்க வேண்டியிருக்கிறது. ‘சோபலோஸ் ரியாஸ்’ போன்ற ஈடு இணையில்லாத கவிதையை எழுதியிருக்காவிட்டாலும் கூட.

saramago, nobel prize

பிரபுக்கள், அரசவையினர், புனித விசாரணைக் கட்டுப்பாட்டாளர்கள், நேற்றைய காதல் இதிகாச நாயகர்கள், நாயகிகள், விரைவில் கிழவர்களாகி விடுபவர்கள் என்னும் கூட்டத்துக்கு இடையே எழுதும் போது வலி -எழுதிய பின் பெருமிதம் என்று கிளர்ந்தெழுந்த ஒருவன், பணக்காரனாவதற்காக இந்தியாவுக்கு கப்பல் ஏறிச் சென்றவர்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து ஏழையாகத் திரும்பியவன், ஒரு கண் பொட்டையாகி விட வெட்டுப்பட்ட ஆன்மாவுடன் திரிந்தவன், இன்னொரு முறை அரச மகளிரைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வல்லமையைப் பெற்று இழந்தவன், இவனைத்தான் ‘வாட் ஷல் ஐ டூ வித் திஸ் புக்?’ என்ற நாடகத்தில் மேடையேற்றினேன். அந்த நாடகங்ளை பிலிமுண்டா என்று அழைக்கிறார்கள். நாடகத்தின் முடிவு இன்னொரு கேள்வியை எழுப்பியது. மிகவும் முக்கியமான, என்றும் விடை கிடைக்காத கேள்வி அது: “இந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு நீ என்ன செய்வாய்?’ மிகுந்த பணிவுடன் உலகின் தலைசிறந்த அந்தப் புத்தகத்தை (தன் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு) சென்ற இடமெல்லாம் மறுதளிப்பை எதிர்கொண்ட பேரறிவாளன், பணிவுடன் பிடிவாதத்தையும் கொண்டு அறிய விரும்பியது எல்லாம், “இன்று எழுதப்படும் படைப்புகள் நாளை என்ன நோக்கத்தைச் சாதிக்க வல்லவை? அவை காலத்தை வென்று நிற்கக் கூடியவையா?” என்ற கேள்விகளுக்கான பதில்களைதான். நாம் பதில்கள் என்று நம்பிக்கொண்டு கொடுப்பவை எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காக நாமே தயாரித்தவை! அவனை ஏமாற்ற விரும்பியவர்களை அவன் ஏமாற்ற விரும்பவில்லை.

இங்கே போரில் கையை இழந்த ஒரு வீரன் வருகிறான். ஒரு பெண், மனிதரின் தோலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மமான சக்தி என்ன என்பதை அறிவதற்கென்று அவதரித்தவள். அவனுடைய பெயர் பல்தசார் மேடஸ். செல்லப் பெயர் செவன் சன்ஸ். அவளைப் பெலிமுண்டா என்று அழைத்தார்கள். அவளுடைய செல்லப் பெயர் செவன் மூன்ஸ். ஏனெனில், எங்கு சூரியன் இருக்கிறானோ அங்கு நிலவும் இருக்க வேண்டும். இவ்விருவரின் காதலினால்தான் பூமி ஓர் வாழும் கிரகமாக இருக்கிறது. பார்த்தலோமு என்னும் ஒரு கத்தோலிக்கப் பாதிரி கண்டுபிடித்த ஓர் இயந்திரம் வேறு எந்த ஒரு எரிபொருளின் உதவியும் இல்லாமல் மனித ஆற்றலை வைத்துக்கொண்டு வானத்தில் பறக்கும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால், அந்த ஆற்றலாலும் சாதாரண அன்பு அல்லது சாதாரண மரியாதை என்னும் சூரிய சந்திரர்களை அடைய முடியாது அல்லது அவர்களைத் தொட விரும்பாது இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மூன்று ‘முட்டாள்களும்’ – மூட நம்பிக்கைகள் நிலவிய நாட்டில், புனித விசாரணை என்ற பெயரில் அட்டூழியங்கள் வளைய வந்த நாட்டில், தற்புகழ்ச்சியில் ஒரு கன்னி மாடம் ஓர் அரண்மனை, ஒரு பெரும் தேவாலயம் என்று கட்டி அரசு கோலோச்சி வெளியுலகத்தைப் பிரமிப்பில் ஆழ்த்த முயன்று கொண்டிருந்த தருணத்தில் – போர்த்துக்கீசிய நாட்டைக் கண்டுபிடித்தார்கள். அதே வெளியுலகம் பெலிண்டாவின் கண்களை ஒத்த பார்வையில் மறைந்து கிடந்த போர்த்துக்கீசிய நாட்டைப் பார்த்தது. இச்சந்தர்ப்பத்தில்தான் ஆண்டு முழுவதும் பெருங் கற்களைத் தங்களது அழுக்கான கைகளால் எடுத்துப் பிரமாண்டமான கான்வென்ட் சுவர்களை, அரசாங்க மாளிகை அறைகளை, தூண்களை, பெரும் மணிக்கூண்டுகளை, குவி மாடங்களைக் கட்டிய ஆயிரக்கணக்கான மனிதர்கள் வலம் வந்தார்கள். நம் காதில் விழும் ஒலிகள் டொமினிக்கோ ஸ்கார்லட்டியின் இசைக் கருவியிலிருந்து பிரவகிப்பவை. அவை அவன் சந்தோஷத்தை அல்லது அழுகையைப் பிரதிபலித்தனவா என்று அவனே அறியவில்லை.

இதுதான் ‘பல்தாசரும் பெலிமுண்டாவும்’ என்ற கதையாக வந்தது. இந்தப் புத்தகத்தில் வரும் முதிரா இளம் எழுத்தாளன் தனது தாத்தா, பாட்டி கூறிய கதைகளைக் கவனமுடன் இழைத்த கவிதை வரியில் இவ்வாறு கூறினான்: ‘பெண்களின் பேச்சைத் தவிர கனவுகள்தான் இந்த உலகத்தைப் பேரண்டத்தில் நிர்வகித்தன. கனவுகளே நிலவுகளை வைத்து பேரண்டத்தை அலங்கரித்தன. அதனால்தான் வானம் ஆண்களின் தலைகளில் பொலிவை ஏற்படுத்தியது; வானம் என்பது மனிதர்களின் தலை என்பது இல்லாத வரை.’ அப்படியே இருக்கட்டும்.

லிஸ்பனிலிருந்த பள்ளியில் தொழிற் பயிற்சி பெறச் சென்ற அந்த இளைஞன் முன்பே பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து கவிதைகளையும் கற்றிருந்தான். இந்தத் தொழிற் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து மெக்கானிக் ஆக வேண்டுமென்று அவன் சென்றான். பொது நூலகங்களுக்குச் சென்ற போது படிப்பதற்குப் புத்தகங்களும் சந்தித்து உரையாட அறிஞர்களும் கிடைத்தனர். எந்தவித வழிகாட்டலும் இல்லாமல், அறிவுரைகள் எதையும் எவரிடமிருந்தும் பெறாமல் கடற்பயணத்தில் தானாகவே இடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் மாலுமியைப் போலச் செயல்பட்டான். அந்தத் தொழிற் பயிற்சிக் கூடத்தின் நூலகத்தில்தான், ‘தி இயர் ஆஃப் தி டெத் ஆஃப் ரிக்கார்டோ ரெய்ஸ்’ நாவலை எழுத ஆரம்பித்தான். ஒரு நாள் இந்த இளம் மெக்கானிக் (அப்போது அவனுக்கு வயது பதினேழு) நூலகத்தில் ‘அதீனா’ என்ற பத்திரிகையைப் பார்த்தான். அதே பெயரில் கவிதைகள் அந்த இதழில் வெளி வந்திருந்தன. போர்த்துகீசிய இலக்கிய சரித்திரம் பற்றிப் போதிய விவரம் அறியாத அவன் அக்கவிதையை எழுதியவர் ரிக்கார்டோ ரெய்ஸ் என்று அச்சிடப்பட்ட பெயரை நம்பினான். அவர் புனைபெயரில் எழுதியிருந்த ஏராளமான கவிதைகளைப் படித்தான். ஆனால், பின்னாளில் தான் அவர் பெர்னாண்டோ நெகிரா பெஸோவ் என்ற கவிஞர் எனத் தெரிந்துகொண்டான். கற்பனைப் பெயர்களில் அவர் தன் கவிதைகளை வெளியிட்டார். அவர் தன் கவிதைகளை heteronyms என்று அழைத்தார். அந்தச் சமயத்தில் இந்த வார்த்தை அகராதிகளில் இருக்கவில்லை. அதன் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள அவன் மன்றாடினாலும் கிடைக்கவில்லை. ரிக்கார்டோ ரெய்ஸின் பல கவிதைகளை அவன் மனப்பாடம் செய்து வைத்திருந்தான். (மகத்தானவனாக இருக்க வேண்டுமானால் முதலில் அவனாக மாறு. சின்னஞ் சிறு செய்கைகளிலும் உன் ஈடுபாடு முழுக்க முழுக்க இருக்க வேண்டும்.) அவன் இளைஞனாகவும் ஓரளவு அறியாமையின் பிடியில் இருந்தவனாகவும் நடமாடினாலும் அவனுக்கு அவருடைய சில கருத்துக்கள் பிடிக்கவில்லை. “உலகைக் கண்டு உவகையுறும் ஒருவன் மிகுந்த புத்திசாலி” என்று அவர் ஒரு முறை கூறியதைக் கேட்டு அவனுக்கு, உயர்ந்த சிந்தனைகளைத் தங்கி வரும் அவரால் கொஞ்சம் கூடக் கூசாமல் எப்படி ஒரு சாதாரணக் கருத்தைக் கூற முடியும் என்று எரிச்சல் ஏற்பட்டது. ஆனால், பின்னாளில் அவனது தலைமுடிகள் வெள்ளிக் கம்பிகளாக மாறிய காலத்தில், அவனது ஞானமும் சற்று விரிவடைந்த பொழுதில், அனுபவங்கள் தந்த பாடங்களில் கற்றுத் தெரிந்தவனாக விளங்கிய போது இந்தப் பயிற்சியாளன் தனது நாவலில் இக்கவியைப் பற்றிப் பின்வருமாறு எழுதினான்: ‘இங்கே உலகின் தரிசனம் தரும் காட்சியைப் பார்க்கலாம். எனது கவிஞனின் தூய கைப்புத்தன்மையை; நிமிர்ந்து நிற்கும் ஐயுறவு வாதத்தை! காண்பதும் கண்டு மகிழ்வதும் உங்கள் சௌகரியத்தைப் பொறுத்தது!’

‘ரிக்கார்டோ ரெய்ஸ் மறைந்த வருடம்’ நாவல் துக்ககரமான வார்த்தைகளுடன் நிறைவு பெற்றது. ‘இங்கே கடல் முடிந்து நிலம் எழுகிறது.’ ஆகவே, போர்ச்சுக்கல்லில் புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழாது. நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு நீண்ட எதிர்காலத்தில் எதுவும் நடக்கப் போவதில்லை. வழக்கமான போர்துக்கீஸிய இசையான ஃபோடோ, துக்கத்தைக் கூட்டும் கவிதை வரிகள், மன்றாடும் வாழ்க்கை என்று காலம் செல்லும். அந்தப் பயிற்சியாளன் கப்பல்கள் கரையை விட்டு விலகிக் கடல்களுக்குள் செல்வதைப் பார்த்து நிலம் கடலாக மாறுவதாக எண்ணிப் பார்த்தான். ஐரோப்பா, போர்ச்சுக்கல்லை அலட்சியம் செய்யும் விதத்தைப் பார்த்துக் குமுறி எழுந்த சமுதாயத்தை ‘தி ஸ்டோன் ராஃப்ட்’ என்னும் நாவலில் விவரித்தான். ஐரோப்பியக் கண்டத்திலிருந்து ஐபீரிய தீபகற்பம் விலக்கப்பட்டு பெருந் தீவாக மாறி, படகுகளற்று, சுக்கானாற்று, தெற்கை நோக்கிச் செல்லும் பெருங் கற்கள் நிறைந்த நிலமாக மாறி நகரங்களையும் கிராமங்களையும் காடுகளையும் தொழிற்சாலைகளையும் மனிதர்களையும் மிருகங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு ஓர் புதிய கனவுலகுக்கு இட்டுச் சென்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறும் முகமாக அட்லான்டிக் மகா சமுத்திரத்திலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும் முயற்சியாக – (இதுவரைதான் என் கற்பனை சென்றது.) கற்பனை செய்து எழுதினேன். இம் மாபெரும் கனவை ஐரோப்பா, தன்னை ஆண்டு கொண்டிருந்த அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட்டு விடுதலை அடைவதைப் பரிவுடனும் மனிதாபிமானத்துடனும் நோக்க வேண்டும் என்பதே என் தணியாத தாகமாக இருந்தது. இந்த மாற்றம் பெற்று ஐரோப்பா தென்பகுதியாக நிலை நிறுத்தப்படுவது சமன் பெற்ற உலகை உருவாக்கும் என்று நம்பினேன். அறம் சார்ந்த இடமாக ஐரோப்பா விளங்க இது உதவும். இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் ஒரு நாயும் பாத்திரங்களாக இந்த நாவலில் உலவி தீபகற்பம், கடலைச் சேர்ந்ததையும் பயணத்தில் இடம் பெறுகிறார்கள். மாற்றம் பெறும் இவ்வுலகில் அவர்களும் தம்மைப் புதியவர்களாக உணருகிறார்கள். (நாயைப் பற்றி பேச வேண்டிய

தில்லை; அது மற்ற நாய்களைப் போல அல்ல) இது அவர்களுக்குப் போதும்.

பயிற்சியாள இளைஞனுக்குத் தான் வேறொரு சந்தர்ப்பத்தில் மெய்ப்புத் திருத்துபவனாக வேலை பார்த்தது நினைவுக்கு வருகிறது. எதிர்காலத்தை மாற்றுவதாக எழுதப்பட்ட, ‘தி ஸ்டோன் ராஃப்ட்’டை அவன் செய்ததால், இப்போது பழம் சரித்திரத்தை மாற்றும் உத்தேசத்துடன், ‘ஹிஸ்டரி ஆஃப் ஸீஜ் ஆஃப் லிஸ்பன்’ என்னும் நாவலைக் கையில் எடுக்கிறான். ‘சரித்திரம்’ அப்படியொன்றும் ஆச்சரியங்களைத் தெளிக்கும் நிகழ்வுகளைக் கொண்டதல்ல என்று நிராசையுடன் நினைக்கும் அவன், சரித்திரம் கூறும் உண்மைகளைப் பொய்யென்று உரைக்கும் செயலைச் செய்ய விழைகிறான். ரைமென்டோ சில்வா என்னும் அந்த மெய்ப்புத் திருத்தும் ஆசாமி சாதாரண வெகு ஜனங்களில் ஒருவன். ஆனால், அவன் ‘எல்லாவற்றிலும், புலப்படும் பொருள்களை, விஷயங்களைப் போல் புலப்படாத பொருள்களும் விஷயங்களும் உள்ளன; அவற்றை நாம் சந்திக்காத வரை அவற்றைப் பற்றி நாம் அறிவதில்லை’ என்னும் மாற்றுக் கருத்துடன் இயங்குகிறான். அவனது இந்த நிலைமை மக்கள் பெருங்கூட்டம் சிந்தனை எதுவுமற்று கண்களை மூடிக்கொண்டு இயங்குவதற்கு எதிரான நிலையில் இயங்குகிறது.

மேற்சொன்ன மெய்ப்புத் திருத்துபவன் சரித்திரவியலாளரிடம், ‘மெய்ப்புத் திருத்துபவர் இலக்கியத்தின் மீதும் வாழ்வின் மீதும் மிகுந்த பிடிப்புடையவர்கள். என் புத்தகம் சரித்திரம் பற்றியது. எனக்கு மற்ற முரண்களைப் பற்றி பேச விருப்பமில்லை. என்னுடைய பணிவான நோக்கில் இலக்கியமில்லாத எதுவும் வாழ்க்கையே. சரித்திரம் கூட. அதுவும் சரித்திரம் என்பது எப்போதும் எதிர்ப்பைத் தராதது. ஓவியமும் இசையும் கூட இப்படித்தான். இசை பிறந்ததிலிருந்து வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கையில் வார்த்தை வெளியே வந்து விழுகிறது. இறுதியில் பொறாமையினால் மண்டியிட்டு விடுகிறது. ஓவியம், அது சரி, என்பது அதனுடைய தூரிகைகளினால் இயற்றப்படும் இலக்கியம். ‘உன்னிடம் நாய் இல்லாவிட்டால் வேட்டையாடுவதற்குப் பூனையைக் கூட்டிக்கொண்டு போ’ என்னும் பழமொழி உங்களுக்குத் தெரியும். அதாவது எழுதத் தெரியாத ஒருவன் ஒரு குழந்தையைப் போல. ஓவியம் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். எழுத்துக்கு முன்பே ஓவியம் பிறந்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே?. இலக்கியம் அது பிறப்பதற்கு முன்பே தோன்றிவிட்டது. ஆமாம் சார், மனிதன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்பே அவன் உலகில் இருந்தான் என்பதைப் போல! தொழில் எதுவும் செய்யத் தெரியாத நீங்கள் ஒரு தத்துவ ஞானியாகவோ சரித்திரவியலாளனாகவோ ஆவதற்கான குணாதிசயங்கள் உங்களுடன் நிரம்பிக் கிடக்கிறது என்று நான் நம்புகிறேன். அதற்கான விருப்பமும் மனப்பாங்கும் ஒருவரிடம் இருந்தால் போதும். எனக்கான ஜீன்களுடன் இவ்வுலகுக்கு வந்துவிட்டேன் என்றாலும் ஒப்பனைகள் எதுவும் இல்லாதவனாகத் தோன்றினேன். எனக்குப் போதிய பயிற்சி எதுவும் இல்லை. பயிற்சி பெறாத சாதாரணன் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? பிறந்து வளர்ந்த சூழ்நிலையில் போதுமான கல்வி கிடைக்கவில்லை. ஆரம்பப் பள்ளி வரைதான் படிப்பு. என் சொந்த முயற்சியால் கற்றுக்கொண்டதுதான் மூலதனம். முன்பு தன்னியக்கச் செயல்திறன் கொண்டவனை சமூகம் மதித்தது. இப்போது அப்படியில்லை. சுயமாகக் கற்றவரை சமூகம் மதித்துப் பார்ப்பதில்லை. எள்ளலுடன் அது நோக்குகிறது. வெகுஜன மதிப்பில் இயங்கும் கவிகள், கதாசிரியர்கள் வெகுவாக மதிக்கப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இலக்கியம் படைப்பதில் எனக்கு அவ்வளவாகத் திறமை இல்லை என்று ஒப்புக்கொள்கிறேன். ஒரு தத்துவ ஞானியாக, புன்சிரிப்பு ஏற்படுத்துபவனாக இருக்க முடிகிறது, சரித்திரம் போன்ற கடுமை நிறைந்த விஞ்ஞானத்தின் மேல் இப்படிப்பட்டவனுக்கு எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது என்று வியக்கிறேன். என்ன ஒரு முரண்! சரித்திரம் அப்பெயரில்லாது உலவும் போது அதற்கு வாழ்க்கையுடன் சம்பந்தமிருந்தது. நீங்கள் சரித்திரம் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது என்று இப்போது நம்புகிறீர்களா? நடப்பு வாழ்க்கையை சரித்திரம் உள்ளடக்கியது என்பதுதான் என் நம்பிக்கை. அதில் சந்தேகம் எதுவுமில்லை’ என்றான் பெருமூச்சு விட்டபடி.

பயிற்சியாளன், சில்வாவிடமிருந்து சந்தேகம் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டான். அதன் விளைவுதான் இவ்வளவு பேச்சு. சந்தேகம் பற்றிய பாடங்களைக் கற்ற பயிற்சியாளன் ‘இயேசுவின் நற்செய்தி’யை எழுத ஆரம்பித்தான். தலைப்பு ஒருவித மாயத் தோற்றத்தைத் தருவதுதான். புதிய நாவல் எழுதுவதற்கான மூலக் கருத்துக்கு இது உதவியதா என்று கேட்டுக்கொண்டான். இம்முறை எதிர்வினையாற்றும் கருத்துக்களைப் ‘புதிய ஏற்பாட்டின்’ பக்கங்களில் காணுவதற்குப் பதிலாக அவற்றின் தளங்களைப் பரிசீலிக்கும் முயற்சியாக இருக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் செயல்பட்டான். ஓர் ஓவியம் மென்மையாகவும் திட்டவட்டமாகவும் தன் கோடுகளை, சீர்முனைகளை, நிழல்களைப் பிரதிபலிப்பது போல. அப்படித்தான் சுவிசேஷ பாத்திரங்கள் தன்னைச் சுற்றி இறைந்து கிடைக்க முதல் முறையாக ஒன்றுமறியா அப்பாவிகளைக் கொன்று குவித்ததைப் படித்தான். ஏற்கனவே எண்ணற்றவர்கள் உயிர்த் தியாகம் புரிந்திருந்த மதத்தில் இத்தகைய கொடூரச் செயலை முப்பது வருஷங்களாக மதத்தின் ஸ்தாபகர் கண்டித்து ஒரு வார்த்தை பேசாது இருந்துவிட்டுப் பிறகு பேசியது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. செல்வாக்கு மிக்க அவர் பெத்லேகக் குழந்தைகளைக் காப்பாற்ற ஏன் முயற்சி எதுவும் எடுக்கவில்லையென்றும் அவனுக்குள் கேள்வி எழுந்தது. குறைந்தபட்சப் பொறுப்புணர்ச்சி, பச்சாதாபம் அல்லது குற்ற உணர்வு, ஏன் அறியும் ஆர்வம் கூட எகிப்திலிருந்து குடும்பத்துடன் திரும்பி வந்த ஜோசப்புக்கு ஏற்படவில்லை என்பதும் அவனுக்குப் புரிபடாமலிருந்து. யேசுவைக் காப்பாற்றுவதற்காகச் சின்னஞ் சிறு குழந்தைகள் சாக வேண்டும் என்று யாராலும் வாதம் செய்ய முடியாது என்று அவன் நம்பினான்.

மனிதர்களின் பாவங்களை நீக்கவென்று தேவகுமாரனைக் கடவுள் அனுப்பியிருக்க, ஹெராடின் சிப்பாயினால் இரண்டு வயதுக் குழந்தையின் தலை துண்டிக்கப்படுவது, மனிதமோ தெய்வீகமோ நடத்திச் செல்லும் பொதுப்புத்தியைச் சமாதானப்படுத்தவில்லை. ‘இயேசுவின் நற்செய்தி’யை எழுதிய பயிற்சியாளன் மிகுந்த மரியாதையுடன் தனது படைப்பில் ஜோசப் தன் குற்றத்தை உணர்ந்து தண்டனையை ஏற்றுக்கொள்கிறார் என்று தெரிவிக்கிறான். எந்தவித எதிர்ப்பும் காண்பிக்காது மரணத்தை ஏற்றுக்கொள்கிறார். அதுதான் அவரது செயலுக்கான தண்டனை; இனி இந்த உலகத்தில் செய்ய வேறு எதுவும் அவருக்கு இல்லை என்னும் உறுதியுடன் தண்டனையை ஏற்கிறார். பயிற்சியாளன் கடவுளுக்குக் கொடி பிடிக்காமல், மாறாக, சில தனிமனிதர்கள் அதிகாரத்தை எதிர்த்து, ஆனால், ஜெயிக்க முடியாமல் போய் விடுவதைக் காட்டுகிறான். தந்தை உலகின் பல்வேறு சாலைகளில் நடக்கும் போது அணிந்திருந்த காலணிகளைப் பெற்றுக்கொண்டது போலத் தந்தையினுடைய துக்கத்தையும் பொறுப்பின்றி நடந்துகொண்ட அவமானத்தையும் சுவீகரித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவரை அனுப்பிய கடவுளிடம் மலையுச்சியிலிருந்து, ‘என்ன செய்தோம் என்று அறியாமல் செய்த மனிதனை மன்னித்து விடுங்கள்’ என்று இறைஞ்சினார். அப்போதும் தன்னை ஈன்ற தந்தை மீது கொண்ட துக்ககரமான நினைவுகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. பயிற்சியாளன் மத பேதம் நிரம்பிய, ‘நற்செய்தி’யில் ஜீஸசுக்கும் அட்சரசீவகனுக்கும் கோவிலில் நடக்கும் விவாதத்தைக் குறிப்பிட்டு கடைசி வரிகளை எழுதினான்: குற்ற உணர்வு என்பது ஓர் ஓநாய். அது தன் தந்தையை விழுங்கியது; பொல்லாத தன் குழந்தையையும் உண்டு விடுகிறது. நீங்கள் கூறும் ஓநாய் ஏற்கனவே என் தந்தையை விழுங்கிவிட்டது. கூடிய விரைவில் இது உங்களுக்கும் நடக்கும். நீங்கள் எப்போதாவது விழுங்கியதுண்டா? விழுங்கியதை வெளியே கொண்டு வந்து உமிழ்ந்ததுண்டா?’

வடக்கு ஜெர்மனியின் பேரரசர் சார்லமேன் ஓர் விகாரையை உருவாக்காமல் இருந்திருந்தால், அந்த விகாரை முன்ஸ்டர் நகரமாக முன்பு இல்லாதிருந்தால், பதினாறாம் நூற்றாண்டில் பிராஸ்டண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் நடந்த பயங்கரமான போரை ஓர் இசைநாடகமாகத் தன் ஆயிரத்து இருநூறாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் முன்சர் நடத்தாமலிருந்திருந்தால், ‘கடவுளின் பெயரால்’ என்ற நாடகத்தைப் பயிற்சியாளன் எழுதியிருக்க மாட்டான். மறுபடியும் தன் தர்க்க உணர்வுகளையே வெளிச்சம் காட்டும் விளக்கு என அவன் கருதி, மத நம்பிக்கைகளைச் சூழ்ந்திருந்த சிக்கல்களைப் பிரித்தெடுக்க முயன்றான். ஏனெனில், இம் மதச் சிக்கல்கள் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று போடும் நிலைக்குத் தள்ளியிருந்தன. பயிற்சியாளன் மறுபடியும் அப்போது பார்த்தது முகமூடியால் மறைக்கப்பட்ட சகிப்புத் தன்மை சிறிதும் இல்லாத நிலைமையை. முன்ஸ்டரில் இத்தகைய சகிப்பற்ற தன்மைதான், கட்டுப்பாடற்ற தாக்குதலை இரு கட்சிகளும் ஏற்று, அவர்களையே கொலைவெறி நிரம்பிய போருக்கு இரையாக்கியது.

இந்த யுத்தம் இரண்டு கடவுள்களை சார்ந்திருந்த கட்சிக்காரர்களுக்கு நடுவே ஏற்படவில்லை. ஒரே ஒரு கடவுளுக்காகத்தான் நடந்தது. பிராட்டஸ்டன்ட்டுகளும் கத்தோலிக்கர்களும் தமது குருட்டு நம்பிக்கைகளால் தவறவிட்ட முக்கியமான விஷயம்: தீர்ப்பு நாளன்று இரு கட்சியினரும் தமக்கு கிடைக்கும் பரிசு / தண்டனைக்காகக் காத்திருக்கையில் கடவுள் – அவரது தீர்ப்பு மனிதகுல நன்மையை ஒட்டியது என்றால் – இரு கட்சியினருக்கும் அவர் தேவலோகத்தைத்தான் தர வேண்டும். ஏனென்றால், இருவரும் அதனைத்தான் வெகுவாக நம்பினர். முன்ஸ்டரில் நடந்த கொலை வதை பயிற்சியாளனுக்கு மதங்கள், அவை தரும் வாக்குறுதிகளுக்கு அப்பால், எப்போதும் மனிதர்களை ஒன்றுபடுத்தியதில்லை என்பதை உணர்த்தியது. போரைப் புனிதப் போர் என்று அழைக்கும் அபத்தத்தின் உள்ளர்த்தம் என்ன? கடவுள் தன் மீதே தாக்குதல் நடத்திப் போர் புரியப் போகிறார் என்றா?

‘குருடர்கள்’ என்று பயிற்சியாளன் நினைத்தான். ‘நாம் எல்லோருமே குருடர்கள்.’ பிறகு உட்கார்ந்து ‘குருட்டுத்தனம்’ என்ற நாவலை எழுத ஆரம்பித்தான். ‘வாழ்க்கையை நாம் அவமதிக்கையில் அடிப்படை நாகரிகத்தை இழந்து செயல்படுபவர்களாக ஆகிறோம். வலிமை உடையவர்கள் தினமும் மனித மேன்மையை இழிவுபடுத்துகிறார்கள். உண்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பொய்கள் முன் வந்து நிற்கின்றன. சக மனிதர்களை மதிக்காது மனிதன் தன்னையே தாழ்த்திக்கொள்கிறான்; என்பதை இந்நாவலைப் படிக்கும் வாசகர்கள் அறிய வேண்டும் என்று பயிற்சியாளன் நினைக்கிறான்.

பிறகு குருட்டுத்தனத்தால், நியாயத்தை மறந்து கிளம்பி வரும் பேய்களை ஓட்டுவது போல மிக எளிதான ஒரு கதையை எழுதினான். ‘மனிதர்கள் ஒருவரை ஒருவர் அண்டியிருப்பதுதான் வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்’ என்று உரைத்த அதற்கு ‘எல்லாப் பெயர்களும்’ என்று தலைப்பு தந்தான். இருப்பவர்களின் இறந்தவர்களின் பெயர்கள்!

முடிவாக இந்தப் பக்கங்களை வாசித்த குரல் என் பாத்திரங்களின் ஒன்று சேர்ந்த குரல்களின் எதிரொலிதான். எனக்கென்று தனியே ஒரு பெரிய குரல் ஒலி கிடையாது. இவை பெரிய விஷயங்களல்ல என்று யாராவது நினைத்தால், மன்னிக்கவும் இவைதான் எனக்கு எல்லாமே.

ஸிந்துஜா” <weenvy@gmail.com>

sinthuja
ஸிந்துஜா

Amrutha

Related post