ஊடகமும் அரசியலும் காலாவதியான நிலையில் இலக்கியமே பெரும் ஆசுவாசத்தைத் தருகிறது | ப. தெய்வீகன்

 ஊடகமும் அரசியலும் காலாவதியான நிலையில் இலக்கியமே பெரும் ஆசுவாசத்தைத் தருகிறது | ப. தெய்வீகன்

நேர்கண்டவர்: கருணாகரன்

 

தமிழிலக்கியத்தின் புதிய முகங்களில் ஒன்றாக இருக்கும் ப. தெய்வீகன், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் (மெல்பேர்ணில்) வாழ்கிறார். பத்திரிகையாளராகத் தன்னுடைய எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த தெய்வீகனின் வாசிப்பு, எழுத்து, உரையாடல், சிந்தனை எல்லாமே இப்பொழுது இலக்கியம்தான். நட்புச் சூழலும் கூட இலக்கியத்தினுடனேயே வலுத்துள்ளது. அதற்குச் சான்றாக தெய்வீகனின் கதைகள் உள்ளன.

நாம் அறிந்திராத புதிய திணையில் அவுஸ்திரேலியச் சூழலில் தெய்வீகனின் கதைகள் பொலிகின்றன. ஈழம், ஈழ அரசியல், புலப்பெயர்வு, அதன் துயரங்கள் எனத் தமிழ்ப் பரப்பின் வழமைக்குள் தன்னையும் தன் எழுத்துகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பொதுப்பெருவெளியில் தன்னுடைய பயணத்தை நிகழ்த்துகிறார். அவுஸ்திரேலியப் பூர்வ மக்கள், அவுஸ்திரேலியாவில் குடியேறிய பிற சமூகத்தினர், அவுஸ்திரேலியாவிலும் அதற்கு வெளியேயும் உள்ள ஈழத்தமிழரின் வாழ்க்கை எனச் சகல தளங்களிலும் ஊடுருவித் தன்னுடைய கவனத்தை ஊன்றி எழுதுகிறார். மொழிதலில் வெளிப்பாட்டில் சற்று வேறானதொரு வேகமும் சுவையும் தெய்வீகனின் அடையாளம். இதுவரையில் அமீலா’, ‘உன் கடவுளிடம் போ’ (தமிழினி வெளியீடுகள்) என இரண்டு சிறுகதை நூல்களும் உலகளாவிய அகதிகளின் நிலையைச் சொல்லும் நாடற்றவர்களின் கடவுச் சீட்டு (ஆனந்த விகடன் வெளியீடு) என்ற நூலும், காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலிஎன்ற அரசியற் கட்டுரை நூலும், பெய்யெனப் பெய்யும் வெயில்என்ற பத்திகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன.

இந்த நேர்காணல் தொலைபேசி, இணையம் ஆகியவற்றின் வழியே நிகழ்த்தப்பட்டது.

 

ஊடகம், அரசியல், இலக்கியம் எனத் தொடரும் உங்களுடைய பயண வழியில் எதை நீங்கள் சிறப்பாக கருதுகிறீர்கள்?

இலக்கியம் எப்போதும் மனதளவில் பெரும் ஆசுவாசத்தைத் தரக்கூடியது. நான் தனியாகக் களிக்கும் ஊஞ்சல் போன்றது. என்னையும் தன்னையும் ஒருமித்த புள்ளியில் வைத்து உற்சாகமான இரகசிய உரையாடல்களைச் செய்யக்கூடியது. ஆக, இலக்கியத்தை எனக்குப் பிடித்த வேறெந்த விடயங்களுடனும் ஒப்பீடு செய்யக்கூட எண்ணியதில்லை.

ஊடகமும் அரசியலும் எனது ரௌத்திரத்தின் வெளிப்பாட்டுக்கான பெருவெளியாகவே ஆரம்பம் முதல் அமைந்து வந்திருக்கின்றன. பெரும் உண்மைகளையும் நேரடியாக அறச்சீற்றங்களையும் பதிவு செய்வதற்கான மெய் நிகர் களங்களாக ஊடகமும் அரசியலும் செயலாற்றும் என்ற நம்பிக்கை, எனக்குள் முன்பு இருந்தது போல இப்போது இல்லை.

ஊடகத்துறையை சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட காலம், இப்போது முற்றிலும் வேறொன்றாகிவிட்டது. ஊடகவியலும் சரி, அதன் பரிணாமங்களும் சரி வேறு தளங்களுக்குள் கூடு பாய்ந்துவிட்டன. சமூக வலைத்தளங்களின் வழியாகச் சாகுபடியாகும் பல்லாயிரக்கணக்கான செய்திகளினால், எது ஊடகம் என்பதை உய்த்தறிவதே பெரும் சிக்கலாகிவிட்டது. நாம் புழங்கும் தமிழ் ஊடகங்கள் மாத்திரமல்ல, வேற்று மொழி – வெளி நாட்டு – ஊடகங்களுக்கும் இதேநிலைதான். ஆனால், சமகால சகதிகளில் இருந்து வெளியேறி, ஊடகவியலின் அறத்தையும் விசித்திரமான மாற்றங்களையும் உள்வாங்கிக்கொள்வதற்கு, வெளிநாட்டு ஊடகங்கள் பல்வேறு ஆரோக்கியமான வழிகளை நாடுகின்றன. ஆனால், தமிழ் ஊடங்கள் / ஊடகவியல் அவ்வற்றிலிருந்தெல்லாம் பல கிலோ மீற்றர்கள் பின்னுக்கு நிற்கின்றன.

இதேபோல, காலாவதியான – கவலைக்குரிய – களமாகத்தான் நான் புழங்கத் தொடங்கிய இலங்கை அரசியலும் இன்று அழுகிவிட்டதாக உணர்கிறேன். தேவையான – பெறுமதியானவர்களின் – வெளியேற்றமும் வெற்றுக்கூச்சல்களுடன் குதியாட்டம் போடுபவர்களின் வரவும் இலங்கை அரசியல் தொடர்பில் பெரும் அயர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்துவிட்டன. சமூகத்துக்கான அரசியல் வழி – பிழைகள் எல்லாவற்றின் மீதும் முன்னர் பட்ட கோபங்களையும் அவற்றுக்குப் பெறுமதியிருக்கும் என்று எழுதியவற்றையும் எண்ணும்போது, இப்போதும் பெரும் துயரமே எஞ்சுகிறது.

ஊடகம் – அரசியல் இரண்டிலும் இலங்கைக்கு வெளியில்தான் அண்மைக்காலமாக அதிக ஆர்வம் கொண்டிருக்கிறேன். அவை தொடர்பிலான தொடர்ச்சியான வாசிப்பு எனக்குள் புதிய உலகங்களைக் காண்பிக்கிறது. அந்த உலகம், நான் எப்போதும் லயித்திருக்கும் இலக்கியத்துக்கு அண்மித்ததாக தெரிவதாக உணர்கிறேன். முன்னர் கூறியதுபோல, அது மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது.

நீங்கள் கருதுவதைப்போலவே ஊடகமும் அரசியலும் உலகளவிலேயே இன்று மெய்நிகர் களத்தன்மையை இழந்துள்ளது என்ற கசப்போடு கவலையோடு இந்தத் துறைகளிலிருந்து பலர் வெளியேறி ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைச் சூழலில் இது இன்னும் மோசமானது என்பதை சமகால நிலவரங்கள் நிரூபிக்கின்றன. இந்த நிலையில் இத்தகைய ஒதுங்கல் ஒடுங்குதல் சரியானதா? நீங்கள் இலங்கையில் இருந்திருந்தால் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பீர்கள்?

ஊடகவியலை ஜனநாயகத்தின் மூன்றாவது கண், நான்காவது தூண் என்றெல்லாம் கலைச்சொற்களாக அடுக்கி அழகு பார்த்த காலத்தை, இன்று யதார்த்த நிலைக்கூறுகளின் ஊடாக மதிப்பீடு செய்யவேண்டிய காலகட்டத்திலிருப்பதாக உணர்கிறேன். உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற புரட்சிகள் – சமூக மாற்றங்கள் – விடுதலைப் பரணிகள் எல்லாவற்றிலும் ஊடகங்களுக்கும் ஊடவியலாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருந்திருக்கிறது. வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் இதனை நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால், அங்கெல்லாம் மக்களின் வேட்கையும் அவர்களின் நீதியான போருக்கான ஊடகங்களின் பயணமும் சமாந்தரமாக அமைந்திருக்கிறது. சம விகிதத்தில் கலந்திருக்கிறது. அங்கு ஊடகத்தின் பங்கும் பணியும் மிகப்பெரிய அளவில் தேவைப்பட்டிருக்கிறது.

ஆனால், இன்று அந்த நிலை விரும்பியோ – விரும்பாமலோ, தலை கீழ் மாற்றத்தை அடைந்துவிட்டது. ஜனநாயகத்தின் கூறுகள் எதிர் எதிர்த்திசைகளில் பயணம் செய்வதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்குக் காரணம், உலகமயமாதலின் உச்சம் ஒவ்வொரு மனிதனையும் இன்று ஒரு அரசாங்கமாக மாற்றிவிட்டது. உங்களுக்கென்று ஒரு அரசாங்கம் தேவையில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அரசாங்கத்திற்குத்தான் தனிமனிதன் தேவைப்படுகிறானே தவிர, கனடாவிலிருப்பவனுக்கும் கண்டியிலிருப்பவனுக்கும் கல்வியங் காட்டிலிருப்பவனுக்குமான தேச எல்லைகள் அழிக்கப்பட்டுவிட்டன. சமூக வலைத்தளங்களின் ஊடாக இன்றைய உலகம் எல்லைகளற்ற பெரும் தேசமாகிவிட்டது. கடந்த ஐந்து வருடங்கள்வரை பெரும் கட்டுப்பாடுகளாகவும் நிபந்தனைகளாவும் பேணப்பட்ட மக்களாட்சிக் கூறுகள் முதல் வரலாற்றுப் படிப்பினைகள் அனைத்தும் கேள்விக்குரியவையாகிவிட்டன.

உதாரணத்துக்கு, இலங்கையின் குக்கிராமத்திலிருக்கக்கூடிய ஒரு நபர், அரசாங்கத்தின் எந்தத் தயவுமின்றி, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கக்கூடிய நீதியான வழி முறைகளை இன்றைய உலகம் உருவாக்கிக் கொடுத்துவிட்டது. அதனை அடைவதற்கு நீங்கள் தயாரா என்று காலம் ஒவ்வொருத்தரின் முன்பாகவும் வந்து நின்று சொடுக்குப் போட்டு, வசீகரமூட்டுகிறது.

ஆக, பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த ஜனநாயகத்தின் விழுமியங்களையும் ஊடகவியல் போன்ற முக்கிய துறைகளையும் இன்றைய தலைமுறையினர் சிருஷ்டித்துக் கொண்டிருக்கும் புதிய உலகத்தின் முன்னால் நிறுத்தி, அதற்கான பெறுமதியை அளவிடவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இதுதான் யதார்த்தம். விசுவாசத்தின் அடிப்படையில் பழையவற்றின் மீது பரிதாபத்துடன்கூடிய நெருக்கத்தைப் பேணுவது என்பது வேறு. நடைமுறை ரீதியில், காலத்தின் அடுத்த படிக்கற்களை எமக்காக அடுக்கி எடுத்துக்கொள்வது என்பது வேறு.

ஊடகம், அரசியல் உட்பட மக்களாட்சித் தத்துவங்கள் அனைத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பெரும் சவால் இது. ஒவ்வொரு அரசும் இந்தக் குழப்பத்துக்குள் தத்தளிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதுபோன்றதொரு சூழலில், இன்று நான் இலங்கையில் இருந்திருந்தால், நிச்சயம் பாரம்பரியமான ஊடகவியலில் – பத்திரிகைத் துறையில் – தொடர்ந்திருக்கமாட்டேன்.

தொடர்ச்சியான வாசிப்பு, தேடல், விரிந்த உலகப் பயணங்கள், அவற்றிற் பெறுகின்ற அறிவனுபவம் எல்லாம் உங்களுடைய இந்த நிலை மாற்றத்துக்குக் காரணமாக உள்ளன. இத்தகைய நிலைமாற்றத்தை தமிழ்ப் பொதுச்சூழல் வேறுவிதமாக எதிர்நிலையில் பார்க்குமல்லவா? விட்டோடியாக அல்லது எதிர்ச் சிந்தனையாளராக?

நிச்சயமாக இல்லை. ‘தமிழ்ப் பொதுச்சூழல்’ என்று நீங்கள் கூறக்கூடியவர்கள் உட்பட எங்கள் எல்லோருக்கும் முன்னாலிருக்கின்ற பெரும் சவால் என்ன என்று கேட்டால், முன்னர் நாம் மார் தட்டிய, பெரும்புரட்சித் தத்துவங்களையும் பொருட்கோடல்களையும் எவ்வளவுதூரம், புதிய மாற்றங்களின் முன்பாக ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதே ஆகும். இந்தச் சமரசத்துக்கான புள்ளி ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதில் தவறில்லை. ஆனால், முன்பு உற்பத்தி செய்தவற்றின் மீதான விசுவாசத்தின் பொருட்டு, அதனையே சமையல் செயவதற்குச் சதா சத்தியம் செய்தபடி நின்றால், அதனை ஆகாரமாக ஏற்பதற்கு இந்த உலகம் தயார் இல்லை என்பதே கசப்பான உண்மை.

கிராமத்திலிருந்து நகருக்கு வருகிறோம். நகரத்திலிருந்து பெரு நகரங்களுக்கு செல்கிறோம். அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயருகின்றோம். பொருண்மியக் காரணங்களுக்காக – தனி மனித தேவைகளுக்காக – எங்களை விடுவிப்பதற்கும் விட்டுக்கொடுப்பதற்கும் ஏற்ற விலங்காகப் பழக்கப்படுத்திக் கொள்ளுகின்ற நாங்கள், சமூகமாக சிந்திக்கும்போது வரட்டுத்தன குருட்டுப்பாதையைப் பிடித்துத் தொங்கிக்கொள்வது இங்கிருக்கக்கூடிய பரிதாபமான நிலை.

இது உண்மைதான். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் சமூகமாகச் சிந்திக்கும் நிலை தவிர்க்க முடியாத ஒன்றல்லவா! அதுவும் ஒடுக்குமுறைக்குள்ளாகிய சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இது இன்னும் அழுத்தம் பெறுமே! இங்கே தனிமனித தேவைகளுக்காகச் செய்யப்படும் சமரசங்களையும் சமூகச் சமரசத்தையும் எப்படிச் சமனிலைப்படுத்துவது?

உண்மைதான். ஆனால், தனிப்பட்ட ரீதியிலான சிந்தனைகளும் அதன் செயலாக்கமும்தானே முன்னேற்றகரமான முடிவுகளின் வெற்றிகரமான அடித்தளங்களாக இருப்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம், இல்லையா! இதனைப் பெரும் தவறாக உதாரணப்படுத்தி, யாரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லை. ஈழத்தின் இன்றைய நிலையைப் பாருங்கள். சமூகமாக – ஒரு கூட்டு முடிவினால் – உருவாக்கப்பட வேண்டிய புதிய அரசியல் செல்நெறிகள் ஏதாவது கடந்த பத்துப் பதின்னான்கு ஆண்டுகளில் வெற்றிகரமாக கண்டு அடையப்பட்டிருக்கின்றனவா? மறுபுறத்தில், தாயகத்தில் உள்ளவர்களுக்கு உதவ விரும்புவதாக சொல்லிக்கொள்ளும் புலம்பெயர்ந்தவர்களினாலாவது பொதுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் கீழ் ஒன்றுபட முடிந்திருக்கிறதா? இல்லையே. போரை எதிர்கொண்டவர்களால், போரற்ற நிலையை எதிர்கொள்ள – சமாளிக்க முடியாமல் உள்ளதானது மிகப்பெரிய முரண் அல்லவா?

ஆனால், தனிப்பட்டவர்களின் சிந்தனைகளில் போரற்ற கடந்த பதினான்கு வருட காலத்தில் சொல்லும்படியான செழுமையான திட்டங்கள் ஆங்காங்கே உருவாகியிருக்கின்றன. அவை செயல்வடிவத்தையும் கண்டிருக்கின்றன. அதாவது, இன்றைய உலகம் தனிப்பட்ட ரீதியில் புத்திபூர்வமானதாகவும் கூட்டுமனநிலையின்போது முட்டாள்தனமாகவும் சிந்திக்கிறது.

இதிலிருந்து விடுபடுவதற்கும் குறைந்தது ஒரு சமநிலையை நோக்கி நகர்வதற்கும் எங்களின் முன்னாலுள்ள அன்றாடங்கள் அனைத்தையும் புதிய முறையில் சிந்திப்பவர்களின் வரவு முக்கியமானது. எந்த விடயத்தையும் கடந்த கால லாப – நட்டக் கணக்குகளின் ஊடாக அணுகாத ஒரு தலைமுறையின் நுழைவுதான், சமூகத்தின் தற்போதைய தேவைகளை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யமுடியும் என்று நம்புகிறேன்.

இன்றைய உலகம், தனிப்பட்ட ரீதியில் புத்திபூர்வமானதாகவும் கூட்டுமனநிலையின்போது முட்டாள்தனமாகவும் சிந்திக்கிறதுஎன்பது ஈழச் சூழலில் மிகப் பொருந்துகிறது. இங்கே கூட்டுமனநிலை பெரும் பொய்யாகவும் மாயைகளின் மீது கட்டமைக்கப்பட்டதாகவும் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையை வேறாகவும் அதற்கு மாறாக பொதுவாழ்க்கையை அல்லது கூட்டுமனநிலையை வேறாகவும் பராமரிப்பதன் நோக்கம்தேவைஅரசியல் என்ன?

பெரும் நெருக்கடிகளுக்குள்ளிருந்து விடுபடுகின்ற மக்கள் சமூகம், கூட்டு மனநிலையிலிருந்து விலகி, தனியான – சுயநலம் மிக்க – பாதைகளைத் தேடிக்கொள்வது வழக்கம். அதுபோல, உலக ஒழுங்குகளில் ஏற்படுகின்ற பாரிய அதிரடியான மாற்றங்களும் மக்களைத் தனித்தனியாக சிந்திப்பதற்கு உதைத்துவிடுவது இயல்பு. இவ்வகையான பயணங்களின்போதுதான், மேற்குறிப்பிட்ட முரணியக்கத்தை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

உதாரணத்துக்கு, வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்ற பெரும்பாலானவர்கள் இங்குள்ள அரசுகளுக்கு எதிரான இடதுசாரி முகாம்களுக்குள்ளிருந்து தமக்கான உரிமையை வேண்டிப்போராடுவார்கள். அகதிகள் முகாமிலுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென்பார்கள். தாங்கள் விட்டுவந்த நிலத்தில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு அரசுகள் உதவவேண்டும் என்றுகூடப் போராட்டம் நடத்துவார்கள். முதலாளித்துவ மனநிலையிலிருந்து வெளியேறி உழைக்கும் மக்களுக்கு உதவவேண்டும் என்று முதலாம் உலக நாடுகளுக்கு ஆலோசனையெல்லாம் கூறுவார்கள்.

ஆனால், இவ்வாறு போராடுபவர்கள் – குரல் எழுப்புறவர்கள் – அனைவருக்கும் இந்த நாட்டில் குடியுரிமையும் இருப்புக்கான நிரந்தர பொருளாதார வளங்களும் கைகூடுகின்றபோது, இவர்கள் வர்க்கம் – சாதி போன்ற எல்லா கசடுகளையும் சூடிக்கொண்டு, மேலாதிக்கர்களாக உருவாகிறார்கள். முழுமையான லிபரல் விழுமியங்களோடு விஸ்வரூபமெடுக்கிறார்கள். லிபரல் கட்சிகளில் சென்று ஆசனம் கேட்டு, தேர்தலில் போட்டியிடவும்கூடச் செய்கிறார்கள்.

தற்கால உலகில் தங்களின் இருப்புக்கான நிரந்தர நிம்மதி, இப்படியான அர்த்தநாரீஸ்வர சூத்திரத்தில்தான் அடங்கியிருப்பதாக மக்கள் உணர்வதன் வெளிப்பாடுதான் இது என்று நம்பத்தோன்றுகிறது. இதன் நீட்சி ஒருபோதும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது.

ஊடகம், அரசியல் இரண்டையும் விட்டு இலக்கியத்தின் பக்கம் முழுதாகச் சாய்ந்து விட்டதாகவே உங்களுடைய தற்போதைய எழுத்துகளும் பங்கேற்புகளும் மாறியுள்ளன. உங்களுடைய பிந்திய கதைகள் அவுஸ்திரேலியத் தன்மையை நோக்கிச் செல்கின்றன. அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்கள், அவுஸ்திரேலியச் சூழல், அங்குள்ள வாழ்க்கை மற்றும் அரசியல் பண்பாட்டு நெருக்கடிகள், சிறப்புகள் பற்றியதாக. இதற்கான சிறப்புக் காரணங்கள் ஏதுமுண்டா?

புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியங்கள் எப்போதும் ஊர் பற்றிய நினைவுகளாகவே பதியப்பட்டுவந்த காலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்றுகூடக் கூறலாம்.

நினைவிடை தோய்தல் என்ற இலக்கியப் போக்கு புலம்பெயர் எழுத்துக்களாய் இன்னும் நிறைந்துள்ளன என்பதும் உண்மையே. இனியும் அது வெவ்வேறு தளங்களில் புதுவழிகளில் நிறைவளிக்கும். ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் இருக்கக்கூடிய முரண்பாடு மிக்க வாழ்வியல் சூழலை – அரசியல் குழப்பங்களை – கலாச்சார மோதல்களை – இங்குள்ள பூர்வகுடிகளை – நுட்பமான அவதானங்களின் வழியாக எழுத்துக்களில் கொண்டுவருவதென்பது ஒரு எழுத்தாளனுக்கு இன்னொரு வகையில் சவாலானது. அவசியமானது.

ஒரு புலம்பெயரி சந்திக்கும் கலாச்சார உள்மோதலும் அதனை இலக்கியத்தின் வழியாக வெளிப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் எத்தனமும் தாயின் கருப்பையினுள் நுழைந்து, மீண்டும் பிறப்பெடுப்பதுபோன்றது. இதனைத் தனியே மொழியாலும் சம்பவங்களாலும் உருட்டி விளையாடி ‘பாவ்லா’ பண்ணிவிடமுடியாது. இப்படியான தவப்பேறில் கிடைக்கின்ற கதைகளை எழுதுவதற்கே நான் பெரிதும் விரும்புகிறேன்.

ஏனெனில் நான் இருப்பது ஆஸ்திரேலியாவில். நான் எழுத விரும்புகின்ற கதை தமிழகத்திலோ ஈழத்திலோ நிகழக்கூடிய சாத்தியமிருப்பின், அப்படியான கதையை எழுத நான் இயன்றவரையில் தவிர்க்கவே விரும்புவேன். இன்னும் சொல்லப்போனால், நான் எழுதக்கூடிய கதைகளுக்கு எனது எழுத்துக்களை மாத்திரமே சவாலாக முன்னிறுத்துகிறேன். அவற்றின் நீட்சியாக, ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் வாழ்வு, அவர்களுக்கும் எங்களுக்குமான உணர்வுரீதியான ஒற்றுமைகள் – விலகல்கள் என்று பலவற்றை, கதைகளுக்குள் கொண்டுவரப் பார்க்கிறேன்.

அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த பரப்பில் தெரிந்த விடயங்களை மீட்டுவாக்கம் செய்வதைப்போல ஈழப்போரையும் அதன் எழுச்சி, வீழ்ச்சிகளையுமே திரும்பத் திரும்பச் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். போரிலிருந்து தப்பித்து வாழ்ந்து கொண்டு போரைப் பற்றியே எழுதித் தருவது எந்த வகையில் நியாயமானது?

Pa. Theiviganபோர் நெடி தீராத நிலத்திற்கு ஏராளம் கதைகள் உள்ளன. ஈழம் என்பது எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஒரு போர் நிலம். அந்த நிலத்தின் குருதிவாடை நிரந்தரமானது. அந்த நிலத்தின் கதைகளை ஈழத்தவர்களால் மாத்திரமே ஆத்மார்த்தமாக பதிவுசெய்யமுடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவன் நான்.

ஈழத்தின் எழுத்துக்கள் பற்றி பேசுவதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொள்வோம். ஆஸ்திரேலியாவில் அபொறிஜினல் ஆதிக்குடிகள் தொடர்பாக எத்தனையோ கதைகள் எழுதிக் குவிக்கப்பட்டன. அவர்களை பரிவு தேடும் சமூகமாக சித்தரித்தார்கள். அவர்கள் மீதான போருக்கு காரணம் சேர்த்தார்கள். வரலாற்றை குழப்புவதற்கு தேடித் தேடி கதைகளைச் சோடித்தார்கள். ஆனால், இன்று அடக்கப்பட்டவர்களின் தரப்புக் கதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மாறி மாறி வருகின்ற அரசுகள் மன்னிப்பு கேட்டு தலைகுனியுமளவுக்கு பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருங்கொலைகள் சத்தியத்தின் முன்பாக வைத்துக் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இப்போதெல்லாம், இங்கு கலை – இலக்கியம் உட்பட எந்தச் செயற்பாட்டுக்கும் அபொறிஜினல் மக்களின் வரலாற்றினை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறவேண்டும். வரலாற்றை திரிபுபடுத்தவோ – குழப்புவதற்கோ – கடும் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோல, ஈழத்தின் போர் வெக்கையானது காலம் கடந்தபின்னரும் எழுத்துக்களில் உண்மையுடனும் பொறுப்புடனும் பதியப்படவேண்டும். பகிரப்படவேண்டும். அதற்கு அந்தப்போர் தொடர்பான (எதிர் – ஆதரவு என்ற) பிரச்சார மனநிலையிலிருந்து வெளியேறும் இலக்கியப் பக்குவம் வாய்க்கப்பெறுவது எழுத்தாளர்களுக்கு அவசியமாகிறது. இது ஈழ இலக்கியத்தின் பண்புநிலையாக மாற்றமடைய வேண்டும்.

புலம்பெயர் இலக்கியமும் போர் இலக்கியமும் ஈழ எழுத்துக்களின் பிரதான முகங்களாக முன்னிறுத்தப்படுகின்ற அதேவேளை, ஈழத்தில் நிலவும் வர்க்க விரோதங்கள், சாதிய குரோதங்கள் போன்றவற்றையும் எழுத்துக்களில் அழுத்தமாக பதிவு செய்யவேண்டும். சம்பவங்களை நேரடியாக எழுதிவிட்டு, பெயர்களை மாற்றிவிட்டால் அது புனைவு என்று நம்புகின்ற மூடநம்பிக்கை முதலில் ஒழியவேண்டும்.

ஈழத்தின் எழுத்துமொழியிலும் விட, பேச்சு மொழியை எல்லோரும் பெருமையோடு போற்றிக் கொண்டாலும் இலக்கியத்தில் இந்தப் பேச்சுமொழி தொடர்பான வித்தியாசங்கள் போதுமானளவு பதிவாகவில்லை. ஈழத்தின் வட்டார வழக்குகளை செறிவாகப்பேணும் பிரதிகள் வரவில்லையென்றே சொல்லலாம். இதற்கான வாய்ப்புக்கள் இனியாவது உருவாகவேண்டும்.

அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடு. ஜனநாயகச் சிறப்புக்குரிய தேசம் என்றாலும் கூட அகதிகள் விடயத்திலும் பூர்வமக்களின் உரிமைகளிலும் கடுமையான விமர்சனங்களைக் கொண்டுள்ளதே. இதைக்குறித்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள்?

நவ ஆஸ்திரேலிய தேசம் எனப்படுவது எண்ணுக்கணக்கற்ற படுகொலைகளின் வழியாக – மாபெரும் அழிவின் முடிவில் – உருவாக்கப்பட்ட நாடு. டொலர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு சகல சௌந்தர்யங்களாலும் தன்னை நிறைத்துக் கொண்டுள்ளபோதும் ஆஸ்திரேலியா இன்றைக்கும் தனது பழைய கறைகளைக் கழுவிக்கொள்ளமுடியாமல் – பூர்வீக மக்களின் குருதிவாடையோடுதான் – எந்த மேடையிலும் ஏறவேண்டியிருக்கிறது. 1967ஆம் ஆண்டுவரையில், ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுக்கே ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படாதளவுக்கு, நவ ஆஸ்திரேலிய அரச இயந்திரம் மூக்கமுட்ட நிறவாதத்தைப் பருகிய மிதப்பில் ஆட்சிசெய்து கொண்டிருந்த நாடு இது. ஆனால், இந்த நிலமை இன்று வடிந்துவிட்டபோதிலும் தங்களது பழைய குற்ற உணர்வினை மிகக் கெட்டித்தனமாக அவர்கள் கையாளுகிறார்கள். அரசியல் ரீதியாக பூர்வ குடிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டது முதல் எத்தனையோ வழிமுறைகளைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றார்கள். மன்னிக்க முடியாதளவு குற்றங்களை இழைத்துமுடித்துவிட்டு, மன்னிப்பினை வழங்க முடியாதளவுக்கு பூர்வ குடிமக்களின் அரசியல் சிந்தாந்தங்களை – சிந்தனைகளை சிதைத்துவிட்டு, அவர்களிடம் தாங்கள் தொடர்ந்தும் மண்டியிடுவதுபோன்ற பிரமையை நாட்டு மக்களுக்கும் வெளியுலகுக்கும் தொடர்ந்தும் முன்னிலைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். தங்களது பணிவையும் கனிவையும் பண்பட்ட ஆயுதங்களாக பயன்டுத்த தேர்ந்தவர்களாக, அரசியலைக் கையாளுபவர்கள் ஆஸ்திரேலியர்கள். அகதிகள் விடயத்துக்கும் இது பொருந்தும். ஆஸ்திரேலியாவின் பழைய விந்தில் பிறந்த புதிய குழந்தைதான் அகதிகளுக்கு எதிரான அவர்களது கொள்கை.

ஆனால், ஆஸ்திரேலிய இலக்கியம் இவற்றை இப்போதுதான் – கடந்த இரண்டு தசாப்தங்களாக – முனைப்புடன் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஆஸ்திரேலிய இலக்கியம் என்பது எது என்பதில் பல குழப்பகரமான கருத்து நிலைகள் இங்கு நிலவியது. இன்னும் நிலவுகிறது என்றுகூட சொல்லலாம். ஐரோப்பிய, ஆபிரிக்க இலக்கியங்கள் போன்ற செழுமையும் தனித்துவமும் ஓர்மமும் ஆஸ்திரேலிய கலைப் படைப்புக்களில் பெரியளவில் வெளிப்படவில்லை. ஆஸ்திரேலியாவின் முக்கியம் வாய்ந்த – உயரிய – இலக்கிய விருதுகளுக்கான தேர்வு நிபந்தனைகள், உனது ஆஸ்திரேலிய வாழ்க்கையை எழுது என்ற பன்மைத்துவத்துக்கான வரவேற்புக் குரலாகவே அமைந்திருக்கிறது. ஆக, புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்பட்ட பண்பாட்டு – கலாச்சார மோதுகைகள் ஆகியவைதான், இற்றைவரை கணிசமானளவு இலக்கியப் பிரதிகளாக வெளிவந்தவண்ணமுள்ளன.

இந்த வழக்கமான வட்டத்திற்கு வெளியே வந்த புலம்பெயர்ந்தவர்களின் பிரதிகள் அண்மைக்காலங்களில் விருதுகளுக்குத் தெரிவாகியதுடன் பரவலான கவனத்தையும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த – Miles Franklin – இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிக் கொண்டுள்ள சங்கரி சந்திரனின் Chai Time at Cinnamon Gardens என்ற நாவல் நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்கனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. Chai Time at Cinnamon Gardens நாவலின் மூலம் சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கிய கேள்வி – இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு? அதனை யார் தீர்மானிப்பது?

அதேபோல, ஆஸ்திரேலிய அரசினால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீண்டகாலமாகக் குடிவரவு அமைச்சின் தடுப்பிலிருந்த ஈரானிய எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானி தடுப்பிலிருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசு தனக்கு இழைத்துள்ள கொடுமைகளை No Friend But the Mountains என்ற பெயரில் எழுதிய நூலுக்கு 2019ஆம் ஆண்டு விக்டோரிய அரசாங்கத்தின் இலக்கியத்திற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. அப்போதுகூட அவர் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், பூர்வகுடி மக்களின் அபிலாஷைகளுடன் இணைந்து நிற்கின்ற ஒரு புள்ளி ஆஸ்திரேலிய இலக்கியத்தில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கிறது. இந்த இலக்கியம், மீட்பு இலக்கியமாக – குரலற்றவர்களுடன் இணைந்துகொள்ளும் கூட்டு இலக்கியமாக பரிணமிக்கும் வாய்ப்பிருக்கிறது.

அவுஸ்திரேலிய இலக்கியத்தில் இயங்கும் தமிழுக்கு அப்பாலான பிற மொழியினரோடு உங்களுக்கும் பிற தமிழ் எழுத்தாளர்களுக்கும் உள்ள தொடர்புகள், அவதானங்கள்?

ஆஸ்திரேலியாவிலுள்ள தமிழர்கள் அல்லாத எழுத்தாளர்களிடம் நான் அவதானித்த பொதுமையான பண்பு, தங்களது தாயகத்துடனான விடுபடல்களை, புதிய நிலத்தில் சந்திக்கின்ற பண்பாட்டு முரண்களை, கலாச்சார அழுத்தங்களை தங்கள் எழுத்துக்களுக்குள் பத்திரப்படுத்துவதில் அவர்கள் தீவிரமாக உள்ளார்கள். அதாவது, ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், பர்மிய எழுத்தாளர்களிடம் இந்தப் பண்பு உள்ளது. எழுத்துக்களுக்கு அப்பால், இந்த சமூகங்கள் அனைத்திடமும் காட்சிக்கலை மீது அதிக ஆர்வமிருக்கிறது. குறும்படங்களின் ஊடாக தாங்கள் சொல்ல வருகின்ற செய்தியை முன்வைப்பதில் இவர்கள் கூடுதல் ஆர்வம் காண்பிக்கிறார்கள்.

வட இந்தியர்கள் பொதுவில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஹிந்தி மொழி செவ்வியல் கவிதைகளை மீள் வாசிப்புச் செய்கின்ற சந்திப்புக்களை நடத்துகிறார்கள். அவர்களது கவிதை வாசிப்பு முறையே தமிழுக்குப் புதிததாகத் தெரிகிறது. கவிதை வாசித்துக் கொண்டிருக்கும்போது, கேட்டுக் கொண்டிருக்கிப்பவர்கள் இடையிடையே, கவிதையைப் பாராட்டி ஏகமாய் ஒலி எழுப்புவதும் அதற்கேற்ப வாசிப்பாளரும் குறிப்பிட்ட வரிகளை மீளப்படித்து, இயைந்து செல்வதும் என்று அவர்களின் கவிதை முகாம்கள் சுவாரஸ்யம் மிகுந்தவையாக காணப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் பூர்வீக எழுத்தாளர்கள் புதிதாக நாவல் – கவிதை – சிறுகதை வடிவங்களுக்குள் வந்தவர்கள். ஆபிரிக்க கறுப்பினத்தவர்களின் இலக்கியம்போன்ற நேர்த்தியான பின்னணி ஆஸ்திரேலியப் பூர்வீக மக்களுக்குக் கிடையாது. ஆஸ்திரேலிய பூர்வீக குடிகள் தங்கள் வாழ்க்கையை இயற்கைக்கு ஒப்புக் கொடுத்தவர்கள். பாதைகளில் – பாறைகளில் – மரங்களில் வரி வடிவங்களாக ஓவியங்கள் வரைவது, வாய் வழி கதைகளாக தங்களது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது போன்ற பண்பாட்டு வழிகளின் ஊடாக, தங்களது கலாச்சாரத்தை சேகரப்படுத்துபவர்கள். காலனித்துவ ஆட்சிக்குப் பிறகுதான் பூர்வீக மக்களிடையே நாவல் – கவிதை – சிறுகதை வடிவங்கள் சிறிது சிறிதாகப் புளங்கத் தொடங்கியிருக்கின்றன. அவர்களின் இலக்கியங்களில், கூடுதலாக இயற்கையுடனான தங்கள் ஊடாட்டத்தை, இயற்கையை தெய்வமாக வழிபடுகின்ற அமானுஷ்யத்தை பதிவு செய்து, அதிலிருந்து மருவி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து தற்போதுதான் எழுத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுடனான தொடர்பில் உணர்ந்துகொண்டது, அவர்களின் மூதாதையருக்கு நிகழ்ந்த கொடிய வடுக்களை நேரடியாகப் பேசிவிடமுடியாது. பேசவும் கூடாது. தங்களை யாரும் பரிதாபத்துடன் பார்ப்பதை அவர்கள் அறவே நிராகரிக்கிறார்கள். தங்களைக் காட்சிப்பொருளாக அணுகும் யாரையும் அவர்கள் வெறுக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய வெள்ளையினத்தவர்களின் எழுத்துக்களில் தனித்தன்மையை அவதானிக்க முடிவதில்லை. அவர்கள் எழுதுகின்ற இலக்கியம் இயல்பாக – கூர்மையாக – அமையப்பெற வேண்டுமென்றால், தங்களின் முன்னோர்கள் இழைத்த கொடுமைகளை – பூர்வ குடிமக்கள் மீது தொடுத்த போரைத்தான் பதிவு செய்யவேண்டும். அது மன்னிப்புக் கோரும் இலக்கியமாக – குற்ற உணர்விலிருந்து – எழுதப்படவேண்டும். அவர்களின் ஆழ் மனதில் தோன்றுகின்ற தூய உணர்வின் வெளிப்பாடாக அமையவேண்டும். அப்படியான பிரதிகள் எதுவும் வெளியாகி உலுப்பிக் கொண்டதாக நான் கேள்விப்படவில்லை.

அந்தப் பணியை இயன்றளவு, இந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்களே செய்துகொண்டிருக்கிறார்கள்.

உங்களுடையஆழியாள், ‘மார்ட்டினா, ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல், ‘அவனை எனக்குத் தெரியாது போன்ற கதைகள் புதிய அறிதற் பிராந்தியத்தைத் திறக்கின்றன. இப்படியான புதிய தெரிவுகளில் உங்களுடைய கவனம் எப்படித் திரும்பியது?

‘அவனை எனக்குத் தெரியாது’ சிறுகதை, ஆஸ்திரேலிய தமிழ் இளைஞன் மயூரன் சுகுமாரனுக்கு இந்தோனேஷியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அந்த மரண தண்டனை என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கிய சம்பவம். ஒரு தமிழனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என்பதற்கு அப்பால், ‘நான் திருந்திவிட்டேன் என்னை உயிர் வாழ விடுங்கள்’ என்று பதினொரு வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த பின்னர் முன்வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, அவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அது. தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்யவும்கோரவில்லை. கொலை செய்யவேண்டாம் என்றுதான் கேட்டான். ‘பாலி – 9’ என்று மிகப்பிரபலமான இந்தப் போதைப்பொருள் கடத்தல் வழக்கினை நான் ஆரம்பத்திலிருந்தே அவதானித்து வந்தேன்.

சட்டத்தின் ஊடான தண்டனை என்பது, சமூகத்தில் இனிமேல் குற்றம் இடம்பெறக்கூடாது என்ற அச்சத்தையும் அக்கறையும் ஏற்படுத்துவதுடன், குறிப்பிட்ட குற்றவாளியினால் சமூகத்திற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் உறுதி செய்யும் நடவடிக்கை. மயூரன் சுகுமாரன் விடயத்தில், அவன் குற்றத்தை உணர்ந்தான். வருந்தினான். சிறையிலேயே சித்திரக் கலைஞனாக உருவாகினான். மேம்பட்ட மனிதனாகத் தன்னை உருவாக்கினான். பதினொரு வருட சிறைவாழ்க்கை அவனை புதிய மனிதனாக அகத்திலும் புறத்திலும் மாற்றியது. இந்த நிலையில்தான் அவனை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்று தண்டனையை நிறைவேற்றினார்கள்.

ஈற்றில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது ஆஸ்திரேலிய – இந்தோனேஷிய மக்களின் மனநிலைகளையும் உற்றுப் பார்த்தேன். சட்டங்களுக்கு மேல் அரசியல் என்பது எவ்வளவு பாரதூரமான செல்வாக்குச் செலுத்தக்கூடியது என்பதையும் கண்டேன். அந்த சம்பவங்களின் ஏற்படுத்திய திரட்சியான வலிதான், ‘அவனை எனக்குத் தெரியாது’.

அதுபோல, ‘புலரியில் மறைந்த மஞ்சள் கடல்’, இந்த நாட்டை எப்போதும் பீடித்திருக்கக்கூடிய அகதிகள் சிக்கலை பிறிதொரு கோணத்தில் அணுகிய சிறுகதை. அந்தச் சிறுகதையில் இயல்பானதொரு உணர்வோட்டம் வரவேண்டும் என்பதற்காக, மெல்பேர்னில் எனது வீட்டுக்கு சற்று அருகில் உள்ள மயானத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் இரவில் சென்று தனியே அலைந்து திரிந்து, அதன் சூழலை அவதானித்துவிட்டெல்லாம் வந்தேன். அகதிகள் பிரச்சினையை ஒரு அகதியாக அனுபவித்தாலே ஒழிய புரிந்துகொள்ளவே முடியாது. அகதிக்கு இருக்கக்கூடிய வலி பல பரிணாமம் கொண்டது. அகதி என்ற தலைப்பின் கீழ், இன்று எத்தனையோ வித்தியாசமான வகை மாதிரிகளை எழுதிவைத்துவிடலாம். ஒரு அகதிக்கான தீர்வு கிடைக்காதபோது, அவனது இருப்பு ஒவ்வொரு வருடமும் அவனை அவன் ஆயுளில் பின்னோக்கித் தள்ளியவண்ணமுள்ளது. அவன் அனுபவிக்கும் வலிகளில் பல மடங்குகளைத் தலைக்குள் நுழைத்துவிடுகிறது. இந்த உச்ச வலியை ஒரு அகதி, இன்னொரு அகதியோடு மயானத்திலிருந்து பேசும்போது அந்த உரையாடலுக்கான பெறுமதி மேலும் அதிகரிக்கும் என்ற நோக்கில் எழுதிய கதை அது.

‘ஆழியாள்’ – ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையரின் முதலாவது புலம்பெயர்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை. ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையரின் புலம்பெயர்வு 17-18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து முத்துக்குளிப்பதற்காக அழைத்துவரப்பட்ட இருபது பேர்தான், ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதலாவது இலங்கையர்கள் என்று கூறப்படுகிறது. ‘வியாழக்கிழமை தீவு’ எனப்படுகின்ற குவீன்ஸ்லாந்தின் வடக்கிலுள்ள தீவுக்குக் கொண்டுவரப்பட்ட இவர்கள், ‘சிலோன்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியக் கடலில் முத்துக்குளிப்பதற்கு இவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்த வரலாற்றை முக்கியப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட மிக நீண்ட சிறுகதை. ஒரு அச்சு இதழான ‘நீலம்’ இந்தக் கதையை இடச்சிக்கல் பாராது பிரசுரித்தமை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

முன்னர் குறிப்பிட்டதைப்போல, இந்த நாட்டில் இடம்பெற்ற வரலாற்று ரீதியான சம்பவங்கள், ஒரு புலம்பெயரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அபூர்வமான நிகழ்வுகள், புலம்பெயர்தலில் இருக்கக்கூடிய அரூபமான சிக்கல்கள் போன்றவற்றை எழுதுவதற்கு இலக்கியத்தின் புதிய தளங்கள் இடமளிக்கிறது. சம்பவங்களாகப் பதிவு செய்து பல விடயங்களை வரலாற்றில் கரைத்துவிடுவதிலும் பார்க்க, அரிய காலமொன்றின் மனசாட்சியை – மனப்போராட்டத்தை – மன வடுக்களை நுட்பமாகப் பதிவு செய்வதற்கு இலக்கியம் தேவைப்படுகிறது. புனைவின் சுதந்திரத்தின் வழியாக, காலத்தின் நரம்பில் ஒலிக்கும் துடிப்பினை எழுதுவதற்கு இலக்கியம் இன்றியமையாததாகிறது.

தமிழிலக்கியம் இன்று தமிழகம், ஈழம் என்பதற்கு அப்பால் உலகப்பரப்பில் பேரனுவங்களையும் பெரும் பிராந்தியங்களையும் கொண்டியங்குகிறது. . முத்துலிங்கம், சேரன், ஷோபாசக்தி, கலாமோகன் தொடக்கம் நவீன், பா.. ஜெயகரன், தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஸ்ணன், சாதனா வரை வெவ்வேறு திணைகள், வெவ்வேறு நிலங்கள், வெவ்வேறு நாடுகளில் இருந்து கொண்டு எழுதுகிறார்கள். ஆனாலும் இந்த வேறுபாடுகளையும் சிறப்புகளையும் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் ஆய்வு, விமர்சனம் எதுவும் குறிப்பிடக்கூடிய அளவுக்கு இல்லையே,  காரணம் என்ன?

ஈழ இலக்கியம் பற்றிய ஆரோக்கியமான சமகால உரையாடல்கள் மிகவும் மந்த நிலையில் உள்ளன. இதனை வெளிப்படையாக நாங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். இலக்கியம் என்பது வருமானமில்லாத தொழில், அதில் ஈடுபடுபவர்களுக்கு பாரம்பரியமாகவே சமூக அங்கீகாரங்கள் கிடையாது போன்ற வாய்பாடுக் காரணங்களுக்கு அப்பால், இலக்கிய ரீதியிலேயே காணப்படுகின்ற பின்னடைவுகளை எடுத்து நோக்குவோம்.

ஈழத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் நூல் வெளியீடுகளின் எண்ணிக்கைக்கு சமாந்தரமாக அந்த நூல் குறித்த ஆய்வுகளோ – உரையாடல்களோ போதியளவு மேற்கொள்ளப்படுவதில்லை. பொதுவில் வாசிப்பு என்பதே மேலோட்டமானதாகவே காணப்படுகிறது. புத்தகங்களைப் படிப்பவர்களிடமும்கூட ஒருவித கள்ள மௌனம் நிலவுகிறது. இலக்கியம் என்ற அறிவுச் செயற்பாட்டுக்கு இது எதிரானது. முன்பு சிறுபத்திரிகைச் சூழலில் – எழுதியவர் யாரென்றே தெரியாத – படைப்பாளிகளுடனான தொடர்பற்ற – காலப்பகுதியில் நிலவிய அந்நியோன்யமும் இறுக்கமும் இன்று அருகிலே எழுத்தாளரைக் கண்டுகொள்ளும் வாய்ப்பிருந்தும் தொலைவாகிவிட்டது. வாசிப்பின் உன்னதங்களை அல்லது நீண்ட உரையாடல்களை எதிர்கொள்ளும் அறிவுசார் களம் முற்றாகக் கலைந்துவிட்டது.

ஆங்காங்கே மேற்கொள்ளப்படுகின்ற அபூர்வமான உரையாடல்களும்கூட, வாசிப்பதை அப்படியே ஒப்புவித்துவிட்டு, அதற்கு விமர்சனம் – திறனாய்வு போன்ற கலைச்சொற்கள் அணியப்படுகிறதே தவிர, வாசிப்பிலிருந்து தாங்கள் தொகுத்துக் கொண்டதை நுட்பமாக முன்வைக்கு கூர்மை இன்னும் போதவில்லை.

இதற்கு மிக முக்கிய உதாரணம், அண்மையில் வெளியான ‘தனுஜா’ என்ற திருநங்கையின் கதை. அது ஒரு தன்வரலாற்று நூல். இந்த நூல் வெளிவந்தவுடன், நூல் குறித்த மெய் நிகர் உரையாடல்கள் ஈழத்தமிழர் வட்டத்தில் பரவலாக இடம்பெற்றன. இந்த உரையாடல்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலனவர்கள், தனுஜாவின் தனிப்பட்ட வாழ்வு சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு, அவரது வாழ்க்கையை ஆழமாகக் குடைந்து குடைந்து நூலில் இல்லாத ஏதாவது புதினத்தை, தோண்டி எடுத்துவிடலாம் என்று அங்கலாய்த்தார்களே தவிர, வாசகர்களாக யாரும் உரையாடவில்லை. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு தன் வரலாற்று நூலை எவ்வாறு அணுகுவது என்ற அடிப்படை பண்புநிலைகள்கூட அவர்களுக்குப் புரியவில்லை.

நீங்கள் குறிப்பிட்டதைப்போல ஷோபா, முத்துலிங்கம் போன்றவர்கள் குறித்தே, தமிழகத்தில் எழுத்தப்பட்டளவு ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமான ஆய்வுகளோ – வாசிப்பு மதிப்பீடுகளோ முன்வைக்கப்படவில்லை.

இந்த விடயத்தில் தமிழகச் சூழலை ஒப்பீடு செய்யவேண்டிய தேவையிருக்கிறது. இன்று ஜெயகாந்தனும் ஜி. நாகராஜனும் மௌனியும் ஏன் பாரதியும்கூட அங்கு தொடர்ந்து மீள் வாசிப்புச் செய்யப்படுகிறார்கள். அவர்களது எழுத்துக்கள் மீள் பதிப்புச் செய்யப்பட்ட வண்ணமுள்ளன. புதிய தலைமுறையினர் வெவ்வேறு கோணங்களில் தமது வாசிப்பு அனுபவத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், ஈழத்தில் ஜனரஞ்சகமாக அறியப்பட்ட எழுத்தாளர்களைத் தவிர, இன்னும் எத்தனையோ பேரின் எழுத்துக்கள் காலச்சுழலில் விடுபட்டுப் போய்விட்டன. ஏன், எழுத்தாளர்களின் பெயர்களே அவ்வப்போது அவர்கள் காலமாகும்போதுதான் அறியவருகின்றன. இது எவ்வளவு பெரிய அவலம்.

ஒரு அறிவியக்கச் செயற்பாடென்பது மற்ற எல்லாத் துறைகளைப்போல தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டியது. அதன் முக்கியத்துவம் உணரப்படாதவரைக்கும், இலக்கிய ஆய்வுகள்போன்ற பெரும்பணிகள் ஈழத்தமிழ் பரப்பில் இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை.

கருணாகரன் <poompoom2007@gmail.com>

Amrutha

Related post