கலைத் துறையிலும் பரவும் வெறுப்பு! | பிரபு திலக்

 கலைத் துறையிலும் பரவும் வெறுப்பு! | பிரபு திலக்

டி.எம்.கிருஷ்ணா, ரஞ்சனி காயத்ரி

சென்னை சங்கீத வித்வத் சபையின் (The Music Academy) சங்கீத கலாநிதி விருது இந்த ஆண்டு கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் தொடங்கி சில கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சங்கீத வித்வத் சபை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு மட்டுமல்லாமல் இனி வரும் ஆண்டுகளிலும் சங்கீத வித்வத் சபை நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் கலைஞர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இதை பின்தொடர வேண்டும் என்றும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் கர்நாடக சங்கீத உலகில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது?

உலகளவில் கர்நாடக இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் இடையே மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழுவது சென்னையில் உள்ள சங்கீத வித்வத் சபை. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் மிகப் பிரபலமானது. இதற்காகவே உலகின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வருவது வழக்கம். இது ஒரு மாநாடு போல் நடைபெறும். அந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது பெறுபவர் இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குவார். இதன்படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள சங்கீத வித்வத் சபையின் 98ஆம் ஆண்டு இசை நிகழ்வுகள் டி.எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எம். கிருஷ்ணாவுடன் இந்த ஆண்டு, சங்கீத வித்வத் சபை வழங்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும், டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும், மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும், நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சங்கீத கலாநிதி விருது மட்டும் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

வயலின், வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் தான் முதலில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சங்கீத வித்வத் சபைக்கு எழுதியிருந்த கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மாநாட்டின் ஒரு பகுதியாக டிசம்பர் 25ஆம் தேதி நடக்க இருந்த தங்களுடைய இசை நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து இந்த கடிதத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர். அதில், “இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ரஞ்சனி – காயத்ரியின் கடிதத்திற்கு சங்கீத வித்வத் சபையின் தலைவர் என். முரளி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ரஞ்சனி காயத்ரியின் கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “சங்கீத வித்வத் சபையால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது சங்கீத வித்வத் சபையின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். சங்கீத வித்வத் சபையின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வு செய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை.

உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் அறிவிப்பு ஆதரவும் எதிர்ப்புமாக கர்நாடக இசை உலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சூர் சகோதரர்கள் உட்பட மேலும் சில கலைஞர்களும், ஆன்மீக சொற்பொழிவாளரான துஷ்யந்த் ஸ்ரீதரும், டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சங்கீத வித்வத் சபை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருது பெற்ற சித்ரவீணை ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகவும், “எதையும் விட கொள்கை முக்கியம் என்பதை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றும் சித்ரவீணை ரவிக்கிரண் தெரிவித்துள்ளார்.

தற்போது சங்கீத வித்வத் சபை முடிவை எதிர்க்கும் இவர்கள் எவரையும்விட திறமையான கலைஞர் டி.எம். கிருஷ்ணா என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்க்கும் ரஞ்சனி காயத்ரி சகோதரிகளும் சரி, மற்ற கலைஞர்களும் சரி, யாரும் டி.எம். கிருஷ்ணாவின் சங்கீத திறமையை கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கீத உலகின் இன்றைய கலைஞர்களில் எவரையும்விட இந்த விருதுக்கு மிகப் பொருத்தமானவர் டி.எம். கிருஷ்ணா என்பதே அவரை எதிர்ப்பவர்கள் கருத்தாகவும் உள்ளது. அப்புறம் ஏன் எதிர்ப்பு?

இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும்; சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் போன்ற மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், சங்கீதத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட ஒப்பற்ற கலைஞர் டி.எம். கிருஷ்ணா. பாடுவதுடன் கர்நாடக இசை, அதன் வடிவம், அழகியல், பரிணாமம் குறித்து அறிவுப்பூர்வமாக பேச முடிந்த வெகு சிலரில் ஒருவர். தனது இசைப் புலமைக்காகவும் துணிச்சலான எழுத்துக்காகவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் பல சர்வதேச விருதுகள் பெற்றுள்ளவர்.

உலகளவில் பல இசை மரபுகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் பலதரப்பட்டவர்கள் பாடுகிறார்கள், வாசிக்கிறார்கள். ஹிந்துஸ்தானி, கருப்பின மக்கள் உருவாக்கிய ஜாஸ் உட்பட பல இசை மரபுகள் இப்படித்தான் செழுமையானது, நவீனமானது. ஆனால், இதற்கு மாறாக கர்நாடக இசை மரபு மட்டும் ஒரு இறுக்கமான கட்டமைப்பில் இயங்குகிறது; குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றவர்களை உள்ளே புகவிடாமல் கதவுகளை அடைத்து வைத்துள்ளார்கள். கெட்டித் தட்டிப்போன இந்த வட்டத்தை டி.எம். கிருஷ்ணா உடைக்க முயல்கிறார். கர்நாடக இசை ஒரு பிரிவினர் மத்தியில் சிறைபட்டுள்ளதை மீட்டு ஜனநாயகப்படுத்த போராடுகிறார். தங்களை உயர் சாதி என கருதிக்கொள்பவர்களுக்கு மட்டுமானது கர்நாடக இசை என்பதை மறுத்து அனவருக்கும் பொதுவானது இசை என எடுத்து செல்கிறார்.

இதற்காக சூழியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது. சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்கள் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு கர்நாடக இசையில் இசையமைத்துப் பாடியுள்ளார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய ’சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார்.

இசையின் மீது கட்டமைக்கப்பட்ட சாதியச் சமூக அரசியல் பற்றி தனது ‘செபாஸ்டியன் அண்டு சன்ஸ்’ நூலில் விரிவாக அலசியிருக்கிறார், டி.எம். கிருஷ்ணா. கர்நாடக இசைக் கச்சேரிகளில் முதன்மையானதாக பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம். இந்த மிருதங்கத்தின் உருவாக்கம், வரலாறு, அதற்காகப் பதனிடப்படும் தோல், இதை உருவாக்கும் அடித்தட்டு மக்கள், இதன் பின்னால் இருக்கும் சாதி அரசியலை இந்நூலில் டி.எம். கிருஷ்ணா விவரிக்கிறார். மிருதங்கம் தயாரிப்பவர்கள் அதற்காக செலுத்தும் உழைப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியம் என்பதுடன் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை கர்நாடக இசை சமூகம் வழங்கவில்லை என்பதையும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

மிருதங்கத்தின் உடல் கூடு பலா மரத்தினால் செய்யப்பட்டது. இரு புறமும் சரிந்து இறங்கும் அதன் முனைகளான வலமும் இடமும் பசு, எருமை மாடுகளின் தோல் மற்றும் ஆட்டுத் தோல் ஆகியவற்றால் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. இறந்த ஆடு, மாடுகளின் தோலில் இருந்து அல்ல, இதற்காகவே ஆடு, மாடுகளை கொன்று, அவற்றின் தோலை உரித்து எடுத்தே, இது செய்யப்படுகிறது. பசுக்களை கொல்லக்கூடாது, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று வலியுறுத்துபவர்கள் தான் இதையும் செய்கிறார்கள் என்பதையும் அவர்களின் போலித்தனத்தையும் அம்பலப்படுத்துகிறார், டி.எம். கிருஷ்ணா.

இது எல்லாம்தான் இன்று டி.எம். கிருஷ்ணாவை எதிர்ப்பவர்களுக்கு பதற்றத்தை உருவாக்குகிறது. பதற்றத்தில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள். “மிகவும் போற்றப்படும் தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களை டி.எம். கிருஷ்ணா அவமதித்துள்ளார்” என்கிறார்கள் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள்.

எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்து டி.எம். கிருஷ்ணா எழுதிய நீண்ட கட்டுரையை தனி நூலாகவும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரஞ்சனி காயத்ரி கடிதத்தில் சொல்வதைப் பார்க்கும்போது, இந்நூலை இவர்கள் படித்திருப்பார்களா என்ற சந்தேகமே ஏற்படுகிறது. படித்துப் பார்த்திருந்தால் இந்நூலில் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு டி.எம். கிருஷ்ணா, மாபெரும் புகழாரம் சூட்டுவதையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் திறன் வீணடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவரது ஆளுமையையும் இசையையும் அணுகிய விதத்திற்காக இசையுலகினரைக் கூர்மையாக விமர்சிப்பதையும் அறிந்திருப்பார்கள். தன்னை எதிர்ப்பவர்கள் போலல்லாமல் இந்நூலில் வார்த்தைகளையும் பொருளையும் மிகச் சரியாகவே கையாண்டுள்ளார், டி.எம். கிருஷ்ணா. எம்.எஸ். சுப்புலட்சுமியை டி.எம். கிருஷ்ணா அவமதித்துவிட்டார் என்று இன்று கூறும் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், இதுவரை இந்நூலை மறுத்து பேசியதோ எழுதியதோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தான் புலங்கும் சூழலில் நிகழும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதே ஒரு கலைஞனின் தார்மீக கடமை. ஆனால், இதே சங்கீத உலகில் பாலியல் சுரண்டல் இருக்கிறது என்று பேசப்பட்டபோது இன்று கொதிப்பவர்கள் அனைவரும் அமைதி காத்தனர். கலாஷேக்த்ரா பாலியல் சுரண்டலுக்கு எதிராக டி.எம். கிருஷ்ணா மட்டுமே அறிக்கை வெளியிட்டிருந்தார். பாலியல் சுரண்டலை விட தங்கள் கருத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறான கருத்தை ஒருவர் பேசுவதும் செயல்படுவதும்தான் சிலரை பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது என்றால் அவர்கள் செயல்பாடுதான் சந்தேகப்பட வேண்டியது.

மார்ச் 17ஆம் தேதி டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த ஆண்டு தியாகராஜ ஆராதனை நாளையொட்டி, நீண்ட இடைவெளிக்குப் பின், சங்கீத வித்வத் சபை மேடையில் டி.எம். கிருஷ்ணா கச்சேரி நடைபெற்றது. அப்போதே இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கே அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. அப்போதெல்லாம் அமைதி காத்தவர்கள் தற்போது திடீரென ஒரு கூட்டமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளது, அவர்களை பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. சங்கீத வித்வத் சபைக்கு எழுதிய கடிதத்தை ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் பொதுவெளியில் பகிர்ந்தது, அவர்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று சங்கீத வித்வத் சபை தலைவர் முரளி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியாரை புகழ்ந்து டி.எம். கிருஷ்ணா பாடுவதையும் பேசுவதையும் எதிர்க்கும் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்து பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தங்கள் கடிதத்தில் பெரியார் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்பும்கூட ஒரு தரப்பினர் மீண்டும் மீண்டும் அதே பொய்களை முன்வைத்து அவதூறு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நமது அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள தனி மனித கருத்து சுதந்திரத்தை இன்று டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க மறுப்பவர்கள், இந்த எதிர்ப்பின் மூலம் கர்நாடக இசைக் சூழல் குறித்து டி.எம். கிருஷ்ணா முன்வைத்து வரும் விமர்சங்கள் சரிதான் என்பதையும், கர்நாடக இசை உலகம் இசையை மட்டுமே முன்னிறுத்தி உருவான ஒன்றல்ல, மதப்பற்றும் சாதிப்பற்றுமே அதன் அடித்தளம் என்பதையும் உறுதிபடுத்தி இருகிறார்கள். கலையைவிட தங்கள் நலன்களே முக்கியம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தங்கள் சமூக நலனை முன்னிட்டு, அரசியல் களங்களில் ஒரு தரப்பினர் உருவாக்கி வரும் வெறுப்பு, சகிப்பின்மை தற்போது கலைத்துறையிலும் பரவி இருக்கிறது. இது கவலை தரக்கூடியது.

Prabhu Thilak

Amrutha

Related post