ஆளுங்கட்சியின் அடிவருடிகள் | கஜன்
அடடா மழைடா அடை மழைடா
பாட்டுக்கு ஆளுக்கொருபுறம்
ஆடினோம்
இங்கிருக்கும் வடிகாலமைப்பு
இங்கிலாந்திலேயே இல்லை
எனக் கூறினோம்
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில்
இறங்கவேண்டிய விமானம்
சென்னையில் வந்திறங்கியதாக நாங்களே
வதந்தியை கிளப்பிவிட்டோம்
வெள்ளத்தில் அடித்துச் சென்றவர்களை
வேற்றுக்கிரகவாசிகள் எனக்
கணக்கு காட்டினோம்
ஆறாயிரம் தந்த அரசுக்கு
ஏழாயிரம் முறை நன்றி சொன்னோம்
இந்த முறை இறந்தவர்களின்
எண்ணிக்கையும் குறைவுதான்
என எமக்குள் சிலாகித்துப் பேசினோம்
கழுத்துவரை வெள்ளம் வந்தபோதும்
அமைதியாக இருந்தோம் – பின்னர்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
இதோ நீர் உயர்ந்து விட்டது
இனி நெல்லும் உயர்ந்துவிடும்
உணவுப் பஞ்சமே இருக்காது என்றோம்
இரண்டு நாட்களில்
வெள்ளம் வடிந்து நிலமும் காய்ந்து – அதில்
சில புற்களும் முளைத்து விட்டதாக
நாங்களே கூறிக்கொண்டோம்
ஏனெனில்
நாமெல்லாம் இப்போது
ஆளுங்கட்சியின் அடிவருடிகள்
கஜன் <gajan2050@yahoo.com>