மீண்டும் மொழிப் போர்! | பிரபு திலக்

 மீண்டும் மொழிப் போர்! | பிரபு திலக்

மிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய, வீரம்செறிந்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 60ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஆனால், 60 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், மொழிப் பிரச்சினையில் நாம் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்து, ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி தரமாட்டோம் என அச்சுறுத்துகிறது. முற்றிலும் ஜனநாயக விரோதமான ஒன்று, மும்மொழி கொள்கை என்ற புது பெயரில், நம் மீது திணிக்கப்படுகிறது. மீண்டும் இந்தி ஒரு முக்கியப் பிரச்சனையாக ஆக்கப்பட்டிருக்கிறது.

மொழிப் பிரச்சினை என்பது வெறும் அடையாளப் பிரச்சினை அல்ல; அது வெறுமனே ஒரு மொழிசார்ந்த பிரச்சினையும்கூட அல்ல. அது அதிகாரப் பிரச்சினை. மூன்று மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள சொல்பவர்கள் எண்ணம் தங்கள் மொழியை பரப்புவதல்ல; திணிப்பது. அதன் வழியே மேலாதிக்கம் செய்வது.

பல்வேறு மொழி, பல்வேறி இனம் என இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்றிருக்கும் இந்தியாவை இந்துத்துவத்தையும் இந்தியையும் கொண்டு ஒருங்கிணைக்க முனைபவர்கள் உண்மையில் சிதறடிக்கும் வேலைகளையே செய்கிறார்கள். இந்தி ஒன்றிய ஆட்சிமொழியாவதை காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்கள் விரும்பியது உண்மையே. அதற்கு இந்தி அல்லாத மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு 500க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தது. இதனையடுத்து, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை அவர்கள் மீது இந்தியைத் திணிக்கமாட்டோம் என்று அன்றைய பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி இன்று பொருள் இழந்து நிற்கிறது.

தமிழர்கள் இந்தி படித்தால் வட இந்தியா சென்று வேலை பார்க்கலாம் என்கிறார்கள். வடமாநிலங்களில் வேலை இருந்தால் எதற்காக அங்குள்ளவர்கள் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்; அதுவும் மிகக் குறைவான சம்பளத்துக்கு. ஏன் திருட்டுத்தனமாக அமெரிக்காவுக்கு சென்று பிடிபட்டு விலங்கு பூட்டித் திருப்பியனுப்பப் படுகிறார்கள்?

இந்தியை திணிக்கவில்லை; மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை எடுத்து படிக்கத்தான் சொல்கிறோம் என்கிறார்கள். ஒரே பள்ளியில், மூன்றாவது மொழியாக மாணவர்கள் வெவ்வேறு மொழிகளை தேர்வுசெய்தால், அந்த பல்வேறுமொழிகளை எப்படி கற்றுத் தர முடியும்? அத்தனை மொழிகளுக்கும் ஆசிரியர்களை நியமிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள் என்பதற்கு கடந்த காலங்களே சாட்சி.

2021 நிதிநிலை அறிக்கையில் புதிய கல்விக் கொள்கையின் படி, இந்தி ஆசிரியர்களை நியமிக்க 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு எந்த மொழிக்கும் ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, தமிழ், சமஸ்கிருதம் என 3 மொழிகள் கற்றுத்தரப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியை கற்றுக் கொடுக்க 109 ஆசிரியர்கள், சமஸ்கிருதத்துக்கு 53க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளார்கள். ஆனால், தமிழை கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் கூட இல்லை. இதுதான் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் லட்சணம்.

சரி, தமிழ்நாட்டு மாணவர்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்றால், வட இந்திய மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் 3 மொழிகள் யாவை?

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் மிக சிறப்பாக நிர்வகிக்கப்பட்ட மாநிலங்களாக பீஹார் உட்பட மாநிலங்களே இருந்தன. ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் சரியாக நிர்வகிக்கப்படாமல் சீரழிந்து போனதன் காரணமாக இன்று பின் தங்கியிருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையும் முக்கியக் காரணம். இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்றதன் வழியாக இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்கள் சென்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைத்து, தங்கள் நிலைக்கு தாழ்த்த முயற்சிக்காமல், தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டை மாதிரியாகக் கொண்டு தாங்களும் உயர்வதற்கான வழியையே வட மாநிலத்தவர்கள் தேட வேண்டும்.

prabhu thilak

Amrutha

Related post

What do you like about this page?

0 / 400