நம்பிக்கைகள், அதிசயங்கள் | பிறமொழிகளில் க.நா.சு. படைப்புகள் | ஶ்ரீநிவாச கோபாலன்

இன்றைய தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தாக்கம் செலுத்திய மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்களில் மிக முக்கியமானவர் க.நா. சுப்ரமண்யம். உலக மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அவர், சொந்தமாகவும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என எல்லா வகைமைகளிலும் எழுதினார். வாழ்நாள் முழுக்க தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால், தமிழ் தவிர மற்ற மொழிகளில் வெளியான அவரது படைப்புகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை. இந்நிலையில், மற்ற மொழிகளில் வெளியான க.நா.சு. படைப்புகளை கவனப்படுத்தும் முயற்சியே இக்கட்டுரை.
கட்டுரை
1986ஆம் ஆண்டு க.நா.சு.க்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத்தந்த ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ (1985) நூலின் ஆங்கிலப் பதிப்பு ‘A Movement of Literature’, 1998ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. அந்நூலை வெங்கட் சாமிநாதன் மொழிபெயர்த்திருக்கிறார்.
The Palm, The Plantain and The Lotus என்ற தலைப்பில் முந்நூறு இந்திய நாவல்களைப் பற்றி ஒரு நூல் எழுத க.நா.சு. திட்டமிட்டார். பிறகு அத்திட்டத்தைச் சுருக்கி, தலைசிறந்த பத்து நாவல்களைப் பற்றி மட்டும் எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்தார். அதன்படி 1982-8இல் The Mirror பத்திரிகையில் Ten Great Novels of India என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் இன்னும் நூலாக்கம் பெறவில்லை. இருந்தாலும், அக்கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘கணையாழி’ பத்திரிகை வெளியிட்டது. தேவகி குருநாத் கட்டுரைகளை மொழிபெயர்த்தார். இவ்வெளியீட்டிற்கு அசோகமித்திரன் முக்கியக் காரணமாக இருந்தார். ‘கணையாழி’யில் வந்த இக்கட்டுரைகளை அன்னம் பதிப்பகம் ‘சிறந்த பத்து இந்திய நாவல்கள்’ (1985) என்ற நூலாகவும் வெளியிட்டது. ஆனால், இந்நூலுக்கு மூலமாக அமைந்த ஆங்கிலக் கட்டுரைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை.
இதுபோல க.நா.சு. நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள், தொடர்கள் தொகுக்கப்படாமல் உள்ளன. அவற்றைத் தொகுப்பதற்கான முதல் முயற்சியாக பாரதியார் பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகளும் கவிதை மொழிபெயர்ப்புகளும் அடங்கிய நூல், The Birth of a Poet (2024), சென்ற ஆண்டு வெளியானது. இத்தொகுப்பு இன்னும் பல தொகுப்பு நூல்கள் வெளிவருவதற்கான சாத்தியத்தையும் உணர்த்துகிறது.
க.நா.சு., ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்க முயலாதபோதும், இரண்டு ஆய்வு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்தியாவில் கத்தோலிக்கக் கிறிஸ்வத்தின் வருகை மற்றும் பரவல் பற்றிய ஆய்வு, The Catholic Community in India (1970). இந்நூல் நீரத் சௌத்ரியின் முன்னுரையுடன் வெளியானது. மற்றொரு நூலான, Tiruvalluvar and His Tirukkural (1987) சமண நோக்கில் திருக்குறளை அணுகும் ஆய்வு. இந்நூலில் திருக்குறளிலிருந்து பல அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவ்விரு நூல்களும் இப்போது மறுபதிப்புக் காணவேண்டியது அவசியம்.
இவை தவிர The Literary Experience என்ற நூலையும் க.நா.சு. எழுதியிருப்பதாகக் குறிப்புகள் உள்ளன. ஆனால், இது எவ்வகை நூல், எப்போது வெளியானது என்ற விவரங்கள் இல்லை. 1983 ஜனவரியில் க.நா.சு.வின் பாரதியார் பற்றிய கட்டுரையை வெளியிட்ட SPAN இதழின் குறிப்பில் இந்நூல் சுட்டப்படுகிறது. INFA Publications வெளியிட்ட Indian Who’s Who 1980-81 என்ற நூலிலும் The Literary Experience என்ற நூலை க.நா.சு. எழுதியிருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் இதுவரை பார்வைக்குக் கிடைக்கவில்லை.
க.நா.சு.வின் கட்டுரைகள் பல அயல்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. UNESCO பத்திரிகைகளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியுள்ளார். பல மொழிகளில் வெளியாகும் யுனெஸ்கோ இதழ்களின் ஆங்கிலப் பதிப்பில் வெளியான கட்டுரைகள் சில கிடைத்துள்ளன. அவற்றில், வீரமாமுனிவரைப் பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரை (1957) பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழி பதிப்புகளிலும் வெளியாகியுள்ளது.
1961ஆம் ஆண்டு சரஸ்வதி மகால் நூல் நிலையம் பற்றி எழுதிய கட்டுரை, Fönstret என்ற ஸ்வீடிஷ் பத்திரிகையில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை La Réforme (1957), L’Action Catholique (1959) ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன. (இவ்விதழ்கள் யுனெஸ்கோ வெளியிடவிருக்கும் சிலப்பதிரகாரத்தின் பிரெஞ்சுப் பதிப்பு பற்றியும் அறிவிக்கின்றன. அந்தப் பிரெஞ்சுப் பதிப்பு வெளியானதா, அதில் க.நா.சு.வின் பங்களிப்பு இருந்ததா என்ற வினாக்களுக்கு விடை இல்லை.)
க.நா.சு.வின் கட்டுரையொன்று Shiva Tanzt Das Indien Lesebuch (1999) என்ற ஜெர்மன் நூலிலும் இடம்பெற்றுள்ளது. இந்திய எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகள் அடங்கிய நூல் இது. இத்தொகுப்பில் க.நா.சு. பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகக் குறிப்பில், ‘இவர் ஆங்கிலம், ஸ்வீடிஷ் மொழிகளிலும் எழுதியுள்ளார்’ என்ற தகவல் உள்ளது. இந்தக் கூற்றுக்குச் சான்றாக்கூடிய கட்டுரை ஒன்று Bonniers என்ற ஸ்வீடிஷ் இலக்கியப் பத்திரிகையின் ஏப்ரல் 1969 இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் ஆரம்பப் பகுதி மட்டும் கிடைத்துள்ளது. Bloomsbury Academic 2020ஆம் ஆண்டில் Global Modernists on Modernism: An Anthology என்ற தொகுப்பை வெளியிட்டது. சிறந்த தொகைநூலுக்கு Modernist Studies Association வழங்கும் பரிசைப் பெற்ற இத்தொகுப்பில் தருண் சுப்ரமணியம் மொழிபெயர்ப்பில் க.நா.சு. எழுதிய ‘நவீன இலக்கியம்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது.
நாவல்
க.நா.சு. சக படைப்பாளிகள் பலரின் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆனால், தனது சொந்தப் படைப்பு எதையும் அவ்வாறு வெளியிட்டதாகத் தெரியவில்லை. க.நா.சு.வின் காலத்தில் அவரது நாவல்கள் எதுவும் மற்றவர்கள் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் தனி நூலாக வெளியானதாகவும் தெரியவில்லை.
1970களில் Arnold-Heinemann இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தைத் தொடங்கியபோது, நாவல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பாசிரியராக க.நா.சு. நியமிக்கப்பட்டார். அப்போது நாவல் வரிசையில் க.நா.சு.வின் ‘அசுரகணம்’ நாவல் Demon Breeds என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாக இருந்தது. வங்காளத்திலிருந்து தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’, மராத்தியிலிருந்து பி. எஸ். ரெகேவின் ‘ரேணு’ ஆகிய நாவல்களும் வெளிவர ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 1973ஆம் ஆண்டின் பத்திரிகை விளம்பர அறிவிப்பு ஒன்றிலிருந்து இந்த விவரம் தெரியவருகிறது. விளம்பரத்தில் கூறியுள்ளபடி, ‘ஆரோக்கிய நிகேதனம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை 1977ஆம் ஆண்டில் Arnold-Heinemann வெளியிட்டுள்ளது. ஆனால், ‘அசுரகணம்’ பற்றிய அறிவிப்பு பலித்ததா என்று தெரியவில்லை.
இதே காலப்பகுதியில், க.நா.சு.வின் ‘வாழ்ந்தவர் கெட்டால்’ (1951) நாவலை, நகுலன் ‘The Fall’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமியின் Indian Literature பத்திரிகையின் ஜூலை – ஆகஸ்ட் 1978 இதழில் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கியச் சிறப்பிதழாக வெளியான அந்த இதழில், ‘வாழ்ந்தவர் கெட்டால்’ நாவலின் மொழிபெயர்ப்புடன், க.நா.சு.வின் நாவல்களை அறிமுகப்படுத்தி நகுலன் எழுதிய முன்னுரையும் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பை, அச்சேறுவதற்கு முன்பே வாசித்திருப்பதாக அசோகமித்திரன் எழுதியுள்ளார். 46 ஆண்டுகள் கழித்து, இந்த மொழிபெயர்ப்பை Zero Degree Publishing சென்ற ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளது. இப்போது ஆங்கிலத்தில் கிடைக்கும் க.நா.சு.வின் ஒரே புனைவு நூலும் இதுதான்.
‘அவதூதர்’ (1988) நாவலைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த நாவலின் மூல வடிவம் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. லதா ராமகிருஷ்ணன் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தார். ‘அவதூதர்’ நாவல் தமிழில் வெளியானபோது அதற்கு க.நா.சு. எழுதியிருக்கும் முன்னுரையில், அறுபதுகளிலேயே இந்நாவலை ஆங்கிலத்தில் எழுதிவிட்டதாகச் சொல்கிறார். இந்நாவல் ஆங்கிலத்திலேயே வெளியாகும் வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், பதிப்பாளர் கோரிய திருத்தத்தைச் செய்ய மறுத்ததால், நாவல் வெளியாகவில்லை. வேறு பதிப்பகம் மூலம் வெளியிடவும் க.நா.சு. முயலவில்லை. பின்னர், எண்பதுகளில் இந்த நாவலைத் தமிழாக்கம் செய்த லதா ராமகிருஷ்ணன், மொழிபெயர்ப்பை முடித்துவிட்டு மூலப்பிரதியை க.நா.சு.விடமே ஒப்படைத்துவிட்டதாக நினைவுகூர்கிறார். ‘அவதூதர்’ நாவலின் மூலப்பிரதி என்னவாயிற்று என்பது இன்றுவரை தெரியவில்லை.
1965ஆம் ஆண்டில் வெளியான ஒரு குறிப்பு, க.நா.சு. ‘ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்று சொல்கிறது. டி.எஸ். எலியட் நூற்றாண்டை முன்னிட்டு பி. லாலின் Writers Workshop வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பில் க.நா.சு.வும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், க.நா.சு. எழுதிக்கொண்டிருந்த ஆங்கில நாவல் பற்றிய தகவல் உள்ளது. இக்குறிப்பில் சுட்டப்படுவது ‘அவதூதர்’ நாவலின் மூலப்பிரதியாக இருக்கக்கூடும். (‘இலக்கிய வட்டம்’ பத்திரிகைக்கு இணைப்பாக வெளியாகிக் கொண்டிருந்த ‘நடுத்தெரு’ நாவலை எழுதிமுடித்த கையோடு, அதே நாவலை வேறு கோணத்தில், ஆங்கிலத்தில் எழுதிப் பார்த்ததாக க.நா.சு. கூறுகிறார்.)
‘அவதூதர்’ நாவலைத் தமிழாக்கம் செய்த லதா ராமகிருஷ்ணன் க.நா.சு.வின் ‘தாமஸ் வந்தார்’ (1988) நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முதலில் பகுதியளவு மொழிபெயர்த்திருந்த நிலையில், க.நா.சு. அதனைப் பார்வையிட்டு இசைவு தெரிவித்துள்ளார். விரைவிலேயே க.நா.சு. காலமாகிவிட, மொழிபெயர்ப்பும் பூர்த்தியடையாமல் நின்றுவிட்டது. மொழிபெயர்த்த சில அத்தியாயங்களை லதா ராமகிருஷ்ணன் தன் வலைப்பூவில் (https://letgolatha.blogspot.com) வெளியிட்டிருக்கிறார். பல வருடங்களுக்குப்பின், தற்போது எஞ்சிய அத்தியாயங்களையும் மொழிபெயர்த்து நிறைவுசெய்ய முனைந்துள்ளார்.
Arnold-Heinemann பதிப்பகத்தின் நாவல் வரிசையில் ‘அசுரகணம்’ நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானதா என்று தெரியவில்லை. ஆனால், தெலுங்கிலும் மலையாளத்திலும் அந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பி. சபாபதி, சிங்கராசாரியார் இருவரும் இணைந்து தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளனர். 1968ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த மொழிபெயர்ப்பு பற்றி க.நா.சு. ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் குறிப்பிடுகிறார். தெலுங்கு நூற்றொகைக் குறிப்பும் இந்த மொழிபெயர்ப்பு வெளியானதை உறுதிசெய்கிறது. நூலை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர் தெரியவில்லை.
‘அசுரகணம்’ நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருப்பவர் மா. தட்சிணாமூர்த்தி. இதனை 1977ஆம் ஆண்டு DC Books வெளியிட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புப் பிரதி கிடைத்துள்ளது. புதிய பதிப்புக்கான முயற்சியும் நடக்கிறது.
‘வாழ்ந்தவர் கெட்டால்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை 1978ஆம் ஆண்டு வெளியிட்ட Indian Literature பத்திரிகை, அதற்கான எதிர்வினைகளை நான்கு ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு செப்.-அக். இதழில் வெளியிட்டுள்ளது. அவற்றில் இரண்டு எதிர்வினைகள் முக்கியமானவை. கவுஹாத்தி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜே.என். பருஹா எழுதியிருக்கும் கடிதத்தில், இந்நாவலை அசாமி மொழியில் வெளியிட அனுமதி கோரியுள்ளார். மற்றொரு கடிதத்தை தில்லியைச் சேர்ந்த விரிவுரையாளர் ஆனந்த் குமார் வாஜ்பாயி எழுதியுள்ளார். அவரும் இந்நாவலின் இந்தி மொழிபெயர்ப்புக்கு அனுமதி வேண்டுகிறார். இவ்விரு விருப்பங்களும் செயல்வடிவம் பெற்று, நூலாகவும் வெளிவந்தனவா என்று அறிய முடியவில்லை.
சிறுகதை
க.நா.சு. எழுதிய சிறுகதைகள் பல இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளிலும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில் தானே தனது தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவை கணிசமான எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம்.
க.நா.சு. தொகுத்த Tamil Short Stories (1976) நூலில் The Search என்ற சிறுகதை இடம்பெறுள்ளது. ‘சோதனை’ என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது. இந்திரா பார்த்தசாரதி இக்கதையை மொழிபெயர்த்துள்ளார்.
‘ஆடரங்கு’ என்ற தனது சிறுகதையை The Debut என்ற தலைப்பில் க.நா.சு.வே மொழிபெயர்த்துள்ளார். சுரேஷ் கோலி தொகுத்த Modern Indian Short Stories (1974) நூலில் இக்கதை இருக்கிறது. இதே கதையை Indian Horizons இதழும் வெளியிட்டுள்ளது. இன்னும் சில கதைகளும் Indian Horizons இதழில் பிரசுரமாகியுள்ளன.
க.நா.சு. நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிய சிறுகதை Bosanski Novi. 1972ஆம் ஆண்டு Quest பத்திரிகையில் வெளியான இக்கதை, Contemporary Indian Short Stories (1977), The Craft of Writing (1978) ஆகிய தொகுப்புகளிலும் இடம்பெற்றது. இக்கதைகள் விரைவில் நூலாக்கம் பெறவுள்ளன.
கவிதை
நகுலன், கமில் ஸ்வலபில், ஆர். பார்த்தசாரதி, டி.எஸ். தட்சிணாமூர்த்தி, தம்பி சீனிவாசன், கே. சச்சிதானந்தன் முதலிய பலரின் மொழிபெயர்ப்பில் க.நா.சு.வின் வெவ்வெறு கவிதைகள் ஆங்கில இதழ்களிலும் தொகுப்புகளிலும் வெளியாகியுள்ளன. க.நா.சு. தானே மொழிபெயர்த்து வெளியிட்டவையும் உண்டு.
Situation என்ற கவிதையை எழுதி, அது ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும் வெளியாகி பாராட்டும் பெற்றது என்று க.நா.சு. ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். கவிதை எழுதுவது குறித்த தன் தந்தையின் எச்சரிக்கை காரணமாக, தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிட்டதாகவும் சொல்கிறார். இக்கவிதை மிகப் பிரபலமாகி பல தொகுப்பு நூல்களில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, வினய் தர்வாட்கரும் ஏ.கே. ராமானுஜனும் இணைந்து தொகுத்த The Oxford Anthology of Modern Indian Poetry (1994) தொகுப்பிலும் இக்கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.
‘பாதை நீ’ என்ற கவிதை க.நா.சு. மறைவையொட்டி வெளியான Indian Literature இதழில் நகுலன் மொழிபெயர்ப்பில் வெளியானது. 1994ஆம் ஆண்டில் Indian Literature மே-ஜூன் இதழில் க.நா.சு. நினைவாக அவரது சில கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. ‘ஏற்றமும் இறக்கமும்’, ‘அனுபவம்’, ‘பயணம்’, ‘நீதிக்கிளி’, ‘அலிகள்’, ‘தேவடியாள்’, ‘கடிதம்’, ‘முச்சங்கம்’, ‘காலம் தாழ்ந்தபின் வந்தவன்’ முதலிய கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன.
தற்போது, மொழிபெயர்ப்பாளர் லதா ராமகிருஷ்ணன் க.நா.சு.வின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பொன்றை வெளியிடும் திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்.
க.நா.சு. எழுத்துகளுக்குத் தமிழிலேயே நேர்த்தியான பதிப்புகள் இல்லாத காரணத்தால் அவரது பங்களிப்புகள் இன்னும் சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை. குறிப்பாக, க.நா.சு.வின் சிறுகதைகள், கவிதைகள் குறித்து இப்போது நிலவும் மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்குரியவை. அத்துடன், ஓர் இருமொழி எழுத்தாளராக க.நா.சு.வின் ஆங்கில எழுத்துகளும் கவனம்பெற வேண்டும். க.நா.சு. வாழ்ந்த காலத்திலேயே அவரது புனைவெழுத்துகளுக்கு நல்ல மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருந்தால், தமிழ் இலக்கிய சாதனைகளும் சரியான வகையில் கவனிக்கப்படும் வாய்ப்பு அப்போதே உருவாகியிருக்கும். இருந்தாலும், இப்போது அதற்கான முயற்சிகள் நடந்துவருவது மகிழ்ச்சிக்குரியது.
க.நா.சு. சொல்வதைப்போல நம்பிக்கைகளும் அதிசயங்களும் பிரிக்க முடியாதவை. நம்பிக்கையுடன் செயல்புரிந்தால் அதிசயங்கள் நிகழலாம்.
ஶ்ரீநிவாச கோபாலன் <sharetosrini@gmail.com>