முயங்கொலிக் குறிப்புகள் 12 – 15 | கயல்

ஓவியம்: நடேஷ்
30. அணைப்பதற்கு முந்தைய வெளிச்சம்
‘ஒன்பது எட்டு
ஒன்பது நான்கு
ஒன்று நான்கு
ஏழு ஆறு
ஏழு ஒன்று.
சரியா?
ஒரு முறை
சரி பார்த்துக்கொள்வோம்.
மறுபடி சொல்லுங்கள்’
இம் முனையிலிருந்து
இழைந்தது மென்குரல்.
எதிர் முனை
கரகரத்த குரல் ஒப்புவித்தது
‘ஒன்பது எட்டு ஒன்பது
நான்கு ஒன்று நான்கு
ஏழு ஆறு ஏழு
ஒன்று.’
அலைபேசி எண்களைக்கூட
வெவ்வேறு விதமாகச் சொல்லி
கேட்பவரைக் குழப்புவதோடு
தானும் குழம்புகிறவர்களை
எப்போதைக்குமாய்ப் பிணைக்கிற
காலத் திரி
கண்ணுக்குத் தெரிவதில்லை.
ஆறேழு நண்பர்களின் கூடுகையில்
அத்தனை பேரையும்
பன்முறை அழைத்து
எதுவெல்லாம் விருப்பமென்று கேட்டு
எல்லாவற்றையும் உறுதி செய்கிற எவரும்
கேட்டறிய முயல்வதில்லை
இந் நொடி இணக்கமான ஒன்றா
என்று
விளக்கணைக்கும் முன்
தம் இணையிடம்.
31. எழுதியும் தீராதது
நீ
தீராத பிரியத்தின்
வாசனை.
நினைவுகளின்
தாபத் திரி.
கொளுத்திய கணமே
உடலெங்கும் பரவுவாய்
எல்லைகளுடைத்து.
கிளையை அணைத்துக்கொள்கிற காற்றாக
இடைவெளியின்றி
உன்னுள் அடைக்கலமாகிறேன்.
ஒவ்வொருமுறை
நான்
நதியாகிறபோதும்
நீ
தொலைவிலிருக்கும்
கடலாகிறாய்.
உன்னைச் சேராது
எங்கெங்கோ பயணித்து
எதையெதையோ தேடியதை
வாழ்வு என்று
எப்படிச் சொல்வது?
கண்மணி!
உயிர்க் கூத்தாடும் அந்த
உன்னதத் தருணங்களைக்
கூடலென்றும் கலவியென்றும் மட்டும்
சுருக்கிச்
சொல்லிவிடமுடியுமா?
ஐம்புலன்களின் ஊற்றுகளில் பீரிடும்
உனக்கான பிரியத்தை
நானுனக்கு வேறு எப்படிச் சொல்வது?
சிறுகை அள்ளிய
மணலில்
துளி கடலை
வீட்டுக்கு எடுத்துவந்து
குடுவையில்
பத்திரப்படுத்தும் சிறுவனாகத்தான்
சகி
என்
உன்மத்தத்தை
உன்னுடல்மீது தினம்
நான் எழுதுகிறேன்.
இதை
உன்னுடலன்றி
இன்னோர் தேகத்தின்மீது
என்னால்
எழுதவேமுடியாதென்பதால்
இது காதல்
32. எதிர் நீச்சல்
அன்றொரு நாள்
அந்தியில் முந்திவந்து
அல்லிக்குளத்தருகே
உனக்காகக் காத்திருந்தபோது
பிந்திவந்த பிழையை
நேர்செய்ய
முகமுயர்த்தி
நீண்ட நேரம் மூச்சடக்கி நீந்த வல்லவர்
நம் இருவரில் யார்
எனும் போட்டியை முதலில் முன்மொழிந்தது
நீதான்.
நீச்சலில்
உன் வித்தைகள்
ஒவ்வொன்றும் தெரியும் எனக்கு
என் சாகசங்கள்
எல்லாமும் அறிவாய் நீயும்
எனவே
சமர் என்பது
சமமானவர்களுக்கு இடையே மட்டுமே
எனும் நியதியும்
இதில் மீறப்படவில்லை.
தேதி குறிக்கப்பட்ட தினத்திலிருந்து
நாளும் காலையில்
நீச்சல் குளமே கதியென
நீந்திக் கிடந்தேன்.
உன்னை வென்று
நான் பெறப்போகுமிந்தக் கோப்பை
உடைந்த மனதில் இருந்து தளும்பும்
ஏமாற்ற நதியென்று அறிவேன்
ஆயினும்
நான் நிரூபிக்க விரும்பியது
எனக்கே என்னை.
விசித்திரமாக இருந்தது
பயிற்சிக் காலம் முழுதும்
கண்ணெட்டும் தூரம்வரை
உன்னை எங்கும் காணாதது.
அலைபேசியில் ஒரு
அழைப்போ
அக்கறையான விசாரிப்போ
எதுவும் இல்லை.
நான்
அழைத்தால்
அவகோடா
மாதுளை ரசம்
வாதுமைக் கொட்டை
வாழைப்பழம்
பூசணி விதை
மத்தி
கானாங்கெளுத்தி
முந்திரி
தர்பூசணி
என்று போட்டிக்குப்
பொறுமையாய்த் தயாராவதாய்ச் சொன்னாய்.
புரியாமல் புன்னகைத்தேன்.
என்று நடந்தது
எப்படி நிகழந்தது
எதுவும் புரியாதபோதே
நீ வென்றதாக முரசறைந்தபோதுதான்
உணர்ந்தேன்
நானே உன் கடல் என்பதும்
இதில் நான்
எப்போதும் தோற்கவே வாய்ப்பில்லை என்பதும்.
33. முதுவேனில்
அவள்:
சரக்கொன்றை இறைந்துகிடக்கும்
சாலையொன்றைக் கடந்துதான்
நீ வந்திருக்கவேண்டும்
பொன்னந்தி பொலிகிற புன்னகையோடு
அப் பூக்கள்தான்
உன் உதடுகளில் என் பெயரை முணுமுணுக்கச் செய்திருக்கும்.
இல்லாவிட்டால் என்னை நினைத்திருப்பாயா என்ன?
அதுவும்போக
நனைந்திடக் காத்திருக்கும்
நெய்தற் பூவினைப்
பஞ்சுபோல ஒற்றியெடுக்கிற மென்மையுனக்குப் பழக்கமில்லாதது.
காற்றுக்குப் புரண்டு தவிக்கும்
சிற்றகலின் தாளகதியில்
தோலிசைக் கருவி
மீட்டும் பாணன் நீ
அவன்:
சுட்டு விரலின் சொடுக்கலில்
கொட்டிக் கிடக்கிறது இன்பம்
கோடி வகைகளில்
பலப் பல வண்ணங்களில்
அதற்காகவெல்லாமா உன்னை நான்
அன்பே என்றழைத்து
உன் அண்மையை
நாடி ஒவ்வொரு முறையும் ஓடோடி வருகிறேன்!
சமுத்திரத்தோடு இருந்தாலும் பிரிந்தாலும்
சங்கு முழக்கும்
அலையோசை
உன் மீதான என் பித்து.
இது புரிய
நேசத் தோணியின் துடுப்பெடுத்து
காலக் கடலின் மறுகரைவரைபோய்
உனக்கும் எனக்குமான
உறவின் ஜென்ம ஜென்மாந்திரக் கதைகளைக்
கடற்பறவைகளின் பாடல்களில்
நீ
கேட்டுத் திரும்பலாம் தேவி!
அவள்:
அதெல்லாம் அவசியமில்லை.
இத்தனை பொழுதில்
எத்தனை பகல்கள்!
ஏதேனும் ஒன்றிலாவது கண்டிருக்கலாம்
இடம் சுட்டி விளக்கவேண்டும்
என்னுடலில் ஒற்றை மச்சத்தின் இருப்பை.
பிறகு நாம் குறிக்கலாம்
இன்றைய நல் யாமத்திற்கான
முகூர்த்தம்.
அவன்:
மச்சமா?
யட்சியின் அழகை
பூரணமாக யார் கண்டார்?
கண்டவர் விரித்துரைக்கவும் ஆகுமோ?
ஆயினும் இது கேள் ப்ரியை!
உன் மீதான உன்மத்தத்திற்கான காரணம்
துயர் சூழ் உலகெனும்
அடர் வனத்து இருள் நடுவே
அணையாத அழகுடன்
நீ சுடர்கிறாயே அதனாலா,
இல்லை!
மொக்குக்குள் ஒளிந்திருக்கும்
பூவின் பூரணமாய்
என் வாழ்வின் நிறையென்பது
இந்த மொத்த உலகின்
பேரமைதியை ஏந்தியிருக்கும்
உன் மடியில் சரணடைவதில்தான் உள்ளது,
என்பதுவா காரணம்,
இல்லை!
துரோகங்களின் அறுவடையில்
நான் தளர்ந்துகிடக்கையில்
அள்ளி முத்திட்டு
ஆறுதல் அளித்த
என் மீத வாழ்வின் திசைமானி நீ
என்பதாலா,
இல்லை!
இனி பாராமலேயே போகலாம்
என்றாலும்
யாராலும் பொருட்படுத்தப் பெறாமல்
வீதியோரம் நிற்கிற எனக்காக
உன் கண்ணில் எப்போதும் திரண்டு நிற்கும் காதல்
ஆனால்
அதுமட்டுமே காரணமில்லை!
அவள்:
போதும்! போதும்!
நான் கேட்டது என்ன?
நீ சொல்வது என்ன?
சரி
அது போகட்டும்
அந்தக் காரணத்தையாவது சொல்
அவன்:
ஒன்று சொல்லவா…
காரணங்கள்
என்று ஏதுமிருந்தால்
அது எப்படியடி
காதலாகும்?
அவள்:
ம்ம்…
34. இல்லுறை தெய்வம்
பிறையளவும்
இளக மறுத்து
பிணங்கி
நிற்கும்
பிரியமே!
கள்ளப் பார்வைகள்
சொல்லில் அடங்காத மூர்க்கம்
வழிவழிப் பெருமை என
இவையெல்லாம் சேர்ந்த
என்னிடம்
வீட்டுப் பிராணிதானே
என்றெண்ணி இயல்பாக
ஒருநாளும் பழகிவிடமுடியாது
என்று அறிவாய்.
வழியில்
எழிலொன்றை
எதிரிடுகையில்
என் ஓரக் கண்
இமைகள்
இச்சையுடன் துடிப்பதை
அறிந்தும்
அறியாதவள்போல
அனுமதித்திருக்கிறாய்
அநேக தடவைகள்.
இன்றோ
மூடிக் கொண்டுவிட்ட
கதவின் பின்
உன் முகம் பார்க்கவும்
தவித்துக் கிடக்கிறேன்.
என் உள்ளத்துள்
உறைந்து கிடக்கும்
கசடுகள் போக்கி
தெவிட்டாத
உன் அன்பின்
உன்மத்தத் தேறல்
புகட்டியவள் நீ.
நின் பூரணத்தின்
தாள் முன்
என் போதாமையின்
சிரம் பணிகிறது.
ஆழ் கடலின்
பேரெல்லையாய்
பெருகி நிரம்பியவுன்
பெண்மையின் பெருமிதம்
கண்டு அஞ்சி நின்றவனை
அள்ளியெடுத்து
ஆட்கொண்டு
அற்புதங்கள் செய்வித்து
ஆணாக்கியவள் நீ!
ஆயினுமென்ன
பிரியம் ஊற்றிவைத்த
உன் இதழ்க் குவளையை
எடுத்துப் பருகும் முனைப்பில்
எதேச்சையாய் உதிர்ந்த
ஒரு சொல்
ஆண் நானென்ற
அகந்தையில் உருப்பெற்ற
ஒரு வார்த்தை
அதன் விளைவை
அறியாமல் உச்சரித்ததற்காகவா
இத் தண்டனை?
இது
நீ நானாகவும்
நான் நீயாகவும்
குணம் மாறும்
அபாயகரமான நேரம்
நம்மில் எவர் தோற்பினும்
இருவருமே பிழைகளாவோம்.
வா
இருவருமாகச் சேர்ந்து
இன்றோர் சொற்களற்ற
இரவினைப் புனைந்து
அதில் அடைக்கலமாவோம்
அறிந்தும் அறியாமலும்
இதுகாறும் செய்த
சிறிதும் பெரிதுமான
எனது தவறுகளுக்கெல்லாம்
இரட்சிப்பை யாசிப்பேன்
மனமிரங்கி அருள்வாய்
என் தேவி!
மீத வாழ்வு முழுமைக்குமாய்.
35. கதைச் சுருக்கம்
அன்றெல்லாம்
எக் காட்சிக்கும் அதிசயித்து விரியுமோர்
பூனைக் குட்டியின் கண்களாக
மினுங்கிக்கொண்டிருந்த
உன் வதனத்தில்
இன்றோ
பழகிய தடத்தில்
நெருக்கடியான இடத்தில்
நடந்து நடந்து கடுக்கிற
பேருந்து நடத்துனரின்
சலிப்பு.
எம்
பெண்களின்
இன்பக் கதைகளானது
இத்தனை விரைவாக
முடிவது எதனால்
என வினவுகையில்
தலை கவிழ்கிற
ஆண் கடவுளிடமிருந்து
தயக்கத்துடன் வருகிறது
ஒற்றை வார்த்தையில்
ஒரு பதில்
வயிற்றுப்பாடு.
தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>