பென்னிஸ் – விட்டல்ராவ்
ஸ்கூட்டர் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடத்தொடங்கின. ஆரம்பகாலத்தில் தென்பட்ட அந்த வாகனாதி ‘ஃபண்டாபுலஸ்’ வகை வண்டியொன்றில் வந்து இறங்கிய பென்னிஸை சிலர் வயிற்றெரிச்சலோடு கவனித்தனர்.
“வண்டிக்காரன், இதுவும் வாங்குவான், இன்னொண்ணும் வாங்குவான்” என்று மெதுவாக கூறிவிட்டு பீடியை எறிந்தான் நாயர்.
“யோவ் நாயர், உள்ளே போ, ஏஇ கூப்புடறார். டைவர்ஷன் ஷெட்யூல் வந்திருக்கு, பாத்து ஓவர் டைம் கேளு”, என்றான் சக வயர்மன் மைகேல். வயர்மன் நாராயண நாயர் உள்ளே போனதும் இருவர் பென்னியை நெருங்கி விசாரித்தனர்.
பென்னிஸ் கவர்ச்சிகரமாயிருப்பான்; மங்களூர் பக்கத்துக்காரன்; வீட்டில் கொங்கணி பேசுவான். தொலைப்பேசி இலாகாவுக்குள் கடை நிலை ஊழியனாக வலது காலை எடுத்து வைத்து நுழையும்போது பைஜாமா சட்டையிலிருந்தவன், இப்போது ‘ஃபண்டாபுலஸ்’ ஸ்கூட்டரில் வந்து இறங்கினான். சரியாக வேலை தெரியாது. எப்படியோ காசு சேர்ந்திருந்தது. டிபார்ட்மெண்டில் அதிகாரி உத்தியோகம் பார்ப்பதாக ஊரில் கதைவிட்டு படிப்பறிவில்லாத பணக்கார வீட்டில் பெண் எடுத்து, காசு பணம் கொண்டு வந்துவிட்டான். அதை வட்டிக்கு விட்டபடியே வளர்ந்தவன்.
சென்னை குதிரைப் பந்தய நாட்களில், தொலைப்பேசி இலாகா மகாஜனங்களில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்து சிப்பந்திகள் வரை ரேஸ்கோர்சில் காணக் கிடைப்பார்கள். பெண்கள், விதிவிலக்கல்ல. குறிப்பாக ஆங்கிலோந்திய பெண்கள் குதிரைப் பந்தயங்களைத் தவறவிடமாட்டார்கள். பிரதி மாதம் பதினைந்து தேதிக்குப் பிறகு இந்த வாடிக்கையாளர்களுக்குப் பணத்தட்டுப்பாடு வரும். முடிந்தவரை அடகு வைப்பார்கள், கைமாற்று வாங்குவார்கள். சற்று பெரிய தொகையை வட்டிக்கு கடன் வாங்கும் சமயம்தான் பென்னிஸ் அவதாரமானான்.
உயர் அதிகாரிகள் அவனிடம் நேரிடையாக கடன் கேட்காமல் கீழ்மட்ட சிப்பந்தி ஒருவன் மூலமாக செய்துகொள்ளுவார்கள். அப்படியாக சில கீழ்மட்ட சிப்பந்திகளை உயர் அதிகாரிகள் தம் ஜேபியில் போட்டுக்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அலுவலக, தொலைப்பேசி இணைப்பகப் பகுதிகள், சாப்பாட்டறை ஆகியவற்றில் ஊழியர்கள் பேசிக்கொள்ளுவதை அறிய ஐந்தாம்படையாக உபயோகிப்பார்கள். ரகசிய சலுகைகள் கிடைக்கும். பென்னிஸ் அந்த கீழ்மட்ட சிப்பந்திகளை வாஞ்சையோடு கவனித்துக்கொள்ளுவதுண்டு. பென்னிஸ் மெள்ள நான்காம் பிரிவிலிருந்து மூன்றாம் பிரிவு சிப்பந்திகளுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, நான்காம் ஊழியனுக்கான காக்கி சீருடையைக் களைந்து விசிறியெறிந்தான்.
இப்போது பெருந்தொகையை வட்டிக்கு தருகையில் எதையாவது ஈடாக வாங்கிக்கொள்ளத் தொடங்கினான். அப்படியாகத்தான் வாங்கிய பெருந்தொகைக் கடனை சொன்ன தேதிக்குத் திருப்பித் தர இயலாத அதிகாரி ஒருவர் கடனுக்கு ஈடாக தன் ஸ்கூட்டரை பென்னிஸிடம் விட்டுவிட்டார். இந்த விதமாக வந்ததுதான் அவன் சவாரி செய்து கொண்டிருந்த ‘ஃபண்டாபுலஸ்’.
ஷேக்ஸ்பியரின் ஷைலக்குகள் காலந்தோறும் உலகின் ஏழைநாடுகளில் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி பேசாமலிருக்க முடிவதில்லை.
பின்னாளில் பென்னிஸ் கடன் தருவதை குறைத்துக்கொள்ள முயன்றான். நூறு ரூபாய் கடன் கேட்டால், அந்த தொகைக்கான முதல் மாத வட்டியைக் கழித்துக் கொண்டு மீதியைத் தருவதோடு, வேறொரு வழியையும் கையாளுவான். வட்டி போக மீதியை நீட்டிவிட்டு தோழமையோடு அழைப்பான்.
“வா, டீக்குப் போலாம்.”
பரவாயில்லை, வட்டிக்காரன் தேநீருக்கு அழைக்கிறான், ஈரமுள்ளவன்தான் என நினைத்துக்கொண்டே கடன் வாங்கியவன் அவன் பின்னால் போவான். தேநீருக்கு சொல்லச் சொல்லுவான் பென்னிஸ். வழக்கம் போல பரிசாரகன் விதவிதமான பிஸ்கட்டுகள் அடுக்கின தட்டை கொண்டுவந்து வைப்பான். உடனே ஒன்றிரண்டை எடுத்துக் கடித்தபடியே தன் வாடிக்கையாளனைப் பாசத்தோடு கேட்பான்.
“பிஸ்கட்.”
வாடிக்கையாளன் சந்தோஷத்தோடு இரண்டை எடுத்து ருசிப்பதற்குள் தேநீர் வந்து விடும். பென்னிஸ் எவ்வளவு சூட்டையும் தாங்குவான். பொறுக்க முடியாத சூடானால் கைக்குட்டையை மடித்து குவளையைப் பிடித்துக்கொண்டு வேகமாகக் குடித்து முடிப்பான். இராஜாஜி, பொறுக்க முடியாத நிலையில் கொதிக்கக் கொதிக்கத்தான் காபி குடிப்பார் என்றும், டர்க்கி டவலை எட்டாய் மடித்து தம்பளரைப் பிடித்துக்கொண்டு குடிப்பார் என்றும் சொல்லக் கேள்வி….
வாடிக்கையாளன் சூட்டுக்குத் திணறிக்கொண்டிருக்கையில், பென்னிஸ், “வெளியில நிக்கிறேன்”, என்று கூறிவிட்டு வெளியில் போய் சிகிரெட் புகைத்துக் கொண்டிருப்பான். சர்வர் வந்து பிஸ்கட்டுகளை எண்ணிப் பார்த்து வாடிக்கையாளனிடம் பில்லை வைத்துவிட்டுப் போவான். வாங்கிய கடனில் கடன்காரனுக்கும் சேர்த்து தேநீர் – பிஸ்கட் செலவையும் ஏற்றுக்கொண்டு விதியை நொந்துகொள்ளுவான் வாடிக்கை.
பென்னிஸ் தன் கடனாளியிடம் கடனை வசூலிக்க மேலும் ஒரு சில வழிமுறைகளில் இறங்கினான். இவனிடம் கடன் வாங்குபவர்கள், தொலைப்பேசி ஊழியர் கடன் பெறும் கூட்டுறவு சொசைட்டியில் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களை சொசைட்டியில் தற்காலிக கடனைப் போட்டு வாங்கச் சொல்லி, கடன் கிடைக்கும் நாளன்று அப்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அனுமதிக்கான ‘ஆதரைசேஷன்’ படிவத்தை தன் பெயருக்கு எழுதி வாங்கி, பணத்தை வாங்கிக்கொள்ளுவான்.
இந்த சமயத்தில் அவனிடம் கடன் வாங்கியவர்களில் பட்டாபி ஒருவன். அவன் திடீரென மஞ்சள் காமாலையில் இறந்துபோனான். மனைவி – ஒரு பெண் குழந்தை. வழக்கம்போல டெலிபோன் எக்ஸ்சேஞ்சிலிருந்து முப்பது நாற்பது பேர் மூன்று பிரிவினராக இலாகா வான்களில் ஏறிக்கொண்டார்கள். இறந்தவருக்கு மாலை, ஊதுபத்தி, பன்னீர் புட்டிகள் வாங்குவதற்கு சிலர் எல்லா ஊழியர்களிடமும் பணம் வசூலித்து அந்த காரியத்தில் இறங்கினார்கள். சாவு என்றாலே அதற்கொரு சிறப்பு ‘மூட்’ தேவைப்படும் சிலருக்கு. அவர்கள் சத்தமில்லாமல் ஒதுக்குப்புறமாயிருந்த குடிசைக்குள் நுழைந்து வாயைத் துடைத்துக்கொண்டே கண் சிவக்க முகம் மினுமினுக்கும்படி வெளியில் வந்தார்கள். சற்று அருவருப்போடுதான் வானில் அவர்களுக்கு வழிவிட்டார்கள்.
அங்குபோனதும்தான் தெரிந்தது இவர்களுக்கெல்லாம் முன்னால் முந்திக்கொண்டு பென்னிஸ் வந்திருந்தான். யூனியன் தலைவர் பாலன் சில யூனியன் முக்கியஸ்தர்களோடு வந்து விட்டிருந்தார். பென்னிஸ் யூனியனில் தீண்டத்தகாதவன். அவன் இப்போது இறந்துபோனவனின் மனைவியைத் தனியாக அழைத்துச்சென்று குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தான். யூனியன் தலைவர் பாலன் அங்கு வரவே மூடிக்கொண்டு தள்ளிப்போய் நின்றான். அவளை சமாதானப்படுத்திவிட்டு, அவளுக்கு இறந்துபோன கணவன் மூலமாய் வரவேண்டிய பணத்தைப் பற்றி விவரம் சொல்லிவிட்டு, ஆறு மாதத்துக்குள் ‘கம்பேஷனேட்’ வழியில் இலாகாவுக்குள் ஒரு வேலையும் வாங்கிவிடலாமென்றும் உறுதியளித்துவிட்டு பாலன் சொன்னார்: “யார் கேட்டாலும், எந்த பணப் பட்டுவாடாவுக்கும் அவங்க பேருக்கெல்லாம் ‘ஆதரைஷேன்’ தந்து, உனக்குப் பதிலா பணம் வாங்கிடச் சொல்லாதே. உன் புருஷனுக்கு வர வேண்டிய ஒவ்வொரு பணத்தையும் நீயே நேரில் போயி வாங்கிடு. தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணு. இல்லேனா, யூனியனுக்கு போன் பண்ணு, யார் வேணுமானாலும் துணைக்குக்கூட வந்து வீடு வரை வருவாங்க” என்றார்.
தொடர்ந்து, “என்ன சொல்லிகினே வர்றேன். என்னமோ மாதிரி தலையாட்டாரையே?”
அவள் திணறித் தடுமாறினாள். பிறகு சுதாரித்துக்கொண்டு பேசினாள்.
“பி.எஃப். பணத்த வாங்கிக்க. வாங்கி எனக்குத் தரவேண்டியத தீத்திடுன்னாருங்க. ஆனா, இப்ப ஒடனடியா ஒங்க வெல்ஃபேர்ல சாவு எடுக்கறதுக்கு ஆயிரம் ரூபா தருவாங்களாமே, அத வாங்கிறதுக்கு தன் பேருக்கு ஆதரைஷேன் எழுதி வாங்கிக்கிட்டாரு” என்று கூறி பென்னிஸைக் காட்டினாள் இறந்துபோன பட்டாபியின் மனைவி.
இறந்தவரின் இறுதிச் சடங்கு, மயானச் செலவுக்கென ஊழியர் நல்வாழ்வு நிதியிலிருந்து ஒரு தொகையை முன் பணமாவும், பிறகு கொஞ்சத்தையும் தருவது வழக்கம். பாலன் பென்னிஸை அணுகி விசாரித்தார்.
“ஐயாயிர ரூபா பாக்கி நிக்கிது; வட்டிய சேத்தாம சொல்றேன்,” என்றான்.
“அத அப்புறம் பாத்துக்கெலாம். இது சாவுச் செலவுக்கான வெல்ஃபேர் அட்வான்ஸ். இதில கை வைக்காத. ஆதரைசேஷேனை எங்கிட்ட குடு. இல்லேனா, எங்க முன்னாலயே கிழிச்சிப் போடு”, என்றார்.
பட்டாபிக்கு பாடை தயாராகி விட்டது. சக ஊழியர்களே தூக்கிச் செல்லுவதாக தீர்மானமானது.
“ஆகாது. அதை நாந்தான் வாங்கிக்குவேன். ஆதரைசேஷன் தரமுடியாது,” என்றான் பென்னிஸ்.
கண்ணிமைக்கும் முன் பாலன் ஓங்கிப் பளாரென்று பென்னிஸை அறைந்தார். தொடர்ந்து இன்னும் சிலரும் அவனைத் தாக்கினர்.
“வுடுங்க்” என்றான் பென்னிஸ். ஜேபியிலிருந்து ‘ஆதரைசேஷன்’ படிவத்தை வெளியில் எடுத்து சுக்கு நூறாக் கிழித்துப் போட்டுவிட்டு, “மன்னிச்சிருங்க்,” என கரங்கூப்பினான். பட்டாபியைத் தூக்கும்போது, ஓடிப்போய் ஒரு கைத் தாங்கல் கொடுத்துகூடச் சென்றான் பென்னிஸ்.
வேனில் வந்த மூவர் ‘மூட்’ ஏறின நிலையில் திடிர் நடனம் போட்டபடி முன்னால் சென்றனர்.
(தொடரும்)