காசி தமிழ் சங்கம்: மாலனோடு ஒரு யாத்திரை – ராஜ்ஜா

நவம்பர் 13, 2022. காலை பத்தரை மணி. ஞாயிற்றுக்கிழமை. என் மூத்த மகன் வயிற்றுப் பேரன் ரமணன் ஓடி வந்து, “தாத்தா! இந்தா உன்னோட மொபைல். இத்தோடு மூனு தடவை அடிச்சுடுச்சி,” என்று என்னிடம் கொடுத்து விட்டு தன் நண்பனோடு விளையாட ஓடிவிட்டான். யார் தொடர்ந்து மூன்று முறை அழைத்திருப்பார் என்று நான் யோசனையில் மூழ்கிப் போனேன். அந்த சமயம் ‘டொடொய்ங்’ என்ற சத்தத்தோடு ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது. ‘வணக்கம். நான் உங்களோடு உடனே பேச வேண்டும் – சுதா சேஷய்யன்’ என்ற செய்தி!
நான் டாக்டர் சுதா சேஷய்யனின் கைபேசியை ஒலிக்க வைத்தேன். “அப்பாடா! கிடைத்தீர்களா?” என்ற முகத்துதியோடு ஆரம்பித்தார். “வாரணாசியில் நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிக்கு உங்களை சிறப்பு விருந்தினராக அழைத்துச் செல்ல இருக்கிறோம். பொதுத் தலைப்பு ‘காசியில் பாரதி.’ நீங்கள் ‘காசியிலிந்து புதுச்சேரி வரை’ என்ற தலைப்பில் உரையாற்றலாம். அதே மேடையில் மாலனும் உரையாற்றுகிறார். அவரிடம் இருந்துதான் உங்கள் மொபைல் எண் கிடைத்தது. என்ன சம்மதமா?” எனக்கோ மேகத்தின் மேல் அமர்ந்து செல்வதைப் போன்ற உணர்வு.
“சந்தோஷம். மீண்டும் அழைக்கிறேன்,” என்று சொல்லி என்னை ஆவலோடு காத்திருக்க வைத்துவிட்டார். மீண்டும் அழைத்தார், இரு தினங்கள் கழித்து. “உங்கள் வயது என்ன சார்?” என்று கேட்டார். “என் வயதைத் தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். “சொல்லுங்கள். வாரணாசிக்கு ஃபிளைட் டிக்கெட் எடுக்க வேண்டுமே,” என்று அவர் சொல்லியதுமே, “மேடம்! எனக்கொன்று என் மனைவிக்கு ஒன்று. என் மனைவிக்கு ஆகும் டிக்கெட் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று நான் பவ்வியமாகப் சொன்னதுமே, “சரி! வயதைச் சொல்லுங்கள்” என்றார். “எங்கள் இருவருக்குமே எழுபது வயதுதான்,” என்றேன். “உங்கள் மனைவியின் பெயர்?” “பெரியநாயகி.” “நல்ல ஹஸ்பண்ட் சார் நீங்க,” என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார்.
நவம்பர் 15, 2022 அன்று மின்னஞ்சல் ஒன்று… அனுப்பியவர் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் காம கோடி. அதில் வாரணாசியில் நடக்க இருக்கும் ‘காசி தமிழ் சங்கமம்’ (நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை) நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சம்மதம் தெரிவித்ததற்கு உணர்வு பூர்வமான நன்றியை தெரிவிப்பதாகவும், நவம்பர் 24 அன்று நடக்க இருக்கும் இலக்கிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற வேண்டும் என்றும், 23-ந் தேதியே வாரணாசி செல்வதற்கான விமானப் பயணச் சீட்டை, எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து விரைவில் அனுப்பிவைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
காகிதத்தில் உருமாற்றம் பெற்ற மின்னஞ்சலை என் மனைவியிடம் காட்டினேன். அவருக்கு வாயெல்லாம் பல்லானது. “அதானெ! நீங்களாவது என்னெ காசிக்கு அழைச்சுக்கிட்டுப் போறதாவது? எல்லாம் காசி விஸ்வநாத சுவாமியின் கிருபைதான்…வயசான காலத்துல காசிக்கு சாகப் போவாங்கன்னு சொல்லுவாங்க. நீங்க என்னடான்னா, காசியில பேசப் போறேன்னு சொல்றீங்க” என்றார்.
மகாகவி பாரதியை நான் நன்றிப் பெருக்கோடு நினைத்துக்கொண்டேன். இந்த மாமனிதர்தான் என்னை எங்கெங்கெல்லாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்! சேர்க்கிறார். அப்படி நான் அந்த மகாகவிக்கு என்ன செய்துவிட்டேன்? விரல்விட்டு எண்ணிவிடலாம்.
பாரதியின் வசன கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தேன். அவரது சிறுகதைகள், ஏறக்குறைய எல்லாவற்றையுமே, ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். அவரது பத்தாண்டு கால புதுச்சேரி வாழ்க்கையைப் பற்றி பல கட்டுரைகள், அரவிந்தரோடு அவர் கொண்டிருந்த நட்பு பற்றி சில கட்டுரைகள் – எல்லாம் ஆங்கிலத்தில் தான். நான் செய்த இந்த அணில் உதவிக்கா பாரதியும் அரவிந்தரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை பல சிம்மாசனங்களில் உட்கார வைத்து அழகு பார்க்கிறார்கள்! என்ன உலகமடா இது?
நான் மொழிபெயர்த்த பாரதியின் பல கதைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு நாளேட்டில் தொடர்ந்து வெளியானதைப் பார்த்துவிட்டு கலைஞர் அவர் எழுதிய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இப்போதோ வாரணாசிக்கு. எல்லாம் பாரதியால்தான்.
வாரணாசி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து விமானப் பயண ரசீதினை மின்னஞ்சலில் சரியாக ஒரு வாரத்திற்கு முன்னரே அனுப்பிவிட்டது. புறப்படும் நாள் 23-11-2022. மீண்டும் திரும்பும் நாள் 26-11-2022 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியப் பல்கலைக் கழகங்கள் விமானச் சீட்டு அனுப்புகையில், அதைப் பெறுபவர் எங்கே தங்கவைக்கப்படுவார், அவரது நிகழ்ச்சிகளுக்கான அட்டவணை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தே அனுப்புவது வழக்கம். வாரணாசி பல்கலைக் கழகமோ எல்லாவற்றிலும் மௌனம் காத்தது, கடைசிவரை சற்று உதறலாகவே இருந்தது.
இது சம்பந்தமாக மாலனை தொடர்புகொண்டேன். அவரோ, “எனக்கும் ஒன்றும் தெரியவில்லை ராஜா. தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன்,” என்றார். 22-ந் தேதி இரவு வரை இதே நிலைதான். ‘என்னடா இது? எங்கே போகப்போகிறோம் என்பது மட்டும் தெரிகிறது. எங்கே தங்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. மரணத்திற்குப் பின் வாழ்வு என்கிறார்களே, அது போலத்தானோ இதுவும்! போகும் இடம் வேறு காசி. சரி! சுதா சேஷய்யனிடமே கேட்டு விடுவோம் என்ற எண்ணம் மேலிடவே அவருக்கு அழைப்பு விடுத்தேன். ஏதோ என் அழைப்பு மணிக்காக காத்திருந்தவர் போல் உடனே எடுத்து, “ஹலோ சார், உங்களுக்கு கால் பண்ணனும்னுதான் மொபைலை எடுத்தேன். நீங்களே லைனில் வந்துட்டீங்க. முதல்லெ நான் சொல்ல வேண்டியதெ சொல்லி முடிச்சுடறேன். அப்புறம் நீங்க சொல்லுங்க,” என்றார்.
நான்தான் ஞாபக மறதி பேராசிரியர், சுதா சேஷய்யன் ஞாபக மறதி துணை வேந்தர் போல. நான் சொல்லவந்தது எனக்கு மறந்து போகாமல் இருக்கவேண்டுமே.
“மாலனும் நீங்களும் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளிப்போகிறது. 24-ந் தேதிக்கு பதில் 25-ம் தேதி. உங்க ஊர் கவர்னர் தமிழிசை அன்றுதான் வாரணாசியில் இருப்பார். அதுதான் செய்தி. மற்றபடி நீங்கள் செல்ல வேண்டிய தேதியில் செல்லலாம். வரவேண்டிய தேதியில் வரலாம். ஊரைச் சுற்றிக் காண்பிக்க சகல ஏற்பாடுகளும், செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்,” என்றார்.
“அது ஒன்றும் இல்லை மேடம். நான் சொல்ல வந்தது என்னன்னா, எங்களை எங்க தங்க வைக்கப் போறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்குத்தான்.” என்று இழுத்தேன்.
“அதெல்லாம் உங்க யாருக்கும் எந்த கவலையும் வேணாம். வாரணாசியிலெ இறங்குங்க. அப்புறம் நடக்க வேண்டியதெல்லாம் நல்லாவே நடக்கும். ஹேப்பி ஜர்னி,” என்று சொல்லி முடித்துக்கொண்டார்.
என் மனைவியிடம் சொன்னேன். “எல்லாம் விதிப்படிதான். அந்த கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு போய் தூங்குவோம். அதிகாலையிலெ எழுந்திருக்கணுமில்ல,” என்று சொன்னார்.
விமானப் படிக்கட்டில் ஏறும் போது, “வாரணாசிக்கு முன்னமேயே போய் இருக்கிறீர்களா?” என்றார் மாலன்.
“பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திற்கு செல்வது இதுவே முதல் தடவை,” என்று நான் சொல்ல, “இல்லை சார், காசிக்கு செல்வது இதுவே முதல் தடவை,” என்று என் மனைவி சொல்ல நான் தலையை சொரிந்து விட்டுக்கொண்டேன். எந்தப் பொருளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கொடுக்க வல்லதுதானோ!
விமானத்தில் ஏறி உட்கார்ந்தாகிவிட்டது. விமானமும் விண்நோக்கி உயர்ந்தது. சிறிது நேரத்தில் விமானப் பணிப்பெண் ஒருவர், ஒரு பெட்டி வண்டியில் திண்பண்டங்களையும் பானங்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டு உருட்டிக் கொண்டுவந்தார்.
எங்கள் வரிசைக்கு வந்தவர், என்ன வேண்டும் என்று கேட்டார்.
“என்ன இருக்கிறது?”
“’சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் பிரைடு ரைஸ், வெஜ் நூடுல்ஸ், உப்புமா.”
‘’எனக்கு ஒரு சிக்கன் நூடுல்ஸ் போதும். உனக்கு என்ன வேண்டுமா நீ கேட்டு வாங்கிக் கொள்,” என்று என் மனைவியிடம் சொன்னேன்.
என் மனைவி என்னைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, “ஏங்க! கோயிலுக்குத்தானே போறோம். இப்போ என்ன சிக்கன், மட்டன்னு சொல்லிக்கிட்டு?” என்றார்.
“இல்லெ…நம்ம பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்குத் தானே போறோம்.”
“அதுவும் காசியிலதானே இருக்கு.”
நாங்கள் இருவரும் ஊடலில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த பணிப்பெண், ஆளுக்கொரு வெஜ் நூடுல்ஸையும் மாதுளம் பழ ரசத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டு அடுத்த வரிசைக்கு நகர்ந்தார்.
எங்களுக்கு முன் வரிசையில் இருந்த மாலன் என்ன சாப்பிடுகிறார் என்று எட்டிப் பார்ததேன். உப்புமா. அது ஒன்றும் அவ்வளவாக நன்றாய் இல்லை என்பதை அவர் முகம் சொன்னது. வெஜ் நூடுல்ஸ் பரவாயில்லை. பசிக்கு ஏதோ ஒன்று.
லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். பறந்து வந்த விமானம் தரை இறங்கியது. எதிர்பார்த்ததை விட பிரமாதமான விமான நிலையம். பயணப் பைகள் எங்களை வந்து சேருவதற்குள் எனக்கும் மாலனுக்கு அழைப்பு மணி வந்துகொண்டே இருந்தது… நிமிடத்திற்கு நிமிடம். “வெளியே வந்துவிட்டீர்களா?” என்று கேட்டபடி.
ஒரு வழியாக வெளியே வந்து சேர்ந்தோம். ஒரு மாணவப் பட்டாளமே எங்களுக்காக இரண்டு பெரிய கார்களை நிறுத்திக்கொண்டு காத்துக் கொண்டிருந்தது. எல்லாம் ஆங்கிலம் அறிந்த இந்திக்காரர்கள்தான். “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உங்கள் மூவரையும் அன்போடு வாரணாசிக்குள் வரவேற்கிறது. எங்கள் அன்பும் ஆதரவும் நீங்கள் திரும்பிச் செல்லும் வரை இருக்கும்,” என்று அழகான ஆங்கிலத்தில் சொன்னார்கள். அவர்கள் காட்டிய பாசம், நேசம் அளப்பரியது. எழுத்தாளர்களுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் கொடுக்கும் மரியாதை.
மாலனுக்கு ஒரு கார். ராஜ்ஜாவுக்கு ஒரு கார், என்று அவர்கள் சொன்னதுமே, “எங்களை எங்கே அழைத்துப் போகப்போகிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “லஷ்மண் தாஸ் கெஸ்ட் ஹவுஸ். பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள பிரமாண்டமான தங்குமிடம்,” என்று பதில் வந்தது.
“நாங்கள் இருவருமே ஒரே கெஸ்ட் ஹவுஸ் என்றால், ஏன் எங்களுக்கு இவ்வளவு பெரிய ரெண்டு கார்கள்? ஒரே காரிலேயே சென்று விடலாமே,” என்று மாலன் சொல்ல, வந்திருந்த விழாக் குழுவினருக்கு நியாயமாய்ப்பட, ஒரே காரில் ஏறிக்கொண்டோம். எங்களுக்கு பாதுகாவலர்களாக ஒரு மாணவர் – பிரித்யூஷ் வர்மா, பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியை தலையாய பாடமாக எடுத்து படிப்பவர், ஒரு மாணவி – மீரா மிஸ்ரா, உலக அரசியலை தலையாய பாடமாக பயில்பவர்.
பிரித்தியூஷீம் சரி, மீராவும் சரி… இருவருமே வாரணாசி விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியதிலிருந்து, மீண்டும் அதே நிலையத்திற்கு ஊர் திரும்ப வரும் வரை, எங்களை தங்கள் தாய் – தந்தையரையாகவே பாவித்தனர். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை, அதாவது தூங்கச் செல்லும் நேரம் வரை எங்களுடனே ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
பிரித்தியூஷ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். மீரா – வாரணாசி, மண்ணின் புதல்வி. இருவருக்குமே வாரணாசி பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு மூலை முடுக்கும் அத்துப்படி. எங்களை ஊர் சுற்றிக் காண்பிக்கும் போது கார் டிரைவர்களுக்கே இவர்கள்தான் வழிகாட்டினார்கள். ஆங்கிலமும் இந்தியும் இருவருமே சரளமாகப் பேசினர். எனவே, எங்களுக்கு மொழிப் பிரச்சினை ஏதும் இல்லாமல் போனது.
காரில் ஏறி உட்கார்ந்ததுமே, மீரா சொன்னார்: “சார், பல்கலைக்கழகம் செல்ல ரெண்டு வழிகள். ஒன்று குறுக்கு வழி. இதைப் பிடித்தால் ஒரு நாற்பது நிமிஷத்தில் போய் சேர்ந்துவிடலாம். இந்த வழி கிராமங்களின் வழியே போகும். நேர்வழியோ நகரத்தினுள் நுழைந்துதான் போக முடியும். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும். எல்லாம் போக்குவரத்தைப் பொருத்தது.”
“எங்களை நகரத்தின் வழியே அழைத்துச் செல்லுங்கள் நாங்கள் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டாமா?” என்று மாலன் சொல்ல, “அப்படியே ஆகட்டும்” என்று டிரைவருக்கு வழிகாட்டினார் மீரா.
நான் அடிக்கடி என் நண்பர்களிடம் சொன்னதுண்டு, “புதுச்சேரியில் வண்டி ஓட்டிப் பழகிவிட்டால், உலகத்தில் எங்கே வேண்டுமென்றாலும் ஓட்டலாம்” என்று. வாரணாசியின் அந்த இரண்டரை மணி நேரப் பயணத்தில் நான் சொன்ன சொற்களை தண்ணீரை விழுங்குவதைப் போல விழுங்கிவிட்டேன். வாரணாசி வாகன ஓட்டிகள் – புதுச்சேரி வாகன ஓட்டிகளைவிட ரெண்டு மூனு படிகள் உயர்ந்தே இருக்கிறார்கள். இவர்களது வாகனங்களை இவர்கள்தான் ஓட்டுகின்றார்களா அல்லது இவர்களுக்காக காசி விஸ்வநாதரே ஓட்டிச் செல்கிறாரா என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
எங்கள் காருக்கு முன்னால் ஒரு சைக்கிள் ரிக்க்ஷாக்காரர் ஆமை வேகத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல். அவர் எப்போது நகர்ந்து வழி விடுவார் என்ற எண்ணத்திலேயே எங்கள் கார் டிரைவர், பிரேக்கிலிருந்து காலை எடுக்காமலேயே. ரிக்ஷாக்காரர் ஏதோ கொஞ்சம் நகர்ந்து இடம்விட, கார் டிரைவர் அவரை முந்திச் செல்ல முயற்சிக்கிறார். அந்த சமயம் பார்த்து வலது பக்கத்தில் இருந்து ஒரு சைக்கிள், இடது பக்கத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டர் எதிரும் புதிருமாக வந்து ஒன்றை ஒன்று முந்தப் பார்க்கின்றன. அவர்களும் அந்த நேரத்திற்காக காத்திருந்திருப்பார்களோ. வேறு எந்த ஊராக இருந்தாலும் அங்கு விபத்தாகி, செய்தித்தாள்களுக்கு நிறைய தீனி கிடைத்திருக்கும். ஆனால், அங்கு எதிர்பாராதது எதுவும் நடக்கவில்லை. யாரும் யாரையும் பார்த்து சலித்துக் கொள்ளவில்லை. அகராதி ஏறாத வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. ஒருவருக்கொருவர் சட்டையை பிடித்துக் கொள்ளவில்லை. எல்லாம் விநோதய சித்தம் என்றெண்ணி போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
வாரணாசியில் இருந்த நான்கு நாட்களில் ஒரு தெருச் சண்டையையோ, விபத்தையோ, அய்யோ அய்யோ என்று அலறி அடித்துக்கொண்டு செல்லும் ஆம்புலன்ஸையே பார்க்க முடியவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்.
மக்கள் தொகை அதிகம் கொண்ட இடம்தான் வாரணாசி என்கிற காசி. சராசரியாக ஒவ்வொரு நாளும் ஏழரை லட்சம் பேர் யாத்திரிகர்களாக இங்கு வருகின்றனர் என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.

ஆயிரத்து முன்னூற்று எழுபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தினுள் நுழையும் போது மணி மாலை ஐந்து. எங்கு பார்த்தாலும் வரவேற்புப் பலகைகள். காசி தமிழ் சங்கமம் உங்களை வரவேற்கிறது என்பதை தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் எழுதியிருந்தார்கள்.
லஷ்மண் தாஸ் விருந்தினர் மாளிகையில், நான்காம் தளத்தில் அறை எண் 507 மாலனுக்கும் 509 எனக்கும் என் மனைவிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய கூட்டுக் குடும்பமே சௌகரியமாக இருக்கலாம். எல்லா வித வசதிகளையும் கொண்டவை. ஏ.சி.யையும் சரி, ஃபேனையும் சரி – எதையும் நாங்கள் உபயோகிக்கவில்லை. விசாலமான பின்புற ஜன்னல்களை திறந்தாலோ, உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவ்வளவு குளிர். அப்போது மாட்டிய கம்பளி ஆடைகள். மறுநாள் காலை குளிக்கச் செல்லும் வரை உடம்பை ஒட்டியே இருந்தன.
எங்களை எங்கள் அறைகளில் விட்டுச் சென்ற மீராவும் பிரத்தியூஷீம் மறுபடி ஆறரை மணிக்கு வந்து சேர்ந்தார்கள். “கங்கை நதியை தரிசித்து வரலாம் வாங்கள்” என்றார்கள்.
தரைத்தளத்தில் எங்களுக்காக பெரியதொரு கார் நின்றது. “ரொம்ப தூரமோ?” என்றார் மாலன். “இல்லை மிக அருகில்தான்,” என்றார் பிரத்தியூஷ். “அப்புறம் என்ன? நடந்தே போகலாமே!” என்றேன் நான். “இல்லை… இல்லை… உங்களை எங்கும் நடத்தி அழைத்து செல்லக்கூடாது என்பது உத்தரவு,” என்றார் மீரா. என் மனைவி பெரியநாயகியோ என்னைப் பார்த்து ஒரு மௌனப் புன்னகையை உதிர்த்தாள். “உன் காட்டில் மழை,” என்று அதற்கு அர்த்தம். “உன் கடும் உழைப்பிற்கு கிடைத்த பலன்,” என்றும் பொருள் கொள்ளலாம்.
கங்கைக் கரையின் படித்துறையில் கும்பமேளா. எங்கெங்கிருந்தோ மக்கள் வெள்ளமென திரளுவது கங்கை நதியின் தரிசனம் காணத்தானே. “ஏன் இந்த தரிசனம் பகலில் கிட்டாதா?” என நான் கேட்க, மாலனோ, “கிட்டாது. இரவு வேளை கார்த்திகை மாதம் கங்கை நதி தரிசனம் காண ஆயிரம் கண்கள் போதாது,” என்றார்.
எங்களுக்கென்று தனியொரு விசைப்படகு ஏற்படாகி இருந்தது. அதை செலுத்துபவர் ஒருவர். எங்கள் ஐவருக்கும் பாதுகாவலர் ஒருவர். விசைப்படகு நதியை கிழித்துச் செல்ல, என் காதுகளில் “கங்கை நதிப் புறத்து கோதுமைப்பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்,” என்ற ‘ஏக் பாரத்’ வரிகள் எங்கிருந்தோ என் காதுகளுக்கு மட்டும் கேட்டன. மாலனின் மனதிலும் ஓடியிருக்கும். என்னைப்போன்றே அவரும் பாரதி பக்தர் அல்லவா!
படகு மெதுவாகவே செல்லச் செல்ல, ‘காட்’ என்று அழைக்கப்படும் கட்டங்கள் எண்பத்து எட்டையும் காண முடிந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் ஐந்து பூசாரிகள், கண்ணைப் பரிக்கும் மின் ஒளி விளக்குகளின் கீழ் நின்று கங்கை அன்னைக்கு தீபாராதனை செய்ய, மேளதாளங்கள் காதுகளை கிழிக்கும் அளவிற்கு போக, எங்களுக்கோ காது கொள்ளா, கண் கொள்ளா காட்சி. நம்ம ஊர் பூசாரிகள் மேல் சட்டை போடாமல். அவர்கள் அங்கி போன்ற உடை அணிந்தபடி. குளிரும் காரணமாக இருக்கலாம். இங்கே டும்… டும்… டும்… மேளம். அங்கே டர்… டரு… டரு மேளம். அதிக வித்தியாசம் ஏதுமில்லை. இதைத்தான் ‘கங்கா ஆர்த்தி’ என்கிறார்கள்.
நறுமணப் புகையும் மலர்களின் வாசமும் நம் மூக்கைத் துளைக்க, எங்கிருந்தோ எரியும் பிணவாடையும் சேர்ந்துகொள்கிறதே. ‘தசாஸ்வமேகா காட்’ என்று நினைக்கிறேன். அங்கே பூஜையும் புணஸ்கரணங்களும் நடக்க, அதன் பக்கத்தில் இருக்கும் மணிகர்னிகா கட்டத்தில் மூன்று பிணங்கள் பக்கத்தில் பக்கத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த எனக்கு, எங்கள் ஊர் கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாசல் அருகில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் – ‘இன்று இவர், நாளை நீங்கள்” ஞாபகத்திற்கு வந்தது.
ஆராதனை மிகவும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த கட்டத்தின் மிக அருகில் படகினை செலுத்தி கால் மணி நேரமாவது தரிசனம் காண வைத்தார் படகோட்டி. மாலன் சிறந்த பக்திமான். என் மனைவியோ கோயில் பூசாரிக்கும் ஒரு படி மேலே. நானோ ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற கொள்கை கொண்டவன். பல கட்டங்களின் தரிசனம் கண்டு, அஸ்ஸி கட்டத்தை மீண்டும் அடைந்த போது மணி எட்டரையைத் தாண்டியிருந்தது.
எங்கெங்கோ தோணியிலும் படகிலும் பிரயாணம் செய்திருந்தாலும், கங்கை அன்னையின் மடியில் ரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்தது பிரமிப்பாகத்தான் இருந்தது.
விருந்தினர் மாளிகையினுள் நுழைய மீண்டும் ஒரு அரை மணிநேரம். கார் ஓட்டுனர் பாவம் என்னதான் செய்வார், மக்கள் வெள்ளம் நேரம் காலம் பாராது தெருவில் ஓடினால்!
விருந்தினர் மாளிகையின் உணவகம் எங்களுக்காக விசேஷமாக காத்திருந்தது. சப்பாத்தி தஹி (தயிர்). சப்பாத்தியை பிட்டு பிட்டு தஹியில் துவைத்து துவைத்து சாப்பிடலாம், எவ்வளவு வேண்டுமானாலும். கஷ்டகாலமடா சாமி!
பெரியநாயகியின் முகத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. “தினமும் மீன் குழம்பு வேண்டும், கறிக் குழம்பு வேண்டும் என்பாயே! ஊர் போய் சேரும் வரை மரக்கறி தான். வேறவழி,” என்று நினைத்ததில் ஒரு வகை மகிழ்ச்சி. “காசி போக வேண்டும்… காசி போக வேண்டும், என்று நினைத்தே பல காலங்கள் கழிந்தாலும், இப்போது பல்கலைக்கழகத்தின் செலவிலேயே வந்துவிட்டோமே,” என்று நினைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வகையான மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓட தூக்கணாம் பாக்கம் எங்களை இருகரம் தழுவி அரவணைத்துக் கொண்டது.
சொன்னபடியே மீராவும் பிரத்தியூஷீம் மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆஜர். நாங்களும் தயாராகத்தான் இருந்தோம். அதிகாலையில் காசி விஸ்வநாதரையும் அன்னபூர்ணா தேவியையும் தரிசிக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி.
கார் பறந்தது. அந்த அதிகாலை வேளையில் காசி தெருக்கள் மக்களை தரிசித்தன. கார் நின்றது. அதற்கு மேல் கார் போக அனுமதி இல்லை. காசி விஸ்வநாதர் கோயில் தெரு. நடந்து செல்ல செல்ல மனமோ பூபாள ராகம் இசைத்தது. இரு பக்கங்களிலும் கடைகள்தான். பலருக்கு இங்கு ஜீவாதாரமே வியாபாரம்தானோ.
திடீரென்று ஒரு சந்து வந்தது. கோயில் வந்துவிட்டது என்றனர். தமிழ்நாட்டில் பெரிய்ய பெரிய்ய கோயில்களாக பார்த்த கண்களுக்கு, சந்தினில் கோயில் இருப்பதை ஏற்க மறுத்தது. ‘மூர்த்தி சிறுசாக இருந்தாலும் கீர்த்தி பெரிசு போல’ என்றது மனம்.
சந்து சந்தாக போய்க் கொண்டிருந்தோம். மாலன் மட்டும் ஒவ்வொரு சந்தினில் நுழையும் போதும், தனது இருகைகளை இரு புரங்களிலும் நீட்டி இரு சுவர்களையும் ஒரே சமயத்தில் தொட்டு, “படித்திருக்கிறேன். அவ்வளவு குறுகிய சந்துகள் என்று. நேரில் பார்க்கிறேன்,” என்றார்.
சந்து பொந்தெல்லாம் சென்று, பின்னர் ஒரு இருபது நிமிடங்களுக்குப் பிறகு காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கும் இடம் வந்தது. பக்திமான்கள் தங்கள் வீடுகளில் கோயில் வைத்திருப்பார்களே, அதுகூட சற்று பெரியதாய் இருக்கும். அதுவும் இவரை நேருக்கு நேர் சந்திக்க முடியாது. குனிந்துதான் பார்க்க வேண்டும்.
மலர்க்குவியல்களுக்கு மத்தியிலே சற்றே தலை நீட்டிப் பார்க்கும் சிவலிங்கம் அவர். ருத்ராட்ச பூஜை செய்ய வேண்டும் என்று மூன்று டிக்கெட்டுகளை எடுத்தார் மாலன். வேறு வழி இல்லாமல் நானும் உட்கார்ந்து பூசாரி செய்யச் சொன்னதையெல்லாம் செய்ய வேண்டியதாய்ப் போயிற்று. மூன்று சிவலிங்கத்தின் தலையிலேயும் அத்தர், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்றவற்றை பூசாரியிடம் கை நிறைய வாங்கிப் பூசியபின் (இது சுமார் ஒரு கால் மணிநேரம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்), பூசாரி எங்கள் நெற்றி முழுக்க சந்தனம் பூசி சிகப்புப் பொட்டிட்டு வழியனுப்பி வைத்தார். பூசாரி அதுவரை அங்கு சேர்ந்த பூமாலைகளை பல திசைகளில் தூக்கி வீசினார். பலர் அவற்றை ‘கேட்ச்’ பிடிக்க, ஒன்று மட்டும் பெரியநாயகியின் கழுத்தில் வந்து மாட்டியது. “இது பெரும் பாக்கியம் அம்மா,” என்றார் மாலன். பெரியநாயகியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் போனது. ஜெய் காசி விஸ்வநாத்.
அன்னபூர்ணா தேவி அழைப்பு விடுத்தார். அழைப்பில்லாமல் எந்த கடவுளையும், பார்க்க முடியாதே. அன்னையை தரிசித்து விட்டு வெளியே வந்தால், கங்கை நதி அழைத்தது. இரவில் தானே என்னைப் பார்த்தாய், பகலில் வந்து பாரேன் என்று சொல்வதைப் போல இருந்தது.
நதி நோக்கி நடந்தோம். ஏதோ கிரேக்க ஆம்ஃபி தியேட்டருக்குள் நுழைவதைப் போல இருந்தது. இடது பக்கத்தில் ஒரு பெரிய சிலை. கங்கை நதிக்கு உருவம் கொடுத்து இருக்கிறார்களோ என்ற கேள்வி என் மனதில் எழ, நான் வாய் திறப்பதற்குள், “இந்த பிரம்மாண்டமான இடம் புதிதாகக் கட்டப்பட்டது, மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்… இந்த சிலை ராஜமாதா அஹில்யாபாய் ஹோல்கர். இந்தியா முழுதும் நூற்றுக்கணக்கான சிவன் கோயில்களை நிறுவி, தர்ம சாலைகளையும் அமைத்தவர். மராத்தா மாளவப் பேரரசின் மஹாராணி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி பீடத்தில் இருந்த இந்தப் பெண்மணிதான் எதிரிகளிடமிருந்து காசி விஸ்வநாதரின் கோயிலையும் காபந்து செய்திருக்கிறார்,” என்றார் மாலன். காசிக்கு கிளம்புவதற்கு முன்னே கூகுளில் நுழைந்து நிறையவே படித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
இருபது படிகள் இறங்கிச் சென்றால் கங்கையில் குளிக்கலாம். காலாவது நனைக்கலாம். தலையிலாவது தண்ணீர் தெளித்து சாப, பாவ விமோசனம் பெறலாம். என் மனைவிக்கு ஆசைதான். மாலன் அந்த ஆசையை முறியடித்துவிட்டார்.
“சாரனாத் செல்லலாம். இங்கிருந்து பத்தே பத்து கி.மீ.தான். அங்கேயே போய் சிற்றுண்டி சாப்பிடலாம்,” என்று பிரத்தியூஷ் சொல்ல கோயிலை விட்டு வெளியே வந்தோம்.
கார் டொக்கு… டொடக்கென்று ஒரு வழியாக சாரனாத் போய் சேர்ந்தது. மௌரியப் பேரரசின் சக்கரவர்த்தி அசோகர் கட்டியது. நிறைய நடக்க வேண்டி இருந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த துருக்கியர்கள், அசோகர் கட்டியதையெல்லாம் இடித்துப் போட்டுவிட்டுச் சென்றாலும், புத்தரின் நினைவுச் சின்னங்களாக பல இடிபாடுகள் சீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தாமெக் ஸ்தூபியை பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் வேலை நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வந்தோம். புத்தர் தனது முதல் பிரசங்கத்தை பிரசவித்த இடமாயிற்றே.
அங்கேயே ஓர் அருங்காட்சியகம். அதில் ஏறக்குறைய ஏழாயிரம் சிற்பங்கள், கலைப்பொருட்கள் உள்ளன. இந்திய தொல்லியல் துறையின் பழைமையான அருங்காட்சியகம். அன்று மாலை காசி தமிழ் சங்கமம் கலை நிகழ்ச்சிக்கு மாலன் தலைமை ஏற்க வேண்டியிருந்தால், பார்க்க வேண்டியவற்றை மட்டும் பார்த்துவிட்டு கார் ஏறிவிட்டோம். அசோகச் சக்கரம், தலையிழந்த புத்தர், அசோகரின் சிங்கமுகத் தூண் எல்லாம் இதில் அடக்கம். எங்கெங்கு பார்த்தாலும் பிரம்மாண்டம்தான். பிரமிப்புதான்.
விருந்தினர் மாளிகை சேர்ந்து மதிய உணவருந்திவிட்டு, – சப்பாத்தி தஹி, சப்பாத்தி சப்ஜி தான் – அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்திருப்போம். அவ்வளவுதான், “சார், கார் ரெடி. கலை நிகழ்ச்சிக்கு போகலாம்,” என்று சொல்லியபடி வந்து நின்றனர் மீராவும் பிரத்தியூஷீம்.

நமது நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய அரசு இந்த ஆண்டு (2022) காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவ.17ல் தொடங்கி ஒரு மாதம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க பலதுறை வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும், இலக்கியத்திற்கு என பிரத்யேகமாக தமிழ்நாட்டிலிருந்து மாலனும் புதுச்சேரியில் இருந்து இருமொழி எழுத்தாளர் ராஜ்ஜாவும் (அதான் நான்) அழைக்கப்பட்டிருப்பது பெருமை பேசும்படியாகத்தான் இருந்தது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மிகப் பெரிய திடல். அதில்தான் கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் பிரம்மாண்டமான கொட்டகை, மேடை எல்லாம். நிறைய பேர் உட்கார நாற்காலிகள். அவை நிறைந்திருந்தது. மக்கள் கூட்டம் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கவே கூடியிருந்தது.
மாலனின் தலைமையுரைக்குப் பின் விழா தொடங்கியது. மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என பல கிராமப்புற நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டத்திற்கு ஏது மொழி? தமிழறிந்த, தமிழறியா சொந்தங்கள் அனைவருமே ரசித்தனர். காசி தமிழ் சங்கமத்தின் மூலம் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகறியச் செய்யும் நோக்கம் பூர்த்தியாவதை உணர்ந்தேன். வாழ்க தமிழ். வெல்க பாரதம்.
மறுநாள் (25-11-2022) காலை மாலனும் நானும் கலந்துகொள்ள வேண்டிய இலக்கிய நிகழ்ச்சி. மாலன் ‘காசியில் வாழ்ந்த பாரதி’ என்ற தலைப்பிலும் நான் ‘பாரதி – காசியிலிருந்து புதுச்சேரி வரை’ என்ற தலைப்பிலும் பேச வேண்டியிருந்தது. இவ்விலக்கிய விழாவிற்கு தலைமை தாங்க எங்க ஊரு துணைநிலை ஆளுநர் தமிழிசை வந்திருந்தார்.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலிலேயே தேசிய கீதம் ஒலிப்பது மரபு. எங்களது நிகழ்ச்சி தொடங்கிய போதும் அப்படியே நடந்தது. தேசியகீதம் ஒலித்து முடிந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவோம் என்று அறிவித்த ஆளுநர் தமிழிசை ‘நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பின்னர் பாரதிதாசனாரின் ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்கிற புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் அவரே தொடங்கிப் பாடினார். பாடல்களைப் பாடத் தெரிந்தவர்கள் அவரோடு பாடினர். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் ஒப்புக்கு சப்பாணி போல் வாயசைத்தனர். கொஞ்சம் கூட தெரியாதவர்கள் அவரது வாயையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழிசை, இரண்டு மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களையும் காசி மாநகரத்திலே பாடியதாலே பெருமைக்குரிய ஆளுநராக மக்கள் மத்தியிலே இடம்பிடித்தார். கைதட்டி ஆரவாரித்த மக்கள் இதை சொல்லாமல் சொல்லினர். எங்கள் மூவரின் பேச்சுமே பாரதி என்கிற மகாகவிஞனைப் பற்றித் தானே. யாருக்கு யாரும் இளைத்தவர் அல்ல என்பதை மக்கள் தெளிவுபடுத்தினர்.
இலக்கிய விழா இனிதே முடிந்தது. நாங்கள் காசி சென்ற வேலையும் இனிதே முடிந்தது.
இங்குதான் புதுடில்லி நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் எடிட்டர் மதன்ராஜை நேருக்கு நேர் முதல் தடவையாக சந்தித்தேன். நான் எழுதி அவர்கள் நிறுவனம் வெளிக் கொண்டுவந்த, ‘எ டிரஷெரி ஆஃப் ஏன்ஷியன்ட் தமிழ் லெஜன்ட்ஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிடப் போவதாகவும், கவர்னர் தமிழிசையின் கையால் வெளியிட அனுமதி பெற்றிருப்பதாகவும் சொன்னார். கவர்னரும் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புதுச்சேரிக்காரன் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை புதுச்சேரி கவர்னர் தமிழிசை வாரணாசி பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட வேண்டும் என்பது காசி விஸ்வநாதரின் கட்டளை போலும். மதன்ராஜிக்கு மிக்க நன்றி. சரியான தருணத்தில் மிகச் சரியானவர் கைகளால் தமிழர்களின் பாரம்பரியக் கதைகளை ஆங்கிலத்தில் வெளியாக உதவியவர் அல்லவா!
மதியம் மூன்று மணிக்கு தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெகதீசனை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு மாலன் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். எங்களுடனே மதிய உணவருந்திய மீராவும் பிரத்தியூஷ{ம் மூன்று மணியளவில் எங்களை தமிழ்த்துறைக்கு அழைத்துச் சென்றனர்.
மிகப் பழமையான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சொல்லிக் கொடுக்காத மொழி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், ஒரு கைவிரல்களே போதும், எண்ணிவிடலாம். பழமையை அப்படியே பாதுகாப்பதில் வல்லவர்கள் போலும் இவர்கள். நான் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. பழமை மாறாமல் பராமரிப்பது ஆயகலைகளில் ஒன்றாய் இருக்க வேண்டும்.
பேராசிரியர் ஜெகதீசனோடு பேசிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம். பல்கலையில் ‘பாரதி சிம்மாசனம்’ அமைக்கு ம் வேலையில் முழு மூச்சோடு ஈடுபட்டிருப்பதைப் பற்றி பேசிவிட்டு, அதன் தொடக்கப் பணி காலத்தில் மாலனையும் என்னையும் அழைக்க இருப்பதாகச் சொன்னார். நிச்சயம் எங்களால் ஆனதை பாரதிக்காகச் செய்வோம் என்று உறுதியளித்தோம். காசிக்கு எங்களை கொண்டு போய் சேர்த்தவரே பாரதி தானே. அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே.
அந்த சமயத்தில்தான் மாலன், ஜெகதீசனிடம் கேட்டார், “இங்கே பாரதி தன் இளமைக் காலத்தில் தன் அத்தையின் வீட்டில் வசித்தார் என்று படித்திருக்கிறோம், அந்த இல்லத்தை பார்க்க வேண்டுமே.”
“நானே ஞாபகப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன்,” என்றார் பெரியநாயகி.
“நிச்சயம் போகலாம். பாரதியின் தங்கை மகன் பேராசிரியர் கிருஷ்ணன் அந்த இல்லத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மகள் ஜெயந்தியும் அங்குதான் வசிக்கிறார். அவரை எனக்கு நன்றாகவே தெரியும்,” என்று சொல்லியபடியே அவரை தொடர்புகொண்டார். “இன்று மாலையே ஏழு மணிக்குப் போகலாம். நானும் உங்களோடு வருகிறேன். சரியாக ஆறரை மணிக்கு நீங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைக்கு வருகிறேன்,” என்று சொன்னார் பேரா.ஜெகதீசன்.
அப்போது மணி நான்குகூட ஆகவில்லை. “பல்கலை வளாகத்திலே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் போகலாம்,” என்று மீரா சொன்ன உடனே, பெரிய நாயகிக்கு ஏகப்பட்ட குஷி.
இந்தக் கோயிலுக்குள் செல்ல சந்து பொந்தெல்லாம் கிடையாது. கோயில் என்றதுமே நம் கண்முன் தோன்றும் மிகப் பிரம்மாண்டமான கட்டிடம்தான் இங்கும் இருந்தது. வித்தியாசமாக வேலைப்பாடுகளுடன். வடஇந்திய கட்டிடக் கலை.
கோயிலினுள் விஸ்வநாதரை மிகக் குனிந்துதான் பார்க்க முடியும். அப்போது பூசாரி என் கழுத்தில் ஒரு சிறு சாமந்தி பூ மாலையையும் மாலனின் கழுத்தில் எருக்கம் பூ மாலையையும் போட்டு ஆசீர்வதித்தார்.
கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது மாலன் சிரித்துக்கொண்டே, “எருக்கம் பூ மாலை பிள்ளையாருக்கு மட்டும்தான் போடுவார்கள், ஒரு வேளை என் தொந்தியைப் பார்த்துவிட்டு எனக்கு போட்டுவிட்டாரோ பூசாரி?” என்றார். நானோ “நம் இருவர் தொந்தியையும் ஒப்பிட்டுப் பார்த்திருப்பாரேயானால், நியாயமாக அதை எனக்குத்தான் போட்டிருப்பார்” என்றேன்.
நாங்கள் சிரித்துக்கொள்வதற்கான காரணம் புரியாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்த மீரா, “சார், எவ்வளவோ தூரத்தில் இருந்து எங்கள் ஊர் வந்திருக்கிறீர்கள். எங்கள் ஊர் ஸ்பெஷல் ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் ருசி பார்க்க வேண்டும்,” என்றார்.
“ஆ… ஆங்… ஆமாம் சார், நிச்சயமா டேஸ்ட் பண்ணனும், நானும் அதை ருசித்து ரொம்ப நாள் ஆயிற்று,” என்றார் பிரத்தியூஷ். எங்கள் அருகில் நின்றிருந்த கார் டிரைவரும், “மலெய்யோ எங்க ஊர் ஸ்பெஷல். வாங்க ரவிதாஸ் கேட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போறேன். அதுக்கு எதிரிலெதான் பெஹல்வான் லஸ்ஸி கடை. அங்கே மலெய்யோ மிகப்பிரமாதமா இருக்கும்,” என்று ஒத்து ஊதினார்.
“சரி! போகலாம். அதற்கு முன்னால் உங்கள் புராதன கால நூலகத்தைப் பார்க்க வேண்டுமே,” என்றேன். “இதோ ஒரு இருபது அடி தூரத்தில்… வாங்க போகலாம்,” என்றார் பிரத்தியூஷ்.
சயாஜி ராவ் கெய்க்வாட் நூலகம். ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த நூலகத்தின் அடித்தளத்தில் எல்லா நாற்காலிகளிலும் மாணவர்கள். புத்தகங்களை படித்துக் கொண்டும், மடி கணினியை நோண்டிக் கொண்டும் இருந்தது அரியதொரு காட்சியாகவே எனக்கு தோன்றியது. நம்ம ஊரில் நூலகங்களில் மாணவர்களை காணவே முடியாது.
நூலகத்தில் நுழைந்து ஒரு வலம் வந்தோம். எத்தனை லட்சம் புத்தகங்களோ? கோடியில் இருக்குமோ? நூலகரே அறிவார்.
கோட்டைக்கதவு மாதிரி ஏதோ ஒன்றைத் திறந்து, உள்ளே அழைத்துச் சென்றார்கள். தமிழ்ப் புத்தகங்களைப் பார்க்க ஆர்வம் காட்டினோம். படிக்கட்டில் ஏறிச் சென்றோம். அதிக அளவில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை என்றாலும், அங்கு இருந்தவை அனைத்துமே பொக்கிஷங்கள் என்று சொல்லலாம். நான் கேள்வி மட்டுமே பட்டிருந்து, கண்களால் பார்க்க இயலாத புத்தகங்களை அங்கு பார்த்து புலகாங்கிதம் அடைந்தேன். மாலன் சில புத்தகங்களை கையில் எடுத்து, பிரித்து பதிப்பிக்கப்பட்ட ஆண்டைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்.
பெஹல்வான் லஸ்ஸி கடை. நம்ம தமிழ் பயில்வான்தான்; அங்கே இந்தியிலே பெஹல்வான். அவ்வளவுதான். பெரிய சமோசாவும் அதன்பின் மலெய்யோவும் வந்தன. மலெய்யோவை ரசிக்கத்தான் முடியும். வெறும் நுரை. வாய்க்குள் எடுத்துப் போட்டால் உருகி உள்ளே போய் விடுகிறது. அண்டா நிறைய சாப்பிட்டாலும் நிச்சயம் வயிற்றில் எங்கோதான் இருக்கும். ஆனால், அதன் சுவையே தனிதான். அதுவும் தெருக்கடையில் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.
வார்த்தை தவறாமல் வந்து சேர்ந்தார் பேரா.ஜெகதீசன். கார் ஊர்ந்து சென்றது. ஹனுமன் காட் வந்தது. வீட்டினுள் இருக்கும் சிவன் கோயில் நோக்கி நடந்துதான் போக வேண்டும். வீடு போன்றே இருந்த சங்கரமடத்தைத் தாண்டிச் சென்றோம். டீ-4ஃ57 எண் இட்ட மிகப் பழைய, பெரிய்ய வீடு. சிவமடம் என்று பெயர். திருமதி. ஜெயந்தி வரவேற்றார். “அப்பா உங்களையெல்லலாம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். வழக்கமாக அப்பா இப்போதெல்லாம் யாரையும் சந்திப்பதில்லை. பேராசிரியர் ஜெகதீசன் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் இரண்டு எழுத்தாளர்களோடு வருகிறார் என்று சொன்னதுமே பூரித்துப் போனார்,” என்றார்.
தொன்னூற்று நான்கு வயதினைக் கடந்த பேராசிரியர் கிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பயிற்று வித்தவர். தனது மாமா பாரதியாரைப் பற்றியும் அவரது காசி தொடர்பைப் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி இருக்கிறார். எத்தனையோ விருதுகளையும் பெற்றிருக்கிறார். சொல்லப்போனால் பாரதி புதையலில் இவரும் ஒரு வைரம் தான்.
மாலனும் நானும் பாரதி பக்தர்கள் என்று ஜெகதீசன் அறிமுகப்படுத்தியதுமே, கிருஷ்ணன் தான் பார்த்திராத பாரதியைப் பற்றி இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரது எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
திருமதி ஜெயந்தி “போதும்’ என்று எங்களைப் பார்த்து சைகை காட்டவே, நாங்கள் அனைவருமே எழுந்து நின்று, அவரிடம் ஆசி பெற்றோம். நாங்கள் அவரை சந்தித்ததின் ஞாபகர்த்தமாக அவர் எழுதிய “மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற மும்மொழி நூலினை (இந்தி, தமிழ், ஆங்கிலம்) எனக்கும் மாலனுக்கும் ஆளுக்கொரு பிரதியினை கையொப்பமிட்டுக் கொடுத்து வழியனுப்பிவைத்தார். பேராசிரியர் ஜெகதீசனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
மறுநாள் (நவ. 26, 2022) காலை எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. காரணம் நாங்கள் பத்து பத்தரைக்கெல்லாம் கிளம்பினால்தான் விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் போய்ச் சேர முடியும். சென்னை செல்லும் இண்டிகோ விமானம் புறப்படும் நேரம் மதியம் 2.40.
எட்டு மணிக்கெல்லாம் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் – பேராசிரியர்கள் பஞ்சனன் தலாய், திரித்தி ராய் தலாய் – விருந்தினர் மாளிகைக்கு வந்து என்னோடு அளவளாவி விட்டுச் சென்றனர். அவர்கள் இதுவரை எழுதிய புத்தகங்களையம் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தனர். அவர்கள் இருக்கும்போதே புதுடில்லியில் இருந்து வெளிவரும் ‘திட்டம்’ என்ற அரசாங்க மாத இதழின் ஆசிரியர், சஞ்சய் கோஷ், தன் பத்திரிகையில் வெளியிட என்னை நேர்காணல் கண்டார். அது முடிந்ததும் அவரை மாலனின் அறைக்கு அழைத்துச் சென்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். மாலன் எனக்கு செய்த, செய்யும் உதவிகளுக்கு என்னால் முடிந்த சிறு கைமாறு. அவ்வளவே.
பத்தரை மணிக்கெல்லாம் பிரத்தியூஷ், மீரா, மற்றும் பல பேராசிரியர்கள், மாணவர்கள் எங்களை வழியனுப்ப வந்துவிட்டார்கள். கார் நகர்ந்தது. இந்த தடவை குறுக்குப்பாதை, நேர் பாதையில் போனால் விமானத்தை விட்டுவிடுவோம் போல.
மனம் கனத்தது. குறுக்கு வழிப்பாதையோ டங்கு டிங்கு தான். வாரணாசியின் கிராமப்புறப் பகுதிகளை பார்க்க முடிந்தது. ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.
எங்களை வழியனுப்ப விமான நிலையம்வரை எங்களுக்கு பாதுகாப்பாக பயணித்த மீராவும் பிரத்தியூஷீம் சற்றே கண்கலங்கினர். அன்புதானே ஜாதி, மதம், இனம், மொழி என்கின்ற வற்றையெல்லாம் இணைக்கும் பாலம். “உங்களையெல்லாம் இனி எப்போது பார்ப்போம்,” என்று ஒரே குரலாக சொல்லினர் மீராவும் பிரத்தியூஷீம்.
“நிச்சயம் சந்திப்போம். உலகம் உருண்டைதானே.” என்று மாலன் சொல்ல, பெரிய நாயகியோ, “புதுச்சேரிக்கு வாருங்கள். உங்கள் உறவினர் நாங்கள். எப்போதும் எங்கள் பாசக்கரங்கள் நீளும்,” என்றார்.
நானோ “நாளை நடக்க இருப்பதை யாமொன்றும் அறியோம் பராபரமே” என்று அவர்களைப் பார்த்து புன்முறுவலித்துவிட்டு, விமான தளத்திற்குள் நுழைந்தேன்.
ராஜ்ஜா <rajbusybee@gmail.com>

