பிரீத்லெஸ்: சினிமாவில் நிகழ்ந்த ஓர் அற்புதம்!

 பிரீத்லெஸ்: சினிமாவில் நிகழ்ந்த ஓர் அற்புதம்!

ஜெகநாத் நடராஜன்

 

றுபது ஆண்டுகளைக் கடக்கும் பிரெஞ்சு திரையுலகின் புதிய அலையில் நிகழ்ந்த ஒரு அற்புதம், ‘பிரீத்லெஸ்’ திரைப்படம். இதன் கதையை எழுதியவர் பிரெஞ்சின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ. இதன் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல். இயக்கியவர், ழான் லுக் கோடார்ட். அதுவரை 1942ஆம் ஆண்டு வெளியான ‘சிட்டிசன் கேன்’ படம்தான் ஒரு இயக்குநர் தான் இயக்கிய முதல் படத்திலேயே புதிய வகை யுக்திகளைக் குவித்த படமாக இருந்தது. 1960இல் வெளிவந்த ‘பிரீத்லெஸ்’ கிட்டத்தட்ட அதே யுக்திகளைக் கொண்டிருந்தது. முக்கியமாக எடிட்டிங், கதை சொல்லும் யுக்தி.

“நான் பேசும்போது என்னைப் பற்றிப் பேசுகிறேன். நீ உன்னைப் பற்றிப் பேசுகிறாய். நாம் எப்போது நம்மைப் பற்றிப் பேசப் போகிறோம்” என்று இப்படத்தின் கதாநாயகி, கதாநாயகனிடம் சொல்லும் இடத்திலிருந்து புதிய அலை கிளம்புகிறது என்று சொல்லப்படுவதுண்டு.

இக்கதை மூன்று கட்டங்களாக நிகழ்கிறது…

மைக்கேல் போய்க்கார்ட் என்ற இளைஞன் திருட்டு வேலை செய்பவன். அமெரிக்க ராணுவ அதிகாரியின் காரைத்திருடிக்கொண்டு பாரீஸ் வருகிறான். காரில் ஒரு ரிவால்வர் இருக்கிறது. அதை வைத்து விளையாடிக்கொண்டே வேகமாக காரை ஓட்டுகிறான். கார் வேகவேகமாகச் செல்கிறது. காரில் சக்கரம் இருப்பது நகர்வதற்கு, நிற்பதற்கு அல்ல என்று சொல்லிக்கொண்டே போக்குவரத்து விதிகளை மீறுகிறான். அதிக வேகம் காரணமாக போலீஸ் அவனை துரத்த, ஒரு இடத்தில் காரோடு ஒளிகிறான். அங்கு அவனை தேடிக்கொண்டு போலீஸ் வர, சுட்டுக் கொல்கிறான்.

பாரிஸ் வரும் அவன் வழக்கமாக சந்திக்கும் தோழியை சந்தித்துப் பணம் கேட்கிறான். அவள், இல்லை என்று சொல்ல, அவள் பர்சிலிருக்கும் பணத்தை திருடிக்கொண்டு, பட்ரீஷியா என்ற பெண்ணை சந்திக்கிறான். அவள் அமெரிக்க மாணவி,பத்திரிகை நிருபர். ஓய்வு நேரத்தில் சாலையில் ‘இண்டர்நேஷனல் ஹரால்ட் ட்ரைப்யூன்’பத்திரிகை விற்கிறாள். அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசுகிறார்கள். அவன் அவளை தன்னோடு ரோமுக்கு வரும்படி அழைக்கிறான். அவனும் அவளும் சந்தித்து சில நாட்கள்தான் ஆயிற்று. அவர்கள் உடலுறவு கொண்டிருக்கிறார்கள். அவன் எந்தப் பெண்ணையும்விட அவளில் மிக திருப்தியுற்றதாகச் சொல்கிறான். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. எனினும் அவள் மழுப்பலான பதிலைச் சொல்கிறாள். ஆனாலும் அவன் அவளை நம்புகிறான். பேருட்டி என்ற நபரை சந்தித்து அவன் பணம் கேட்கிறான். அவன் பாரீசை விட்டு கிளம்பிவிட எத்தனிக்கும்போது போலீசை சுட்டுக் கொன்றது மைக்கேல் போய்க்கார்ட் என்று பத்திரிகையில் அவனைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது.

பட்ரீஷியா, தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் போகிறாள். அங்கு மைக்கேல் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். 23 நிமிடங்கள் அந்த சின்ன ஹோட்டல் அறையில் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விதவிதமான கோணங்களில்,படத்தொகுப்பு யுக்திகளில் அந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இருவரும் இரு விதமான கருத்து உடையவர்கள். அவன் அவள் உடழகில் கவரப்பட்டிருக்கிறான். அவளோடு உறவுகொள்ள விரும்புகிறான். அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால், அவன் அவள் விரும்பும் விதத்தில் இல்லை. அவர்கள் வில்லியம் பாக்னரின் மரணம் பற்றிய கருத்தைப் பேசுகிறார்கள். இல்லாமல் போவதால் வரப்போகும் துக்கத்தைவிட இல்லாமல் போவதே நல்லது என்று அவள் சொல்கிறாள். அவன் இல்லாமல் போவதே தனக்குப் பிடித்திருக்கிறது என்கிறான். அவர்கள் உறவுகொள்கிறார்கள். காலையில் அவன் பணம் வாங்கவும், அவள் தன் பத்திரிகையின் சார்பாக ஒரு நேர்காணலுக்கும் செல்கிறார்கள்.

பட்ரீஷ்யா புகழ்பெற்ற நாவலாசிரியரான புர்வல்ஸ்கோவை நேர்காணல் செய்கிறாள். அந்தப் பாத்திரத்தில் பிரான்சில் புகழ்பெற்ற இயக்குநர்மெல்வில் நடித்திருக்கிறார். கோடார்ட் வாழ்வு, உறவு முறைகள், ஆண்கள், பெண்கள் பற்றிய தன் கருத்துக்களை அவர் மூலம் பேசுகிறார். “ஆண்களுக்கு பெண்கள் வேண்டும்;பெண்களுக்கு பணம்தான் வேண்டும்” என்று ஒரு கேள்விக்குப் பதில் சொல்கிறார். பட்ரீஷ்யா அவரது வாழ்வின் லட்சியம் என்ன என்று கேட்கிறாள். முரண்பட்டு மரணமடைவது என்று அவர் பதில் சொல்கிறார்.

அதன்பின் காட்சிகள் மிகுந்த வேகம் பெறுகின்றன. பட்ரீஷியாவை சந்திக்கும் போலீஸ் மைக்கேல் ஒரு தேடப்படும் குற்றவாளி என்கின்றனர். பட்ரீஷியா மைக்கேலைக் காப்பாற்ற விரும்புகிறாள். தன்னை பின் தொடரும் போலீசிடமிருந்து தப்பித்து இருவரும் காரை திருடிக்கொண்டு விரைகின்றனர். செய்தித்தாளைப் பார்க்கும் பட்ரீஷியா மைக்கேல் திருமணமானவன் என்று செய்தி வந்திருப்பதை சந்தோஷமாக அவனிடம் கேட்கிறாள். “அவள் என்னை ஏமாற்றினாளா, நான் அவளைஏமாற்றினேனா ஞாபகமில்லை” என்று அவனும் உற்சாகமாகப் பதில் சொல்கிறான்.

அவர்கள் பேருட்டியை பணத்திற்காகப் பார்க்கிறார்கள். போலீஸ் அவர்களை நெருங்குகிறார்கள். அந்தப் பயணம் முழுவதும் தான் அவனைக் காதலிக்கிறேனா என்று பட்ரீஷியா யோசித்துக்கொண்டே இருக்கிறாள். இருவருக்கும் நீண்ட வாக்குவாதம் நடக்கிறது. அவன் சந்தித்த பெண்கள் போல் தான் இல்லை என்கிறாள். “நான் உன்னைக் காதலிக்கிறேன்; நீ காதலிக்கிறாயா” என்று அவன் கேட்கிறான். “காதலிக்கிறேன்;ஆனால், நான் நினைத்தது போல நீ இல்லை” என்று அவனிடம் சொல்கிறாள்.

பட்ரீஷியா, அவனைப் பற்றிய தகவலை போலீசில் சொல்கிறாள். போலீஸ் மைக்கேலைப் பிடிக்க நெருங்க,அவன் ஓடுகிறான். பேருட்டியிடமிருந்து பணம் அவனுக்கு கிடைக்க, போலீஸ் வருகிறது. போலீசை சுட்டுவிட்டு தப்பிக்க பேரூட்டி ரிவால்வரைக் கொடுக்க, மைக்கேல் சுட மறுத்துதப்பிச்செல்ல முயலும் போது, போலீசால் சுடப்படுகிறான். சாகக் கிடக்கும் மைக்கேலை நோக்கி பட்ரீஷியா ஓடிவருகிறாள். அவன் புன்னகைக்கிறான். இறக்கிறான். அவள் திரும்பிக்கொள்ள படம் முடிகிறது.

 

ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ

ந்தப் படம் அதிர்வலைகளை ஏற்படுத்த முக்கிய காரணம் அமெரிக்க – பிரெஞ்சு கலாச்சார முரண்பாடுகளை ட்ரூபா வகைமைப் படுத்தியிருந்ததுதான். “அமெரிக்க பெண்கள், ஆண்கள் மீது படுக்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். அமெரிக்கர்கள் எத்தனை பேரையும் காதலிப்பார்கள். அமெரிக்க பெண்களுக்கு லிப்ஸ்டிக் போடவே தெரியாது” என்று சரமாரியான வசனங்கள் படத்திலிருக்கிறது.

மைக்கேல் செத்துக் கிடப்பதைப் பார்க்கும் பட்ரீஷ்யா தன் உதட்டைத் தடவிப் பார்த்துக்கொள்கிறாள். அது எதோ மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட விஷயம் போல திரும்பிச் செல்கிறாள். அவளுக்கு ஏற்கனவே ஒருவனோடு பழக்கம் இருப்பது காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவன் காதலில் தோல்வியுற்றவன். அவனுக்கும் அவன் காதலிக்கும் இருந்த பிரச்சினை, அவன், அவளை உறவுக்கு அழைத்ததுதான்.

“காதலிப்பவளை அப்படி அழைத்ததுதப்பா” என்று அவளிடம் அவன் கேட்கிறான். அவள் காதலனால் கர்ப்பமானவள். அவள் அமைதியாக இருக்கிறாள். அவன், அவளை முத்தமிடுகிறான். அவள் எதிர்ப்புக் காட்டாமல் அதனை ஏற்றுக்கொள்கிறாள். தான் காதலிப்பவன் ஒரு கொலை செய்த திருடன், இரண்டு பெயர்களில் வாழ்பவன், திருமணமானவன் என்பதெல்லாம்கூட அவளுக்கு பிரச்சினை இல்லை. தான் உண்மையாக அவனைக் காதலிக்கிறோமா என்பதே அவள் பிரச்சினை. இல்லை என்று சொல்லும் விதமாக அவன் நடந்துகொள்கிறான். யாருக்காகவும் எதையும் மாற்றிக்கொள்ளாதவன் அவன். தன்னால் துன்பப்படும் எவர் பற்றியும் கவலைப்படாதவன்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் கோடார்ட் காண்பித்த சுதந்திர மனம் அவன். அதனாலேயே எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு அப்படத்திலிருந்தது.

1940, 1950களில் ஸ்டுடியோக்களின் ஆதிக்கத்திலிருந்த பிரெஞ்சு சினிமா, அமெரிக்க பி-கிரேட் கேங்ஸ்டர் சினிமாவை எடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தபோது, “ஒரு பெண், ஒரு ஆண், ஒரு துப்பாக்கி போதும்; எனக்கு ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க” என்ற கோடார்டின் பிரகடனத்துடன் இந்தப் படம் வெளியானது. கட்டுப்பாடற்ற இந்தப் புதிய அலை வீச்சை பலரும் தொடர்ந்து நவீன பிரென்சு சினிமாவை உருவாக்கினார்கள். Francois Truffaut, Eric Rohmer, Claude Chabrol, Jacques Rivette – Alain Resnais, Louis Malle, Jean-Pierre Melville, Agnes Varda, Jacques Demy Alain Resnais, Melville என்று இந்த வகை இயக்குநர்களின் வரிசை தொடர்ந்தது.

கோடார்ட்

“இரண்டு வருடங்கள் இந்தப் படத்தைப் பற்றி திருப்தியற்று இருந்தேன். அதன் பின்னர்தான் இந்தப் படத்தை Alice In The Wonderlandடுடன் வைத்தேன்” என்று கோடார்ட் ஒரு இடத்தில் சொல்கிறார்.

நகர நெரிசலில் படப்பிடிப்பு முதன் முதலாக நடந்தது. படத்தில் படப்பிடிப்பை பலர் வேடிக்கை பார்ப்பது பதிவாகியிருந்தது. கோடார்ட் காலையில் படப்பிடிப்புக்கு முன்பாக அதன் வசனங்களை எழுதினார். இரண்டு பேர் நீண்ட நேரம் தொடர்ந்து கோபமாக காதலுடன் பேசும் காட்சி மற்றவர் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைந்தது.

நவீன பிரெஞ்சு சினிமாவின் புதிய அலை இயக்குநர்கள் படத்தில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்திருந்தார்கள். செய்தித்தாளில் மைக்கேலின் புகைப்படத்தைப் பார்த்து அதை போலீசிடம் காண்பிக்கும் நபராக கோடார்ட்டே நடித்திருந்தார்.

திரைப்படத்தில் அதற்கு முந்திய காலகட்டங்களின் இருந்த, பிம்பங்கள் நகர்தலின் தடையை பாத்திரங்களிடையே விலக்கியவர் என்ற பெருமை கோடார்டுக்கு உண்டு. பேச்சுகளின் திசைமாறல், நகர்தலில் கோணங்கள் மாறல், முன் கதை, பின் கதை இணைப்பு என்ற வகைகளில் புதிய பிரெஞ்சு சினிமாவாக அது இருந்தது. கேங்ஸ்டர் படங்களில் உள்ள விதிகள் அனைத்தையும் இப்படம் மீறியிருந்தது. டாகுமெண்டரிப் படம் போல ஒரு புனைக்கதை. நிஜக் கதை போன்று ஒரு புனைக் கதை. கதைக்குள் இயங்கும் பிரென்சு மனம், அமரிக்க மனம். அங்கு முகிழ்க்கும் காதல். தான் குறாவாளியானாலும் காதலியை விட்டுச்செல்ல அவன் விரும்பவில்லை. கேங்ஸ்டர் படங்களில் காதல் கதை. தங்களை மீறாத பாத்திரப் படைப்புகள் என்று பார்வையாளர்களை ஆரவாரம் செய்ய வைத்தது.

கைகளால் தூக்கி இயக்கப்பட்ட கேமரா, நகரும் கார்களின் வேகத்திற்கு இணையாக பயணிக்கும் கேமரா, சாத்தியமில்லாத இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் கோணங்கள், அதிர்ச்சிக்குள்ளாக்கும்படத்தொகுப்பு. காதலை கனவுகளைக் குழைத்து கனவுக் காட்சிகளோடு கதை சொல்லிக் கொண்டிருந்த காலகட்டத்தில், கூட்ட நெரிசலில், பூட்டிய சிறு அறையில். போலீஸ் துரத்தும்போது தப்பித்தலில்,போலீஸில் பிடிபடப் போகிறோம் என்ற அச்சுறுத்தலின் போது கோடார்ட் காண்பித்து இயல்பான வாழ்வின் ஒரு சாட்சியாக்கினார்,

யாருக்கும் அஞ்சாத, சாவைப் பற்றி கவலைப்படாத, புத்தி சாதூர்யம் மிக்க மைக்கேலின் பாத்திரப்படைப்பு. அவன் ஹாலிவுட் நடிகர் ஹம்ளிபோகார்ட் நடித்த படங்களை, முக்கியமாகThe Harder They Fallபடத்தை தனக்கு உதாரணமாகக் கொள்கிறான். ஆனால், இந்தப் படம்Pacino, Beatty, Nicholson, Penn அனைவராலும் வேறுவேறு கதைகளாகக் கொண்டாடப்பட்டது. அதைப் போன்ற பாத்திரப் படைப்புகளில் இன்றுவரை படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

 

“ஜெகநாத் நடராஜன்” <jaganathanvr4@gmail.com>

 

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *