அக்கா

 அக்கா

சரத் விஜேசூரிய

தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்
ஓவியம்: George Keyt

 

க்காவுக்குக் கல்யாணம் நடந்த நாளில் நான் எந்தளவு மகிழ்ச்சியடைந்திருந்தேன் என்பதைச் சொல்லி முடிக்கமுடியாது. அவள் வீட்டைவிட்டுப் புறப்பட்ட வேளையில் எனக்கு மிகுந்த கவலை தோன்றியபோதிலும் ஒரு மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருந்த அவளை நான் மிகவும் பெருமிதமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை அணைத்துக்கொண்டு விம்மியழுத கணத்தில் எனக்கும் கவலை மிகைத்து அழுகை வந்தது; என்றபோதும் சிறிது நேரத்திலேயே நான் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டிருந்தேன்.

அக்காவின் கல்யாணத்துக்கென பந்தலைக் கட்டத் தொடங்கிய நாளிலிருந்தே எங்கள் வீட்டுக்கு கல்யாணக் களை வந்து விட்டிருந்தது. அதுதான் எங்கள் வீட்டில் நடைபெறும் முதல் திருமண வைபவம். அதுவும் அக்காவுடையதாக அமைந்ததால் அனைவரதும் ஆசிகளுக்கும் காரணமாக அமைந்திருந்தது. எமது குடும்பத்தினரதும் உறவினர்களதும் அயலவர்களினதும் பாசத்தையும் நன்மதிப்பையும் வென்றிருந்தவள் அக்கா. அவளின் கல்யாணத்துக்கு பல விதங்களிலும் உதவி உபகாரங்கள் செய்வதற்கென பலரும் முன்வந்திருந்தார்கள். கிராமத்தில் அனைவரும் போல அந்த நாட்களில் மாலை நேரங்களை எங்கள் வீட்டில்தான் கழித்தார்கள். அந்தத் திருமண வைபவத்தை முடிந்து போகாமல் எல்லா நாளும் வைத்திருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போதெல்லாம் எனக்கு பல தடவைகள் தோன்றியிருந்தன. நண்பர்களோடு சேர்ந்து கொண்டு விளையாடித் திரிய இடம் கிடைத்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். கல்யாணப் பந்தலைக் கட்டுவதில் கலந்துகொள்வது, தேவையான மேசை கதிரைகளை இரவல் வாங்கிக்கொண்டு வரவென ஒவ்வொரு வீடாகப் போய்வருவது போன்றவை பெரியவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலைகள் என்ற போதிலும் எமக்கும் அவை மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொள்ளும் விளையாட்டுகளாக ஆகி விட்டிருந்தன.

குடும்பத்தில் அனைவருக்கும் புதிய உடுப்புகள் கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தது. அக்காவின் திருமணத்தை முன்னிட்டே எனக்கு முதன்முதலில் ஒரு ஜோடி சப்பாத்தும் கிடைத்திருந்தது. பட்டாசுகளைக் கொளுத்துவது என்பது அண்ணாவின் பொறுப்பில் விடப்பட்ட, அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது, எம் அனைவரதும் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாகும். எமக்குக் கொளுத்த ஒரு பட்டாசு கூடக் கிடைக்காது என்ற உணர்வில், இந்தக் காரியத்தை அவனிடம் ஒப்படைத்திருந்தது குறித்து, ஆரம்பத்தில் எனக்குள்ளே பொறாமை ஏற்பட்டிருந்தது. எனினும் சற்றும் எதிர்பார்த்திராத விதத்தில் அண்ணா எம்மையும் அந்தப் பணியில் சேர்த்துக்கொண்டதோடு, பூ வெடிகளைக் கொளுத்தும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டதும், அண்ணாவின் மீது மிகுந்த நெருக்கமான உணர்வை எனதுள்ளத்தில் ஏற்படுத்த அது காரணமாக அமைந்தது.

அக்காவின் திருமண வைபவத்துக்குத் தயாரான நாளிலிருந்து, அது முடிவுற்றது வரையில், மிகவும் மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்க முடிந்த பல விடயங்கள் இருந்தன. என்றாலும் நான் அனுபவித்த அந்த அளவற்ற ஆனந்தமெல்லாம் மங்கிப் போய், அவை எனது இதயத்தைத் துளைத்தெடுக்க ஆரம்பித்த விதம் சொல்லி முடிக்க முடியாதது. அதற்குக் காரணமானது என்ன என்பது பற்றி அப்போதெல்லாம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதைக் குறித்து எவரிடமும் விசாரிக்கக்கூட வழியிருக்கவில்லை. நான் ஏதேனும் விசாரிக்க முற்படும்போதெல்லாம் அனைவருமே கடுமையாகப் பேசி என்னை விரட்டி விடுவதால், நான் எனது எண்ணங்களை அடக்கிக்கொண்டு மிகவும் சுயபச்சாதாபத்தோடு காலம் கழிக்கப் பழகியிருந்தேன்.

எவ்வாறாயினும் எனது ஞாபகத்தில் நிலைத்திருக்கும் சில சம்பவங்கள் மூலமாக, எனது மனதில் அலையடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு விடயங்களையும் ஒரு ஒழுங்கில் வரிசைப்படுத்தி, பொருத்திப் பார்த்து, காரண காரியங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு நான் இன்று முதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அக்காவின் திருமணத்தின் போது எனக்கு பத்து வயதிருக்கும். இப்போது நான் இருபத்தைந்து வயது இளைஞன். அன்று எனது மனதில் ஒரு கேள்வியாகக் கிடந்த விடயம் இன்று எனது மனதைத் துளைத்து மிகுந்த கவலையைத் தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது.

அக்காவின் திருமணம் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினரதும் உறவினர், நண்பர்களினதும் வதனங்கள் களையிழந்து போன நாளைப் போலவே, களையிழந்து போன விதத்தையும் என்னால் இப்போதும் தெளிவாக நினைத்துப் பார்க்க முடியும். ஒன்றாகப் புறப்பட்டுப் போயிருந்த அனைவரும் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொள்ளாமல் திகைப்போடு காலம் கடத்திய அந்த மோசமான நாள், ஒரு மயானத்தைப் போல இப்போதும் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருப்பதாகக் கூற முடியும். அன்று, துயருற்ற முகங்கள் வாடி வதங்கிப் போய், பிறகு ஏதேனும் கலவரத்தை ஏற்படுத்தவில்லையா என்ன?

அக்காவின் திருமண வைபவத்தின் இரண்டாம் நாளன்றுதான் இந்த அபாக்கியமான நிலைமை உருவாகியிருந்தது. இரண்டாம் நாள் வைபவமான மணமகன் வீட்டு விருந்துக்கு நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடுதான் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போயிருந்தோம். என்னை வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் எனது புதிய ஆடைகளையும் சப்பாத்துகளையும் அணிந்துகொள்ளும் ஆசையை வெளிப்படையாகவே கெஞ்சிக் கூத்தாடி நானும் அந்தப் பயணத்தில் இணைந்துகொண்டேன். அன்று அந்தப் பயணம் போகாமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றும் எனக்கு சில வேளைகளில் தோன்றும். இருப்பினும் அது ஒரு பிரயோசனமும் இல்லாத யோசனையொன்று என்றும் மனம் மறுதலிக்கும்.

நாங்கள் கொண்டு போயிருந்த வீட்டுச் சாதனப் பொருட்கள், பொதிகள் ஒவ்வொன்றாக அக்கா குடியிருக்கப் போகும் வீட்டில் அடுக்கப்பட்டன. அந்தப் பொதிகளையும் சாமான்களையும் நாங்கள் மிகவும் கவனமாகத்தான் வாகனத்தில் ஏற்றியிருந்த போதிலும் அவற்றை அந்த வீட்டார் ஏனோதானோவென்றுதான் இறக்கி அடுக்கினார்கள். அதைக் குறித்து எனது மனம் வருந்தியது இப்போதும் நினைவிருக்கிறது.

சிவப்புச் சேலையொன்றை உடுத்தியிருந்த அக்கா வெற்றிலைச் செப்பை நீட்டி அம்மாவையும் அப்பாவையும் வரவேற்றாள். அந்தக் கணத்தில் எமது உறவினர்கள் மகிழ்ச்சியோடு இருப்பது போலவே தென்படவில்லை. வெண்ணிறத் துணி விரிக்கப்பட்டிருந்த கதிரைகளில் வரிசையாக எமது உறவினர்கள் மெதுவாக அமர்ந்துகொண்டதோடு அம்மா, அக்காவை நெருங்கினாள். அவள், அம்மாவையும் கூட்டிக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தாள். நானும் அம்மாவின் பின்னாலேயே அறைக்குள் ஓடிப் போனேன். ஒரு நொடிக்குள் அக்கா விம்மியழத் தொடங்கியிருந்தாள். அம்மா மிகவும் பதற்றத்துக்குள்ளானவள் போலக் காணப்பட்டாள். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் அக்காவை நெருங்கியது நினைவிருக்கிறது.

“என்னாச்சுக்கா?”

“என்னோட கோபத்தைக் கிளப்பாம இங்கிருந்து போயிடு” என்று அம்மா மிரட்டும் தொனியில் என்னைத் திட்டினாள். நான் மெதுமெதுவாக அறை வாசலை நெருங்கினேன். என்னை வெளியே துரத்திவிடும் தேவை அம்மாவுக்கு இருக்கவில்லை. நான் வாசலருகில் நின்று கொண்டிருந்தேன். அக்கா விடாமல் அழத் தொடங்கியிருந்தாள். அம்மா கன்னத்தில் கையை வைத்தவாறு யோசிக்கத் தொடங்கியிருந்தாள். வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அறையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி மேசையின் மீது எனது பார்வை சென்றது. அதில் முட்டை வடிவத்திலிருந்த பெரிய கண்ணாடி சுக்குநூறாக உடைந்து போயிருந்தது. சின்னச் சின்ன கண்ணாடித் துண்டுகள், மேசையின் மீதும் தரையிலும் விழுந்து கிடந்தன. பவுடர் டின்னொன்றும் இன்னும் ஏதேதோ போத்தல்களும் கண்ணாடி மேசையின் அருகில் தரையில் விழுந்து பரந்திருந்தன. எனக்கு அக்காவின் கணவன் நினைவில் வந்தார். கண்ணாடி மேசை உடைந்திருப்பதை அவரிடம் சொல்ல வேண்டும். அவர் அதை அறிந்திருப்பாரா? அவர் எங்கேயிருக்கிறார்? நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே இதுவரையில் அவர் எனது பார்வையில் படாதது ஏன்? அவர் எங்கே போயிருக்கிறார் என்பதைப் பற்றி அக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றிய போதிலும் அந்தக் கேள்வியைக் கேட்க இப்போது அக்காவின் அருகில் போனால் மீண்டும் அம்மாவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடும் என்ற பயம் எழுந்தததால் நான் இருந்த இடத்திலேயே அமைதியாக நின்றிருந்தேன்.

அந்தச் சமயத்தில்தான் எமது பெரிய அத்தை அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் அம்மாவிடம் ஏதோ கேட்டாள். அம்மாவின் பதிலைக் கேட்டு இரண்டு கைகளையும் உயர்த்தி மாரில் அடித்துக்கொண்டாள். சற்று நேரம் அங்கேயே நின்றிருந்த பெரிய அத்தை அறையிலிருந்து வெளியே போனாள். பின்னர் ஒவ்வொருவராக அறைக்குள் வந்து போகத் தொடங்கினார்கள். அக்கா அப்போதும் ஒரே சீராக அழுது கொண்டேயிருந்தாள். அம்மா எதுவும் பேசாமல் பார்த்த இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வீடு முழுவதும் ஆழ்ந்த அமைதியொன்று சடுதியாகத் தோன்றியிருந்தது. அக்காவைத் திருமணம் முடித்திருந்தவரின் அம்மாவும் எமது சலவைக்கார மாமியும் இன்னும் அதே போல ஒரு மாமியும் பெரிய அத்தையும் அறைக்குள் நுழைந்தார்கள். இன்னும் சில பெண்கள் அவர்களைத் தொடர்ந்து அறைக்குள் நுழைவதை நான் கண்டேன். யாரோ ஒரு பெண் என்னை வெளியே தள்ளி கதவை மூடினாள். நான் வெளியே வந்து மிகுந்த குழப்பத்தோடு வாசலருகிலேயே நின்று கொண்டிருந்தேன். உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கும்? அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? எதையுமே என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

விறாந்தையில் இருந்தவர்களின் முகங்களிலும் எவ்வித வித்தியாசங்களும் தென்படவில்லை. வெகுநேரத்திற்குப் பின்னர்தான் அறையின் கதவு திறந்தது. அறைக்குள் நுழைவதா வேண்டாமா என்று யோசித்தவாறு நான் இருந்த இடத்திலேயே நின்றிருந்தேன். தலையைக் குனிந்தவாறு ஒவ்வொருவராக அறையிலிருந்து வெளியே வந்தார்கள்.

சற்று நேரத்தில் அக்காவின் கணவன் எங்கிருந்தோ வந்தார். நான் அவருடன் முகம் முழுக்கப் புன்னகைத்தேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். நான் அவரின் அருகே சென்றேன். அவர் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து பெரியதொரு புகை வளையத்தை வெளியே விட்டார். அந்தப் புகையோடு சேர்த்து சாராயத்தின் மூக்கைத் துளைக்கும் கடுமையான நாற்றம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. ‘சாராயமா? மாப்பிள்ளை சிகரெட் ஒன்றையாவது வாயில் வைக்கமாட்டார்’ என்று கல்யாணத் தரகர் மிஸிஹாமி கூறியது முழுவதும் பொய் என்பது நன்றாகத் தெளிவானது. அப்பா அவரை நெருங்கினார். நான் மிகவும் பயந்து போனேன். அப்பா சிகரட்டைப் பறித்தெடுத்துக் கசக்கி மச்சானை அடித்து விடுவாரோ? அப்பா அவரை நெருங்கினால் சாராய வாடையையும் உணர்வார். எனது உடல் சில்லிட்டுப் போனது. அப்பா, மச்சானை நெருங்கும்போதே அவர் அவ்விடத்திலிருந்து விலகிப் போய் விட்டிருந்தார்.

நாங்கள் அனைவரும் சாப்பாட்டு மேசையருகே அமர்ந்துகொண்டோம். பலவிதமான உணவுகளால் சாப்பாட்டு மேசை நிரம்பியிருந்தது. சுவை நரம்பைப் பூரிக்கச் செய்யும் அருமையான சுகந்தம் அவற்றிலிருந்து வந்து கொண்டிருந்தது. என்றாலும் அன்றைய தினம் விருப்பத்தோடு உணவருந்தியது வெகு சிலர்தான். நான் சாப்பாடு மேசையருகே அமர்ந்திருந்தவர்களின் எண்ணங்களைப் பரிசோதிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பார்வை ஓரிடத்தில் நிலைத்து நின்றது. அங்கிருந்தவள் அம்மா. அவளது முகத்தில் எவ்வாறான உணர்வுகள் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன? அவள் கோபமாக இருக்கிறாளோ? எனக்குத் தெளிவாகப் புலப்படவில்லை. முகம் தென்படாத அளவுக்கு அவளது தலை தரையை நோக்கி குனிந்திருந்தது.

சாப்பாட்டு மேசையருகேயிருந்து எழுந்துகொண்ட சிறிது நேரத்தில் அக்காவுக்காகக் கொண்டு சென்றிருந்த அலமாரியைப் பொருத்தும் வேலைகள் தொடங்கின. அவ்வாறான வேலைகளால் எனது மனம் சற்று ஆறுதலடைந்திருந்தது. மாலை வேளையில் நாங்கள் அந்த வீட்டிலிருந்து புறப்படத் தயாரானோம். அக்கா எமது வீட்டிலிருந்து புறப்பட்ட வேளையில் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது போல, இவ் வேளையிலும் உரைகள் நிகழ்த்தப்படக் கூடும் என்று நான் எண்ணியிருந்த போதிலும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அக்கா வெற்றிலைச் செப்பொன்றை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கொடுத்துவிட்டு அவர்களது காலில் விழுந்து வணங்கினாள். தொடர்ந்து, எழுந்து நிற்க முடியாதவள் போல விம்மியழத் தொடங்கியிருந்தாள். அம்மாவும் அப்பாவும் கை கொடுத்துத் தூக்கி விட்டதும்தான் எழுந்து நின்றாள்.

அக்கா வெற்றிலைச் செப்பினை ஏந்தி வந்த போதே, மச்சானின் அம்மா அவரது கையிலும் ஒரு வெற்றிலைச் செப்பினைக் கொடுத்து விட்டிருந்தாள். அவர் அதை எடுத்துக்கொண்டு வந்து எமது அப்பாவிடம் கொடுத்துவிட்டு, அவரது கால்களில் மாத்திரம் விழுந்து வணங்கிவிட்டு, அம்மாவை ஏறெடுத்தும் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து அகன்றார். அதைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. கணப் பொழுதில் அனைவரது முகங்களும் இருண்டு போயிருந்தன. இருண்டு வாடிப் போன முகங்களோடே ஒவ்வொருவராக தாம் வந்திருந்த வாகனங்களில் புகுந்துகொண்டார்கள். எம்முடன் வந்த அனைவரும் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, நான் அக்காவின் அருகில் ஓடிப் போய் அவளைக் கட்டிக்கொண்டேன். அவள் எனது கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் அழத் தொடங்கினாள். உடனே மச்சான் அருகில் வந்து “போயிட்டு வாங்க மச்சான்” என்று கூறி எனது தலையைத் தடவிய போது எனக்கு மிகவும் இதமாக இருந்தது. அவரது தொனியில் பாசம் அடங்கியிருந்தது போல எனக்குத் தோன்றியது. நான் அவருக்குக் கீழ்ப்படிந்தேன்.

 

சில காலத்திற்குப் பிறகு அக்கா வாழாவெட்டியாக எங்கள் வீட்டுக்கே திரும்பவும் குடியிருக்க வந்தாள். உண்மையில் அப்பாதான் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில் அவள் இரண்டு குழந்தைகளின் தாயொருத்தி. அவள் கணவனதும் கணவனின் தாயினதும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்ததை இப்போது நான் அறிவேன். அவளது திருமண வாழ்க்கை பிளவுபட்டுப் போனது எவ்வாறு? என்ன காரணத்தினால் அது நிகழ்ந்தது? இப்போது நான் காரண காரியங்களை அறிந்திருக்கிறேன்.

அக்கா மீது காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த பக்திபூர்வமான, புனிதமான பாச உணர்வு எமது உறவுகளிடத்தில் மங்கிப் போய் விட்டிருந்தது. என்றாலும் அப்பா அவள் மீது காட்டும் கருணையும் பாசமும் அளவற்றவை என்றே எனக்குத் தோன்றுகிறது. முன்பெல்லாம் அப்பா அவளை, ‘மூத்தவளே’ என்றுதான் அழைத்து வந்தார். ஆனால், இப்போதெல்லாம் ‘மகளே’ என்று அழைக்கிறார். அப்பா எங்காவது வெளியே போவதென்றால்கூட, ‘நான் போயிட்டு வாரேன் மகளே… குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு பத்திரமா இரும்மா’ என்று அவளிடம் சொல்லி விட்டுத்தான் புறப்படுகிறார். அவர் சாப்பிடுவதற்கு முன்பு எப்போதும், ‘நீ சாப்பிட்டியா மகளே? குழந்தைங்க சாப்பிட்டாங்களா?’ என்று கேட்பது இப்போதெல்லாம் வழமையாகிப் போய் விட்டது. அதற்கு முன்பெல்லாம் அப்பா என்னைத்தான், ‘மகனே’ என்று அழைத்துக் கொண்டிருந்தார். அந்த அழைப்பு அக்காவுக்கு உரித்தானதன் பின்னர் அப்பா என்னை ‘பிள்ளையே’ என்று அழைக்கத் தொடங்கியிருந்தார். அது என்னை வருத்தப்பட வைத்தது. அம்மாவும்கூட அப்பாவையே பின்பற்றியதால் நான் மிகவும் கவலைக்குள்ளாகியிருந்தேன். என்றாலும் இப்போதெல்லாம் என் மனது அதற்குப் பழகிவிட்டது.

கையறு நிலைக்குள்ளாகியிருக்கும் அக்காவுக்காக எனது வாழ்க்கையைத் தியாகம் செய்யக் கூட இப்போதெல்லாம் நான் தயாராக இருக்கிறேன். அவளின் மீது முன்பை விடவும் அதிகமாக என் மனதில் பாசம் தோன்றியிருக்கிறது. எங்கள் அம்மாவை விடவும் நன்றாக அக்கா எங்களைப் பார்த்துக்கொண்டாள், அல்லவா? எங்களையெல்லாம் கவனமாகப் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுத்தாள், அல்லவா? அது சிறு பிராயத்தில்தான் என்றாலும் இப்போதும் அப்படித்தான், அல்லவா? எனது வாழ்நாள் முழுவதும் அக்காவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே நோக்கம். இருந்தாலும் அவளது திருமண வாழ்க்கை பிளவுபட்டுப் போன கருணையேயற்ற அந்த மர்மத்தைக் குறித்து நான் ஒரு சீராக யோசித்துப் பார்த்தேன். எனது எண்ணம் சரியாக இருக்கக் கூடும்.

எமது தாத்தாவிடமிருந்து அப்பாவுக்குக் கிடைத்த தேங்காய் வியாபாரம்தான் அப்பாவின் தொழிலாக அமைந்தது. தாத்தாவின் வழிகாட்டலில் இந்த வியாபாரமானது அப்பாவின் கைகளால் மேலும் செழிப்பாக நடைபெற்றது என்று அநேகமானவர்கள் இப்போதும் சொல்வார்கள். அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்பாவிடமிருந்து சம்பளம் வாங்கும் இரண்டு மூன்று பேரும் வேலைக்கென இருந்தார்கள். அப்பாவின் தம்பியொருவரின் மகனான சோமதாஸ, அப்பாவின் உதவிக்கென எமது வீட்டில் தங்கியிருந்தார். சோமதாஸவின் படிப்பு பாதியில் நின்று போயிருந்ததாலும் சித்தப்பாவின் குடும்பத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், சித்தப்பா, தனது மகன் கைத்தொழிலொன்றைப் பழகிக் கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் அவரை எமது அப்பாவிடம் பொறுப்பு கொடுத்திருந்தார்.

சோமதாஸ அண்ணன் என்னைத் தனது சைக்கிளிலேற்றிக் கொண்டு பாடசாலைக்குக் கூட்டிப் போவது, கூட்டி வருவது போன்றவற்றைச் செய்து வந்ததோடு, அப்பாவுடன் தேங்காய்களை வாங்கிக்கொண்டு வர தோட்டம் துறவுகளைத் தேடிப் போவதையும் செய்துகொண்டு எமது குடும்பத்திலேயே ஒருவராக ஆகிவிட்டிருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போய் குளிப்பாட்டி விட்டதெல்லாம் அக்காதான். சோமதாஸ அண்ணனால் அந்த வேலையும் பொறுப்பேற்கப்பட்டிருந்தது. அவர் எனது வாழ்க்கைக்குப் போலவே, எமது குடும்பத்துக்கும் ஒரு பலமாக இருந்தார். சோமதாஸ அண்ணன் எங்கள் அண்ணன்மாரை விடவும் வயதில் மூத்தவர். என்றாலும் அவர் எமது குடும்பத்தில் அனைவரதும் நெருங்கிய சினேகிதர் போலத்தான் இருந்தார்.

ஒருநாள் சோமதாஸ அண்ணன் தனது ஊருக்குக் கிளம்பிப் போனது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. போனவர் திரும்பி வரவேயில்லை. அவர் வராதிருக்கின்றமை குறித்து நான் மிகுந்த கவலைக்குள்ளானேன். அப்பா, அம்மா, அக்கா ஆகிய மூவருமே சோமதாஸ அண்ணனைப் பற்றி நான் பல விதங்களிலும் எழுப்பிய கேள்விகளுக்கு ஏதேதோ பதில்களைக் கூறி மழுப்பி உண்மையான விடயத்தை என்னிடமிருந்து மறைத்தார்கள். என்றாலும் அவர் மீண்டும் திரும்பி வராததன் காரணத்தை இப்போது நான் அறிவேன்.

சோமதாஸ அண்ணன் தனது ஊருக்குக் கிளம்பிப் போய் அங்கிருந்து கொண்டு, எமது அக்காவைத் திருமணம் முடிக்க விரும்புவதாக கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். வியாபாரத்தில் அப்பாவின் ஒரேயொரு ஆலோசகராக மாத்திரமல்லாது ஏனைய பல விடயங்களிலும் வழிகாட்டியாகவுமிருந்த அப்பாவின் பாசத்துக்குரிய சோமதாஸ அண்ணனின் இந்தக் கடிதம் அப்பாவைக் கோபத்தில் கொந்தளிக்கச் செய்திருந்தது. அத்தோடு நிறுத்தாமல் அப்பாவும் அம்மாவும் சித்தப்பாவின் வீட்டுக்கே போய் பெரியதொரு களேபரத்தை உருவாக்கி விட்டிருந்தார்கள். அதன் பிரதிபலனாகத்தான் சோமதாஸ அண்ணனுக்கு தனது சொந்த வீட்டிலிருந்தும் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. பிறகு அவருக்கு என்னவாயிற்று என எனக்குத் தெரியவில்லை. உறவுமுறை பொருந்தாததைச் சொல்லிச் சொல்லி அம்மா திட்டியதற்கும் மேலதிகமாக, அப்பா சித்தப்பாவின் முன்னிலையிலேயே சோமதாஸ அண்ணனைப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். சோமதாஸ அண்ணன் எமது குடும்பத்திலிருந்தும் அவரது வீட்டிலிருந்தும் முழுமையாக வெளியேறியது அப்போதுதான். காலம் செல்லச் செல்ல அவரைப் பற்றிய ஞாபகங்களும் எமது எண்ணத்திலிருந்து நழுவிப் போய் விட்டிருந்தன.

சோமதாஸ அண்ணன் தொடர்பான இந்தத் தகவலை சந்தியில் கடை வைத்திருக்கும் அமரசேனவிடமிருந்துதான் நான் அறிந்துகொண்டேன். அவர் சோமதாஸ அண்ணனின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அண்மையில்தான் எனக்கு நண்பரானார். அதுவும் எனது பாடசாலைப் பயணம் நின்ற பிறகுதான். ஆனாலும், அப்போது எமக்கிடையில் ஆழமான நட்பு உருவாகியிருந்தது. சோமதாஸ அண்ணனுக்கு என்ன நடந்திருக்கும்? அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா? இந்தத் தகவல்களை இப்போது எவரும் அறிந்திருக்கவில்லை. எமது அக்காவின் திருமணம் குறித்து அமரசேன, சோமதாஸ அண்ணனுக்கு அறியத் தந்திருக்கிறார். அதன் பிறகு அவர்களிடையேயான கடிதப் பரிமாற்றமும்கூட நின்று போனதாக அமரசேன என்னிடம் கூறினார்.

எதிர்பாராத விதத்தில்தான் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. அதைக் குறித்து எனது மனதிலிருந்த பச்சாதாபமும் இப்போது நீங்கிப் போய்விட்டது. என்ற போதிலும் இப்போதும் எனது ஆழ்மனதில் படிந்திருந்து எப்போதும் என்னை வதைப்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டு சம்பவங்கள் இருக்கின்றன. அந்த இரண்டு சம்பவங்களும் சில வேளைகளில் எனக்கு அக்கா மீது அனுதாபத்தையும் சில வேளைகளில் அவள் மீது கோபத்தையும் அறுவறுப்பையும் உருவாக்கும். நான் அந்த உணர்வுகளை மிகுந்த பாடுபட்டு அடக்கிக்கொள்வேன். இப்போது அதுவும்கூட கடினமாக இருக்கிறது. எனது ஆழ்மனதைத் துளைத்துத் துளைத்து இவை எனது மனதை வருத்துகின்றன. இவற்றுள் முதலாவது சம்பவம் எனது மனதிலிருந்து மங்கிப் போயிருந்தது. அக்காவை வாழ்நாள் முழுவதும் நானே பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற வைராக்கியத்தை என் மனதில் ஆழமாகப் பதித்துக்கொண்டது அப்போதுதான். என்றாலும் இரண்டாவது சம்பவம் இடைக்கிடையே என்னைத் துளைத்து வலிக்கச் செய்வதைத் தாங்க முடியாதுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களில் முதலாவது சம்பவம் சோமதாஸ அண்ணன் சம்பந்தப்பட்டது. எனக்கு நாள் கிழமையெல்லாம் ஞாபகமில்லை. அப்பாவும் அம்மாவும் பதுளையில் வசித்து வந்த எமது பெரியப்பாவின் சாவு வீட்டுக்குப் போயிருந்தது நினைவிருக்கிறது. கெஞ்சிக் கூத்தாடி அந்தப் பயணத்தில் இணைந்துகொள்ள என்னால் முடியுமாக இருந்த போதிலும் நான் விருப்பத்துடன்தான் அந்தப் பயணம் செல்லாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்பதும் நினைவிருக்கிறது. அதற்குக் காரணம் பெரியப்பா குறித்து எனது மனதில் தோன்றியிருந்த பேரச்சமாக இருக்கலாம். எங்கள் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் எப்போதும் ஒத்து வராது. அவர் ஒரு பாடசாலை அதிபராக இருந்தார். அதிபர் என்றாலே, எப்போதுமே எம்மிடம் வீணாகக் குற்றம்குறை கண்டுபிடித்து குறுக்குமறுக்காக பிரம்பால் தாக்கும் எமது பாடசாலை அதிபர்தான் நினைவுக்கு வருகிறார். அவரும்கூட வெளித் தோற்றத்தில் பெரியப்பா போலவே இருப்பார். பெரியப்பா, எங்கள் அப்பாவுடன் மாத்திரமல்லாது தாத்தாவுடனும் முரண்பட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தனது விருப்பத்தில் திருமணம் செய்து. வீட்டோடு மாப்பிள்ளையாக ஆகி விட்டிருந்தார். அவர் எந்தளவு கடுமையான நபர் என்றால் தாத்தாவின் சாவுக்குக்கூட அவர் வரவில்லை. என்றாலும் அப்பா, பெரியப்பாவின் சாவைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே கவலைப்பட்டு அங்கு போவதற்கு முடிவெடுத்திருந்தார்.

அப்பாவும் அம்மாவும் வீட்டில் அல்லாமல் வெளியே தங்கிய ஒரேயொரு இரவு அதுதான். அன்றைய தினம் எமது குடும்பத்தின் பொறுப்பாளராக சோமதாஸ அண்ணன் இருந்தார். நாற்புறங்களிலிருந்தும் இருள் சூழ்ந்த வேளையில் எனக்கு மிகுந்த தனிமை தோன்றியது. சாவு வீட்டில் அப்பாவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்றும் பயந்தேன். பெரியப்பா தனது கடைசி மூச்சையும் விட்டிருந்ததால் அப்பாவுடன் சண்டை போட அங்கு வேறெவரும் இல்லை என்பது தெரியும். இருந்தும் பெரியப்பா பெட்டியிலிருந்து எழுந்து அப்பாவுடன் சண்டை பிடிக்கக் கூடும் என்ற பயம் எனது ஆழ் மனதில் அலைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தது. தனிமையால் வாடிப் போயிருந்த எனதுள்ளம் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. யாருடைய தூண்டுதலும் இல்லாமலேயே நான் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தேன்.

படுக்கையில் போய் விழுந்ததுதான் ஞாபகம் இருக்கிறது. உடனடியாக நான் ஆழமான நித்திரையில் ஆழ்ந்திருக்க வேண்டும். எந்த நேரத்தில் விழிப்பு வந்தது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்றாலும் நள்ளிரவாகியிருக்கக் கூடும். அந்த நேரத்தில் அக்கா யாருடனோ கதைத்துக் கொண்டிருப்பது தென்பட்டது. நான் கனவில் போல விழித்துப் பார்த்தேன். சோமதாஸ அண்ணன் அக்காவின் கன்னத்தில் முத்தமிடுவதைக் கண்டேன். நான் எழுந்து கட்டிலில் அமர்ந்துகொண்டேன். சோமதாஸ அண்ணன் அறையிலிருந்து வெளியேறினார். எழுந்து சென்று சோறு சாப்பிடுமாறு அக்கா என்னை வற்புறுத்தினாள். எனக்குள் தோன்றியது என்ன மாதிரியான உணர்வு என்று எனக்கு சொல்லத் தெரியாவிட்டாலும்கூட நான் வேண்டுமென்றே மீண்டும் படுத்துக்கொண்டேன். எவ்வளவுதான் அக்கா வற்புறுத்திய போதிலும் நான் கண்களைத் திறந்து பார்க்கக்கூட பிடிவாதமாக மறுத்துவிட்டேன். நிறையத் தடவைகள் முயன்று பார்த்த பிறகு அக்காவின் கெஞ்சும் குரல் மெதுமெதுவாக தொலைவாகிப் போனது போலிருந்தது.

இடியோசையால் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. வெளியே கடுமையாக மழை பெய்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். கடும் குளிரையும் உணர்ந்ததால் நான் சுற்றி வரப் பார்த்தேன். அக்கா என் மீது போர்வையால் போர்த்தி விட்டிருந்த போதிலும் அது விலகிப் போயிருந்தது. எனது கட்டிலின் அருகே தரையில் யாரோ இருப்பதை விழியோரமாகக் கண்டேன். அந்த நொடியில் நான் மிகவும் பயந்து போனேன். அடுத்த மின்னல் வெளிச்சத்தில் அக்காவும் சோமதாஸ அண்ணனும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு ஒன்றாக இருப்பதைக் கண்டேன். அந்தக் காட்சியாலும் இடியோசையாலும் நான் அதிர்ந்து போயிருந்தேன். கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்குவதற்கு முயன்ற போதிலும் அது சிரமமாக இருந்தது. கத்தி ஓலமிட்டு அம்மாவைக் கூப்பிடத் தோன்றியது. என்றாலும் அம்மா வீட்டில் இல்லை என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன்.

காலையில் சூரியன் உதிக்கும்போதே நான் விழித்துக்கொண்டு விட்டேன். மறுகணமே எழுந்து வெளியே ஓடிப் போனேன். சமையலறை ஊடாக பின்பக்கமாகப் போன போது சமையலறையில் அக்கா இடியப்பத்தைப் பிழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சோமதாஸ அண்ணன் அவளருகிலேயே நின்றுகொண்டு அவளது தலையைத் தடவிக் கொண்டிருந்தார்.

“அடடா சாப்பிடாமலேயே தூங்கிட்டாய்தானே? இரு அம்மா வந்ததுமே மாட்டிக் கொடுக்குறேன்; பிள்ளைகளோடு சேர்ந்து கூத்தாடிட்டு புழுதியோடே வந்து கட்டில்ல விழுந்தாய்னு.”

அக்கா இவ்வாறு முன்பும் பல தடவைகள் என்னை மிரட்டியிருந்த போதிலும் ஒருபோதும் அம்மாவிடம் மாட்டிக் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. என்ற போதும் இந்தத் தடவை இந்தத் தகவலை அம்மாவிடம் கூறி விடுவாளோ என்ற பயம் எனக்குள் தோன்றியது. நான் வீட்டுக்குள் ஓடிப் போய் அண்ணன்மாரையும் சின்னக்காவையும் பார்த்தேன். அவர்கள், அவரவரது இடங்களில் நன்றாகப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மீண்டும் படுக்கைக்குப் போன போதிலும் சோமதாஸ அண்ணன் வந்து என்னைத் தூக்கிச் சுமந்து கொண்டு சமையலறைக்குப் போனார். எனக்கு அவரது கைகளிலிருந்து நழுவி ஓடி விடத் தோன்றியது. என்றாலும் என்னிடம் அதற்கான சக்தி இருக்கவில்லை. அவர் மீது எனது மனதில் கோபமொன்று இருந்தது போலவும் இருந்தது. என்றாலும் மதியம் வரையிலும் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே காலத்தைக் கடத்தினோம்.

“சோமண்ணா, இளநீர் பறிப்போமா?” என்று பெரியண்ணன் கேட்டதுமே, சோமதாஸ அண்ணன் பெரியதொரு இளநீர்க் குலையைக் கீழே இறக்கினார். ஏனைய நாட்களில் எங்களது குறும்புத்தனங்களுக்கு கோபப்படும் அக்கா, அன்று அவற்றுக்கு இணங்கினாள். அந்தப் பகல்வேளையை மிகுந்த மகிழ்ச்சியோடு நாங்கள் கழித்தோம். எனது மனதிலிருந்த அமைதியற்ற உணர்வுகள் அனைத்தும் வழிந்தோடிப் போயிருந்தன. அன்று சோமதாஸ அண்ணனுடன் ஏனைய நாட்களை விடவும் நெருக்கமாக நடந்துகொள்ள என்னால் முடிந்தது எவ்வாறு என்பது எனக்குத் தெரியவில்லை.

அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது நன்றாக இருள் சூழ்ந்து விட்டிருந்தது. சாவு வீட்டுத் தகவல்களை அறிந்துகொள்ள யாரும் அக்கறை காட்டவேயில்லை. அப்பா பத்திரமாக வீடு திரும்பியிருந்தமை எனது மனதுக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. என்ற போதிலும் அப்பாவின் வெளிறிப் போயிருந்த முகம் நம் அனைவரையும் அமைதியாக இருக்கச் செய்திருந்தது. அம்மா பெயார்ஸ் கனிகள் இட்ட பையொன்றை என்னிடம் தந்தாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனியாகக் கொடுத்துவிட்டு எஞ்சிய கனிகள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளும் ஆசையில் குதூகலித்த எனது மனதில் அதன் பிறகு வேறெந்த எண்ணங்களும் உள் நுழையவில்லை.

 

டிப்படியாக காலம் கழிந்தது. எனது நட்பின் காரணமாக அமரசேன எமது வீட்டுக்கு வந்து போகத் தொடங்கியிருந்தார். நான் வீட்டில் இல்லாத சமயத்திலும்கூட எமது வீட்டிலிருந்த ஏனையவர்கள் அவரை வரவேற்று உபசரிக்கப் பழகியிருந்த காரணத்தால் அவரது வருகை அதிகமாகியிருந்தது.

எமது முற்றத்து மா மரத்தில் தேனீக்கள் கூடொன்றைக் கட்டியிருந்தன. அதை அகற்றிவிட வேண்டும் என்ற தேவை எங்களில் யாருக்கு இருந்தது என்பது சரியாகத் தெரியவில்லை. ஒரு நாள் அமரசேன அதை அகற்றும் யோசனையை முன்வைத்தது மாத்திரமல்லாமல் அந்த வேலையைச் செய்ய ஒரு ஆளையும் கையோடு கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்த நபர் கறுஞ்சுருட்டொன்றைப் பற்ற வைத்து ஊதிய வேளையில் தேனீக்கள் கலைந்து நாற்புறமும் பறந்து கலைந்து போயின. மற்றுமோரிடத்தில் நின்று கொண்டிருந்த அமரசேன தேனீக்களைப் பிடிக்கவென வெற்றுக்குடமொன்றைக் கையில் வைத்துக்கொண்டு துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தார். பின்னர், தேனீக்கள் பறந்து போன கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட தேன் மெழுகை அக்காவின் கையிலிருந்த தட்டின் மீது அமரசேன ஒரே சீராக எடுத்து வைத்தார். தொடர்ந்து, அமரசேன மிகுந்த பாசத்தோடு அக்காவின் குழந்தைகள் இருவருக்கும் சிறிய தேன் மெழுகுகளை ஊட்டிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்.

எனது பால்ய காலம் முடிந்து போய்விட்டது. இப்போது நானும் ஒரு சில விடயங்களைப் புரிந்துகொள்ளும் நபர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அண்ணன்மாரும் சின்னக்காவும் வீட்டைவிட்டுத் தூரமாகி விட்டார்கள். இப்போது நான் அப்பாவின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும் பொறுப்பு வாய்ந்த ஒரு நபர். அப்பா கூட சில சில விடயங்களில் என்னிடம்தான் கலந்தாலோசித்தார். அவ்வாறான நிலையில் இருக்கும் நான் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். தேன் எடுக்கப்பட்ட நாளும் அமரசேனவின் சில நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்கவேயில்லை. சந்திக் கடைக்குப் போய் இனிமேல் எமது வீட்டுக்கு வர வேண்டாமென்று அவரிடம் கூறி விட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எனினும் ஒரேயடியாக அவ்வாறு கூறுவது சங்கடமானது. ஆகவே, இதைக் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். வேண்டுமென்றோ, இல்லாமலோ நான் அமரசேனவுடன் சகஜமாக உரையாடுவதிலிருந்தும் சற்று விலகிக்கொண்டேன். அவர் எனது வீட்டுக்கு வந்து போவதும் படிப்படியாகக் குறைந்தது. அது எனக்கு மிகுந்த ஆசுவாசத்தை அளித்தது.

ஒருநாள் நான், சற்று தொலைவில் இருந்த தோட்டங்கள் சிலவற்றில் வாங்கியிருந்த தேங்காய்களுக்கு பணம் கொடுக்கப் போய்விட்டு, இரவில் வீடு திரும்பினேன். அந்தத் தேங்காய்களை உரிக்கவும் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் அதற்காக ஒரு கூலியாளைச் சந்தித்து விட்டு வரம்பு நெடுக நடந்து வந்து வேலியோர இடைவெளி வழியே எமது தோட்டத்தில் புகுந்தேன். இருள் நாலாபக்கமும் பரவியிருந்தது. என்றாலும் பழகிய இடம் என்பதால் என்னால் வீட்டை நெருங்க முடியும் என்று தோன்றியிருந்தது. ஆழமான அமைதியும் காரிருளும் இடைக்கிடையே ஆகாயத்தில் கேட்கும் ஆக்காட்டிப் பறவையின் ஓசையும் எனது காலடிகளை விரைவுபடுத்தியது. வீட்டின் கொல்லைப்புறத்தில் வைக்கோல் போரைக் கடந்த போது அதனுள்ளிருந்து எழுந்த ஓசையால் அதிர்ந்த நான் அந்த இடத்திலேயே நின்று கொண்டு சுற்றி வரப் பார்த்தேன். அவ்வேளையில் வைக்கோல் போருக்குள் இருந்த இருவரையும் அடையாளம் கண்டுகொள்வது எனக்கு சிரமமாக இருக்கவில்லை. அது அக்காவும் அமரசேனவும் என்பதில் சந்தேகமில்லை. அப்போது எனக்குள் எழுந்த கோபம் அளவற்றது என்ற போதிலும் எதையும் செய்வதறியாமல் ஒரு கணம் நின்றிருந்தேன். பிறகு இயன்றளவு வேகமாக விறாந்தைத் திண்ணையை நோக்கி நடந்தேன்.

சற்று நேரத்தில் வேலியோரமாக யாரோ நடந்து போவதை நான் கண்டேன். உடனே டோர்ச்சை எடுத்து அவர் மீது ஒளியைப் பாய்ச்சினேன். அமரசேன தலையைக் குனிந்துகொண்டு வேகமாகப் போய்க் கொண்டிருப்பது தெளிவாகத் தென்பட்டது. டோர்ச்சை மேசை மீது வைத்து விட்டு நான் சமையலறையை நோக்கி நடந்தேன். சமையலறையில் அக்கா, குட்டை வாங்கில் தனது இரு குழந்தைகளையும் அமர வைத்து அவர்களுக்கு சோறூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அக்கா மீது, எனது வாழ்க்கையில் முன்னெப்போதும் தோன்றியிருக்காத அனுதாபமொன்று என்னுள்ளே உண்டானது. நான் அவளை பாசத்தோடு நெருங்கினேன். அக்கா எனது முகத்தைப் பார்த்த போது அவளது அந்த நிர்க்கதி நிலைமைத் தோற்றம் எனதுள்ளத்தைத் துளைக்கும் அளவுக்கு இருந்தது.

ரிஷான் ஷெரீப் <mrishansh@gmail.com>

 

 

 

 

 

சரத் விஜேசூரிய: இலங்கையின் பிரபலமான சிங்கள எழுத்தாளரான சரத் விஜேசூரிய, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சிங்களப் பிரிவு பேராசிரியர் ஆவார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் நூல்கள், கட்டுரைகள், இலக்கிய நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இலங்கையில் அதிகமான வாசகர்களைக் கொண்டிருக்கும் சிங்கள எழுத்தாளரான சரத் விஜேசூரியவின் உரைகளும் இலங்கை அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்துபவை.

Amrutha

Related post