காளி

 காளி

குமாரி
தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்
ஓவியம்: கருணா வின்செண்ட்

 

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட – வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட – பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் – களித்
தாடுங் காளீ! சாமுண் டீ!கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

அவளது பெயர் காளிக்குட்டி.

குட்டி என்பதற்கு அர்த்தம் சிறு பிள்ளை. செல்லமாக குட்டி என்பார்கள். காளிக்குட்டியின் வயது நாற்பத்தைந்து. மட்டக்களப்பு செங்கலடியில் வசித்து வருகிறாள்.

படியாத சுருள் கூந்தலைக் கையால் அழுத்தி விட்டவாறே, வெற்றிலைச் சாற்றால் கடும் சிவப்பாகிப் போயிருந்த வாயைத் திறந்து சிவத்துப் போயிருந்த பற்களையும் நாக்கையும் காட்டி மீண்டும் சிரித்தாள். சிரிப்போடு சேர்ந்து கண்களும் இரண்டு உருண்டைப் பந்துகள் போல அகன்று சுழன்றன. வலது காலின் முழங்காலுக்கு இரண்டங்குலம் கீழாகத் தொங்கிய குட்டைக் காலும் அவளது சிரிப்புக்கேற்ற தாளத்தில் ஆடியது. அவள் சிரித்தது, பதினைந்து வருடங்களுக்கு முன்பு அழிக்க நேர்ந்த அவளது நெற்றியின் குங்குமத்தைக் குறித்து வினவிய போதுதான்.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப் – பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக – அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் – தோடே
முடியா நடனம் புரிவாய், அடு தீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

அடி சிதைவுற்றிருந்த பொய்க் கால் உறுதியாகப் பொருந்தும் விதமாக, தனது குட்டைக் காலைச் சுற்றிக் கட்டியிருந்த பழைய சீத்தைத் துணியின் அழிந்த அலங்காரங்களின் மேலே அவள் விரலால் பூக்களை வரைந்தாள். குட்டைக் கால் அதற்கேற்ற விதத்தில் முன்னும் பின்னுமாக அசைந்தது.

“அதுக்குச் சரியா அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான்… அதோ அந்த மரத்தடியில…” என்றவாறு தொலைவிலிருந்த வேப்ப மரத்தை நோக்கி ஒரு விரலால் சுட்டிக் காட்டினாள்.

“அங்க அடிக்கடி ராணுவம் வரும். அவையள்ட பார்க்கச் சொல்லிச் சொன்னனாங்கள். சொல்லி ரெண்டு நாள் போகேல்ல. புதைச்சு வச்சிருந்த கண்ணிவெடியொண்டு… நாலு பிள்ளைகளுக்கும் சாப்பாடு கொடுக்க சட்டிப்பானையெல்லாம் செய்றது நான்தான். அந்த இடத்திலதான் நான் மண் குழைப்பன். அண்டைக்கு கால வச்சது மட்டும்தான் தெரியும்…”

அவள் வலது பாதத்தை முதலில் வைக்கும் பழக்கமுடையவள். அதனால்தான் வலது கால் போயிருக்கிறது!

குனிந்து குட்டைக் காலில் காணப்பட்ட உராய்வுகளைத் தடவிக் கொடுத்தவளின் மூக்கிலிருந்த மூக்குத்தி வெயில் பட்டு மின்னியது. பூரித்த கன்னங்களிலும் அதன் பிரகாசம் தடவிக் கொடுத்தது.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே
ஊழாம் பேய்தான் “ஓஹோ ஹோ”வென் றலைய – வெறித்
துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

“கிடைச்சது போலவேதான் இழக்கத் தொடங்கினாலும்… பிள்ளைகளும் ஒவ்வொண்டா போகத் தொடங்கிச்சினம். முதல்ல மூத்தவன்…”

மரங்களிடையேயிருந்து எட்டியெட்டிப் பார்த்த வெயில் அவளைத் தேடி வந்து தொட்டதால் முகம் சுளித்தவள் ஒரு கையால் வெயிலை மறைத்தவாறு வானத்தைப் பார்த்து முறைத்தாள். பிறகு மரத்தில் கையூன்றி உடலை விழாமல் சமாளித்தவாறு அமர்ந்திருந்த பிளாஸ்டிக் கதிரையை சற்றுப் பின்னால் தள்ளி திரும்பவும் அதில் தட்டுத் தடுமாறி அமர்ந்துகொண்டாள்.

“காரணம் என்னெண்டு தெரியேல்ல… கொழும்புக்கு கடையொண்டுல வேலன்டு சொல்லிட்டுப் போனவன்…. பிறகு செத்துப் போயிட்டானெண்டு தகவலொண்டுதான் வந்து சேர்ந்தது.”

அந்த வீட்டிலிருந்த ஒரேயொரு கதிரையில் அவள் அமர்ந்திருந்தாள். நான் தரையில், புல்வெளியில், முள் குத்துமென்ற பயத்தில் செருப்புகளிரண்டின் மேலே அமர்ந்திருந்தேன்.

“சடலத்தை இஞ்ச கொண்டு வரக் கூடிய காலகட்டமில்ல அது. அந்தச் சடலத்த இஞ்ச கொண்டு வராட்டிலும் கூட, வேண்டிய மட்டும் சாவுகள் இஞ்ச இருந்துச்சுது எங்களுக்கெண்டு…” என்றவள் சிரித்தாள். எனினும் அந்தப் பேச்சும் சிரிப்பும் ஒன்றுக்கொன்று பொருந்தவேயில்லை ஒருபோதும்.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்
சடசட சட்டென்றுடைபடு தாளங்கொட்டி – அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித் – தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

“அதுக்குப் பிறகு ரெண்டாவது பிள்ளை… அவனும் கொழும்புக்குப் போனான்… இஞ்ச இருக்க ஏலாதெண்டு போனவன். அது மட்டுமில்லையே… உசிரோடு இருக்க வேணுமே. வீட்டக் கட்ட வேணுமென்டு அவனுக்கு சரியான ஆசையிருந்தது. கொஞ்ச நாள் காசும் அனுப்பினவன். அவ்வளவுதான். போதைத் தூள் கையில இருந்ததெண்டு சொல்லி பிடிச்சுக் கொண்டு போனவங்கள். வழக்கில தீர்ப்பாகி சிறைக்குப் போனவன்தான். இஞ்ச இருந்து போனதுக்குப் பிறகு நான் அவனை இந்த ரெண்டு கண்ணாலயும் காணேல்ல”

“…………….”

“அடுத்தவன்… அவனெண்டா அவனாவே ஓடிப் போனவன்… ஓரோரிடத்திலயும் அவனக் கண்டதா அந்தக் காலத்துலயே ஒவ்வொருத்தரும் சொல்லிச்சினம். நான் தேடிப் போகேல்ல. பயந்தாங்கோழை. வாழ்க்கைக்கு முகம் கொடுக்கத் தெரியாம… ஜீவிதமெண்டால் என்னெண்டு அவனுக்குத் தெரியேல்ல… அவனுக்கு எப்படி விளங்கப் போகுது?” என்றவள் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள்.

நம்ப இயலாதளவு சாந்தம் அந்தக் கண்களில் தேங்கியிருந்தது.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும் – அங்கே
கடவுள் மோனத் தொனியே தனியா யிலகும் – சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் – கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

“என்ட கவலையெல்லாம் இளையவனப் பற்றித்தான். என்னோடவே கடசி வரைக்கும் நிண்டான். என்ட எல்லாத்தையும் அவன்தான் பார்த்துக் கொண்டவன். அவனையும் கருணா ஆட்கள் கொண்டு போயிட்டினம். இப்ப சரியா ஒரு வருஷமாகுது. சின்னவன் அம்மாவை நெனச்சு அழுது கொண்டிருப்பான்” என்றவளிடம் புதிய காலொன்றைப் பொருத்தப் போகத் தயாராகவிருக்கும்படி கூறிவிட்டு நான் புறப்பட்டேன்.

நான் திரும்ப வரும்போது அவள் கத்தரிப் பூ நிறத்தில் மணிப்பூர் சேலையொன்றை அணிந்திருந்தாள். அதில் கறுப்பு நிறத்தில் இடப்பட்டிருந்த மாங்கொட்டை அலங்காரத்தைப் போலவே அவளது இடது கையின் முழங்கைக்குக் கீழே பச்சை குத்தப்பட்டிருந்தது. அவளது கைகள் எந்தளவு சுருங்கிப் போயிருந்ததென்றால், கையிலிருந்த பச்சையைக் கூட நான் முதலில் தோல் சுருக்கமாகத்தான் கண்ணுற்றிருந்தேன். ஆனால், இப்போது அது தெளிவாகத் தென்பட்டது.

அவளது நீல நிறத்துக்கு இசைவான கறுப்பு நிறத்துக்கு, சேலையின் கத்தரிப் பூ நிறம் சேர்ந்த போது வித்தியாசமான அழகொன்று தோன்றியிருந்தது.

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;
வந்த னம்; அடி பேரருள் அன்னாய்!
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி! நீ.

ஒரு புறமாக உடைந்து சரிந்திருந்த வீட்டுச் சுவரில் கையை ஊன்றியவள் மறு கையில் பொத்தி வைத்திருந்த கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.

“ஹ்ம்ம்.. சரியான சூடு”

“ம்ம்”

மறுபுறத்தில் காய்ந்து போன களிமண் குவியல் காணப்பட்டது.

“அப்ப இப்ப யாரு மண்ணை மிதிச்சு குழைச்சுத் தாறது?”

“நான் தான்.”

“சட்டிப்பானை செய்றது?”

“நான் தான்.”

“சந்தைக்குக் கொண்டு போறது?”

“நான் தான்.”

“அப்ப தண்ணியிழுக்குறது… சமைக்குறது?”

“நான் தான்.”

“அப்படீன்னா… நீங்க தனியா… தன்னந் தனியா… தனியில்லையா?”

அவள் மீண்டும் சிரித்தாள். நல்ல வேளையாக குட்டைக் காலால் அசைய முடியவில்லை. அது அந்த அலங்காரங்கள் மங்கிப் போன சீத்தைத் துணியால் சுற்றப்பட்டு, அடி சிதைந்த பொய்க் காலுக்குள் புகுத்தப்பட்டு, புடைவைத் துண்டால் வரித்துக் கட்டப்பட்டிருந்தது.

“ஆனா…”

அவள், எனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், எனது கேள்வியைப் புரிந்து கொண்டவள் போல.

“இல்ல… ஒண்ணுமில்ல… கிளம்புவோம்…”

படிக்கட்டிலிருந்து இறங்க உதவியாக எனது கையை அவளை நோக்கி நீட்டினேன். அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. நொண்டி நொண்டி நடந்தாளெனினும் மிகுந்த சுறுசுறுப்பாக தெருவோரமாக நடந்தாள்.

எஞ்சியிருந்த கேள்விகளை எனக்குள்ளே விழுங்கிய நான், அவள் பின்னால் நடந்தேன்.

*கவிதைகள் – மஹாகவி பாரதியார் (ஊழிக் கூத்து, காளிக்குச் சமர்ப்பணம்)

*****

kumari

குமாரி:  சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி வரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண் எழுத்தாளர். கவிஞர், பத்திக் கட்டுரையாளர், தெரு நாடகக் கலைஞர் என பன்முகம் கொண்ட கலைஞரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவரது தெரு நாடகங்களும் நூல்களும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றவை. ‘காளி’ எனும் இச்சிறுகதையானது, சிங்கள மொழியில் வெளியாகியுள்ள இவரது சிறுகதைத் தொகுப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

Amrutha

Related post