சீதை, கண்ணகி, துரௌபதை: பெண்களா? அடிமைகளா?
மாலதி மைத்ரி
ஓவியம்: Wahab Jaffer
சுதந்திரத்திற்குப் பிறகு புதிய தொழில்நுட்பத் திறமைகளைக் கைப்பற்றி திரைக்கலையை வளர்த்து தமிழ்ச் சமூகத்துக்கு வழிக்காட்ட வந்த தீர்க்கத்தரிசிகள், கலைஞராகி பெரும் பேரும் பொருளும் ஈட்டி ஆட்சியைப் பிடிக்கக் கிளம்பியப் புரட்சியாளர்கள், ஏட்டுக் கல்விக் கற்கத் தொடங்கிய முதல் தலைமுறைப் பெண்களுக்கு, “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள, இங்கீலீசுப் படிச்சாலும் இந்தத் தமிழ்நாட்டுல இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள” என்றார்கள்; இதற்கு அடுத்தத் தலைமுறை, “என் மன்னன் எங்கே, என் மன்னன் எங்கே” என்று, மேற்கல்விப் படித்துத் தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்ல வேண்டிய பெண்களை 16 வயதிலேயே கணவனைத் தேடக் கற்றுத் தந்தார்கள்.
படிக்கக் கிளம்பிய பெண்கள் பகட்டுக்கு ஆசைப்பட்டுக் கெட்டுச் சீரழிவார்கள், ‘பெண்புத்திப் பின்புத்தி’ என்று திரும்பத் திரும்பப் பதிய வைப்பதிலும், பெண்களுக்குக் கற்பிக்கப்பட்ட சட்டதிட்டங்களை (தன்னிலையை) மறந்துவிடாமலிருக்க மிரட்டிக்கொண்டிருப்பதுமே இதிகாச இலக்கியங்கள் தொடங்கி, நவீன திரைக் காவியங்கள் வரையான, கலை இலக்கியங்களின் தலையாயக் கடமையாக இருந்திருக்கிறது. சமூகத்தில் எப்போதும் பெண்ணின் நிலையை வரையறுத்துக் கட்டுப்படுத்திப் பெண்ணை அடக்குவதிலேயே கவனமிருந்திருக்கிறது ஆண்களுக்கு.
‘கற்பு’ விதிப்படி ஒரு பெண் ‘கெட்டுப்போக’ ஒரு ஆண் தேவை என்பதும், ஒரு பெண்ணால் தனித்துக் ‘கெட்டுப்போக’ முடியாதென தெரிந்திருந்தும், அந்த ஆணிகளிடம் பெண்களுக்கு மதிப்பளியெனச் சொல்ல ஒரு வார்த்தை இன்னும் கிடைக்கவில்லை, இந்தக் கோவலர்களுக்கு. கலாச்சார வறுமையிலும் மொழி வறுமையிலும் சிக்கித் தவித்தத் தமிழர்களின் ‘மன்மத லீலை’ அகராதிக்கு இப்போதுதான் இந்திக் திரையுலகிலிருந்து “நோ மீன்ஸ் நோ”வை நாகரீகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள்.
ஒருத்திக்கு ஒருவனென்று காலந்தோறும் பெண்களுக்கு வாழ்வியல் சட்டத்திட்டங்களையும் பாலுறவு விதிகளையும் வகுத்துக் கொடுத்துவிட்டு, அரசன் முதல் அன்னக்காவடி வரை எந்த ஆணும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய சுயஒழுக்கம் தேவையில்லை என்கிறது சமூகநீதி. சமூகத்தின் பாரபட்சமான குடும்ப உறவு நடைமுறையில் வஞ்சிக்கப்படும் பெண் அல்லது அரிதாகச் சுயத்தேர்வின்பால் எழும் பெண்களின் பாலுறவு நாடலை இச்சமூகம் மிகக் கொடூரத் தண்டனைகள் மூலம் தடுக்க முயல, பெண் முடிவெடுத்துவிட்டால் காற்றாற்று வெள்ளத்துக்குத் தடைப்போட யார் முயன்றாலும், தாய்மை அணையை மீறி வான்பாய்ந்து விடுகிறது காதல். புல்லுக்கு பொசிகிறதா நெல்லுக்குப் பொசிகிறதாவென வருத்தமின்றி.
காதலுக்காக் குழந்தைகளைக் கொன்ற சென்னை அபிராமியை தூக்கிலிடக்கோரிப் போராடி ஓய்ந்த உத்தமர்களுக்கு, ‘கவர்னர் மாளிகை முக்கியஸ்தருக்கு’ அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைக் கடத்த முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் பதவியிலிருப்பது உறுத்துவதில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நடிகை வனிதாவின் அத்துமீறியப் பேச்சைக் கண்டிக்க அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அநாகரிகமாகப் புகுந்து நடத்தைக் கெட்டவளென ஆபாசத்தாக்குதல் நடத்தும் கலாச்சாரக் காவலர்கள், நாளைய முதல்வர் கனவிலிருக்கும் கமல்ஹாசன் அதே தொலைக்காட்சி நிகழ்வில் தவறிழைத்தால் அவர் எத்தனை மனைவியோடு எத்தனை காதலியோடு வாழ்ந்தார் என்பதையெல்லாம் சுட்டி, நடத்தைக் கெட்டவனென தூற்றுவதோ முதல்வராக தகுதியில்லையொன்று போராடுவதோயில்லை.
இதே வனிதா போன்றவர்கள் ஒரு அரசியல்கட்சி தொடங்கி முதல்வராகிறேன் என்று வரமுடியாது. வனிதா என்ன சமூகப் போராளியா அரசியல் தலைவராக என்றால், கமல் மட்டுமில்லை திடீர் தலைவராகி அரசியலுக்கு வரும் நடிகர்களெல்லாம் சமூகப் போராளிகளா.
சீதைக் காலம் தொடங்கி சமூகத்தில் பெண்கள் தங்களின் கற்பைச் சாகும்வரை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் ஏதோ வடிவில் இன்றும் நடைமுறையிலிருப்பது எப்படி சாத்தியமாகிறது. சமூகம் வகுத்துள்ள ஒழுக்க விதிகள் சொல்கின்ற பெண், ஆண் இடையான காதல், காமம், கலவி விதிகள் இருவருக்கும் ஒத்த கேள்விகளை ஒத்த விளக்கங்களை கேட்கவோ பெறவோ அதற்கான ஒத்தத் தண்டனைச் சாட்டையைச் சொடுக்கவும் முயற்சிப்பதில்லை. பிரச்சினையாகும் தனிநபர் உறவுச் சிக்கல்களில் பெரும்பாலும் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகிறாள் என்றால், பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவங்களிலும் பாதிக்கப்படும் பெண்களே குற்றவாளிக்காக்கப்பட்டு, அவமானத்திற்கும் இழிவுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் பெற்றோரும் அவமானத்தில் அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் மறைந்து வாழும் நிலையும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தி நீதிக் கிடைத்துவிடாமல் முடக்க நினைக்கும் அதிகாரிகளும் ஆட்சியாயளர்களும் எவரின் பிரதிநிதிகள்? குற்றவாளி மகன்களை உருவாக்கிய குடும்பங்கள் குற்றவுணர்வோ அவமானமோ அடையவில்லை. தன் மகன் தவறு செய்யவில்லையென்றும் வேறொருத்தன் செய்த தவறுக்குப் பலிகடாவாக்கப்பட்டானென்று ஒரே குரலில் வாதிக்கின்றனர். பெண்கள் தடுக்கி விழுந்தால்கூட, ‘எவனை நினைத்துக் கொண்டு மெதப்பில் நடந்தாளோ’ என்று காரணம் கற்பிக்கக் கற்றுள்ள சமூகம், ஒரு ரேப்பிஸ்ட் குற்றவாளியில்லை, வினையை விலைக்கு வாங்க ஆண்களுடன் பழகிய பெண்களின் தவறுயென்றும் சொல்ல இன்றைய அரசியல் சட்டத்தில் வழியிருக்கிறதா? ஆனால், பெண்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் தற்கால அரசியல் சட்டத்தின் நியாயம், அறத்துக்கு மாறாக மநுவின் சட்டப் புத்தகத்தை சுமந்தபடி, அடிமை அறத்தை வலியுறுத்துகிறது பொதுப்புத்தி.
சமூகம் சொல்கிறது, ஆண் வெளிப்படையாக பல பெண் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வான்; பேசுவான்; எழுதுவான்; அதைத் தடுக்க முடியாது, ஆனால், நாங்கள் பெண்களுக்கு சில ரகசிய சலுகைத் தருகிறோம், பெண்களே உங்கள் உடலுறவு சங்கதிகளை நாலு பேருக்கு தெரியாமல் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் லாபமோ நட்டமோ உனக்குள் வைத்துக்கொள்; உன் ஆடையை நேர்த்தியாக்க வெளித்தெரியாமல் குத்திவைக்கும் ஊக்கு மாதிரி மறைவாக வைத்துக்கொள்; கையில் அள்ளிய நீர்மாதிரி உன் காமத்தை அள்ளித் திரியாதே; தவறியும் வெளியே பகிர்ந்துக்கொள்ளாதேயென எச்சரிக்கிறது. ஆனால், ஆன்ட்ராய்டுகளின் ஆயிரமாயிரம் கண்களிலிருந்து எதும் இங்கு தப்புவதில்லை இப்போது.
ஹேப்பன், டின்ட்டர், ட்ரூலி மேட்லி, ஆக்குபைட், காபி மீட், பாகல் வூ, ஹின்ச், பாடூ, அசில் என்று பிளைண்டு டேட்டிங் ஆப்புகள் நுழைந்துவிட்ட மின்னணுவியல் உலகில் நம் தமிழ்ப் பெண்களும் ஆண்களும் கையடக்கமாகக் கலவியைப் பழகிக்கொண்டிருக்கின்றனர். பெற்றோர் மேட்ரிமோனியல் சைட்டில் தங்கள் வீட்டு ராஜகுமாரிகளுக்கும் ராஜகுமாரன்களுக்கும் வரன் தேடியலைகிறார்கள். நாம் இன்னமும் கற்பு, வெங்காய மூட்டைகளை டன் கணக்கில் பெண்களுக்கென குடும்பத்தில், சமூகத்தில், கலை இலக்கியங்களில், ஊடகத்தில், அரசியலில் இரைத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு உருவாக்கப்பட்ட கற்புச் சமூக விதிகள் அனைத்தும் கற்பனையானவை, அதிகாரச் சார்பானவை. ஆணாதிக்கத்தின் கையிலிருக்கும் அலாவுதீன் விளக்கு அது.
பெண் – ஆண் உறவுக்குள் ஒரு நேர்மை அவசியமில்லையா என்றால், கண்டிப்பாக அவசியம். அந்த எல்லைக் கோட்டை ஒருவர் தாண்டிய பின் அவ்வுறவு அநீதியான உறவாகிவிடுகிறது. அவ்வுறவு வன்முறையாகி குழந்தைகளும் சிக்கிக்கொண்டால் பாதிப்பின் வலியும் சுமையும் பெண்களுக்கு கூடுதல் தண்டனையாகிவிடுகிறது. இச்சமூகம் பெண்களுக்கான சமூகமில்லை என்பதாலும், பெண்களைப் பாதுகாக்கச் சாதகமான ஆதரவான சட்டங்கள் வெளிகள் நிறுவனங்கள் இல்லை என்பதுடன், சொத்துரிமையற்ற அனாதைகள் பெண்கள் என்பதால், வாழ்வியல் நெருக்கடியையும் எதிர்த்து நிற்க முடியாத உளவியல் நெருக்கடியையும் அடைகிறார்கள்.
ஒரு பெண் பல ஆண்களுடன், ஒரு ஆண் பல பெண்களுடன் வாழும் உறவுமுறையை பாலிகாமஸ் (Polygamous) என்கின்றனர். மனித குலத்தினர் மிருகங்களிடமிருந்து வேறுபட்டவர்கள், நாகரீகமடைந்தவர்கள், சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்றும், எனவே ஒருத்திக்கு ஒருவன் வாழ்வியல் அறமே சிறந்தது என்று ஒரு கட்டமைப்பை ஆண்களுக்கு வசதியாக உருவாக்கி வைத்துள்ளனர். ஒருத்திக்கு ஒருவன் வாழ்வியல் உறவான மோனோகமி (Monogamy) வளர்ந்த சமூகத்தின் கலாச்சாராம் என உருவகித்து அதற்கு தொன்மங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள், புனைவுகள், கதைகள், நாட்டார் வழக்காறுகள் உருவாக்கி ஏட்டளவிலும் வாய்மொழியளவிலும் சட்டத்திட்டமாக்கப்பட்டுள்ளன.
பாலிகாமஸை (Polygamous) இருவகையாக பிரிக்கிறார்கள். ஒரு பெண் பல ஆண்களுடன் வாழும் உறவு பாலியன்ட்ரி (Polyandry) என்றும், ஒரு ஆண் பல பெண்களுடன் வாழும் உறவு பாலிகமி (Polygamy) என்றும் அழைக்கின்றனர். மகாபாரத பாண்டவர்களும் சென்ற தலைமுறை வரை கேரள நம்பூதிரி பார்ப்பனர்களும், ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்ற திருமண உறவு (பாலியன்ட்ரி) முறையைக் கடைப்பிடித்து வந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. இலங்கை கண்டி சிங்களர்களிடம் சென்ற நூற்றாண்டு வரை பாலியன்ட்ரி வழக்கமிருந்திருக்கிறது. தென்னிந்தியாவில் இவ்வழக்கம் ஒழிக்கப்பட்டது என்றாலும் மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், உத்திரகண்டிலும், நேபாளம், திபெத் மற்றும் சில கண்டங்களில் உலகளவில் வெகு சிறுபான்மையாக அரிதாகச் சில சமூகத்தில் ஒரு பெண் குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களுடன் சேர்ந்து வாழும் பாலியன்டரி சமூக மரபு வழக்கத்திலிருக்கிறது.
மாட்ரிலீனியல் (Matrilineal) என்னும் தாய்வழிச் சமூக வாழ்வியல் முறையும் பாலியன்ட்ரியும் (Polyandry) வாழ்வியல் முறையும் சமூக அரசியல் பொருளாதார அதிகாரத்தளத்தில் முற்றிலும் வேறு வேறானவை. தாய்வழிச் சமூகத்தில் பெண் நிலமுடையவளாக, சொத்துடையவளாக, அதிகாரம் படைத்தவளாக, முடிவெடுப்பவளாக, திட்டமிடுபவளாக இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்கள், பெண்களை வீழ்த்த அடிமையாக்க உருவாக்கிய முறைகள்தான் பாலியன்ட்ரி, பாலிகமி, மோனோகமி வாழ்க்கை முறை. இவ்வாழ்வியல் முறைகளில் பெண் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். மாட்ரிலீனியல் முறையை ஒழித்து உருவாக்கிய வாழ்வியல் முறைகளில் பெண்களுக்கு நிலவுரிமை, சொத்துரிமை கிடையாது. நிலம், சொத்து முழுவதற்கும் ஆண்களே பரம்பரை வாரிசுகளாகத் தொடர்வார்கள்.
சென்ற தலைமுறை வரை கேரள நாயர் சமூகத்தில் தாய்வழிச் சமூகமுறை (மாட்ரிலீனியல்) வழக்கிலிருந்ததை அறிவோம். தற்போது சீனாவில் யுன்னான், சிச்சுவான் பகுதியில் மோசுவா இனக்குழுக்களிடம் மட்டுமே தாய்வழிச் சமூக வழக்கம் எஞ்சியிருக்கிறது (சில அபார்ஜின் குழுக்களிடம் வழக்கத்தில் இருக்கலாம்). மறைமுகமாக பாலியன்ட்ரி வாழ்வியலை தங்களின் குடும்ப நலன், நன்மை கருதி ஆணாதிக்கச் சமூகம் அங்கீகரிக்கும், நடைமுறையில் கடைப்பிடிக்கும் வழியை, மநு சாஸ்திரமும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், மாட்ரிலீனியல் தாய்வழி வாழ்வியல் முறையைக் கனவில்கூட அனுமதிக்காதது இச்சமூகம். அனுமதித்தால் தன் சவக்குழியை தானே வெட்டிக் கொள்வதற்கு சமமென்று ஆணாதிக்கம் அறிந்து வைத்திருக்கிறது.
‘நிலத்தை, சொத்தைச் சிதையாமல் பாதுகாத்து, சமூகத்தில் அதிகாரத்தை மதிப்பை உறுதிப்படுத்தவும், பங்காளிகள் பிரிந்து, சொத்துக் கரைந்து தன் சந்ததிகள் பசியால் மடியக் கூடாது என்பதற்காகவும், பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், ஒரு குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பிகள் அனைவருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இந்தியாவுக்குள் பஞ்சம் பிழைக்கக் கால்நடைகளுடன் கைபர்போலன் கணவாய் வழி நுழைந்த ஆரிய பார்ப்பன நாடோடிகளிடமிருந்திருக்கிறது. இதுவே பாலியட்ன்ரி வாழ்வியல் முறை. இவ்வழக்கத்தைச் சில சத்திரிய குழுக்களும் பிறகு சில பழங்குடி சமூகங்களும் பின்பற்றத் தொடங்கின’ என்கின்றனர் ஆய்வாளர்கள். ‘தாங்கள் சுத்தமான ஆரிய ரத்தமுடைய பாம்ரேனியன் பீரிடு நாய் போல் உயர்ந்த சாதி’ என்று சமீபத்தில் பார்ப்பன மாநாட்டில் பேசிய ஹைப்ரீடு பாம்ரேனியன் வம்சாவழிகள் ஒரு பெண்ணை மணந்து வம்சத்தை வளர்த்த அண்ணன் தம்பிகளின் க்ராஸ் பிரீடுகள்தாம்.
ஒருவனுக்கு ஒருத்தி மோனோகமி வழக்கத்தின் உதாரணமாகச் சீதையும், ஐந்து சகோதரர்களுக்கு மனைவியாகும் பாலியன்ட்ரி வழக்கத்தின் உதாரணமாகத் துரௌபதையும், ஆண் பல பெண்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் மனைவி பதிவிரதா கடமை தவறக் கூடாதென்னும் பாலிகமி வழக்கத்தின் உதாரணமாகக் கண்ணகியும், பெண்களின் உதாரண வகைமையாக ஆணாதிக்கச் சமூகத்தால் உலவவிடப்பட்டிருக்கிறது. பெண்கள் தனித்துவமாக, போற்றத்தக்கவளாளப் பெயரெடுக்க அல்லது ‘புனித’ அடையாளமடைய, அவள் காப்பிய மணிமேகலையாகவோ அல்லது நவீன அன்னை தெரசாவாகவோ இருக்க வேண்டும். ஆண் பிரதிகளால் உருவாக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, பெண் உடல்களின் மீது ஆண் விரும்பும் சமூக மதிப்பீடுகளைப் புகுத்தி உதாரண ‘பெண்மை’ அடையாளங்களால் முலாம் பூசி, சமூகத்தால் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டு, அவை சமூக பொது உளவியலாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. சீதையையும் கண்ணகியையும் கொண்டாடும் அளவுக்கு பொது வழக்கில் துரௌபதையைக் கொண்டாடவில்லை என்றாலும், துரௌபதையும் ஆணாதிக்கப் பெண்குறியீட்டின் அடையாளம் என்பதால் சிறுதெய்வ வழிபாட்டுமுறைக்குள் வைத்து அங்கீகரித்திருக்கிறார்கள்.
சரித்திரத்தின் இம்மூன்று பெண்களும் ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் உடல்கள். ஆகவே, தொடர்ந்து ஆணாதிக்கச் சமூகம் எல்லாப் பெண்களையும் இவ்வகைமைக்குள் அடைக்கத் துடிக்கிறது. சீதை இராமனின் உடமை என்பதால்தான் தீக்குளிக்க கட்டளையிடுகிறான். சீதா இராமாயணங்கள் ஆண்பிரதியின் எதிர்பிரதியாகி இராமனின் புனிதப் பிம்பத்தைச் சிதைத்து இகழ்கின்றன என்றாலும், அவ்விளிம்புநிலைச் சொல்லாடலால் ஆணாதிக்க அதிகார மையத்தின் ஆன்மாவைத் துளைக்க முடியவில்லை. துரௌபதை தனது உடமை என்பதால்தான் தர்மன் சூதாட்டத்தில் ஈடாக வைத்துத் தோற்கிறான். கண்ணகி தனது உடமை, அவளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் இல்லை என்பதால்தான் மாதவியோடு சேர்வது மட்டுமல்லாமல், மாதவியும் அவனது உடமை என்பதால் அவளை சந்தேகித்து தண்டிக்க மாதவியை குழந்தையுடன் விட்டுவிட்டுப் பிரிகிறான் கோவலன். ஆனால், அடிமை கண்ணகியால் கோவலனை என்றுமே தண்டிக்க முடியவில்லை.
பெண்களின் பாலியல் செயல்பாட்டை வெளிப்படையாக பெண்கள் பேச அனுமதிக்காத சமூகத்தில், பெண்கள் பாலியல் சுதந்திரமில்லாமல் இருக்கிறார்கள் என்றாலும், திருமண உறவுக்குள் தான் வஞ்சிக்கப்பட்டதாகத் துரோக உறவுக்குள் சிக்கிவிட்டதாக கருதும் பெண், தன் பாலியல் தேவையை துணிந்து ரகசியமாக உருவாக்கிக் கொள்கிறாள். ‘தாத்திரிக் குட்டிக்கதையும்’ கமலாதாஸின் ‘என்கதையும்’ தற்கால உதாரணங்கள். கிராமத்தில் சதாரணமாக இவன் அவள் தொடுப்பு என்று இயல்பாகச் சொல்லிக் கடந்துவிடுவார்கள். திருமண உறவுக்கு வெளியே ஏற்படுத்திக்கொள்ளும் ஆணுறவை, தந்திரமாக கையாளத் தெரியாத, சாமர்த்தியமில்லாத விவரமற்றப் பெண்களே பிரச்சினையில் சிக்கி இங்கு பலியாக நேர்கிறது. பெண்களின் ஒட்டு மொத்த அரசியலையும் பேசாமல் வெற்றுப் பாலியல் சுதந்திர வேட்கை என்பது சுவருக்கு வெளியே துளிர்விடும் ஒரு கிளை போன்றது. சுவற்றைத் தகர்க்க சுவரிலேயே வேர்பிடிக்க வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் குடும்பச் சமூக வன்முறையால் மூன்றில் ஒருபெண் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக மனிதவுரிமை ஆணையம் அறிக்கை தருகிறது. நிலவுரிமை, சொத்துரிமை, அதிகாரம் மறுக்கப்பட்ட பெண்கள் தாய்வழிச் சமூகமுறைக்குத் திரும்பிச் சென்று தங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்கும் வழி தற்போதில்லை. முதல்படியாக, குடும்பமென்னும் மைக்ரோ நிறுவனத்தில், தமிழ் மரபாக கடைப்படிக்கப்படும் குடும்ப அமைப்பு முறையில், சிறு மாற்றத்தை உட்புகுத்தி குடும்ப வன்முறைகளை ஒருபாதியளவுக் குறைக்க முடியும்.
பெண் மணமுடித்து ஆண் வீட்டுக்கு செல்லும் வழக்கத்தை ஒழித்து, ஆண் பெண் வீட்டுக்கு வரும் மரபை உருவாக்கலாம். இதில் பெண் உடல் மீது ஆணுக்கும் அவன் குடும்பத்துக்குமிருக்கும் எல்லையற்ற அதிகாரம் குறைக்கப்படும். அவன் வீடு போல இங்கு பெண்ணின் வீட்டில் ஆண் தனது வரைமுறையற்ற அதிகாரத்தைச் செலுத்த முடியாது. பெண்களை ஆண்களால் அநாதையாக்கவோ வீட்டைவிட்டுத் துரத்தவோ முடியாது. பெண்ணிடம் பிரச்சினை செய்தால், பொறுப்பற்று நடந்தால், ஆண்தான் வெளியேற்றப்படுவான். ஆண் தவறு செய்தால் அவன் குடும்பத்தைவிட்டு வெளியேற்றப்படுவான் என்ற தன்னுணர்வே அவனை வழிநடத்தும் பெண்ணுக்கு மதிப்பளிக்கக் கற்பிக்கும்.
‘என் தேவதைக்காக உலகத்தையே விலைக்கு வாங்குவேன், கட்டளையிட்டால் வானையே வில்லாய் வளைப்பேன், கேட்டால் உயிரையே கொடுப்பேன்’ என்ற வசனமெல்லாம் பேசி ஏமாற்றியது போதும். கொஞ்சம் உங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் பார்க்கலாம், உங்களின் உயிருக்கு உயிரானவளுக்காக.
மாலதி மைத்ரி <anangufeministpublication@gmail.com>