தமிழறிஞர் ஃபிரான்ஸுவா குரோ காலமானார்

 தமிழறிஞர் ஃபிரான்ஸுவா குரோ காலமானார்

தமிழறிஞர் ஃப்ரான்ஸுவா குரோ, பிரான்சு நாட்டில் இலியோன் நகரில் 17.12.1933 இல் பிறந்தவர். பட்டப் படிப்பில் செவ்வியல் கல்வி, தத்துவம், வரலாறு, மானுடவியல் பயின்றார். பாரீஸில், பாரீஸ் பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

ஒப்பியல் இலக்கியம் என்ற வகையில் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருத இலக்கியங்களைப் பயின்றவர். அவ்வகையில் தமிழ் இலக்கியங்களும் இவருக்கு அறிமுகம் ஆயின. பாரிசில் உள்ள இனால்கோ (Inalco) நிறுவனத்தில் தமிழ் கற்றார்.

குரோ, 1960களின் ஆரம்பத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். 1963இல் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு மாணவராக இணைந்தார். இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான ஃப்ரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளை ஃப்ரெஞ்ச் மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.

காரைக்காலம்மையார் இயற்றிய இலக்கியங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார் (1982). இந்த நூலில் காரைக்காலம்மையார் பற்றிய தெளிவான வரலாறு பிரெஞ்சுமொழியில் உள்ளது. காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவாலங் காட்டுத்திருப்பதிகம், சேக்கிழார் பாடிய காரைக்காலம்மையார் புராணம் (66 பாடல்கள்) பிரஞ்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வருடத்தில் சிறு பகுதியைப் பாண்டிச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டுவந்த திரு குரோ ஃப்ரான்ஸின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார். அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் ஃப்ரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்த குரோ தன்னிடமிருந்த சுமார் 10 ஆயிரம் நூல்களை கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கிவிட்டார்.

“திரு குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்துக்கு மட்டுமின்றி நவீனத் தமிழிலக்கியத்துக்கும் பேரிழப்பாகும்” என்று எழுத்தாளர் ரவிக்குமார் தன் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குரோ பற்றி முனைவர் மு. இளங்கோவன், “தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி சார்ந்த அறிஞர்கள் ஒவ்வொரு வகையில் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் பிரஞ்சுமொழி அறிஞர் பிரான்சுவா குரோ தமிழ் மொழிக்குக் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பினை வழங்கியுள்ளார். தமிழ் இலக்கியங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்ததுடன், பிரெஞ்சு மாணவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்து, பலரைத் தமிழ் அறிந்த அறிஞர்களாக மாற்றியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்பாளராக விளங்கியவர். உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களால் போற்றப்படுபவராக விளங்குபவர்.

தமிழ் அறிஞர்களால் பெரும்பாலும் நுழைவதற்கு அருமைப்பாடுடையதாக இருந்த பரிபாடல் நூலினைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துப் பிரெஞ்சுமொழி அறிந்த மக்கள் படித்துப் பயன்பெறும்வண்ணம் செய்தார். இந்த நூலினைப் பல வகையில் கற்ற குரோ பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் உள்ளிட்ட அறிஞர்களைப் பாடச்செய்து அந்த நூலில் பொதிந்துள்ள இசையுண்மைகளை அறிந்ததாக அறியமுடிகின்றது. இந்த நூல் 1968இல் வெளிவந்தது.

தமிழ் மக்களின் நம்பிக்கை,பண்பாடு,பழக்கவழக்கம் பற்றி நன்கு அறிந்துவைத்து குரோ அவை தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டவர். பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரைக்கால் ஊர் பற்றியும் அதன் சிறப்புகள் குறித்தும் பிரெஞ்சுமொழியில் குரோ எழுதியுள்ளார். அதுபோல் குடவோலை முறை பற்றிய விரிவான செய்திகளைத் தரும் உத்திரமேரூர் பற்றிய வரலாற்றை மிகச்சிறப்பாக குரோ பிரஞ்சுமொழியில் எழுதியுள்ளார் (1970).

தி.வே.கோபாலையருடன் இணைந்து தேவாரம் (பண்முறையில் அமைந்த பதிப்பு) வெளியிட்டுள்ளார். இதில் அப்பர், சுந்தரர் பாடிய பாடல்கள் பண்முறையில் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இவர் முயற்சியால் புதுவையிலும் பாரிசிலும் தமிழாய்வுகள் வளம்பெற்று வருகின்றன எனில் மிகையன்று” என்கிறார்.

Amrutha

Related post