தமிழ் சினிமாவில் மனநோயாளிகள்

 தமிழ் சினிமாவில் மனநோயாளிகள்

மதனகாமராஜன்

சஃபி

டித்தட்டு மக்கள் வெகுவாக விரும்பி வாசித்த பெரிய எழுத்து கதைப் புத்தகங்களைப் பற்றி, மிக அருமையான ஆய்வு நூலைத் திரு. ஆ.இரா. வேங்கடாசலபதி ‘முச்சந்தி இலக்கியம்’ (2004) என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். 19ஆம் நூற்றாண்டு பின்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மக்களிடையே வாய்மொழி மரபிலிருந்து கிளைத்த கதைகள் அச்சு வாகனம் ஏறியதை ஏராளமான தரவுகளுடன் அவர் அப்புத்தகத்தில் நிறுவியிருக்கிறார்.

அந்த வரிசையில் ‘நல்ல தங்காள் கதை’, ‘ராசா தேசிங்கு கதை’, ‘மதுரைவீரன் கதை’, ‘காத்தவராயன் கதை’, ‘ஆரவல்லி சூரவல்லி கதை’, ‘குலேபகாவலி கதை’ போன்றவை அடங்கும். குறிப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் கதைகள் அச்சுப் பிரதியாக மட்டும் நின்றுவிடாமல், தமிழில் திரைப்படங்களாகவும் ஆகியிருக்கின்றன. எழுத்துப் பிரதிகள் திரைப்படமாக உருப்பெறும் போது, அடைந்த மாற்றங்கள் என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விஷயமாகும்.

அந்தக் கதைவரிசையில், பட்டி விக்கிரமாதித்யன் கதைகளும் மதன காமராஜன் கதைகளும் அடங்கும். அக்கதைகளின் மூலம் எது? அதில் எது மூத்தது? என்பது பற்றி தமிழில் ஆய்வுகள் இருப்பதாகத் தெரியவில்லை. விக்கிரமாதித்யன் கதைகளில் உள்ள ‘காந்த ரூபன் காந்த ரூபி’ என்ற கதை, ஒரு விசேஷமான கதை ஆகும்.

ஒரு ராணி சதியினால், பெற்ற சமயத்திலேயே தனது குழந்தையை விட்டுப் பிரிந்து விடுகிறாள். பிறந்த சமயத்திலேயே, ஒரு ராசகுமாரனும் அவனைப் பெற்ற தாயும் பிரிந்துவிடுவார்கள். விதியின் போக்கில், வேறொரு அரசனிடம் வளர்ந்து ஆளான அந்த ராசகுமாரன், தனது தாய் என்று தெரியாமல் ஒரு தாசி என்று நினைத்து இச்சை கொண்டுவிடுவான்.

இக்கதையானது, மதனகாமராஜன் பன்னிரண்டு கதைகளில் ஒருகதையாக இடம் பெற்றிருக்கிறது. கதையின் குணதோஷத்தால் என்னவோ, அந்தக் கதை பி.யூ சின்னப்பா நடித்த ‘மங்ககையர்கரசி’ (1949) என்ற படமாகவும் கவிஞர் சுரதா வசனத்தில் வெளிவந்திருக்கிறது.

அதைவிட ஆச்சரியமான ஆச்சரியம், இதே கதையை, நான் 1999இல் போடிமெட்டு குரங்கணி மலைப் பகுதிக்கு மேலே வசிக்கும் முதுவார் இன மக்களோடு களப்பணி புரியும்போது, கந்தருவன் கந்தருவி என்ற பெயரில் சிற்சில மாற்றங்களோடு ஒரு முதுவார் பெண்மணி சொல்லக் காதால் கேட்டிருக்கிறேன். இந்த முதுவார்கள், கண்ணகி மதுரையை எரித்த சமயத்தில், அங்கிருந்து வந்து மலையில் குடியேறியத் தங்கிவிட்டதாக தங்கள் இடப்பெயர்வுக்கான காரணத்தைச் சொல்லுவார்கள்.

மதனகாமராஜன் கதைகளுக்கும் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளும், சில அடிப்படையான பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இரு கதை அமைப்புகளும், கதைகளுக்கு ஒரு உளவியல் ரீதியான சிகிச்சை மதிப்பு உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டவை. ஆயிரத்தொரு இரவு அரபுக் கதைகளில், பெண் வெறுப்புகொண்ட ஓர் அரசன், நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணாக திருமண முடித்து, இரவு கழிந்தவுடன், மறுநாள் விடிகாலை அப்பெண்களைக் கொன்றொழித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட அரசனை மணமுடித்த மந்திரி குமாரி பிற பெண்களுக்கு நேர்ந்ததைப் போலவே, தனக்கும் நேரப்போகும் மரணத்தை தள்ளிப்போடுவதற்காக அந்த அரசனுக்கு ஒவ்வொரு இரவும் கதை சொல்ல ஆரம்பிப்பாள். அவள் ஒரு இரவுக்கு ஒரு கதையாக கதைகளைச் சொல்லி முடிப்பதில்லை. சொல்லும் கதையைப் பாதியிலேயே நிறுத்திவிடுவாள். மீதிக்கதையைக் கேட்டுமுடிக்கும் ஆவலில் அவளது கணவனான அரசன் ஷராயர், அவளைக் கதைசொல்ல அனுமதித்துக்கொண்டே போவான். அப்படியே கதைகள் நீளும்.

அதுபோலவே, மதனகாமராஜன் கதைகளில், அசந்தர்ப்பவசமாக, இளவரசனுக்குச் சேர வேண்டிய அக்கா – தங்கைகளை, இளவரசனின் உயிர் நண்பனான மந்திரிகுமாரன் மணமுடித்துக் கொள்வான். மந்திரிகுமாரன் ஒவ்வொரு நாள் இரவும், ஒரு கதைசொல்லி, சகோதரிகளின் காதல் வேகத்தைத் தணிப்பான். அத்தோடு விட்டுவிடாமல், கதையின் இறுதியில் “நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்தி நாலு கலைக்கியானம், மனுவிக்கியானத்தில் தேர்ந்த ஒரு ராசகுமாரனே, அவர்களுக்குத் தகுதியான ஆள்” என்று சொல்லி தன்னை விலக்கிக்கொள்வான்.

மதனகாமராஜன் கதைகளும் சினிமாவாக ஆகியிருக்கிறது. அப்படத்தில் தீவிரமான மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரம் படத்தின் கிளைக்கதையாக விரிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1931ஆம் ஆண்டு பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளிவந்து அடுத்த பத்து வருடத்தில், 1941இல், மதனகாமராஜன் கதையை ஜெமினி பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். கதை, வசனத்தை மணிக்கொடி பி.எஸ். ராமையா எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து, தமிழ் சினிமாவில் ஒரு பைத்தியக்கார கதாபாத்திரம் விரிவாக சித்தரிக்கப்பட்டது இந்தப் படத்தில்தான் எனக் கருதுகிறேன்.

நாற்பதுகளுக்கு முன்னால் வந்த திரைப்படங்களிலும், பைத்தியக்கார கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கக் கூடும். முப்பதுகளில் வந்த திரைப்படங்களின் பிரதிகள் கிடைப்பது அரிது. ஆனால், இன்றும் மதன காமராஜன் திரைப்படமானது கிடைக்கிறது. பார்க்க வாய்ப்பிருக்கிறது.

சஃபி <safipsy69@gmail.com>

 

 

Amrutha

Related post