இந்தியா கொரோனா பெருந்தொற்றை எப்படி வெல்ல முடியும்?

 இந்தியா கொரோனா பெருந்தொற்றை எப்படி வெல்ல முடியும்?

ஷாஹித் ஜமீல்

 

டந்த செவ்வாய்க்கிழமை (11-05-2021) வரை 2.3 கோடி இந்தியர்களுக்கு கோவிட் பெருந்தொற்றுக் கண்டறியப்பட்டிருக்கிறது, 2 லட்சத்து 54 ஆயிரம் இந்தியர்கள் பெருந்தொற்றால் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான புள்ளி விவரங்கள் மிக அதிகமாக இருக்கக்கூடும். கடந்த வாரம் முழுவதும் ஒரு நாளில் சராசரியாக 3 லட்சத்து 80 ஆயிரம் நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது.

ஒரு நச்சுயிர்க்கிருமி மருத்துவராக கடந்த ஓராண்டாகவே இந்தப் பெருந்தொற்றுக் காலத்தையும் தடுப்பூசி கண்டுபிடிப்பையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன், ஜெனோமிக்ஸ் தொடர்பான இந்திய SARS-CoV2 கூட்டமைப்பிற்கான அறிவியல் ஆலோசனைக் குழுவிற்கும் நான் தலைமை தாங்குகிறேன். இது கடந்த ஜனவரியில் தொற்று மாறுபாடுகளின் தோற்றம் மற்றும் புழக்கத்தைக் கண்காணிக்க மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்தும் தேசிய ஆய்வகங்களின் குழுவாக இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைப்பு.

எனது அவதானிப்பு என்னவென்றால், கோவிட் பெருந்தொற்று வகைகள் தீவிரமாகப் பரவி வருகின்றன. எதிர்கால அலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால், இந்தியா ஒருநாளைக்கு 20 லட்சம் தடுப்பூசிகளைப் போட வேண்டும். புதிய ஆண்டில் மிக வேகமாகப் பரவும், தீவிரமாக தொற்றிக்கொள்ளும் கிருமியாக இது மாறிப்போனது. முன்பே இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குலைக்கும் அளவிலும் இது மாற்றமடைந்தது.

இரண்டாவது அலைக்குக் காரணமான இரண்டு தொற்று வகைகள், ஒன்று பி.1.617, மற்றொன்று B.1.1.7 ஆகும். இதில் பி1.617 வகையானது டிசம்பரில் கண்டறியப்பட்டது, பெருந்திரளாகக் கூடிய பல்வேறு நிகழ்வுகளால் இதன் பரவல் துவங்கியது, அடுத்து பி.1.1.7 முதன்முதலில் பிரிட்டனில் கண்டறியப்பட்டு பன்னாட்டுப் பயணிகளால் இந்தியாவுக்குள் நுழைந்தது. முதலாவது வகைதான் இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

கடந்த திங்களன்று உலக சுகாதார அமைப்பு B.1.617 வகையை கவலைக்குரியதாக அறிவித்தது. மனித உடலில் பெறப்பட்ட நோய்த் தொற்று மாதிரிகளை வெள்ளெலிகளில் சோதித்த போது, பி.1.617 தொற்றானது அதன் மூல கிருமியான பி.1 கிருமியுடன் ஒப்பிடும்போது அதிக அளவு பரவலையும் அதிக நுரையீரல் புண்களையும் உருவாக்கியது. உலக அளவிலான புள்ளிவிவரங்கள் பி.1.617 வகையானது மூன்று துணை வகைகளை உருவாக்கி இருப்பதையும் நமக்குச் சொல்கிறது.

இந்திய – இங்கிலாந்து விஞ்ஞானிகள் டெல்லி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிடம் புதிய வகையான பி.1.617.2-ஐக் கண்டறிந்திருக்கிறார்கள். அமெரிக்க ஆய்வாளர்கள் குணமடைந்த கோவிட் 19 நோயாளிகளிடம் இருந்து பி.1.617.1 வகைக் கிருமிகளை மட்டுப்படுத்த வேண்டும், குறிப்பாக PFizer மற்றும் Moderna தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கவனத்தோடு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்திய ஆய்வாளர்களும் இதே போல ஒரு அறிக்கையை ஏப்ரல் 23ஆம் தேதி கண்டறிந்து வழங்கி இருக்கிறார்கள். இந்த வகை நோயாளிகள் நாடு முழுவதும் நோய்த்தொற்றைப் பரப்பும் காரணியாக இருக்க வாய்ப்புள்ளதைக் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். இரண்டாம் அலை அதன் உச்ச பட்ச எல்லையை அடையும் போது இது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை நம்மால் அறிய முடியும் என்கிறார்கள் பொது சுகாதார அதிகாரிகள்.

மே முதல் வாரத்தில் 3.80 லட்சம் சராசரி நோய்த்தொற்றை இந்திய அரசின் குழு சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், இன்னொரு மாதிரியை முன்வைக்கும் இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று மே மத்தியில் ஏறத்தாழ 5 லட்சம் முதல் 6 லட்சம் நோய்த்தொற்று பரவல் கண்டறியப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். COV-IND-19 என்கிற மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு அமைப்பு மே மத்தியில் இந்தியாவில் 8 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரைக்கும் நோய்த்தொற்று கண்டறியப்படலாம் என்கிறது.

எல்லா மாதிரி சோதனைகளும் இந்தியாவில் இரண்டாம் அலையானது ஜூலை முதல் ஆகஸ்ட் அவருக்கும் நீடிக்கும் என்றே குறிப்பிடுகின்றன. ஏறத்தாழ 3.5 கோடி உறுதி செய்யப்பட்ட நோய்த்தொற்றும், 50 கோடி நோய்த்தொற்று பாதிப்பும் இருக்கலாம் என்று சொல்கின்றன. அதாவது இன்னும் கோடிக்கணக்கில் இந்த பாதிப்பு பரவக்கூடும். மூன்றாம் அலையின் பாதிப்பு தடுப்பூசி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கும். புதிய வகை நோய்த்தொற்று பரவும் வேகமானது பெருங்கூட்டம் கூடுவதைப் பொறுத்து மாறுபடலாம் என்கிறது புள்ளிவிவரங்கள். இதில் மிகப்பெரிய மத விழாக்களும் திருமணங்களும் உள்ளடங்கும்.

எனக்கு கவலை அளிப்பது என்னவென்றால், உச்ச கட்ட பாதிப்புகளைக் கூட நாம் துல்லியமாக அளவிட முடியாமல் போகலாம். நோய்த்தொற்று வேகத்தை விட சோதனை செய்யும் வேகம் மிக மெதுவான விகிதத்தில் அதிகரித்து வருவதாக தரவுகள் காட்டுகிறது. ஒருவேளை நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்தது போலத் தோன்றலாம், ஆனால், இது நாம் சோதனை செய்யும் வேகத்தை அதிகரிக்கவில்லை என்பதையே நமக்கு காட்டும்.

தேசிய அளவில் நோய்த்தொற்றுக் கண்டறியும் விகிதமானது 22 %; ஆனால், பல மாநிலங்களில் நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது, கோவாவில் 46.3 % ஆகவும், கும்பமேளா நடந்த உத்தரகாண்ட்டில் 36.5 % ஆகவும் இருக்கிறது. சுகாதாரம் சார்ந்த பொருளாதார அறிஞர் ரிஜு எம் ஜான் சொல்வதைப்போல உச்சகட்டமாக மே மாத மத்தியில் 5 லட்சம் நோய்த்தொற்று கண்டறியப்படலாம். தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ள பொது சுகாதார கருவிகளில் ஒன்றாக இருக்கின்றன. மேலும் வேகத்துடன் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி இயக்கம் கொரோனா கிருமியின் பரவலைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஜனவரி மத்தியில் தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கம் 30 கோடி இந்தியர்களுக்கு பல கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்யும். சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று ஒவ்வொரு கட்டமாக இது சாத்தியமாகும். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி விநியோகம் செய்யும் நாடு என்ற வகையில் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் கிடைக்கலாம். குறிப்பாக இரண்டு இந்திய நிறுவனங்களான சீரம் இன்ஸ்டிடியூட்டும் பாரத் பயோ டெக்கும் இந்த தடுப்பூசி இயக்கத்தை முன்னின்று நடத்தும் தகுதியுடையவை.

ஆனால், மார்ச் நடுப்பகுதியில் 1.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இது இந்தியாவின் மக்கள்தொகையில் வெறும் 1 சதவீதத்தை உள்ளடக்கியது. இந்த தடுப்பூசி இயக்கமானது இந்திய ஆட்சியாளர்களால் நோயை வென்று விட்டதாகக் காட்டிய போலியான தோற்றத்தால் தொய்வடைந்தது. அஸ்ட்ரா செனகா நிறுவனம் இந்தத் தடுப்பூசி இயக்கத்தில் இன்னொரு மிக முக்கியமான பங்கை வகிக்கக்கூடும்.

இரண்டாவது அலை இந்தியாவில் பரவிய போது, மக்கள்தொகையில் சுமார் 2.4 சதவீதமான 3.3 கோடி மக்கள் மட்டுமே ஒரு தடுப்பூசி டோஸைப் பெற்றனர், 70 லட்சம் மக்கள் இரண்டு டோஸையும் பெற்றனர்.

மே 1 ஆம் தேதி நாட்டின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் செயல்படத் துவங்கியதாக அரசு அறிவித்தாலும் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் வேகமானது தடைபட்டது.

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியானது ஜூலை மாதவாக்கில் அதிகரிக்கலாம். ஆனால், அந்த வேகம் இந்தியாவில் நோய்த்தொற்றைக் குறைக்கவோ இறப்புகளைக் கட்டுப்படுத்தவோ உதவாது. குறிப்பாக தொற்றுப் பரிமாற்ற விகிதம் இப்போது அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, கோவிட்-19 தடுப்பூசிகள் நோயைத் தணிக்கவே பயன்படுகிறது. அவை தொற்றுநோயை முழுமையாகத் தடுக்காது. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது.

சோதனைகளை அதிகரிப்பது மற்றும் நோய்த்தொற்றைக் கண்டறிந்த நபர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் பரவலைக் குறைப்பதே உடனடித் தேவை. பல இந்திய மாநிலங்கள் முழு ஊரடங்கு நிலையை அமல்படுத்தி உள்ளன. இது ஓரளவு நோய்த்தொற்றின் வேகத்தைக் குறைக்கக்கூடும். அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோக முறையை முறைப்படுத்துவது உயிர்களைப் பாதுகாக்க உதவலாம்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, தற்காலிக முகாம்களை உருவாக்குவது, ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பணியமர்த்துவது, விநியோக முறைகளை துரிதப்படுத்துவது, உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வது போன்றவை போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டியவை. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை குறைக்க இந்தியா அனுமதிக்கக் கூடாது. குறைந்தது 75 லட்சத்தில் இருந்து 1 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கும் வேகம் இருக்க வேண்டும்.

இதற்கு தடுப்பூசி விநியோகமும், வழங்கும் இடங்களும் இரட்டிப்பாக மாற வேண்டும். மேலும் பல தேவைகள் நமக்கு இருக்கிறது. இந்தியா முழுவதும் இப்போது வெறும் 50000 தடுப்பூசி மையங்கள் மட்டுமே செயல்படுகிறது; 3 % மட்டுமே தனியார் தடுப்பூசி மையங்கள் இயங்கும் சூழலில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும், தடுப்பூசி வழங்கும் மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதற்காக இந்திய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசின் கொள்கைகள் இவர்களுக்கு சாதகமாக இல்லை. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி 800 இந்திய விஞ்ஞானிகள் இந்தியப் பிரதமரிடம் தங்களுக்கு முறையான புள்ளிவிவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருந்தொற்று குறித்த ஆய்வுக்காகவும் சிறந்த தீர்வுகளை வழங்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

நம்மிடம் இருக்கும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுப்பது இப்போது இன்னொரு அவசர நிலையாக மாறி இருக்கிறது. நிலைமை நம்முடைய கைகளை மீறிச் சென்று கொண்டிருக்கும் போது நாம் இப்போது சந்திக்கும் மனித உயிர்களின் விலை ஒரு நிரந்தரமான வடுவை உருவாக்கக்கூடும்” என்று ஷாஹித் ஜமீல் எழுதியுள்ளார்.

நன்றி: The Newyork Times

*****

ஷாஹித் ஜமீல், Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia (INSACOG) ஆலோசனைக் குழு முன்னாள் தலைவர். நச்சுயிர்க்கிருமி வல்லுநர், அசோகா பல்கலைக்கழக உயிர் அறிவியல் பிரிவு இயக்குனர்.

Amrutha

Related post