தண்ணீர் யாருக்குச்சொந்தம்?

 தண்ணீர் யாருக்குச்சொந்தம்?

சேகர் கபூர்
தமிழில்: ஜனகப்ரியா

 

ரு காலத்தில் தண்ணீரை வழிபட்டோம்; ஒரு காலத்தில் தண்ணீர் சமுதாயம் முழுமைக்குமான வளங்களில் ஒன்றாக இருந்தது; பொதுக்கிணறுகளிலிருந்து மக்கள் தண்ணீரைப் பெற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு நகரங்கள் குழாய்களின் வழியாகத் தண்ணீரைப் பெறத்தொடங்கின. கால்வாயில் ஓடினாலும் குழாய்களின் வழி வந்தாலும் தண்ணீர் நமக்குச் சொந்தமானதுதானே என ஏற்றுக்கொண்டோம். ஆனால், இப்போதிலிருந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்வரும் தலைமுறையினர் நம்மைப் பார்த்துச் சொல்லப் போகிறார்கள், அதை சரித்திரம் பார்க்கப்போகிறது:

“அவர்கள் தண்ணீரை வழிபட மறந்து விட்டார்கள். அடிப்படையாக சூழலியல் அமைப்பையே மாற்றிவிட்டார்கள். பூமியிலுள்ள மதிப்பு வாய்ந்த வளங்களின் அமைப்பையும் சூழலின் ஒத்திசைவினையும் சீர்குலைத்து விட்டார்கள்; தண்ணீர் தாகம் என்பது அடிப்படையான அச்சமாக மாறி அது மக்களின் பெரும்பகுதியினரைப் புலம்பெயர்ந்து செல்லவைக்கும்.’’

என்னுடைய பதின் பருவத்தில் பஞ்சாபிலிருந்த என்னுடைய மாமாவின் வேளாண் பண்ணைக்குப் போவேன். அங்கே எனக்குப் பிடித்தமான இடம் குழாய்க் கிணறு. ஒரு கோடைக்கால மதியத்தில் கிணற்றிலிருந்து குழாய் வழி பீரிட்டு விழும் தண்ணீருக்கடியில் உட்கார்ந்து கொண்டு, நான் போதுமென்று நினைக்கிறவரை நீண்டநேரம் குளித்துக் கொண்டிருப்பேன்.

இளம்பிராயத்தில் டெல்லியில் மேற்கு நிஜாமுதின் பகுதியிலிருந்த எங்கள் தாத்தாவின் காய்கறித் தோட்டத்திற்குப் போவேன்; தோட்டத்தின் நடுவில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு கைப்பம்பு; ஒரே தடவை அமுக்கினாலே போதும் தண்ணீர் ‘திபுதிபு’ வென வெளிவரும். நானும் என்னுடைய சகோதரியும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவராக நீரைப் பீய்ச்சியடித்து விளையாடி முழுமையாக நனைந்து போவோம். எங்கள் தாத்தா வந்து விரட்டியடிக்கிற வரை விளையாட்டுத்தான். அவர் நேர்த்தியாகப் பாரமரித்து வரும் தோட்டம் எங்களால் சேதப்பட்டுவிடாமல் தடுக்க முயல்வார்.

கைப்பம்பு என்பது இன்று அருங்காட்சியகத்தில் வைக்கிற ஒரு பொருளாக ஆகிவிடும் போலிருக்கிறது. பண்ணையெல்லாம் போய்விட்டது. புதியதாக முளைத்திருக்கும் தொழிற்சாலைகளோடு இந்தப் பம்புகளால் நீண்டகாலத்திற்குப் போட்டி போடமுடியாது. ஆனால், என்னுடைய மாமா பணம் எதனையும் இழந்துவிடவில்லை. தன்னுடைய நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டார். சமீபத்தில் நான் அங்கு சென்றிருந்தேன். அருகாமையில் தாறுமாறாக வளர்ந்து அழுக்கேறிய ஒரு நகரத்தின் ஆதரவில் தொழிற்சாலை ஒன்று காற்றில் பெரிய அளவில் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் குழாய்த் தண்ணீரில் குளித்தபடி பார்த்தபோது பார்வையின் எல்லைவரை பசுமையாகத் தெரிந்த விளைநிலங்கள், இருந்ததற்கான அடையாளமே இப்போது தெரியவில்லை.

தண்ணீர் இப்போது எங்கேயிருந்து வருகிறது? தண்ணீர் லாரிகள் பலவற்றைப் பார்த்து ஆச்சர்யமடைந்தேன். காங்க்ரீட் நகரங்களின் தேவைகளுக்காக வெகு சீக்கிரமே அழிந்து போகக் காத்திருக்கிறனவோ பிற விளைநிலங்கள்? அவ்வாறெனில், எதிர்காலத்தில் உணவுக்கு எங்கே போவது? நிச்சயமாக பொட்டலங்களில் விற்கப்படுகிறவைதாம் கிடைக்கும் என்று உறுதியாகக் கருதுகிறேன்; பன்னாட்டு நிறுவனங்களால் தொழில்முறையில் நிறுவப்படும் சில்லறை விற்பனை அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருந்துவரும் பாரம்பரிய வேளாண் முறையைப் படிப்படியாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

வினோபா பாவேவை நினைத்துப்பார்த்தேன். காந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகச்சிறந்த தலைவராக அவர் என்னுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே என் மனதில் இடம்பெற்றிருக்கிறார். இந்திய நிலவுடைமை அமைப்புக்கு எதிராக அவருடைய ‘பூமிதான இயக்கம்’ வலிமைப்பட்டிருக்க வேண்டும் (அவ்வாறு நிகழவில்லை). நிலம் செல்வந்தரிடமிருந்து ஏழைக்குப் போய்ச் சேரவில்லை. அந்த இயக்கம் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் செல்வந்தர்களால் அதற்கு எதிர்ப்பு உருவானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியச் சமுதாயத்தின் நகர்ப்புற மேட்டுக் குடியினரால் மிகவும் வெறுக்கப்பட்ட ஓர் அரசியல் தலைவரின் (சௌத்ரி தேவிலால்) குரலைக்கேட்டேன்: “நகர்ப்புறங்களில் வாழும் மனிதர்கள் தங்கள் வீட்டின் கழிப்பறையைச் சுத்தப்படுத்த ஒருமுறை பயன்படுத்தி வீணாகும் நீரைத்தான் உங்கள் குடும்பம் (கிராமப்புற ஏழைகள்) நாள் முழுவதற்குமாகப் பெறுகின்றது.”

இந்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது; அந்தச் செய்தியில் அதிகமும் உண்மை இருந்தது என்பதனால் மட்டுமன்று, தண்ணீருக்கு இன்று ஒரு பெரிய நெருக்கடி இருக்கிறது. அது மிகவும் கூர்மையடைந்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிற நாட்களில் நாம் எங்கே வந்து நிற்கிறோம் என்பதை உணர்வதனால் ஏற்படுகின்ற அதிர்ச்சியினாலும்தாம்.

ஆனால், நானும் அத்தகைய குற்றவாளிகளில் ஒருவனாகவே இருந்தேன். என்னுடைய மாமாவின் பண்ணை நிலத்திலிருந்த கிணற்றுக் குழாயினடியில் உட்கார்ந்து விருப்பம்போல் தண்ணீரை வீணாக்கியிருக்கிறேன்; இவ்வாறு யோசிக்காமலே கழிப்பறைகளை இரண்டுமுறை சுத்தப்படுத்தியிருக்கிறேன்.

அது நடந்ததெல்லாம் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. என்னுடைய குற்ற உணர்ச்சியானது மேலும் அறிந்துகொள்வதற்கு என்னைத் தூண்டியது. என்னுடைய பயணம் ஒரு திரைப்படம் எடுப்பதை நோக்கி நகர்ந்தது. இந்த விஷயத்தை குறித்த அறியாமையையும் மறுப்பையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். தேவிலால் இந்தக் கடுமையான சொற்களைப் பேசும்பொழுது முதலில் நகர்ப்புற ‘மேன்மக்கள்’ வாய்க்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்கள். ஆனால், மேலும் மேலும் நான் ஆய்வு செய்தேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் புரிந்துகொண்டேன், இந்தியாவில் இருக்கிற நாம் ஒரு அபாயகரமான இடத்தைக் கடந்து வந்திருக்கிறோம். நெருக்கடி மிகுந்த பிரதேசங்களிலும் நன்றாகவே இருந்திருக்கிறோம். ஏற்கனவே தண்ணீருக்கான ஒரு பெரிய பதற்றத்தினை உணர்ந்த தேசத்தில்தான் இருந்தோம் .

முதலில் தண்ணீரைப் பற்றி ஒருபடம் எடுக்க வேண்டுமென்று விவாதித்துக் கொண்டிருந்த பொழுது ‘தங்களால் இயலாத ஒன்றை இவன் செய்யப்போகிறானே’ என்ற அர்த்தம் தொனிக்க ஒவ்வொருவரும் புன்னகை செய்துகொண்டனர்; இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க யாரும் முன்வரவில்லை. பருவ மழைகளையும் விவசாயிகளையும் மையப்படுத்தி உணர்ச்சிகளின் பால் பார்வையாளர்களின் மனங்களைத் திருப்புகிற படங்களை எடுக்கும் ஒரு சரித்திரத்தைக் கொண்டது இந்திய திரைத்துறை. ‘Lagaan’ ஓர் அண்மைக்கால எடுத்துக்காட்டு. ஆயினும், இந்தப் படங்களில் ஒன்றுகூட 65 விழுக்காடு இந்திய வேளாண்மைக்கும் 85 விழுக்காடு மக்களின் குடிநீருக்கும் பயன்படக்கூடிய நிலத்தடி நீராதாரத்தைப் பற்றிப் பேசவில்லை.

நிலத்தடி நீர் இருப்பின் அளவுகள் எச்சரிக்கிற அளவுக்குக் குறைந்து கொண்டே வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட, தரையில் தோண்டினால் பத்து அடி ஆழத்தில் தண்ணீர் வரும்; இப்பொழுது பல இடங்களில் 600 அடி ஆழமோ அதற்கும் கூடுதலாக தோண்ட வேண்டியதிருக்கிறது. காடுகளை அழித்தல், காங்க்ரீட் தளங்களை அமைத்தல் ஆகிய செயல்கள் மழைநீரை நிலத்தின் கீழ் இறங்கிச் சேகரமாகாமல் தடுக்கின்றன.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, எல்லாக் குடிமக்களுக்கும் தூய்மையான நீர் பெறுவது அடிப்படை உரிமை என்று 2010இல் ஐ,நா அறிவித்தது. எதனையும் செய்வதைக் காட்டிலும் சொல்வது மிக எளிது. அவசியமான எச்சரிக்கையுணர்வினை உண்டாக்கும் கேள்வி ஒன்று வருகிறது.

“நிலத்தடி நீரைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?” கேரளாவில் ‘கொக்கோ கோலா’ நிறுவனம் குளிர்பானத் திட்டத்திற்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை அங்குள்ள விவசாயிகள் எதிர்த்துப் போராடினார்கள்; அந்த நிறுவனம் விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. ‘கோக்’ அல்லது வேறுபெயர் கொண்ட அந்நிறுவனத்தின் குளிர்பான பாட்டில்கள் நகர்ப்புறத்து வசதியானவர்களுக்காகப் பெரிய அளவில் அனுப்பப்படுவதால் பல சதுர மைல்கள் பரப்பில் வயல்கள் வறண்டு காய்ந்து கிடக்கின்றன.

நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு என்பதை யார் மேற்கொள்வது? யார் நமது நதிகளைப் பாதுகாப்பது? செல்வந்தர்களுக்கும் அதிகார அமைப்பில் உள்ளவர்களுக்கும் வளங்களைப் பயன்படுத்தவும், அவர்களின் தொழிற்சாலைகளுக்கு மிக அதிக அளவில் தண்ணீரைப் பெறவும் முடிகிறது. அல்லது தங்களின் தொழிற்சாலைக் கழிவுகளால் நதிகளை நாசப்படுத்துகின்றனர். தொலைதூரங்களிலுள்ள நகர்ப்புறங்களுக்குப் பெரிய செலவு செய்து தண்ணீரைக் கொண்டு சென்று கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயம் ஆக்கவேண்டும் என்ற வாதமும் அடிபடுகிறது (முதலாளிகளின் சொத்தாக்குவது). இது இவ்வாறுதான் போகும்:

“தண்ணீர் மிகவும் விலை உயர்ந்த பொருள், மக்கள் இதனை இலவசமாகப் பெறுவது எப்படி! அதற்கு ஒரு விலை வைக்கவேண்டும்; தண்ணீர் வணிக சக்திகளுக்கான பொருளாக ஆகிவிடும், அதனுடைய விநியோகமும் பயன்பாடும் மேலதிகத் திறமையுள்ளவர்களுக்கே சாத்தியம்.”

பிரச்சனை என்னவென்றால், என்ன விலை என்பதுதான். எந்த ஒரு பொருளுக்கும் பொருத்தமான சந்தை விலை என்று எதையாவது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். இந்த பூமியில் வாழும் 70 விழுக்காடு மக்கள் தண்ணீருக்காக ஒருதொகையை ஒதுக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். தனியார் மயமாதலுக்கு எதிரான வாதம் வலுவாக இருக்கிறது. வணிக சக்திகள் தண்ணீரை அதிகபட்ச விலைக்கு விற்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும்.

எங்கே அதிகமாகத் தேவைப்படுகிறதோ அங்கே இல்லை. அப்படியானால் தண்ணீர் யாருடையது?

மும்பையில் ‘ஜூஹூ விலே பார்லி’ திட்டம் (Juhu Vile Parle Scheme) அருகே சாலையைக் கடந்தால் எதிரில் உள்ள நேரு நகர் என்றழைக்கப்படும் ஏழை மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களும் எல்லா அழகிய மனிதர்களும் வாழ்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒருதடவை லாரிகளில் தண்ணீர் வருகிறது; அப்பகுதியில் உள்ள தண்ணீர் தாதாக்களும் அவர்களின் அடியாட்களும் தாம் வரவழைக்கிறார்கள், பெண்களும் குழந்தைகளும் ஒரு வாளித் தண்ணீருக்காகக் காத்திருக்கிறனர். சீக்கிரமே தண்ணீர் தீர்ந்து லாரிகள் கிளம்பும் போது காத்திருந்தவர்களிடையே சண்டை வெடிக்கிறது. இதற்கு நேர் எதிரே, உடற்பயிற்சி நிலையங்களுக்குப் போய் விட்டு வந்து அல்லது திரைப்பட படப்பிடிப்பகங்களில் படப்பிடிப்புக்காக இருந்துவிட்டு வருகிற நடிகர்கள் மணிக்கணக்காக தங்களின் குளியலறையில் ஷவர்களின் கீழ் குளித்துக்கொண்டிருப்பார்கள்; அங்கே தண்ணீர் விழுவது நிற்காது. ஏழைகள் ஒருவாளித் தண்ணீருக்குக் கொடுக்கும் விலையில் பாதிக்கும் குறைவாகவே பலர் செலுத்துகிறார்கள்.

அப்படியானால் தண்ணீர் யாருடையது?

பணம் செலுத்த முடிந்தால் உங்கள் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீரைப் பெறமுடியுமா? அல்லது சமுதாயம் முழுமைக்கும் சொந்தமான தண்ணீர் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப் படவேண்டுமா? சில விஷயங்களைக் குறித்து முழுமையான விழிப்புணர்ச்சி இருக்கவேண்டும். தண்ணீர் என்பதை நீங்களும் நானும் பயன்படுத்துகிறோம்; யாரோ ஒருவர் தீர்மானிக்கிற விலையில், நம்மைப்போலவே வேறு சிலருக்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது. உண்மையில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றுக்கும் தண்ணீருக்கான விலையைத்தான் கொடுக்கிறோம். மிகவும் புதிய வடிவமைப்பில் தோன்றும் ஜீன்ஸ் பேன்ட் ஒன்றை வாங்குவதற்கு இரண்டு ஜீன்ஸ்களுக்கான விலையைக் கொடுக்கிறோம்; உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதற்கான துணியை உருவாக்குவதற்கான பருத்தியை விளைய வைக்க 6000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்தப் பருத்தி விளைகிற இடங்களில் உணவு தானியங்களையும் விளைவிக்க முடியும். பருத்தி அழுக்கான தண்ணீரினால் விளையும் பயிர் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பயிர், கொடுப்பதை விடவும் அதிகமாகப் பெற்றுக்கொள்ளக் கூடியது. நுகர்வுப் பண்பாடு வளர்ந்துள்ள நம் சமுதாயத்தில் நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருளுமே தண்ணீருக்கான விலையைக் கொண்டிருக்கிறது, அது நமது நிலங்களை வறண்டு போகச்செய்து கொண்டிருக்கிறது, பெரும் தாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அவ்வாறெனில், தண்ணீர் யாருடையதாக இருக்கிறது?

மிகப்பெரிய அளவில் நம்மை அச்சுறுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கும் பஞ்சம், பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களாக நாம் இருப்பதைப் பற்றி நான் ஒரு படம் எடுத்திருப்பதற்காக மக்கள் என்னைப் பாராட்டிய விஷயம், இதைத் தாமதமாகச் செய்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சொன்னார்கள்: “இந்த விஷயத்தைக் குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக மக்களை உருவாக்கவேண்டும்”

பிரச்சனையைக் குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா? இந்தியாவில் உள்ள எண்பத்தைந்து விழுக்காடு மக்கள், உலகின் பிறபகுதிகளிலும் ஏறத்தாழ இதையொத்த எண்ணிக்கையில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் உருவாகியிருக்கும் பதற்றமான சூழ்நிலைமையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இருக்கிற பெண் குழந்தைகளின் கல்வியைப் பற்றிச் சரியாகப் பேசுவோமானால், பலவிவரங்கள் வெளியே சொல்லப்படாமலிருக்கின்றன; இந்தியா முழுவதும் பெண் குழந்தைகள் ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியையும் தண்ணீரைத் தேடுவதிலும் தொலைதூரங்களில் இருந்து தங்கள் தலைகளின் மேல் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்து வருவதிலுமே கழிக்கிறார்கள். இப்போது ஒரு குழந்தையாகத் தொடங்கும் இத்துயரம் வாழ்க்கை முழுவதுமாகத் தொடரும்.

அடுத்தது, யார் இந்தப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமலிருக்கிறார்கள் என்பது. நகர்ப்புறவாசிகள் இப்போதும் குழாய்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறார்களா? நல்லது, நீண்டகாலத்திற்கு முடியாது என்று நினைக்கிறேன்.

புவி வெப்ப மயமாதலின் விளைவுகள் தட்பவெப்பநிலை, பருவமழைகள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. பல நூற்றாண்டு காலமாக நீர்நிலைகளுக்கு ஆதாரமாக இமயமலையிலிருந்து உருகிவரும் பனிப்பாறைகள் முடிவுக்கு வந்துவிட்டன. பிரம்ம புத்திரா நதியின் மீதுள்ள ஸங்மு (Zangmu) அணைக்கட்டு குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இமய மலையின் பனிப்பாறைகளிலிருந்து உற்பத்தியாகிவரும் நதிகளினால் கோடிக்கணக்கான மக்கள் போஷிக்கப்படுகிறார்கள். தண்ணீருக்கான மாற்று வழிகளைத் தேடுவதில் இந்தியாவைப் போலவே சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் மக்கள் இயக்கங்கள் தொடங்கியிருக்கின்றன. பருவமழைகளின் போதாமையினால் நிலத்தடி நீர்வளம் என்பது மேலும் மேலும் குறைந்து கொண்டுவருகிறது. மகாராஷ்ட்டிராவைப் போல, வறட்சி, பெருவெள்ளங்கள் ஆகிய சிக்கல்கள். நீர் மேலாண்மைக்காக பல்வேறு திட்டங்களின் வழி அரசு செலவிடும் பெருந்தொகை மூலமாக வளப்படும் நிலங்கள் நேரடியாக அரசியல்வாதிகளின் பைக்குள் சென்று விடுகின்றன. தவறுகள் சரிசெய்யப்படுவதற்குப் பதிலாக நதிகள் மேலும் மாசுபடுத்தப்படுகின்றன. நமது பொருளியல் அறிஞர்கள், நுகர்வின் அடிப்படையில் மக்களின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பதாக மதிப்பீடு செய்கிறார்கள்; தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் ஆகியவை மேற்கொள்ளப்படும் பொழுது நமது அடிப்படையான வளங்கள் வேகமாகச் சீர்குலைந்து போவதைப் பற்றிய சிந்தனை இல்லை.

புனித கங்கை நதி நீண்டகாலமாகவே தூய்மைப் படுத்தவேண்டிய தேவையுடனிருக்கிறது; ஏனென்றால், இது ஒரு பருவகால நதியாக மாறிவிடும் நிலையில் இருக்கிறது; இதன் மேற்பகுதிகளில் வெள்ளம் புரண்டுவரும் சமயம் வாரணாசியில் சிறிதளவே வடிந்து கொண்டிருக்கிறது.

இவை யாவும் நம் கண் எதிரே நிகழ்கின்றன, தண்ணீருக்காக அரசாங்கம் தன்னுடைய மக்களுக்கு எதிராகப் போர்புரியப் புறப்படும் பொழுதுதான் நாம் விழித்துக் கொள்ளவேண்டுமா? அவ்வாறெனில் தாகம் என்பது பூமியில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

*****

சேகர் கபூர், திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர். இவரது இயக்கத்தில் உருவான ‘Paani’ (தண்ணீர்) திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது.

Amrutha

Related post