கண்ணுக்குத் தெரியாத கொலையாளி: கொரோனாவைவிட அபாயமானது!

பிரபு திலக்
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலகவில்லை; மூன்றாவது அலையை எதிர்பார்த்து நாடு முழுவதும் அச்சத்தில் உள்ளது. அதற்குள், அதிர்ச்சி தரும்வகையில் வெளியாகியுள்ளது அந்த அறிக்கை. சென்னையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு காற்று மாசுபட்டுள்ளது என சென்ற மாதம் வெளியான ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமி போலவே காற்று மாசும் நுரையீரலைப் பாதிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் ‘பிஎம் 10’ என்று அழைக்கப்படுகின்றன. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுகொண்ட துகள்கள் ‘பிஎம் 2.5’ என்று அழைக்கப்படுகின்றன. இவைதான் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடியவை. காற்றில் அனுமதிக்கப்பட்ட துகள்கள் (பிஎம் 10) அளவு 100 மைக்ரோகிராம், நுண் துகள்கள் (பிஎம் 2.5) அளவு 60 மைக்ரோகிராம். ஆனால், ‘ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சென்னையில் திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் 176 முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு இருக்கிறது. திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகம் அருகே), துரைப்பாக்கம் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), குருவிமேடு (அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் குளம் அருகே), சோழிங்கநல்லூர் (பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை அருகில்), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), மீஞ்சூர், உர்ணாம்பேடு, சேப்பாக்கம் (நிலக்கரி சாம்பல் குளம் அருகே) பெரும்புதூர், தியாகரயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருக்கிறது.
இது காற்று தர நிர்ணய விதிகளின்படி ஆரோக்கியமற்ற நிலையாகும். காற்றில் உள்ள நுண்துகள்களினால் குரோமோசோம்கள், மரபணு ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், சுவாசம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மனித உடலுக்குள் சுவாசம் மூலம் புகும் காற்றில் கலந்துள்ள மாசு, நுரையீரலைக் கடந்து இரத்த ஓட்ட மண்டலத்தை அடைகிறது. இதனால், மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு மூக்கு அரிப்பு, தலைவலி, தொண்டை எரிச்சல், கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல், தோல் அரிப்பு, வாந்தி, பித்தம் போன்ற சிறிய பாதிப்புகள் தொடங்கி இம்பஸிமா என்ற நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், கருத்தரிப்பு கோளாறு, குறைப் பிரசவம், உருக்குலைந்த குழந்தை பிறப்பு, பார்வைக் கோளாறு, மூச்சுப்பிடிப்பு போன்ற பெரிய பாதிப்புகள் வரை பலவிதமான அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
சென்னையில் கடந்த ஆண்டு (2020) மட்டும் காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடியாக உள்ளது என ‘கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியா’ அமைப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளே அதிக பாதிப்புக்கு உள்ளாகின என்பதற்கும் காற்று மாசுக்கும் தொடர்பு இருக்கலாம்.
சென்னைக்குள் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே காற்று மாசு இன்று ஒரு பெரும் அபாயமாக உருவாகி வருகிறது. தமிழ்நாட்டில் இறப்பவர்களில் ஐந்து பேரில் ஒருவர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்கள் என்கிறது மற்றொரு ஆய்வு. இந்தியாவில் அதிக இறப்பை ஏற்படுத்தும் காரணங்களில் ஐந்தாவது இடத்தை காற்று மாசு பிடித்துள்ளது.
காற்றை மாசுபடுத்துவதில் வாகனப் புகைகளே அதிகப் பங்கு வகிக்கின்றன. ஒருவர், ஒருநாள் 20 சிகரெட்களைப் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது வாகனப் புகை. வாகனங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன், நைட்ரஜன், மீத்தேன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல வாயுக்கள் வெளியேறுகிறது. நான்கு சக்கரம், இரு சக்கரம் என வாகனத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு வாகனப் புகையிலும் இவற்றின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று, ‘காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 1981’ வரையறை செய்துள்ளது. ஆனால், முறையான சோதனை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் பெரும்பான்மை வாகனங்கள் இச்சட்டம் குறிப்பிடும் அளவைவிட அதிகமான கார்பனை கக்கிக்கொண்டே சுற்றி வருகின்றன. சரக்கு வாகனங்கள், 64 சதவீதம் கார்பன் மோனாக்சைடை வெளியிட்டுக் காற்றை மாசுபடுத்துதலில் முதலிடத்தில் இருக்கின்றன. மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதாலும் பயண நேரம் அதிகமாகி, அதிக வாகனப் புகை வெளியாகிறது. தரம் குறைவான பெட்ரோல் / டீசல் மற்றொரு காரணம். வாகனப் புகையை அடுத்து நிலக்கரி எரிப்பு, கட்டுமானப் பணிகள், மழை வீழ்ச்சி உட்படப் பல்வேறு காரணிகள் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.
வாகனப் புகை, தூசு போன்ற மாசு நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பும் வளர்ந்ததும் பரம்பரை அல்லாத சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சாலைகளைப் பயன்படுத்துபவர்கள்தான். அதிலும் குறிப்பாக நடந்து செல்பவர்களும் சைக்கிள் ஓட்டிகளும்தான் பெரும்பங்கு பாதிக்கப்படுகிறார்கள். காற்று மாசுக்கு இவர்கள் காரணமில்லை என்பதுதான் இதிலுள்ள பெரும் சோகம்.
2012ஆம் ஆண்டே, பெர்க்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவில், இந்தியாவில் வாகனப் புகையை அதிகம் சுவாசிக்கும் மக்கள் விகிதத்தில் கொல்கத்தா, டெல்லிக்கு அடுத்தபடியாகச் சென்னையே இருக்கிறது எனச் சொல்லப்பட்டது. வாகனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதிலும் தனிநபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கையை குறைத்துப் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரை செய்திருந்தது. அப்பொழுதே நாம் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், பொருட்படுத்தவில்லை.
விளைவு, இந்தியாவில் அதிக மாசு கலந்த மிக மோசமான காற்றுள்ள நகரங்களில் முதலிடத்திலிருந்த டெல்லியை பின்னுக்குத் தள்ளிவிட்டது சென்னை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சென்னையில் வசிக்கும் அனைவரும் சுவாசக் கோளாறு அல்லது நுரையீரல் தொடர்பான நோய்க்கு ஆளாவது நிச்சயம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்னையில் அம்பத்தூர், கொளத்தூர், சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் நடத்திய ஆய்வில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாலி சைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன், பென்சோ பைரீன் ஆகிய இரண்டும் காற்றில் அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைட், கார்பன் டயாக்ஸைட், பல்வேறு வகை நைட்ரஜன் ஆக்சைட் வாயுக்கள், ஹைட்ரோ கார்பன்கள் போன்ற வாயுக்களுடன் புழுதி, ஈயம் பென்சீன் போன்ற விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருள்களும் சென்னைவாசிகளுக்கே தெரியாமல் அவர்களை தின்று கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.
“காற்று மாசடைவதைத் தவிர்க்க, நகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவிகிதம் நிலப் பரப்புப் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு அனைத்து மாநிலங்களும் பசுமைப் போர்வையின் அளவை உயர்த்த வேண்டும்’’ என்று ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சென்னையில் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. எனவே, சென்னையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
சென்னைக் காற்றுச் சீர்க்கெட்டுவிட்டது என்பதை ஓர் அபாய அறிவிப்பாக எடுத்துக்கொண்டு திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. சில வருடங்களுக்கு முன்னால் தண்ணீர் மாசடைந்து வருவதைப் பற்றி விஞ்ஞானிகள் அறிவுறுத்தினார்கள். “இவர்கள் வேறு, எப்பப் பார்த்தாலும் எதாவது பூச்சாண்டி காட்டிக்கொண்டே’’ என அதை அலட்சியப்படுத்தினோம். அதன் விளைவு, இன்று எங்குச் சென்றாலும் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் செல்ல வேண்டிய நிலை. காற்று மாசு குறித்த எச்சரிக்கையையும் அதுபோல் அலட்சியப்படுத்தினால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தகப் பைகளை முதுகில் சுமந்து செல்வது போல, ஆக்சிஜன் உருளையை நாம் அனைவரும் சுமந்து செல்ல நேரிடும் காலம் விரைவில் வரலாம்!
எனவே, இவற்றை எல்லாம் நாம் பின்பற்றியே ஆகவேண்டும்…
வாகனத்திற்கு 15 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அதைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றை மலிவு விலையில் விற்கவும் முயல வேண்டாம். பழைய வாகனங்கள் தற்போதைய சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை அல்ல. முன்னேறிய நாடுகளில் மக்கள் தங்கள் பழைய வாகனங்களை மலிவு விலையில் விற்பதில்லை. அவற்றை மறுசுழற்சி செய்ய அனுப்பிவிடுகிறார்கள்.
நான்கு ஸ்ட்ரோக் எந்திரங்கள் உள்ள இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களைப் பயன்படுத்தலாம். ஈயம் கலக்காத பெட்ரோலை பயன்படுத்தலாம். அதுபோல் எல்.பி.ஜி. கேஸ் பயன்பாடும் காற்று மாசடைவதைக் குறைக்கும்.
குறைந்த தூரப் பயணத்திற்கு நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம். இது சாத்தியமா என்ற யோசனை செய்யாதீர்கள். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல முன்னேறிய நாடுகளில் பலரும் சைக்கிளுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
காற்றை தூய்மையாக வைத்திருக்க மரங்கள் ஓர் இயற்கைத் தீர்வு. நம்மால் முடிந்த அளவு மரங்கள் நடலாம். குறைந்தபட்சம் வீட்டுக்கு முன்னால் இடம் இருந்தால் ஒரு மரத்தை நட்டு பராமரிக்கலாம்.