விசாரணை குற்றம் தண்டனை – விட்டல்ராவ்

 விசாரணை குற்றம் தண்டனை – விட்டல்ராவ்

தொலைபேசி இலாகாவின் அன்றைய பல்வேறு பொது சேவைகளில் முக்கியமான ஒன்று ‘விசாரணை’; அதாவது ENQUIRY – ஒரு தொலைபேசி எண்ணைச் சொல்லி அதன் வாடிக்கையாளரின் பெயர் – விலாசத்தைக் கேட்டு பெறுவது, பெயர் விலாசத்தைச் சொல்லி அன்னாரது தொலைபேசியின் எண்ணை கேட்டு பெறுவது என்பது. இந்த சேவைக்கு கட்டணம் கிடையாது. இதற்கான எண் 197. போலவே புகார் அளிக்க (COMPLAINT) 198, மற்றும் உதவி – 199 (ASSOSTANCE). இவை யாவும் மீட்டர் ஆகாத (NON METERABLE), கட்டணமில்லாத அதிமுக்கிய இலவச சேவைக்குறிய எண்கள்.

எல்லா போதுத் தொலைபேசி கூண்டுகளிலுள்ள தொலைபேசிகளிலிருந்தும் மேற்குறிப்பிட்ட எண்களைச் சுழற்றி காசு எதுவும் போடாமல் இலவச சேவைகளைப் பெற்று வந்த காலம். இந்த இலவச சேவைகளுக்கான எண்களைச் சுழற்றுவதென்பது சில வக்கரித்த ஜீவன்களுக்கு வசந்த கால அனுபவம். இவர்கள் கண்ணில் சிவப்பு நிற தொலைபேசி கூண்டு பட்டால் போதும். உடனே நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு விசாரணைக்குறிய 197-ஐ சுழற்றி ஹலோ சொல்லுவார்கள். டூட்டியிலிருக்கும் பெண் இயக்குனர் பதிலளிக்க, பெண் குரலைக் கேட்ட மாத்திரத்தில் – அந்த பெண் ஊழியர் நாற்பது வயதினராய் கூட இருக்கலாம். “வர்ரியா?” என்று கேட்பார்கள். அழைப்பை பணியாளர் துண்டித்தாலும் திரும்பத் திரும்ப டயல் செய்து பேசுவார்கள்.

மேற்குறிப்பிட்ட இலவச பொது சேவைகளை வழங்கும் இடம், பூக்கடைப் பகுதியில் உள்ள டெலிஃபோன் ஹவுஸ் எனும் கேந்திரத்தின் மாடியிலிருந்த சிறப்பு சேவைத் தொடர்பகம். அதாவது SSX என சுருக்கமாய்க் குறிப்பிட்ட SPECIAL SERVICE EXCHANGE ஆகும். இதை அல்லி ராஜ்ஜியம் என்றழைப்போம். அதில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பெண் தொலைபேசி இயக்குனர்களே ஆட்சி செலுத்தி வந்தார்கள். பதினைந்து வயதுக்குள்ளிருக்கும் சிறு பையன்களை, பியூன் பையன்கள் (BOY PEONS) என்ற பணியில் உதவிக்கு அமர்த்தியிருப்பார்கள். எனக்குத் தெரிந்து ஓர் திருநங்கையைக் கூட வைத்திருந்தார்கள்.

24 மணி நேரமும் இடைவிடாத சேவை. பல்வேறு ஷிஃப்டுகளில் அவர்கள் பணிக்கு வந்து போனார்கள். விலை மலிவில் கிடைத்த பண்டங்கள் கொண்ட நல்ல காண்டீன் வசதி. இரவு பன்னிரெண்டுக்கு பணிமுடிந்த பெண்கள் அங்கேவே வசதியாக தங்கி காலையில் வீட்டுக்குப் போகும் வகையில் டார்மிட்ரி எனும் இராத்தங்கல் அறைகள் இருந்தன. இன்னொரு மிக முக்கிய பகுதி, வெளியூர்களுக்கு தொடர்பு கொடுத்து, அழைக்கும் மத்திய TRANK / EXCHANGE (CTX). இதுவும் 24 மணி நேர சேவை மையம். பல்வேறு ஷிஃப்டுகள். மகளிர் மயமான சேவை மையம். இலாகாவின் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் பகுதிகளில் ஒன்று. தவிர, வெளிநாடுகளின் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை அழைத்து தொடர்பு சேவை தரும் INTERNATIONAL TRUNK EXCHANGE (ITX) இன்னொரு பகுதி. இங்கு பெரும்பான்மை ஆங்கிலோ இந்தியப் பெண்களே பணிபுரிந்து வந்தார்கள். இந்தப் பெண் இயக்குனர்கள் வாடிக்கையாளர்களோடுக் கத்தி கத்தி பேசி தொண்டை வறண்டு போனதால் ‘பால்படி’ (MILK ALLOWANCE), தொழிற்சங்கத்தின் இடைவிடாத போராட்டமிக்க கோரிக்கையால் அரசால் அளிக்கப்பட்டது.

 

ந்த பொது சேவையும் இலவசமாய் அளிக்கப்படுகையில் அதை பொதுமக்களில் கொஞ்சம் பேர் துஷ்பிரயோகம் செய்யவே செய்கிறார்கள். அதனால்தான் ரயில் கழிப்பறைகளில் எவர் சில்வர் குவளைகளை சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

செந்நிற தொலைபேசிக் கூண்டு தென்பட்டால், சிலர் உள்ளே நுழைந்து இலவச சேவை எண்ணைச் சுழற்சி கிடைக்கும் மறுபக்கத்து பெண் குரலோடு பாலியல் ரீதியாக பேசிக் கொண்டிருந்தால், அந்த அழைப்பு நகரின் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கிறது என்பதை பூக்கடை எக்ஸ்சேஞ்சின் சுவிட்சுரூம் மெக்கானிக்குகள் கண்டறிய முடியும். உடனே அந்த பெண் ஊழியர் குறிப்பிட்ட பகுதி எக்ஸ்சேஞ்சை தொடர்புகொண்டு தகவல் தருவார். இதனிடையில் அந்த பேர்வழி போய்விடாமல் பேசிக்கொண்டே இருக்கும் வகையாக, பெண் ஊழியர் அவர் வழியிலேயே பதில் பேசியவாறு நேரத்தை இழுப்பார்.

அந்த வகையாக 197, 198, 199 சிறப்பு சேவை மைய மகளிர்கள் எங்களோடு தொடர்பு கொண்டு ஆவன செய்ய கோருவார்கள். நாங்கள் எங்களிடமுள்ள பொதுத் தொலைபேசிகள் பட்டியலைக் கொண்டு சில நிமிடங்களில் அந்த குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்குள் நுழைந்து அந்த உரையாடலை ஒட்டுக் கேட்கமுடியும். STROWGER, CROSSER வகை தொலைபேசி இணைப்பகத்தின் பரிசோதனைப் பகுதி இயக்குனர்களாலும், சுவிட்சுரூம் பகுதி மெக்கானிக்குகளாலும் அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட தொலைபேசியை ஒட்டு கேட்க முடியும். OBNOXIOUS அழைப்புகளை ஒட்டு கேட்டு அவற்றை மேற்கொண்டு வாடிக்கையாளருக்கோ, சம்மந்தப்பட்டவருக்கோ எவ்வித இடைஞ்சலும் ஏற்படாவண்ணமிருக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுப்போம்.

முதலில் புகார் தந்தவரை, அத்தகைய நபரின் பேச்சைத் துண்டிக்காமல் பேசிக்கொண்டேயிருக்கச் சொல்லிவிட்டு, போலீசுக்கு உடனடி தகவல் தருவோம். காவல்துறை எங்கள் வேண்டுகோளை அந்த சமயம் எவ்வளவுக்கு சீரியஸ்ஸாய் எடுத்துக்கொள்ளுகிறதோ அதைப் பொறுத்தது அவர்களது உடனடி நடவடிக்கையும்.

நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்; அன்றைய காலகட்டத்தில் எல்லா துறையிலும் எல்லா மட்டத்திலும் போக்குவரத்து வசதியும் தொழில் நுணுக்க வசதியும் இப்போதிருப்பது போல இல்லாது மிகவும் குறைவு. இதுபோன்ற மோசமான பொதுத் தொலைபேசி அழைப்பாளர்களை, எங்கள் பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் மூலம் போலீஸ் உதவியுடன் வக்கர புத்தியாளர்களை பிடித்துக் கொடுத்து, காவல்துறை பலமாய் எச்சரித்து அனுப்பிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அல்லாமல், வீடுகளில் சொந்த தொலைபேசி வைத்திருக்கும் பெண்களுக்கும் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை ஏந்திய அழைப்புகள் வரும். அவர்களின் புகார்கள் எழுத்து வடிவில் தொலைபேசி இலாகாவுக்கு வரும். பிரபலமானவராக இருக்கும் ஆண்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வரும். அரசியல்வாதிகள், பத்திரிகையாசிரியர்களின் தொலைபேசிகளுக்கு இரவு நேரங்களில் இது போன்ற பாலியல் மற்றும் கொலை மிரட்டல் அழைப்புகள் வரும். அவர்களது எழுத்து வடிவ புகாரின் பேரில் பிரத்தியேகமான OBSERVATION CIRCUIT என்ற உபகரண வசதியை இயக்கி கண்டுபிடிப்போம். இந்த உபகரண வசதியும் அன்றைய ஸ்ட்ரோவ்ஜர் மற்றும் கிராஸ்பார் வகை தொலைபேசி இணைப்பகங்களில் எளிதாக கிடைக்கக்கூடியவை.

அப்ஸர்வேஷன் சர்க்யூட்டை புகார் அளித்த குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுடன் இணைத்து, அந்த சர்க்யூட் அமைப்புடன் இயங்கும் அப்ஸர்வேஷன் சர்க்யூட் போர்டு எனும் தொலைக்காட்சி பெட்டி போன்ற சாதனத்தின் முன் அமர்ந்து கவனிப்போம். இந்த சிறப்புப் பணியை எங்களில் ஒருவருக்கு வழங்குவார்கள். இதன் மூலம் புகாரளித்தவரின் தொலை பேசிக்கு வரும் அழைப்புகள் ஒவ்வொன்றும் அந்த மானிட்டரில் பளிச்சிட்டு ஓடும். தலைப் பொறியை மாட்டிக்கொண்டு அந்த உரையாடல்களையும் கேட்கலாம். அந்த வருகை எண்கள் மற்றும் உரையாடலகளை மானிட்டருடன் இணைத்த நாடாவில் பதிவு செய்யும் வசதியும் வழக்கமும் உண்டு.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக பதவியேற்ற தொடக்கத்தில், அவரை அவரது தொலைபேசி எண்ணுக்கு யாரோ வெளியிலிருந்து தொடர்புகொண்டு மிரட்டுவதும் அசிங்கமான வார்த்தைகளாய் திட்டுவதுமாயிருக்க, அவரது தரப்பிலிருந்து புகார் கடிதம் தொலைபேசி மேலாளருக்கு வந்துவிட்டது. வழக்கம்போல அப்ஸர்வேஷன் சர்க்யூட் இணைத்து அவரது எண்ணுக்கு வரும் அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன. இவை காவல் துறையினருக்கு புகார் செய்யப்பட்டு அவர்கள் தரப்பிலிருந்தும் புகார் வருவதுண்டு. அவற்றுக்கு கூடுதல் மரியாதை இருக்கும். பிறகு இப்படிப்பட்ட மிக மிக முக்கிய வாடிக்கையாளர்களின் (VVIPS) தொலைப்பேசி எண்களை அவர்களின் எழுத்து ரீதியான விருப்பத்தின் பேரில் பொதுமக்களின் கைக்கு எளிதில் கிடைக்கா வண்ணம் ரகசியப்படுத்தி வைக்கும் முறையும் அமுலில் இருந்தது. இவற்றை EX-DIRECTORY NUMBERS என்று அழைப்பார்கள்.

பொதுவாக பெண்களுக்கு, அவர்கள் சேவை செய்யும் பணியிடங்களில் பாலியல் தொந்தரவு என்பது, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு ரூபங்களில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி அலைக்கழித்து, பணியை நிம்மதியாக செய்யவிடாது; முகம் தெரியாத பல வெளிமனிதர்களால் அளிக்கப்பட்டு வருபவை தொலைபேசி இலாகவைப் பொறுத்தளவு பல காலமாய் அன்று நடந்து வந்தது. அதே சமயம் தொலைபேசி பெண் இயக்குநர்கள், சேவையிலிருந்து பின் வாங்காமல் இத்தகைய தொந்தரவுகளை எதிர்கொண்டு சமாளித்து மீண்டிருக்கின்றனர்.

(தொடரும்)

Amrutha

Related post