கூண்டுக்குள் ஒரு பறவை

 கூண்டுக்குள் ஒரு பறவை

வைதேகி

தமிழில்: தி.இரா. மீனா

ஓவியம்: Heidi Hahn

 

வன் கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டான். சிறிது தூரம் போய் விட்டுத் திரும்பிப் பார்த்தான். மாலதி எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் அதற்குள் மூடியிருந்தாள். புறப்படுவதற்கு முன்னால் கதவைப் பூட்டும்படி அவள் சொன்னபோது அவன் சிரித்தான். “நீ ஏன் ஓர் அடையாளச் சீட்டை ஒட்டக் கூடாது? என்னால் இன்னும் அதிகமாகச் சிரிக்கமுடியும்!” அவன் சொன்னான்.

“நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன்”, என்றாள் அவள்.

“எதற்காக அப்படி?”

“வெளியிலிருந்து பூட்டி விடவேண்டும். நான் உள்ளே தனியாக இருக்க வேண்டுமென்பது என் ஆசை” என்று பதில் சொன்னாள் மாலதி.

“என்ன வினோதமான ஆசை இது? நான்சென்ஸ்!”

“நாம் செய்யும் எல்லாமும் ஏன் அறிவுடையதாக இருக்க வேண்டும்? அறிவற்ற ஆசைகளும்கூட சந்தோஷம் தர முடியுமல்லவா?”

அவன், அவளை உற்றுப் பார்த்தான்.”சரி, நான் உன்னைப் பூட்டிவிட்டு போகிறேன். ஆனால், யாராவது வந்து விட்டால்?”

“யார் கதவைத் தட்டுவார்கள்? பூட்டியிருக்கும் கதவைப் பார்த்து விட்டுப் போய் விடுவார்கள்.”

“உன்னை ஜன்னலின் வழியாக அவர்கள் பார்த்துவிட்டால்?”

“ஓ! நீங்கள் போன உடனேயே நான் எல்லா ஜன்னல்களையும் அடைத்துவிடுவேன்.”

“ஆனால், ஏன்? ஏன் இப்படிச் செய்ய விரும்புகிறாய்?”

“சும்மாதான். ஒரே மாதிரியாக இருந்து சலித்துவிட்டது.”

“சலிப்பா? திடீரென ஒருநாள் ஒரே மாதிரியான மனிதனுடன் இருப்பது சலித்துப் போய்விட்டது என்றுகூட நீ சொல்லலாம்!” அவன் கண்களில் சிரிப்பு வழியச் சொன்னான்.

“இருக்கலாம், அதில் ஏதாவது அதிசயமிருக்குமா?”

“என்னைப் போன்ற யாராவது ஒருவர்தான் உன்னுடன் வாழ முடியும்!” கண்ணாடியைப் பார்த்து தலையைச் சீவியபடி குறும்பாகச் சொன்னான்.

“ஓ, உண்மையாகவா? இதற்காகக் கடைசியில் உங்களுக்கு தங்கமெடல் வழங்கப்படும், கவலைப்படாதீர்கள்.”

“அதற்கு முன்னாலே நீ இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டால்?”

“நான் போவதற்கு முன்னால் நீங்கள் போய்விட்டால்?” தலையைத் தூக்காமல் அவன் சட்டைப் பொத்தானைத் தைத்தபடி சொன்னாள்.

“ஓ, கடவுளே! காலம் எப்படி மாறிப் போய்விட்டது! ஒரு காலத்தில் தன் கணவனின் வாயிலிருந்து இப்படி அமங்கலமான வார்த்தைகள் வந்தால், மனைவி தன் விரல்களால் அவன் வாயைப் பொத்தி, கடவுளுக்கு முன்னால் நெய் விளக்கு ஏற்றிவைப்பாள்.”

“காலம் முழுவதுமாக மாறிவிடவில்லை. இப்போதுகூட நான் நெய் விளக்கேற்றி நீங்கள் சொன்னதைச் செய்யலாம்.”

“அப்படியானால் அதை மறந்துவிடலாம். எதற்கு நெய்க்காகச் செலவு செய்ய வேண்டும்? எவ்வளவு நாட்கள் நாம் சேர்ந்து வாழமுடியுமோ அவ்வளவு நாட்கள் வாழலாம், சரியா?”

“ஓ!, ஆமாம், நாம் சந்தோஷமாக வாழலாம். ஏன் சாவைப் பற்றி இப்போது பேசவேண்டும்?”

“உம். சமர்த்துப் பெண். நான் புறப்படட்டுமா?” அவள் கன்னத்தை லேசாக நிமிண்டினான்.

“சரி, ஆனால், கதவைப் பூட்டுவதை மறக்கவேண்டாம்.”

அவன் ஒரு கணம் யோசித்தான்.

“சரி, நான் பூட்டுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை; நீ உள்ளே இருக்கிறாய் என்பது யாருக்கும் தெரியக்கூடாது. ஒரு சின்னச் சப்தம் கூட வரக்கூடாது. மனைவியை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் போகும் கணவன் ரகம் என்று என்னை அக்கம்பக்கத்தவர்கள் நினைத்துவிட்டால்? நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.”

“ஓ, ஆமாம், எனக்குப் புரிகிறது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால், உங்களை எப்படி சமூகம் எச்சரிக்கையாக்குகிறது, பாருங்களேன்.”

“சமூகம் மட்டுமில்லை நானும்தான்! என் மீது யாரும் பழிபோடுவதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது.” சொல்லிவிட்டு அவன் படி இறங்கினான்.

“கவனமாக இரு மாலதி!” மிக மெல்லிய குரலில் சொல்லியபடி கதவைப் பூட்டினான்.

“பூட்டு எப்படியும் பத்திரமாக இருக்கும்.” சொல்லியபடி மாலதி சிரித்தாள்.

“உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.” புறப்படுவதற்கு முன்பு சொன்னான்.

வன் மாலை வரை திரும்பமாட்டான். கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு, திரைச்சீலைகளையும் அவள் இழுத்துவிட்டாள். மழை மூட்டம் போன்ற ஒரு தன்மை அறையைச் சூழ்ந்தது. அறைக்குள் பகல் நேரத்தில் வலிந்து ஏற்படுத்திய இருட்டு, மயக்கம் தருவதாக இருந்தது. கடைசியாக அவள் தனியாக இருக்கிறாள். யாரும் எட்டிக் கூடப் பார்க்கமுடியாது.

எப்படித் தைப்பது என்று கேட்டுக்கொண்டு, ஊசியோடு உரிமையாக, அடுப்படிக்குள் பக்கத்து வீட்டுப் பெண் ஹரீனாவால் வரமுடியாது.

 

அந்த மூதாட்டியின் வீட்டிலிருந்து சிறுமி கையில் டம்ளரோடு நின்று கொண்டு, “சர்க்கரை வாங்கி வரும்படி சொன்னார்கள்” என்று வர முடியாது.

இல்லை, ஒருவரும் உள்ளே வரமுடியாது. அவள் மிகமிகச் சுதந்திரமாக இருக்கிறாள். அவளுக்கு எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கலாம். ஏன் அப்படி இருக்கிறாய் என்று யாரும் கேட்கமுடியாது.

ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று எட்டிப் பார்த்து வீட்டைச் சுற்றி வந்தாள். இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? எதுவும் செய்யாமலிருக்கலாம், சமையல்கூட. டேப் ரிகார்டரை ஆன் செய்து ஒவ்வொரு பாடலையும் நிதானமாகக் கேட்கலாம். ஆனால், அவள் எப்படிப் பாடல்கள் கேட்கமுடியும்? அவள் அதைச் செய்யக் கூடாது! குளியல்? அதை முதலில் செய்கிறேன். அவள் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள். ஆனால், ஏன் கதவை மூடவேண்டும்? யாரிடமிருந்து மறைக்க? அவள் ஏன் மூடினாள்? பழக்கதோஷம்தான். ஏன் பாதி திறந்து வைக்கக்கூடாது? கதவு திறந்தது. அவளுடைய தாய் திறந்த வெளியில் அவளைக் குளிப்பாட்டிய காட்சி கண் முன்பு விரிந்தது. திறந்த கதவுகள், ஆடையற்ற நாட்கள் பேரானந்தமானவை! அவை எப்போதாவது மீண்டு வருமா?

ஆடைகளின் அடுக்குகள் பெருகிய போது கதவுகளும் தாளிடப்பட்டன. சிறகுகள் போல் மென்மையாக இருந்த மனங்கள் படிப்படியாகக் குப்பைகளால் நிரம்பி, இனி பறக்கவோ அல்லது மிதக்கவோ முடியாது என்றாகிவிட்டன. மனிதர்கள் தங்களைத் தாங்களே சிறைப் படுத்திக்கொண்டனர்! ஒரு குதிரையைப் போல! இந்த நூற்றாண்டு மனிதர்களைவிட ஆதாமும் ஏவாளும் மிகப் புத்திசாலிகள். தடைகள் இல்லாதவர்கள்.

 

கொப்பரையில் சுடுதண்ணீர் கொதித்தது. அதைக் காலி செய்த போது அவளுக்கு முழு பலத்துடன் விசிலடிக்க வேண்டும் போலிருந்தது. ஓ என்று கத்தவேண்டும் போலிருந்தது. முழுவதுமாகக் கட்டுப்பாடின்றி இருப்பது எப்படியிருக்கும் என்பதை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்.

கல்லூரி விழாக்களின் போது அவள் எப்படி விசிலடிப்பாள்! அவள் மட்டுமா? எல்லாம் மாணவிகளும் செய்தனர். அது பெண்கள் கல்லூரி. எந்த இளைஞனும் அங்கில்லாமலிருந்ததே அப்போது பெரிய சுதந்திரம். ஒரு முறை, அனிதா தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டு அவளை வரவேற்பது போல விரலை வாயில் வைத்து விசிலடித்தாள். கல்லூரி முதல்வர் பின்னாலிருந்து திடீரென்று கண்ணில் பட்டார். அவள் எப்படி அவரைப் பார்க்காமல் போனாள்?

அவர், அவளைத் தன் அலுவலகத்திற்கு வரச்சொன்னார். பெண்கள் கல்லூரி, ஆண்கள் கல்லூரி, இருபாலார் கல்லூரி என்று அரைமணி நேரத்திற்கு பெரிய சொற்பொழிவு நடத்தினார். “நீ ஒரு பெண். அதுவும் இந்தியப் பெண்!” என்ற பாட்டையே மீண்டும் மீண்டும் பாடி, குமட்டுகிற அளவிற்கு வைத்துவிட்டார்.

ஒருவேளை விசிலடிக்க முடியாத அளவிற்கு பெண் பலவீனமாக இருப்பாளோ? அதைச் செய்யக்கூட ஓர் ஆணின் ஆதரவு அவளுக்குத் தேவைப்படுமா?

அவள் மிக மெலிதாக விசிலடிக்கத் தொடங்கினாள். விரைவில் அது உச்சத்தை அடைந்து விடலாம். அவளுக்கு திடீரென்று நிகழ்காலம் நினைவிற்கு வந்தது. ஒரு மெல்லிய ஒலி கூடக் கேட்கக்கூடாது. அவன் போவதற்கு முன்பு மூன்று முறை எச்சரித்துவிட்டுப் போனான். அவள் காற்றிழந்தவள் போலானாள்.

தண்ணீர் வேகமாக வந்து விழுந்தது. ஹரீனாவிற்கு பாம்புச் செவி. அவள் பக்கத்துவீட்டு மனிதர்கள் யாரிடமாவது சொல்லி, கதவில் சாளரம் வழியாகப் பார்க்கச் சொல்வாள். ஐயோ! அவன் போவதற்கு முன்னால் ஏன் அவள் குளியலை முடிக்கவில்லை?

வீடு முழுவதும் நடந்து உடம்பைத் துடைத்துக்கொண்டாள். வாழ்க்கை முழுவதும் இப்படியான ஓர் ஓய்விலிருந்தால் எப்படியிருக்கும்? அவளுக்குச் சலிப்பு வரலாம். ஆனால், எப்போதாவது ஒரு முழுநாளை இப்படிக் கழிக்க முடிந்தால் எவ்வளவு பரபரப்பாக இருக்கும்?

அவள் அறைக்குள் போனாள். என்ன அணிவது? ஆனால், ஏன் அணியவேண்டும்? யாரிடமிருந்து மறைக்க அணிய வேண்டும்?

படுக்கையில் உட்கார்ந்தாள். மேஜையின் மீது ஒரு சிகரெட் பாக்கெட் இருந்தது. பக்கத்தில் டிரேயும். உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. ஒரு சிகரெட்டை உருவி உதடுகளுக்கிடையில் வைத்துக்கொண்டு புகைப்பது போல நடித்தாள். வேடிக்கையாக உணர்ந்தாள். செய்து பார்த்தாலென்ன? முதல் உறிஞ்சலிலேயே இருமல் வந்தது. வாயை மூடிக்கொண்டு இருமினாள்.

அவளுக்கு மீண்டும் ஹரீனாவின் ஞாபகம் வந்தது.

எதிர்வரிசையிலிருந்த கல்லூரி மாணவனின் அறை இவள் வீட்டைப் பார்த்திருந்தது. பூட்டிய வீட்டினுள் திருடனிருப்பதாக அவன் நினைத்து விடுவானோ? அவன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டால்?

கட்டுப்படுத்த முடியாத இருமல். படிப்படியாகக் குறைந்தது. முகம் முழுவதும் வியர்த்தது. கண்களில் நீர் நிறைந்தது.

சிறிதுநேரம் உன்னிப்பாகக் கவனித்தாள். ஹரீனாவின் வீட்டுக் குக்கர் விசிலடித்தது. கிரைண்டர் இரைச்சலிட்டது. மணி இப்போது பத்தரை. அந்தப் பையன் கல்லூரிக்குப் போயிருப்பானா? புல்லியும் பாட்டியும் வீட்டு வேலைக்குப் போயிருப்பார்களா? அதிர்ஷ்டவசமாக! அந்தப் பகுதியிலிருந்து எந்தச் சிறிய ஒலியுமில்லை. குளிக்கும் போது முடிந்திருந்த கூந்தலை அவிழ்த்தாள். அது சிடுக்காகியிருந்தது.

தலையை வாரிக் கொண்டே, “இன்று உனக்கு எந்தச் சங்கிலியும் கிடையாது. உனக்குச் சுதந்திரம். விடுமுறை!” என்றாள். சுதந்திரமாகத் தலைமுடி பறந்தது.

அவளுக்குப் பசித்தது. அவள் பங்கிற்கான இட்லி அடுப்படியில் இருந்தது. நான்கு இட்லிகளைச் சட்னி மற்றும் வெண்ணையோடு சாப்பிட்டு விட்டு, சர்க்கரையின்றி ஒரு கிளாஸ் பால் குடித்தாள். சத்தமின்றித் தட்டையும்  கிளாஸையும் வைத்து விட்டுத் திரும்பினாள். “இனி மாலை வரை எதையும் கேட்கக்கூடாது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

வரவேற்பு அறைக்குப் போனாள். ரேடியோவைப் போட நீண்ட கை தானாகப் பின்வாங்கியது.

பின்னால் நடந்தவாறு, கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல உணர்ந்தாள். சுவர்கள் கூண்டு போலத் தெரிந்தன. அடைபட்ட சிங்கத்திற்கு தனக்குப் பிடிக்கும் போது கர்ஜிக்கும் உரிமையாவதுண்டு. அவளால் மெல்லியதாகக்கூட குரல் எழுப்பமுடியாது. ஒரு சத்தமும் ஏற்படுத்த முடியாமல் எப்படி வாழ முடியும்? எவ்வளவு மூச்சுத் திணற வைக்கும் செயல் இது!

நாள் முழுவதையும் இப்படி வெறுமே, உட்கார்ந்து, படித்துக் கடத்துவது என்பது சுவையற்ற, சலிப்பான இருப்பாக அல்லவா இருக்கும்? அவன் மாலை திரும்பி வந்தபிறகு இதைக் கேட்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்பான்!

நான்கு சுவர்களுக்குள் இங்குமங்கும் அலைவதிலும் சுற்றுவதிலும் ஏதாவது சுதந்திரம் இருக்கிறதா? சுதந்திரமென்பது அவள் கதவைத் திறந்து, தெருவில் நடந்து, உவகையோடு தடையின்றி இருப்பது. ஹரீனா, மூதாட்டி, கல்லூரி மாணவன், மற்றவர்கள் என்று எல்லோர் பார்வையிலும் முழுவதுமாகப் படுவது. சுதந்திரம் என்பது தனிமைப்படுதலா? சுதந்திரத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் விலை கொடுக்கப்படவேண்டிய தேவையுடையவையா இரகசியங்கள்? எவ்வளவு சுய ஏமாற்றமும் மாயையும்!

கை தன்னிச்சையாக வரவேற்பு அறையின் விளக்கைப் போட்டது. உடனடியாக மூளை தந்த ஆணையால் மனம் விளக்கை அணைத்தது. அவள் எரிச்சலடைந்தாள்.

அறையிலுள்ள அவன் அலமாரியைத் திறந்தாள். அவனுடைய டிரவுசர், சட்டையைப் போட்டுக்கொண்டாள். அவளை யாரும் இந்த உடையில் பார்த்து விடக்கூடாதா?

வீட்டின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டுள்ளது. ஜன்னல் கதவைத் திறந்து ஹரீனாவைக் கூப்பிடலாமா?அவள் பூட்டிய கதவு பற்றிக் கேட்டால் விளக்கம் சொல்லியாக வேண்டும். பொய் சொல்வது எளிதல்ல. உண்மையைச் சொன்னாலும் இப்படிப்பட்ட ‘மனநிலைகள்’ அவளுக்குப் புரியாது.

இதழின் வாட்டமாய், மனம் வாடியது.

அவள் சட்டையையும் டிரவுசரையும் கழற்றித் தூக்கியெறிந்தாள். வாழ்க்கை மிகமிக கட்டுப்பாடுகள் உடையது என்று நினைத்தாள். தனக்காக வாழாமல் யாருக்காகவோ தான் வாழ்வதாக நினைத்தாள்! பச்சாதாபம் எழ அவள் கண்கள் கருமையாயின. எந்தக் கணமும் அவளுடையதல்ல. ஒவ்வொன்றும் கடனாகப் பெறப்பட்டவை. துல்லியமாக அதற்கு என்ன விலை? சுய கடனாளியாவதுதான்.

இந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் கனமாக ஏற கண்கள் மூடிக்கொண்டன. எண்ணங்களிலிருந்து விலகி, தலையணையை அணைத்துக் கொண்டு அவள் தூங்கிப் போனாள்.

 

வள் கண் விழித்தபோது மாலை ஐந்தாகியிருந்தது. சுதந்திரக் கணங்கள் மேற்கை நோக்கிப் பறந்திருந்தன. கையிலிருப்பது பத்து பதினைந்து நிமிடங்கள்தான். அவன் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம். அவன் கதவைத் திறக்கும்போது அவளுடைய தற்போதை நிலையைப் பார்ப்பான். படுக்கையில் மல்லாக்க கிடந்தபடி, கதவு திறந்திருக்கிறது. ஓ, பெரிய கண்ணாடி அவளுடைய தற்போதைய நிலையைக் காட்டியது. அது கேலிக்குரியது. அவள் திடுக்கிட்டாள், படுக்கையில் ஒரு காபரே பெண் போல.

வேகமாக எழுந்து புடவையை அணிந்தாள். தலையைச் சீவிக்கொண்டு அலங்கரித்துக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்தாள்.

கடைசியில், பரிச்சயமான முகமும் உருவமும் – நிம்மதியாக இருந்தது. கையில் அன்றைய செய்தித்தாளோடு சோபாவில் உட்கார்ந்தாள், பூட்டு திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தபடி.

ஹரீனா, மூதாட்டி, புல்லி ஆகியவர்களின் அருகாமை இல்லாதபோதும், சுதந்திரக் கணங்களைத் தான் வேகமாகச் சுருக்கிக்கொண்டது ஏன் என்று அவள் ஆச்சரியப்பட்டாள்.

கழிக்கப்படாத கணங்கள் நழுவிப் போவதை அறியாமல்.

 

*****

 

வைதேகி (ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி) நவீன கன்னட இலக்கிய பெண் படைப்பாளி. ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து வாழ்க்கை வரலாற்று நூல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பதினைந்து சிறுவர் நாடகங்கள், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பல பங்களிப்புகள் உடையவர். அனுபமா, மாஸ்தி, எம்.கே. இந்திரா, நிரஞ்சனா, தன சிந்தாமணி, கதா என்று பல விருதுகள் பெற்றவர். ‘கிரௌஞ்ச பட்சிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இச்சிறுகதை ’சகுந்தலாவுடன் ஒரு மதியப் பொழுதும் மற்ற சிறுகதைகளும்’ என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: An Afternoon With Shakunthala and Other Stories, Translation into English: Sukanya Kanarally, Katha Bharati Series, The Library of Indian Classics, Sahithya Akademy

 

தி.இரா. மீனா <meenmix@yahoo.com>

Amrutha

Related post