கருணாகரன் கவிதைகள்

 கருணாகரன் கவிதைகள்

1
தன்னுடைய குரலில்
பறந்து கொண்டேயிருக்கிறது குயில்
அந்தக் குரலின் தூரமே
அதன் பயணம்
அந்தக் குரலின் இசையே
அதன் நிறம்
அந்தக் குரலின் கனவே
அதனுடைய வாழ்க்கை
அது தன்னுடைய குரலிலேயே
தன்னைத் தீட்டிக் கொண்டிருக்கிறது
குயிலாக
காட்டின் கீர்த்தனையாக
கானகத்துத் தேவதையாக

2
மிக நீண்ட இரவொன்றில்
அவள் தன்னுடைய பெயரை இலைகளால்
எழுதிக் கொண்டிருந்தாள்
அது மரமொன்றாக வளர்ந்து
அவளுடைய உருவில் நின்றது.

அந்த மரமே இந்த உலகின் சாயல்
அந்த மரம் / அவள்
அவளுடைய குருதியின் மணம்
அதன் பிசுபிசுப்பு
ஈரம்
எல்லாமாகி
இறுதியில் இரவானாள்.

பசிய நிறத்தையும் தன் மணத்தையும் குழைத்து
நமக்கான அன்பாக்கி விட்டுச் செல்கிறாள்
அந்த இரவின் ஆழத்துள்ளே.

3
எனக்கென்று எந்த வீடுமில்லை
என்ற துக்கத்தின் மீது நிற்கிறாயா?

யாருடையதோ ஒரு புறக்கணிப்பின் நாக்கு
உன்னைத் தீண்டிக் கொண்டேயிருக்கிறது என
குலைந்து குலைந்து
தீயாகிக் கொண்டிருக்கிறாய்.

அது உன் குருதியின் சுடரல்லவா!

மேலே விரிந்துள்ள கூரையில்
ஒளிர்கின்றனவே ஆகாய விளக்குகள்.
யாரும் தொடமுடியாத அந்த விளக்குகளில்
உன் நம்பிக்கையின் ஒளி சுடர்கிறதே!

அள்ளிக் கொள் அதை.

எங்கோ கேட்கிறது ஒரு மணியோசை
உன்னை அணைக்கும் தாயின் குரலது.
அதைப் பற்றியெழுந்து நில்
அதுவே உன் அன்னையின் ஆசீர்வாதம்.

உதிர்கிறதா இப்போதுன் துக்கத்தின் மணிகள்?
உன்னிதயத்தில் ஒரு இலை துளிர்க்கிறது நண்ப.

4
இந்தப் பச்சை மணம்
உன்னுடையது என்று சொல்வேன்
நிலம் அதை உனக்குப் பரிசளித்திருக்கிறது.
இந்தப் பச்சை மணம்
நதியின் ஈரத்திலிருந்து
அதன் அடியாழத்திலிருந்து முகிழ்த்து வருகிறது.
நதி அதை
வயலுக்கும் புல்வெளிக்கும்
மரங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது.
ஏன், நெருப்புக்கும் கூட அதைப் பகிரத் தயாராக உள்ளது.
நதியற்ற பரப்பில்
நிலம் தன் அடியாழ ஊற்றிலிருந்து
அதை மேலெடுத்துப் பரப்புகிறது.

பச்சை மணம்
எப்போதும் எங்கோ இருந்து கொண்டேயிருக்கிறது
யானையும் முயலும் அதை எடுத்துச் செல்கின்றன
ஒரு குழந்தை அதை முகர்ந்து பார்க்கிறது.

பச்சை மணம்
ஒளியாகப் பெருகிச் செல்கிறது
நான் அதை ஊடறுத்துச் செல்கிறேன்.

5
எந்த வாசல்களிலும்
இல்லாமற் போனதா
தெரிந்த ஒரு முகம்
போகவும் வரவுமான ஒரு கணம்
சின்னதாக ஒரு காரணம்
அழகியதொரு தோரணம்
சின்னஞ்சிறிய ஒரு மலர்
என்ற தவிப்போடு
அலைகின்றவனை அழைக்கிறது
தொலைவில் ஒரு வாசல்

தொலைவாசலில்
மென்னொளி வீசும் சின்னஞ்சிறிய சுடர்
கையசைத்து
வா என்றழைக்கிறது அவனை.

6
போரின் முள்ளில்
ஆடியது நம்முடைய ஊஞ்சல்
பொறிகளின் மேல் கனவுகளைப் பயிரிட்டோம்
நமது சிலந்தி பின்னிய வலையில்
நாமே பூச்சிகளாகினோம்.

7
அலாவுதீனின் அற்புத விளக்கு
உடைந்து நொருங்க
அடுத்த கணத்தில்
ஒரு பேரற்புதம்
நிகழக் காத்துளது

ஒரேயொரு நொடியில்
சுவரிலிருக்கும் பூச்சியை
வேட்டையாட முனையும் பல்லி

தப்பிப் பறந்து விடக்கூடும் பூச்சி

தவறிக் கீழே விழலாம் பல்லி

நீங்கள் இந்தச் சூழலை மாற்றி விடுவீர்கள்

பல்லி / பூச்சி / நீங்கள் / அந்தச் சூழலும் கணமும்
எல்லாவற்றோடும் ஓடிக் கொண்டிருக்கிறது
ஆடிக்கொண்டிருக்கும் நூலிழை ஒன்று.

கருணாகரன் <poompoom2007@gmail.com>

Amrutha

Related post