வடக்கில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் | கருணாகரன்

 வடக்கில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் | கருணாகரன்

கரைக்கப்படாத துயரத்தின் நிழல்

மிழ்நாட்டுக் கிராமங்களில் வறிய நிலையிலிருந்த விவசாயக் கூலிகள், 1823இல் பிரித்தானியர்களால் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு 200 ஆண்டுகளாகிறது. இதையொட்டி ‘மலையகம் 200’ என்ற பொருளில் பல்வேறு வகையான உரையாடல்களும் காட்சிப்படுத்தல்களும் நிகழ்கின்றன. இவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர் சூழலிலும் நிகழ்கின்றன. இது இந்த மக்களுடைய வரலாற்றையும் வாழ்வையும் அவர்களுடைய வலியையும் அந்த மக்களும் பிறரும் அறிந்துகொள்வதற்குப் பல வகையான சாத்தியங்களை அளிக்கின்றது.

ஆனால், இதைப் பற்றிப் பேச வேண்டிய இன்னொரு பிராந்தியமான இந்தியாவில் கனத்த மௌனமே நிலவுகிறது. கோவையில் 22.10.2023இல் ‘மலையக, தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம்’, ‘மலையகம் 200 – பன்னாட்டுக் கருத்தரங்கம்’ ஒன்றை நடத்தியுள்ளது. தமுஎக சங்கம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதாக அறிய முடிகிறது. அவ்வளவுதான். அதற்கப்பால் வேறெந்த நிகழ்வும் நடப்பதாகத் தெரியவில்லை.

இந்தியச் சூழலிலும் முறையான உரையாடல்களும் இந்த வரலாற்றின் காட்சிப்படுத்தல்களும் நிகழ வேண்டும். அப்படி நிகழும்போதுதான் இந்த மக்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் புதிய திருப்பங்கள் நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். இந்த வரலாற்றைப் பற்றிய முழுமையான சித்திரத்தையும் நாம் எட்ட முடியும்.

இந்த மக்கள் 200 ஆண்டுகளாக இலங்கையின் மத்திய பகுதிகளில் உள்ள மலையகப் பகுதிகளில் வாழ்கின்றனர். வாழ்கின்றனர் என்று சொல்வதை விட வேலை செய்யும் இயந்திரங்களாகப் பாவிக்கப்படுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இலங்கையின் மலையகப் பகுதிகளில் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் ஆக்கப்பட்டனர். இதற்கிடையில் நிகழ்ந்த பயணத்திலும் மலைப் பகுதிகளை தோட்டங்களாக்கும் போதும் ஏராளம்பேர் இறந்து விட்டனர். அந்த இறப்புகளுக்கு எந்தவிதமான மதிப்பும் அடையாளமும் இல்லை. இன்னும் மலையகத்தில் அந்த மக்கள் மிக நெருக்கடியான – உரிமையற்ற வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிலம் கிடையாது. அதனால் அவர்களுக்கு சொந்தமாக வீடில்லை. ஏன், மலசல கூடத்தைக் கூடத் தங்களுக்கென்று அமைத்துக்கொள்ள முடியாதிருக்கின்றனர். அவர்களுடைய குடியிருப்புகளுக்குச் செல்லும் வீதிகள் புனரமைக்கப்படுவதில்லை. சரியான பாடசாலைகளில்லை. இப்படிப் பல அவலங்கள். பல வகையான துயரங்கள்.

இன வன்முறைகள் காரணமாக இவர்களில் ஒரு தொகுதியினர் இலங்கையின் வட பகுதியில் பின்னாளில் குடியேறியுள்ளனர். இவர்களை விட இன்னொரு தொகுதியினரும் வடக்கிலே நீண்டகாலமாக உள்ளனர். இவர்களைக் குறித்தெல்லாம் யாரும் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை. இப்போது நிகழும் ‘மலையகம் 200’ என்ற உரையாடல்களில் கூட இவர்களைக் குறித்த அவதானம் குறைவாகவே உள்ளது. ஆகவே இவர்களைக் குறித்து வரலாறு தன்னுடைய கவனத்தைக் கொள்ளத் தவறுகிறது. அதற்கான அக – புறக் காரணங்கள் வலுவாக உண்டு. இந்தச் சிறுகட்டுரை அதை முழுமையாக ஆராயவில்லை. இது ஒரு சுருக்கக் குறிப்பாகும். ஆனால், இந்தக் கட்டுரையாளர் அதைக் குறித்து தன்னுடைய நூலொன்றில் விரிவாகப் பேசியுள்ளார்.

வட பகுதியில் இந்திய வம்சாவழி மக்களுடைய / மலையக மக்களின் அடையாளம், வாழ்நிலை:

வடக்கிலே, கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்திலேயே இந்திய வம்சாவழியினர் அல்லது மலையக மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். (இவர்களில் பெரும்பான்மையானோர் இப்பொழுது தம்மை இந்திய வம்சாவழி மக்களாக அழைக்கப்படுவதையோ மலையக மக்கள் என்று கருதப்படுவதையோ விரும்பவில்லை. ஆனாலும் இவர்களை இன்னும் தனித்துப் பார்க்கும் பார்வை – விலக்கிப் பிறத்தியாராகப் பார்க்கும் வார்வை – யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் உண்டு. யாழ்ப்பாணத்தில் தீவிர நிலையிலும் வன்னியில் மென்னிலையிலும் உள்ளது.)

வடக்கில் இவர்கள் இருவகையாக உள்ளனர்.

  1. இந்தியாவிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக – தேவைகளுக்காக வடக்கிற்கு நேரடியாகக் கொண்டு வரப்பட்டவர்களும் வந்தவர்களும்.
  1. இலங்கையின் தெற்கிலும் மேற்கிலும் நடத்தப்பட்ட இன வன்முறையினால் பாதுகாப்புத் தேடி வடக்கிற்கு வந்தவர்கள்.

முதலாவது தொகுதியினர் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராகும். சில ஆயிரம் வரையானோர். இவர்கள் பிரித்தானியர் காலத்திலும் அதற்கு முற்பட்ட சூழலிலும் பின்னரும் வடக்கிற்கு வந்து குடியேறியவர்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில். இதில் மன்னார்ப் பகுதியில் குடியேறியோர் பெரும்பாலும் கடற்றொழிலை ஆதாரமாகக் கொண்டவர்கள். யாழ்ப்பாணத்தில் குடியேறியோர் வணிகம், நகைத் தொழில், மருத்துவம், கலை, ஊடகத்துறைகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் வண்ணைச் சிவன் கோவில், கன்னாதிட்டி, நாச்சிமார் கோவிலடி, பெருமாள் கோவிலடி, நல்லூர் செட்டித்தெரு போன்ற இடங்களில் இவர்கள் அதிகமாக இருந்தனர். அதாவது யாழ்ப்பாண நகர்ப்பகுதியில். தொழில், பொருளாதாரம் போன்றவற்றினால் வர்க்க நிலையில் மேலோங்கியிருந்ததால் இவர்களுக்கும் யாழ்ப்பாணச் சமூகத்தினருக்கும் இடையில் பெரிய இடைவெளிகள் ஏற்படவில்லை. இன்னும் இவர்கள் யாழ்ப்பாண நகரம், அளவெட்டி, சுதுமலை, வடமராட்சி போன்ற இடங்களில் உள்ளனர். காலப்போக்கில் இரு தரப்பினரும் கலந்துவிட்டனர்.

ஆனால், பின்னர் வடக்கிற்கு வந்து கூலித் தொழிலாளர்களாகக் குடியேறியோரும் குள நிர்மாணம், நெடுஞ்சாலை அமைத்தல் போன்றவற்றுக்காகப் பிரித்தானியரால் கொண்டு வரப்பட்டவர்களும் அப்படியல்ல. அவர்கள் தனியாக யாழ்ப்பாணம், வன்னிச் சமூகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இங்கு கூலிகளாகவும் இந்திய வம்சா வழியினாராகவுமே அடையாளம் காணப்பட்டனர். அதற்கான பிரத்தியேகச் சொற்களின் வழியாக அடையாளமிட்டு அழைக்கப்பட்டனர்.

இரண்டாவது தொகுதியினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகும். இவர்கள், தெற்கிலும் மேற்கிலும் 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் சிங்களத் தரப்பினரால் நடாத்தப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள். ஏறக்குறைய இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர். அங்கே இனி இருக்க முடியாது என்ற நிலையில், பாதுகாப்புத் தேடி வடக்கிற்கு வந்தவர்கள். அப்படி வந்தவர்கள் வன்னிப் பகுதியில் தந்திரமாக நிறுத்தப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. யாழ்ப்பாணச் சமூகத்துடன் கலந்துவிடக் கூடாது என்பதே இதற்கான காரணமாகும். யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிய அமைப்பும் அதன் மனோ நிலையும் இந்த மக்களுக்கு எதிரானதாக இருந்தது. அங்குள்ள அடிநிலைச் சமூகத்தினரான ஒடுக்கப்பட்ட மக்கள்கூட இந்த மக்களை தமக்குக் குறைவானவர்களாக – கீழானோராகவே – பார்த்தனர். இடதுசாரிகளால் கூட இவர்களை யாழ்ப்பாணத்துக்குள் உள்வாங்க முடியவில்லை. இதனால் பிறிதொரு மக்கள் கூட்டமாக தனித்து விடப்பட்டனர். இப்பொழுது இதைச் சிலர் மறைக்கக் கூடும். ஆனால், மறுக்கவே முடியாத உண்மை இது. இவர்கள் அநேகமாக ‘மலையக மக்கள்’ என்று அழைக்கப்பட்டனர், அடையாளம் காணப்பட்டனர். இதில் ஒரு தொகுதியினர் மலையகப் பகுதிகளுக்கு அப்பால் கொழும்பு, காலி போன்ற இடங்களிலிருந்து வந்திருந்தோர். ஆனாலும் இவர்கள் எல்லோரும் ‘மலையக மக்கள்’ என்ற வகையிலேயே அடையாளம் காணப்பட்டனர்.

வன்னியில் நிறுத்தப்பட்ட இந்த மக்களுக்கு உரிய வகையில் குடியேற்ற நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான ஆணையை அரசோ அன்றைய தமிழ் அரசியல் தலைவர்களோ தமிழ் அரசியற் கட்சிகளோ நிர்வாகத்தினருக்கு வழங்கவும் இல்லை. அரச நிர்வாகப் பிரிவினரும் இந்த மக்களைக் குறித்து அக்கறையோடு செயற்படவில்லை. இவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு யாருமே இருக்கவில்லை. இதை அன்றைய பத்திரிகைகளைப் படித்தாலே புரிந்துகொள்ள முடியும். அன்று இந்த மக்களுடைய நிலையைக் குறித்து ஒரு பத்திரிகை கூட உரிய முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிடவும் இல்லை. ஆசிரியர் தலையங்கள் எழுதவும் இல்லை. பேசாப் பொருளாகிய சமூகத்தினராக விடப்பட்டனர். இதனால் இந்த மக்கள், அன்றைய வன்னிச் சூழலில் மிகமிகக் சிரமப்பட்டனர்.

அன்றைய வன்னிச் சூழல் என்பது பெருங்காடுகள் நிறைந்த பிரதேசமாகும். யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளும் பாம்பு, நுளம்புக் கடி என்ற பேரச்சச் சூழலையும் கொண்டது. இதனால் பெருந்தோட்டப் பகுதியிலும் தென்னிலங்கைச் சூழலிலும் பட்ட சிரமங்கள் போதாதென்று வடக்கிலும் இவர்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. மலையகப் பகுதியில் காலப்போக்கில் தொழிற்சங்கங்கள் உருவாகி, அந்த மக்களுக்குக் குரல் கொடுத்தன. மலையகத்துக்கெனத் தனியான அரசியற் சிந்தனை உருவாகியது. அரசியற் தலைமைகள் உருவாகி அங்கிருக்கும் மக்களுக்காக போராடின. கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயற்பாடுகளிலும் தனித்துவமான இயங்கங்கள் ஈடுபட்டன. இன்று ‘மலையகம்’ என்ற அடையாளத்தோடு அரசியல், இலக்கியம், சமூகவியல் துறைகள் துலங்குவதற்கு ஏதுவான சூழ்நிலை வளர்ச்சியடைந்திருந்தது. இவை எதுவும் வடக்கில் – வன்னிப் பகுதியில் குடியேற்றிய மக்களிடம் நிகழவில்லை. அதற்கு இடமளிக்கப்படவும் இல்லை. ஆகவே இவர்கள் அடையாளமற்ற – வரலாறற்ற மக்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், தமது வருவாயை அதிகரிப்பதற்கான கூலிகளாகவும் அரசியற் தேவைகளுக்கான தலைகளாகவும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர். பதிலாக இந்த மக்களுடைய உரிமைகள் மதிக்கப்படவில்லை. வசதிகள் எதுவும் அளிக்கப்படவும் இல்லை.

இந்த மக்கள் வன்னியில் குடியேறிய காலப்பகுதியில் வன்னியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வன்னியில் இருந்தோருக்கும் கட்டம் கட்டமாக அரச நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவர்களுக்கான அமைப்புகளும் செயற்பாட்டியக்கங்களும் உருவாகின. இந்த அரச நிலமானது குடியிருப்புக்குத் தனியாகவும் விவசாயச் செய்கைக்குத் தனியாகவும் வழங்கப்பட்டது. விவசாயச் செய்கைக்குரிய நிலத்துக்கு நீர் விநியோகம் (தண்ணீர்ப் பங்கு) இருந்தது. இதற்கென இரணைமடு, அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், விசுவமடுக்குளம், பிரமந்தனாறுக்குளம், முத்தையன்கட்டுக்குளம், வவுனிக்குளம், கட்டுக்கரைக்குளம் எனப் பல குளங்கள் மிகப் பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டன. அல்லது புனரமைப்புச் செய்யப்பட்டன. இந்தக் குளங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பாடசாலைகள், சந்தைகள், வீதிகள், கமநலத் திணைக்கள அலுவலகம், மருத்துவமனை, விளையாட்டரங்கு, போக்குவரத்து எனத் தேவையான அனைத்து உட்கட்டுமாணங்களும் உருவாக்கப்பட்டது. கூடவே துறைசார் நிர்வாகக் கட்டமைப்பும் அதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், மலையக மக்களுக்கு இவை எதுவுமே வழங்கப்படவில்லை. அவர்கள் தாமாகவே காடுகளை வெட்டிக் குடியிருப்புகளை உருவாக்க வேண்டியிருந்தது. இவற்றில் பெரும்பாலானவையும் அத்துமீறிய குடியிருப்புகளாகவே உருவாகின. அத்தனையும் நீர் வசதியில்லாத ஒதுக்குப்புறங்களிலேயே அமைந்தன. அதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி உருவாக்கப்பட்ட குடியிருப்புக் காணிகளைக் கூட வன்னியிலிருந்த யாழ்ப்பாணத்தவர்களும் வன்னியின் பூர்வீகக் குடியினரும் குறைந்த விலைக்கு வாங்கி விட்டு மறுபடியும் இந்த மக்களைக் காடுகளை நோக்கித் துரத்தினர். சட்டபூர்வமற்ற குடியிருப்புகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியாது. ஆகவே அபிவிருத்தியைச் செய்வதற்கான வாய்ப்புகளில்லை என்று இந்த மக்களின் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டன. மிக நீண்ட காலத்துக்குப் பின்னரே (அதுவும் யுத்தம் முடிந்த பின் உருவாகிய மீள்குடியேற்றத்துக்குப் பிறகே) சிறிய அளவில் அபிவிருத்தியும் வளப்பகிர்வுகளும் நடக்கத் தொடங்கியது.

அன்றைய வன்னிச் சூழல் காடுகள் நிறைந்தது. பொதுவாகவே போக்குவரத்து வசதிகள் குறைந்தது. இந்த நிலையில் இந்த மக்கள் காடுகளுக்குள்ளேயே தங்களுடைய குடியிருப்புகளை அமைக்க வேண்டியிருந்தது. குடிநீருக்கே அலைய வேண்டியிருந்தது. முல்லைத்தீவில் மன்னாகண்டல், றெட்பானா, கிளிநொச்சியில் தருமபுரம், கல்மடு, மாயவனூர், ஜெயபுரம், ஊற்றுப்புலம், காந்தி கிராமம், முறிப்பு போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

அன்று தென்பகுதியில் பாதிக்கப்பட்டு வந்த வடக்கின் பூர்வீக மக்களுக்கு உதவவும் ஆதரவளிக்கவும் ஆறுதல் தரவும் அவர்களுடைய உறவுகளும் ஊரவர்களும் இருந்தனர். இவர்களுக்கோ யாருமே இருக்கவில்லை. இந்தச் சூழலில் இடதுசாரிகள் மட்டும்தான் ஓரளவுக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்தனர். இவர்கள் குடியேறிய விசுவமடு, நெடுங்கேணி, வவுனியா, செட்டிகுளம், கிளிநொச்சி, முத்தையன்கட்டு, மாங்குளம் போன்ற இடங்களில் இடதுசாரி இயக்கச் செயற்பாட்டாளர்கள் இணைந்து நின்று குடியிருப்புகளை அமைப்பதற்கும் இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் பங்களித்தனர். ஆனால், இது மிகச் சிறிய அளவில்தான் இருந்தது. இடதுசாரிகளின் சக்திக்கு ஏற்ற அளவில்.

1970களில் டேவிற் ஐயா, டொக்ரர் ராஜசுந்தரம், சண்முகலிங்கம் உள்ளிட்டோர் முன்னெடுத்த ‘காந்திய’ இயக்கம் இந்த மக்களுக்கு உதவுவதில் முன்னின்றது. அதனுடைய பணிகள் முக்கியமானவை. அதேவேளை அது இந்த மக்களை சிங்கள மக்கள் குடியேறக் கூடியதாகக் கருதப்பட்ட எல்லைப்புறக் கிராமங்களில் குடியேற்றியது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். எல்லைப்புறங்களில் இந்த மக்கள் குடியேற்றப்பட்டதால் சிங்களத் தரப்பின் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கூடவே யானை, கரடி போன்ற காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கும் உள்ளாக வேண்டியிருந்தது. பாம்புக் கடி, நுளம்புத் தொல்லை வேறு பாடாய்ப்படுத்தியது. அத்துடன் எல்லைப்புறங்களில் அடிப்படை வசதியைப் பெறுவதே பெரும் சிரமாக இருந்தது. இந்த நிலையில்தான் இவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

‘தமிழர் தாயகம்’ என்ற நிலப்பாதுகாப்புக் கோட்பாட்டுக்கு அரண்களாக நிறுத்தப்பட்டதும் தொழிற்பட்டதும் இந்த மக்களே. அதனால் இவர்கள் சந்தித்த தொடர்பாதிப்புகள் பெரியது.

பின்னர் ஈரோஸ், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற ஆயுதப் போராட்ட இயக்கங்களும் பின்னாளில் விடுதலைப்புலிகளும் இந்த மக்களுக்கு ஓரளவுக்கு உதவின. ஆனால், எல்லோரும் விட்ட தவறு என்னவென்றால், இந்த மக்களுடைய அடிப்படை உரிமைகளைக் குறித்தும் அரசியல், சமூக பொருளாதாரப் பாதுகாப்பு, வளர்ச்சி பற்றியும் தீர்க்கமாகச் சிந்திக்கவில்லை. இதனால் இவர்கள் நவீன அடிமைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வன்னியில் விவசாயக் கூலிகளாக்கப்பட்டனர். அதை விட்டால் தேனீக்கடைத் தொழிலாளர்கள், கரை வலை இழுப்போர், விறகு வெட்டிகள், கிணறு தோண்டிகள், தினக்கூலிகள், சுமை தூக்கிகள் என்ற வகையிலேயே இவர்களுடைய வாழ்க்கையும் தொழிலும் இருந்தது. ஆண்களும் பெண்களும் இணைந்த கூலிகளாகவே பெரும்பாலானோர் இருந்தனர். இன்னொரு தொகுதியினர் யாழ்ப்பாணத்தவர்களுடைய வன்னிக் காணிகளின் பராமரிப்பாளர்களாகவும் அந்தக் காணிகளில் கூலிகளாகவும் இருந்தனர். இந்தக் குடும்பங்கள் முழுமையாகவே முதலாளிகளுக்கு வேலை செய்ய வேண்டியிருந்தது. இந்தச் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதைப் பற்றி யாரும் குற்றவுணர்வே கொள்ளவில்லை. வன்னியில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திற்கும் தொழிலாளர்களாகச் சிறார்களை அழைத்துச் சென்றனர்.

இவ்வாறான நிலையில் இவர்களால் சமூகமாகத் திரளக் கூடிய சாத்தியங்கள் இல்லாமற் போனது. ஒரு சமூகமாகத் திரள்வதற்கான பிரக்ஞை உருவாகுவதற்கு அடிப்படையானது நிரந்தரத்தன்மையும் பொருளாதார நிலையுமாகும். அது இல்லையென்றால் அந்தப் பிரக்ஞை எழாது. எழுந்தாலும் அது சமூகப் பிரக்ஞையாக உருவாகாது. பொருளாதார நிலையில் ஏற்படும் மத்தியதர வர்க்கத்தின் அறிவுசார் வளர்ச்சியே தமது அடையாளத்தைக் குறித்தும் தமது இருப்பைக் குறித்தும் சிந்திக்கத் தூண்டும். வன்னியில் இந்த மக்களிடம் அதற்கான சாத்தியங்கள் அப்பொழுது இருக்கவில்லை. இதனால் சமூகமாகத் திரள்வதற்கான அடிப்படைகள் நீண்டகாலமாக உருவாகவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அப்படியானதொரு சிந்தனையோ எண்ணமோ உருவாகவில்லை.

இதனால் இவர்கள் பெருவாரியாக வாழ்ந்தாலும் உதிரிகளைப் போலவே இருந்தனர். உதிரிகளை அல்லது உதிரி நிலையை எவரும் இலகுவாகக் கையாள முடியும். எத்தகைய பாதிப்புகளோ அநீதியோ இழப்புகளோ நேர்ந்தாலும் அதை எதிர்க்கவும் அதற்காகக் குரல் கொடுக்கவும் உதிரித்தன்மை இடமளிக்காது. இந்தத் தன்மை இவர்களை மிகப் பாதிப்புக்குள்ளாக்கியது. நீண்டகாலத்துக்குப் பலவீனமாகவே வைத்திருந்தது. பொருளாதாரச் சுரண்டல் தொடக்கம் பாலியற் சுரண்டல் வரையில் இந்தப் பாதிப்பு நீண்டது. இது இவ்வாறான நிலைமையில் உள்ள அத்தனை சமூகத்தினருக்கும் நேரும் பொது விதியாகும்.

சமூகமாகத் திரளக் கூடிய நிலையோ அதற்கான கூட்டுணர்வோ இருந்தால்தான் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் கிடைக்கும். மட்டுமல்ல அந்தக் கூட்டுணர்வு தமது அடையாளத்தைக் குறித்துச் சிந்திக்கவும் வைக்கும். இதை அடிநிலையில் உள்ள மக்கள் எட்டுவது எளிதானதல்ல. இரண்டாவது, இவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அரசியற் சக்திகள் அல்லது தொழிற்சங்கங்கள் வேண்டும். குறைந்த பட்சம் கலை, இலக்கிய, அரசியல் உணர்வுள்ளவர்களாவது எழ வேண்டும். இது இவர்களுக்குக் கிட்டவில்லை.

ஆக இந்த இரண்டு அடிப்படை வலுக்களும் இல்லாத நிலையில் உதிரி மக்களாகவே இவர்கள் வாழ வேண்டியதாயிற்று. ஆனால், இவர்களை ஒரு சமூகமாகவே (பின்தங்கிய, பிறத்தியார் சமூகம் என) அடையாளம் கண்டு பிற (யாழ்ப்பாண, வன்னிச்) சமூகத்தினர் நடத்தினர். இது ஒரு சுவாரசியமான – ஆனால், துயரமான முரணாகும்.

Malaiyagam

தம்மிலிருந்து வேறுபடுத்திக் கொள்வதற்கு இவர்களை ஒரு தனிச் சமூகத்தினராக நோக்கியவர்கள், மறுபக்கத்தில் இவர்களை ஒரு சமூகத்தினர் என்ற வகையில் அவர்களுக்குரிய அடிப்படைத் தகுதிகளான அரசியல் பெறுமானத்தையும் சமூகப் பண்பாட்டு வலுக்களையும் பொருளாதார அடிப்படைகளையும் வளப்பகிர்வையும் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. இவர்களைத் தமக்குப் பயன்படுத்துவதற்கும் தமக்குக் கீழே வைத்துக்கொள்வதற்கும் விரும்பினார்களே தவிர, சக மனிதர்களாக அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. இதனால்தான் சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக – இரண்டு மூன்று தலைமுறைகளாக – இவர்கள் எந்த அடையாளத்தையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்க வேண்டியிருந்தது.

கூலிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மக்களை கிறிஸ்தவ அமைப்புகளும் இயக்கங்களுமே மெல்ல மெல்ல அடுத்த கட்ட நிலைக்கு உயர்த்தின எனலாம். ஆனால், இதில் கிறிஸ்தவ அமைப்புகள் இந்த மக்களை மதம் மாற்றிய சம்பங்களும் நிறைய நடந்துள்ளது. வன்னியில் உள்ள கிறிஸ்தவக் குடியிருப்புகளை நோக்கினால் இந்த உண்மை புரியும். குறிப்பாக புதிய கிறிஸ்தவக் கிராமங்கள் இந்த வகையானவை. ஆரோக்கியபுரம், சமாதானபுரம், அமெதி நகர், சாந்திபுரம் என்ற பெயர்களே இதற்கு அடையாளம். ஆனாலும் இதைத் தவிர்க்கவும் முடியாத நிலை இருந்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். இது ஒரு அடையாள அழிப்புத்தான். இது ஒரு வன்முறையே. பலவீனமான நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரோபாயச் செயல் இது என இன்று யாரும் இதைப்பற்றிக் கூற முற்படலாம். ஆனால், அதற்கு இடமளித்தது யார்? இந்த மக்களுக்கு ஒரு சிறிய வீட்டையும் (உண்மையிலேயே இந்த வீடுகள் மிகச் சிறியவையே) ஒரு சிறு துண்டு நிலத்தையும் (இந்த நிலமும் மிகமிகச் சிறியதே. ஆகக் கூடியது கால் ஏக்கர் நிலம் மட்டுமே) இந்த அமைப்புகள் வழங்கின. இதில் கூடுதலான ஆர்வம் காட்டியவை தென்னிந்திய திருச்சபை தொடக்கம் றோமன் கத்தோலிக்கம் அல்லாத பிற கிறிஸ்தவப் பிரிவுகளேயாகும்.

இவை இந்த மக்களின் கல்வியில் கூடுதலான அக்கறையைக் காட்டின. இன்று இந்தச் சபைகளின் போதகர்களாக இந்தப் பிரதேசங்களில் இருப்பவர்களில் அநேகர் இந்த மக்களில் இருந்து உருவாகியவர்களே. அதைப்போல ஏனையவர்கள் படித்து பிற துறைகளில் மிளிரத் தொடங்கினர். இது 1990க்குப் பின்னரே ஓரளவுக்கு நிகழத் தொடங்கியது.

1958இல் வன்னியை நோக்கி வந்த இந்த மக்களிலிருந்து 1990களில்தான் அங்குமிங்குமாக அடையாளம் தெரியக் கூடிய ஆளுமைகள் மேற்கிளம்பத் தொடங்கினர். இவர்கள் வளர்ச்சியடைய மேலும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் தேவைப்பட்டது. அதற்குள் இவர்கள் பட்ட சிரமங்களும் சந்தித்த அவமானங்களும் சாதாரணமானதல்ல. இன்றும் அரச உத்தியோகத்தில், வர்த்தகர் சங்கம், கோயில் நிர்வாகம் போன்ற பொதுவெளியில் இவர்களுக்குப் பெரும் சவால் உண்டு. இதைக் கடக்க முடியாமலே உள்ளனர். இதுதான் பேரவலம்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத் துயரத்துக்குப் பிறகு கடுமையான சிரமத்தின் மத்தியில் படித்து முன்னேறினாலும் பிற தொழில்களாலும் உழைப்பினாலும் வளர்ச்சியடைந்தாலும் அதை அங்கீகரிப்பதற்கு தமிழ்ச் சமூகத்தின் மனதில் இடமில்லை. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரே பகிரங்கமாக ‘வடக்கத்தையான்’ என்று சொல்லும் நிலைதான் உள்ளது. இன்னும் இந்த நீதி மறுப்புத் தொடர்கிறது. நீதியைக் குப்பையிலே போட்டு விட்டு வேறு எதையோவெல்லாம் எடுத்து வைத்திருக்கிறோம். நீதியைக் குப்பையில் போட்டு விட்டால் மிஞ்சுவது என்ன? அதற்குப் பிறகு எப்படிச் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியும்? சமூக நீதியையும் ஜனநாயகத்தையும் எவ்வாறு எதிர்பார்ப்பது?

இந்தச் சந்தர்ப்பத்திலும் தவிர்க்க முடியாமல் நாம் இயக்கங்களையே இங்கும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த மக்களை அனைத்துச் சுரண்டல்களில் இருந்தும் மீட்டது இயக்கங்கள்தான். அது முற்று முழுதான மீட்பு நடவடிக்கை என்று சொல்லமுடியாது விட்டாலும் சிறுவர் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதையும் பாலியல் ரீதியான சுரண்டல்களையும் இயக்கங்களின் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தினரால் மேற்கொள்ள முடியவில்லை. இவை இரண்டுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானோருக்கு சிறிய அளவிலாயினும் நிரந்தரக் குடியிருப்புக்கான நிலம் கிடைத்தது. பின்பு விரைவான சமூக முன்னேற்றம் ஏற்பட்டது. விரைவான சமூக முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்போது தாம் ஒரு தனிச் சமூகத்தினர் என்ற உணர்வுந்தலுக்கு உள்ளாகினர். ஆனால், இந்த வளர்ச்சியில் ஏற்படக் கூடிய சிக்கல்களும் உருவாகின. பலவகையான சிந்தனைப் போக்குகளும் நிலைப்பாடுகளும் உருவாகின. தாம் ஒரு சமூகத்தினர் என்றாலும் அதற்குள் எழுந்த அரசியல் உணர்வுகளும் சமூக நிலைப்பாடுகளும் பலவாகின. மத்தியதர வர்க்கத்தை நோக்கி வளர்ச்சியடையும் எந்தச் சமூகத்திலும் நிகழும் தளம்பலும் தடுமாற்றமும் ஏற்படுவது வழமை. அது இந்த மக்களிடமிருந்து வளர்ச்சியடைந்தோரிடத்திலும் காணப்படுகிறது. தம்மைத் தனித்து அடையாளம் காண்பதற்கும் அதை முன்னிறுத்துவதற்கும் பதிலாக வடக்கில் உள்ள பெருந்திரள் (தமிழ்த் தேசிய) அரசியலுக்குள்ளும் அந்தச் சிந்தனைப் போக்கிற்குள்ளும் இவர்கள் சங்கமிக்கத் தொடங்கியுள்ளனர். சரியாகச் சொன்னால் கரையத் தொடங்கினர். ஆனால், எப்படித்தான் சங்கமித்தாலும் கரைந்தாலும் இவர்களைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டு வெளியே நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது வடக்குச் சமூகம்.

ஆனாலும், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடபுலத்தினரால் கையாளப்பட்டதைப்போல, வடக்கு நோக்கி வந்த அல்லது வடக்கிலிருக்கும் மலையகத் தமிழர்களையோ இந்திய வம்சாவழி மக்களையோ இன்று முழுமையாகக் கையாள முடியாது. அதாவது வெறும் கூலிகளாக நடத்த முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சிறார்களை வேலைக்கு அமர்த்தவும் முடியாது.

இதற்குக் காரணம், முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளதைப்போல படிப்படியாக தங்களுக்கான நிலத்தைப் பெற்றுக்கொண்டதும் இடதுசாரிகளின் மென்னாதரவு உட்பட இயக்கங்களின் ஆதரவு கிடைத்ததுமாகும். இன்னொன்று, தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட பலத்த போராட்டங்கள், கடினமான முயற்சிகளின் வாயிலாக மெல்ல மெல்ல இவர்களுடைய அடுத்த தலைமுறையினர் கல்வியைப் பெற்றதும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டதுமாகும். ஏறக்குறைய கீழ் மத்தியதர வர்க்கம் ஒன்று இவர்களிடையே வளரத் தொடங்கியுள்ளது.

இது சிந்திக்கவும் சுயமாக நிற்கவும் கூடியதொரு சமூக வளர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் ஒட்டு மொத்த சமூகத்தினரும் இந்த வளர்ச்சிக்குட்பட்டனர் என்றில்லை. இருந்தாலும் இந்தச் சமூகத்திற்குள் இத்தகைய ஒரு வளர்ச்சி நிலை சிறிய அளவிலேனும் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வளர்ச்சியை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதில் வடக்கு வாழ் சமூகத்தினருக்கு உளச் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் தங்களால் முடிந்த அளவுக்கு இந்தச் சமூகத்தினரைத் தொடர்ந்தும் ஒடுக்குவதற்கு முற்படுகின்றனர். வெளியே தெரியாமல் இந்த ஒடுக்குதல் நிகழ்கிறது. இது எப்படியென்றால் –

  1. நகர எல்லைக்கு அப்பால் இந்த மக்களுடைய குடியிருப்புகளைத் தள்ள முயற்சிப்பது. (இந்த மக்களின் குடியிருப்புகளைப் பட்டியலிட்டு, அவற்றின் அமைவிடம் எங்கே உள்ளது, அவை எத்தகைய நிலையில் உள்ளன என்பதை அவதானித்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும்).
  2. கோயில்கள், பொது நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றில் இவர்களுக்கான உரிமையையும் இவர்களுடைய பிரதிநிதித்துவத்தையும் இல்லாமற் செய்யும் முயற்சிகள். (வன்னியில் உள்ள கோயில்களின் விவரங்களைத் திரட்டி, அவற்றில் யார் யாரெல்லாம் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். இந்த மக்களுக்கு இவற்றில் வழங்கப்பட்டுள்ள இடம் என்ன? அது எவ்வளவு என்று பார்க்கலாம். அதைப் போல வன்னி மாவட்டங்களில் உள்ள அரசுசார் பொது அமைப்புகள், அரசு சாராத அமைப்புகள் போன்றவற்றில் இவர்களுக்கான இடம் எந்தளவில் உண்டு? அதற்கு மேல் செல்ல முடியாததற்கான காரணம் என்ன என இரண்டு பக்கத்தினரையும் கேட்டு அறிந்துகொள்ளலாம்).
  3. நீர்ப் பயன்பாட்டிலிருந்து – பாசன நீர்ப் பாவனையிலிருந்து அகற்றினர். குளமும் நிலமும் தமக்கே தவிர, வந்தேறிகளுக்கில்லை என்ற மனப்பாங்கின் வெளிப்பாடே இது. இதை எதிர்த்துக் குரல் எழுப்பவோ இதைக் குறித்துக் கேள்வி கேட்கவோ முடியாத நிலையே இன்றளவும் உள்ளது. அப்படிக் கேள்வி எழுப்பப்பட்டாலும் அதற்கு உரிய பதில் எதுவும் எவரிடமிருந்தும் கிடைக்கப் போவதில்லை.
  4. கல்வி மூலமாகப் பெற்ற உத்தியோகம், பதவி நிலைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். முடிந்தளவுக்கு ஓரம்கட்டப்படுகின்றனர். தவிர்க்க முடியாமல் இவர்களை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தாலும் சமூக அடிப்படையிலான மனப்பாங்கில் புறக்கணிப்பு – பாரபட்சம் செய்யப்படுகின்றனர். முடிந்தளவுக்கு இவர்களை பின்தங்கிய பிரதேசங்களை நோக்கித் தள்ளும் செயற்பாடுகளே நிலவுகிறது. அல்லது தனிமைப்படுத்தி நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மைக் காலத்திற்கூட இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கங்கே தொடர்ச்சியாக அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டதை பார்க்கலாம்.
  5. வணிக ரீதியாக வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைத் தடுத்தனர். வர்த்தகர் சங்கங்களில் இதனை நன்றாக அவதானிக்கலாம். வன்னி மாவட்டங்களிலும் சரி, யாழ்ப்பாணத்தில் உள்ள பல வர்த்தக சங்கங்களிலும் இந்த மக்களின் பிரதிநிதிகள் என்பது விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அளவில் அருந்தலாகவே உள்ளனர். அதுவும் மிகப் பிந்திய அண்மைக் காலத்தில்தான் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் சிறிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. அதிலும் இவர்கள் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். இதனால் எதையும் அனுசரித்துப் போகவேண்டிய நிலையே தொடர்கிறது.
  6. அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் மறுதலிக்கப்பட்டுள்ளது. அல்லது தந்திரோபாய ரீதியாக தமது அரசியல் வேட்கைக்கு இந்த மக்கள் பலியிடப்பட்டனர்; பாவிக்கப்பட்டனர். முன்னர் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவையே இவர்களுடைய தலைவிதியையும் தீர்மானித்தன. பின்பு இயக்கங்களின் காலத்தில் இயக்கங்களுடன் இணைந்து நின்றனர். அதில் பணியாற்றினர். அவ்வளவுதான். அதிலும் சமையற்காரர்களாகவும் காவலர்களாகவும் கிணறு தோண்டிகளாகவும் விறகு கொத்திகளாகவுமே பெரும்பாலானோரும் இருந்தனர். இளைய தலைமுறையினர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுப் போராளிகளாகினர். அதுவே 2009 வரையான இவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவமும் பங்கேற்புமாக இருந்தது. 2009க்குப் பின்னர் இவர்களில் ஒரு சாராரை தமிழ்த் தேசிய சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. அதாவது வாக்குகளைப் போடும் இயந்திரங்களாக மட்டும். விதிவிலக்காக வவுனியாவைச் சேர்ந்த ஒரேயொருவருக்கு மட்டுமே மாகாண சபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அதுவும் வரையறுக்கப்பட்ட அளவில். மற்றும்படி பாராளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களாகக் கூட இந்த மக்களிடமிருந்து ஒரு பிரதிநிதி கூட நிறுத்தப்பட்டதில்லை. உள்ளுராட்சி சபைகளில் அங்கொன்று இங்கொன்றாக சிலர் நிறுத்தப்பட்டனர். அது அந்த மக்கள் வாழிடப் பிரதிநிதித்துவத்தை மறுக்க முடியாது என்ற காரணத்தினால்.

இதேவேளை தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு எதிராகத் தாம் இருந்து விடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த அரசியல் புறக்கணிப்பை வேதனையோடு பொறுத்திருக்கின்றனரே தவிர, உள்ளே அனலாகக் கொதித்துக்கொண்டேயுள்ளனர். இதனால்தான் அண்மைய காலத்தில் தமக்கென தனி அடையாளத்தைக் கோருகின்ற குரல்கள் இந்த மக்களிடமிருந்து எழுந்து வருகின்றன. ஆயினும் இந்த விசயத்தில் தாம் அவசரப்பட்டு எதிர்நிலைப்பாடு எடுத்து விடக்கூடாது. அது தமிழ் மக்களுக்கும் அதில் ஒரு அங்கமாக இருக்கும் தங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஒவ்வொருவரும் பொறுப்பாகச் சிந்திக்கின்றனர். இதில் இந்த மக்களிடத்தில் உள்ள நிதானத்தை பாராட்டவே வேண்டும். இப்படி நாம் யாருக்காகவும் பொறுத்திருக்க வேண்டியதில்லை. எமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக எழ வேண்டும் என்ற எதிர் நிலைப்பாட்டை எடுத்திருப்போரையும் நாம் அறிவோம். அதாவது தமக்கான வேர்களைத் தேடுவோராகவும் அடையாளங்களை நிறுவ முற்படுவோராகவும் அவர்களை அவதானிக்க முடிகிறது.

  1. இந்த மக்கள் வாழும் பிரதேசங்கள் தொடர்ந்தும் அபிவிருத்தியில் புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டன. வீதி, பாடசாலை, மின்சாரம், நீர் உட்பட அனைத்து அபிவிருத்தியிலும் இந்த மக்களின் பிரதேசங்கள் பாராமுகமாகவே நடத்தப்பட்டன. இன்னும் இந்த நிலை ரகசியமாகவும் பரகசியமாகவும் தொடர்கிறது.
  2. பிரதேச வரலாற்றுப் பதிவுகளிலும் சமூக அடையாளத்தை நிலைநிறுத்தும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் இவர்களுக்கான இடம் மறுதலிக்கப்படுவது தொடர்கிறது.

இப்படி எந்த வகையிலெல்லாம் நிராகரிப்பையும் ஒடுக்குமுறையையும் மேற்கொள்ள முடியுமோ அதையெல்லாம் மேலாதிக்கவாதிகள் செய்து வருகின்றனர். இதனால் எழுச்சி பெற்று வந்த இந்த மக்களின் இளைய தலைமுறையினர் மிகப் பெரிய இடைஞ்சல்களையும் அவமானப்படுத்தல்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று. இது மிகப் பெரிய புற நெருக்கடி மட்டுமல்ல அக நெருக்கடியையும் கொடுக்கிறது. இந்திய வம்சாவழியினராகவும் இல்லாமல் மலையக மக்களாகவும் இல்லாமல் இலங்கைத் தமிழராகவும் இல்லாமல் உதிரி மக்களாக இருக்கிறார்கள். ஆக இந்த மக்களுக்கென வரலாறே இல்லை. அப்படியிருந்தாலும் இவர்கள் மலையகத்தை விட்டு விட்டு வருவதற்கு முன்பான வரலாறு உண்டே தவிர, அதற்குப் பிறகான வரலாறு கிடையாது. வரலாற்றை அழிப்பதே ஒடுக்குமுறையின் பிரதான உத்தியாகும். அது இங்கே நுட்பமாகப் பின்பற்றப்படுகிறது.

முகமிழந்த மனிதர்களாக வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இனி வரும் தலைமுறைகள் தமது வரலாற்றுத் தொடர்ச்சியை அறிய முடியாமலும் வெளிப்படுத்த முடியாமலும் உள்ள நிலைமையே உருவாகியுள்ளது. தங்கள் உறவுகள் மலையகத்திலும் இந்தியாவிலும் உள்ளனர் என்பதை இன்றைய முதியவர்களே நினைவு கொள்கின்றனர். இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் இதை அறிந்திருந்தாலும் தெரிந்திருக்கவில்லை. அதாவது தகவலாக அறிந்திருக்கிறார்களே தவிர, முகம் தெரிந்தவர்களாக – விவரம் தெரிந்தவர்களாக இல்லை. இனி வரவர இதற்கான சாத்தியங்கள் குறைவடைந்தே செல்லும். ஆக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர்.

ஈழத்தமிழர்கள் தம்முடைய வரலாற்றையும் அதனுடைய பெருமிதங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். மரபுரிமைகளைப் பற்றிப் பேசுகிறார்கள், சிந்திக்கிறார்கள். ஆனால், இந்த மக்களுடைய வரலாறு, மரபு, பண்பாடு பற்றிய கவனமும் கரிசனையும் என்ன? அதை அவர்கள் பேணுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இடமளிக்கப்படுகிறதா? பேசாமல் கரைந்து விடுங்கள் என்றுதானே சிந்திக்கப்படுகிறது. அப்படி ஒரு சமூகத்தினரின் – மக்கள் திரளின் – சுயத்தை அழிக்கக் கோருவதும் நிர்ப்பந்திப்பதும் எந்த வகையில் நியாயமானது? யாழ்ப்பாணத்தையும் வன்னியையும் கிழக்கையும் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத்தான் வரலாறும் மரபுரிமையும் பண்பாடும் வேண்டுமா, இந்த மக்களுக்கு அதெல்லாம் தேவையில்லையா? இது எந்த வகையில் நீதியானது?

அரசியல் விளக்கத்தின்படி இந்த மக்கள் சொல்கிறார்கள், ‘இனிமேல் நாங்கள் எந்த நிலையிலும் வடக்கைச் சேர்ந்தவர்களே. இலங்கைத் தமிழர்களே’ என. இந்த எண்ணத்தோடுதான் இவர்கள் வடக்கில் உள்ள அரசியற் தலைமைகளுடன் இணைந்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். தங்களுக்குரிய இடமோ அங்கீகாரமோ இல்லை என்றாலும் அந்த அரசியலையே ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் இவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழர்களோடு இணைந்து பிரிவினையை (தமிழீழத்தை – சமஸ்டியை) கோருகிறார்கள்.

ஆனால், மலையகத்தில் உள்ள மக்களோ தம்மைப் புறக்கணிக்காமல் இலங்கையர்களாகச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கின்றனர். ஆக அங்கே இலங்கைத் தேசியத்துக்கான அடையாளம் கோரப்படுகிறது. இங்கே தமிழீழத்தை நோக்கிய – சமஸ்டியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினை முன்வைக்கப்படுகிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழிடத்தினால் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. ஆனால், துயரான நிலை என்னவென்றால் இரண்டு இடத்திலும் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் – புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே.

இப்படி வரலாற்றிலும் வாழ்விலும் மிக இக்கட்டான நிலைமைக்குள் சிக்குண்ட இந்த மக்களுடைய எதிர்காலம் பற்றி இன்னும் நிர்ணயமான எந்த வழிமுறைகளும் யாராலும் முன்வைக்கப்படவில்லை. இந்த மக்களை எப்படியாவது கரைத்துத் தமது அதிகாரத்தின் கீழும் ஆளுகையின் கீழும் கொண்டு வந்து விட வேண்டும் என்பதிலேயே வடக்குச் சமூகமும் அதன் அரசியற் தலைமையும் உள்ளன. இதற்குத் தந்திரமான பொறிகளையும் பொறிமுறைகளையும் அது வலு கலாதியாகக் கையாள்கிறது.

பதிலாக இவர்களுக்கான நீதியை வழங்குவதற்கு அது தயாரில்லை. அதைக் கேட்டோ போராடியோ பெறும் நிலையில் வடக்கு நோக்கி வந்த மலையக / இந்திய மக்களும் இல்லை. அங்குமிங்குமாக கிராம மட்டத்திலான தலைவர்கள் இருக்கின்றனரே தவிர, பிராந்திய மட்டத்திலான ஆளுமைகளும் தலைமைகளும் இந்த மக்களிடத்தில் உருவாகவில்லை.

இதை எப்படித் தீர்த்துக் கொள்வது?

சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் என்ற கருதுகோளுடனும் அரசியல் நிலைப்பாட்டுடனும் இல்லாத எவராலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது. இதை இந்த மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய நிலைப்பாட்டுடன் இயங்கும் சக்திகளை இனங்காண வேண்டும். அவ்வாறான சக்திகளோடு இணைந்து வேலை செய்ய வேண்டும். அதாவது தமது மீட்புக்கான ஏணிப்படிகளை இந்த மக்களே காண வேண்டும். வானத்திலிருந்து எந்த அற்புதங்களும் நிகழாது. மண்ணிலேயே அதை விளைக்க வேண்டும். அதற்குக் கடுமையாக – நிதானத்துடன் அறிவாகச் செயற்பட வேண்டும். அதையே வரலாறு எதிர்பார்த்து நிற்கிறது. ஆம், புதியதொரு வரலாற்றின் பிறப்புக்காக.

நீ யார்?
நான் யார்?
நாம் யார்?
ஒடுக்குமுறையின் முன்னே நாம் ஒன்று
விடுதலையில் நாம் வேறு வேறா?

கருணாகரன் <poompoom2007@gmail.com>

karunakaran

Amrutha

Related post