கே. சச்சிதானந்தன் நேர்காணல்

 கே. சச்சிதானந்தன் நேர்காணல்

விருதுகள் வரும் போகும்
எழுத்து மட்டுமே நிலைபெறும்

 

தமிழில்: தி.இரா. மீனா

 

லையாள கவிஞர் கே. சச்சிதானந்தன் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடக ஆசிரியர் என்ற பன்முகம் கொண்டவர். ‘காட்மாண்டு ட்ரியுபூன்’ பத்திரிகைக்கு கே. சச்சிதானந்தன் அளித்த நேர்காணல் இது…

கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர் என்பதில் எந்த வகைக்குள் பொருந்துபவர் நீங்கள்? எழுத்தில் பல வருட அனுபவமும் பல்வேறு வகையான விருதுகளும் பெற்றுள்ள நீங்கள் உங்கள் சாதனைகளை எப்படிப் பட்டியலிடுவீர்கள்? இலக்கிய வாழ்க்கை உங்களுக்கு முழு திருப்தியைத் தந்திருக்கிறதா அல்லது ஏதேனும் அதிருப்தி உண்டா?

அடிப்படையில் நான் என்னை ஒரு கவிஞனாகத்தான் பார்க்கிறேன்; நான் செய்கிற மற்ற விஷயங்களும் ஒரு கவிஞனின் பார்வையாகத்தான் வெளிப்படுகிறது. சான்றாக மலையாளக் கவிதை அழகியல் வரையறையில் பெரும் மாற்றத்திற்குள்ளான காலகட்டத்தில், மிகச் சில மொழிபெயர்ப்பாளர்களே இருந்த நிலையில், விமர்சனமென்பது அறிமுகமானது. புதினம் மற்றும் கலையிலும் இந்தப் புதிய உணர்திறனின் வரையறைக்குள் இல்லாத நிலை குறித்து நான் எழுதத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பும் இக்கால கட்டத்தில் புதிய உணர்திறனை நிலைநாட்டியது. மலையாளத்தில் புதுக் கவிதைக்கு வழிகாட்டியாக இருந்த அய்யப்ப பணிக்கரின் மேற்பார்வையில் வெளிவந்த ‘கேரளக்கவிதா’ என்னும் பத்திரிகையில் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பணிக்கரின் மறைவிற்குப் பின்னால் 2006ஆம் ஆண்டு முதல் நான் ஆசிரியராக இருந்து வருகிறேன். எழுபதுகளின் சமூகச் சிக்கல்களை என் கவிதைகள் வெளிப்படுத்தியபோது, அதற்கு ஒரு வெளிப்படையான சமூகப் பரிமாணம் கிடைத்தது. நான் எழுத்தை ஒரு ‘வேலை’ ஆக நினைத்ததில்லை; அது உலகிற்கு என் இருப்பை காட்டுவதான பரிமாணம். அதனால் நான் விருதுகள், அங்கீகாரம் பெறுதல் ஆகியவற்றில் கவனம் காட்டவில்லை; அவை வரும் போகும். எழுத்து மட்டுமே நிலை பெறுகிறது.

மலையாள இலக்கியத்தின் புதுக் கவிதை இயக்கம் உங்களால் உருவானதா? அந்த இயக்கம் எப்படியானதென்று விளக்குவீர்களா? மரபு நிலைகளிலிருந்து விலக உங்களுக்கும் சமகால படைப்பாளிகளுக்கும் அது எப்படி உதவியது?

அது முழுமையாக என் உருவாக்கமில்லை. பகட்டான காதலைக் காட்டுவது என்னும் ஒரு நிலையிலேயே கவிதை மூழ்கிக் கிடந்ததால் இலக்கிய வரலாற்றை மாற்ற வேண்டிய தேவையிருந்தது என்பதை என்னைப் போலவே பல கவிஞர்களும் நினைத்தார்கள். அந்த மாற்றம் அழகியல் மற்றும் சமூகம் சார்ந்த பரிமாணமாக இருந்தது. அது இல்லாமை தத்துவவாதியாக இருக்கும் நிலையை எதிர்க்கும் நிறுவனமாக இருந்தது. ஆனால், எழுபதுகளில் எங்களில் சிலர் புதுமுறைகளில் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கினோம். அது கொந்தளிப்பான நேரம்; மாவோயிஸ்ட் இயக்கம் நிலமற்ற விவசாயிகளையும் பழங்குடியினரையும் ஒருங்கிணைத்தது; ரயில்வே – துறைமுகத் தொழிலாளர் போராட்டங்கள், பெண்ணிய இயக்கங்கள், தலித் இயக்கம் ஆகியவை உத்வேகம் கொண்டிருந்த காலம்; சூழலியல் விழிப்புணர்ச்சி வெளிப்பாடு – இவையெல்லாமும் சமுதாயத்திற்கும் எங்கள் கவிதைகளுக்கும் புது நம்பிக்கையைத் தந்து, மாற்றத்திற்குத் துணையாயின.

இதுவரை ஆன்மீக நித்தியவாதமாக இருந்த நவீனக் கவிதை வரலாற்றின் கண்களைத் திறந்தது; நடப்பு சிந்தனைகள் தேய்ந்த எண்ணங்களை வெளியேற்றியது; புதுவகைப் படிமங்கள், உருவகங்களைப் பயன்படுத்துதல்; அளவிகள் நீக்கப்பட்டோ அல்லது மாற்றப்பட்டோ இருத்தல், தளைகளிலிருந்து மீறிய உரைநடை ஆகியவை கவிதையின் வாகனங்களாக அமைந்தன. நாட்டுப்புற மரபுகள் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டன. சந்தம் புதியதாக அமைந்தது.

எழுபதுகளின் கவிதைகள் நாடகபாணியில் இருந்தன, முதல்கட்டத்தில் தன்னுரையாக இருந்தவை உரையாடல்களாக மாற்றம் பெற்றன; பாத்திரங்கள் உருவாகி, அவை புதிய எழுச்சியும் வேகமும் பெற்றவையாயின. அதனால் மாற்றங்கள் மூன்று நிலைகளிலிருந்தது: கரு, மனப்பான்மை (மனிதனின் பார்வை), வடிவம்.

உங்களின் வாழ்க்கை முன்னர் ஏதுவாக இருந்தது? வித்தியாசமாக எழுத வேண்டும் என்ற வேட்கையை வலுவூட்டியதாகவா அல்லது மார்க்சிசம் மேல் கொண்ட விருப்பமாகவா? உங்களுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சி பின் அமைப்பியல்வாதத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? கேரளாவின் சமூக, அரசியல் அமைப்பு உங்களுடைய படைப்புகளில் உள்ளடங்கிய தாக்கம் பெற்றிருந்ததா?

எழுத்துதான் பிரதானமான விருப்பம். நான் பள்ளிக் காலத்தின் போதே எழுதத் தொடங்கிவிட்டேன். நான் தீவிரமாக எழுதத் தொடங்கிய நேரத்தில் மலையாளம் மற்றும் சில இந்திய மொழிகளிலும் புதுக் கவிதை வடிவம் எழுந்தது. நவீன அயலக மற்றும் இந்திய படைப்பாளிகளான ஜீபானந்த தாஸ், ஜி.எம். முக்தி போத், பி.எஸ். மார்தேகர், அய்யப்ப பணிக்கர் போன்ற படைப்பாளிகள் என்னைப் பெரிதும் கவர்ந்தனர். இடதுசாரி ஆதரவாளனாக நான் வளர்ந்தேன், எழுபதுகளில் என் கவிதைகள் மாற்றம் பெற அது காரணம். என் முனைவர் பட்ட ஆராய்ச்சி பின்னாளில் எனக்குள் எழுந்த திறனாய்வுக்கான கேள்விதான். அது எந்த நேரடித் தாக்கத்தையும் என கவிதைகளில் ஏற்படுத்தவில்லை, ஆனால், மனித மனதும் மொழியின் புரிந்தலும் ஆழமானது அப்போதுதான்.

முதலில் மலையாளத்தில் எழுதத் தொடங்கிய நீங்கள், பின்பு ஆங்கில மொழிபெயர்ப்பில் விருப்பம் கொண்டீர்கள். உங்கள் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமென்று தோன்றியது ஏன்? மொழிபெயர்ப்பு என்பது மூலத்திலிருந்து மாற்றப்படும் போது உங்களுடைய எழுத்தை மதிப்பிழக்க செய்வதோடு சில சமயங்களில் கஷ்டமாகவும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? மலையாளம் கடினமான மொழிகளில் ஒன்று என்று கருதப்படுகிறது, ஆனால், உங்கள் படைப்புகளை மொழிபெயர்ப்பதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களால் எப்படி ஓர் சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளராக முடிந்தது?

மொழிபெயர்ப்பாளராக ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை; முன்பே சொன்னது போல முதலில் பிற மொழிப் படைப்புகளைத்தான் நான் மலையாளத்தில் மொழிபெயர்த்தேன். ஆனால், சில ஆங்கில இதழ்களின் ஆசிரியர்கள் என் கவிதைகளை மொழிபெயர்க்க விரும்பினர். அதனால் நானே முயலலாமென நினைத்தேன். அதுதான் தொடக்கம். பிறகு அதற்கான தேவை அதிகமானது. டெல்லி நிராலா பதிப்பகத்தைச் சேர்ந்த ஆர்.டி. யுயுஸ்து (Yuyutsu) என் மலையாளக் கவிதைத் தொகுப்பை மொழிபெயர்ப்பு செய்வது குறித்து எழுதினார். அப்படித்தான் என் முதல் கவிதைத் தொகுப்பான ‘Summer Rain’ வெளிவந்தது. அதன் பிறகு, பல படைப்புகள். மலையாளம் அறியாத வாசகர்களை அடைந்துவிடும் வேகத்தில் இருந்தேன். ‘Summer Rain’ வெளி வந்த பிறகு ‘How to Go to the Tao Temple’, ‘So Many Births’, ‘Stammer and other Poems’, ‘Imperfect and Other Poems and While I Write’ என்று பல. இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் தவிர, பிரெஞ்சு, ஜெர்மன், ஐரிஸ், இத்தாலி மற்றும் அராபிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பல மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன; சில என்னுடைய ஆங்கில வடிவம் அல்லது மற்றவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தி மொழியிலிருந்து வெளியாயின.

நான் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரா என்பது எனக்குத் தெரியாது. வட்டாரப் பண்பாடு, ஞாபகங்கள், இயற்கை வனப்பு ஆகியன குறித்த ஆழமான பின்னணி கொண்ட மலையாள வாசகர்களுக்கு, மிக விருப்பமான என்னுடைய சில கவிதைகளை மொழிபெயர்க்க எனக்குத் தைரியமில்லை. எதிர்காலத்தில் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்க்கலாம். என் கவிதைகளில் நான்கில் ஒரு பங்கே இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த மொழி மாற்றத்தில் ஏற்படக்கூடிய படுகுழிகள் பற்றி எனக்குத் தெரியும். எனினும் ஆங்கிலத்தின் ஆளுமை அதிகமில்லாமல் என் கவிதைகளுக்கு அதன் மூலத் தன்மையை அப்படியே தருவதில் உண்மையானவனாகவே இருக்க முயற்சித்திருக்கிறேன். இந்தியா போன்ற பன்மொழி கொண்ட நாட்டில் மொழிபெயர்ப்பின்றி ஒரு மூல மொழியை அறிவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.

உங்கள் மதச்சார்பற்ற ஆன்மீகக் கொள்கை, வட்டாரக் கலாச்சார அடையாளம் ஆகியன உங்கள் சமுதாயம் மற்றும் வட்டாரம் சார்ந்த விருப்பத்தை வலியுறுத்துகிறது. நீங்கள் கேள்வி எழுப்புகிற, வெறுக்கிற சிக்கல்களை மாற்றுவதில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? உங்கள் எழுத்து எந்த வகை? எளிமையாகச் சொன்னால், ஒரு கவிஞனாக எப்படி உங்களை வரையறுப்பீர்கள்?

இந்தியாவின் பாரம்பரியங்களில் மதச் சார்பற்ற ஆன்மீகம் மிக முக்கியமானது என்று நம்புகிறேன். இது குறிப்பாக பக்தி மற்றும் சூஃபி கவிஞர்களிடம்; திருமூலர், பசவர், கபீர் தொடங்கி லாலன் பகிர் (Lalan Fakir), பாபாஃபாரித் (Baba Farid), புலே ஸா (Bulle Shah) வரை. இவர்கள் மதகுருமார்களின் சமயம் என்பதற்கு மாற்றாக மக்கள் சமயம் என்ற நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள். இவர்கள் சாதி எதிர்ப்பு, மதவெறி, எல்லா வகைகளிலுமான அதிகாரப் படிநிலை என்ற உலகின் நிலைகளை வெறுத்து சமநோக்கு சமுதாயத்தைப் பற்றிய கனவு கண்டனர். இந்த கவிஞர்கள் சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்தவர்கள்.

நான் ஒரு கூட்டாட்சிவாதி. இந்தியாவின் ஒவ்வொரு வட்டாரமும் தன்னாட்சி நிலையில், தனக்கான முன்னேற்றம், வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற வேண்டும். இப்போது, நடைமுறையில் இருப்பதைப் போல வளர்ச்சிக்கான எல்லாவற்றின் மீதும் ஒரு முதலாளித்துவ கருத்தைத் திணித்துச் செயல்படுவது தவறாகும். மிக அதிகமாக மையப்படுத்துதல் என்பது அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பதாக அமைந்து அதன் பலனாக எழும் பேராசையும் ஊழலும் ஜனநாயகத்திற்குக் கேடாகிவிடும்.

நான் வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். மதம் சார்ந்த மரபுக் கோட்பாட்டாளர்கள் சமுதாயத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்வாதிகள். மத்திய ஆளுமை உள், வெளிநாட்டு மூலதனத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உணர்வுடையவகளால் மட்டுமே ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஒரு கவிஞனாக, பெரும்பான்மை மக்களின் நிலை பற்றி கவலைகொள்கிறேன்; தனி மனித நிலைக்காகவும்; என் இறுதி பேச்சுப் பொருள் மனித நிலைதான், ஆனால், விலங்குகளும் தாவரங்களும்கூட என் மனித உலகின் ஒரு முக்கிய பகுதிதான்.

மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் முக்கிய பிரிவா? இதுவரை நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? மூலத்தோடு ஒப்பிடும் போது மொழிபெயர்ப்பு படைப்புகள் தரம் குறைந்து உள்ளவை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும் போது பொருள் மட்டும் மாறுவதில்லை; சில சமயங்களில் குறிப்பிட்ட சொற்கள், பொருள் மொழிபெயர்க்கக் கடினமாகி விடுகிறது. இந்த வகையான சிக்கல்களைச் சந்தித்து இருக்கிறீர்களா? மூலத்தை அப்படியே மொழிபெயர்ப்பில் கொண்டு வரமுடிந்ததா?

மொழிபெயர்ப்பிற்கென்று சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவை குறிப்பாகப் பண்பாடு சார்ந்தவை. மூலத்தின் இயல்பைப் பொறுத்து ஒருவர் வெவ்வேறு வகையான உத்திகளைக் கையாண்டு அச்சிக்கல்களிலிருந்து விடுபடலாம். அது ஆழமான உள்ளார்ந்த வாசிப்பு சார்ந்தது. ஒரு படைப்பாக்கச் செயல்முறையில் மூலத்திற்கு இணையான பொருளை ஜனிக்க வைத்து, மூலத்தின் நுட்பங்களை வெளிக்கொண்டு வருகிறோம். நான் முன்பே சொன்னது போல வட்டாரச் சார்பு அதிகமுடைய கவிதைகளை மொழிபெயர்ப்பதை மிகக் கடினமாகவே உணர்கிறேன்; பொதுவான கருக்களைக் கொண்ட கவிதைகள் சிறிது எளிமையானவை. மீண்டும் மூலத்திற்கும் குறிப்பிட்ட இலக்கு மொழிகளுக்குமான தொடர்பு மிக கவனத்திற்குரியது. தமிழ் அல்லது கன்னடம் போன்ற திராவிட மொழிகள் மலையாளத்தைப் போல இருப்பதால் மூலத்தை என்னால் பெரும்பான்மை தக்கவைத்துக் கொள்ள முடியும்; இந்தி அல்லது வங்காளம் உள்ளிட்ட இந்தோ – ஆரிய மொழிகளின் இலக்கணமும் தொடரியலும் மாறுபடுவதால் அவற்றை மொழிபெயர்ப்பது மிகக் கடினம். அயலக மொழிகளெனில் இது இன்னமும் சிரமமானது. அவை பண்பாட்டையும் அதன் பின்னணியிலான நெறி முறையையும் மிகக் குறைந்த அளவில் வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு புதிய அழகியல் / சமூகப் பொறுப்பு சூழலை உருவாக்க முயல்கிற செய்தியும் நடத்து முறையும் கொண்டிருக்கிற கவிதைகளை என் ஆங்கில வடிவிற்குத் தேர்வு செய்கிறேன். எதிர்வினைகளைப் பார்க்கும் போது மொழிபெயர்ப்பு பெரும்பான்மை பலனளித்திருக்கிறது. இதற்கு ஆங்கிலத்திற்குப் பொருந்தும் வகையிலான கவிதைகளை மட்டுமே நான் தேர்வு செய்வதும் காரணம்.

பல பத்திரிகைகளுக்கு நீங்கள் பதிப்பாசிரியராக இருந்திருக்கிறீர்கள். இது உங்களது எழுத்தை எந்த அளவில் பாதித்தது? ஓர் இலக்கிய இதழ் உண்மையாகவே ஒருவரின் படைப்பாற்றலுக்கு உதவுமா? மாறும் இன்றைய உலகில் இலக்கிய இதழின் பங்கும் பணியும் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறர்கள்? தெற்காசிய சூழலில் இது முக்கியமானதா?

பரிசோதனை முயற்சியாக நான் சில சிற்றிதழ்களைத் தொகுத்திருக்கிறேன்; அவை எப்போதும் வெறும் படைப்பிலக்கியமாக மட்டும் இருந்ததில்லை, சில சமயங்களில் கலை, அழகியல், அரசியல், சமூகவியல், இலக்கியக் கொள்கை ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. அது ஒரு வகையில் பரந்த என் படைப்பு வெளிப்பாடாக இருந்தவை; திரைப் படங்களைப் போல; இயக்குநருக்கு இருக்கிற பார்வை மற்றவர்களால் – நடிகர்கள், பாடகர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டவர்களால் – செயல்படுத்தப்படுவதைப் போல. பரீட்சார்த்த முறையில் நான் முதலில் பதிப்பித்த பத்திரிகை ‘ஜுவாலா’. அதன் பிறகு ‘உத்தரம்’, ‘பச்சைக் குதிரை’ ஆகியவை மலையாள மொழியிலும் ‘Indian Literature in English’இலும் பதிப்பிக்கப் பட்டவை. ‘கேரளக் கவிதா’ என்னும் ஒரு கவிதை இதழைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அது புதிய தலைமுறையின் பங்கான வலைத்தளம் (Blog Writing) உள்பட, இந்திய, அயலக படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரிக்கிறது. இது என் கவிதையை விட என் திறனாய்வுக்கு உதவுவது. இலக்கிய இதழியல் என்பது சிந்தனை, அனுபவம், மாற்றம் சார்ந்தது என்பதால் தெற்காசிய நாடுகளில் இலக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் தாய்மொழியில் எழுதி, பின்பு அதை ஆங்கிலத்தில் நீங்கள் மொழிபெயர்க்க என்ன காரணம்? உங்கள் மொழியின் மேலான காதலா அல்லது குறைந்த எண்ணிக்கையில் ஆங்கிலத்தில் எழுதும் இந்தியக் கவிஞர்களின் குறுக்கீடா? பல இந்திய கவிஞர்கள் மிகத் தரமான படைப்புகளை உருவாக்கும் போது அவர்கள் சிறுபான்மை எழுத்தாளர்கள் என்று கேலி செய்யப்பட்டனர், அவர்களின் தரம் குறைந்த படைப்புகள் தாய்மொழியி்ல் எழுதும் படைப்பாளிகளோடு ஒப்பிடப்பட்டன. வெறும் புகழுக்காக மட்டும் இல்லை, இந்தியாவில் ஓர் ஆங்கில எழுத்தாளர் என்றாலே செய்யப்படுகிற மீளாய்வும் பரிகாசமும் பல எழுத்தாளர்களைக் காலனித்துவ மொழியில் எழுதுவதைத் தடுத்துவிட்டன. அது பற்றி உங்கள் கருத்து?

ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் தாய்மொழியில் எழுதுவதற்கும் இடையே எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. நான் திறனாய்வு பற்றி ஆங்கிலத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். இந்திய இலக்கியம் குறித்து நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். நான் கேரளாவில் வளர்ந்தவன், அந்தச் சூழலில் உயிர்த்து வாழ்ந்ததால் மலையாள மொழியில் மிக இயல்பாய் எழுதமுடிகிறது. என் ஞாபகங்களும் கனவுகளும் மலையாளத்தில் இருக்கின்றன. இது எல்லோருக்கும் கிடைக்குமென்று சொல்ல முடியாது, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு. தனக்கு இயல்பாக வருகிற மொழியில்தான் ஒருவர் எழுத வேண்டும்.

இந்தியாவில் ஆங்கிலத்தில் மிக நல்ல படைப்புகள் வருகின்றன. பல நூற்றாண்டுகளாகவே மொழி இலக்கியம் தனக்கான பாரம்பரியத்தோடு மிக அதிகமான, அற்புதமான படைப்புகளை உருவாக்கி வருகிறது. அண்மைக் காலத்தில் தாய்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்படும் படைப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாகியிருக்கிறது; வாசித்தல், விமர்சித்தல், பாராட்டுதல், பரிசளித்தல் என்று அதன் எல்லை விரிகிறது.

சில விருதுகள் பெற்றிருக்கிறீர்கள் என்பதோடு 2011ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கும் பரிந்துரை செய்யப்பட்டவர் நீங்கள். உங்கள் பயணம் எப்படியிருந்திருக்கிறது? உங்கள் படைப்புகளால் நிறைவடைந்திருக்கிறீர்களா? எழுதுவதை விட்டுவிடலாம் என யோசித்திருக்கிறீர்களா அல்லது கடைசி மூச்சு உள்ளவரை எழுத ஆர்வமா?

விருதுகளும் அங்கீகாரமும் நான் முன்பே சொன்னது மாதிரி, தொழில் சார்ந்த ஆபத்துகள்; ஒரு படைப்பாளியோடு சமுதாயம் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் சில வழிகள். நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்கள் கூட முழுமையாக மறக்கப்பட்டுள்ளனர். எந்த விருதும் பெறாத பலர் இன்றும் நினைவில் நிற்கின்றனர். அதனால் விருதுகள் எழுத்தின் திறத்தை தீர்மானிக்கிறவையில்லை. அது காலத்தையும் மனிதர்களையும் பொறுத்தது. காலத்திற்கு ஒவ்வாத எழுத்து, மனதைத் தொடாத எழுத்து – இரண்டும் ஏற்கப்படுவதில்லை. முடிந்தவரை நன்றாக எழுத முயற்சி செய்வதைத் தவிர எனக்கு அதில் எந்தப் பங்குமில்லை. எழுத்தைக் கைவிடும் எந்தத் திட்டமும் தற்போது எனக்கு இல்லை.

கவிஞன் என்பவன் யார்? ஒருவர் எப்படி கவிஞராக முடியும்? அவர்கள் சமுதாயத்திற்கும் உலகிற்கும் நிஜமாகவே பங்களிக்கிறார்களா? கவிதை வாசிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் உங்கள் செய்தி?

இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில் என்னிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்னைப் பொறுத்த வரை கவிதை என்பது இயற்கை; அது ஒரு சமூக நிகழ்வு, அதே நேரத்திலது அழகியலும் நெறிமுறை முறையும் சார்ந்தது. உண்மையை நுட்பமாக, தெளிவாக குறிப்பாகத் தெரிவிக்கிற ஒரு வழி. ஒரு குறிப்பிட்ட முறையில் நாம் கவிதையை வரையறுக்கும் போது, அந்த வரையறையை விசாரணைக்குள்ளாகும் ஒரு கவிஞனின் கவிதை எதிர்ப்பட்டு அது கவிதையாகவே நிற்கும். அதனால், இயற்கையாகவே அது மாறிக்கொண்டும் தனக்குள்ளே புதிதாகிக் கொண்டும் இருக்கிறது. அதே கவிஞனும் தன்னை உருமாற்றம் செய்துகொள்கிறான். மீள் நிகழ்வுகளைப் பயன்படுத்தினால் அவனோ அல்லது அவளோ – அவர்கள் உயிரற்ற கவிஞர்களாகி விடுவார்கள். கவிஞர்களுக்கும் ஒரு சமுதாய பங்குண்டு; சொல்லப் போனால், அது ஒரு விஞ்ஞானி அல்லது ஓர் அரசியல்வாதி ஆகியோரின் பங்கு போன்றதல்ல. கவிஞர்களாக அவர்கள் அரசியல் வண்ண உருவெளி வடிவத்திற்கு அப்பாலான பார்வை கொண்டவர்கள்; எதிர்காலத்திற்கான தீர்க்கதரிசனத்தை உருவாக்குபவர்கள்; அவர்கள் வெளிப்படுத்துகிற உண்மையின் உட்பொருள் உடனடியாக பற்றிக்கொள்ளப் படாமல் போகலாம். கண்ணுக்குத் தெரியாதைத் தெரிய வைப்பார்கள், பெயரற்றதற்குப் பெயரிடுவார்கள், கன்னி நிலத்தை ஏற்றம் செய்வார்கள். சொல்வதற்கு என்னிடம் செய்தி எதுவுமில்லை; நானே புதிதாக கற்றுக்கொள்பவன்தான். உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் உண்மையாக இருங்கள். வேறு எதுவும் செய்ய முடியாது.

*****

நன்றி: Kathmandu Tribune, 19 Jan 2018; ஆங்கிலத்தில்: அருண் புததோகி (Arun Budhathoki)

தி.இரா. மீனா <meenmix@yahoo.com>

 

 

Amrutha

Related post