அத்துமீறல் அலட்சியம் ஆபத்து – பிரபு திலக்

 அத்துமீறல் அலட்சியம் ஆபத்து – பிரபு திலக்

‘வெள்ள அபாய எச்சரிக்கை’ எனத் தேடினால், தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களையும் காட்டுகிறது, கூகிள். சில சென்ற மாதம்; மற்றவை அதற்கும் முன்னால். இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்படாதவை பாதுகாப்பான பகுதிகள் என்று அர்த்தமல்ல; அவை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களுக்குள் ஒருமுறையாவது பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. 2015 மாமழைக்கு பிறகும் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளும் சாதாரண மழையைக்கூட எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் நீடிக்கிறது என்பதையே இது காட்டுகிறது!

சென்ற மாதம் சென்னை, கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. முக்கியச் சாலைகள் எல்லாம் தண்ணீர் தேங்கியதால், தினமும் பள்ளிக் கல்லூரி விடுமுறை தினங்களை நீட்டித்துக்கொண்டே சென்றனர், மாவட்ட ஆட்சியர்கள். பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில், பயிர்த் தொழிலுக்காக விவசாயிகள் போட்ட முதல் எல்லாம் வீணாகிவிட்டது. 2015இல் ‘சென்னை வெள்ளம் ஓர் எச்சரிக்கை. இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், அது பேச்சாக மட்டுமே இருந்திருக்கிறது என்பதை இந்த வருட மழை சுட்டிக்காட்டிவிட்டது.

மழை நீரின் பாதைகளான ஆறுகளும் நீரோடைகளும் சிதைக்கப்பட்டுள்ளதும், மழை நீரின் வீடுகளான ஏரிகளும் குளங்களும் ஊரணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம்; மனிதன், காற்று வெளியில் ஏற்படுத்தியிருக்கும் மாசுகளால், பூமியின் வெப்பநிலை அதிகரித்திருத்து, பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து கிடப்பது மற்றொரு காரணம்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் 1992ஆம் ஆண்டு கடும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்தன. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளும் உடையும் அபாயத்தைத் தவிர்க்க நள்ளிரவில் திறக்கப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கன அடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கடலில் கலக்கும் இடம் வரைக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது அந்த வெள்ளம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் குழித்துறை தாமிரபரணி மற்றும் நாகர்கோவில் பழையாற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். கிட்டதட்ட 100 பேர்கள் பலியானார்கள்; அக்கால மதிப்புபடி 500 கோடிக்கும் மேல் இழப்பு.

1992க்குப் பிறகும் பலமுறை வெள்ளம் வந்து சென்றுவிட்டது. 2005 பெருமழையில் பரவலாகத் தமிழ்நாடு முழுக்கப் பாதிக்கப்பட்டது; 2013 தானே புயலில் கடலூர் சின்னாபின்னமானது. 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளப் பாதிப்புகளைக் கடுமையான பாதிப்பு என ஒன்றிய அரசே அறிவித்தது. 2014ஆம் ஆண்டும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை கடுமையான பாதிப்பு என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அப்போது கடும் பாதிப்புக்குள்ளாகின. கிட்டத்தட்ட 400 பேர் பலியானார்கள். 2013, 2012, 2011, 2000 என பின்னால் செல்ல செல்ல ஒவ்வொரு வருடத் தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளையும் பலிகளையும் கூகிள் ஞாபகம் வைத்திருக்கிறது. நமக்குத்தான் மறந்துவிட்டது. நம் ஆட்சியாளர்களும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51- ஏ, ஏரிகளும் ஆறுகளும் நீர்வழித் தடங்கள்; இவை பாதுகாத்து மேம்படுத்த வேண்டியவை என்கிறது. ஆனால், சட்டத்தை யார் மதிக்கிறார்கள்? ஆக்கிரமிப்பு காரணமாகச் சென்னையில் ஓடும் கூவம், அடையாறு மட்டுமல்ல தமிழ்நாட்டில் எல்லா ஆறு, ஓடை, ஏரி, குளங்களின் அகலமும் ஆழமும் குறைந்துள்ளது. அதனை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் ஒரு சில இடங்களில் அதுவும் பெயரளவில் மட்டுமே நடக்கின்றன. இதனால் அதிகனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் கரையோர பகுதி ஊர்களையும் வயல்வெளிகளையும் வெள்ளம் மூழ்கடிப்பது தொடர்கிறது.

‘இப்போது பெய்வதெல்லாம் பேய் மழை; மேகவெடிப்பு. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் இழப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்கிறார்கள் சிலர். ஆனால், சரியான திட்டமிடலும் நீண்ட கால நோக்கில் அமைக்கப்படும் திட்டங்களும் இருந்தால் சாத்தியம்தான் என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. உலகில் பல நாடுகள் வெள்ள பெருக்கெடுக்கும் ஆறுகளை அடையாளம் கண்டு எப்போதும் வெகு கவனமாகப் பராமரிக்கின்றன. முன்னேறிய ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் கரையை உயர்த்தியும் தடுப்புத் தீவுகள் அமைத்தும் சுவர்கள் எழுப்பியும், கடலையே கட்டுப்படுத்தி வெள்ள பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளன.

லண்டன் மாநகரத்தின் நடுவேதான் ஓடுகிறது தேம்சு நதி. அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மாபெரும் எந்திர தடுப்பு அரண்கள் ஒவ்வொரு வெள்ளப் பெருக்கிலிருந்தும் லண்டனைக் காப்பாற்றுகின்றன. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது, ஆஸ்திரியா. கியூபா நாட்டில்தான் உலகிலேயே அதிக அளவில் புயல், வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், அந்த நாடு இதனால் நிலைகுலையவில்லை.

பருவநிலை மாற்றத்தால், இனிவரும் காலங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு, சில மணி நேரங்களில் பல நாட்கள் பெய்ய வேண்டிய மழை கொட்டி தீர்த்துவிடுவதும், அதன் காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும் அதிகரிக்கும் என்கிறார்கள் சூழியல் விஞ்ஞானிகள். எனவே, அதற்கேற்ப நம் நீர் வழித்தடங்கள் அகலப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாகச் சுருங்குவதுதான் இங்கே நடக்கிறது. குறிப்பிட்ட பகுதியைப் பற்றிய புரிதல் இல்லாத அறைகுறையான திட்டமிடல்கள், அதுவும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலை, ஆக்கிரமிப்புகள் எல்லாம் சேர்ந்து இன்று தமிழ்நாட்டை வெள்ள அபாய கோட்டில் நிறுத்தியிருக்கிறது.

குடிநீருக்கும் வேளாண்மைக்கும் மழை நீரைத் தேக்கி வைக்க ஊர்தோறும் ஏரி, குளம், குட்டை, ஊரணி அமைத்தார்கள் நம் முன்னோர்கள். அத்துடன் அவற்றை ஆயிரக்கணக்கான கால்வாய்கள் மூலம் ஒன்றுக்கொன்று இணைத்து பிரமாதமான ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தார்கள். மனித உடலுக்குள் பல்வேறு பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் நரம்புகள் போல், தமிழ்நாடு முழுவதும் நிலப்பரப்பில் பரந்திருந்த இந்த நீர் வழித்தடங்கள் மழை நீரைக் கொண்டு சென்றது. தேவையான இடத்தில் பெருக்கி வைத்தது. ஓர் ஏரியோ குளமோ நிறைந்து மறுகால் போனால், அந்த உபரி நீர் அடுத்த ஏரிக்கோ குளத்துக்கோதான் போகும். அதனை நிறைத்துவிட்டு அடுத்த ஏரி, அடுத்த குளம். இப்படி ஒரு பகுதியில் பெய்யும் மழை நீர், மழை பெய்யாத பகுதிகளுக்கும் சென்று மக்கள் தாகம் தீர்க்கும்; பயிர் வளர்க்கும்.

தண்ணீர் அதிகம் செலவிடப்படும் நஞ்சை விவசாயத்துக்குப் பாய்ச்சப்படும் தண்ணீர்கூட விரயமாகாது. வயலிலிருந்து வடியும் அந்தத் தண்ணீர் அடுத்த குளத்துக்குச் செல்ல ஒரு நீரோடை இருக்கும். ஆறுகள் அனைத்தும் அவை செல்லும் பாதையோர ஏரி, குளங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆற்றில் ஓடும் தண்ணீர் ஏரி, குளங்களுக்கு வரும்; ஏரி, குளம் நிறைந்து வெளியேறும் தண்ணீரை ஆற்றுக்குத் திருப்பும். 2 ஆயிரம் ஆண்டுக்காலத்தில் உருவாகி வந்தது இந்த நீர் மேலாண்மை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில்தான் முதல்முதலாக முக்கிய நகரங்களை இணைத்து ரயில் பாதை போடப்பட்டது. தூரத்தைக் குறைப்பதற்காக ஏரி, குளம் என நீர்நிலைகளின் நடுவேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், நீர்நிலைகளை அழித்துவிடக்கூடாது என்பதற்காக, ரயில் பாதையின் இடையில், தண்ணீருக்குப் பாலம் அமைத்து, இரண்டு பக்கத்திற்கும் தொடர்பை விட்டுவைத்தனர் வெள்ளைக்காரர்கள். அவர்கள்கூடக் கை வைக்காத நம் நீர் வழித்தடங்களை இப்போது நாம் சிதைத்துவிட்டோம்.

காலம்காலமாகத் தான் ஓடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டதால், அனைத்துச் சென்ற கரைகள் சிதைக்கப்பட்டுவிட்டதால், குடியிருந்த வீடு களவாடப்பட்டுவிட்டதால், எங்கே செல்வது எனத் தெரியாமல் திணறிக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஓடுகிறது மழை நீர்.

இனிமேலும் காலம் கடத்தாமல், மழைக் காலங்களில் மட்டும் பேசிவிட்டு ஓய்வதாக இல்லாமல், அவசர பணியாக எடுத்துக்கொண்டு, நீர் மேலாண்மையில் ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆறு, ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்; மக்களும் தங்கள் பகுதி ஆறுகள், நீர்நிலைகள், மழைக்காலங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Amrutha

Related post