தருமமிகு சென்னை  2 | செங்கோட்டை பாஸ்ட் பாசெஞ்சர் | சந்தியா நடராஜன்

 தருமமிகு சென்னை  2 | செங்கோட்டை பாஸ்ட் பாசெஞ்சர் | சந்தியா நடராஜன்

ப்போது ‘மெட்ராஸ்’ என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் ‘தருமமிகு சென்னை’ என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார். மற்றபடி மெட்ராஸ், சென்னை ஆனது 1996ஆம் ஆண்டில். இந்தப் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை 17-7-1996இல் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தமிழக சட்டசபையில் அறிவித்தார். ஆரூர்க்காரரின் அறிவிப்புக்குப் பின் இந்த நகரத்து இளைஞர்கள் மெல்ல மெல்ல ‘சென்னை பாய்ஸ்’ ஆனார்கள்.

நான் மெட்ராஸில் வந்திறங்கியவன்; தற்போது சென்னைவாசியாக வாழ்ந்து வருகிறேன். இது ‘தருமமிகு சென்னை’ தான். சந்தேகமே இல்லை. ஆளற்றவர்களை ஆளாக்கியிருக்கிறது இந்த மாநகரம். ஊர் பேர் தெரியாமல் உள்ளே வந்தவர்களுக்கு உபகாரம் செய்து உச்சத்தில் உட்கார வைத்தது இந்த ‘காஸ்மோபாலிட்டன் சிட்டி’.

பள்ளிப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டு, வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வந்தவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் வாழ வழிகாட்டியது இந்த நகரத்து வீதிகள். சினிமா சிலரை நாடறியச் செய்தது. சில்லறை வியாபாரம் செய்து பிழைத்தவர்கள் அவர்களது சொந்த மண்ணில் ‘பிரமுகர்’ ஆனார்கள்.

அரசியலுக்கு வந்தவர்கள் ஆதாயம் பெற்றார்கள். பணபலமும் பதவி சுகமும் பெறுமதில்களுக்குள் அவர்களது வாழ்விடங்களை உல்லாசபுரிகளாக்கித் தந்தன.

தருமமிகு சென்னையில் எல்லோருக்கும் வாழ வழி தெரிந்தது. சென்னை வந்தோரை வரவேற்றது. டீக்கடை என்றால் மலையாளிகள்; நிலபுலம், வணிகம் என்றால் தெலுங்கர்கள் என்றிருந்த மெட்ராஸ் மறைந்து, இன்றைய சென்னையில், வீட்டுக் காவலாளியிலிருந்து உடுப்பி ஓட்டல் வரையிலும் கட்டுமான தளங்கள் முதல் சிகை அலங்காரக் கூடங்கள் வரையிலும் இந்திக்காரர்கள் தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை வாழ் வடபுல உழைப்பாளர்கள் பேரவை ஒன்று அமையலாம். ஓர் அசாமியாரோ ஒரு நேப்பாளியோ ஒரு பீகாரியோ தமிழக சட்டமன்ற உறுப்பினரானால் வியப்பதற்கில்லை. வந்தாரை வாழவைக்கும் பட்டணம் இது.

 

மெட்ராஸ் என்ற சொல் காதில் விழுந்தபோது எனக்குப் பத்து வயது இருக்கலாம். அப்போது நான் கிராமத்தில் படித்து வந்தேன். காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்படும் பூம்புகாரிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீழப்பெரும்பள்ளம் என்ற ஊர்தான் எங்கள் பூர்வீக கிராமம். அங்கே எங்கள் பக்கத்து வீட்டுக்காரரான குஞ்சிதபாதம் என்கிற குஞ்சு பிள்ளை ஒரு நெல் வியாபாரி. எப்போதும் வீட்டின் முன்புறம் ஒரு பெரிய மரச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி உரத்த குரலில் வருவோர் போவோரிடம் பேசிக் கொண்டிருப்பார். அவர் ஏதோ கேஸ் விஷயமாக சென்னைக்கு பொய் வந்தவர் போல. அவரது சபைக்கு யாராவது வந்துவிட்டால் அவரது மெட்ராஸ் புராணம் ஆரம்பமாகும். கை ரிக்சாக்காரனின் மெட்ராஸ் பாஷையில் கொஞ்சம் பேசிக் காண்பிப்பார். கீதா கஃபே ஓட்டலில் சாம்பாரில் மிதக்கும் இட்லியை விட சாம்பாரைப் பருகிக் களிக்கும் மெட்ராஸ் கலாசார வரலாற்றைக் கேட்பவர் காது கொதிக்கச் சொல்லிக்கொண்டே போவார். இவரிடமிருந்துதான் மெட்ராஸ் என்ற சொல் மனத்தில் பிடிபட்டது.

முதன்முதலாக என் கண்கள் கண்ட மெட்ராஸின் அடையாளங்கள் அந்தக் காலத்து சினிமா டிக்கெட்டுகள்தான். என் தாய் மாமா அப்போது மெட்ராஸ் லா காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். அவர் ஊருக்கு வரும்போது அவர் விட்டுச் சென்ற காசினோ, பாரகன், கெயிட்டி தியேட்டர்களின் சினிமா டிக்கெட்டுகள் அலமாரியில் காணக் கிடைத்தன. அவை வண்ணமயமானவை. அவ்வப்போது குஞ்சு பிள்ளையின் மெட்ராஸ் புராணம் மட்டும் ஒலிச்சித்திரமாக ஒளித்துக் கொண்டிருக்கும். கீதா கஃபே உரிமையாளர் ஜெயராமய்யர் எங்கள் ஊரை அடுத்த கடற்கரை கிராமமான வணகிரியிலிருந்து சென்னைக்குச் சென்று ‘செட்டில்’ ஆனவர் என்பார் குஞ்சுப்பிள்ளை. ஜெயராமய்யரும் தன்னைப்போல் நெல் வியாபாரம் செய்தவர் என்று தனது அந்தஸ்தையும் உயர்த்திக்கொண்டு கீதா கஃபேயின் வளர்ச்சி குறித்துப் பல கதைகள் திரித்துக் கொண்டிருப்பார். குஞ்சுப்பிள்ளையின் சகாக்கள் மேல் துண்டால் வாயைத் துடைத்தபடி பிள்ளையின் கதைகளில் மூழ்கித் திளைப்பார்கள்.

chennai moore market

1969 வாக்கில் கிராமத்திலிருந்து மாயவரம் என்ற நகரத்திற்கு வந்தேன். அங்கே ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில்தான் முதன்முதலாக ரயிலைப் பார்த்தேன். ஒரு ஊருக்குச் செல்வதற்கு நன்னிலம் வரை ரயிலில் சென்றேன். ‘பேரளம் வடை’ விற்றார்கள். ஒரு வடை போதும் ஒரு வேளை உணவுக்கு. மாயவரம் வாழ்வுதான் மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. ஊர் சுற்றும் ஆசையை வளர்த்து எடுத்தது.

கல்லூரிக் காலத்தில்தான் ஊர் சுற்றும் சுதந்திரம் கிடைத்தது. டே எக்ஸ்பிரஸ் என்ற சோழன் எக்ஸ்பிரஸ் மூலம் தஞ்சைக்கும் திருச்சிக்கும் செல்ல ஆரம்பித்தேன்.

மெட்ராஸ் போவதற்கு மாயவரத்துக்காரர்களுக்கு உகந்த ரயிலாக செங்கோட்டை ஃபாஸ்ட் பாசஞ்சர் அமைந்தது. அந்த ரயில் எண் 110. சென்னை எக்மோர் நிலையத்தை வந்தடையும் முதல் ரயில் இந்த ‘ஒன்டென்’. தகர டின்களில் வத்தல் வடாம் எடுத்துக்கொண்டு மெட்ராஸ் செல்வதில் அந்தக் காலத்து மனிதர்களுக்கு எந்தச் சின்னத்தனமும் இருப்பதாகத் தோன்றியதில்லை. கட்டுச்சோறு வாசனை இல்லாத கம்பார்ட்மெண்டுகள் அரிது. மாயவரம் ரயில்வே ஸ்டேஷன் ரிசர்வேஷன் கிளார்க் தன்னை ரயில்வே போர்டின் தலைவராகவே நினைத்துக்கொண்டு பணியாற்றுவார். அவரிடம் ஒரு கேள்விக்கு மேல் மறு கேள்வி கேட்டால் அவர் முகத்தில் அனல் வீசும். அரசவைக்குள் அத்துமீறி நுழைந்துவிட்ட குடிமகனைப்போல் அங்கு வரும் எளிய மனிதர்களிடம் நடந்துகொள்வார்.

இப்படிப்பட்ட சர்வ அதிகாரம் படைத்த ரிசர்வேஷன் கிளார்க் முன்பு நின்று முன்பதிவு செய்துகொண்டு நானும் சில நண்பர்களும் ‘ஒன்டென்’ ரயில் மூலம் மெட்ராசுக்குப் புறப்பட்டோம். அப்போது நான் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவன். பியூசி வரை என்னுடன் படித்த திருமால் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். அவனது அழைப்பின் பேரில்தான் இந்த மெட்ராஸ் பயணம். இரவு முழுவதும் நங்கள் பார்க்கப்போகும் மாநகரத்தைப் பற்றிப் பலவிதமாகப் படம் வரைந்து பார்த்துக்கொண்டே இருந்தது. ஒன்றும் பெரிதாகப் பிடிபடவில்லை. விடியர்களைப் பொழுதில் ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பிளாட்பாரத்தில் கும்பல் கும்பலாய் மனிதர்கள் தென்பட்டார்கள். நடையிலும் உடையிலும் வித்தியாசம் தெரிந்தது. மாநகரத்தின் வசீகர வாசனை நெஞ்சை நிறைத்தது. பிறகு கடந்துபோன எல்லா ஸ்டேஷன்களின் கட்சிகளும் தேவலோகக் காட்சிகளாகவே மனத்தில் பதிந்தன.

ஒன்டென் விடிவதற்கு முன்பே எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. திருமால் என்னை வரவேற்று ரயில் நிலையத்தின் பின்புறம் வழியாகத் தினத்தந்தி அலுவலகத்தைக் கடந்து கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்கு எங்களை அழைத்துச் சென்றான். என் மனம் போட்டு வைத்திருந்த கோலம் ஒன்று. நான் அங்கே பார்த்த கோலம் வேறொன்று. திருமால் கொஞ்சம் கண்ணயர்ந்தான். என் கால்கள் ஓரிடத்தில் தரிக்கவில்லை. விடுதியின் சுற்றுச் சுவரைக் கடந்து வெளியே வந்தேன். காலாற நடந்தேன். ஒரு மலையாளத்தாரின் டீக்கடை கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்து அமர்ந்தேன். பட்டர் பிஸ்கட், கேக் என்று பலவிதமான தின்பண்டங்கள் கொண்ட ஒரு தட்டை என் முன் கொண்டு வந்து வைத்தார் கடைக்காரர். ஒரு டீ வேண்டுமென்றேன். தட்டிலிருந்து இரண்டு மூன்று பிஸ்கட்டுகளை எடுத்துச் சுவைத்தேன். தட்டில் மிச்சம் வைக்கலாமா கூடாதா என்று தெரியவில்லை. கேட்கவும் கூச்சம். சரி முடிந்தவரை சாப்பிடலாம் என்று மனத்தைத் தேற்றிக்கொண்டேன். நகரத்து நாகரீகங்களைக் கண்டறிவது எப்படி? கொஞ்சம் சிந்தித்துக் கொண்டிருக்கையில் கடைக்காரர் டீ கொண்டு வந்தார். “தட்டில் இருப்பவை போதுமா?” என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்டார். நான் ஒரு மாதிரித் தலை அசைத்தேன். அவர் மீதமிருந்த பிஸ்கட்டுகளுடன் தட்டை எடுத்துக்கொண்டு போய்விட்டார். எனது வெட்கமும் மன இறுக்கமும் ஒருவாறு தொலைந்து போயின. ஒன்று தெளிவானது. “டீக்கடையில் ஒரு தட்டு நிறைய வைக்கும் பிஸ்கட்டுகளில் சாப்பிட்டவைக்கு மட்டுமே பணம் தர வேண்டும். மீதம் வைக்கலாம்” என்ற நகரத்தின் டீக்கடை நாகரீகம் அன்று முதன்முதலாக எனக்குத் தெரிய வந்தது.

நாயர்கள் அரபு நாடுகளுக்குப் போகத் துவங்கியபின் மாநகர டீக்கடைகளில் தோற்றமும் மாறிக்கொண்டே வருகிறது. திரைப்படங்களில்கூட நாயர் டீக்கடைகள் தொலைந்துபோய் தமிழர்கள் டீ ஆற்றிக் கொண்டிருக்க வடிவேலு அலப்பறை மையம் கொண்டிருக்கிறது.

2022இல் சென்னைத் தேநீர்க் கடைகளில் தம் டீ, மசாலா டீ, ஹனி லெமன் டீ, ஜிஞ்சர் டீ, இரானி டீ, ஜாஸ்மின் டீ, ஹெர்பல் டீ, கிறீன் டீ, ஹைபிஸ்கஸ் டீ என்று எண்ணற்ற டீ வகைகள் இறக்குமதியாகி நமது பர்ஸை காலி செய்து வருகின்றன. ஒரு கப் டீ முப்பது ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது. தேநீர்க்கடைகள் நகைக்கடைகள் போல ஒளி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. அங்கே நவீன உடை அணிந்து பெண்கள் பணிபுரிகிறார்கள். பாதசாரிகளுக்கு நடைபாதை டீக்கடைகள் இருக்கின்றன.

பிறகு சென்னையில் நான் போக வேண்டிய இடம் மூர் மார்க்கெட். திருமாலும் நானும் நடந்தே மூர் மார்க்கெட் சென்றோம். தூரம் பெரிதாகத் தெரியவில்லை. அங்குச் சென்று டேல் கார்னகியின் மூன்று முக்கியமான நூல்களை வாங்க வேண்டும் என்பதே எனது இலக்கு. கடல் போல விரிந்து கிடந்தன பழைய புத்தகக் கடைகள். தேடிச் சென்ற நூல்கள் எளிதில் கைவசமாகின. How to Win Friends and Influence People, How to Stop Worrying and Start Living, How to Make an Effective Public Speaking ஆகிய மூன்று நூல்களும் கிடைத்தவுடன் ஏதோ உலகத்தையே வென்றெடுத்துவிட்டது போன்ற உணர்வு என்னை மகிழ்ச்சியின் ஆழ்த்தியது. மேலும் பல ஆங்கில, தமிழ் நூல்களை வாங்கி குவித்து அவற்றை அள்ளிக்கொண்டு விடுதிக்குத் திரும்பினோம்.

மறுநாள் டூரிஸ்டு கைடு போல திருமால் மவுண்ட் ரோடு, மெரினா பீச், மியூசியம் என்று பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்றான். வெயில் கொளுத்தியது. கண்ணில் பட்ட ஏ.சி வசதி கொண்ட கடைகளில் தேவை எதுவும் இல்லாமலேயே உள்ளே நுழைந்து எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். பெரும்பாலும் காலண்டர்கள் உலாவந்த நகரத்துச் சாலைகளில் கால்நடையாகவே சுற்றி அலைந்தோம். அதிகபட்சம் பேருந்துகள் துணைக்கு வந்தன. அலைந்து அயர்ந்த கால்களுடனும் மெட்ராஸை வியந்து விரிந்த கண்களுடனும் மீண்டும் செங்கோட்டை பாஸ்ட் பாசெஞ்சர் ரயிலேறி மாயவரம் திரும்பினேன். அதாவது எங்கள் மொழியில் 109 ட்ரெயின் என்னை ஊரில் கொண்டு சேர்த்தது.

தொடரும்

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

 

Amrutha

Related post