டில்லி விவசாயிகள் போராட்டம்: பாடங்களும் படிப்பினைகளும்

 டில்லி விவசாயிகள் போராட்டம்: பாடங்களும் படிப்பினைகளும்

பிரபு திலக்

 

ரலாற்றுச் சிறப்புமிக்க, ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த டில்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியும்கூட. ஓர் ஆண்டாக வெயில், மழை, குளிரில் அமர்ந்து தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள், ஜனநாயக நடைமுறைகளின்படி நடந்து அரசுக்கு வழிகாட்டியுள்ளனர். இவ்வளவு நீண்ட காலம் நீடித்த ஒரு போராட்டத்தை வன்முறையின்றி அமைதியான வழியில் நடத்தியுள்ளார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்துக்குப் பிறகு, நெடுநாள்க‌ள் நடைபெற்ற அறவழி போராட்டம் இதுவே. இந்தியாவில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

“உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. விவசாயிகள் போராட்டம் நீடித்தால் அது இந்த தேர்தல்களில் பெரும் விளைவுகளை உண்டாக்கலாம் என்ற அச்சம் ஆளும் கட்சிக்கு இருக்கிறது; எனவே, அதற்கு முன்பே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது” என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல்தான், தற்போது மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. இதுதான் காரணமாக இருந்தாலும்கூட பிரதமரின் அறிவிப்பு இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.

“விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும், மாற்று சந்தை வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதையெல்லாம் விவசாயிகளிடம் விளக்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது” என்று பிரதமர் உட்பட ஆளும் தரப்பில் சொல்லப்பட்டாலும், மூன்று வேளாண் சட்டங்களும் முழுமையாக அமலாக்கப்பட்டால், நாளடைவில் பெருநிறுவனங்கள் கைகளில் விவசாயம் சென்றுவிடும் என்ற விவசாயிகளின் அச்சத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே, அரசு சட்டத்தை அமல்படுத்திய விதமும் போராட்டத்தை அணுகிய விதமும் இருந்தது,

“ஏற்கெனவே விவசாயம் பெரிய லாபமற்ற தொழிலாக இருக்கிறது; இந்நிலையில் பெருநிறுவனங்கள் விளைநிலங்களை நோக்கி வர வழிவகுக்கும் இந்த சட்டங்கள் தொடர்ந்தால், முழுமையாகவே விவசாயம் நம்மைவிட்டுப் போய்விடும்” என்று விவசாயிகள் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் ஒருபோதும் அமையவில்லை.

முக்கியமாக மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்படும் முன்பு பாராளுமன்றத்திலோ, பொதுத் தளங்களிலோ, விவசாய குழுக்களிடமோ கலந்தாலோசிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில், இதுகுறித்து ஆழமாக விவாதிக்கவும் சிறப்புக்குழு அமைத்து ஆராயவும் எதிர்க்கட்சிகள் வைத்த வேண்டுகோளும் மறுக்கப்பட்டு, அவசர கதியில் இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை எல்லாம் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வலு சேர்த்தன.

கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு, எம்.எஸ். ஸ்வாமிநாதன் குழு பரிந்துரையின்படி, குறைந்தபட்ச விலை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் பல வருடங்கள் கோரிக்கை. அதைச் சட்டமாக்க தயங்கும் அரசு, அதற்கு மாறாக திடீரென இந்த மூன்று வேளாண்  சட்ட திருத்தங்களைக் கொண்டுவந்தது.

இதில் முதல் திருத்தம், “வேளாண் விலை பொருட்கள், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில்தான் விற்கப்பட வேண்டும் என்னும் தற்போதைய நிலையை மாற்றி, வேளாண் விலை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்; உழவர்கள் தங்கள் பொருட்களை மாநில எல்லைகளைத் தாண்டியும் கொண்டுசென்று விற்கலாம்; தனியார் வணிகர்கள், உழவர்களின் நிலத்திற்கே சென்று கொள்முதல் செய்துகொள்ள முடியும்” என்று சொல்கிறது.

இரண்டாவது திருத்தம், உழவர்கள், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறை மூலமாக, வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வதை அனுமதிக்கிறது. இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். ஆனால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் இருந்தால், நீதிமன்றங்களுக்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரைத்தான் அணுக வேண்டியிருக்கும் என்று மாற்றப்பட்டு இருந்தது.

ஏற்கெனவே உணவு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவை அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றைக் கொள்முதல் செய்து சேமித்து வைக்கும் அளவுகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் இல்லையெனில், வேளாண் பொருட்களை, வணிகர்கள் அதிகமாகக் கொள்முதல் செய்து பதுக்கி வைக்கக் கூடும்; இது தடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருந்தது. இந்தக் கட்டுப்பாடு மூன்றாவது திருத்தத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தது.

இவை எல்லாவற்றையும் விவசாயிகள் எதிர்த்தனர்; மக்களும் விவசாயிகளின் நியாயத்தை உணர்ந்திருந்தனர்.

எல்லாவற்றையும் தாண்டி இந்த போராட்டம் வெற்றிபெற முக்கிய காரணம், தடைகளை மீறி ஒரு ஆண்டுக் காலம் நீடித்ததுதான். தொடர்ச்சியான எதிர்ப்புகளை மீறி இந்த நீண்டகாலத்தைக் கடந்திருக்காவிட்டால் நிச்சயம் விவசாயிகளது கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டிருக்கும்.

ஒருநாள் பேரணிகளை அல்லது ஒன்றிரண்டு நாள் மாநாடுகளை இதுபோல் பெருந்திரள் மக்களைப் பங்கேற்க செய்து நடத்துவது நமது அரசியல் கட்சிகளுக்கு எளிதானது. ஆனால், பெண்கள் உட்பட இவ்வளவு அதிகமான மக்களைக் கூட்டி ஒரு வருடம் கடந்து ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவது என்பது இன்று ஒரு பெரிய அரசியல் கட்சியால்கூட சாத்தியமானதில்லை. அதிலும் கொடுங் குளிர்காலம், கோடைக்காலம், முடக்கிப்போடும் மழைக்காலம், கொரோனாவின் இரண்டு பெரிய அலைகள் ஆகியவற்றை எல்லாம் கடந்து என்பது – அசாதாரணமானதுதான்.

காலிஸ்தான் ஆதரவு, வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் போன்ற முத்திரைகள் மூலம் விவசாய இயக்கத்தை சட்டவிரோதமாக்குவதற்கு அரசும் தன்னால் இயன்ற வரை முயற்சித்தது.

லக்கீம்புரில் விவசாயிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்து ஒன்றிய உள்துறை இணையமைச்சரே பொது மேடையில் பேசினார். அதைக் கண்டித்து அமைதியாகப் பேரணி நடத்திய விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் தலைமையில் காரை ஏற்றி அந்த இடத்திலேயே நான்கு விவசாயிகளை கொன்றனர். இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையில், இந்த விபத்து வேண்டுமென்றே அப்பாவி விவசாயிகளைக் கொலை செய்யத் தீட்டிய சதியின் அங்கம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வர் உட்பட 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஓராண்டு போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். பல விவசாயிகள் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இத்தனையையும் மீறி எப்படி இப்படியொரு நீண்ட போராட்டம் விவசாயிகளுக்கு சாத்தியமானது என்பதில் அனைவரும் கற்றுக்கொள்ளப் பல பாடங்கள் உள்ளது.

விவசாயிகள் முறை வைத்து போராட்டங்களில் பங்கெடுத்தனர். ஒவ்வொரு ஊரிலிருந்தும் குழு, குழுவாக வந்தனர். ஒரு குழு குறிப்பிட்ட நாள்கள் வரை போராட்ட களத்திலிருந்துவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றால், இன்னொரு குழு ஊரிலிருந்து போராட்டக் களத்தை வந்தடைந்தது. போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத கிராமத்தினர் போராட்டத்துக்குச் செல்லும் விவசாயிகளுக்குப் பணத்தையும் உணவையும் தளவாடப் பொருட்களையும் தந்து ஊக்குவித்தனர்.

இரவில் போராட்ட இடங்களில் பாதுகாப்பாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்ததன் மூலம் பல அசம்பாவித சம்பங்கள் தவிர்க்கப்பட்டன. ஒரு நாள் இரவில் முகாமை எரிக்க இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்த விஷயமாக இருந்தாலும் சரி, சட்டமியற்றுவதற்கு முன், நாடாளுமன்றக் குழுவில் விவாதியுங்கள் என்பதுதான் விவசாயிகள் போராட்டம் அரசுக்குச் சொல்லும் பாடம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது, ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடக்க வேண்டும், மாற்று வழிகளுக்கு இங்கு இடமே இல்லை என்பதை விவசாயிகள் போராட்டம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கட்சிகள் கலப்பில்லாத மக்கள் போராட்டங்கள் நீண்ட காலம் நீடிக்கும், வெற்றி பெறும் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. (தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் இன்னொரு சிறந்த உதாரணம்)

இந்த போராட்டத்தின் வெற்றி மூலம் விவசாயிகள் ஒரு சக்தியாகி இருக்கிறார்கள். எல்லா  கட்சிகளும் இன்று அடையாள நிமித்தமாக விவசாயிகள் பிரச்சினைகளைப் பேசுகின்றனவே தவிர, அவற்றின் பிரதான கவனம் அவர்கள் பக்கம் இருந்து விலகி நீண்ட காலம் ஆகிறது. இப்போது இந்நிலையும் மாறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

Amrutha

Related post