இந்த தீ பரவக்கூடாது! | பிரபு திலக்

 இந்த தீ பரவக்கூடாது! | பிரபு திலக்

யோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. பெரும்பான்மை மக்களின் ‘வெற்றி’ கொண்டாட்டங்கள் கரை கடக்கவில்லை என்பது பெரும் ஆசுவாசத்தை தந்தது என்றால், அந்த கொண்டாட்டங்களை கண்டும் காணாதது போல் அமைதியாக கடந்து சென்ற சிறுபான்மை மக்களின் பெருந்தன்மையும் இந்த அமைதிக்கு முக்கியக் காரணம். அவர்களின் இந்த பெருந்தன்மை நிச்சயம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

ஆனால், இந்த அமைதி எக்காலத்துக்கும் நீடிக்குமா என்ற கேள்விக்கான பதில் உறுதியில்லாமல் இருப்பதுடன் ஒருவித அச்சத்தையும் தராமல் இல்லை. அதற்குக் காரணம், ராமர் கோவில் குடமுழுக்குக்கு பின்பு வெளியான ஒரு ஆய்வு முடிவு.

இந்தியாவில் உள்ள இந்து மதத்தவர்களின் மனநிலையைப் பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Pew Research Center (PRC) என்ற அமைப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கடந்த 2019 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை, இந்தியா முழுவதும் 30 ஆயிரம் இந்துக்களை சந்தித்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இதில், உங்களுக்கு விருப்பமான கடவுள் யார் என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் சிவன் என்றும், 35 சதவீதம் பேர் ஆஞ்சநேயர் என்றும், 32 சதவீதம் பேர் விநாயகர், 28 சதவீதம் பேர் லட்சுமி, 21 சதவீதம் பேர் கிருஷ்ணர், 20 சதவீதம் பேர் காளியை தங்கள் இஷ்ட தெய்வங்களாக கூறியுள்ளனர்.

ராமரை 17 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இஷ்ட தெய்வமாக கூறியுள்ளனர். இந்தியாவின் மத்திய மண்டலப் பகுதிகளில்தான் ராம பக்தர்கள் அதிகமாக உள்ளனர். இங்குள்ள இந்துக்களிலும் 27 சதவீதம் பேருக்கு மட்டுமே ராமர் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். வட இந்தியாவில் 20 சதவீதம் பேருக்கும் கிழக்கு இந்தியாவில் 15 சதவீதம் பேருக்கும் தென்னிந்தியாவில் 13 சதவீதம் பேருக்கும் ராமர் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். வடகிழக்கு இந்தியாவில் மிகக் குறைந்த அளவாக 5 சதவீதம் பேருக்கு மட்டுமே ராமர் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.

இதுவரை பிரச்சினையில்லை. அச்சம் தரும் முடிவு இனிதான் வருகிறது. அதாவது, இந்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் இந்துக்கள் மட்டுமே தங்கள் பக்கத்து வீடுகளில் பிற மதத்தினர் வாழ்வதை ஏற்றுக்கொள்கிறார்கள். 55 சதவீதமானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைவிட அச்சம் தரக்கூடியது, 36 சதவீதம் இந்துக்கள் தங்கள் பக்கத்து வீடுகளில் இஸ்லாமியர்கள் குடியிருப்பதை விரும்பவில்லை.

மதச்சார்பின்மையால் இந்தியாவுக்கு நன்மை இருப்பதாக 53 சதவீதம் இந்துக்கள் மட்டுமே நினைக்கிறார்கள். 24 சதவீதம் பேர் அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிப்பதாக நினைக்கிறார்கள். 24 சதவீதம் பேர் இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

எது நடந்துவிடக்கூடாது என நினைத்து இவ்வளவு நாளும் பயந்திருந்தோமோ அது நடக்கத் தொடங்கியிருக்கிறது என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகிறது.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி பல நாடுகளை எதிர்ப்பே இல்லாமல் கைப்பற்றி, அங்கிருந்த யூத மக்களை அழித்தொழிப்பதை ஆரம்பித்த நேரத்தில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் ஒரு புகைப்படம் மிகப் பிரபலமானது; அதை ஒருமுறை பார்த்த எவராலும் அதன்பின்னர் மறக்க முடியாதது.

அந்தப் புகைப்படத்தில் நாற்பது வயது பெண் ஒருவர், பொது இடத்தில், பின்னால் சில ஆண்கள் சிரித்தபடி துரத்த, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, உள்ளாடைகள் கிழிந்த நிலையில், மார்பு தெரிய, அலறியபடி தெருவில் ஓடி வருவார். அவரை துரத்துபவர்களில் கையில் ஒரு கழியோடு, பள்ளி செல்லும் வயதிலிருக்கும் ஒரு சிறுவனும் இருப்பான். அந்தப் பெண்மணியைத் துரத்தியவர்கள் அதுவரை அமைதியாய் அவருடன் ஒரே ஊரில் வாழ்ந்தவர்கள் என்பதுதான் அப்புகைப்படத்தை என்றும் மறக்க முடியாததாக மாற்றியது.

உணர்ச்சியேற்றப்பட்ட கும்பல் மனநிலையில், சாதாரணமான மனிதர்களும், சக மனிதர்கள் மீதான வன்முறையை எந்த அளவுக்கு கொஞ்சமும் குற்றவுணர்ச்சியின்றிச் செய்யக்கூடிய மிருகங்களாக மாறுவார்கள் என்பதற்கு அந்தப் புகைப்படம் போல சரித்திரத்தில் நிகழ்ந்த அனேக சம்பவங்கள் உண்டு.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது மூன்று வயதுப் பெண் குழந்தையை சுவற்றிலடித்துக் கொன்றவர்கள் அனைவருமே, அவருக்கு நன்கு அறிமுகமான, அவரது ஊர்க்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலே ஒருவர், அவரது ஊரில் அவருக்குச் சிறு வயதிலிருந்தே சிகிச்சையளித்த மருத்துவர்.

அதிகாரத் தரப்பிலிருந்து முழுவீச்சிலான இனச் சுத்திகரிப்புக்கு அறைகூவல் விடுத்தால், சரியான விதத்தில் தூண்டி விடப்பட்டால், தூபம் போடப்பட்டால், ஆண் – பெண் வித்தியாசமில்லாமல், பக்கத்து வீட்டுக்கார்கள்கூட வன்முறையாளராக மாறுவார்கள் என்பதற்கான முன் உதாரணங்கள் தான் பில்கின்ஸ் பானுவுக்கு நிகழ்ந்ததும், புகைப்படத்தில் இருந்த யூதப் பெண்மணிக்கு நிகழ்ந்ததும்.

பக்கத்து வீடுகளில் மாற்று மதத்தினர் வசிப்பதை விரும்பாத, அவர்கள் மேல் மனதுக்குள் அத்தனை வன்மங்களைத் தூக்கிச் சுமந்து திரிபவர்களாக பெரும்பான்மை இந்துக்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதையே PRC கருத்துக்கணிப்பு முடிவு உறுதிபடுத்துகிறது. இத்தனை வன்மங்களை மனதுக்குள் அடக்கி வைத்திருப்பவர்களுடன் தான், எதிர்காலத்தை சந்திக்க வேண்டியுள்ளது என்ற உண்மை மனதின் அடியாழத்தில் ஒரு இந்துவுக்கே கூட கடுமையானதொரு அச்சத்தையே எழுப்பும். முன்பைவிட நாம் அதிக கவனமாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது.

அதேநேரம், இப்படியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை; இங்கே படித்தவர்களும் ஓரளவு அரசியல் புரிதல் உள்ளவர்களும் அதிகம். மத நம்பிக்கைகள் இருந்தாலும் மத வெறி குறைவு என்பதை காட்டும் நம்பிக்கையை தரும் நிகழ்வு ஒன்றும் அண்மையில் நடந்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்குக்கு முதல்நாள் (ஞாயிற்றுகிழமை), தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா ஒன்று, மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது. அந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சீர்வரிசைகளுடன் சென்று, அந்த பள்ளி வாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, கொண்டாடியுள்ளனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவர்கள் பாதிரியார் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர். கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்கள் ஊர் கவுன்சிலர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் போன்றவர்கள் சார்பாக ஊரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக் கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் முன்னேற்ற சங்க நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற, இளையான்குடி சாலைக்கிராம பள்ளி வாசல் திறப்பு விழா, அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் மனநெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

prabhu thilak

Amrutha

Related post