தென்றல் கவிதைகள்

 தென்றல் கவிதைகள்

ஓவியம்: நடேஷ்

1
எல்லா ராஜாவையும் ஜெயித்துவிட்டு
என்றாரம்பிக்கும் உன் கதையில்
இன்னும் கேட்க என்ன இருக்கிறது
தரை இறங்கா அன்னப் பக்‌ஷிகளைப் பற்றியும்
பட்டணத்து குடிசை எலி பற்றேனும்
வைக்கோல் சுமந்து செல்லும் எறும்பு பற்றியேனும்
கதை இருந்தால் சொல்லேன்

2
ஒரு சில நொடிகளாவது
இந்த சிறு பெண்ணின் ஜடை சுங்கும்
அந்தக் கிழவியின் கூக்குரலும்
எனது சுண்டுவிரலும்
இப் பிரபஞ்சத்தின் மையமாக இருந்தால் என்ன

3
பின்னிரவில் மேலுழுந்த
திமிங்கிலத்தின் கவிதை ஒன்று
காலையில் மூழ்கிப்போனது

4
ஐயா
இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும்
என்ன பார்க்கின்றீர்? என்ன பார்க்கின்றீர்?
பால் வெளியோ தன் ஆயிரம் கண்கொண்டு
உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது
இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும்
என்ன பார்க்கின்றீர்? என்ன பார்க்கின்றீர்?

5
வேகமாக ஓடியபோது
நிற்கத் தோன்றியது
பின் நடக்க
பின் சற்றே அமர
பிறகு படுத்தே விட்டான்
படுத்தே விட்டான்
எப்பொழுதோ காது குத்தியது
மறைந்துவிட்டது
உன் இல்லாமையை
நான் மறந்தே போனதுபோல

6
அவர்கள்
ஆரம்பத்தில் ஏதோ பாடினர்
நடுவிலும் எதோ பாடினர்
முடிவிலும் எதையோ பாடினர்
ஆனால்
தெரியாது என்று மட்டும் சொல்லவே இல்லை

7
விழும் எருக்கம் பூவுக்கும்
எனக்கும் என்ன
ஓராயிரம் வர்ஷ சகவாசமா என்ன
கண்ணீர் சிந்தாமல் இருக்க

8
விஷயம் இதுதான்
நாகம் நாகத்தோடு
ஓடிவிட்டது
மகுடி
அலைகழிக்கப் பட்டு நட்ட நடு கடலில்
மேகத்தால் ஆன மரப்பாச்சி
அம்மியில் உட்கார்ந்து மருதாணி உருட்டியபடி
வில்லை காலில் மிதித்துக் கொண்டிருக்கும் வேடன்
அவன் மேல் உறங்கும் மயில்
இதற்கெல்லாம்
நானே சாட்சி

9
பனி பொழிகிறதா
நடு நடுங்கும்
ஒரு குரல் இருட்டில்
ஆமாம் எனும்
பல குரல்
ஒன்று மட்டும்
கம்பளி நீட்டும்
கம்பளியை அக்குரல்கள் மீது போர்த்தி
இது அதனுடன்
கிளம்பிவிட்டது

10
கோடி கோடி ஒளிசிந்தும்
நட்சத்திரங்கள்
இருந்தாலும்
இருந்தாலும்
சூரியன் மறையும் இந்நேரத்தில்
நீதான் வேணும் எனக்கு

11
பூனை ஏன்
கிணற்றில் பாய்ந்தது
மீன் தெரிஞ்சதாக்கும்

12
1000 கோடாலியை
ஒவ்வொன்றாக
மூழ்கி மூழ்கி காண்பிக்கிறாள்
வனதேவதை
எனதில்லை எனதில்லை
என்றபடி இருக்கிறான் மரம்வெட்டி
பின் மூழ்கினவளைக் காணோம்
காடதிர உரக்க சிரிக்கிறான் மரம்வெட்டி

13
இந்த இரவைக் கடத்தினாலே போதும்
அப்புறம் இருப்பது சமவெளிதான்
இந்த இரவை மொத்தாமாய்
விழுங்கும் அந்த
சமவெளியேதான்

14
மயக்கமூட்டுவதாய் அசைந்து அசைந்து
ஆடுமிந்தப் பெண்
எங்கிருந்து வந்தாள்

மஹா சர்ப்பத்தின் உடல் போல
அவள் திரும்பும் போதே திரும்பி

அவள் பின் கட்டுண்டது போல்
மென் அடி வைத்து அவளுக்காக பாடி வரும்
இப் பதிமூன்றாயிரம் பேரும்

எங்கிருந்து வந்தனர்
எங்கிருந்து வந்தனர்

போதாதென்று
தூரத்தில் குரைக்கிறது நாய்

15
பின்னொரு நாள் செய்தி வந்தது
அவனைக் காணவில்லையாம்
எங்கே போய்விட்டான் என்றான்
வெற்றிலை மென்றபடி நால்வரில் ஒருவன்
மற்றவரோ நிலம் நோக்கினர்
சென்றவனோ வந்து
மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டான்

16
ஆடி முடித்த என்னை
ஆட அழைக்கிறாள்
அனுமார் முக கிழவி ஒருத்தி

தக்கிட்ட தக்கிட்ட

தக்கிட்ட தக்கிட்ட

தக்கிட்ட தக்கிட்ட

காதருகே சதா கேட்கிறது
உள்ளே வைத்துத் தாளிட்டு நான் சென்றுவிட்டேன்

ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருக்கிறாள் அவள்

17
வெண்டைக்காயை
ரெண்டாய், மூன்றாய், நான்காய்
பொடிப்பொடியாய்
முழுசாய் நீள் வாட்டாய்
எப்படி வேண்டுமானாலும் நறுக்கலாம்
நான் தந்ததோ
உள்ளே செங்குழம்பு தகிக்கும்
வெண்டைப்பூவை

18

சிறுமியின் தோளில்
அமர்ந்த தும்பி
அவள் ஓடும்போதும் ஆடும்போதும்
சதா
கேட்டபடியே இருந்தது

விட்டுப் போய்விடுவாயா
என்னை விட்டுப் போய்விடுவாயா

சுழல்வதை சடாரென நிறுத்திச்
சிறுமி சொன்னாள்
பைத்தியமே
உனக்குத்தானே றெக்கைகள் இருக்கு

19
துண்டித்த வேகத்தில்
பல்லி எப்போதோ ஓடிவிட்டது
துடித்துக்கொண்டிருக்கும் வால்தான்
பல்லியை தேடுகிறது
தன் ஆயிரம் கால்கொண்டு அரற்றி ஓடியபடி

20
துறுத்திய நாக்கொன்று கேட்டது
நீ என்ன ஆண்டாளா

கொஞ்சம் சுடு சாதமும்
குழம்பும் போட்டேன்

இன்னும் நிறைய எழுது என்று சொல்லி
கடலில் நனைந்த அப்பளமாய்
காணாமல் போயிற்று

21
அந்த வீட்டில்
நாகத்தை ஒருவரும் உள்ளே விடுவதில்லை
முள் வேலி
கம்பு, தடி, விளக்குமாறு
கல் உப்புக் கோலம்
மூங்கில் தட்டி

உத்திரத்திலேயே படுத்துக்கொண்டது பாம்பு
22
நமக்கே நமக்கென்று
ஓரு உலகம் சிருஷ்தித்தா எவ்வளவு நன்றாக இருக்கும்
என்றெண்ணியது
வைக்கோல் சுமந்த சிற்றெறும்பு
அட பைத்தியமே
அது அப்படித்தானே இருக்கிறது அச்சுப் பிசகாமல்
வாயை மூடி நடையைக் கட்டு
உரக்கக் கூவிற்று வைக்கோல்

23
சுள் வெய்யிலில்
பழுப்பு நிற ஓணானை
தடவும் நகை ஆசாரி
எதற்கு சிரிக்கிறான்
வெண் பற்கள் தெரிய
ஓணான் அவனைக் கண்டு
மிரளவில்லை என்றா
அல்லது அவன் மெல்லிய வருடலில்
திளைத்திருக்கிறது என்ற பெருமிதமா
ஐயா ஆசாரி
உற்றுப் பாருங்கள்
அது செத்த ஓணான்

24
ஒரு கவிதை எழுதி விட்டு
நியாயம் கேட்டு
அலைந்தபடி
இருந்தான் அவன்
காலில் சுற்றிய
பாம்பொன்று
அவன் இழுத்த இழுப்புக் கெல்லாம் சென்று
அவன் அரற்றலைக் கேட்டபடி இருந்தது
சோர்ந்து நீ கைவிடும் போது சொல்
ஒரே எட்டில்
உச்சம் தலையில்
பதிக்கிறேன் என் பல்லை

25
யாரைப் பிடித்துக் கொள்வதென்று
நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றது
ஆவேசமாய்
பேய் கூட்டத்தைக் கூட்டிய பேய் ஒன்று
கூட்டம் முடியும் முன்னே
இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறி ஓடி
புகுந்து கொண்டன
நாட்டியக் காரியையும்
கவிஞனையும்
கோலம் போட்டவளையும்
பாடிக் கொண்டிருந்தவனையும்
திருக்கண்ணமுது செய்பவளையும்
ஆட்டிடைச்சியையும்
ஆளுக் கொன்றாய்
கூட்டம் கூட்டிய பேயோ
தனியே
உச்சியில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறது
கபாலத்தில் வறுத்த பட்டாணியோடு

26
புது மூக்குத்தி
உனக்கு நல்லாதான் இருக்கு
கொட்டாவியுடன்
சொல்லக்கேட்டதால்
குளத்தில் விழுந்தாள் ஒருத்தி

பொரி போட்டால் கூட
வாய்திறப்பதில்லை
அங்கே மீன்கள்

27
பேய்க்கு தாலி கட்டினவனுக்கு
காலும் புரியலை
தலையும் புரியலை
முடிச்சு முடிச்சா்மட்டும்
அங்கே அங்கே இருக்கு

28
பசியோடு
இருகி சாத்தி இருக்கும்
கதவு இடுக்கில்
நுழையும் நாய்க்குட்டி
வேண்டுவது
அன்பின் சிறு கீற்றை

29
மிகச் சாதாரண ஒருத்தனை
அழைத்தான்
கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருந்த கவிஞன்
காதல் தோல்வியை எழுதனும்னான்
அதன் வேதனையை
அதன் தீவிரத்தை
அதன் மேன்மையை என்றான்
உள்ளதை அப்படியே எழுதுங்களேன்
என்றான் எம் சாதாரண ஒருத்தன்
அதற்கு கவி சொன்னான்
அதற்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன்
சொல்றேன்னான் சாதாரண மனிதன்
சொன்னான்
அதன் பிறகு கவிஞன்
எப்போதும் கால் மேல் கால் போடவே இல்லை.

30
கழைக்கூத்தாடி
முன்னும் பின்னும்
முன்னும் பின்னும்
முன்னும் பின்னும்
கயிற்றில் சென்றபடி
சரிதான்
இறங்கத்தெரியாது போலிருக்கு அவனுக்கு

தென்றல் <thendral@dhanyam.in>

Amrutha

Related post