ஹெரால்டு பின்டர்: மௌனத்தில் ஒலியைக் கண்ட கலைஞன்

 ஹெரால்டு பின்டர்: மௌனத்தில் ஒலியைக் கண்ட கலைஞன்

ட்டி.ஆர். நடராஜன்

உலக இலக்கிய வரலாற்றில் நாடகம் வகிக்கும் இடம் அது காலத்தின் கட்டுக்களை மறுத்தும் விலக்கியும் எழுந்து நின்ற, நிற்கும் ஒன்று. கேட்பதை விடப் பார்ப்பதில் அதிக உன்னிப்பையும் கவனத்தையும் ஒருவர் கொள்கிறார் என்பதும் நாடகத்தின் பரந்துபட்ட வெற்றியின் காரணத்தை வெளிப்படுத்துகிறது. மேடையில் ஏறும் நாடகத்தின் உள்ளொளி நாடகப் படைப்பின் ஆதார சுருதியில் இயங்குகிறது. உயர்ந்த நாடக இலக்கியங்கள், ஆரம்பத்தில் மனித வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிணாமங்களை வெளிக் கொணருவதில் ஈடுபட்டிருந்தன. மற்றொரு கட்டத்தில் அவை சமூகத்தின் வெவ்வேறு களங்களான மதம், அரசியல், கலை ஆகியவற்றின் மீதான விமரிசனங்களாகப் பதிலைத் தேடும் கேள்விகளை முன் வைத்தன. ஆனால், மேலும் வளர்ந்து வந்த பின் காலத்தில் நாடக இலக்கியங்களின் பார்வையும் அழுத்தமும் மனித மனங்களின் ஆழத்தைத் தேடிப் புரிந்துகொள்வதிலும் அவற்றை மனிதர்களிடம் பகிர்ந்துகொள்வதிலுமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர். 

1950களில் அமெரிக்காவில் ஆர்தர் மில்லர், டென்னஸி வில்லியம்ஸ் போன்ற நாடக ஆசிரியர்களின் படைப்புகள் சுயதணிக்கைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக உலவ ஆரம்பித்தன. இதற்கு நேர்மாறான நிலையில் பிரிட்டனில் கட்டுப்பாடுகளுக்குச் சிறைப்பட்டு எழுதும் நிர்ப்பந்தம் பரவிக் கிடந்தது. படைப்பிலக்கியத்தில் ஒழுக்கத்தை நிலைநாட்டும் சமூகக் காவலர்களுக்கு நடுவே ஒருவர் குரலெழுப்பித் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில், யுத்தம் முடிந்த பின் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் உந்தப்பட்டு கட்டற்ற எழுத்தை முன்னெடுத்துச் செல்ல இளம் எழுத்தாளர்கள் ஒன்று கூடினர். ‘கோபக்கார இளைஞர்கள்’ என்ற பட்டத்துடன் இவர்கள் தம் படைப்புகளை உருவாக்கி சமூக வெளியில் முன் வைத்தபோது அவற்றுக்குப் பலத்த மரியாதையும் வரவேற்பும் கிடைத்தன.

சமூகத்தில் அடிமட்டத்தைச் சார்ந்தவர்களின் நிராதரவான நிலைமையும் அவர்களைப் பீடித்திருந்த வறுமையும் பற்றிய கவனமும் உதவ வேண்டும் என்னும் உந்துதலும் இல்லாத நடுத்தர வர்க்கத்தினர் மீதும், பணக்கார வர்க்கத்தினர் மீதும் இக் கோபக்கார இளைஞர்கள் கொண்ட ஆத்திரம் அவர்களின் படைப்புகளில் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது. அவர்களின் போலித்தனமும் அலட்சியமும் பாசாங்கும் ஏழைகள் மீது அவர்கள் காட்டிய அற்பத்தனமும் கோபக்கார இளைஞர்களின் இலக்கியப் படைப்புகளின் கருப் பொருள்கள் ஆயின.

ஜான் ஆஸ்போர்ன், அர்னால்டு வெஸ்கர், கிங்ஸ்லி அமிஸ், ஆலன் சிலிட்டோ, ஜான் வெயின் போன்ற முன்னோட்ட எழுத்தாளர்கள் இந்தக் கோபக்கார இளைஞர் அணியுடன் இருந்தார்கள். இவர்களின் எழுத்து மற்ற சமகால எழுத்தாளர்களையும் கவர்ந்து இழுத்தன. வர்க்க வேறுபாடுகளினால் ஏழைகளிடம் ஏற்படும் உடல் மற்றும் மனக் கொந்தளிப்பு, ஏழைகளாக இருந்தாலும் அவர்கள் காட்டிய பொறுமை, கடும் உழைப்பு, மரியாதையைப் பேணுவது போன்ற குணங்களின் ஆச்சரியமான பண்புகள், பாவனைகளில் ஊறியிருந்த வசதி வாய்ந்த செல்வந்தர்களின் நடமாட்டத்தை மீது வெறுப்பு போன்ற பல்வேறு விஷயங்களை அவர்களின் படைப்புகள் தீவிரமாகப் பரிசீலித்தன. இந்த கோபக்கார இளைஞர்களின் செயல்பாடுகளினால் கவரப்பட்டு அவர்களுடன் இணைந்து கொண்டவர்களில் ஒருவர், ஹெரால்டு பின்டர்.

 

ரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது ஹெரால்டு பின்டர் அவருடைய பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வெளியூருக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவருக்கு ஒன்பது வயது. இருபத்தாறு சிறுவர்களுடன் அவர் ஒரு தனிக் கட்டிடத்தில் தங்க வேண்டியிருந்தது. அவருடைய பதினான்காம் வயதில் சொந்த ஊருக்குத் திரும்பிய போது அவர் மனதில் பரவியிருந்த போர் பற்றிய பீதி அகலவேயில்லை. பள்ளியில் அவர் விரும்பிய பாடமாக இலக்கியம் இருந்தது. அதிலும் அவர் கவிதைகளை மிகவும் விரும்பினார். காஃப்கா, ஹெமிங்வே, டி.எஸ். எலியட் ஆகியோரின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டார். சிறு பத்திரிகைகளில் கவிதைகள் எழுதினார்.

அடிப்படையில் அவரிடம் ஒருவித போர்க்குணம் இருந்தது. அவர் தேசிய கட்டாய ராணுவ சேவையை ஏற்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். இருமுறை அவர் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவருடைய பிடிவாதத்தை ஏற்காத நீதிபதி இரு முறையும் அவருக்கு அபராதம் விதித்தார். (பின்னாட்களில் ஈரான், ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க அரசு ஏற்றிருந்த பங்கைக் கடுமையாக எதிர்த்து வாதாடினார், பின்டர். அவருடைய நோபல் பரிசு உரையில் மற்ற நாடுகள் மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் புரிந்த மோசமான செயல்களைக் கடுமையாகச் சாடினார்.)

இளைஞனா பின்டர் நாடக இயக்கங்களில் பங்குகொண்டு பயிற்சி பெற்றார். ஆனாலும், அவர் புகழ்பெற்ற ராயல் நாடகக் கலை அகடெமியில் இரண்டு காலாண்டுகள் மாத்திரமே இருந்து வெளியே வந்துவிட்டார், அதிக வகுப்புகள் இருக்கிறதென! அதன் பின் பேச்சு மற்றும் நாடக மத்தியப் பள்ளியில் சேர்ந்தார். டேவிட் பாரென் என்னும் பெயரில் நாடக மேடைகளில் நடிக்க தொடங்கினார். அயர்லாந்திலிருந்த ஓர் நாடக இயக்கத்தில் பங்கு கொண்டு நடித்தார். இறுதியாக நாடக ஆசிரியராகப் பரிணமிக்க முடிவெடுத்தார்.

அவரது ஆரம்ப நாடகங்களான ‘தி ரூம்’, ‘தி டம்ப் வெயிட்டர்’ இரண்டும் ஓரங்க நாடகங்களாக இருந்தன, ‘தி பர்த்டே பார்ட்டி’ என்னும் முழு நீள நாடகத்தைப் பின்னர் எழுதினார். ‘கேர் டேக்கர்’ என்னும் நாடகம் அவரது பெயர் நாடக உலகத்தில் நிரந்தரமாக நிலைக்க உதவிற்று.

நாடக இதழான ‘என்கோர்’ அச்சமயம் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட நாடகங்களை ஆதரித்துத் தன் பிரசுரங்களை வெளியிட்டது. நாடகம் என்பது சமூகம் சார்ந்த கலை என்பதில் திடமான அபிப்பிராயம் கொண்டிருந்த என்கோரில் பின்டரின் நாடகங்கள் தீவிர விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அவரின் ‘தி பர்த்டே பார்ட்டி’ நாடகத்தை முதல்முதலாக அச்சில் வெளியிட்டது என்கோரைச் சார்ந்த பிரசுராலயம்தான். ‘என்கோர்’ இதழ் விமர்சனக் கலையின் பன்முகங்களைத் தாங்கி வந்ததால் அது வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. பின்டரால் ‘நம் காலத்தின் தலைசிறந்த எழுத்தாளர்’ என்று குறிப்பிடப்பட்ட சாமுவேல் பெக்கட் எழுதிய பிரசித்தி பெற்ற ‘வெயிட்டிங் ஃபார் கோடாட்’ நாடகம் பற்றி ஐரிஷ் எழுத்தாளர் ஸீன் ஓ கேஸி ஒருவித எள்ளலுடன் விமர்சித்ததையும் ‘என்கோர்’ பிரசுரித்தது.

பிரெஞ்சு நாடக உலகில் அப்போது புகழ்பெற்று வந்த அபத்த நாடகங்களும் அவற்றின் ஆசிரியர்களான பெக்கெட், ஐயானஸ்கோ ஆகியோரும் பின்டரை வெகுவாகப் பாதித்தனர். ஐயானஸ்கோவின் ‘ரைனோசரஸ்’ நாடகத்தின் கருப்பொருள் பின்டரின் ‘தி பர்த்டே பார்ட்டியின் கருப்பொருளில், மிகுந்த சாயலைக் கொண்டிருந்தது. ஐயானஸ்கோவின் ‘சேர்ஸ்’ பின்டரின் ‘தி கேர்டேக்கர்’ நாடகத்தை நினைவூட்டுவதாகப் பலரும் கருதினர்.

 

பின்டரின் நாடகங்கள் ‘அச்சுறுத்தும் நகைச்சுவை’ என்று அழைக்கப்பட்டன. தனது நாடகங்களில் மெலிதான நகைச்சுவையை அவர் பொருத்தியிருந்தார். அதனூடே நடமாடும் பாத்திரங்கள் தங்கள் தவிப்புகளையும் ஆற்றாமைகளையும் மறைத்துக்கொண்டு நடமாடினார்கள். அவரது நாடகத்தின் வீச்சு அதில் பங்குபெறும் பாத்திரம் அல்லது பாத்திரங்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகக் கருதப்பட்டது. பின்டரைப் பொறுத்தவரை அவரது நாடகங்களில் வெளிப்படும் இருண்மையான, அழுத்தம் தந்த, பலம் நிறைந்த வெளியுலக ஆளுமைகளை நாடகப் பாத்திரம் நினைவுறுத்தியது காரணமாக இருக்கும் என்றார்.

அவரது நாடகங்களில் பாத்திரங்கள் சின்னஞ் சிறு வசனங்களைப் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் பேசிய போது அவரவர் அச்சத்தை மறைத்துக்கொண்டு கேலியாகவும் சிரிப்பு மூட்டும்படியாகவும் காட்சிகள் அமைந்தன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பற்றவர்களாகப் பல பாத்திரங்கள் அவரது நாடகங்களில் காணப்பட்டனர். அரசியல்வாதிகளின் வேடங்கள், அதிகார வர்க்கத்தின் எல்லை மீறல்கள் ஆகியவற்றைப் பற்றிய மறைமுகமான விமரிசனங்கள் அவரது நாடகங்களில் இடம்பெற்றன.

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் பாலுணர்வு வெளிப்படையாகப் பேசக்கூடாத விஷயமாகக் கருதப்பட்டது. சஜஸ்டிவ் ஆகப் பாலுணர்வைப் பற்றிப் பேசத் தடையேதும் இல்லாமலிருந்தது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் செக்ஸ் என்பது ஒருவித ஈடுபாட்டுடன், ஆர்வத்துடன் மக்கள் மத்தியில் பேசப்படலாயிற்று. “செக்ஸ் என்பது அதிகாரத்தை அடைய நடக்கும் ஒரு போராட்டம்! அது புத்தியைச் சுற்றி நடக்கும் விளையாட்டு. இதில் வெற்றி பெற்றவர் என்று யாரும் கிடையாது. ஆனால், அது இடையறாத போராட்டத்தை உள்ளடக்கியது” என்று பின்டர் ஒரு முறை கூறினார்.

 

பின்டரின் குறிப்பிடத்தக்க நாடகங்களில் ஒன்றான ‘மவுண்டன் லாங்வேஜ்’ பெயரிடப்படாத ஒரு நாட்டில், அங்குள்ள ஒரு மலையில் உள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகளைப் பற்றியது. இந்த நாடகம் குர்திஷ் மக்கள் எதிர்கொண்ட வதைகளையும், அவர்களின் தலைவிதியையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. சிறைச்சாலைச் சூழலில் ஒருவருக்கொருவருடனான கருத்தாடல் என்பது சாத்தியமில்லாது போக ஒடுக்குபவனின் சொல்தான் புழங்கும் மொழியாகி விடுகிறது. இறுதியில் மலைவாசிகள் தங்கள் மொழியைப் பேச அஞ்சுவதாக நாடகம் முடிகிறது.

பின்டரின் மற்றொரு நாடகமான ‘சைலன்ஸ்’ இருவிதமான மௌனங்களைப் பரிசீலிக்கிறது. ஒன்றில் பேசும் வார்த்தை என்று எதுவுமில்லை. மற்றொன்றில் சொல் மழை! உண்மையான நிசப்தத்தில் நாம் கேட்பது எதிரொலிதான். ஒரு விதத்தில் பேச்சு என்பதே ஒருவரின் நிர்வாணத்தை மறைக்க பயன்படும் கருவி. நாம் மௌனத்தில் மனம் விட்டுச் சுதந்திரமாக சம்பாஷிக்கிறோம். அங்கு கட்டுப்பாடு, தளை என்று எதுவும் இல்லை. ஆண்டன் செகாவின் பாத்திரங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பேச்சு ஏதோ அவரவர் தனியுலகத்தில் ஒவ்வொருவரும் உலவி வருவது போலிருக்கும். இதற்கு மாறாகப் பேச்சுத் தொடர்பைப் பின்டரின் பாத்திரங்கள் கத்தரித்து விடுகின்றன. இவ்விரு படைப்பாளிகளின் உருவாக்கங்களில் முதன்மை பெறுவது சப்தமின்மை மூலம் பாத்திரங்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான்.

ஒரு நாடகத்தில் வசனம் அல்ல முக்கியமானது; பாத்திரங்கள் விளக்காத, அவர்களால் விளக்க முடியாத தன்மைதான் நாடகத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்கிறது என்றுதியேட்டர் ஆஃப் சைலென்ஸ் என்ற கருத்தியலை 1920களில் ஆரம்பித்து வைத்த ஜே ஜே பெர்னார்ட் வலியுறுத்தி இருக்கிறார்.

 

பிரிட்டிஷ் நாடக இயக்கத்தின் இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஹெரால்டு பின்டர் முக்கியமான ஆளுமையாக விளங்கினார். அவருடைய பிரத்தியேகமான மொழி, அது உருவாக்கிய சூழல், முன்னெடுப்பு எல்லாமே சேர்ந்து ஆங்கில அகராதியில் ‘பின்டரெக்’ (Pinteresque) என்ற புதிய வார்த்தையைச் சேர்த்தன, ஆனால், அவருக்கு இந்த வார்த்தை சுத்தமாகப் பிடிக்கவில்லை. “நான் எப்படி எழுதுகிறேன், என்ன எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள். எழுதுவது என்றால் என்ன என்று என்னைக் கேட்டால் நான் எழுதுவதுதான்!” என்றார்.

அவரது ஆரம்ப எழுத்துகளில் உளவியல் யதார்த்தம் முக்கிய இடத்தை வகித்தது என்றால் அவர் அடுத்த நிலைக்குச் சென்ற போது அவரது நாடகங்களில் இசையின் பங்கு அதிகமாக இருந்தது. மூன்றாவது கட்டத்தில் அவருடைய அரசியல் விமர்சனங்களாக நாடகங்கள் வெளி வந்தன. ஆரம்பத்தில் அபத்த நாடகங்களென மக்களை ஈர்த்தது ஒரு பிரிவு. பின்டரின் இயக்கத்தில்அச்சுறுத்தும் நகைச்சுவை என்று மற்றொரு புதிய பிரிவு பிரதான இடத்தை வகித்தது.

பின்டர் எப்போதும் விதிக்கப்பட்ட நியதிகளை உடைப்பதில் குறியாயிருந்தார் என்னும் கருத்து பொதுவில் ஏற்பட்டு விட்டது. பிரபல ஆங்கில எழுத்தாளரும் பின்டரின் இரண்டாம் மனைவியுமான அன்டோனியா ஃபிரேசர், “எனக்குத் தெரிந்து ஹெரால்டு கிரிக்கெட் ஆட்ட விதிகளை தவிர வேறெதையும் ஒப்புக்கொண்டதில்லை” என்று ஒரு முறை சொன்னார்.

கலையோ, இலக்கியமோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் சொல்லப்பட்ட எதையும் அப்படியே ஒப்புக்கொள்ளும் மனிதராக பின்டர் இயங்கவில்லை. ஒருவித ஐயுறவுக் கொள்கையுடன் தீவிரமாக உண்மையைக் கண்டறிவதில் ஈடுபட்டார். இதனால் அவர் சிறந்த நாடகாசிரியராக மட்டுமின்றி போரிடும் குணத்தைக் கொண்ட விவாதவாதியாகவும் அறியப்பட்டார். ஊருடன் ஒத்துப்போகும், ‘புத்திசாலிகள்’ நிறைந்த உலகில் பின்டரைப் போன்ற தனித்த ஆளுமையைக் காண்பது அரிதுதான். வரம்புகளை மீறுவதிலும் கட்டுக்களை உடைத்தெறிவதிலும் அவர் நாடகங்கள் பெக்கெட்டின் நாடகங்களுடன் போட்டியிட்டன. பின் போர்க்கால நாட்களில் பரந்திருந்த இருத்தலியலின் நிச்சயமின்மையை அவர் தனிமனித வாழ்வின் மதிப்புகளுடன் உராய விட்டு உண்மையை கண்டுணரக் கடுமையாக உழைத்தார். தனது ‘தி ரூம்’, ‘தி பர்த்டே பார்ட்டி’ ஆகிய நாடகங்களின் மூலம் நாடக ஆசிரியன் என்பவன் சர்வ வல்லமை பொருந்திய எழுத்தாளன் என்ற பிரமையை உடைத்தெறிந்தார்.

தனது நாடகத்தில் வரும் பாத்திரங்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று தனக்கே தெரியாது என்று பலமுறை பின்டர் கூறியிருக்கிறார். இதை ஏதோ மர்மம் அடங்கியதாகவோ அல்லது அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ அவர் சொல்லவில்லை. இத்தகைய பார்வை காரணமாகத் தனது நாடகத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் நாடகம் உணர்த்த முயலும் உண்மைதான் என்ன என்பதைத் தாங்களே புரிந்து உணர்ந்துகொள்ளும் சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

திரைப்படத் துறையிலும் பின்டர் ஆற்றிய பங்கு மகத்தானது. 1963ல் அவரது தொலைக்காட்சி நாடகமான ‘தி லவர்’ பல இடங்களில் அச்சமூட்டும் பரபரப்பை எழுப்பியது. இந்நாடகத்தில் மனிதனின் போலியான உணர்ச்சிகளின் நடமாட்டம்தான் திருமணங்களை நிர்ணயிக்கின்றது என்ற கூற்றுப் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிற்று. எல்.பி. ஹாட்லியின் ‘கோ பிட்வீன்’ நாவலைப் பின்டர் திரைப்படமாக்கிய போது படம் நாவலிலிருந்து வெகுவாக வெளியேறிவிட்டது. பழமைக்கும் புதுமைக்கும் உள்ள இடைவெளியை நுணுக்கமாக உடைத்தெறிந்து பின்டர் காட்டிய அப்படம் வசூலில் காலை வாரி விட்டது. ஆனால், பின்னாட்களில் அது உலக அளவில் கலைத்தரம் மிக்க படமாக விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட போது அந்தப் பெருமையையும் படத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பையும் அவர் காணக் கொடுத்து வைத்திருந்தார்!

 

பின்டரின் அரசியல் கருத்துக்கள் கடுமையானவையாக இருந்தாலும் அவை அவரது உறுதியையும் ஆழமான சிந்தனை வளத்தையும் வெளியுலகிற்குக் காட்டியது. 1985ல் பின்டரும் ஆர்தர் மில்லரும் துருக்கிக்குச் சென்று அங்கு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கல்வியாளர்களையும் சந்தித்தார்கள். அவர்களில் பலர் ராணுவத் சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள். அவர்கள் அரசுக்கு எதிரே வன்முறை கிளர்ச்சிகள் எவற்றிலும் ஈடுபட்டவர்களல்லர். அரசின் செயல்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுதான் அவர்கள் செய்த ஒரே தவறு.

அமெரிக்கத் தூதரகம் பின்டரையும் ஆர்தர் மில்லரையும் தூதரகத்துக்கு அழைத்து தூதருடன் விவாதிக்க ஏற்பாடு செய்தது. இருவரும் துருக்கி அரசுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவைப் பற்றியும், சிறைச்சாலைக் கொடுமைகளையும் தூதரிடம் விவாதித்தனர். அமெரிக்கத் தூதர் அவர்களிடம், “இங்குள்ள சூழ்நிலைகளைச் சரியாக அறியாமல் நீங்கள் பேசுகிறீர்கள். இங்குள்ள அரசையும் சூழலின், ராணுவத்தின், அரசியலின் யதார்த்தத்தையும் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார். பின்டர் அவரிடம், “இங்குள்ள யதார்த்த நிலைமை, சிறையில் அடைக்கப்பட்டவனின் பிறப்புறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறீர்கள் என்பதுதான்” என்றார். எரிச்சலடைந்த தூதர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார். இதைப் பற்றிப் பேசுகையில் பின்டர், “நாம் உபயோகிக்கும் மொழி கடுமையானது என்று அஞ்சி ஒளிகிறோம். உண்மையில் யதார்த்தம்தான் அசிங்கமாகவும் மிருகத்தனமாகவும் நாற்றமடிப்பதாகவும் உள்ளது” என்றார்.

2005ல் ஹெரால்டு பின்டருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அவருடைய உரையில் கலை மற்றும் இலக்கியம் பற்றிய விஷயங்களை விட அரசியல் பற்றிய பேச்சே முக்கியத்துவம் பெற்றிருந்தது. அவரது நோபல் உரையில், பெரும்பாலான அரசியல்வாதிகள் உண்மையைத் தேடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவது அதிகாரம், அதைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றித்தான். அதிகாரம் தங்கள் வசம் இருக்கும் பொருட்டு அவர்கள் மக்களை அறியாமையின் இரும்புப் பிடியில் வைத்திருக்கிறார்கள். இந்த அறியாமை சத்தியத்தை அறியாதது. அரசியல்வாதிகளின், ஏன் அவரவர் சொந்த வாழ்க்கையை பற்றிக்கூட அறிந்திராத மக்கள், பொய்களால் தீட்டப்பட்ட ஓவியச் சீலையைப் பார்த்து மகிழ்ந்து கிடக்கிறார்கள்.

ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுக்கக் காரணம் சதாம் ஹுசைன் உலகை அழிக்கவல்ல அணு ஆயத்தங்களை தன் வசம் வைத்திருந்ததினால்தான்; அதுதான் உண்மை என்று நமக்குச் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல. உலகைக் கைப்பற்றித் தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்னும் அமெரிக்க அரசின் ரகசியக் கொள்கையை நிறைவேற்றிக்கொள்ள அது எடுத்த முதல் படி.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்த மனித இனக் கொடுமைகள் எல்லாம் உலகம் அறிந்தவை. அவற்றின் இரும்புப் பிடிகள் எட்டிய தூரம் எவ்வளவு, சுதந்திரமான சிந்தனைக்கும் பேச்சுக்கும் அவை போட்ட விலங்குகள் எத்தகையன என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், அவை ஆவணப்படுத்தப்பட்டன. தீர விசாரித்துக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் ஆவணமாகின.

ஆனால், அமெரிக்கா? ஈரான் போன்ற வெளிநாடுகளில் அமெரிக்கா போர் என்ற பெயரில் நடத்திய அக்கிரமங்கள் கொடூரமானவை. அவற்றைப் பற்றிப் பேசியவர்களும் எழுதியவர்களும் மேலோட்டமான பார்வையாளர்கள். ஆவணப்படுத்தப்பட்ட குற்றங்கள் என்று எவையும் உலகின் முன் வைக்கப்படவில்லை. அவற்றை யாரும் விசாரித்து அறிந்து உண்மையைக் கண்டறியவில்லை. அவைகள் எல்லாம் குற்றங்கள் என்று கூட மதிப்பிடப்படவில்லை.

நேரடியான ஊடுருவலை அமெரிக்கா என்றும் செய்ததில்லை. ஏதோ வாய்க்கால் தகராறை விசாரிக்க வந்தவர்கள் போல உள்ளே நுழையும். அங்கே நுழைந்து நேரடியாகக் குண்டு போட்டு ஒரேயடியாகக் கொன்று விடுவதில்லை. சாவுக்கணக்கு மெதுவாக நூறு, ஆயிரம் என்று தொடங்கும். இது நாட்டின் இருதயத்தில் கிருமித் தொற்றை உண்டாக்கும். அது புற்றைப் போல் பரவும். அதன் பின் மொத்த உடலும் அழுகிப் போகும்.

அமெரிக்காவின் குற்றங்கள் ஒருவிதத் திட்டமிட்ட ஒழுங்குடன் நடைபெறும். நிரந்தரமான வலியையும் துக்கத்தையும் ஒரு தீய சக்தியாக இருந்து செயல்படுத்தும். இவற்றைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். இதற்காக அமெரிக்காவைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். உலகமெங்கும் ஒரு வித நுணுக்கத்துடன் தனது தகிடுதத்த வேலைகளைச் செய்து வரும் அதே சமயம், அது உலக அமைதிக்காக, ஒழுங்குக்காகப் பாடுபடுவதாக வெற்றிகரமாகச் சித்தரித்து வருகிறது. இதைச் செய்ய அசாதாரணத் திறமையும், மயக்கத்தில் ஆழ்த்தி நினைவைச் சிதைத்து விடும் ஹிப்னாடிசப் பயிற்சியும் ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.

கௌதமாலா வளைகுடாவிலும் அபு குராய்ப்பிலும் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்களை உடல்வதை செய்த அமெரிக்காவை நான் மிகவும் கண்டிக்கிறேன். இது ஒரு கொள்ளைக்காரன் செய்வது. அரசாங்கமே செய்யும் கொடூரமான பயங்கரவாதம். உலக சட்டங்களை மதிக்காமல் தூக்கியெறிந்து விட்டு மனிதாபிமானமற்றுப் புரிந்த செயல். இதற்கு உடந்தையாக இங்கிலாந்தும் அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டது. இதற்காக அமெரிக்க அதிபர் புஷ்ஷும் இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேயரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.

 

பின்டர், ‘கலைஞன் என்பவன் கலைக்குள் புதைந்து கிடந்தால் போதும் என்ற பல படைப்பாளிகளின் வாதத்தைத் தூக்கியெறிந்து விட்டு, “ஒரு கலைஞன் என்பவன் ஒரு குடிமகனாக சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணியைச் செய்யாத வரையில் அவன் கலைஞனே இல்லை” என்றார். ஒரு நாடக ஆசிரியனின் சமூகப் பொறுப்பையும் அரசியல் அதிகார வர்க்கத்தின் துஷ்பிரயோகத்தை எதிர்த்து அவன் செயலாற்ற வேண்டிய கடமையையும் குறித்து அவர் எழுதிய ஒரு சிறிய கவிதை:

எப்படி இந்தப் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது?
இந்தப் பிணம் யார்?
இந்தப் பிணத்தின் தந்தை, மக்கள், அல்லது சகோதரன்
அல்லது மாமன், தங்கை அல்லது அம்மா யார்?
எப்போது இந்த பிணம் ஒதுங்கிய இடத்தில் கிடந்தது?
ஒதுங்கிய இடத்தில் கிடந்தது பிணமாகவா?
யார் ஒதுங்கிய இடத்தில் பிணத்தைப் போட்டது?
பிணம் நிர்வாணமாக இருந்ததா?
அல்லது பிரயாண உடைகளை அணிந்திருந்ததா?
இது பிணம் என்று நீ எப்படிச் சொன்னாய்?
இந்த உடல் உயிரற்றது என்று நீ சொன்னாயா?
பிணங்களைப் பற்றி எவ்வளவு நன்றாக உனக்குத் தெரியும்?
பிணத்தின் இரு கண்களையும் நீ மூடினாயா?
உடலை நீ புதைத்தாயா?
அதை நீ அனாதையாக விட்டு விட்டு வந்தாயா?
நீ அந்தப் பிணத்தை முத்தமிட்டாயா? 

ட்டி.ஆர். நடராஜன் <weenvy@gmail.com>

 

 

Amrutha

Related post