லின் நாட்டேஜ்: இந்த நூற்றாண்டின் நாடக மேதை

 லின் நாட்டேஜ்: இந்த நூற்றாண்டின் நாடக மேதை

நாடகமே உலகம்

ட்டி.ஆர். நடராஜன்

 

லைசிறந்த ஆளுமைகள் என்று நால்வரைத் தேர்ந்தெடுத்து, ‘நியூயார்க் டைம்ஸ்’ சென்ற ஆண்டு (2021) கொண்டு வந்த இதழில் ஒரு நடிகை, ஓர் ஓவியன், ஒரு நாடக ஆசிரியர், ஓர் ஆடை வடிவமைப்பாளர் என்று நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றார்கள். அதில் நாடக ஆசிரியராகத் தேர்வு பெற்றவர் லின் நாட்டேஜ்.

ஐம்பத்தெட்டு வயதாகும் லின் இப்போது ப்ரூக்லினில் வசிக்கிறார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நாடக இயல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இரு முறை நாடகங்களுக்காகப் புலிட்சர் பரிசு பெற்ற ஒரே பெண் நாடக ஆசிரியர் உலகில் இவர் ஒருவர்தான்.

பள்ளி ஆசிரியையாகச் சேர்ந்து பின்னர் அதே பள்ளியின் முதல்வருமாக வளர்ச்சி பெற்ற லின்னின் தாய், அவருடைய கணவருடன் (அவர் மனநல மருத்துவர்) சேர்ந்து ஆப்பிரிக்க அமெரிக்கக் குடிமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சமூக நீதிகளுக்கும் குடியுரிமைக்கும் போராடியவர்கள். லின்னின் பெற்றோர்கள், அவரை இளம் வயதிலேயே இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று அவற்றில் ஈடுபாடு கொள்ள வைத்தார்கள். நாடகங்கள், நாடக ஆசிரியரது மட்டுமல்லாது பார்வையாளரின் சுய வெளிப்பாட்டையும் உணர்த்தும் திறன் வாய்ந்தவை என்று லின் உணர்ந்த தருணமது. பள்ளி நாள்களிலும் கல்லூரியில் படிக்கும் காலங்களிலும் அவர் பல நாடகப் போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகள் பெற்றார். அவருக்குப் பிரௌன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால், தனக்கு மருத்துவத்தை விட நாடகம் மிகவும் பிடித்திருக்கிறது என்று அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். யேல் பல்கலைக் கழக நாடகப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனது வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு ஜாஸ் இசையைக் கற்றுக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதுதான் என்று லின் கருதினார். நியுயார்க்கிலிருந்த இசை மற்றும் கலை கற்பித்த உயர்நிலைப் பள்ளியில் பியானோ வகுப்பில் சேர்ந்த லின் சேர்ந்த முதல் நாளே அங்கிருந்து வெளியேறிவிட்டார். அதற்கு காரணம் வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்ததும் பேசியதும் கூச்சலிட்டதும்தான். தன் வாழ்வில் எடுத்த துக்ககரமான முடிவு அது என்று அவர் ஏக்கம் கொண்டிருந்தார்.

தன்னை ஒரு நாடக ஆசிரியராக மட்டும் மற்றவர்கள் பார்ப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எழுத்து, இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், கூத்து ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பாத்தி கட்டி அதில் ஏதேனும் ஒன்றுக்குள் மூழ்கி விடும் வழக்கத்தைக் கொண்டாடிய சமூகநியதியை ஒப்புக்கொள்ளாமல், கலைஞன் என்பவன் ஒன்றையொன்று வெறுக்கும் அல்ல, விரும்பி ஆரத் தழுவும் போக்குள்ளவனாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

தன்னை ஒரு நாடக ஆசிரியர் என்ற சட்டகத்துள் ஆயுள் கைதியாக அடக்கி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்தார். மாறாக, “நான் யார் என்று மற்றவர்கள் எதற்காகத் தீர்மானிக்க வேண்டும்? இவளுக்கு உகந்தது நாடகம்தான் என்று சொல்லும் உரிமையை யார் மற்றவர்களுக்குத் தந்தது? நான் ஒரு நடிகையாகவும் பிரகாசிக்க விரும்புகிறேன். ஆனால், அதிலும் நீ இந்தப் பாத்திரத்திற்குத்தான் லாயக்கு என்று மற்றவர்கள் குறுக்கிட்டு முடிவு செய்வதை அனுமதிக்க முடியாது.

“எனக்கு இப்போது ஐம்பத்தி எட்டு வயதாகிவிட்டது. நான் சுதந்திரமாக இந்த உலகில் நடமாட விரும்புகிறேன். எல்லோருக்கும் எல்லாம் கிட்டும் வாழ்க்கையில் இருபது வருடங்களுக்கு மேலாக நாடகங்கள் எழுதி வரும் நான் மட்டும் எதற்காக அங்கேயே புரண்டு கொண்டு இருக்க வேண்டும்? பல்வேறு விஷயங்களில் என் முழுத்திறமையையும் காண்பிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று ஒரு கட்டத்தில் தன மனத்திலுள்ளதைப் பொதுவில் வைத்தார்.

“ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய சிந்தனை என் நினைவுகளில் படர்ந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே என் நாடகங்கள். வெளியுலகம் அறிந்திராத பல கதைகள் இம் மக்களால் சொல்லப்படக் காத்திருக்கின்றன. நாடகம் என்ற வட்டத்துக்குள் நடமாடுவதை விட, என் எழுத்துக்களைக் கலை என்கிற விஸ்தீரணத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். கலாச்சாரம், பண்பாடு பற்றிக் கலை என்பது சொல்ல வேண்டியது என்ன? பொறுப்புணர்வுடன் சொல்ல வேண்டும் என்கிற உந்துதலைத் தவிர, கஷ்டமான கேள்விகளுக்குப் பதில்களைத் தேடும் விடாமுயற்சியும் ஓர் நாடக ஆசிரியரிடம் இருக்க வேண்டியிருக்கிறது. இதுதான் ஒரு கலைஞனது பார்வையின் வித்தியாசத்தையும் தீட்சண்யத்தையும் தீர்மானிக்கின்றது என்று நான் நம்புகிறேன்” என்கிறார் லின்.

lynn nottage, american playwright, sweat
ஸ்வெட்

2004இல் அரங்கேற்றப்பட்டு இன்று வரை மிக அதிகமாக மேடைகளில் உலா வரும், ‘இன்டிமேட் அப்பேரல்’ நாடகம், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் அகதிகளும் சிறு கிராமங்களிலிருந்து பெரும் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லும் ஆப்பிரிக்க – அமெரிக்கர்களும் கூடுகையில் கண்டெடுப்பதுதான் என்ன என்னும் கேள்வியை பரிசீலிக்கிறது.

இந்நாடகம் உருவாகக் காரணமாக இருந்தது எதிர்பாராத விதமாக லின்னின் கையில் கிடைத்த அவரது பாட்டியின் பாட்டியுடைய புகைப்படம். பாட்டியின் பாட்டி தையல்காரியாக இருந்தவர். அவரைப் பற்றிக் கேட்க அப்போதுதான் காலமான லின்னின் தாயுமில்லை. லின் அமெரிக்க நூலகத்துக்குச் சென்று பழங் கதைகளைத் தேடுகிறார். அதன் விளைவுதான் இந்நாடகம். சரித்திரத்திலிருந்து மறைந்துவிட்ட, ஓரங்கட்டப்பட்டு விட்ட மனிதர்கள்தான் அவரது கதாபாத்திரங்கள்.

இந்நாடகம், பல கட்டங்களில் படுக்கை உறவுகளின் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகிறது. உடல் மீது காமம் கொண்ட, ஆனால், மனத்தளவில் அன்பு காட்டாத மனிதர்களின் அடாவடித்தனம், சமூகம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளினால் சேர முடியாத காதலர்கள் தமக்குள் கொள்ளும் ஸ்பரிசமற்ற காதல் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கும் இந்நாடகம் அதன் முடிவில் வாசகனின் மனதில் துக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு உலகைப் பீடித்த கோவிட் தொற்று நோய் உலகத்தையே ஸ்தம்பித்த நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது. இருள் சூழ்ந்த அந்த நாள்கள் தந்த பொழுதைத் தன்னை மறுபார்வை பார்க்க உதவிய தருணமாக லின் மதித்தார். முன்னூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் – நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் – பங்கேற்று, “அமெரிக்க வெள்ளையர் நாடக உலகே! உன்னை நாங்கள் கவனிக்கிறோம்” என்று ஒரு திறந்த மடலை வெளியிட்டார்கள். இதனை உருவாக்கும் பணியில் லின் பெரும்பங்கு வகித்தார்.

அந்த மடல் வேண்டியிருந்த பல கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று, குறைந்தது ஐம்பது சதவீத கறுப்பின மக்கள் நாடகத் துறையின் பல்வேறு செயல்பாட்டு அரங்கங்களில் பங்குபெற்று செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது. அதுவரை தங்கள் பணிகளுக்குப் பண உதவி எதுவும் வழங்கப்படாமல் கறுப்பின மக்கள் ஆற்றி வந்த பல பணிகளுக்கு இனிமேல் பண உதவி கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த மடலில் இருந்தது.

அக்காலக்கட்டத்தில், பயிற்சி முகாம்களில் திட்டவட்டமான நேரம் நிர்ணயிக்கப்படாமல், வேலை சார்ந்த பல்வேறு வரைமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, வெள்ளை நிர்வாகிகள் கறுப்பினத் தொழிலாளிகள் மீது நிர்பந்தங்களைச் செலுத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை எடுக்க ஆயத்தங்கள் செய்யப்பட்டன. முந்திய செயல்பாடுகளின் ஊடே பதுங்கியிருந்த நிறவெறியை ஒழிக்கும் விதமாக, தொற்று நோய்க்கு (கோவிட் 19) பின் திறக்கப்பட்ட திரையரங்குகளில் இளம் படைப்பாளிகளுக்குத் தயாரிப்புப் பொறுப்பைத் தரும் திட்டத்தை லின் கொண்டு வந்தார். கறுப்பின மக்கள் உள்ளே நுழைய முடியாத ஒப்பனை அறைகள், நடிகர் – நடிகைகளுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள், நாடக அரங்கின் உள் பாதைகள் ஆகியவற்றில் கறுப்பின மக்கள் வேலை செய்ய வாய்ப்பளித்தார்.

 

லின் ஒரு வித்தியாசமான படைப்பாளியாகவே மற்றவர்களால் அணுகப்பட்டார். அவர் தேர்ந்தெடுத்த கதைக் கரு, சம்பவங்கள், சம்பாஷணைகள் ஆகிய அனைத்தும் வழக்கமான பாதைகளைத் தவிர்த்தனவாக இருந்தன. அவருடைய நாடகங்களால் கவரப்பட்ட ரசிகர்கள் / வாசகர்களின் மனங்களில் வாழ்வைப் பற்றிப் படர்ந்திருந்த அவரவர் சிந்தனைகளைக் கேள்விக்குறியாக்கி ஆராய வைத்தன, அவரது எழுத்து அவரை ஒரு பத்திரிகையாளராகவும் இனங்காண வைத்தது. பல வருஷங்களுக்குப் பல்வேறு மனிதர்களை வைத்து நேர்காணல்கள் நடத்தினார். மார்க்கெட் ரோட் ஃபிலிம்ஸ் என்னும் திரைப்படக் கம்பனியை நடத்தினார்.

லின் நாடகங்களின் பின்புலங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன. அவரது நாடகப் பாத்திரங்கள் மதுபானக் கடை நடத்துபவரை, ஆடைகளை வடிவமைப்பவரை, உலகிலேயே மிகப் பிரமாதமான (?!) சாண்ட்விச் செய்பவரை, திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் கனவுகளுடன் வளைய வரும் நடிகைகளை, போர் நடந்த சமயம் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு சிதிலமடைந்த பெண்களை, தொழிற்சாலைக் கடையடைப்பில் வாடி வதங்கி விட்ட தொழிலாளர்களை சித்தரித்து வெளியுலகுக்குக் கொண்டு வந்தார்.

வெகுகாலமாகக் கறுப்பினப் பெண்கள் அவர்களது துறை சார்ந்த தொழில்களில் சிறப்பாகச் செயல்பட்டாலும் ஓரங்கட்டப் பட்டார்கள். அவர்களது தனித்த திறமையால் பிரகாசிக்க வேண்டியவர்கள் கீழே அடங்கிக் கிடப்பவர்களாக நடத்தப்பட்டார்கள். இவர்களை வெளியுலகின் கவனத்துக்கும் பரிசீலனைக்கும் லின்னின் நாடகங்கள் வெளிக் கொணர்ந்தன.

‘ரூயின்ட்’ என்னும் நாடகத்துக்கு 2009ஆம் ஆண்டிலும் ‘ஸ்வெட்’ என்னும் நாடகத்துக்கு 2017ஆம் ஆண்டிலும் லின்னுக்கு நாடகத்திற்கான புலிட்சர் பரிசு கிடைத்தது.

பெர்டோல்ட் பிரெக்டின், ‘மதர் கரேஜ் அன்ட் ஹெர் சில்ரன்’ என்னும் நாடகத்தைத் தழுவி எடுக்க லின் மிகவும் விரும்பினார். முப்பது வருடப் போர் ஒரு பெண்ணின் வாழ்வை எப்படி நாசப்படுத்துகிறது என்பதைப் பற்றிய உலகக் கிளாசிக் நாடகம் அது. அச்சமயத்தில் லின்னும் அவரது இயக்குநரும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சரித்திரத்தில் காங்கோ போர் பற்றிய விவரணைகளையும் அதிர்ச்சி தரும் உண்மைகளையும் அறிந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒன்பது நாடுகளைப் பாதித்து மிக அதிகமான மக்களின் சாவுக்குக் காரணகர்த்தாவாக நடந்தது அப்போர். போர்முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை பற்றிய உண்மைகளை லின் உகாண்டாவில் வசித்த பெண்களுடன் நடத்திய நேர்காணல்கள் மூலம் அறிந்தார். போர் முனைக்குச் சிறிதும் சம்பத்தப்படாத பெண்கள் எப்படிக் குரூரமாக வதைக்கப்பட்டார்கள், ராணுவம் பெண்களை எவ்வாறு ஓர் போர் ஆயுதமாக உபயோகப்படுத்தியது என்பது பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.

ruined, lynn nottage, american playwright
ரூயின்ட்

‘ரூயின்ட்’ நாடகம் இவற்றின் அடிப்படையில் உருப்பெற்று உலகை ஸ்தம்பிக்க வைத்தது. இவ்வுண்மைகள் எதுவும் நாடகம் வெளிவரும் வரை வெளியுலகம் அறிந்திருக்கவில்லை. பத்திரிகைகள் இவை பற்றி ஒரு வரி கூட எழுதியிருக்கவில்லை.

இரண்டாம் புலிட்சர் பரிசு பெற்ற ‘ஸ்வெட்’ நாடகம் பற்றி ‘கார்டியன்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் லின் குறிப்பிடுகிறார்: “ஓரேகான் ஷேக்ஸ்பியர் நாடக விழாவுக்காக, அமெரிக்கப் புரட்சியின் விளைவுகள் பற்றி நாடகம் எழுதித் தர முடியுமா என்று கேட்டு, நாடெங்கிலுமுள்ள நாடக ஆசிரியர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அமெரிக்காவின் எந்தப் புரட்சியைப் பற்றி எழுதுவது என்பது பற்றி எனக்குச் சில வருடங்களாக குழப்பம் ஏற்பட்டிருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரா? குடியியல் உரிமைப் பிரச்சனையா? என்று சந்தேகங்கள்.

“ஒருநாள் என் சிநேகிதி ஒருத்தியிடம் எனக்கு வந்த மின்னஞ்சலில், அவள், தான் சில காலமாக மிகுந்த மனப் போராட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்திருந்தாள். அவள் எனக்கு நன்றாகப் பரிச்சயமானவள். அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். ஆனால், இந்தப் பிரச்சினை பற்றி அதுவரை பேச்சு எழுந்ததில்லை.

“எனவே, அடுத்த நாள் காலையில் நாங்கள் சந்தித்தோம். அப்போதுதான் ‘வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’ என்னும் போராட்டம் எழ ஆரம்பித்த நேரம். நாங்கள் அதை பற்றி விரிவாகப் பேசினோம். நாங்கள் பேசிக்கொண்டதனால் எதுவும் பெரிதாக நடந்து விடவில்லை. ஆனால், என் சிநேகிதிக்குத் தான் மட்டும் மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கவில்லை என்னும் உறுதி ஏற்பட்டு விட்டது.

“‘வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’ எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. பொருளாதார இடர் எவ்வாறு அமெரிக்க வாழ்வின் அர்த்தத்தை மாற்றிவிட்டது என்பதைப் பொது வெளியில் கண்டேன். அமெரிக்கக் கனவில் முதலீடு செய்தவர்கள் தெருவுக்கு வந்துவிட்டார்கள்.”

அதே ‘கார்டியன்’ நேர்காணலில், “ஸ்வெட் நாடகத்துக்கு ரீடிங் நகரத்தை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்னும் கேள்விக்கு, “நானும் எனது உதவியாளரும் (இருவருக்கும் காரோட்டத் தெரியாது) நியூயார்க்கிலிருந்து சற்று விலகிய தூரத்தில் இருக்கும் இடத்தில் போய்த் தங்க விரும்பினோம். காரோட்டும் அனுபவம் இல்லாததால் எவ்வளவு நேரம் பிரயாணம் செய்ய வேண்டும், எங்கே போக வேண்டும் என்று எதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளாமல் பயணம் செய்தோம். நியூயார்க்கிலிருந்து மூன்று மணி நேரப் பயணத் தொலைவில் அமெரிக்காவிலேயே வறுமை மிக்க ஓரிடத்தை நாங்கள் அடைந்தோம்.

“அங்குள்ளவர்களிடம் நான் கேட்ட கேள்வி: “உங்கள் நகரத்தை எப்படி விவரிப்பீர்கள்?” பதிலுக்கு அவர்கள், “ரீடிங்….” என்று ஆரம்பித்துத் தமது பழங்கால நினைவுகளில் மூழ்கி விட்டார்கள். இது என் மனதை மிகவும் உடைத்து விட்டது. இந்த இடம் இன்றைய, ஏன் நாளைய வெளியுலகத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத வண்ணம் ஆக்கப்பட்டிருக்கிறதென்று உணர்ந்தேன்.

“ஒன்றரை வருடம் நான் அங்கிருந்தேன். அங்கு நான் சந்தித்தவர்கள் உருக்குத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள். அவர்கள்தான் ஸ்வெட்டை உருவாக்கியவர்கள். நடுத்தர வயது வெள்ளையர்களான அவர்களின் பரிதாபமான கதைகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. என்னுடைய கதை நடக்கும் இடம் ஒரு மதுபானக் கடையில். அங்கு உருக்குத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த தொழிலாளர்கள் வருவார்கள். அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் மூலம் ஷிப்டுகளில் வேலை பார்ப்பவர்களின் மனித உறவு வெளிப்பாடும் அவர்களுடைய சீற்றங்கள், எதிர்பார்ப்புகள், ஏழ்மை அவர்களை விரட்டி அடிக்கும் கொடுமை ஆகியவை பற்றிக் கேட்டறிந்தேன். அவர்களைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசிய தினங்களில் – போராட்டம், கலைக்கப்பட்ட கனவுகள், அரசின் மீதான விரக்தி, சமூகத்தை வெறுப்புடன் பார்த்த பார்வை – ஆகியவற்றைத் துல்லியமாக உணர்ந்தேன். தொழிலாளர்களைத் தவிர, வீடற்ற மனிதர்கள், ஷிப்டுகளில் வேலை பார்த்தவர்கள், காவல் உயரதிகாரி, நகர மேயர் என்று எல்லோரும் அவரவர் கதைகளைச் சொல்லிவிட ஆர்வம் மிக்கவர்களாக இருந்தார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றி வெளியுலகத்துக்கு ஒன்றும் தெரியவில்லையே என்ற ஏக்கமும் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற வெறுப்பும்தான். அவர்களுடன் பேச ஆரம்பிக்கும் முன்பே நான் நாடக ஆசிரியர் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் பேசினேன். நாளாக ஆக அவர்கள் என்னையும் அவர்களில் ஒருத்தியாக நினைத்து மனம்விட்டுப் பேச ஆரம்பித்தார்கள்.

“ஆனால், என் ஆய்வும் என் எழுத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் கொண்டவையல்ல என்று நான் எனக்குள் ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டேன். இரண்டரையாண்டு ஆய்வறிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டேன். அதன் பின் என் நாடகத்தை எழுத ஆரம்பித்தேன். அதன் வரிகள், வார்த்தைகள் என்னுடையவை. எனக்கு மட்டுமே சொந்தமானவை. நேர்காணல்களைப் பிரதி எடுக்க நாடக ஆசிரியன் எதற்கு?”

‘ஸ்வெட்’ நாடகம் 2016இல் நியூயார்க் பப்ளிக் தியேட்டரில் அரங்கேறியது. அதற்குச் சில நாள்கள் கழித்து வந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். “எந்த விதமான பரிவும் தீர்ப்பளிக்கும் மனநிலையும் இல்லாது அமெரிக்காவின் மிக முக்கியமான ஒரு நாடக ஆசிரியரால் எழுதப்பட்ட நாடகம் மக்களிடையே ஏற்படுத்திய அனுதாப அலை, டிரம்பின் வெற்றிக்குக் காரணமாயிற்று” என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ எழுதியது!

லின்னைப் பொறுத்தவரை தன் நாடகம் உருவானதற்குக் காரணமாக இருந்தவர்கள் அதைக் கண்டு உணர வேண்டும் என்று விரும்பினார். ரீடிங்கிலும் அதைப் போன்ற ஏழ்மையான பதினேழு தொழிலகப் பேட்டைகளிலும் வசித்த மக்களுக்கு இலவசமாக ‘ஸ்வெட்’ நாடகத்தைப் போட்டுக் காட்டினார். சற்றுப் பாழடைந்த ஒரு ரயில்வே ஸ்டேஷனைத் தேர்ந்தெடுத்து பெரும் திரையை அங்கு நிறுவி, இன மத கலாச்சார வேறுபாடுகளால் பிளவுபட்டிருந்த மக்கள் காணும்படி நாடகத்தைப் போட்டுக் காட்டினார். ‘ஸ்வெட்’ நாடகத்தைப் பார்த்த பலர் இம்மாதிரி சீரழிந்த இடங்களில் வாழும் மக்களைப் பற்றித் தெரிய வந்ததில் பொருளுதவியும் தொழில் தொடங்கும் முயற்சிகளையும் தர ஒப்புக்கொண்டு முன்வந்தனர்.

இதே முயற்சியை அவர் தனது ‘க்ளைட்ஸ்’ என்ற நாடகத்திலும் பின்பற்றினார். சிறையிலிருந்து வெளியே வரும் சில கைதிகளுக்கு ஓட்டல் நடத்தும் ஒரு பெண்மணி வேலை தருகிறாள். இது அவர்களின் வாழ்க்கையின் புது அத்தியாயமாக இருக்கட்டும் என்றல்ல, அவர்களை எப்போதும் பயத்தில் நடுக்கத்தில் ஆழ்த்திக் கடும் வேலைகளை வாங்கும் உத்தியாகப் பின்பற்றுகிறாள். அவள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு அடங்கியபடியே ஒவ்வொரு மாஜி கைதியும் தனது கனவுகளின் வசீகரங்களில் ஆழ்ந்தபடி வாழ்கிறான். அவர்கள் தயார் செய்யும் சாண்ட்விச் எல்லோராலும் விரும்பப் படுகின்றன.

பிராட்வேயில் வெற்றிகரமாக ஓடிய இந்த நாடகத்தை ஒரு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்குப் போட்டுக்காட்ட லின் நிச்சயித்தார். சில மாஜி சிறைக் கைதி நடிகர்களுக்கு முன்பாக சிறையில் அப்போது தண்டனைக் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்த கைதிகள் அரங்கில் உட்கார்ந்து பார்த்தார்கள். இந்தப் புதுமையைச் சாதித்த லின், “நாடகம் அதன் எல்லைகளைத் தாண்டி எல்லோருக்குமான கலையாக உருவாகித் திகழ வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதற்கு அர்த்தம் டிக்கட்டுகளின் விலையைக் குறைப்பது அல்ல. அது ஒன்றும் எல்லைகளை விஸ்தரிக்கும் பணியை ஆற்ற முடியாது. இம்மாதிரி மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் உரையாடி அவர்களில் தன்னைப் பதித்துக்கொள்ளும் செயலையே எல்லையற்ற இயங்குமுறை என்று அழைக்க முடியும்” என்றார்.

ட்டி. ஆர். நடராஜன் <natarajan.blore@gmail.com>

sinthuja, t.r. natarajan

Amrutha

Related post