ஜனநாயகப் பொய் மாளிகை – இந்திரா பார்த்தசாரதி

 ஜனநாயகப் பொய் மாளிகை – இந்திரா பார்த்தசாரதி

ந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு நடந்த முதல் தேர்தல், 1952. நான் திருச்சி, தேசியக் கல்லூரியில் தமிழ்த்துறையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. தேர்தல் பணிக்கு நான் லால்குடி போக வேண்டுமென்றார்கள். மூன்று நாட்கள் பயிற்சி. அப்பொழுது என் வயது 22.

அந்தக் காலத்தில் இப்பொழுது இருப்பதுபோல் அடையாளச் சீட்டு என்று எதுவும் கிடையாது. வாக்களிக்கின்றவர்கள் தங்கள் பெயர்களைச் சொல்ல வேண்டும். நினைவு இருந்தால் பிறந்த தேதி / வயதை அறிவிக்க வேண்டும். ஆணாக இருந்தால் தந்தை பெயர், திருமணமாகியிருந்த பெண்ணாக இருந்தால் கணவன் பெயர் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இங்குதான் சிக்கல். கிராமங்களிலிருந்த வந்த பெரும்பான்மையான வயதான பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சொல்ல மாட்டார்கள்.

ஒரு சுவாரஸ்யமான அனுபவம். கணவன் பெயரைக் கேட்டதும் ஒரு பெண் தலையிலிருந்து ஒரு பூவை எடுத்துக் காண்பித்தாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “பூவா உங்க புருஷன் பெயர்?” என்றேன்.

அபிநயம் செய்வது போல் இரண்டு கைகளையும் அகல விரித்துக் காண்பித்தாள். அதுவும் எனக்குப் புரியவில்லை.

எனக்கு உதவி செய்ய வந்திருந்த வயதான கிராமப் பள்ளிப் பணியாளர் சொன்னார்: “அவர் பெயர் பூங்காவனம்.’’

அந்த மூதாட்டியின் முகம் சிவந்தது புன்னகையுடன் தலையாட்டினார். கணவன் இறந்து பத்து ஆண்டுகள் ஆகியிருந்தன.

ஆனால், அந்தக் கால கட்டத்தில், போலி வாக்குகள், ஆள் மாறாட்டம், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் ஆகிய இக்கால ‘ஜனநாயகத் திருப்பணிகள்’ எதுவும் நடை பெற்றதாகத் தெரியவில்லை. மக்கள் அரசாங்கத்தை நம்பினார்கள்; அரசாங்கம் மக்களை நம்பியது.

எழுபது ஆண்டுகளில், நம் ‘ஜனநாயகம்’ எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இப்பொழுது நடக்கும் தேர்தல்களைப் பார்த்தால் போதும். ஒரு கட்சி வேட்பாளர் அவர் கட்சித் தலைவரை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லுகிறார். மாற்றுக் கட்சிக்காரர், அந்தக் குறிப்பிட்ட கட்சித் தலைவரைச் சின்னா பின்னமாக ஆக்கிவிடுவேன் என்று சூளுரைக்கிறார்.

‘ஆயிரமுண்டு இங்கு ஜாதி’ என்று சொன்ன மகாகவியின் வாக்கு பொய்க்கக்கூடாது என்பதற்காக வாக்கு வங்கிகளுக்காக ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நாடெங்கும் நிறுத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டால் என்ன? ஜாதியையும் மதத்தையும் கோஷங்களாக ஆக்க வழியா இல்லை?

ஜாதி அடையாளத்தை மட்டும் காப்பாற்றினால் போதுமா? மத அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டாமா? “நீங்கள் இருக்கும் பகுதியில் வேற்று மதத்தினருக்கு இடம் கொடுக்காதீர்கள். அப்படி அவர்கள் அங்கு இருந்தால் அடித்து விரட்டுங்கள்” என்கிறார் ஒரு கட்சித் தலைவர்.

முன்பு போல் இல்லாமல், முதல் தடவையாக ஒரு கட்சி, அது பதவிக்கு வந்தால், முதலமைச்சராக இருக்கப் போகிறவர் யார் என்று அறிவிப்பது வழக்கமாகிவிட்டது. அந்தத் தலைவரும் அவர் கட்சி பெரும்பான்மைப் பெறுவதற்காக நாடெங்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பாரதப் புண்ணிய பூமியை ஐந்தாறு தடவையாவது வலம் வந்து விடுவார். மாற்றுக் கட்சியினர் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்களும் ஒரு நாளைக்கு இரண்டு பொதுக் கூட்டம் என்று நாடெங்கும் ஊர்தோறும் பட்டி தொட்டிகள் என்று சுற்றி ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

இதுவரை நம் நாட்டுத் தலைவர்கள் தங்கள் ஓயாத பொய் சுமக்கும் பேச்சுக்கள் மூலம் விரயமாக்கியிருக்கும் சக்தியை வைத்துக்கொண்டு நம் நாட்டின் மின்சார பற்றாக்குறையை ஈடு செத்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

ஹாம்லெட் சலிப்படைந்து ‘Words, Words, Words’ என்று சொல்வது போல் பாரத நாட்டு மக்கள் சொல்வதும் என் காதில் கேட்கிறது.

இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>

indra parthasarathy

Amrutha

Related post