இலக்கியத் தீர்ப்பின்மை – இந்திரா பார்த்தசாரதி
‘Intellectual’ என்ற ஆங்கிலச் சொல்லை ‘அறிவு ஜீவி’ என்று இக்காலத்தில் மொழி ஆக்கம் செய்து கூறுகிறார்கள். ஆபத்து! தனித் தமிழில் சொல்ல வேண்டுமென்றால், ‘அறிவு சீவி’யாகி விடும்!
‘சான்றோர்’ என்று குறளில் வழங்கும் சொல்லே ‘intellectual’யைக் குறிக்கக் கூடாது?
ஷேக்ஸ்பியர் ‘அறிவு ஜீவியா?’ என்று ஒரு மாணவி என்னைக் கேட்டபோது என் மனத்தில் இக்கேள்வி எழுந்தது.
“முதலில் ஷேக்ஸ்பியரை அறிவு ஜீவி என்று இக்காலச் சொல்மரபு கொண்டு சித்திரிப்பதே தவறு. ஷேக்ஸ்பியர் மக்கள் கவிஞன். அவன் காலத்தில், அவன் நாடகங்களைச் சாதாரண மக்களும் கண்டு களித்தார்கள். ஷேக்ஸ்பியர் நடைமுறைகளைச் சித்திரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல, மதிப்பீடுகளைப் பற்றியும் தன் அபிப்பிராயமாக அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் படைத்த நாடக மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள். அவ்வளவுதான்” என்றேன் நான்.
அவர்கள் போன பிறகு அந்த மாணவி எழுப்பிய கேள்வி என்னைச் சிந்திக்கத் தூண்டியது.
ப்ரூட்டஸ், நாட்டின் மீதுள்ள பற்றினால், ஜூலியஸ் ஸீஸர் அரசனாவதைத் தடுக்க அவனைக் கொன்றதாகக் கூறுகிறான். “ஸீஸர் என் நெருங்கிய நண்பன்தான்; ஆனால் நான் ரோமை, சீஸரைக் காட்டிலும் இன்னும் அதிகம் நேசிக்கிறேன்’’ என்கிறான் அவன்.
இங்கு இரண்டு மதிப்பீடுகளுக்கிடையேயான மோதல் நட்பா அல்லது நாட்டு நலமா? அவனைக் கொலைகாரன் என்று முதலில் குறிப்பிடும் மார்க் ஆண்டனி, நாடக இறுதியில், ‘நாட்டு நலம் மிக்க இவனல்லவோ மனிதன்!’ என்று பாராட்டிக் கூறுகிறான். கதை மாந்தர்கள் பேசுகின்றார்களேயன்றி, நாடக ஆசிரியன் எதுவும் சொல்லவில்லை.
இந்நாடகத்தைப் படிக்கின்றவர்களுக்கு, அவரவர்கள் பண்புக் கேற்ப எது சரி என்று அவர்களுக்குப் படுகின்றதோ அதுதான் சரி என்பது போல, இருந்து விடுகிறான் படைப்பாளி; தீர்ப்பு வழங்குவது கலைஞனின் பொறுப்பன்று.
இராமாயணத்தில் சகோதரர்களில் வீடணன், அண்ணன் இராவணனை விட்டு நீங்கி இராமனைச் சார்கிறான். பிறர் மனையை நயப்பது போன்ற தவற்றைச் செய்த அண்ணனுக்காகப் போராடுவது தவறு என்று அவன் நினைக்கிறான். ஆனால், அவனுடைய இன்னொரு சகோதரன், கும்பகருணன், அண்ணன் செய்திருப்பது தவறாக இருந்தாலும், அவனை விட்டு நீங்கி அவனுடைய பகைவனிடம் அடைக்கலம் புகுதல் தர்மமில்லை என்று கருதுகிறான்.
வால்மீகியின் கும்பகருணனைக் காட்டிலும், கம்பனின் கும்பகருணன் ‘குணம் என்ற குன்றேறி’ நிற்கிறான். அவன் தன்னை இராமனிடம் அழைத்துப் போக வந்த வீடணனிடம் கூறுகிறான்: “உன்னைப் பொறுத்த வரையில் நீ செய்தது சரி. நீ எப்பொழுதுமே இராவணனின் அதர்மப் போர்களில் பங்குக் கொண்டதில்லை. இப்பொழுது உன்னை அவன் கொல்ல முயன்றபோது, நீ தப்பித்து வந்து இராமனைச் சார்ந்து நிற்கிறாய். ஆனால், நானோ எப்பொழுதுமே அவனுடன் எல்லாப் போர்களிலும் பங்குக் கொண்டு விட்டு, இப்பொழுது அவன் தோற்றுவிடப் போகிறான் என்ற நிலையில் அவனைக் கை விட்டு வருவது அதர்மம். நீ உன் கர்மத்தைச் செய், நான் என் கர்மத்தைச் செய்கிறேன்.”
‘நீர்க் கோல வாழ்வு நச்சி நெடிதுநாள் வளர்த்தப் பின்னைப், போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர்க் கொடாது அங்குப் போகேன்’ என்பது அவன் திருவாக்கு.
யார் செய்தது சரி? ‘இருத்தலியல்’ (Existential Question) கேள்வி. எது உயர்ந்தது? சகோதரப் பாசமா (நாட்டுப் பற்றா) அல்லது தான் தர்மம் என்று கொண்டதற்காக எதிரியுடன் சேர்ந்து போராடுவதா?
‘கொரியோலினஸ்’ என்ற ஷேக்ஸ்பியரின் அதிகம் பேசப்படாத ஒரு நாடகம். கொரியோலினஸ் ஒரு மாபெரும் ரோமாபுரி வீரன். பிரபு வம்சம். அவனுக்கு பொதுஜனங்களைப் பிடிக்காது. ’எலிக் கூட்டம்’ என்று அவர்களை வெறுக்கிறான். அப்படியொரு வெறுப்பு ஏற்பட என்ன காரணமென்றும் அவனுக்குத் தெரியவில்லை. பொதுஜனங்களும் அவனை வெறுக்கிறார்கள். காரணம், ரோமாபுரியில் பஞ்சம் ஏற்பட்டபோது, பணக்காரர்கள் தங்களிடமிருக்கும் அதிக தான்யங்களை ஏழைகளுடன் பகிர வேண்டுமென்ற தீர்மானத்தை அவன் நிராகரித்துவிடுகிறான்.
அப்பொழுது ரோமை எதிரிகள் தாக்குகிறார்கள். கொரியோலினஸ் எதிரிகளோடு போரிட்டு நாட்டைக் காப்பாற்றுகிறான். எதிரிகளுடைய முக்கிய நகரத்தையும் கைப்பற்றிவிடுகிறான். பிரபுக்கள், அவனை ரோம் தலைவனாக (Consul) ஆக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால், பொதுமக்கள்தாம் அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே, அவனை மக்களிடம் சென்று, அவன் போரில் பெற்ற 27 விழுப்புண்களைக் காட்டி, அவர்களிடம் தன் விருப்பத்தைச் சொல்ல வேண்டுமென்று பிரபுக்களும் அவன் தாயும் மனைவியும் கெஞ்சுகிறார்கள். ‘எலிகளுக்கு முன் காட்சிப் பொருளாக நான் இருக்க விரும்பவில்லை’ என்று முதலில் மறுக்கும் அவன் பிறகு இசைகிறான்.
நாட்டைக் காத்த மாபெரும் வீரன் என்று அவனை மன்னித்து இப்பொழுது கொண்டாடும் பொது ஜனங்களின் மனத்தை, ‘டிரிபூயூன்கள்’ எனப்படும் அவர்களுடைய தலைவர்கள் இருவர் கலைத்துவிடுகிறார்கள். அவனை நாட்டுத் துரோகி என்று குற்றம் சாட்டி நாடு கடத்த வேண்டுமென்று தீர்மானம் போடுகிறார்கள். தேர்தலில் பொது ஜனங்களை நம்பியிருக்கும் பிரபுக்களும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். வஞ்சிக்கப்பட்ட கொரியோலினஸ் எதிரிகளுடன் சேர்ந்து ரோம் மீது படையெடுக்கின்றான்.
ரோமாபுரியில் அவனுக்கு இணையான வீர்ர்களே இல்லை. அவர்கள் அச்சமடைந்து, கொரியோலினஸ் தாயையும் மனைவியையும் அவனிடம் சமாதானம் பேச தூது அனுப்புகிறார்கள். நாட்டுப் பற்று மிக்க தாய், மகன் சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்யக் கூடாதென்று அவனிடம் சென்று மன்றாடுகிறாள். அவன் இதற்கு இசைந்தால், தங்களைக் கைவிட்டதற்காக எதிரிகள், அவனைக் கொன்று விடுவார்களென்று அவளுக்குத் தெரியும். ஆனால், நாட்டைவிட மகன் உயிர் பெரிதன்று அவள் நினைக்கிறாள். கொரியோலினஸ் அவள் வேண்டுகோளுக்கு இசைகிறான். அவனை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள்.
இந்த நாடகம் பல மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நாட்டைக் காப்பாற்றியவனை, மக்கள், அவன் பொது ஜனங்களை விரும்பவில்லை என்பற்காக நாடு கடத்தியது சரியா? மக்கள் ஏழைகளாகவும் கல்வி அறிவில்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதற்காக கொரியோலினஸ் அவர்களை வெறுத்தது சரியா? மகனுடைய உயிரைக் காட்டிலும் நாட்டு நலன் முக்கியமா?
ஷேக்ஸ்பியர் எதற்கும் விடை தரவில்லை. நாடகத்தைப் படிக்கின்றவர்களும் பார்க்கின்றவர்களும், அவரவர் பண்புகளுக்கேற்ப விடை கொள்ளலாம். இதை ‘இலக்கியத் தீர்ப்பின்மை’ (Literary Ambiguity) என்பார்கள் விமர்சகர்கள்.
இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>