போர்க்கால நடவடிக்கைகள் – விட்டல்ராவ்

 போர்க்கால நடவடிக்கைகள் – விட்டல்ராவ்

1939, நாஜி ஜெர்மனியின் பான்ஸர் படைப் பிரிவு போலந்தைப் பிடிக்கவும், இரண்டாவது உலகப் பெரும் போர் வெடித்தது. யுத்தம் முடியும் வரை யுத்தம் நடக்கும் சகல போர் முனைகளுக்கும், நேசநாடுகளின் பல்வேறு உற்பத்திகளும் அனுப்ப்பட்டு பவந்ததால், அந்தந்த உள்நாட்டு தேவைகளுக்கு பற்றாக்குறை, தட்டுப்பாடு, கருப்புச் சந்தை, பங்கீடுமுறை என்பவை ஏற்பட்டு நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் தாங்கவொண்ணா துன்பங்களில் உழன்றனர்.

போர் எந்திரத்துக்கு தகவல் தொடர்பு என்பது மிக மிக இன்றியமையாத அத்தியாவசிய பாகமாகும். இங்கிலாந்தில் டெலிபோன் சாதனங்கள் தயாரிக்கும் எல்லா தொழிற்கூடங்களும் உடனடியாக இராணுவக் கட்டுபாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டன. 1925இல் ‘மட்றாஸ் டெலிபோன்’சுக்கு தானியங்கும் இயந்திர சாதனங்களை ‘கோவெண்ட்ரி’ எனும் தொழில் நகரிலிருந்து வினியோகித்து வந்த ‘தீ பீல் கோன்னார்’ தொலைப்பேசி நிறுவனம் (THE PEEL CONNOR TELEPHONE WORKS) முற்றிலும் தான் குண்டு வீச்சிலிருந்து தப்ப COMOUFLAGES எனும் எதிரிகளின் பார்வைக்கு அல்வா கொடுக்கும் யுத்தகால பச்சோந்தி போர்வைக்குள் வந்தது. பிரிட்டிஷ் பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்களும் அவ்வாறே தம்மை பாதுகாப்பு வளையத்துக்குள், ஆழ்த்திக் கொண்டிருந்தன. எந்நேரமும் இத்தொழிற்சாலைகளின் நுழைவாயிலின் முன் இராணுவ லாரிகள் நின்றபடியே இருந்தன. அவைகளில், உற்பத்தியாகும் தொலைத்தொடர்பு சாதனங்கள், உதிரிபாகங்கள் அவ்வளவும் ஏற்றப்பட்டு, அவ்வூர்திகள் அருகிலுள்ள துறைமுகங்களுக்குப் பறந்து போய் யுத்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இதன் காரணமாக லண்டனிலிருந்த ‘மட்றாஸ் டெலிபோன்’ கம்பெனி மதறாஸ், பம்பாய் தொலைப்பேசிகளுக்கான எவ்வித ஆர்டர்களையும் ஏற்று கப்பலில் கருவிகளை, உதிரிபாகங்களை அனுப்ப இயலவில்லை. சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த ‘தி ஓரியண்டல் டெலிபோன் அண்டு எலெக்டிரிக் கம்பெனி’ நம்முடைய தேவைகளின் சிறு பகுதியைக் கூட பிரிட்டிஸ் வணிகக் கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கத் தயங்கின. ஏனெனில், நிராயுதபாணியான பிரிட்டிஷ் வணிகக் கப்பல்கள் நடுக்கடலில் ஜெர்மன் ‘யு-வகை’ நாசகாரிப் படகுகளிடம் சிக்கி, கணப்போதில் டார்பிடோ தாக்குதலுக்கு ஆளாகி அழிக்கப்பட்டுவிடும்.

மட்றாஸ் தொலைப்பேசி கம்பெனியைப் பொறுத்தளவு யுத்தமென்பது, கம்பெனியின் பணிகளில் வளர்ச்சி விரிவாக்கம் என்பவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாயிற்று. அதே சமயம் உள் நாட்டு பாதுகாப்பு மற்றும் யுத்த முஸ்தீபு காரியங்கள் மட்றாஸ் டெலிபோன்ஸ் மீது மிக அதிக கூடுதல் அழுத்தத்தை அளித்தன. இதன் காரணமாய் 1941 காலகட்டத்தில் சென்ட்ரல் எக்ஸ்சேஞ்சு (பூக்கடை டெலிபோன் ஹவுஸ்), மவுண்ட் ரோடு, மாம்பலம் எக்ஸ்சேஞ்சுகளிலெல்லாம் புதிய இணைப்புகள் வழங்குவது என்பது யுத்தம் முடியும் வரை நிறுத்தப்பட்டது. அது மட்டுமின்றி, ஏற்கனவே தொலைப்பேசி வசதி வைத்திருக்கும் சென்னை நகரின் வாடிக்கையாளர்களில் சிலர், இராணுவத்துக்கு, வான்வெளி தாக்குதலை முன்னறிவிப்பு மூலம் எச்சரிக்கை விடும் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு ரீதியான இராணுவ சேவைகளுக்காக தங்கள் தொலைப்பேசி இணைப்புகளையே விட்டுக்கொடுக்கவும் வேண்டியதாயிற்று.

இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ், நகரங்கள் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர் பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று. உடனடியாக அன்றைய பிரிட்டிஷ் அரசு மட்றாஸ் டெலிபோன்ஸை அணுகி, நகர் மீது வான் வழி அல்லது கடல் வழி எதிரிகள் தாக்குதல் ஏற்படும் பட்சத்தில் முன்னதாக நகரை எச்சரித்து, நகரின், பல்வேறு பகுதி மக்களையும் தயார் நிலையில் பதுங்கிக்கொள்ளும் வகையில் ‘சங்கொலிகள்’ ( (SIRENS) மூலம் ஒலிபரப்புவதற்கான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டது. கூடவே இவ்வித அபாயச் சங்கொலிகல் கேட்கப்படும் தூரத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலெல்லாம் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை அறிவிப்பை நூற்றுக்கணக்கான தொலைப்பேசிகள் மூலம் ஒளியால் பளிச்சிட்டுத் தெரிவிக்க ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தம் நடந்த சமயம் மட்றாஸ் தொலைப்பேசியின் தானியங்கும் எக்ஸ்சேஞ்சுகளின் தலைமைப் பொறியாளராயிருந்த ஆங்கிலேயர் T.S. PUGH என்பவர். அவரை அரசு, மேனமை தாங்கிய மன்னரின் இராணுவத்தில் பதவியில் ‘மேஜர்’ எனும் உயர்ந்த இராணுவப் பதவியில் அமர்த்தியது. அவர் மட்றாஸ் சிக்னல் கம்பெனி, ஆக்ஸிலியரி படைக்கு கமாண்டிங்கு அதிகாரியாக்கப்பட்டார்.

இவ்வாறு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இராணுவ விஷயங்களில் சென்னைத் தொலைப்பேசி ஈடுபட்டது. சென்னை நகரைச் சுற்றி பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் சென்னைத் தொலைப்பேசியின் பங்கு விரிவடைந்தது. சென்னைத் தொலைப்பேசியின் தகவல் தொடர்பு அனுபவத்தை இராணுவம் உபயோகித்துகொள்ள விரும்பிற்று. ஒருகாலத்தில் ஆற்காடு நவாப்பின் பெரிய குதிரைப் படை மற்றும் குதிரை லாயமாயிருந்த புனித தாமஸ் குன்று அடிவாரப்பகுதி, பிரிட்டிஷ் ராணுவத்து படைகளின் தங்குமிடங்களாக, குடியிருப்புகளாக மாறியது. MONKEY HILLS எனும் சிறிய குன்று பரங்கிமலை பட்ரோட் அருகிலுள்ளது. இக்குன்று வெடி மருந்து, ஆயுத கிடங்குகள் காப்பகமாயிற்று. இப்பகுதி இராணுவத்தின் தென் பிராந்திய AREA HEAD QUARTERS என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சு உருவானது. எதிரே புகழ்பெற்ற இராணுவ விளையாட்டு மைதானமும் ஸ்டேடியமுமான MOHITE STADIUM உருவாக்கப்பட்டு, இராணுவ குதிரைகளின் போலோ விளையாட்டில் பயிற்சி பெற்ற பிரிவினரால் ஆண்டாண்டு தோறும் தேசிய அளவில் போலோ போட்டிகள் நடைபெற்று வந்தன.

சிறிய அளவிலான பூங்காவும் அமைக்கபட்டு ‘மொஹிதே பூங்கா’  என்றழைக்கப்பட்டது . இராணுவத்தினருக்காக முதன்முதலில் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டு இன்றளவு இயங்கி வரும் அரிய அழகிய பெரிய தேவாலயமான ‘இராணுவ தேவாலயம்’ (ARMY CHURCH) தோன்றியது. இந்த சர்ச்சை நான் கோட்டாவியங்களாயும் பெரிய அளவில் OIL PAINTING –ம் வரைந்து தீட்டியிருக்கிறேன். இதனருகில் தென்னிந்தியாவின் பெரிய இராணுவ மருத்துவமனையும் பிறகு இராணுவ பயிற்சி கல்லூரியும் ஏற்பட்டன. அது பின்னாளில் மட்றாஸ் மிலிடெரி அகாடெமியாக உயர்த்தப்பட்டது.

சென்னைத் தொலைப்பேசியின் பிரத்தியேகமாக ‘மிலிடரி எக்ஸ்சேஞ்சு’– ம் அமையப் பெற்றது. மிலிடெரி அகாடெமி வளாகத்துள் நுழைந்து சற்று தூரம் போனால் பிரம்மாண்டமான புற்று ஒன்றுண்டு. அதை ஒரு கோயிலாக்கி ‘நாக மந்திர்’  என்று இராணுவம் செய்திருக்கிறது. இந்த பாம்புப் புற்றுக் கோயில் பராமரிப்பு, தினசரி சுத்தம் மற்றும் புற்றுக்கு பூசை காரியங்களைப் பார்த்துக்கொள்ள வயதான பெண்மணியொருவர் இராணுவத்தின் ஏற்பாட்டில் இருந்துவந்தார். என் மகள் பிறந்த சமயம் நாக தோஷம் இருப்பதாக சொல்லப்பட்டு, அதை நம்பிய என் மனைவி, என்னையும் அழைத்துக்கொண்டு புற்றுள்ள கோயில்களுக்குப் போவாள். அப்போதுதான் இந்த இராணுவ பயிற்சிக் கல்லூரி வளாகத்திலுள்ள புகழ்பெற்ற புற்றுக் கோயிலைக் கேள்வியுற்று, அங்கு பூஜை செய்வது பெண்மணியொருத்தி என்பதையும் அறிந்தோம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இராணுவம், வெளியாட்களை தடைசெய்யப்பட்ட இராணுவ பகுதிக்குள் நுழைய அனுமதித்து நேரே கோயிலுக்கு மட்டும் போய் வரும்படி குறுக்குப் பாதை அமைத்திருக்கிறது. நாம் நுழைந்தவுடன் அங்குள்ள இராணுவ செண்டரீயிடம், ‘நாக் மந்திர்’, என்று சொன்னால் போதும், உள்ளே போக அனுமதிப்பார்.

திரு புக், ஆட்டோமேடிக் தொலைப்பேசி பொறியியல் நுணுக்கங்களில் சிறந்த வல்லுனர். இவர் சென்னைத் தொலைப்பேசியில் உதவிப் பொறியாளராய் 1930இல் பதவியேற்றார். அப்போது மானேஜர் பதவியிலிருந்த ஸ்பெல்லர் என்பவர் 1946இல் ஓய்வு பெற்றபோது புக் மானேஜரானார். இன்றுள்ள டெலிபோன் ஹவுஸின் மேல் தளத்தில்தான் அவருக்கு வசிக்குமிடம் தரப்பட்டிருந்தது. இவர் 1948 வரை சேவை செய்து முடித்து தாய் நாடு திரும்பினார்.

இதனிடையில், இரண்டாம் உலகப்போர் உலகின் கிழக்கு அரங்கில் கடுமையானது. அச்சு நாடுகளில் ஒன்றான இம்பீரியல் ஜப்பான் பர்மாவைக் கைப்பற்றியதையடுத்து, பிரிட்டிஷ் ராணுவம் அடுத்தடுத்து கிழக்குப்போர் அரங்கில் தோல்விகளை சந்தித்ததால், இந்தியா, குறிப்பாக மட்றாஸ், எந்த நேரமும் ஜப்பானின் தாக்குதலுக்குட்படும் என்ற பீதி பெரிதாக வளர்ந்தது. மட்றாஸ் நகரவாசிகள் நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். முக்கியமாக பிராட்வே, மண்ணடி, ஜார்ஜ் டவுன், இராயபுரம் பகுதிகள் காலியாகத் தொடங்கின. சுமார் அளவிலான வீடுகள், சிறிய வீடுகள், கடைகள் எல்லாம் வெறும் ஐம்பது ரூபாயிக்கெல்லாம் விற்கப்பட்டு, வாங்கப்பட்டு, வாங்க யாரும் முன் வராததால் அப்படியே விட்டுவிட்டு ஓடினதாகவும் பேசிக்கொள்ளுவார்கள், விற்க முடிந்தவரை சொத்துக்களை விற்றுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள், வேற்றூர்களுக்கும் நகரிலேயே தூரம் தள்ளி போய் குடியேறினர். அந்த  சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிப் போட்டவர்கள் விரைவில் கோடீசுவரர்களாக மாறினர் . ஜார்ஜ் டவுன் எனப்படும் சென்னையின் பழைய பகுதியின் தெருக்கள் வெறிச்சோடின. வீடுகள் மனிதர்களையிழந்து காலியாக நின்றன. ஓவ்வொருவரும் நகரை விட்டு வெளியேறுவதிலேயே தயாராகிக் கொண்டிருந்த காட்சி.

எதிரியின் தாக்குதல் எனும் பீதியுணர்வு சென்னைத் தொலைப்பேசி ஊழியர்களையும் விரைவில் கல்விக்கொண்டது. அவர்களை இழந்தால் தொலைப்பேசி வலைதளம் காலி என்பதால், அவர்களை எப்படியும் ஓடிவிடாதபடி நகரிலேயே இருக்க வைக்க ஊக்குவிக்கும் முயற்சியை  தொலைப்பேசி நிறுவனம், ‘வெளியேற்றப்படி’ (EVACAUTION ALLOWANCE) என்ற புதிய சம்பள் உயர்வை அறிவித்தது. தொலைப்பேசி நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு மந்திர சக்தியிருந்தது. பல ஊழியர்கள் வெளியேறாமல் சென்னையிலேயே இருக்க முடிவு செய்தனர். அதே சமயம் அவர்கள் தம் குடும்பத்தாரை மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கென்று வெளியேறச் செய்தும், தூரத்திலுள்ள உறவினர்கள், நண்பர்கள், வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவ்வாறு தம் குடும்பங்களை பாதுகாப்பு கருதி வேற்றிடங்களுக்கு அனுப்பிய தொலைப்பேசி ஊழியர்கள் இரண்டு சம்சாரங்களை சமாளிக்க வேண்டி எதிர்கொண்ட வருமானத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க, நிறுவனம் அளித்த “எவாகுவேஷன் அலவன்ஸ் தொகை” உதவியது.

சென்னைத் தொலைப்பேசி உருவாக்கி அமைத்திருந்த வான்வழித் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு, சைரன், அது வரை சென்னை நகரில் பல்வேறு இடங்களில் சோதனை ரீதியாக வெறும் ஒத்திகை அளவிலேயே இருந்து வந்தது. வீடுகளுக்கு முன்னால் தெருக்களில் பதுங்கி குழிகளும் தோண்டப்பட்டிருந்தன. சோதனை – ஒத்திகைக்காக சைரன் ஒலிக்கும் போதெல்லாம் ஜனங்கள் இந்தப் பதுங்கு குழிகளில் குதித்து படுத்தாற்போல ஒளிந்து கொள்ளுவார்கள். ஒருநாள் இரவன்று நிஜமாகவே சயரன் அலறிவிட்டது. சென்னை நகர் மீது ஜப்பான் வான்வெளித் தாக்குதல் நடத்திவிட்டது.

1943, டிசம்பர் 12-ந்தேதி இரவு அது நடந்து விட்டது. உறக்கத்திலாழ்ந்திருந்த மட்றாஸ் பட்டினம் நடு இரவில் எழுந்த சைரன்களின் கிறீச்சிட்ட சங்கொலியால் அலறி எழுந்தது. முதலில் விட்டு விட்டு ஒலித்த சைரன் தொடர்ந்து நிற்காது ஒலித்தது. ஒரு ஜப்பானிய குண்டு வீச்சு விமானம் சென்னை நகரின் வான்வெளியில் புகுந்து வட்டமடித்தது. இருபது நிமிடங்கள் போனதும் ‘எல்லாம் க்ளியர்’ என்று சைரன் ஒலிக்கத் தொடங்கிய கணமே, எதிரி விமானம் மட்றாஸ் நகர் மீது ஒரு குண்டை வீசி விட்டு, நகரின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் இராணுவ பாட்டரியிலிருந்து கிளம்பிய விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பி மறைந்தது. உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை. இந்த குண்டு வீச்சு பொது மக்களில் பெரும் பீதியை ஏற்படுத்தினாலும், சென்னைத் தொலைப்பேசி எவ்வித பீதியையும் அடையவில்லை. மாறாக தான் அமைத்த சைரன் அமைப்பு நிஜமான குண்டு வீச்சின்போது வெற்றிகரமாய் செயலாற்றி மக்களை பாதுகாப்பாய் பதுங்கிக்கொள்ள வைத்ததை எண்ணி பெருமை கொண்டது. வீசப்பட்டு சேத மேற்படுத்திய ஜப்பானிய குண்டின் சிதறிய பாகம் ஒன்று இன்றளவும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

காலச் சக்கரத்தின் சுழற்சியில் 1970-களின் தொடக்கம், மீண்டும் ஒரு யுத்தம் – இந்தியாவுக்கும் பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கும் போர் மூண்டபோதி கடற்கரை பெரு நகரங்களில் காலத்துக்கேற்ற யுத்த முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டன. இம் முறை A.R.P சங்கொலி எதுவும் அமைக்கப்படவில்லை. தொலைப்பேசியின் பங்களிப்பாக எதுவும் தேவைப்படவில்லை. அதே சமயம் மற்ற எல்லாமும் எல்லாரும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை முயற்சிகளை தொலைப்பேசி இலாகாவும் மேற்கொண்டது.

பகலைப் பற்றி கவலையில்லை. இரவைப் பற்றியதாகவே சிறிது எச்சரிக்கை காரியங்கள் கவனிக்கப்பட்டன. இரவுப் பணிக்கு எப்போதுமே மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பணியிலமர்த்தப்படுவர். வேலையும் இரவில் தொலைப்பேசி நிலையங்களில் மிகவும் குறைந்தேயிருக்கும். ஆனால், போர்க்கால முஸ்தீபு நடவடிக்கைகளை மனதில் கொண்டு கூடுதலாக பணிக்கு ஊழியர்களை இரவில் வரச் செய்தனர். இது வாரத்தில் இரு பிரிவாக இருமுறை சுழல் முறையில் மாறும். இந்த வாரத்தில் என் முறை மூன்று இரவுகள் என்றால் அடுத்த மூன்று நாட்களில் இரவுப் பணிக்கு வேறு சிப்பந்திகள் வரவழைப்படுவர்.

டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளின் ஜன்னல்கள் யாவும் முற்றிலும் பெரிய அளவிலும் கண்ணாடியால் ஜன்னல் கதவுகள் ஆகியிருக்கும். உள்ளே இரவு முழுக்க சூரிய உதயம் வரை ஜகஜ்ஜோதியாய் விளக்குகள் எரியும். வெளியிலிருந்து பார்க்க பளிச்சென்று உள்ளேயிருப்பது கூட கொஞ்சம் புலப்படும். யுத்த எச்சரிக்கை முஸ்தீபுகள் கூட மிகவும் சாதாரணமாகவேயிருந்தது. பஸ், லாரி, கார் மற்றும் இரவில் விளக்கை எரிய விட்டு ஓடும் சகல வாகனாதிகளும் தத்தம் ‘ஹெட் லைட்’களை மேலிருந்து கீழாக பேர் பாதிக்கு கருப்பு வண்ணமடித்து மறைத்து விடவேண்டும். பெரிய கடைகள் முதலானவை இரவு முழுக்க போட்டு ஒளிரவிடும் பல்வேறு நிறத்திலான ‘நியான்சைட்’ ஜோடனை ஜோதி விளக்குகளையெல்லாம் மறு அறிவிப்பு வரும் வரை அணைத்தே வைத்திருக்கவேண்டும். இரவு என்பது முழு இருளாக இருக்கவேண்டும். எங்கெங்கு கண்ணாடிக் கதவுகள் இருக்கிறதோ அவையாவும் கருப்பு வண்ணமடிக்கவேண்டும், அல்லது கருப்புக் காகிதத்தால் ஒட்டப்பட்டு வெளியிலிருந்து பார்க்க இருட்டாயிருக்க வேண்டும்.

இவை கெடுபிடியுடன் உத்தரவிடப்பட்டன. அதன் கண்டிப்பு மிக்க சுற்றறிகை மத்திய அரசிலிருந்து எல்லா தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சுகளூக்கும் அனுப்பப்பட்டன. அதன்படி சென்னைத் தொலைப்பேசி தங்கள் பொறுப்பிலுள்ள இரவு முழுக்க வேலை செய்யும் இணைப்பகங்கள் எல்லாவற்றின் வெளிக்கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்களை கருப்பு காகிதங்களை ஒட்டி, உள்ளே ஒளிரும் விளக்கொளி துளியும் வெளியில் தெரியாதபடிக்கு செய்து முடிக்கும் சிறப்புப் பணியிலிறங்கிய சமயம் இரவுப்பணிக்கென கூடுதல் ஊழியர்களை ஓரிரு நாட்களுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. இரவுப் பணிபுரிய நிறைய பேர் முன்வந்தனர். எப்போதும் நைட்டூட்டி செய்வதையே விரும்பும் ஹீசேனும் சாதுல்லாவும் இம்முறை முன் வரவில்லை. சாதுல்லாவின் வீட்டில் பிரசவமாகியிருந்தது. ஹீசேனுக்கு இரவு உறக்கம் கெடுத்து விழித்திருக்க கூடாதென்று மருத்துவர் சொல்லியிருந்தார். இருவருக்கான இரு காரணங்களுமே உண்மை என்பது யாவருமறிந்த ஒன்று, ஆனால், போர் நடந்தபடியிருந்த காலம் அந்த உண்மையை புறந்தள்ளிவிட்டு வேறு யோசனைகளில் மாற்றி யோசிக்கவே வைத்தது. ஹீசேன், சாதுல்லா இருவரின் நிழல்கள் மற்ற ஊழியர்களுக்கு சற்று வளைந்து கோணலாகித் தெரிந்தன. மற்ற சக ஊழியர்கள் இருவரைப் பற்றியும் பேசிக் கொள்ளத் தொடங்கினர். ஒரு சகஜ பாவம் குறைந்து தோன்றியது. “பாய்… பாய்..” , என்று நெருக்கமாக எப்போதும் அழைப்பவர்கள் இப்போது இரண்டு மூன்று நாட்களாய் “மிஸ்டர்” போட்டு வெறும் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவர்கள் இருவரோடும் விளையாட்டுத்தனமாய் எதையும் வைத்துக் கொள்ளுவதில்லை உணவு இடைவேளை மேலும் இறுக்கமாகித் தோன்றியது. டைனிங் அறையில் காச் மூச் சென்றிருக்கும்; இப்போது யுத்தம் நடந்து வருவதால் அது தொடர்பான பேச்சாகவே இருந்தது. ஹீசேனும் சாதுலாகானும் தங்கள் டப்பாக்களுடன் நுழையவும் சட்டென்று பேச்சு நின்றது. அல்லது ஸ்தாயியும் சுருதியும் கீழிறங்கியது. அல்லது திசை திருப்பப்பட்டது.

சிலர் பொட்டலமாய் அழகாகக் கட்டி கொடுக்கப்பட்டதை மேஜை மீது வைத்துப் பிரிப்பார்கள். பெரும்பாலும் டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் என்றிருக்கும். அவைகளைத் திறந்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் உணவை மற்றவகளுக்காட்டி மற்றவர்களுடையதைப் பார்த்து ஒருவரோடு ஒருவர் உணவைப் பரிமாறிக் கொள்ளுவார்கள்.

“பாய், என்ன தூக்குது வாசனை, பிரியாணியா?”

“இல்ல, குஷ்காதான்”

”கொஞ்சம் இதில வை பாய்.”

மேற்கண்ட பரஸ்பர உணவு பரிமாற்றங்கள் ஒரு வாரமாயில்லை. யாராவது தமிழ் ஆங்கில செய்தி இதழைப் பிரிக்கும் போதே அவர்கள் இருவரும் மெல்ல டைனிங் அறையிலிருந்த வெளியேறுவார்கள். அவர்கள் இருவருக்கும் மற்றவர்களின் நிழல்கள் பயங்கரமாய்க் காணப்பட்டன. நிழல்களை சந்தேகித்துப் பின் தொடரும் சந்தேகத்துக்கிடமான நிழல்கள் . தொலைப்பேசி எக்ஸ்சேஞ்சுக்குள், நாட்டின் வடமேற்கில் நடந்து வந்த யுத்தம், ஒருவித நிழல் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தது

இரவு முழுக்க வேலை செய்து, எல்லா ஜன்னல் கண்ணாடிகளுக்கும், கருப்புக் காகிதங்களை எவ்வித சந்து பொந்துமில்லாது ஒட்டி முடித்தனர். உயர் அதிகாரிகள் ஒவ்வொரு டெலிபோன் எக்ஸ்சேஞ்சையும் இரவில் போய் வெளியிலிருந்து பார்த்து விட்டு, எவ்வித விளக்கு வெளிச்சமும் தெரியவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு போனார்கள். சாந்தோமிலுள்ள கலங்கரை விளக்கு தன் இரவு நேர ஒளி வீச்சை நிறுத்திக் கொண்டது. துறைமுகத்திலும் அதற்கு வெளியில் தள்ளியும் நிற்கும் கப்பல்களில் இரவானதும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.

முன்பெல்லாம் தேநீர் கடைக்குப் போய்விட்டு வருவதில் நெருங்கிய தோழமை வெளிப்படும்.

“டீக்கு போலாம், வாங்க,”

“வாங்க பாய், டீக்கு போலாம்.”

இப்போது அவர்களிருவரும் தனியே தேநீருக்குப் போய்விட்டு வருகிறார்கள்.

“அவங்கெல்லாம் நம்ம ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பாக்கறாங்க, இல்லே…” என்று சாதுல்லா கான் ஹீசேனிடம் சொல்லுவதும்,

“அவங்க ரெண்டு பேரும் முன்னே மாதிரி இல்லாம ஒதுங்கறாங்க,, இல்லே..” என்று மற்றவர்களுமாய் அந்த நட்புறவு….”

ஒரு வழியாக யுத்தம் முடிந்து போனது. எல்லோருக்கும் இருந்து வந்த மனவழுத்தம் இறுக்கம் தளர்ந்தது. எல்லொரும் டைனிங் காலில் ஒன்றாக நெருங்கியமர்ந்து, தத்தம் மதியச் சாப்பாட்டை பகிர்ந்தபடி பேச்சிலீடுபட்டனர். எல்லாரும் சேர்ந்து தேநீர் அருந்தப் போய் விட்டு வரத் தொடங்கினர். ஊர்களும் தேசங்களும் அப்படித்தான் போகப் போக எல்லாவித தடைகளும் நீக்கப்பட்டு எண்ணங்களும் கலையும் வாழ்வியல் அத்தியாசவசியங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

(படம்: செப்டம்பர் 22, 1914 அன்று ஜெர்மன் லைட் க்ரூசர் எஸ்.எஸ். எம்டன் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, சென்னை துறைமுகத்தில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் தொட்டிகள்.)

தொடரும்

Vittalrao

Amrutha

Related post