வராற்றுச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி

 வராற்றுச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி

மிழிலக்கியத்தின் மாபெரும் சிக்கல்களில் ஒன்று, அவற்றைக் காலவரையறையின்படி வகைப்படுத்திக் காண்பது. நம் தமிழிலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் மேல்நாட்டுச் சரித்திர அளவுகோல்களின் நேர்கோட்டுப் பாதையில், இதற்குப் பின் இது என்று தமிழ் இலக்கிய நூல்களைக் கால வரிசைப்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், ஓரிரண்டு தமிழ் அறிஞர்களைத் தவிர, பெரும்பாலான, இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இலக்கியத்தை மொழி அரசியல் பார்வையில்தான் அணுகியிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இதனால், இலக்கிய நூல்களின் கால வரையறையில் பல சிக்கல்கள், குழப்பங்கள்.

இந்தியப் பாரம்பரியக் கண்ணோட்டத்தில் சரித்திரம் நேர்க்கோட்டுப் பாதையில் செல்வதில்லை. கோளவியல் காலக் (Astronomical Time) கணக்கின்படி அல்லாமல், வட்ட வடிவுப் பாதையில் (Cyclic Order) செல்லும். அறுபது வருஷங்களும் நான்கு யுகங்களும் அலுப்புச் சலிப்பு இல்லாமல் திரும்பத் திரும்ப வரும். நம் சரித்திரங்கள் நம் புராணங்கள்தாம். நம் அடிமனத்துப் புராண அறிவுக் குழப்பம்தான், நம் இலக்கிய நூல்களைக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வைத்துக் கால நிர்ணயம் செய்ய நம்மை ஊக்குவிக்கின்றது.

இப்பொழுதைய தமிழிலக்கிய வரலாற்று மரபின்படி, நாம் தமிழின் ஆதி நூல்களாகச் சங்க இலக்கியங்களைக் கொண்டிருக்கிறோம். அவையனைத்தும் வெவ்வேறு காலக்கட்டத்தில் உருவாகிப் பிற்காலத்தில் வெவ்வேறு தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இச்சங்க நூல்களைச் சான்றுகளாகக் கொண்டு, தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தோன்றியிருக்க வேண்டும். ஆகவே, தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு என்பதில் தடையில்லை. இது சமஸ்கிருதத்துக்கு இணையானது.

ஐரோப்பிய மொழிகளில், மொழியியல் (Linguistics) என்ற துறை மிகப் பிற்காத்திய வளர்ச்சியே தவிர, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தொல்காப்பியம், பாணிணீயம் போல் தனி இலக்கண இயல் நூல்கள் இருந்தனவாகத் தெரியவில்லை. சமஸ்கிருத, தமிழ் இலக்கணிய இயல் பரிணாமத்தை (சிற்சில வேறுபாடுகள் இருப்பினும்) பார்க்கும்போது, இவற்றின் பாரம்பரிய வேர்களின் ஒற்றுமையை அறிய முடிகிறது. ஒன்று இனம் சார்ந்த பேசும் மொழியாகவும் (தமிழ்), மற்றது பேசும் மொழிக்கான கட்டமைப்புப் பெறாமல், இனம் சாராமல், பொதுமைத்தான வெறும் ஏட்டு மொழியாக இறுகிவிட்டது என்று கருதவதற்கு இடம் இருக்கிறது. இம்மொழிகளுக்கு இனச் சார்புக் கற்பிதங்களை உருவாக்கியவர்கள் ஐரோப்பியக் காலனிய மொழி அறிஞர்கள்.

தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் படித்துச் சுவைக்க வேண்டுமென்றால், முதலில் நம் மனத்தினின்றும் இந்தக் கலாசார ஒட்டடைகளைக் களைய வேண்டும்.

சங்க இலக்கியங்கள் தமிழுக்கே உரித்தான தனிவகை இலக்கியக் கருவூலம் என்பதில் ஐயமில்லை. ஏகாரத்தில் அழுத்தம் இல்லாவிட்டால். ஏனெனில், கிட்டத்தட்ட அந்தக் காலக் கட்டத்திலேயே (பொதுயுகம் 150க்கு முன்) மகாராஷ்ட்ராவில் அதாவது, தக்கிண பிராக்கிருதத்தில் ‘கா(GA)ஹா சத்தசய்’ (சமஸ்கிருதத்தில்’ ஸப்தஸதி) என்ற பிற்காலத்தில் தொகுக்கப்பெற்ற நூலில், சங்க அகத்துறைப் பாடல்கள் போல் அகதுறைப் பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ஒரு சான்று.

அன்னைமீர்!
அவன் காதல்
கண்ணிமைப் பொழுதில்
காணாமல் போய்விடுகிறது!
கவின் பெரு சிறு அணி
கண்ணெதிரே தோன்றி அசைய
பற்றும்போது பார்வையினின்றும்
மறைவதனைய…

சிந்துநதிப் பெருவெளி நாகரிகம் மறைந்து போவதற்கான சூழ்நிலைகள் உருவான நிலையில் தெற்கு நோக்கி வந்த இனம் தெற்கு மகாராஷ்ட்ரத்திலும் தென்னிந்தியாவிலும் பரவியிருக்கக்கூடும். அப்பொழுது ஏற்பட்ட இனக் கலப்பினால், பல்வேறு மொழிகள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்திருக்கக் கூடும். இலக்கியம் உருவாவதற்கு முக்கியக் காரணம் இனவழி நினைவாற்றல் (racial memory). தக்கிண மகாராஷ்டிராவும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் நிச்சியமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் மராத்தி மொழிக்கும் தமிழுக்கும் உறவு முறை பொதுவான சொற்கள் பல் உள்ளன. அதனால்தான் என் நண்பர் பேராசிரியர் நிமாடே, மராத்தியும் திராவிட இன மொழியாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.

செவ்வியல் சமஸ்கிருத (Classical Sanskrit) நாடகங்களில் மகாராஷ்ட்ர மொழி பேசுபவர்கள் கீழ்ச்சாதி மக்கள். (நாட்டிய சாஸ்திரம், காளிதாஸன் நாடகங்கள். நாட்டிய சாஸ்திரம், காளிதாஸன் நாடகங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவை அனைத்தும் ஒரே காலத்தவை. பொது யுகத்துக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டு. இக்காலக் கட்டத்தில் வர்ணாஸ்ரமத்தின் விளைவாக சாதி வேறுபாடுகள் பல்கிப் பெருகிவிட்டன

‘பிராக்ருதம்’ என்றால் ‘இயல்பான’, ‘உலகியல்’ என்று அர்த்தம் அதாவது பேச்சு மொழிகள்… ஆகவே ஏட்டு மொழியான சம்ஸ்கிருதம் ‘இயல்பான’தன்று. உலகியல் வழக்கில்லை. தொல்காப்பியமும் மொழியை, ‘உலகியல் வழக்கு’, ‘நாடக வழக்கு’, ‘புலனெறி வழக்கு’ (இலக்கிய வழக்கு) என்று பாகுபடுத்திக் காண்கின்றது. இலக்கணத்திலேயே இவ்வாறு மொழியைப் பாகுபடுத்திச் சமூக நடைமுறையில் அனைத்துக்கும் இடம் வகுத்த காரணத்தினால்தான், தமிழ், செவ்வியல் மொழியாகவும் உலகியல் பேச்சு மொழியாகவும் இருந்து வருகிறது என்று சொல்லலாம். சம்ஸ்கிருதம் போல்வெறும் ஏட்டு மொழியாக வழக்கிறந்து போகவில்லை.

இந்த கஹா சத்தசய் பாடல்களை எழுதியவர் ஹாலா என்பவர் என்று கூறப்படுகிறது. ‘ஹாலம்’ என்றால் ‘விஷம்’ அதாவது முதல் முதலில் இப்பாடல்களைத் தொகுத்தவர் விஷத்தை விழுங்கிய சிவ பெருமான் என்று வைத்துக்கொள்ளலாம். தமிழ் ‘முதல் சங்க’த் தலைவர் சிவபெருமான். ஆதி சிவன் பெற்றெடுத்த மொழிகள் இரண்டு. சமஸ்கிருதம், தமிழ். இரண்டு மொழிகளையும் அவன் அகஸ்தியனுக்குக் கற்றுத் தருகிறான். ‘வடமொழி கடந்து தென் மொழிக்கு எல்லை நேர்ந்தவன் அகத்தியன்.’

இந்தத் தொன்மங்கள்தாம் (புராணங்கள்) நம் சரித்திரம் இவற்றை ஆய்ந்தறிந்து பொருள் தேர்வது.

இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>

indra parthasarathy

 

Amrutha

Related post