விதைகள் அப்படியே இருந்தன – வண்ணதாசன்

 விதைகள் அப்படியே இருந்தன – வண்ணதாசன்

ஓவியம்: ஸ்ருதி ஷர்மா

 

ரண்டாவது தளம் என்று தெரியும். அறை எண் 218 என்று அம்பலவாணன் சொன்னதும் நன்றாக நினைவு இருக்கிறது. லிஃப்ட்டில் இருந்து வலது புறம் திரும்பியிருக்க வேண்டும். இடது புறம் திரும்பிவிட்டேன்.

வேறு ஒன்றுமில்லை, அந்த லிஃப்ட்டில் இருந்த நேரம் என்னைத் தொந்தரவு செய்துவிட்டது. அது நோயாளிகளுக்கானது, பார்வையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிப்பு இருந்தாலும் அதில்தான் வந்தேன். இதற்கு முன்பு ஒரு முறை வந்திருப்பதால், இந்த முறையும் அதில் வருவதற்கான ஒரு அனுமதியை அது தருவதாக எடுத்துக்கொண்டேன். அம்மாவின் கடைசி நான்கு மணி நேரங்களுக்கு முன்பாக இதே மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே ஆம்புலன்ஸிற்குக் கொண்டு செல்கையில் நானும் கூடவே வந்திருந்தேன். இரண்டாவது தங்கச்சி இருந்தாள். அம்மாவுக்கு மிகச் சிறிய பாதங்கள். மிகக் குறைந்த வெதுவெதுப்புடன் அவை ஐ.சி.யூ குளிர்ச்சியில் வெளிறியிருந்தன. அந்தப் பொழுது அப்படியே உறைந்து இன்றைக்கு லிஃப்ட்டில் உருகி ஆவியாகி இருக்க வேண்டும். ஒரு வழவழப்பான உறுதியான உலோகத் தகடால் ஆன பெரிய பெட்டியில் அடைத்துப்போட்டது போல லிஃப்ட்டில் அந்த மூன்று முதல் ஐந்து நிமிடங்களும் இருந்தன. அதற்குள் மருத்துவமனை உபயோகத்திற்கென தரைத் தளத்திற்கும் கீழே இருந்த பாதாளத் தளத்திற்கு இறங்கி மேலே ஏறுகையில் அதற்கும் சற்றுக் கூடுதல் நேரம் ஆகிவிட்டது.

மருத்துவமனை லிஃப்ட்டில் கூடுதல் நேரம் இருப்பது, அதுவும் தனியாக இருப்பது அதிகப்படி வாதை. அவரவர்க்கு இந்த மருத்துவமனையிலோ வேறு எங்கோ இழந்த ஒருவரின் உடல் கிடத்தப்பட்ட சக்கர மேஜையும் இப்போது தன்னுடன் வருவது போல இருக்கும். எனக்கு லிஃப்ட்டின் பக்கவாட்டு உலோகச் சுவர்களில் இருந்து முன் பின் தெரியாத யார் யாரின் உருவங்களோ நிழல்கள் போல இறங்கிவந்து என்னுடன் நிற்பது போலக் கூடத் தோன்றிவிட்டது. ஒரு உரையாடலை என்னுடன் துவங்குவதற்கு முயல்கிறார்கள் என்ற பதற்றம் வேறு. அதில் தான் எனக்கு அந்த இடது வலதுத் தடுமாற்றம் உண்டாகியிருக்க வேண்டும்.

திசை தப்பும் போதே, நமக்கு உள்ளே ஒன்று, “இது உன் திசை அல்ல” என்று சொல்லும். அதற்குள் மேலும் நாலு எட்டு நாம் போயிருப்போம். நான் அப்படிப் போய்விட்டிருக்கையில், ஒரு நான்கு வயதுப் பையன், ஒரு திறந்த மைதானத்தில் ஓடுகிற வேகத்துடன் அந்தத் தாழ்வாரத்தின் கடைசி வரை ஓடித் திரும்பியபடி இருந்தான். கடைசிச் சுவரில் இருக்கும் நீளுயரச் சன்னல்களின் வழியாக விழும் வெயிலின் பிரகாசக் கூசலில் அந்தப் பையனின் உருவம் காணாமல் போய்விட்டது. திரும்பி வரும் வெளிச்சக் குறைவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைச் சேகரித்து மறுபடியும் அவனாகி ஓடி வந்து கொண்டிருந்தான்.

என் மீது மோதினாலும் மோதியிருப்பான். அதற்குள் அவனைத் தடுத்துத் தன்னோடு அமிழ்த்திக்கொண்ட அந்தப் பெண், “எத்தனாம் நம்பர் ரூம்?” என்று கேட்டது. நான் சொன்னதும் “அந்த ஸைடு” என்று கையைக் காட்டியது. ஒரு சிறு அசைவைக் கூட அந்தந்த இடத்தின் துக்கமும் துக்கமின்மையும் தீர்மானிக்கிறது. சற்று உடலிலிருந்து விலகி உயரே நீண்ட அந்தக் கையை நான் 218 அறையை அடைவது வரை என் நடையோடு வைத்திருந்தேன்.

அறைக்கு வெளியே செருப்பைக் கழற்றும் போதே ஆரஞ்சுப் பழ வாசனை அடித்தது. மருத்துவமனையில் உதவிக்கு இருப்பவர்கள் வாசலில் இப்படி யாராவது ஒருவர் வருவதன் நிழலசைவுகளை மிகவும் விரும்புகிறார்கள். தாழ்வாரத்தில் அடுத்த அறைக்குச் செல்பவர்களின் ஆடை உரசல் கூட அவர்களுக்கு ஒரு பத்திரத்தைக் கொடுக்கிறது. இப்போது மேலும் ஆரஞ்சுப் பழ வாசனை அதிகம் தெரிந்தது.

அம்பு ஏற்கனவே, “அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லை, இந்தத் தடவை ரொம்பச் சங்கடப்படுகிறாள்” என்று சொல்லியிருந்தான். அம்புவை விட அவன் சம்சாரம் என்னிடம் சொன்னது முக்கியம். “அத்தை கண்ணு முழிக்காமத் தான் கிடக்காங்க. ட்ரிப் போட்டிருக்கு. சாப்பாடு இறக்கமத்துப் போச்சு. ஜூஸ் குடுத்தா ஒரு நேரம் தொண்டைக் குழியில இறங்குது. இன்னொரு நேரம் இறங்க மாட்டேங்கு. நானும் இப்படி நகண்டுக்கிட்டு இருக்கேன். என்ன செய்கிறதுண்ணு தெரியலை.” இதை ஆள்வார் ஃபோனில்தான் சொன்னாள். ஏழு எட்டு மாத வயிறோடு, நின்றவாக்கில், காயப் போட்ட துணிகளைக் கட்டிலில் போட்டு மடிப்பதாக நினைத்துக் கொண்டேன். கழுத்தைச் சாய்த்துக் காதோடு ஃபோனை வைத்துப் பேசியபடியே அவள் அம்பலவாணனுக்கோ அல்லது நர்சரி ஸ்கூல் ட்ரிப் ஆட்டோவுக்குப் புறப்படுகிற மகனுக்கோ அவசர ஒத்தாசை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

அம்பு திரும்பிப் பார்த்து “வா” என்றான். “வருகிறதுக்கு லேட் ஆகும்ணு நினைச்சேன்” என்றான். “ஆள்வார்கிட்டே பேசினியோ?” என்ற அவனுடைய கேள்வியிலேயே என் பதில் இருந்தது. சின்ன அறைதான். ஒடுக்கமாக ஒரு பெஞ்ச்சும், அதற்குச் சம அளவுடன் ஒரு சின்ன மேஜையும் இருந்தது. அம்பு ஏற்கனவே நறுக்கிய இரண்டு ஆரஞ்சுகளின் பாதி மூடிகள் இருந்தன. மூன்றாவது பழத்தின் மேல் கத்தி இருந்தது. பக்கத்தில் ஆரஞ்சுப் பழம் பிழிகிற அந்த சிவப்பு பிளாஸ்டிக் உபகரணமும் எவர்சில்வர் ஏனமும் வடிகட்டியும் இருந்தன.

“அம்மை எப்படி இருக்கா?” நான் கேட்டேன். “இருக்கா” என்றான். பாதிவரை நறுக்கியிருந்த செருகலில் கத்தி இருக்க, “நீ தான் பார்க்கிற இல்ல” என்று மேற்கொண்டு கத்தியை அழுத்தினான். இரண்டு பகுதிகளாகப் பிளவுண்ட பழங்களை நகர்த்தி ஒரே பக்கத்தில் வைத்தான். ஜூஸ் பிழிகிற அந்த பிளாஸ்டிக் சிவப்பை அங்கே இருந்த சின்ன வாஷ் பேசினில் கழுவிக் கொண்டே என்னிடம், “இதுக்கு என்னடே பேரு தமிழ்ல? ஜூஸ் பிழியிற மெஷினா? ஆரஞ்சு என்கிற மாதிரி, ஊணினா ஒரே ஒரு வார்த்தையில முளைக்கிறது கணக்கா ஒண்ணும் கிடையாதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான். அவனுக்கு அந்த நேரத்தில் அப்படி ஒரு கைத்த சிரிப்பு தேவைப்பட்டிருந்தது. இந்தச் சின்ன அறை, சின்ன பெஞ்ச், சின்ன மேஜைக்குத் தக்க, அவனுடைய சிரிப்பும் சிறியதாகி மிகவும் உலர்ந்திருந்தது.

“கொண்டா, நான் பிழிஞ்சு கொடுக்கேன்” என்று சொல்லியபடியே கட்டிலுக்குப் பக்கம் போய் அம்பலவாணனின் அம்மாவைப் பார்த்தேன். அம்பு என்னைப் பார்த்து, “நீ கூப்பிட்டுப் பாரு. யாருண்ணு தெரியுதா பார்ப்போம்’’ என்று சொன்னான். எனக்கு ஒரு சோதனை போல அப்படி எல்லாம் கூப்பிட்டுப் பார்க்க விருப்பமில்லை. அம்புவிடம் மறுத்தும் சொல்லவில்லை. பக்கத்தில் கிடந்த ஸ்டூலில் உட்கார்ந்து அம்பலவாணனின் அம்மா கையை எடுத்து என் கையில் வைத்துக்கொண்டேன். அது கை போலவே இல்லை. ஒரு கனியின் சதைப்பற்றை எல்லாம் அகற்றிவிட்டு அதன் மெல்லிய தோலை என் கையில் வைத்த உணர்வு.

அம்புவுக்கு நான் கூப்பிடாது இருந்ததில் ஒரு வருத்தம் உண்டாகியிருக்க வேண்டும். எப்படியாவது ஒரு ஏணியை தரைக்கும் அம்மாவுக்கும் இடையில் சார்த்தி வைத்து அதன் படிகளின் வழியாகப் பூப் போல அம்மாவைக் கீழே கூட்டிவந்துவிட என் மூலம் நினைக்கிறான். அதற்கு நான் ஒத்துழைக்காத அழுத்தத்தில் அவன் கட்டில் பக்கம் வந்து, “யம்மா, சேது வந்திருக்கான்” என்று காதுப் பக்கம் சொன்னான். இது போன்ற நேரத்தில் காதை விட நெஞ்சுக்குக் கேட்கும் என்று நினைத்திருக்கலாம்.

என் தோளில் ஒரு கையை வைத்து அம்பலவாணன் அவனுடைய அம்மாவின் நெஞ்சுப் பக்கம் மிகவும் குனிந்து, “சேது வந்திருக்கான். எம் ஃப்ரண்டு சேது” என்றான். அம்புவே அறியாமல் என் பெயரை மிக உரக்கச் சொன்னான். எந்த அதிகப்படி அங்கீகரிப்பும் இல்லாமல் சலைன் சொட்டு அதன் நிதானத்தில் இறங்கியபடி இருந்தது. அந்த மிக மெல்லிய க்ளுகோஸ் தந்துகியில் எந்தப் புள்ளியில் அந்தச் சொட்டு நகர்கிறது என எனக்கு அனுமானிக்க முடியவில்லை. எந்தச் சிறு அசைவையும் காட்டாத அம்மாவின் கை, என் பெயர் அறியாத என் கையில் அப்படியே இருந்தது.

எனக்கு அம்பலவாணனின் அம்மா பெயர் தெரியாது. இப்போது கூட, “உங்க அம்மா பெயர் என்ன?” என்று நான் அம்பலவாணனிடம் கேட்டுக்கொள்ளப் போவதில்லை. “அம்பு, என் பெயர் அவங்களுத் தெரியாட்டா என்ன? அவங்க பேர் எனக்குத் தெரியாட்டா என்ன? இப்பொ நான் அவங்க கையைப் பிடிச்சிருக்கேன். அவங்க கையை யாரோ பிடிச்சிருக்காங்க, அது போதும்” என்றேன்.

அம்பலவாணன் உதட்டை மடித்துக் கடித்தான். தலையை இடமும் வலமும் மறுப்பது போல அசைத்தான். “இங்கே மட்டும் இல்லை. வீட்டிலயும் அப்படித்தான். ஆள்வார் பேச்சுக் கொடுத்தா பேசவே மாட்டா. கல்லு மாதிரி இருப்பா. ஆனா இவளா பேச ஆரம்பிச்சா படித்துறை முங்கி, இந்தக் கரையில இருந்து அந்தக் கரை வரைக்கும் ஆள்வாரைச் சுத்தி வெள்ளம் போகும். தைப் பூச மண்டபம் முங்காத குறைதான்” என்றான்.

எனக்கு இந்த மருத்துவமனை, இந்த 218 அறை எல்லாம்விட்டு விலகி அம்பலவாணன் அவனைச் சதா நெருக்கியடிக்கும் வேறு நான்கு சுவர்களுக்கு மத்திக்குப் போய்விட்டது தெரிந்தது.

“நாம என்ன தட்டு தட்டினாலும் கதவைத் திறக்கமாட்டா. ஆனால். அவ கதவைத் திறந்துக்கிட்டு எட்டிப் பார்க்கும் போது, நான் முன்னால நிக்கணும், ஆள்வார் முன்னால் நிக்கணும், ஏன் எல்கேஜி போகிற அகிலேஷ் கூட, தூங்கிக்கிட்டு இருந்தாலும் பல்லுத் தேய்க்காம கரெக்டா வந்து நிக்கணும்” என்றவன் மறுபடியும் என் தோளில் கை வைத்து, “எத்தனை தடவை யம்மா, யம்மாண்ணு கூப்பிட்டேன். முழிச்சுப் பார்த்திருக்கலாம் இல்ல? லேசா முழி. யாரு வந்திருக்காண்ணு பாரு. மறுபடி சிக்குண்ணு மூடிக்கிட்டுத் தூங்கு. யாரு வேண்டாம்னு சொல்லுதா?” என்று என்னிடம் பாதியும் அவனுடைய அம்மாவிடம் பாதியுமாகப் பேச ஆரம்பித்தான்.

கதவு திறந்துதான் இருந்தது, ஆனாலும் கதவை பால் பாயிண்ட் பேனா மூடியால் தட்டுவது கேட்டது. ஒரு நர்ஸ் வந்தார். உயரத்தில் வயதில் எல்லாம் சிறிய தோற்றம். ஸ்டூலில் இருந்து எழுந்த என்னைப் பார்த்துச் சிரித்தார். கட்டிலுக்குப் பக்கவாட்டில் போய் விழும் சொட்டுகளின் அளவைக் கூட்டிக் குறைத்து நிதானித்தார். அம்பலவாணனைப் பார்த்துச் சிரித்தார். “கடைசியாக எப்போது, எவ்வளவு அளவு திரவ உணவு எடுத்துக்கொண்டார்” என்று கேட்டுவிட்டு ஒரு மருந்துப் பட்டியலைக் கொடுத்தார்.

“கீழே ஃபார்மஸியில போய் வாங்கிட்டு வந்து வச்சிருங்க. டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது விவரம் சொல்வார், சரியா?” என்றார். படுக்கைப் பக்கம் போய் அம்மாவின் இரண்டு தோள்களையும் தொட்டு மிக எளிதாக அவர் உடலைத் தலையணையில் உயர்த்தினார். கட்டிலின் பக்கவாட்டில் இருந்த கைப்பிடியைச் சுழற்றிச் சாய்மான அளவைத் தாழ்த்தினார். நோயாளியை அணுகும் போது ஒருவராகவும் எங்களிடம் பேசும்போது ஒருவராகவும் இரண்டு பேராக இருப்பதற்கு நடுவில் அவருடைய சிரிப்பை வைத்திருக்கிறார்.

அம்பலவாணன் அந்த மருந்துச் சீட்டை ஒரு முறை கூடப் பார்க்கவில்லை. என்னிடமும் தரவில்லை. கையில் வைத்தபடி பர்ஸ், மொபைல் இரண்டையும் எடுத்துக்கொண்டான். இதுவரை இல்லாதிருந்த கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டான்.

“கொஞ்சம் பார்த்துக்கிடுதியா? நான் போயி வாங்கீட்டு வந்திருதேன்.”

“நான் வேணும்னா வாங்கிக்கிட்டு வரட்டுமா?” என்ற என் கேள்வியை முடிப்பதற்கு முன்பே ஓரமாக அதைத் தள்ளினான். “ஒரே கூட்டமா கிடக்கும்” என்றான். “க்ளெய்ம் பில்லுண்ணா கூடக் கொஞ்ச நேரம் காத்துக் கிடக்கணும். ஒவ்வொரு தடவையும் ஆயிரம் கேள்வி கேப்பாங்க. என்னமோ சும்மா ஓசீயில கொடுக்கிற நினைப்பு. மருந்தை எடுத்துக் கொடுக்கிறது இம்புட்டு இம்புட்டுப் போல பொட்டப் பிள்ளைகளா இருக்கும். மருந்தை எடுத்தோம் கொடுத்தோம்னு இல்லாமல் ஒண்ணுக்கு ஒண்ணு தொட்டுப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்கும். எரிச்சலா வரும்.” அம்பலவாணனுக்கு ஏற்கனவே அந்த எரிச்சல் வந்திருந்தது.

“சரி. நான் பார்த்துக்கிடுதேன், போயிட்டு வா” என்று அவன் கையைப் பிடித்துச் சொன்னேன். இவ்வளவு நேரமும் பிடித்திருந்த அம்புவின் அம்மாவுடைய கைகளில் இருந்து என் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கும் ஏதோ ஒன்றை அவனுடைய கைகளில் ஒப்படைத்துவிட்டேன்.

“கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். ஏதாவது வேணும்னா நர்ஸைக் கூப்பிடு. ஹெல்ப் பண்ணுவாங்க.” அம்பு கட்டில் பக்கம் வந்து நின்று அவனுடைய அம்மாவைக் கொஞ்ச நேரம் பார்த்தபடி நின்றான்.

“நல்லா தூங்குதாண்ணு நினைக்கேன்” என்றான். அவன் கொஞ்ச நேரத்திற்கு முன் அவளைப் பற்றி என்னிடம் போட்ட சத்தத்திற்கு என்னையே சாட்சியாக வைத்து அவன் கேட்டுக் கொள்கிற மன்னிப்பு அது. அப்படி அம்புவைப் பார்க்க எனக்குத் தொண்டை அடைத்தது. மறுபடியும், “சரி அம்பு, போய் மருந்து வாங்கீட்டு வா” என்றேன்.

அம்பலவாணன் கதவைச் சாத்திவிட்டுப் போனான். இதுவரைக்கும் இந்த உலகத்தில் ஒரு கதவை யாரும் இவ்வளவு மென்மையாக அடைத்திருக்க முடியாது. இப்படி எல்லாம் அடைக்கவும் திறக்கவுமாக யார் கதவைக் கண்டு பிடித்தார்கள். முதலில் எல்லாப் பக்கங்களிலும் திறந்து தானே இருந்திருக்கும். எனக்கு என்னவெல்லாமோ யோசனை வர ஆரம்பித்துவிட்டது. இந்த அறையில் என்னை வைத்துக் கதவை அடைத்துவிட்டு அம்பலவாணன் போய்விட்டான். அவனுடைய அம்மா கூட இங்கே இல்லை. அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். நான் மட்டும்தான் தனியாக இந்த அறையில் கிடக்கப் போகிறேன். இனிமேல் இந்தக் கதவை யாரும் திறக்கவே மாட்டார்கள். இப்படி இப்படியாக.

 

ரு குழல் விளக்குதான் இருக்கிறது. அது ஏற்கனவே எரிந்துகொண்டு இருக்கிறது. ஃபேன் ஓடுகிறது. எனக்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சமும் இன்னும் கொஞ்சம் காற்றும் வேண்டும்.

அம்பலவாணனின் அம்மாவைப் பார்க்கிறேன். மூச்சு ஏறி இறங்குகிறது. தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால். என்னைச் சுற்றியிருக்கும் வெளிச்சத்தை எல்லாம், காற்றை எல்லாம் அவர் உறிஞ்சி அவருக்குள் இழுத்துக்கொள்கிறார். அப்படித்தானா? அவர் கட்டிலை ஒரு பிரகாசமான பேழையில் எப்போது வைத்தார்கள்? கலைகிற சிகையை அவர் அவ்வப்போது ஒதுக்கிவிட்டுக் கொள்கிறாரா என்ன?

முந்திய நொடியில் ஒரு கொத்து மண் புழு துளைத்துக் கிடக்கும் ஈர மண் போல ஒரு வாடை. அடுத்த நொடியில் ஒரு சின்னஞ்சிறு நீல சீசாவில் இருந்து அத்தர் சிந்தியது போல் ஒரு சுகந்தம். இரண்டுமே கட்டிலில் படுத்திருக்கும் அம்பலவாணனின் அம்மாவிடமிருந்து தான் வருகிறதா? அது என்ன மண்புழு? அது என்ன அத்தர்? எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் அது ஒரே ஒரு வாழ்வுதானே. அதற்கு ஒரே ஒரு வாசனைதானே இருக்கமுடியும்?

நான் அம்புவின் அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். தலையை வருடலாமா? முன்பு போலக் கையை எடுத்து வைத்துக் கொள்ளலாமா? இரண்டையும் செய்யவில்லை. நான் வெறுமனே அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். உலகத்திலே ரொம்ப அருமையானது இப்படி மருத்துவமனைப் படுக்கையின் தலைமாட்டில் நின்றுகொண்டு அவரின் மேல் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரியையும் வாசித்துக் கொண்டிருப்பது. வாசிக்க வாசிக்க முன் பக்கங்கள் எல்லாம் எழுத்தே இல்லாமல் வெற்றுக் காகிதமாகிக் கொண்டே போகும். அடுத்தடுத்துக் கடைசிப் பக்கம் வரை வாசிக்க எல்லாப் பக்கங்களின் எல்லா வரிகளும் வெற்றுக் காகிதம் ஆகிவிடும். அந்த வெற்றுக் காகிதம் மட்டுமே உள்ள புத்தகத்தை அவர் தலைமாட்டில் வைத்துவிட வேண்டியதுதான்.

நான் அம்பலவாணனின் அம்மாவின் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு புருவ நெளிவு, இமை பிரித்தல், தோல் உரிந்து கொண்டிருக்கும் உதட்டின் மேல் ஒரு நொடி நாக்கு நுனியின் ஈரத் தடவல் ஏதாவது நிகழவேண்டும். அம்பலவாணன் வருவதற்குள் நிகழும் என நம்பினேன். ஒரு சிறு முனகலுக்காக நான் காத்திருந்தேன். இந்த உலகின் மற்றெல்லா ஓசைகளையும் முற்றாக அகற்றிவிட்டு அந்தச் சருகு உதிரும் சத்தம் மட்டும் எனக்குக் கேட்கும். அது சருகு உதிரும் சத்தமா? உதிர்ந்த சருகு நொறுங்கும் சத்தமா?

எனக்கு அம்பலவாணன் நறுக்கி வைத்திருந்த ஆரஞ்சுப் பழங்களின் பாதிப் பாதி மூடிகள் நினைவுக்கு வந்தன. நான் எங்கிருந்தாலும் எதைச் செய்துகொண்டு இருந்தாலும் அம்புவின் அம்மாவின் முனகல் கேட்காதா போகும்? பறவைகள் கிளைமாறும் ஓசை பறவைகளை விடவும் எடையற்றது. ஆனால். கேட்கும்தானே.

அம்பலவாணன் வெட்டி வைத்திருந்த மூன்று பழங்கள் தவிர மேலும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பாதியாக்கினேன். பாத்திரங்களை, வடிகட்டியை அந்த சிவப்பு நிற ஜூஸ் பிழியும் பிளாஸ்ட்டிக் குப்பியை எல்லாம் எடுத்துப் பக்கத்தில் வைத்தேன்.

உலகத்தில் ஒன்றைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தால் பார்க்கப் பார்க்க அது முடிவற்றுச் சுருள் அவிழ்த்துக்கொண்டே போகும். இந்தச் சாறு பிழிகிற வட்டத்தில் நடுவே ஒரு மொக்கு. மருத்துவமனையில் இன்னொரு உடல் நலிந்தவருக்காகச் சாறு பிழிகிற ஒவ்வொருவருக்கும் ஒரு செவிலியின் சாயல் வந்துவிடுகிறது. ஆரஞ்சுப் பழ மூடியைக் குப்புறக் கவிழ்த்திப் பிழியப் பிழிய, அந்த நடு மொக்கு ஒரு வினோதம் நிரம்பிய துயரத்தின் மலரை அவிழ்க்கிறது. அந்தக் கூம்பின் திரடு திரடான நெளிவுகள் நெளிந்து நெளிந்து, உச்சிக்கு ஏறி எங்கே காணாமல் போய்விடும் என்று தெரியவில்லை.

சாறு வழிந்து அடித்தட்டுக்குள் வழியத் துவங்கியதும், இதுவரை இதற்கு முன் பார்த்திராதது போல, ஒரு இறுதியின் வழவழப்புடன் புடைத்துத் திரண்ட ஆரஞ்சு விதைகள் நழுவி நான்கு பக்கமும் விழுகின்றன.

இப்போது நான் இருக்கும் உலகத்தில் நானும் அந்த ஆரஞ்சுப் பழ விதைகளும் மாத்திரமே இருக்கிறோம். எல்லா உலகத்தையும் போல, ஆரஞ்சு விதைகளும் நானும் மட்டுமே இருக்கும் உலகமும் தானாகவும் அதுவாகவும் உருவாகிவிட்டது, நான் ஆரஞ்சுத் தோட்டங்களை ஆரஞ்சு மரங்களைப் பார்த்ததில்லை. ஆனால். ஆரஞ்சுப் பூக்களைப் பார்த்திருப்பதாக நம்புகிறேன். அது எப்படி எனில், அது அப்படித்தான். ஆரஞ்சுப் பழங்களின் வாடை ஆரஞ்சுப் பூக்களுக்கும் இருக்கக் கூடாதா என்ன? புளிப்பு வாசனை உடைய ஆரஞ்சுப் பூக்களை நான் இந்த அறையில் உணர ஆரம்பித்தேன்.

எப்போதும் போல, பழங்களை விட, அதன் விதைகளின் மேல், கொட்டைகளின் மேல் எனக்கு உண்டாகும் பரிவும் மரியாதையும் இந்த ஆரஞ்சு விதைகளின் மேலும் உண்டாயிற்று. அவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்துச் சேகரிக்க ஆரம்பித்தேன். எல்லாச் சேகரிப்பிலும் உண்டாகும் நழுவலிலும் தப்பித்தலிலும் விடுபடலிலும் அந்தச் சிவப்புக் கருவியின் பிளாஸ்ட்டிக் வட்டத்தின் வரப்புக்கு உள்ளே விதைகள் போக்குக் காட்டின. நான்கு பழங்கள் தான் எனினும் விதைகளின் எண்ணிக்கை கணிசமானது.

அப்படிக் குவிந்து பள்ளம் கட்டின உள்ளங்கைக்குள் ஒன்றின் மேல் ஒன்றாகப் புரண்டபடி இருக்கும் பிசுபிசுப்பான ஆரஞ்சு விதைகளைப் பார்க்க ஆரம்பித்தது மட்டுமே தெரியும். ஆயுள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கும்படியே தானே எல்லா விதைகளும் இருக்கின்றன.

கட்டிலில் ஏதோ அசைவு உண்டாயிற்று. இங்கிருந்து அங்கே போய் விழுந்து ஒரு விதை கட்டிலில் முளைத்துவிட்டதா?. அம்புவின் அம்மா விழித்து, சற்றுச் சாய்வாக வைக்கப்பட்டிருந்த தலையை அசைக்கிறார். ஏதோ சொல்கிற மாதிரி இருந்தது. இது போன்ற சமயங்களின் சொல் எனக்குப் பிடிபடுவதை விட அம்பலவாணனுக்கு, ஆள்வாருக்கு உடனே பிடிபடும். ஒரு அகராதியைப் பிரித்து முன்னால் வைத்திருப்பது போல கட்டிலில் இருப்பவர்களுடைய குளறலான ஒலிக்கான சொல்லையும் பொருளையும் அவர்கள் இருவரும் உடனே அறிந்து பதில் சொல்லிவிடுவார்கள். அம்பு இன்னும் மருந்து வாங்கிக்கொண்டு வரவில்லை. இவ்வளவு நேரமா அதற்கு?

ஒரு வேளை அம்புவின் அம்மா உண்டாக்கும் இந்த ஒலி, அம்பலவாணனுக்கோ ஆள்வாருக்கோ அல்லாது எனக்கு மட்டுமே பிரத்யேகமான ஒன்றாக இருந்தால்? இத்தனை காலம் புழங்கிய சொற்களில் எஞ்சிய ஒன்றிரண்டு, தொண்டைக் குழியிலிருந்து நாக்கு நுனிக்குள்ள சிறிய தூரத்தைக் கடந்து வரத் தத்தளித்தது. ஏதோ ஒரு தசை அடுக்கில் மோதி அது சொல்லாகத் திரளாமல் சிதறியது.

ஆரஞ்சு விதைகள் இருந்த கையோடு கட்டில் பக்கம் போனேன். சரிந்திருந்த அந்தத் தலை நடுவுக்கு வந்து ஒரு கண் இடுங்கி, ஒரு கண் விரிய என்னைப் பார்த்தது. அம்பு என்றுதானே கூப்பிட்டிருக்கும்? என்னை முன்பு பார்த்திருக்கிறார் என்றாலும் இப்போது எப்படி அடையாளம் தெரியும்? அல்லது அவர் என்னை அடையாளம் கண்டதன் அடையாளத்தை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லையா. அவர் பார்க்க விரும்பும் அம்பலவாணனின் முகத்தை எப்படி என் முகத்தில் ஒட்டவைக்க இயலும்?

“ஆரஞ்சு ஜூஸ் குடிக்கீங்களா?” என்று கேட்கிறேன். என் வலது கையே குவளை போலவும் வாயில் சரித்து அருந்தச் செய்வது போலவும் பெருவிரல் மடக்கி உதட்டில் சாய்க்கிறது. இடது கையில் பொத்தின வாக்கில் ஆரஞ்சு விதைகள்.

என் கேள்விக்குத் தலையை மறுப்பாக அசைக்கிறார்கள். இடது கையில் சலைன் ஏறிக் கொண்டிருக்கிறது. கை நரம்பில் ஊசி செருகி, பிளாஸ்திரி இட்டு குப்பி போல மூடப்பட்டிருக்கிற வலது கையை அவர் சற்றே உயர்த்துகிறார். என்னைப் பார்க்கக் கை நீண்டிருக்கிறது. எனக்கு எதுவும் புரியவில்லை. ஏதோ ஒன்று எனக்கும் அவருக்கும் இடையே உள்ளதைத் தடுத்திருப்பது போல, என் சட்டையைத் தூசி தட்டிக் கொள்கிறேன். “அம்பு மருந்து வாங்கப் போயிருக்கான். வந்திருவான்” என்கிறேன், முக்கால் சைகையால் உரக்க.

கொஞ்சம் பக்கத்தில் போய் நிற்கிறேன். அம்பலவாணன் வந்துவிட்டால் நல்லது. அல்லது நர்ஸிடம் சொல்லி அவனை வரச் சொல்ல வேண்டும். நான் மொபைல் கொண்டுவர மறந்திருந்தேன்.

இப்போது சற்று இடுங்கியிருந்த கண் மேலும் கொஞ்சம் திறந்திருக்கிறது. என் இடது கையைக் காட்டுகிறார்கள்; இடது கையைத்தான் காட்டுகிறார்களா? அந்தக் கையில் ஆரஞ்சு விதைகள் மட்டுமே இருந்தன. சாப்பிடவேண்டும் என்று கேட்கிறதாக நினைத்து, “பிஸ்கட் தரட்டுமா?” என்கிறேன். மீண்டும் தலை அசைப்பு. அவருடைய வலது கை விரல்கள் மடங்கி மடங்கி அவிழ்கிறது. “வா, வா” என்கிறார்களா? “தா, தா” என்கிறார்களா? இன்னும் வலது கை விரல்கள் மடங்கி மடங்கி, விரிந்து விரிந்து.

எனக்கு உத்தரவு கிடைத்தது போல இருக்கிறது, முன் நொடியும் பின் நொடியும் கிடையாத் தன் நொடி அது. அந்த இடத்தில் ஏற்றப்பட்டு, அந்த இடத்தில் சுடர்ந்து, அந்த இடத்தில் ஒளிர்ந்தது. நான் வேறு எதையும் யோசிக்கவில்லை. என் இடது கையில் இருந்த ஆரஞ்சு விதைகளை என் வலது கைக்கு மாற்றினேன். கட்டிலுக்கு வெளியே ஒரு கிளை போல நீண்டிருந்த அவரது வலது கையின் கீழ் என் இடது கையை வைத்து ஏந்தித் தாங்கினேன். ஒரு படவரைக் குழி போல் உட் குவிந்திருந்த உள்ளங்கையில் அந்த விதைகளை வைத்தேன்.

அடுத்த சுற்றுக் காற்று அந்த விதைகளின் மேல் படுவதற்குள் அந்தக் கை அத்தனை விரல்களையும் மெதுவாக மூடிக் கொண்டது. அந்த மூடலில் ஒரு மலர்ச்சி இருந்தது. விடையை அடைந்த பின் விடையிலிருந்து கேள்விக்குத் திரும்புகிற, படிப்படியான விளையாட்டு. நான் அந்த ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டேன். அந்த மூடின கையைப் பார்த்துக்கொண்டு இருப்பதே போதுமானதாக இருந்தது.

 

சி மருந்தும் சலைன் பாட்டிலும் மாத்திரைத் தகடுகளும் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் ட்ரேயுடன் அம்பு உள்ளே வந்தான். “ரொம்ப லேட் ஆயிட்டுது” என்று அவன் நுழையும் போது சத்தம் கேட்டது. நான் கட்டில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து என்னிடம் கேட்டான், “அம்மை முழிச்சு எதாவது கேட்டாளா? பக்கத்தில உக்காந்து இருக்கியே?”

நான் ஒன்றும் சொல்லவில்லை. “மருந்து எல்லாம் வாங்கிட்டியா?” என்று கேட்டேன். அந்தப் பதில் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. கையில் இருந்த ட்ரேயை, “இதோ” என்று உயர்த்திக் காட்டிவிட்டு மேஜையில் வைத்தான்.

வேலை நேரம் மாறிவிட்டது போல. இது வேறு நர்ஸ். வந்து மாத்திரை மருந்தை எல்லாம் சரி பார்த்தார். ஒரு முழு இரவுக்கான சக்தியை அதன் முதல் மணியிலேயே செலவழித்து விடுவதற்கில்லை என்பது போலச் சுருக்கமாகப் பேசினார். முக்கியமாக, சிரிக்கவில்லை. அம்புதான் “டாக்டர் எப்போது ரவுண்ட்ஸ் வருவார்?” என்று கேட்டான். “அவர் தியேட்டரில் ஒரு அவசர சர்ஜரியில் இருக்கிறார். வர மிகத் தாமதம் ஆகும். ஆனால். வருவார்” என்று பதில் வந்தது.

“அப்போ நீ வேணும்னா கிளம்பு சேது. வந்து ரொம்ப நேரம் ஆச்சு” என்றான். முகம் சற்று இறுக்கம் தளர்ந்திருந்தது. கீழே மருந்து வாங்கக் காத்திருந்த நேரத்தில் ஆள்வாரோடு பேசியிருக்கலாம். “சேதுவையும் வச்சுக்கிட்டு அம்மாவைப் பத்தி வேண்டாதது எல்லாம் பேசிட்டேன்” என்று ஆள்வாரிடம் சொன்னதில் அவள் சமாதானம் சொல்லியிருப்பாள். வீட்டுக்கு வெளியிலிருந்து அல்ல, வீட்டுக்கு உள்ளே இருந்து அடித்த காற்று அவன் முகத்தில் பட்டிருக்கிறது.

“அவசரம்னா ஃபோன் பண்ணு. யோசிக்காதே அம்பு” என்று அவன் மேல் புஜத்தை இறுக்கித் தளர்த்தியபடியே கட்டிலைப் பார்த்தேன். அந்தக் கை இன்னும் மூடின வாக்கில் கட்டிலுக்குக் கொஞ்சம் வெளியேதான் இருந்தது. என் பார்வையை அவன் என் சந்தேகமாக எடுத்துக்கொண்டான்.

“நல்லாத் தூங்குதா” என்று அம்பலவாணன் அவனுடைய அம்மாவின் சிகையைக் கோதி விட்டான். விரல்களுக்குள் முடிக்கற்றை வகிர்ந்து நகர இரண்டு மூன்று தடவை அப்படிச் செய்தான். அதன் மூலம் தன்னை அவன் புதுப்பித்துக்கொள்வது தெரிந்தது.

“காலையில வாரேன்” என்று சொல்லிச் செருப்பை வெளியே போட்டுக்கொண்டு நிற்கையில் அவன் அறைவாசலில் கண்ணாடியைக் கழற்றிய முகத்துடன் இருந்தான். “பைக்கில தானே வந்தே, சாவியை எடுத்துக்கிட்டியா?” என்று கேட்கும் போது என் விரலில் வளையமிட்டிருந்த சாவியைக் காட்டிவிட்டுக் கிளம்பினேன்.

காலையில் என் மேல் மோதுவது போல் ஓடிவந்த பையனை நினைத்துக்கொண்டேன். தாழ்வாரத்தில் யாருமே இல்லை. படிகளில் இறங்கிச் செல்லலாம் என்று தோன்றியது. இரண்டாவது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் டானாவில், கையில் ஹோட்டல் சாப்பாட்டு வெள்ளைப் பார்சல் பை தொங்க ஏறி வந்தவர் சிரித்தார். முன் பின் தெரியாதவர்தான். இந்த நேரத்தில் இந்த டானாத் திருப்பத்தில் எனக்கு அந்தச் சிரிப்பைத் தர அவருக்குத் தோன்றியிருக்கிறது. அதை அவர் எனக்காக வைத்திருந்தார்.

பெரியாஸ்பத்திரி பாதை இன்று வேண்டாம் என்று தோன்றியது. மகராஜ நகர் போய் அன்பு நகர் போய், பெருமாள்புரம் போய் அப்புறம் எஸ்ட்டிசி ரோட், என்ஜிஓ காலனி வழியாக 114. ஸ்டேட் பேங்க் புதுக் காலனி போவது சற்றுச் சுற்றுப் பாதைதான். வேண்டும் என்றே சுற்றினால் அது எப்படிச் சுற்று ஆகும்? இப்போது மழை பெய்தால் நன்றாக இருக்கும். மழையில் நனைந்தபடி பைக் ஓட்டிச் சிறிது காலம் ஆயிற்று. அதை எல்லாம் விட இன்று நனையும் விருப்பம் மனதிற்கு இருக்கிறது.

அப்போது ஆஸ்பத்திரிப் படி இறங்கும் போது ஞாபகம் வராத, அந்தப் பையனை தன் இடுப்பின் கீழ் அணைத்தபடி தாழ்வாரத்தில் நின்று, “அந்த ஸைடு” என்று கையை நீட்டிக் காட்டிய பெண்ணின் ஒரு பக்கத் தோற்றம் இந்த பைக் போகிற வேகத்தில் தெரிந்தது. அவருடைய இன்னொரு புறத் தோற்றத்தை எங்காவது காண நேர்ந்தால், அவரை என்னால் அடையாளம் காண முடியுமா? 218 அறைக்குள் நான் இருக்கும் போது சிரித்துப் பேசிய சின்ன உருவ நர்ஸைவிடவும், ஒரு முறை கூடக் கனிவாகப் பார்க்காத இரவு டூட்டி நர்ஸை அப்படியே மனம் சட்டமிட்டு வைத்திருக்கிறதே, எப்படி?

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தட்டிக்கொண்டே போகிறது. அம்பலவாணனுக்கு 23 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. அப்போதெல்லாம், முதல் குழந்தையை உண்டாகியிருக்கும் போது கூட இல்லாத ஒரு அழகான தோற்றத்தில் இப்போது ஆள்வார் தன் சூலி வயிற்றோடு நடமாடுகையில் இருப்பதாக ஏன் எனக்குத் தோன்றுகிறது? சமீபத்தில் அம்புவுடன் பேசியதை விடவும் ஃபோனில் ஆள்வாருடன் தான் அடிக்கடி பேசுகிறேனோ? ஒன்றுமே இல்லாவிட்டால்கூட, இப்போது பைக்கைத் திருப்பி அம்பு வீட்டிற்குப் போய், “ஹாஸ்பிட்டலில் இருந்துதான் வாரேன். அத்தை நல்லா இருக்காங்க” என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேனா இல்லையா?

அம்மா போன பிறகு, கூடவந்து இருந்து அப்பாவையும் என்னையும் அப்பாவுடன் பிறந்த அத்தைதான் இந்த மூன்று வருடங்களாகப் பார்த்துக் கொள்கிறாள். அப்பா மாதிரி அத்தையும் எவ்வளவு அழகு! எவ்வளவு தீர்க்கம்! அவளிடம் நான் எப்படி நடந்துகொள்கிறேன்? இதுவரைக்கும் அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லை. அப்படி ஏதாவது முடியாமல் போனால், இப்படி மருத்துவமனைக் கட்டிலில் அத்தை கையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேனா? அவளுடைய கைகளில் இப்படி ஆரஞ்சுப் பழ விதைகளை ஒப்படைப்பேனா?

நான் எப்போது என்ஜிஓ ஏ காலனியைத் தாண்டினேன்? எப்போது ஆர்ட்டிஓ ஆஃபீஸ் திருப்பமும் பாலாஜி உணவகமும் பின்னால் போயிற்று? சி.எஸ் வீட்டில் விளக்கெரிகிறதே. ஏதாவது தியானப் பயிற்சியா? யாரது எங்கள் வீட்டு இரும்பு கேட் முன்னால்? வழக்கத்தை விட, அதிக முன்வாசல் விளக்குகளை எரியவிட்டபடி அப்பாவா வாசலில் நிற்கிறார்? சட்டை போட்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு அது வழக்கம் இல்லையே? யாருக்கு என்ன ஆயிற்று? அத்தைக்கா?

“என்னப்பா வாசல்ல வந்து நிக்கீங்க?” பைக்கை வெளியிலேயே சாய்த்து நிறுத்துகிறேன். அப்பா கையில் என்னுடைய மொபைல் இருக்கிறது.

“உனக்காகத்தான் ரொம்ப நேரமா நிண்ணுக்கிட்டே இருக்கேன். போகிற அவசரத்தில இதை வீட்டில வச்சுட்டுப் போயிட்டே. உனக்கு ஃபோன் வந்த வண்ணமா இருக்கு. நீ லாக் பண்ணி வச்சிருக்கே போல. எனக்கு ஒண்ணும் ஓடலை. அத்தை சாமியைக் கும்பிட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கா, என்னமோ, ஏதோண்ணு.”

மொபைலை என்னிடம் கொடுக்கும் போது அப்பாவின் கை நடுங்கியது. என்னையும் இரும்பு கேட்டையும் பிடித்துக் கொண்டார். பின்னால் இருந்து வருகிற வெளிச்சத்தில், சற்று நிலைகுலைந்த உடல் சாய்வுடன் அப்பா அந்த இரும்புக் கதவைப் பிடித்திருக்கிற தோற்றத்தில் ஆழமாகக் கீறல் விழுந்து இருந்தது.

அத்தனையும் அம்பலவாணனின் அழைப்புகள். இருபத்தைந்து நிமிடங்களுக்கு முன்பிருந்தே அடுத்தடுத்து அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறான். நான் கையில் வாங்கி அவனுடைய எண்ணை அழுத்துவதற்கு முன்பு அம்புவின் பெயர் உள்ளே வந்தபடி ஒலித்து மினுங்க ஆரம்பித்தது.

அப்பா முகத்திலிருந்த கேள்வியைப் பார்த்தேன். வெறும் காற்றில் “அம்பு” என்று உச்சரித்தேன். அப்பா நெற்றியில் அகலமாகத் தன் விரல்களைப் பதித்துக்கொண்டார்.

“சொல்லுப்பா” என்றேன்.

“அம்மா போயிட்டா, சேது” அந்தப் பக்கம் அம்பலவாணன் உரக்க அழ ஆரம்பித்திருந்தான். தகவல் போய் ஆள்வார் வந்துவிட்டாள் போல. “அழாதீங்க, சும்மா இருங்க” என்று சொல்வது அவள் குரல்தான்.

எனக்குக் கட்டிலுக்கு வெளியே நீண்டுகொண்டு இருந்த ஒரு கை தெரிந்தது. விரல்கள் எல்லாம் மலர்ந்து விரிந்த நிலையில் அதில் நான் வைத்த ஆரஞ்சு விதைகள் அப்படியே இருந்தன.

“அம்புவோட அம்மா தவறிப் போனாங்க.” நான் சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டேன். அப்பாவின் முகத்தை நேரில் பார்ப்பதற்கான நேரம் அது இல்லை. அம்மாவுக்குப் பிறகு, யார் இறந்து போனதைக் கேள்விப்பட்டாலும் அப்பா முகம் இப்போது வேறு ஒன்று ஆகிவிடுகிறது.

அவர் முகமும் குனிந்துதான் இருந்தது. என் தோளில் கைவைத்துத் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தியபடி அப்பா, திரும்பி வீட்டு நடைப் பக்கம் பார்த்தார். போதுமான வெளிச்சம் போல, போதுமான இருட்டும் அங்கே நடைகளில் மடங்கி மடங்கிக் கிடந்தது.

“என்ன அங்கே இருந்து இங்கே வரைக்கும் ஒரே ஆரஞ்சுப் பழ வாசனையா அடிக்கு” என்று சொல்லியபடியே அத்தை ஒவ்வொரு நடையாக மெதுவாக இறங்கி என்னைப் பார்க்க வந்துகொண்டு இருந்தாள்.

 

வண்ணதாசன் <vannadasan@gmail.com>

vannadasan

Amrutha

Related post