மதுரை சத்யா கவிதைகள்

 மதுரை சத்யா கவிதைகள்

1
வேலையின் நிமித்தமாக
வெளிநாடு வந்தபின்
அலைபேசியின் வழியாகத்தான்
விருந்துகள் பரிமாறப்படுகிறது
உறவுகள் அழைக்கும்
அத்தனை விசேசங்களுக்கும்
வங்கி கணக்கின் மூலமாகத்தான்
என் இருப்பை
சமன்செய்ய முடிகிறது.

2
பலூனை பெரிதாக ஊதுகையில்
காது பொத்திக் கொள்கிற மனிதர்களின்
அனிச்சை செயல் தான்
பெரிய வாக்குறுதிகளோடு வரும்
நேசத்திற்கும்
வேண்டியதாகிருக்கிறது.

3
சினிமாக் கதாநாயகர்கள்
வில்லன்களை
ஒற்றைக்கையால் தூக்கிச்
சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த
மகள் தன்னிடம் இருக்கும்
பொம்மைகளை எல்லாம்
அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்
தூக்குவதற்கு
இரண்டு கைகள் தேவைப்படும்
பொம்மைகளை மட்டும் அவள்
தனக்கான
வில்லனாகப் பார்ப்பதே இல்லை.

4
சிறகுலர்த்த வழியற்ற
மழை நாட்களில்
கடல் தாண்டும் பறவைப்
பற்றிய சிந்தனையின் போது
குடை மறந்துப் போன
பிள்ளைகளின் நினைவு
துயரத்தின் சமன்செய்ய முடியா
இச்சுயநல மனதைக் கொண்ட
என்னை நானே
ஒருபோதும் மன்னிப்பதில்லை.

5
உணவை நீட்டிக் கொடுக்கும்
சிறு கைகளுக்குப் பயந்து
காகம் அருகே வரத் தயங்குகிறது
தன்கையால் ஊட்டிவிட
அடம்பிடித்து அழும்
மகளுக்காக வேண்டி
காகத்தின் பாசை அறிந்திருக்கலாம்
கையறு நிலையில்
நானும் தவிக்கிறேன்.

மதுரை சத்யா <sathyasurrey@gmail.com>

 

Amrutha

Related post