முயங்கொலிக் குறிப்புகள் 1 – கயல்

 முயங்கொலிக் குறிப்புகள் 1 – கயல்

ஓவியம்: நடேஷ்

1

இத்தனை வருடங்களில்
அவள்
அவனுக்காக எதுவும் பெரிதாகச்
செய்ததேயில்லை.

ஒவ்வொரு முறையும்
அவன் ஓய்வதை உணர்கிற
துல்லிய நொடியில்
அவள் உச்சம் எய்துகிற
பாவனை தவிர்த்து.

2

காலை உணவை நாவு சுழற்றி
ருசித்தலுக்கு இடையே
சிறு சுருள் முடியொன்று
உதட்டுக்கும் பல்லுக்கும்
இடையில் சிக்கிட
பதறிய முகத்தைப் பார்த்து
இதழ்கள் குவித்து ஊதியபடியே
கருணையுடன் செல்லக்குட்டி என்று
விரித்துச் சுருக்கிச்
சிமிட்டின கண்கள்.

மற்றொரு முறை
குறும்பாக
யாமத்திலும்!

3

இத்தனை வருடங்களில்
எவ்வளவு முயற்சித்தும்
அம்மா கைருசி வரவே இல்லை
உனக்கு என்கிறான்
எல்லாப் பகல்களிலும்.

கவிகிற இரவின்
காதுகள் கேட்டிருக்கலாம்
உன் எந்தச் சாகசமும்
பரவச லிபியை உடல் முழுக்கப் பேசிய
முன்னாள் காதலன் போல் இல்லையென்கிற
அவளின் கிசுகிசுப்பை.

4

திருவிழா தெரியாதவள்
ஆடிப் பெருக்கை நேரிட்டு அறியாதவள்
எதிர்வீட்டு ராமு
பக்கத்துவீட்டு சத்தீசு எவருடனும்
தெருவில் விளையாட
அனுமதி மறுக்கப்பட்டவள்.

பெண்கள் பள்ளிக் கூடத்திலேயே பயின்றவள்.
எவ்வளவு இறைஞ்சியும்
இன்பச் சுற்றுலா வாய்க்காதவள்.
முதுகலைப் படிப்புள்ள கல்லூரி
டவுனில் என்பதால் இளங்கலையோடு
நிறுத்தப்பட்டவள்.
அவளுக்கென்ன தெரியும் சின்னப் புள்ள என்ற
அடைமொழியே அடையாளமானவள்.

இரண்டு அப்பன்களும்
ஒரு நாளில் பேசி
மாற்றிக்கொண்ட தட்டு
மூடிய அறைக்குள்
போய் முட்டிநின்றது.

அன்னமும் மயிலும் செதுக்கிய
தேக்குக் கட்டிலின்
நடுவே அமர்ந்திருந்தது
இதற்குமுன் பார்த்தேயிராத முகத்துடன்
அவள் மீதவாழ்வு.

அனுமதிக்கப்பட்டவைகளின் பட்டியலில்
அடுத்தநாள் காலை
நீல மசியில் அவள் அழுத்தந் திருத்தமாய்
எழுதிய சொல் கலவி.

சிலநாட்களில் மாற்றினாள்:
வாழ்நாள் முழுக்க.

5

அவள்:
முட்டாளா நீ
மூன்று நாட்கள் என்பது தோராயம்.
துல்லியக் கணக்கு இல்லை
இதைப் புரிந்துகொள்ளவே இரண்டரை வருடங்கள்.
தள்ளிப் போ.

அவன்:
பாய்ச்சலுக்குப் பின் குதிரை
ஓய்ந்து சரியும் போது
அணைத்து நெற்றி முத்தம் கேட்கும்
அறிவிலி நீ

அவள்:
இடதா வலதா
எந்தப் பக்கம் ஒருக்களித்துப்‌ படுக்கிறேன் என்பதை
மார்பின் திண்மைக் குறைவில் அறிபவன்,
முன்னிருந்தால்
நெஞ்சிலும் பின்னகர்த்த முதுகிலும்
தாலி குத்தும் என்று
ஒரு முறையாவது பரிதவித்திருக்கிறாயா?

அவன்:
கட்டிலில் நீ கடைபரப்பும்
அத்தனைக் கொஞ்சலும்
நான் நம்ப நினைக்கிற பொய்.
உறவு மறுத்தலின் உருமறைப்பு என்று
அறியாதவனா நான்.

அவர்கள்:
இத்தனை வருடத் தாம்பத்தியத்தில்
ஓர் இரவும் நாங்கள்
தனியே படுத்ததில்லை.

தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>

kayal

Amrutha

Related post