முயங்கொலிக் குறிப்புகள் 3 | கயல்

ஓவியம்: நடேஷ்
11. இரண்டு துரோகங்களின் சந்திப்பு
நிலங் கண்ட
சூல்மேகத்தின்
அவசரத்துடன்
என்னைத் தழுவிய
நீ இரகசியமாய்
நம் திருமண மோதிரத்தைக்
கட்டிலருகே கழற்றி வைத்தபோது
முதன் முதலில்
பிசிறு தட்டியது.
பிறகோர் நாள்
தேன் பருந்தென இதழ் அருந்துதலுக்கு
இடையே
மெல்ல நகர்ந்து
என் புகைப்படத்தைத் திருப்பிவைத்ததும்
தெளிவானது.
ஆனால்,
உன் துரோகம் உறுதியானது
என் கூந்தலில் முகம் புதைத்த நீ
என்றுமில்லாத் திருநாளாக
இசை வழிகிற
குரலில் அம்மு என்ற இரவில்தான்.
ஒரு நொடி
அதிர்ந்துபோய்விட்டேன்.
உறங்கும் உன்னைப் பார்த்தபடி
சடுதியில் அலைபேசி
எண்களை ஒற்றி
கவனமாய் இருக்க வேண்டியதன்
அவசியத்தைப்
பதறிய குரலில் அவனிடம் கிசுகிசுத்தபின்
தூங்கப்போகிறேன்.
முதுகு காட்டிப் படுத்துத் தூங்கும் நம்மைச் சுமந்தபடி
கலைந்து கிடக்கிறது
இதயவடிவப் படுக்கைவிரிப்பு.
12 தோற்றப் போலிகள்
பாசிக் குளத்தில்
கால் நனைத்து
மீனுக்கு பொரி இறைத்து
அவசரமின்றி நடந்து
பிரகாரங்கள் சுற்றிப் பின்
தரிசிக்கக் கிடைக்கும்
இறையருகே கால் பிடித்தமர்ந்திருக்கிற
சர்வ அலங்காரியைப் போல
என்னையும் எண்ணிக்கொள்வேன்
வீடுதிரும்பும் வழியெங்கும்.
உன் அப்பனுக்கும்
என் அப்பனுக்கும்
பரஸ்பரம் நம்மைப் பிடித்துப்போக
கட்டிலோடு சேர்த்து என்னையும்
கட்டிவைத்த பிறகான எல்லா
இரவுகளிலும்
கேள்வியற்றுத் தாமரைகளுள்
தாவித் துள்ளுகிற தவளைகளை
நினைத்தபடி இறுகக் கண்மூடிக் கிடப்பேன்.
துளிர்த்துத் தளும்பும் கண்ணீரைப்
பரவசத்தின் வெளிப்பாடாகவே
நினைத்துக்கொள்கிற உன்னிடம்
எப்படிக் கோபப்பட?
நீலப்படப் பெண் முக உணர்வுகளை
நீ நிசமென வரித்திருக்கிறாய்
தேவதைக் கதை ராஜகுமாரன்களை
நான் நம்பியதுபோல.
வா,
போலச் செய்வோம்
இன்றிரவும்
இனி
நீ வெறிகொண்டெழும் சில பகல்களிலும்.
13 போதுமா…?
முதற் புடவை தேர்ந்தெடுத்த
அரை மில்லியன் நொடிக்குள்
கேட்பாய்.
அம்மா வீட்டுக்குப் போய் நான்
ஆசைச் சீராடிய அடுத்தநாள்
காலையில் அலைபேசியில்
வினவுவாய்.
தவறிவிழுந்த என் ஒற்றைச் சொல்லால்
உன் உறவினர் முகஞ் சுளிக்க
புருவ உயர்த்தலில் தெரிவிப்பாய்.
நதியாழத்துக் கூழாங்கல்லென
பேழைக்குள் பத்திரப்படுத்திய
உக்கிரமான பதிலுடன்,
பலகாலமாகக் காத்திருக்கிறேன்!
சபிக்கப்பட்ட
அந்தக் கட்டிலில்
சயனிக்குமுன்
நீ
ஒரு முறையாவது
கேட்பாயென.
தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>