நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? – பிரபு திலக்

 நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? – பிரபு திலக்

ணிப்பூரில் நூறு பேருக்கும் மேற்பட்டவர்கள் கொண்ட ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் சாட்சியான வீடியோ வெளியாகி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்தப் பெண்கள் அந்த கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கொடும் தகவலும் வெளியாகியுள்ளது. நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?

 

மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இதுவரை ஓயாத இந்த வன்முறையில் 160 பேர் பலியாகியுள்ளனர்; 60,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்; 5000 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்று மாநில அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பலியும் பாதிப்பும் இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறை தீவிரமான மே 3-க்கு அடுத்த நாளே, குக்கி சமூகத்தைச் சேர்ந்த இந்த பெண்கள் மெய்தேய் இனத்தவர் அதிகமாக வாழும் தௌபல் மாவட்டத்தில் நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இவ்வாறு ஊர்வலமாக அழைத்து வரப்படும் அவலச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், வெளியே வர இத்தனை நாட்கள் ஆகியுள்ளது, எந்தளவு அரசு ஆதரவுடன் இந்த வன்முறைகள் அறங்கேறியுள்ளன என்பதையே வெளிச்சமிட்டு காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை  வன்முறையாளர்களிடம் காவல்துறையினரே ஒப்படைத்து சென்றுள்ளதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் இரண்டு பெண்கள் மட்டுமே காணப்படும் நிலையில், அந்த கும்பல் 50 வயது பெண் ஒருவரையும் ஆடையை களைய வற்புறுத்தியதாக இந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தகவல்களின்படி, ‘மே 3ஆம் தேதி 800 முதல் 1000 பேர் வரை உள்ள கும்பல் நவீன ஆயுதங்களுடன் அவர்கள் கிராமத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளில் கொள்ளையடித்ததுடன் தீ வைத்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தை, சகோதரருடன் அருகேயிருந்த காடுகளை நோக்கி ஓடியிருக்கின்றனர். அப்போது இந்த பெண்களையும் தந்தை மற்றும் சகோதரனையும் காவல்துறையினர் காப்பாற்றினர். பின்னர் இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது காவல் நிலையத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு, கும்பல் அவர்களைத் தடுத்திருக்கிறது. தொடர்ந்து அந்த கும்பல் இவர்களை காவல்துறையினரிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மூன்று பெண்களும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நடக்க வற்புறுத்தப்பட்டனர். ஒரு இளம் பெண் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் 19 வயது சகோதரர் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் கொல்லப்பட்டார்.’

ஆனால், இந்த முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக, காவல்துறையினரே தங்களை வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்து சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், வீடியோவில் பதிவாகியுள்ள சம்பவம் காவல்நிலையத்தில் இருந்து 2 கிமீ தூரத்திலேயே நடந்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை, 14 நாட்களுக்கு பின்னர் மே 18ஆம் தேதி தான் காங்போக்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீடியோ வெளியாகி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னர்தான், 77 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பி நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கிய பின்னர், அந்த கும்பலில் ஐந்து பேரை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் 28 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த வீரரின் மனைவி என்பதும், ராணுவ வீரர்களை முன்னிறுத்தி தேசபக்தியைப் பற்றிப் பேசுபவர்கள் தான் இந்த கொடூரத்தை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ந்தியாவின் வடகிழக்கில் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த அழகான மாநிலம் மணிப்பூர். நான்கு பக்கம் மலை, நடுவே ஒரு தட்டு போல் பள்ளத்தாக்கு. மிக சின்ன மாநிலம். தனி மாநிலமாக 21.1.1972இல் உதயமானது. மொத்த மக்கள் தொகையே 28 லட்சம்தான். இதில் பெரும்பான்மையினர் மெய்தேய் மற்றும் பழங்குடியினரான குக்கி, நாகா ஆகிய மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள். குக்கி, நாகா தவிர 33 பழங்குடி சமூகங்களும் மணிப்பூரில் வசிக்கின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்குப்படி மணிப்பூரில் இந்துக்கள் 41.39%, கிறித்துவர் 41.29% இசுலாமியர் 8.40%, சீக்கியர் 0.05% வசிக்கிறார்கள். மணிப்பூரின் தலைநகரான இம்பாலை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் மெய்தேய் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 53%. இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்துகள்.

குக்கி, நாகா பழங்குடி மக்களைக் காட்டிலும் வளமாக உள்ள மெய்தேய் இன மக்களே மணிப்பூர் மாநில ஆட்சி அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவோராக உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 60, இதில் மெய்தேய் இனத்தைச் சார்ந்தவர்கள் 40 பேர். இதுவரையான 12 முதல்வர்களில் 10 பேர் மெய்தேய் இனத்தவர்கள்தான். 1992 மண்டல் பரிந்துரைக்கு வந்த பிறகு இவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தின் மலைப் பகுதிகளில் குக்கி, நாகா உட்பட 35 வகையான மலைவாழ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையினர் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்கள் தொகையில் இவர்கள் 40.88%. இவர்களில் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள். குக்கி, நாகா உள்ளிட்ட பிற பழங்குடியின மக்கள் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். மலைவாழ் பழங்குடியினருக்கான (ST) பிரிவில் இவர்களுக்கு 31% இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்றது.

மணிப்பூரில் 90% மலை, 10% பள்ளத்தாக்கு பகுதிகள்.  மெய்தேய்கள் மக்கள்தொகையில் அதிகமாக இருந்தாலும் 10% பள்ளதாக்கு நிலப்பரப்பில்தான் வாழ்கின்றனர். மீதமுள்ள 90% மலைப் பகுதிகளில் நாகாக்கள், குக்கிகள் மற்றும் பிற பழங்குடியினர் வசிக்கின்றனர். மணிப்பூரில் உள்ள 16 மாவட்டங்களில் ஐந்துதான் பள்ளத்தாக்கில் இருக்கிறது, 11 மாவட்டங்கள் மலைப்பகுதிகளில் இருக்கின்றன.

மணிப்பூரில் பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மெய்தேய் சமூகத்து மக்கள் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க இயலாது. அதற்கு அவர்கள் உள்ளூர் மக்கள் அனுமதி பெற வேண்டும். எனவே, மெய்தேய் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை தங்களை பழங்குடியினரின் பட்டியலினத்தில் சேர்க்க வேண்டுமென்பது.

ஆனால், அவர்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது மலைவாழ் பழங்குடி சமூகத்தினரின் கோரிக்கை. மெய்தேயர்களும் பழங்குடி அந்தஸ்தைப் பெற்றால், தங்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும்; மேலும், மலைகளில் கூட மெய்தேய்கள் நிலம் வாங்கத் தொடங்குவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தாங்கள் மேலும் ஓரங்கட்டப்படுவோம் என்று பழங்குடியினர் நினைக்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்பான சிறு சிறு சச்சரவுகளுடன் இரு சமூகத்தினரும் வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும், மணிப்பூரில் இதற்கு முன் இதுபோல் வன்முறைகள் நடந்ததற்கான எந்த வித வரலாறும் இல்லை. மலையடிவார கிராமங்களில் இருந்து மெய்தேய் இன மக்கள் மலைப்பகுதிக்குச் செல்வதும் மலைப்பகுதிகளில் இருந்து குக்கி இன மக்கள் சமவெளிகளுக்குச் செல்வதும் தங்குதடையின்றி இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்துள்ளன. உள்ளூரில் செயல்படும் சிறு சேமிப்புத் திட்டங்களில் இருதரப்பினரும் பல நேரங்களில் ஒன்றாக இணைந்து முதலீடு செய்துள்ளார்கள்.

அப்படியானால் எங்கே பிரச்சினை தொடங்கியது? எப்படி எதிரிகளானார்கள்? ஒரு அழகான பகுதி எரிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள், குப்பைகளால் சூழப்பட்ட பகுதியாக எங்ஙனம் மாறியது?

நாடு முழுவதும் மக்களை இனரீதியாகவும் மதரீதியாகவும் பிரித்து மோதவிட்டு அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற விரும்பும் ஒரு தரப்பினரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மணிப்பூர் மக்களும் பலியாகி இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சாதிய வன்முறையில் வழிபாட்டுத் தலங்களும் இலக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜுன் மாதம் முதல் வாரத்தில் வெளியான தகவல்களின்படி மட்டும் 250 கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

 

மாநில அரசோ மத்திய அரசோ வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியான நடவடிக்கை எடுக்காததே மூன்று மாதங்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதற்கு காரணம் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்க முடியாது. பிரதமர் தனது மெளனத்தைக் கலைக்க, நாட்டின் கவனம் மணிப்பூர் நோக்கி திரும்ப இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாக வேண்டியதிருந்திருக்கிறது. அதுவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்” என்று உறுதியாக தெரிவித்த பின்னரே நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

நாடு எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற அச்சத்தை மணிப்பூர் ஏற்படுத்தியுள்ளது. காற்றை விதைத்தால் சூறாவளியைத்தான் அறுவடை செய்ய வேண்டி வரும் என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. மத வெறுப்பை விதைத்தால் மோசமான விளைவுகள்தான் ஏற்படும் என்பதற்கும் அதில் பலியாவது அப்பாவி மக்கள்தாம் என்பதற்கும் மணிப்பூர் புதிய சான்று.

மணிப்பூரில் பழங்குடியினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரான மெய்தேய்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை மேலும் வளர்க்கப்படாமல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இரு பிரிவினர் இடையே இனக்கமான சூழ்நிலை உருவாக்கப்பட்ட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரும் அமைதியாக வாழமுடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மற்ற மாநிலத்தவர்களுக்கும் மணிப்பூர் ஒரு பாடம்.

Prabhu Thilak

Amrutha

Related post