நதியிலிருந்து கடலுக்கு: இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் | ரதன்

 நதியிலிருந்து கடலுக்கு: இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் | ரதன்

உலகெங்கும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதல், குறிப்பாக காசா வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பாலஸ்தீன ஆதரவை அதிகரித்துள்ளது. மேற்கு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தொடர்ச்சியாக பாலஸ்தீன ஆதரவுக் குரலெழுப்பி வருகின்றனர். Harvard/Harris கருத்துக் கணிப்பின் பிரகாரம் 51 வீதமான அமெரிக்க மாணவர்கள் (18-24 வயதுக்குட்பட்டவர்கள்) பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகெங்கும் பெரும்பாலான பல்கலைக் கழக மாணவர்கள் வார இறுதி நாட்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்குபற்றி வருகின்றனர்.

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் முன்வைக்கப்படும் கோசங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ‘from the river to the sea’ (நதியிலிருந்து கடலுக்கு). நதி என்பது ஜோர்டான் நதியையும் கடல் என்பது மத்திய தரைக் கடலையும் குறிக்கும்.

மேற்கு கரையின் ஒரு எல்லை ஜோர்டான் நதி. காசா மத்திய தரைக் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோசமானது இஸ்ரேலின் இருப்பை கேள்விக்குறியாக்கின்றது. இஸ்ரேலின் பிரதமர் பென்ஞ்சமின் நெற்றியான்குவின் கட்சியான Likud இதே சுலோகத்தை இஸ்ரேல் சார்பாக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

1977 காலப் பகுதியில் பாலஸ்தீன ஆயுத இயக்கங்கள் தீவிரமாக இயங்கி வந்தன. அவர்கள் இரண்டு மாநிலங்கள் (State) தீர்மானத்தை எதிர்த்தார்கள். நெற்றியான்குவின் கட்சி, ‘நதியிலிருந்து கடலுக்கு பாலஸ்தீனத்தை அமைக்க பாலஸ்தீன ஆயுத அமைப்புக்கள் விரும்புகின்றன’ என பிரச்சாரம் செய்தது. உண்மையில் நெற்றியான்குவின் கட்சி ஒரு அகண்ட இஸ்ரேல் அமைப்பதையே விரும்புகின்றது. அகண்ட இஸ்ரேலுக்குள் ஜோர்டான், ஈரான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளும் அடங்கும்.

பிரித்தானிய தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டி மெக்டொனால்ட் (Andy McDonald), ‘between the river and the sea’ (நதிக்கும் கடலுக்கும் இடையில்) என்ற சுலோகத்தை முன்வைத்து பேசியமைக்காக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ‘We will not rest until we have justice. Until all people, Israelis and Palestinians, between the river and the sea, can live in peaceful liberty’ (எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம். நதிக்கும் கடலுக்கும் இடையே உள்ள இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அனைவரும் நிம்மதியாக சுதந்திரமாக வாழும் வரை, ‘எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்) என்பதுவே அவர் முன்வைத்த பேச்சு.

CNNஇல் அரசியல் ஆய்வாளராகவுள்ள Marc Lamont Hill, சி.என்.என்னிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரும் மேற்கூறப்பட்ட சுலோகத்தை முன்வைத்து கருத்து தெரிவித்தமையே காரணம் என சி.என்.என். நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரெம்பில் பல்கலைக் கழக பேராசிரியரான இவர், ‘இக் கோசம் இஸ்ரேலிய மக்களுக்கு எதிரானதல்ல. இஸ்ரேலிய – பாலஸ்தீன சமாதானத்தையே வலியுறுத்துகின்றது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். யூத ஊடகங்களும் அரசியல்வாதிகளும், ‘இக் கோசம் இஸ்ரேலின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்றது. இஸ்ரேலை வெளியேற்றும் குரல். அங்கிருந்து வெளியேற்றப்பட்டால் எங்கு யூதர்கள் செல்வார்கள்’ என கேள்வியெழுப்புகின்றன.

1967 போரின் பின்னர் இஸ்ரேலிய ஊடக விளம்பரங்கள், இஸ்ரேலின் இருப்பை நிலை நாட்ட ‘பாலஸ்தீனர்கள் யூதர்களை கடலுக்குள் எறிய விரும்புகின்றார்கள்” என விளம்பரப்படுத்தின. ஆனால், மேற்கு கரை அரசாங்கமோ ஹமாசின் அரசியல் தலைவர்களோ இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை.

1967 போரின் போது எகிப்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காசாவையும் ஜோர்டானின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மேற்கு கரைப் பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது. இவற்றை விட சிரியாவின் Golan Heights மற்றும் எகிப்தின் Sinai Peninsula ஆகிய பகுதிகளையும் கைப்பற்றியது. இன்று ஜோர்டானில் சுமார் 3 மில்லியன் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜோர்டானிய பிரசாவுரிமை பெற்றவர்களையும் ஜோர்டானிய அரசு அகதியாகவே கருதுகின்றது.

israel, palestine, hamas, war

2015 அக்டோபர் 21ஆம் திகதி நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை, இஸ்ரேலிய பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. “பாலஸ்தீனர்கள் ஹோலோகாஸ்ட் (Holocaust) ஈர்க்கப்பட்டுள்ளார்கள். ஹிட்லருக்கு பாலஸ்தீனர்களே ஆலோசனை வழங்கியுள்ளார்கள்” என பேசியதாக அச் செய்தி தெரிவிக்கின்றது. (JERUSALEM — Israeli historians and opposition politicians on Wednesday joined Palestinians in denouncing Prime Minister Benjamin Netanyahu of Israel for saying it was a Palestinian, the grand mufti of Jerusalem, who gave Hitler the idea of annihilating European Jews during World War II. (Oct. 21, 2015))

பாலஸ்தீன ஆதரவு ஊர்வலத்தில், மிச்சிக்கன் மாநில அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ‘நதியிலிருந்து கடலுக்கு’ என்ற சுலோகத்தை தாங்கிச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இவர் அமெரிக்க காங்கிரஸில் தணிக்கைக்கு உள்ளாக்கபட்டுள்ளார். இவர் பாலஸ்தீன அமெரிக்கர். இவர் முன்னதாக இஸ்ரேலின் இனவெறி மனிதத்தை அழிக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.

செக் குடியரசு சுலோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சுலோகங்களை தடுக்க சட்டமியற்றவும் உள்ளது.

‘நதியிலிருந்து கடலுக்கு’ சுலோகத்தை விட வேறு பல சுலோகங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில… Silence is Violence, I stand with Palestine, Enough is Enough – Resistance is the only answer, Stand with Palestine – End the occupation now, Save Gaza-Free Palestine.

தொடர்ச்சியான போராட்டங்கள் இஸ்ரேல் மீதான மேற்கின் ஆதரவுக் குரலை அசைத்த போதும், இங்கிலாந்தில் புகையிரத நிலையங்களில் பாலஸ்தீன கொடிகளை கட்டுவது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. தற்சமயம் உடனடித் தேவை போரை நிறுத்தி, காசா மக்களை காப்பற்றுவதாகும். அதற்கு இப் போராட்டங்கள், ஊர்வலங்கள் வழிவகுத்தால் அதுவே இப் போராட்டங்களின் வெற்றியாகும். ‘பாலஸ்தீன விடுதலை’ போன்ற சுலோகங்கள் அரசியல்மயப்பட்டவை. அரபாத் தலையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் 1993இல் ‘இரண்டு மாநிலங்கள்’ தீர்வை ஏற்றுக்கொண்டு அங்கு இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள்ளான பாலஸ்தீன அரசு இயங்குகின்றது. இன்று பல உலக நாடுகளும் அதுவே தீர்வு எனத் தெரிவிக்கின்றனர்.

‘ஃபிரி பாலஸ்தீன்’ என்ற கோசமானது மேற்கு கரையிலிருந்தும் காசாவிலிருந்தும் இஸ்ரேல் இராணுவத்தை வெளியேற்று என்பதேயாகும். மற்றையது குடியேற்றத் திட்டங்களை நிறுத்து என்பதாகும். ஆனால், இதனை இஸ்ரேலிய ஊடகங்கள் தங்கள் இருப்புக்கு எதிரானதாக பிரச்சாரம் செய்கின்றன.

கடந்த வாரம் Stuart Seldowitz (முன்னால் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் அதிகாரி) நியு யோர்க் நகர வீதியோர முஸ்லீம் வணிகரின் கடைக்கு முன்னால் நின்று, “கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் எண்ணிக்கை காணாது” (the death of 4,000 Palestinian children in Gaza ‘wasn’t enough) என பாலஸ்தீனத்துக்கு எதிராக கருத்துக் கூறியமைக்காக கைது செய்யப்பட்டார்.

இவர் ஒரு விதிவிலக்கு. ஆனால், வட-அமெரிக்காவில் இஸ்ரேல் ஆதரவுக் குரல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மிக மிகக் குறைவு. பெரும்பாலான ஊடகங்கள் யூத செல்வந்தர்கள் கைவசமே உள்ளன. உலகில் அதிகளவு யூதர்கள் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனர் (51 வீதம்) இஸ்ரேலில் 30 வீதமான யூதர்களே வாழ்கின்றனர்.

பாலஸ்தீன ஆதரவுக் குரலெழுப்பிய பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஹாலிவுட் நடிகைகள் பல கோடிகள் சம்பளத்தை இழந்துள்ளனர். ஆச்சரியம் இவர்கள் இருவரும், ‘பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரலெழுப்பியமை தங்களுக்கு மகிழ்ச்சியாகவுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட காசாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவித்துள்ளனர்.

Scream 7 படத்திலிருந்து Melissa Barrera நீக்கப்பட்டுள்ளார் இவர் மெகசிக்கோவைச் சேர்ந்தவர். ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். 77 வயதான அமெரிக்க நடிகையான Susan Sarandon நியுயோர்க்கில் தெரிவித்த பாலஸ்தீன ஆதரவுக் கருத்துக்களுக்காக Dead Man Walking படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காரணம், ஹாலிவுட்டின் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் யூதர்கள்.

ஓன்ராரியோ பாராளுமன்ற ஹமில்ரன் மத்திய தொகுதி உறுப்பினர் Sarah Jama தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் கூறியிருந்தார். இவர் தனது கருத்தை தனது சமூக வலைத் தளத்திலிருந்து நீக்கவில்லை என்ற சர்ச்சையும் எழுப்பப்பட்டது. அவர் தனது பதிவில் apartheid (நிறவெறி) என்ற சொல்லைப் பாவித்தமையும் இவருக்கு எதிரான விமர்சனத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

காசா மக்கள் ஆதரவு போராட்டங்கள் தொடர்கின்றன. இவை ஒரு நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்க வேண்டும். அதே சமயம் ஹமாஸ் தாக்குதல்கள் மேற்கொள்ளும் பொழுது தனது மக்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.

இரண்டு மாத காலப் போரில் இது வரை 14,532 (60 நாட்களுள்) பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரேன் யுத்தத்தில் கடந்த 645 நாட்களுள் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9614. வெவ்வேறு அறிக்கைகள் காசாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 40-50 வீதம் எனக் கூறுகின்றன. உக்ரேன் போரில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 560 அதாவது 5.82 வீதமாகும். அக்டோபர் 28 ‘The Economist’ சஞ்சிகை காசாவில் இதுவரை 23,947 கட்டிடங்கள் குண்டு வீச்சால் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கின்றது. இது காசாவில் உள்ள கட்டிடங்களின் 9.2 வீதமாகும். இந்த கட்டிடங்களில் 225,270 காசா பிரசைகள் வசித்து வந்தனர்.

2004இல் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி Giora Eiland காசாவை huge concentration camp (பெரிய வதை முகாம்) எனக் குறிப்பிட்டுள்ளார். 2014இல் ஐ.நா. காசாவில் வாழும் மக்களைப் பற்றி, ‘people are literally sleeping amongst the rubble; children have died of hypothermia” (மக்கள் உண்மையில் இடிபாடுகளுக்கு மத்தியில் தூங்குகிறார்கள்; குழந்தைகள் தாழ்வெப்பநிலையால் இறந்துவிட்டனர்) என்று குறிப்பிட்டது

உலகில் நடைபெறும் போராட்டங்கள் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர தீர்வை வழங்குமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில், அமெரிக்கா விரும்பும் தீர்மானமே இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அது பாலஸ்தீன மக்களுக்கு ஒரு பொழுதும் சார்பாக இருக்கமாட்டாது. அவர்கள் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ முடியதவாறே இருக்கும்.

ரதன்” <rathan100@gmail.com>

Rathan

Amrutha

Related post