கல்பரா | முதுமையை திரையிடல் | நோயல் நடேசன்

 கல்பரா | முதுமையை திரையிடல் | நோயல் நடேசன்

ப்பொழுது எனக்கு அறுபத்தெட்டு வயது. ஆனாலும் எனது முதுமை எப்படி இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்ப்பதில்லை. முதுமை என்பதை ‘கல்பரா’ திரைப்படத்தை பார்க்கும்போது நான் புரிந்துகொண்டேன். திரையில் படம் ஓடும்போது மன ஓடையில் நான் எனக்கான திரைக்கதையை மனத்திரையில் எழுதியபடியிருந்தேன்.

பன்மொழிப் படங்களைப் பார்க்கும் எனக்கு இப்படியான அனுபவம் இதுவரை எந்த படத்திலும் கிடைக்கவில்லை. வழக்கமான திரைப்படம்போல் இதில் பெரிய நடிகர்கள் கிடையாது, விளம்பரம் கிடையாது; பின்னணி இசைக்கலைஞர், பாடகர் ஏன் முக்கியமான இயக்குனரே இல்லாத படம் இது! ஓரிரு ஆங்கில பத்திரிகைகளில் வந்த குறிப்புகளைத் தவிர, பிரபலமாகப் பேசப்படாதது – ஆனால், மெல்பேனில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

முதுமை என்பது இலைகளுக்கு இலையுதிர்காலம் போன்றது. ஆனால், மனிதர்களான நாம் தொடர்ந்தும் வாழ விரும்புகிறோம். அதனால், முதுமை கொடியது என்போர் பலர். உண்மைதான். முதுமையில் உறவுகளின் புறக்கணிப்பு, அதனால் தனிமை, அதன் பின்பு வறுமை என்பன சேர்ந்து கொள்ளும்போது சுமையாகிறது. உடல் மட்டும் கூனவில்லை, உள்ளமும் வளைந்து கூனுகிறது.

சோக்கீரடிஸ், “முதியவர்களிடம் பேசவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலகம் – அவர்களிடமிருந்து இளம் சந்ததியினர் அறிவைப் பெறவேண்டும்” என்கிறார். ஆனால், நிகழ்கால சமூகத்தில் அறிவு கணினியில் புதைந்திருப்பதால் முதியவர்கள் மூலைகளிலோ முதியோர் இல்லங்களிலோ முடக்கப்படுகிறார்கள். மூன்றாம் உலகநாடுகளில் பலர் தெருவில் அலைபவர்களாகவும் இருக்கிறார்கள். முதுமையின் முக்கிய விடயங்களான மன மறதி, உடல் உபாதை, கண் காதுப்புலன்களது குறைபாடுகள் போன்றவை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்போது, அவர்களைக் கவனிப்பதற்கு, நேரம் பொருள் என்பன தேவையென்பதால் அவர்களைப் புறக்கணிப்பது இலகுவாகிறது. பொருட்களோ மனிதர்களோ எனப் பாகுபாடு இல்லாது தேவையற்றதை இலகுவாக எறியும் காலத்தில் வாழ்கிறோம். ஒரு காலத்தில் பெண் பிள்ளை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள், ஆண் பிள்ளைகளால் உதவியில்லை என பேசக் கேட்டுள்ளேன். ஆனால், அது பொய்யானதைப் பல இடங்களில் நானே பார்த்துள்ளேன்.

karparaaஅதே நேரத்தில் முதுமை என்பதும் ஒரு அதிஷ்டமே. முதுமையடையாது நோயாலும் போராலும் மற்றைய காரணங்களாலும் இறந்தவர்களோடு ஒப்பிட்டால், போர் நடந்த இலங்கை போன்ற நாட்டில், இந்த வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்குப் புரியும்.

அரைக் கிளாசில் உள்ள நீரைப் பார்ப்பதுபோல் எதையும் இரண்டு விதமாகப் பார்க்க முடியும் அல்லவா? அதைவிட ஆணும் பெண்ணும் துணையாக இறுதிவரை ஒன்றாக வாழ்ந்து முதுமை அடைவது மேலதிகமாக கிடைக்கும் லாட்டரியே! வாழ்வு என்பது ஒரு முறை நிகழ்வே. கிரிக்கெட்டைப்போல் இரண்டாவது ஆட்டம் ஆட கிடைக்காது எனபதோடு அதை முழுமையாக ஆடக் கிடைப்பது கூட எல்லோருக்கும் கிட்டுவதல்ல என்பதும் உண்மை.

‘கற்பரா’ திரைப்படம் எப்படியிருந்தது என விவரிப்பது கடினம். காரணம், மன ரீதியான உணர்வே – அது ஈடுபடுவருக்கு மட்டும் சொந்தமான உடலுறவின் சுகம்போல், பார்ப்பவருக்கு மட்டும் உரிய அனுபவம்.

என் அனுபவத்தை எப்படி விவரிப்பது?

உங்களுக்கு அருகில் சிரித்துப் பேசியபடி ஒருவர் நடந்து வரும்போது, அவர் வாகன விபத்தாலோ வேறு விதமாகவோ திடீரென நம்மெதிரே மரணமடைந்தாலோ மறைந்துவிட்டாலோ நமக்கு அந்த நிகழ்வு அதிர்வைக் கொடுப்பதுடன் அந்தக் காட்சி பல நாட்களாக மனத்திரையில் நீங்காது தொடரும் நிழலாக இருக்கும். அப்படியாகத் தவிர்க்கமுடியாத முதுமையை எனது கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது இந்தத் திரைப்படம்.

திரைப்படத்தில் அதிகமான வசனங்களோ பெரிதளவு கதைகளோ அற்று காட்சிகளின் தொகுப்பாக வந்து நமது விழித்திரையை சேரும்போது, நாம் நமக்காக ஒரு கதையை நெசவு செய்யும் நெசவாளியாகிறோம். வண்ணங்கள், கோடுகள் புள்ளிகள் எனப் போட்டு இந்த கதையாக்கும் செய்வது பார்வையாளர்களே. இது வழமையான படங்களைப் பார்ப்பவர்களுக்கு, அவர்களது வேலையில்லை. குறைந்த பட்சம் கதாநாயகியாகவோ கதாநாயகனாகவோ எம்மை எண்ணிப் பரவசமடையலாம். முக்கியமாக எம்ஜிஆர், ரஜினிகாந்த் படங்களில் இது நடந்தேறும்.

‘கல்பரா’ படத்தின் ஆரம்பத்தில் ஒரு மூதாட்டியின் முகம் திரையில் வருகிறது. அதன்பின் அந்த மூதாட்டியின் மெதுவான இயக்கங்கள் ஆரம்பமாகின்றன.

தமிழகத்தின் பட்டுக்கோட்டையில் உள்ள விவசாய குடும்பத்தில் முதிய ஆணும் பெண்ணும், அந்த குடும்பத்தில் தங்களது இறுதிக் காலத்தை எப்படிக் கழிக்கிறார்கள் என்பதே இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

குடும்பத்தினர் முதியவர்களைப் புறக்கணிக்கவில்லை. அதேநேரத்தில் முதியவர்கள் அவர்கள் குடும்பத்தினருக்குச் சுமையாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை. வயதான இருவரையும் பிரித்து வைத்து பராமரிக்கிறார்கள். மருமகள் தனது மகன்கள் நாள் முழுவதும் வயதானவரை பார்ப்பதாக முணுமுணுப்பு. அதேபோல் வயதான மூதாட்டி வெளிக்குச் செல்ல கேட்டபோது பேரன் ‘கொஞ்சம் பொறு’ என்று சொல்லி விட்டு கைப்பேசியை நோண்டுவதும், பின் ‘இதிலேயே ஒண்டுக்கிரு’ என்பதும் அவர்களை ஒரு சுமையாக அவன் உணருவதைத் தெரியப்படுத்துகிறது. இங்கு கன்றுக்குப் பால்கொடுக்கும் பசுவும் குட்டிகளோடு விளையாடும் பெண் நாயும், குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய் கோழியும் அடையாளங்கள் – இளம் தலைமுறைக்கு பாதுகாப்பு உணவு அளிக்கப்படும்போது அதில் ஒரு சிறிய பகுதியாவது திருப்பிக் கொடுப்பதில்லை என்பது பல விதமாகக் காட்டப்படுகிறது. மனித இனத்தில் மட்டுமல்ல, மிருகங்கள் பறவைகளிலும் இதுவே உண்மை என்ற தத்துவம் நமக்குத் தெளிவாகிறது.

கிராமத்தில் அந்த மக்கள் மட்டுமல்ல சுற்றியுள்ள மிருகங்களது நடத்தைகள் மிகவும் இயல்பாக இருந்தது. மாடுகளோடு கோழி, நாய், ஆமை எனக் கால் நடைகள் இங்கு வந்து படத்திற்கு உயிர் கொடுக்கின்றன.

விக்கினேஸ், ரோட்டராமில் விருதுபெற்ற ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தின் காமரா இயக்குநர். பட்டுக்கோட்டை பக்கத்தைச் சேர்ந்த இளைஞர். அவரே இந்த படத்தின் காமரா இயக்குநர் – இயக்குனர் – வசனகர்த்தா. அவருடன் சேர்ந்து உதவி இயக்குநராக வேலை செய்தவர் ஹசின் ஆதம் – கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர், வெற்றி மாறனுடன் ஆடுகளத்தில் உதவி இயக்கினாராக இருந்தவர். படம் பார்த்தது மட்டுமல்ல இவர்களோடு மெல்பேனில் சில மணித்தியாலங்கள் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே.

நோயல் நடேசன் <uthayam12@gmail.com>

Noel Nadesan

 

Amrutha

Related post