பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் | பொ. கருணாகரமூர்த்தி

 பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் | பொ. கருணாகரமூர்த்தி

எம்.எம். நெளஷாத்

பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்எம்.எம். நௌஷாத்; பக்கங்கள்: 188, விலை: 900 ரூபா/ 220 ₹; வெளியீடு: கஸல் பதிப்பகம்; தொலைப்பேசி & வாட்ஸ் அப்: +94 77 549 4977; மின்னஞ்சல்: mail@ghazal.press

 

ண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல்களில் எம்.எம். நௌஷாத்தின் ‘பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்’ கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரதியாகும். இலங்கை சாஹித்ய அகெடமியின் 2023ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான விருது இந்நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனராகல மாவட்டத்தில் அமைந்துள்ள மின்சார வசதிகளற்ற சாம்பல் மேடு எனும் குக்கிராமத்தில், உழைத்துக் காப்பாற்ற ஆண் துணையற்ற வறிய குடும்பமொன்றில் பிறந்த பேகம் கதீஜா எனும் பெண்மணியின் சாமானிய ஜீவிதம், வைக்கம் முகமது பஷீரின் மொழியை ஒத்த ஒரு எளிய மொழியில் எம்.எம். நௌஷத்தினால் சொல்லப்படுகின்றது.

அனைத்து நாடுகளிலும் இஸ்லாமியர்களிடத்தில் பொதுவாக வழங்கப்படும் பேகம் எனும் அடைமொழியின் சொற் பிறப்பியலை ஆராய்ந்தால் அது மூலமொழியாகிய அரபியமொழியில் இளவரசி என்றும், துருக்கியிலும் பெர்ஸியிலும் உருதிலும் சுல்தான்களின் / படைத்தளபதிகளின் செல்ல மகள்களையும் விளிப்பதாகத் தெரியவருகிறது.

சமூகத்தால் ஒரு விதவையைப் போலக் கைவிடப்பட்ட ஏழை உம்மும்மாவினால் வளர்க்கப்படும் பேகம் கதீஜாவின் வாழ்க்கையும், அவர் பொருண்மியத்தால் இளமையிலும் திருமணத்தின்பின் பிசினாரித் தனங்கொண்ட கணவனோடான வாழ்க்கைக் காலத்திலும் அதன்பின்னான காலத்திலும், பிள்ளைகளின் உதாசீனத்தாலும் வறுமையுடனானதாகவே அமைந்திருப்பது, ஒரு முரண்நகையாகவே முதலில் தோன்றும். ஆனால், கதீஜாவோ வேலைக்குப் போனவிடத்தில் தன்னைத் தடவிப் பார்க்க விழைந்த ஒரு கயவனை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று அறிந்ததும், ‘அல்லாவே அவனைக் காப்பாற்று சாகவிடாதே……’ என்று மன்றாடுபவளாக, என்றும் மனத்தளவில் கபடுபடாத இளவரசியாக, மாசற்ற மகாராணியாக வாழ்வதாகப் படைத்திருக்கிறார் எம்.எம். நௌஷாத்.

அதிகம் பாத்திரங்கள் இல்லை. பேகம் கதீஜா, அவளது உம்மும்மா, கணவன் ஹாதி சுல்தான், அவனது உம்மா, சாம்பல்மேட்டுக்கு ஹாதி சுல்தான் புலம்பெயர்ந்த காலத்திலிருந்து அவனது காலம் முழுவதும் நண்பனாகத் தொடரும் ஸாஹிபு, அவனது தாயாராகவும் அனைவருக்கும் வில்லியாகவும் வரும் சூனியக்காரி, இவர்கள் பிரதியின் தலைமைப் பாத்திரங்கள்.

புதினத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் கதீஜாவின் இளமைக் காலத்தைய பள்ளித்தோழனும் முன்படி மாணவனுமான அர்பாகான்; வகுப்பில் நன்கு படிக்கக்கூடிய அவளது கல்வியில் அக்கறைகொண்டு உதவிகள் செய்வதுடன், அவளின் படிப்பு நிறுத்தப்படும் கட்டம் வந்தபோது, அவளது உம்மும்மாவிடம் சென்று, ‘அம்மா கதீஜாவின் படிப்பை மட்டும் நிறுத்திடாதீங்கம்மா. அவள் கெட்டிக்காரி, ஒரு சமயம் டாக்டராகவும் வரலாம்” என்றெல்லாம் எடுத்துக்கூறி மன்றாடும் மகேஸ்வரி டீச்சர்; முஸ்தாபா வாத்தியார்; தினமும் வந்து வந்து உம்மும்மாவுக்கு உருப்போட்டு அவளை மூளைச்சலவை செய்து கதீஜாவைக் ஹாதி சுல்தானுக்கு வலிந்து திருமணம் செய்துவைத்த பிறிதொரு சாகசக்காரி ஜொகரா; திருமணமான பின்னால் கதீஜா பெற்றுக்கொண்ட அவளது பள்ளிசெல்லும் பிள்ளைகள் ஜமால், பதுரு, லைலா, ஜெமீலா; கதீஜாவின் அழகிய மகள் லைலாவுக்கு வலைபோடும் பள்ளிவாசல் மௌலவி ஹாஜியாரின் மகன் (அவன் பெயரும் பிரதியில் சொல்லப்படுவதில்லை); ஆகியோர் நாவலில் வரும் உப பாத்திரங்களாவார்.

பேகம் கதீஜாவை அடுத்து பிரதியில் அதிக பரப்பில் வாழ்ந்திருக்கும் அடுத்த பாத்திரம் அவளது புருஷன் ஹாதி சுல்தானே.

ஹாதி சுல்தான் ஜாம் பறங்கிவத்தை என்கிற இடத்தில் ஒரு மத்தியதர / கீழ் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தவொரு பிள்ளை. ஜாம் பறங்கிவத்தையின் அமைவிடம் எங்கே எனும் விவரணம் புதினத்தில் இல்லை. அவனுடைய வாப்பாவுக்கு அவரின் தந்தைவழிச் சொத்தாக பெரிய தோட்டம் இருப்பதையிட்டு அவருக்கு விவசாயமோ காலநடை வளர்ப்போ தொழிலாக இருந்திருக்குமென்று வாசகர் ஊகித்துக் கொள்ளலாம்.

இயல்பாகச் சென்றுகொண்டிருந்த அவர்களின் குடும்பம் ஹாதி சுல்தானின் வாப்பா சூதாட்டப் பழக்கத்துக்கு ஆளானதும் தடுமாறத் தொடங்குகிறது. சூதாட்டத்துக்கு அடிமையாகியதுடன் குடிகார / கூடா நட்புக்களையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்ததும் அவர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மை மெல்ல மெல்ல அதலபாதாளம் நோக்கி விரைகிறது. அவர்களது வீட்டிலிருந்த பொருட்களும் வாப்பா படும் கடன்களால் ஒவ்வொன்றாக இல்லாமலாகி ஜாம் பறங்கிவத்தையும் விலைப்பட்டுப் போக அவர்கள் குடும்பம் அவ்விடத்தைவிட்டு வேறொரு இடம்நாடிப் போகிறது. அக்குடும்பத்தில் ஹாதி சுல்தானின் வாப்பா, உம்மா தவிர வேறுயாரெல்லாம் இருந்தார்கள் என்ற விவரங்கள் புதினத்தில் இல்லை. ஹாதி சுல்தானது உம்மா எவ்வளவோ தடுத்தும் இனிமேல் வாழவேறு வழி இல்லை என்கிற கையறுநிலையில் ஜாம் வத்தையிலிருந்து 100 மைல்கள் தொலைவில் மொனராலை – பதுளை வீதியில் 16ஆவது மைலில் கிழக்காகக் கிளைத்து இருமருங்கும் இரப்பர்த் தோட்டங்களும் அடர்காடும் செறிந்திருக்கும் பராமரிப்பின்றிக் குன்றுங்குழியுமாக இருக்கும் ஒடுக்கமான வீதிவழி சென்றால் அடையக்கூடிய ‘சாம்பல்மேடு’ எனும் குக்கிராமத்துக்குச் செல்ல ஹாதி சுல்தான் புறப்படுகிறான். அவனது உம்மா தந்துவிட்ட சிறியதொகை பணத்துடன், ஒரு பழைய பயணவுறையுள் சாரம் ஷேர்ட்டென இருந்த இரண்டொரு உடுப்புகளையும் திணித்துக்கொண்டு, இன்னொரு பக்கேஸ்பெட்டியுள் காடுகளை வெட்டக்கூடிய கத்தி, கோடரியன்ன ஆயுதங்களுடன் ஒரு மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு பேருந்து, மாட்டுவண்டி என்று பலவாகனங்களிலுமாக மாறிமாறிப் பயணித்து மெல்லமெல்ல வந்து ஊரின் எல்லையில் அவனை விடவும் இளையவனான ஸாஹிபுவைச் சந்திக்கின்றான். ஊருக்கு அந்நியனாக இருக்கும் அவனது வருகை ஸாஹிபுவை ஆச்சரியப்படுத்தவும் அவனை அணுகி, `நீங்க யார், எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே போகிறீர்கள்’ என்று கிராமத்தவர்களுக்கேயுரிய வெள்ளந்தியான ஆர்வத்துடன் கேட்டு அறிய முற்படுகிறான்.

நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்த சுல்தானுக்கு ஸாஹிபு தன் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து கொடுத்து உபசரிக்கிறான். அன்றிலிருந்து ஸாஹிபுவின் நட்பு சுல்தானின் ஆயுள்பரியந்தம் தொடர்கிறது. இதே சாம்பல்மேட்டில் வருடந்தோறும் நடக்கும் கார்ணிவலைப் போன்ற ‘கந்தூரி’ எனும் விழாவுக்குச் சின்னவயதில் அவன் தன் வாப்பாவுடன் முன்னரே வந்துமிருக்கிறான். அந்த ஊரும் காடும் அதன் வெள்ளந்தி மனிதர்களும் அவனுக்கு அப்போதே பிடித்துப் போகிறது. ஹாதி சுல்தானுக்கு இயற்கையிலேயே காட்டுமரங்களின் மணமும் மண்ணின் மணமும் மிகவும் பிடித்த விடயங்கள். அத்துடன் வீட்டுவளர்ப்பு மிருகங்களையும் பிள்ளைகளைப்போல நேசித்துக் கவனமாகப் பராமரித்து வளர்க்கும் கலையும் தெரிந்திருந்தது.

அந்த ஊரை அண்டிய காட்டுப் பிரதேசத்தைச் சுற்றிவந்த ஹாதி சுல்தான் தனது கனவான விசாலமான தோட்டம் ஒன்றை அமைப்பதற்கு இசைவான மண்வளமும் பொருத்தமான இடஅமைவுமுள்ள காடொன்றைக் கண்டுபிடித்து அங்கே காட்டின் கம்புகளை வெட்டிநட்டு அதற்கொரு எல்லையையும் உண்டாக்கி, மெல்ல மெல்லப் பண்படுத்தத் தொடங்கினான். நாளடைவில் அதற்குள் வீடொன்றையும் கிணற்றையும் அமைத்துக்கொண்டு தன் பாட்டனின் பிதுரார்ஜிதச் சொத்தான விலைப்பட்டுப் போன ஜாம் பறங்கித் தோட்டத்தின் பெயரையே இத்தோட்டத்துக்கும் வைத்துக்கொண்டு அங்கேயே வாழத் தொடங்குகிறான்.

புதினத்தின் முதனமைப் பாத்திரமான பேகம் கதீஜாவும் இதே சாம்பல்மேட்டைப் பிறப்பிடமாகக்கொண்ட பெண்தான். துடுக்குத்தனம் நிறைந்த வாயாடி. கையில் கிடைத்த மாம்பழமொன்றைத் தன்கூரிய பற்களால் கடித்து இழுத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிறாளெனப் புதினத்தில் அறிமுகமாகிறாள்.

பேகம் பிறப்பின்போதே தன் உம்மாவை இழந்தவள். வாப்பாவும் ஓடிப்போய்விட உம்மும்மாவினால் தனித்து வளர்க்கப்படுகிறாள். உம்மும்மா அயலிலுள்ள வசதியான வீடுகளில் சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைத்துப்புரவாகப் பராமரித்தலாகிய சிற்றூழியங்களைச் செய்துகொண்டு வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள், அவர்களுக்குக் கஷ்டஜீவனம் என்பது சொல்லாமலே புரிந்துகொள்ளமுடியும்.

அத்தனை வறுமையிலும் கதீஜாவை உம்மும்மா கறாராகக் கட்டுப்பாடாகத்தான் வளர்த்தார். முந்தானையைப் போடாமல் வெளியே போவதுபோன்ற உம்மும்மா விரும்பாத சாங்கியங்கள் எதையாவது கதீஜா செய்தாளானால் அவள் வைத்திருக்கும் பிரம்பு இவளின் பிட்டத்தைப் பதம் பார்த்துவிடும். ஆண்களின் அசூசையான பார்வைகளும் நிழல்கள் எதுவும் கதீஜாவின் மீது விழுந்துவிடக் கூடாதென்று அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தாள் உம்மும்மா. இயற்கையை ஆராதிக்கும் விருப்புள்ளவளான கதீஜா பச்சை மரங்களையும் மூங்கில் காட்டையும் கொடிகளையும் கபில மண்ணையும் விரும்பினாள். உம்மும்மா வாங்கிவரும் `செரி’ சிவப்பு நிறக் கொண்டையுடைய சேவலுடன் பேசுவாள். படிப்பிலும் சூட்டிகையான கதீஜா தன் பள்ளிக்கூடத்தில் முன்படி மாணவனாகப் படித்த அபர்கானுடன் சேர்ந்து காடு மேடெல்லாம் சுற்றிக்கொண்டு திரிவாள். சாம்பல்மேட்டை சூழவுள்ள காடுகளின் இயற்கை அழகும் பசுமையும் எம்.எம். நௌஷாத்தின் தூரிகையில் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. பேகம் கதீஜாவுக்கு அக்காடுகளுக்குள் நுழைந்து தூரவுள்ள இடங்களுக்குச் சென்று பார்க்கப் பிடிக்கும். ஒருமுறை உம்மும்மாவுக்குத் தண்ணி காட்டிவிட்டு அர்பாகானுடன் சேர்ந்து காட்டினுள் புகுந்துவிடுவாள். பொழுது காட்டினுள் கடுகி இருட்டிவிட அவர்களுக்கு யானைகள் நிறைந்ததாக அஞ்சப்படும் அக்காட்டிலிருந்து இரவுக்குள் வீட்டுக்குத் திரும்பிட முடியவில்லை. ஊரே அவர்களைக் காணாமல் தவித்திருக்க மறுநாள் பொழுதுபுலர்ந்தபின் ஊர்வந்து சேர்ந்தார்கள்.

இன்னொருமுறை கதீஜா தன்கூட்டுச் சிறுமிகளுடன் சேர்ந்துகொண்டு புளியமரமொன்றில் ஏறிப் புளியங்காய் உலுப்பியதை அவர்களின் தூரத்து உறவினளான ஜொகரா எனும் சாகஸக்காரி உம்மும்மாவிடம் கண் மூக்கு எல்லாம்வைத்து, ‘நான் என் கண்ணால் கண்டன், றோட்டால போற ஆம்பிளைங்க எல்லாம் உவளின் வளர்ப்புச் சரியில்லை என்று ஏசிட்டுப் போனாங்க’ என்று வத்திவைத்து அவளுக்கு அடியும் வாங்கிக் கொடுத்தாள். கதீஜா படிப்பிலும் சுட்டியாக இருப்பது ஜொகரா சாகஸக்காரிக்கு ஒத்துக்கொள்ளக் கஷ்டமாக இருந்ததோ என்னமோ, உம்மும்மாவிடம் அடிக்கடி வந்து, ‘பெரியவளாகிவிட்ட கதீஜாவை இனிமேல் பள்ளிக்கூடத்துக்கெல்லாம் அனுப்பாதீக… இன்னும் அவள் பாடசாலைக்குப் போய்க்கொண்டிருந்தால் கெட்டுச் சீரழிந்து போய்விடுவாள்.. அவளுக்கொரு திருமணத்தை முடித்துக்கொடுத்துவிடு’ என்று `அரிபட்டி’ போடத் தொடங்கினாள். ‘கலியாணத்துக்கு எல்லாம் என்ன இப்ப அவசரம், அவள் ரொம்பச் சின்னப்புள்ள பாவம் படிக்கட்டும்,’ என்று உம்மும்மா மறுக்கவும், ‘அவள் ஒன்னோட இருந்து என்ன சொகத்தைக் கண்டா; அவ மொகத்தைப் பாத்தியா சோகைபிடிச்சிருக்கு. தோல் காஞ்சி கருவாடாட்டமிருக்கு. அவள இப்பிடியேவிட்டா இனிப் பாக்கறவங்க கொரங்கென்றுதான் சொல்லுவாங்க. அவளக் கட்டிக்கொடுத்து விடு, நல்லாய் வாழட்டும். இப்போ ஹாதியைப் பார் எங்கிருந்தோ வந்தாலும் என்ன மாதிரியான உழைப்பாளி. தினமும் பாடுபட்டு உழைத்துத் தன்தோட்டத்தை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறான். அவனுக்கே கதீஜாவைக் கட்டிக் கொடுத்தாயானால் அவர்கள் இருவரும் சந்தோஷமாகத் தம்பாட்டில் வாழுவார்கள்’ என்று விடாமல் ஓதி ஓதி உருவேற்றினாள்.

ஹாதியின் மேன்மையை ஜொகரா வர்ணிக்க வர்ணிக்க மெல்ல மெல்ல உம்மம்மாவின் மனம் மாறத்தொடங்கியது. கதீஜாவை ஹாதி சுல்தானுக்கு மணம் முடித்து விடுவதென்பதில் ஜொகரா வெற்றிபெற்று விடுகின்றாள்.

புதினத்தில் ஆரம்ப அத்தியாயத்தில் வந்து, ஹாதி – கதீஜா திருமணம் முடிந்தவுடன் மறைந்துவிடும் ஜொகரா என்பவள், பேகம் கதீஜா குடும்பத்துக்குத் தூரத்து உறவுக்காரியெனச் சொல்லப்படுகிறதே தவிர, அவள் ஏன் கதீஜாவை சுல்தானுக்குக் கட்டிவைத்துவிட வேண்டுமென்பதில் இத்தனை முனைப்பாக இருந்தாள் என்பதற்கு ஆசிரியர் பிரத்தியேகக் காரணமெதையும் பிரதிக்குட் சொல்லவில்லை. ஜொகரா ஒரு சாகஸக்காரி என்பதோடு சரி.

கதீஜா பிறந்ததிலிருந்து ஒரு உண்டியலுக்குள் உம்மும்மா சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த சிறுதொகை பணத்தின் உதவியுடன் மிக எளிமையான முறையில் அவர்கள் திருமணம் நிறைவேறுகிறது. பேகம் கதீஜா – ஹாதி சுல்தான் திருமணத்துடன் ஹாதியின் உம்மாவும் இவர்களுடன் சேர்ந்துவாழ ஜாம் பறங்கித் தோட்டத்துக்கே வந்துவிடுகிறார்.

புதினங்களையிட்டு ஒரு சொல்வழக்கொன்று வலம்வந்துகொண்டுள்ளது, அது எக்காலத்தில் எவ்விடத்தில் எவ்விலக்கியரால் முதலில் பகரப்பட்டதென்று எனக்குத் தெரியவில்லை. அதாவது, `ஒரு நாவலாசிரியனின் வேலை தன் பாத்திரங்களை அவரவர் குணாதியங்களுடன் படைத்துவிடுவது மட்டுந்தான். அப்பாத்திரங்களே தம் இயல்புகளுக்கமையப் பிரதியைத் தாமாகவே புனைந்துகொண்டு விடுவார்கள்’ என்பது.

மேற்படி கூற்றின் ஒரு நனோவீதங்கூட எனக்கு உடன்பாடானதாயில்லை. ஒரு படைப்பின் ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொரு சொல்லியத்திலும் ஆசிரியனின் தேர்வும் புனைவும் செதுக்கலும் இல்லாவிட்டால் அவனே அப்பனுவலுக்கு அன்னியமாகிடுவான்.

பேகம் கதீஜாவின் வாழ்வைப்பேசும் இப்புதினத்திலும் பேகம் கதீஜாவும் அவள் கணவன் ஹாதி சுல்தானும் அவரவர் பலம் பலஹீனங்களுடன் செம்மையாக வார்க்கப்பட்டுள்ளார்கள். ஹாதியினுள் மனுஷன் பாதி, மிருகம் பாதி உறங்கிக் கிடக்கிறான். ஹாதி கடுமையான உழைப்பாளி. தன் வியர்வையை சிந்தி சிந்தி கடுமையா உழைத்து தனது ஜாம் பறங்கித் தோட்டத்தை உருவாக்குகின்றான். அங்கே சோளம், கொக்கோ, மரவள்ளி, இதர காய்கறிப் பயிர்களைப் பயிரிடுவதில் தனது பகலையும் இரவையும் பயன்படுத்துகின்றான். ஹாதியின் இளமைக்கால வாழ்வு புதினத்தில் அவ்வளவாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. காலத்துக்கமைய சில மென்மையான நாகரிகங்கள், பழக்க வழக்கங்கள் அவனிடம் இருப்பதில்லை. வீட்டில் சமையல் முடிந்துவிட்டால் தன் பாட்டுக்கு ஒரு மிருகத்தைப்போல வாயையுமுறிஞ்சிக்கொண்டு வேகமாகச் சாப்பிட்டு எழுந்துவிடுவான். கதீஜாவுக்கு உணவு இருக்கின்றதா இல்லையா என்ற அக்கறைகள் அவனுக்கு இருக்கவே இருக்காது. ஹாதியின் இள வயதிலிருந்தே அது போன்ற நாகரிகமான பழக்க வழக்கங்களை அவனது உம்மா சொல்லி தரவில்லையெனவே வாசகர் கருதலாம்

ஹாதி சுல்தான் சாம்பல்மேட்டுக்கு குடிபெயர்ந்து வரும்போதே அவனது உம்மா ஒரு விண்ணப்பம்போல அவனிடம் சொல்லிவிடுகிறார்: ‘மகன் சூதுப் பக்கமும் குடிப் பக்கமும் போய்விடாதடா… உங்க வாப்பாவைச் சாய்த்து வீழ்த்தியவையே அந்தப் பழக்கங்கள்தான்”. ஆனால், நடைமுறையில் நட்டுவக்காலியை ஓதி நாக பாம்பாக்கிடலாம் என்பதைப்போல அவனை ஓதிக் குட்டிச்சுவராக்கக் கூடிய நட்புக்களே அவனுக்கு வாய்க்கிறார்கள். அவனது நண்பன் ஸாஹிபுவும் குடிகாரந்தான். ஆனால், மிக அரிதான சந்தர்பங்களில் சேர்ந்து குடித்திருக்கிறார்கள் எனினும் அவனே பெரிதாக ஹாதியைக் குடிக்க வைத்துக் கெடுத்தான் என்று சொல்ல முடியாது.

பேகம் கதீஜா ஆளாகி அழகியாக இருந்தபோது அவளை மணக்க ஸாஹிபு ஆசைப்பட்டான். ஸாஹிபு தன்விருப்பத்தை உம்மாவிடம் தெரிவிக்கவும், அவரும் ஹதீஜாவின் உம்மும்மாவிடம்போய் அவளைச் ஸாஹிபுவுக்குக் கட்டிக்கொடுக்கும்படி கேட்கிறார். குடித்துக்கொண்டு திரிந்த ஸாஹிபுவைக் கண்டாலே உம்மும்மாவுக்கு ஆகாது. அவரை விரட்டியடிக்காத குறையாக மறுத்து அனுப்பிவிடுகிறார்.

ஹாதி சுல்தான் – பேகம் கதீஜாவின் திருமணத்தின் பின் புதிய இடத்தில் பிடுங்கி நடப்படும் ஒரு இளம் பயிரைப்போல கதீஜா மிகவும் கஷ்டப்படுகிறாள். ஒரு தேனீரைக்கூட ருசியாக முறைப்படி வைக்கத் தெரியாத கதீஜாவுக்கு அவளது மாமியார் குறைந்தபட்ச ஒத்தாசையைக்கூடத் தருவதில்லை. அவளுக்கு உரியபடி சமைப்பதற்கு அவளது உம்மும்மா கற்றுத் தரவில்லை என அவளைத் தினமும் ஹாதியும் மாமியாரும் கிண்டலடித்தபடி இருக்கின்றனர். இது போன்ற வீட்டு வேலைகளில் கணவனும் மாமியாரும் தரும் கக்கிஷங்களைப் பொறுத்துக்கொண்டு நாளடைவில் அவள் சமையல் கலையிலும் தேறிவிடுகின்றாள். திருமணமான சொற்ப காலத்தில் மாசமாகி விடும் கதீஜாவுக்கு சரியான பராமரிப்பு வைத்திய அனுசரணைகள் கிடைப்பதில்லை. தீராத வாந்தியுடனும் தலை சுற்றலுடனும் அவதிப்படும் கதீஜாவுக்கு நாட்டு மருத்துவிச்சியின் குடிசைகளும் கஷாயங்களும் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. விளைவாக அவளுக்கு குருதி அமுக்கம் அதிகமாகி வயிற்றில் இருக்கும் சிசுவையும் அவசரத்தில் பிறப்பிக்க வேண்டிய துர்நேர்கையும் நிகழ்கிறது.

கதீஜாவுக்கு ஆட்டுக்குட்டிகளில் விருப்பம் என்பதற்காக காட்டில் நீண்ட கம்புகளை வெட்டிவந்து கொட்டிலைப் போட்டு அவளுக்கு சிறிய ஒரு ஆட்டுப் பண்ணையையும் கொக்கோப் பழங்கள் தின்னப் பிடிக்கும் என்பதற்காக அவளுக்கொரு கொக்கோத் தோட்டத்தையுமே அமைத்துக்கொடுத்து விடுகிறான், ஹாதி சுல்தான். ஆட்டுக் குட்டிகளையே தினமும் கட்டிக் கொஞ்சிக் கொண்டிருந்த கதீஜாவுக்கு அடுத்து அடுத்து இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளுமாக நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. அக்குழந்தைகள் மெல்லமெல்ல வளர்ந்து வளரிளம் பருவத்தை அடையும் அவத்தை(Phase)யில் புதினம் இவ்விடத்தில் ஒரு சிறுபாய்ச்சல் பாய்கிறது. ஆனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான ஊடாட்டங்கள், பாசப் பரிமாற்றங்கள்; ஹாதி சுல்தான் எப்படித் தன் குழந்தைகளை அள்ளிக் கொஞ்சினான், அவர்களுடன் நெருக்கமாக இருந்தான், விளையாடினான்; அவர்கள் பள்ளிக்கூடம் செல்வதும் படிப்பதாகிய சாங்கியங்கள் எதனையும் பிரதிக்குள் காண்பதற்கில்லை.

ஹாதி சுல்தான் ஒரு வந்தேறிப் பக்கிரியாக சாம்பல்மேட்டுக்கு வந்து, ஊருக்குள்ளுள்ள காட்டு நிலத்தைக் கண்டடைந்து அதை நாளா வட்டத்தில் சீர்படுத்திப் பெரியதோட்டத்தையும் கிணற்றையும் அமைத்துக்கொண்டு ஒரு சுல்தானைப் போலவே வாழ்கிறான். ஊர்ப் பள்ளிவாசலின் பரிபாலன சபையின் உறுப்பினராகி விடவேண்டும் என்கிற ஒரு இரகசிய ஆசையும் உள்ளூர வந்தபின்னால் புதுச்சாரமும் ஷேர்ட்டும் செருப்பும் அத்தர்ப் பூச்சும் பவிஸுமாகத் திரிகிறான். ஊருக்குள் பலருக்கும் ஹாதி சுல்தான் மேல் பொறாமைத் தீயை வளர்த்ததைப்போல் ஸாஹிபுவின் உம்மாவுக்கும் வளர்த்திருப்பது புரியக்கூடியதே. அவர் தன் மகனுக்கு பேகம் கதீஜாவை மணம் முடித்துவைக்க விரும்பியதும் வாஸ்தவந்தான். கதீஜா குடும்பத்துக்கு எதிரானவர்கள் எல்லோரினுள்ளும் முதன்மையானவள் ஸாஹிபுவின் உம்மாதான். (அவர் பெயர் தரப்படவில்லை) அவர் பொறாமை காரணமாக ஹாதி சுல்தான் பிரியமாக வளர்க்கும் ஆடுகளுக்கு நஞ்சூட்டுவதிலிருந்து தோட்டத்தின் வேலிகளுக்குத் தீ மூட்டுவது, மிளகுச் செடிகள் மீது மண்ணெய்யை ஊற்றுவதென்று அவர்களுக்குச் செய்யும் நட்டணைகள், கக்கிஷங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அவற்றின் விளைவாக ஒருநாள் ஸாஹிபுவின் உம்மா ஹாதியின் ஆடுகளுக்கு ஊட்டுவதற்கு வைத்திருந்த நஞ்சைத் தந்திரமாக ஹாதி சுல்தான் எடுத்து அவள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த சோற்றுக்குள் கலந்துவைத்து அவளைக் கொன்றும் விடுகிறான்.

அவள் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், `என் நண்பனின் உம்மாவைக் கொன்றுவிட்டோமே’ என்கிற கழிவிரக்கமும் மன சாட்சியும் அவனைத் துன்புறுத்தத் தொடங்கவும் கதீஜாவுக்குத் தெரியாமல் இரகசியமாகக் தினமும் குடிக்க ஆரம்பிக்கிறான். சிலவேளைகளில் அவளிடம் பிடிபட்டுப் போனாலும், “இந்தச் சமாச்சாரத்தைக் கண்டுங்காணாமல் இருப்பதுதான் உனக்கு நல்லது” என்று அவளை மிரட்டவுஞ் செய்தான். அவளின் மாமியாரும், `என்பிள்ளை கடுமையாக வேலை செய்வதால் வரும் அசதியைப் போக்கக் கொஞ்சம் குடிக்கிறான்’ என்று மகனுக்காக சல்ஜாப்புகள் சொன்னாள். ஹாதி சுல்தான் காலவோட்டத்தில் குடிக்கே அடிமையாகி, ஈரல் கெட்டுப்போய் இரத்த வாந்தியாக எடுத்து எடுத்து மரணித்துப் போகிறான்.

எம் பிள்ளைகள் எம்மூலம் பிறந்தவர்களே அல்லாமல் எம் சிந்தனைகள் செயல்களையெல்லாம் அனுவதிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் எதுவும் அவர்களுக்கில்லை. கதீஜாவின் பிள்ளைகளில் மூத்தவன் ஜமால் பொறியாளராகியதும் தன் இஷ்டத்துக்கு ஒரு செல்வந்தப் பெண்ணின் பின்னால் சென்றுவிடுகிறான். அவனால் ஒருவித அரவணைப்போ பொருண்மிய உதவிகளோ தாய்க்கோ தங்கையருக்கோ கிட்டுவதில்லை. இரண்டாவது மகன் பதுரோ, ஒரு திருட்டுடன் கூடிய கொலைகாரனாகித் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஹாதி சுல்தானின் மறைவுக்குப் பின் மீண்டும் அவர்கள் குடும்பம் பொருண்மிய நலிவால்த் தள்ளாடுகிறது. இவ்விடத்திலேயே இனி இருக்கும் இரண்டு குழந்தைகள் லைலா, ஜெஸிமாவுக்காக அவளது உம்மும்மா செய்ததைப்போலவே பேகம் கதீஜாவும் வசதியானவர்கள் வீடுகளுக்குத் சென்று வேலைகள் செய்துபிழைத்து தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள் என்பதாக முடித்திருந்தாலே புதினம் நச்சென இன்னும் மொரமொரப்பாக நிறைவெய்தி இருந்திருக்கும்.

யுத்தகாண்டம் முடிந்து இராமன் இலங்காபுரியின் சக்கரவர்த்தியாக விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகு, இராவணன் ஏன் அவ்வாறு பிறன் மனைவியாகிய சீதை மீது ஏன் காமங்கொண்டான் என்பதை விவரித்து, கம்பன் மேலும் ஒரு காண்டத்தை விரித்திருப்பாராயின் இராமாயணமே . நீர்த்துப் போயிருக்கும்.

நூலின் முகப்பிலான என்னுரையில் ஒரு நாவலுக்கு ஆழமான விவரிப்பு, பொருத்தமான முடிவெல்லாம் அவசியமான விடயங்கள் எனக் குறிப்பிடும் ஆசிரியர் எதற்காக நாவலை மேலும் வளர்த்துகிறார் என்பது புரியவில்லை.

ஸாஹிபுவும் அவன் உம்மாவும் பிரதிக்குள் ஏன் இப்படி வில்லத்தனமாக / எதிர்ப் பாத்திரங்களாக இயங்கினார்கள் என்பதை விவரிக்கும் (28, 29, 30) அத்தியாயங்கள் இப்பிரதியில் தேவையே இல்லை என்பது எண்ணம்.

அவ்வூரின் பள்ளிவாசலோ அதன் பரிபாலன உறுப்பினர்களோ, கதீஜா குடும்பம் நிர்க்கதிக்குள்ளாகி அல்லற்படுங் காலங்களில் அவர்களை நெருங்கிவந்து எதுவித உதவிகளையும் செய்வததில்லை. இருந்தும் பேகம் கதீஜா அவர்களின் மிரட்டுதலுக்கு ஏன் இப்படி மிரண்டு போகிறாரென்பது புரியவில்லை.

கதீஜாவின் இருபெண் குழந்தைகளில் மூத்தவள் லைலா, ஜெமீலாவை விடவும் விழிகளைக் கிறங்கடிக்கும் விதத்திலான அழகியாம். லைலாவின் மீது பள்ளிவாசல் கமிட்டித் தலைவர் மகனுக்கு ஒரு கண். அவனும் லைலாவை அடைவதற்குத் தந்திரங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறான். இப்படி இருக்கையில் அவன் ஒரு நாள் லைலாவின் அறையிலிருந்து வெளியேறுவதைக் கண்டபின்னும், “அடி உங்களுக்குள் ஏதும் தகாத உறவுகள் உண்டா..” என்று கேட்பதற்குக் கதீஜா பேகம் தயங்குகிறாளாம். அவனும் தொடர்ந்து பேகம் கதீஜாவுக்குத் தெரியாமல் நைச்சியமாக லைலாவை வளைத்துப்போட்டுப் அவளைத் தன் சிசுவைச் சுமக்க வைத்துவிடுகிறான்.

எம்.எம். நௌஷாத்தின் ‘சொரிக்காபுரிச் சங்கதிகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பில் அவரது சின்னச்சின்ன வசனங்களாலான எளிமையும் அழகும் வாய்ந்த மொழிநடையைப் பார்த்து வியந்திருக்கிறேன். இந்நாவலிலிலும் அவரது இலாவகமான மொழிநடையின் அத்தனை அம்சங்களும் பரிமளிக்கின்றன. இப்போதெல்லாம் நாவல்களை அச்சேற்றும் அவசரத்தில் நாவலாசிரியர்கள் பிரதியை சீரமைப்பு செய்ய யாரிடத்தும் தருவதில்லை. எம்.எம். நௌஷாத்தும் இப்பிரதியை அச்சேற்றுமுன் செம்மை நோக்க எவரிடமாவது தந்திருந்தால். ஒரே சொல்லியத்தில் சில சொற்கள் இரண்டு தடவைகள் வருவதையும் பன்மையிலமைந்த வசனங்களுக்கு ஒருமை வினைமுற்றுக்கள் வந்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். இன்னும் பாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள் சில இயல்பான கிராமியப் பேச்சு வழக்கிலும் சில நம்பமுடியாதபடி இலக்கணத் தெளிவுடனும் அமைந்துள்ளன. ( எ+டு: பக்:78, பத்தி 1இல் கதீஜாவின் மாமியார் சொல்கிறார்: “எனது குழந்தைகள் எல்லோரும் வீட்டிலத்தான் ஆரோக்கியமாகப் பிறந்தார்கள், வைத்தியசாலை எல்லாம் அவசியமில்லை.”)

ஊரிலேயே மிகவும் வசதியானவரும் பணி ஓய்வுபெற்றவருமான தபாலதிபரின் வீட்டுவேலைக்கு கதீஜா போன இடத்தில் அவர் அவளைத் தடவிப் பார்க்க விழைகிறார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரே பின் பதுரினால் கொலையும் செய்யப்படுகின்றார். ஊர்ப் பள்ளிவாசல் மௌலவி ஹாஜியாரின் மகன் பின்நாளில் பரிபாலனசபையின் தலைவரானபின் அதன் உறுப்பினர்களின் பிரசன்னத்தில் கதீஜாவிடம்: “நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வந்து என் வீட்டுச் சமையல்ப் பாத்திரங்களைக் கழுவித் தரவேண்டும், அதற்கு நான் ஒரு சல்லிக்காசும் தரமாட்டேன்” என்று ஆணையிடுவதும், பின்னர் அவர்கள் எல்லோரும் சென்று மறைந்தவுடன் கதீஜாவிடத்தில், “நீங்கள் எனக்கு லைலாவைக் கட்டித்தர வேண்டும்” என்று இறைஞ்சி நிற்பதுவும் யதார்த்தங் குன்றிய நாடகீயக் காட்சிகளாக நகர்கின்றன.

பேகம் கதீஜா, ஹாஜியார் பற்றி லைலாவிடம் எடுத்துச்சொல்லி, அவனிடம் விழிப்பாக இருக்கும்படி, அவன் பார்வையிலே படவே விடாமல் காபந்து பண்ணியிருக்கவேண்டும். மாறாக… லைலாவோ ஹாஜியாரின் மகனின் சிசுவை வயிற்றில் சுமப்பதுவும் ஹாஜியாரின் மனைவி அவர்களிடம் தந்திரமாக ஜாம் பறங்கித் தோட்டத்தைத் எழுதி வாங்கிக்கொண்டு, தன் மகனை கர்ப்பிணியான லைலாவை மணக்கச் சம்மதிப்பதுவும் பனுவலுடன் ஒன்றவியலாத காட்சிகளாகவுள்ளன.

இன்னும் இறுதி அத்தியாயங்களில் ஜெஸீமா திருமண வயதை எய்தும்போது (20 அகவைகள்) ஸாஹிபுக்கு 40 அகவைகளுக்கு அதிகமாக இருக்கவே சாத்தியம். பே கம் கதீஜா இறுதியில் எதற்காக ஜெஸீமாவை ஸாஹிபுவுக்கே முடித்து வைக்கிறாரென்பதும் புதிராகவும் அபத்தமான முடிவாகவுமுள்ளது.

இம் மிகை விவரிப்புகள், விடுபடல்கள், பாய்ச்சல்கள், நாடகீயக் காட்சிகள் நாவலின் அழகியலையோ கனத்தையோ அத்தனை பாதித்துவிடவில்லை.  எம்.எம். நௌஷாத் அவர்கள் மேன் மேலும் பலதளங்களில் இன்னும் அழகியலுடன் கூடிய விரிந்த நாவல்களை எழுதித் தமிழில் தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.

பொ. கருணாகரமூர்த்தி <karunah08@yahoo.com>

karunaharamoorthy

Amrutha

Related post