நவீன தமிழ் இலக்கிய பரப்பில் | வீறுபெற்று விடுதலையாகி நிற்கும் ‘நவீன தமிழ்’ | சந்தியா நடராஜன்

 நவீன தமிழ் இலக்கிய பரப்பில் | வீறுபெற்று விடுதலையாகி நிற்கும் ‘நவீன தமிழ்’ | சந்தியா நடராஜன்

சு. வெங்கடேசன்

டந்த முப்பது ஆண்டுகளில் இலக்கிய விழாக்களிலும் அறிமுக உரைகளிலும் புத்தகங்களின் பின்னட்டை வாசகங்களிலும் ஒரு சொற்றொடர் இடையறாது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தச் சொற்றொடர், ‘நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்…’. இன்று பேச்சிலும் எழுத்திலும் ஒரு தொடக்க வரியாக இந்த சொற்றொடர் நிலைபெற்று நிற்கிறது. இதற்கு முந்தைய காலத்தில் ‘இந்தத் தமிழ் கூறும் நல்லுலகத்தில்’ என்ற வரி பாடாய்ப்படுத்தி வந்தது.

தற்போது சிலர், ‘நான் மாடர்ன் லிட்டரேச்சர்ல ஒர்க் பண்றேன்’ என்று சொல்கிறார்கள். ஆங்கில இலக்கியத்தில், Modern English Period என்றும் Modern English Literature என்றும் இருவிதமான சொல்லாடல்களைப் பார்க்க முடிகிறது. ‘மாடர்ன் பீரியடு’ என்பது ஆங்கில இலக்கிய வரலாற்றின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கிறது. அதாவது 16ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் ‘மாடர்ன் பீரியட்’.  ‘மாடர்ன் லிட்டரேச்சர்’ என்பது விக்டோரியா காலத்தின் முடிவிலிருந்து இரண்டாவது உலகப் போரின் முடிவு வரையிலான ஆங்கில இலக்கியத்தைக் குறிக்கிறது. Modernism என்ற சொல் (நவீனத்துவம்) உலகெங்கும் மாற்றம் கண்டுவந்த கலை இலக்கிய ரசனையை எடுத்துரைத்தது; வளர்த்தெடுத்தது. கலை உலகத்தில் பாப்லோ பிகாசோவும் கவிதையில் டி.எஸ். எலியட்டும் நாவலில் ஜேம்ஸ் ஜாய்ஸும் நவீனத்துவத்தைத் தொடக்கி வைத்த ஆளுமைகளாகக் கருதப்படுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கலை இலக்கிய வடிவங்களை வகைப்படுத்த ‘பின் நவீனத்துவம்’ (Post Modernism) என்ற சொல் பயன்பட்டது.

ஆனால், இக்கால ‘தமிழ் இலக்கியப் பரப்பில்’ பயன்படுத்தப்படும் ‘மாடர்ன் லிட்டரேச்சர்’ என்ற சொல்லாடல் கடந்த 100 ஆண்டு கால புனைவிலக்கியத்திற்கான (மர்ம நாவல்கள், குடும்ப நாவல்கள், சரித்திர நாவல்கள் தவிர்த்து) பொதுச் சொல்லாகவே அம்பலத்தில் ஆடி வருகிறது.

 

Joe D Cruz
ஜோ டி குருஸ்

21ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ் இலக்கியத்தின் வேகமும் வளர்ச்சியும் ஒரு நூற்றாண்டு கால ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஈடானது. இலக்கியத்தில் வரம்புகளற்ற ஒரு வெளி உருவாகியிருக்கிறது. சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் எழுத்து ஆயுதமாகியிருக்கிறது. பிதாமகர்களின் அங்கீகரிப்புகள், தரவரிசைப் பட்டியல் என்பன போன்ற தளைகளுக்கு இனி இடமில்லை. ஆற்றல் பெற்றவனை அதிகார பீடங்களும் அழைத்துக்கொள்ளும் அல்லது அணைத்துச் செல்லும் காலமிது. தமிழ் இலக்கியத்தில் அனைத்து வயதுப் பெண்களும் தீவிரமாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் காலகட்டமாகவும் இந்த இருபதாண்டு காலம் இருந்து வந்துள்ளது.

இணையம் இதயத்தை மலரச் செய்துள்ளது. தடைகளைத் தகர்த்து எறிந்திருக்கிறது. பேதங்கள் முகம் காட்டுவதில்லை. பேரிடர் காலத்திலும் சதா சர்வ காலமும் இணைய வழியில் இலக்கியம் பேசினார்கள். அச்சு இதழ்கள் இயக்கமற்ற நிலையில் இணைய இதழ்கள் விண்வெளியை நிறைத்தன. இருந்த இடத்தில் இருந்தபடியே எல்லாமும் வந்து சேர்ந்தன. நவீன எழுத்தாளர்களின் உரைகளைக் கேட்கக் கட்டணம் விதிக்கப்பட்டது. வாசகர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள். எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் எண்ணிக்கையை முகநூல் பெருக்கியது.

வாங்கிய, படித்த, படிக்காமலே வைத்திருந்த புத்தகங்களின் பட்டியல் அல்லது புகைப்படங்களை முகநூலில் பதிவு செய்தார்கள்; எழுத்தாளர்கள் வீட்டு விஷேசங்கள் அனைத்தும் முகநூல் மூலம் விண்ணில் வலம் வந்தன; பதிவைப் படிக்காமலே பார்த்த மரத்திரத்தில் விஷயம் புரிந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்; வருத்தம் தெரிவித்தார்கள். அஞ்சலி செலுத்தினார்கள்; யாரும் உணர்ச்சிவசப்படுவதில்லை. இயந்திரம் உங்களுக்குப் பதிலாக; இயந்திர கதியில் நீங்கள். ஜகம் புகழும் முகநூலின் புண்ணிய கதை உணர்ச்சிகளைக் கொட்டியது இப்படி!

முகநூலில் பதிவிடும் வேகத்தில் எழுத்தாளர்கள் தன்னிலை மறந்தனர். அவசரத்தில் கொட்டிய எழுத்துகளின் நிழலில் பொதிந்திருந்த அரசியல், அபிலாஷைகள், மலரிடல், மாய வலை, அந்தரங்கம், அரிப்பு, ஆர்வம், இலக்கு எல்லாம் வெட்ட வெளிச்சமாகின. சர்வமும் நிர்வாணமானது. வாழ்க முகநூல்!

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் கோவிட் பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய நடுவண் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து பணி தேடி உழைத்துப் பிழைக்க வந்த மனித வர்க்கம் இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரத்தைச் சந்தித்தது. தமிழகம் நான்கு சுவர்களுக்குள் ஒடுங்கிக் கிடந்தது. ஆண்களுக்கு அந்த ஊரடங்கு காலம் ஏக வஸ்திர காலமானது. இந்தச் சமயத்தில் தான் Zoom செயலி தமிழ் இலக்கியப் பயன்பாட்டுக்குப் பெரிதும் துணை நின்றது. ஆலயங்களில் ஆண்டவனுக்கு ஒரு கால பூஜைக்கே உத்திரவாதம் இல்லாத காலகட்டத்தில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு Zoom செயலி மூலம் ஆறுகால பூஜை நடந்தது. கவிதை நேசிப்புக்கு ஒரு கூட்டம், கவிதை வாசிப்புக்கு ஒரு கூட்டம், கலைஞர்களைக் கொண்டாட ஒரு கூட்டம், கலந்துரையாடல், அளவளாவல், விமர்சனக் கூட்டம், நூல் அறிமுகம், நவீன இலக்கியத் தொடர் சொற்பொழிவு என அல்லும் பகலும் Zoom அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து Google Meet மூலமும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒலிப் புத்தக நிறுவனங்கள் பல்கிப் பெருகின.

அமேசான் கிண்டில் மூலம் எழுத்தாளர்கள் நல்ல சன்மானம் பெற்றனர். பெற்ற பெருந்தொகைக் கணக்கை சில எழுத்தாளர்கள் பெருமையோடு முகநூல் மூலம் அறிவித்தனர். செல்லுபடியாகாதவர்கள் புலம்பல் புராணங்களை எழுதி அரங்கேற்றினர். அமேசான் நிறுவனம் இணையம் மூலமாக போட்டி நடத்தி வெற்றி பெற்ற எழுத்தாளருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளித்தது. நவீன இலக்கிய எழுத்தாளர்கள்தான் நடுவர்களாக இருந்து போட்டிக்கு வந்த நாவல்களைப் பரிசீலனை செய்தனர். நல்ல நோக்கத்துடன் ஒரு முயற்சியை முன்னெடுத்த பன்னாட்டு நிறுவனமும் பழிக்கு ஆளாகாமல் தப்பவில்லை. வெற்றி பெற்றவரும் தனது வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. தோற்றவர்கள் வெற்றியாளனின் வியூகங்கள் மீது விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சாகித்திய அகாதெமியின் புத்தக வெளியீடுகளில் / விற்பனையில் இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் மொழி இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. 1954 மார்ச் 12இல் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட சாகித்திய அகாதெமியின் தமிழ்ப் பிரிவு குறைந்தபட்சம் மாதத்திற்கு 3 இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு தேசிய கருத்தரங்கமும் 5 அல்லது 6 உரை அரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆனால், தமிழ் எழுத்துலகத்திற்கு டிசம்பர் மாதத்தில்தான் சாகித்திய அகாதெமி குளிர் காய்ச்சல் வருகிறது. சாகித்திய ‘அகாதெமி விருது’ ஒன்றே அந்த நிறுவனத்தின் செயல்பாடு போல ஒரு தோற்றம் எழுகிறது. சாகித்திய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் தமிழ்ப் படைப்பாளிகள்தான். அப்படியிருக்கையில் விருது பெற்ற எழுத்தாளரைச் சொல்லால் அடித்துக் கொலை செய்வது ஏனென்று புரியவில்லை! ‘எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும்’ என்று எல்லா எழுத்தாளர்களும் உரத்த குரலில் பேசுகிறார்கள். ஆனால், ஓர் எழுத்தாளருக்கு சிறப்பு செய்யப்படுகிற வேளையில் அவரை ஒரு நாள்கூட நிம்மதியாக உறங்கவிடக் கூடாது என்பதில் மனவுறுதியுடன் செயல்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விருது பெற்றவரோ தனக்கு அந்த விருது பத்துப் பதினைந்து ஆண்டுகள் தாமதமாகக் கொடுக்கப்பட்டதாகச் சங்கடப்படுகிறார். அவரது வாக்குமூலமோ அவருக்கு முன்பாகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களை நோக அடிக்கிறது.

 

Saravanan Chandran
சரவணன் சந்திரன்

ழுத்தாளர்கள் சமத்துவம் எய்தியிருக்கிற கடந்த இருபது ஆண்டுகளில் முதல் நூலின் மூலமே முத்திரை பதித்தவர்கள் பலர். எனக்குத் தெரிந்த வகையில் சாம்ராஜ், லிபி ஆரண்யா, இசை, போகன் சங்கர், சரவணன் சந்திரன் எனப் பல ஆற்றல் மிக்க படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.

எழில் வரதன் என்றொரு ஓசூர்க்காரரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு’ 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த சில மாதங்களில் அவரை ‘ஆனந்த விகடன்’ கண்டுகொண்டது. அவரது கதைகள் விகடனில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. எழில் வரதனின் கதைகளை விகடனே நூலாகவும் வெளியிட்டது. பிறகு 5-6 ஆண்டுகள் வரையில் விகடன் நிறுவனத்தின் சின்னத்திரை தொடருக்கு வசனம் எழுதி வந்தார். கதையில் வசனம் வைக்காமல் வசனங்களால் கதையை நகர்த்தும் திறமை கொண்டவர் எழில் வரதன். அவரைக் கண்டெடுத்தவர் ஆதவன் தீட்சண்யா. அவரது எழுத்தே அவரை ஆற்றுப்படுத்தியது.

சாம்ராஜின் சாம்ராஜ்யமும் கடல் கடந்து விரிந்து கொண்டிருக்கிறது. இசைபட வாழ்கிறார் இசை. பெரும் குடும்பஸ்தரான லிபி ஆரண்யா கொஞ்சம் எழுதினாலும் வாசகர்களை எதிர்பார்ப்பில் தக்க வைக்கிறார்.

சரவணன் சந்திரனின் கதைக்களம் புதிது; முற்றிலும் புதிது. ஹாக்கி விளையாட்டின் அரசியலை வைத்தே ஒரு நாவல் படைத்திருக்கிறார் இவர். மேலும் கடுமையாக விவசாய வேலை செய்தும் தொலைகாட்சித் தொடர் இயக்குநராக உழைத்தும் பணம் ஈட்டும் எழுத்தாளராக அறியப்படும் சரவணன் சந்திரன் இயல்பில் ஓர் எளிய மனிதர்.

சமீபத்தில் ‘உடன்பாட்டு வெயில்’ என்று ஒரு கவிதைத் தொகுப்பு, படித்தவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த நூலாசிரியர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தேனியைச் சார்ந்த விஜயானந்தலட்சுமி என்ற பெண்.

எனக்குத் தெரிந்த வரையில், தத்தம் எழுத்தால் மட்டுமே அடையாளமும் அங்கீகாரமும் பெற்றுள்ள சிலரைக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் விரிந்தால் எல்லையின்றி நீளும். இவையெல்லாம் இந்த இருபது ஆண்டு கால ‘நவீன இலக்கியம்’ கண்ட விந்தைகள்; நிஜங்கள்.

தொடங்கிய காலத்திலிருந்து சாகித்திய அகாதெமி விருதுகூட 40 ஆண்டு காலம் வரை தமிழ்ச் சமூகத்தின் மூன்று பிரிவினரிடையே மட்டும் சுழன்று சுழன்று வந்தது. மில்லனியம் ஆண்டின் கொண்டாட்டத்திற்குப் பிறகுதான் அந்த விருது எல்லா சமூகத்தையும் எட்டிப் பார்த்தது. இன்றைய பாராளுமன்ற உறுப்பினரான எழுத்தாளர் சு.வெங்கடேசனின் முதல் நாவலான ‘காவல் கோட்டம்’ (2008) நாவல் வெளியான மூன்று ஆண்டுகளில் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது.

கவிதைத் தொகுப்பு வெளியிடும் நோக்கத்தில் தமிழினி வசந்தகுமாரை சந்தித்த, சரக்கு கப்பல்களைக் கையாளும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜோடி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’ நாவலை 2004இல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. அந்த நாவலின் உருவாக்கத்தில் தமிழினி வசந்தகுமாருக்குப் பெரும் பங்கு உண்டு. அந்த ஆண்டு நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் எவருடைய பரிந்துரையும் மதிப்புரையும் இல்லாமல், யார் ஒருவரின் தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெறாமல் வாசகர்களின் வாய்மொழி மூலமே பெரும் வரவேற்பைப் பெற்றது அந்த நாவல். ஓரிரவில் குரூஸ் என்ற உவரிக்காரர் ஊரறிந்த எழுத்தாளரானார். அவரது அடுத்த படைப்பான ‘கொற்கை’ நாவலுக்கு 2008இல் சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. எழுத வந்த நான்கு ஆண்டுகளில் நாயக அந்தஸ்தைப் பெற்றார் பரதவர் வாழ்க்கையை முன் வைத்த குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’ தொடங்கி இன்றுவரை சரித்திர ஆவணங்களின் அடிப்படையில் நவீன நாவல்களைக் கட்டமைக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘காவல் கோட்டம்’ இந்த வகைமையில் அடங்கும்.

இது இப்படியிருக்க, வரலாறு காணாத வகையில் ‘நவீன தமிழ் இலக்கியப் பரப்பில்…’ இந்தக் காலகட்டத்தில் சில அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ‘வானம் வசப்படும்’ என்று சொன்ன பிரபஞ்சன் இருதய நோய் கண்டு மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, அவரை நற்றிணை பதிப்பக உரிமையாளர் யுகன் உரிய நேரத்தில் உயர்தர மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தார். திரை உலகைச் சார்ந்த நடிகர் சிவக்குமார் அவரது மருத்துவமனைச் செலவு முழுவதையும் ஏற்றார். இன்னும் பலர் உதவ முன் வந்தனர். சக எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணனும் பவா செல்லதுரையும் டிஸ்கவரி வேடியப்பனுடன் இணைந்து பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி பிரபஞ்சனுக்கு அளித்தனர். ‘தமிழால் உயிர் பிழைத்தேன்’ என்று சொன்னார் பிரபஞ்சன். அவர் பாண்டிச்சேரியில் மரணமடைந்தபோது பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது. இதைத் தொடர்ந்து கி.ராஜநாராயணன் இறந்தபோது அவருக்கும் அரசு மரியாதை செய்தது. அவருக்குச் சிலை எழுப்பவும் ஏற்பாடானது.

இறுதி மூச்சு வரை இத்தகைய கௌரவங்களையும் மரியாதையையும் எழுத்தாளர்கள் பெற்றார்கள் என்றால் அவை நிகழ்ந்த காலம் 21ஆம் நூற்றாண்டின் இணையற்ற முதல் இருபது ஆண்டுகள்தான். இவ்வளவு பெரிய வளர்ச்சியையும் அளவுக்கதிகமான வாய்ப்புகளையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள இந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?

 

Vijayanandalakshmi
விஜயானந்தலட்சுமி

மஸ்கிருத மொழியைப் பற்றி பாரதி இப்படி எழுதுகிறார்: “நமது முன்னோர்கள், அவர்களைப் பின்பற்றி நாமும் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால் இவையனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப் பெயரொன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.”

‘தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்த முண்டாகிறது’ என்று எழுதிய பாரதியார், ‘சமஸ்கிருத பாஷைக்கே தனிப் பெயர் ஒன்று வேண்டும்’ என்று சொல்கிறார் எனில், ‘நவீன தமிழ்’ வீறுபெற்று விடுதலையாகி சமத்துவம் எய்தி நிற்கிற இந்த இருபது ஆண்டு காலத் தமிழுக்கென்று தனிப்பெயர் வேண்டும் இல்லையா? அந்த வேலையை கல்விப் புலம் சார்ந்த ஆய்வாளர்கள் மேற்கொள்ளட்டும் ‘இணையக் காலத் தமிழ்’, ‘சமத்துவ காலத் தமிழ்’ என்று ஏதோ ஒரு பெயர் சூட்டப்படட்டும்.

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

Amrutha

Related post