முயங்கொலிக் குறிப்புகள் 5 | கயல்

 முயங்கொலிக் குறிப்புகள் 5 | கயல்

ஓவியம்: நடேஷ்

16. சுதந்திரம்

மணிக்கு இவ்வளவு எனப் பொருள் ஈட்டுபவளால்
எச்சரித்துவிடமுடிகிறது
தனங்களின் மேடையில்
கைகள் அபிநயிக்கத் தொடங்கும்
முதல் நொடியிலேயே.

உயர் ரக கேளிக்கை விடுதிகளில்
ஒவ்வொரு ஆடையாய் உருவி எறிபவளைக்
கண்களால் பருகலாமே தவிர
கட்டி அணைக்க அனுமதியில்லை.

சொல்லக்கூசும் ஈனத்தனங்களைக்கூட
மறுப்பின்றி விழுங்கும்
இரவுப் பெண்கள்
அருவருத்து விலக்குவது
கரைகள் உடைத்துத் துளைத்துப்
பாய்கிற நதியென
நா ருசிக்கத் தரப்படும்
உதட்டு முத்தத்தைத் தான்.

ஈதெல்லாம் இவ்வாறிருக்க
நன் மனைவிக்கு அழகு
படுக்கையில் பரத்தையாயிருத்தல்
என்பது?

17. நெடுநல்வாடை

அதிகாலைப் பனியின்
முத்தத்துடன் பூக்கிற
ரோஜா மொக்குகளுக்கு.
மழை கண்ட தட்டானின்
மகிழ்ச்சி.

தடுக்கும்தோறும்
இடைநிற்கின்ற
சிற்றூர் ஊர்தியாக
ஒவ்வொரு பாகமாகத்
தொட்டுத் தீட்டியபடி பயணிக்கின்றன
தூரிகை விரல்கள்.

ஊடுருவிப் படர்கிற குளிரை
கருணையோடு போர்த்திக்கொள்கின்றன
மலைமுகடுகள்.

செவ்விதழ்கள் திறந்து
தேறல் சுவைக்கிறது
இச்சைக் கிளி.

வேகங்கூட்டிப் பாய்கிற நதியை
ஆசையுடன் தழுவிக்கொண்டு கிறங்குகின்றன
ஆழத்தில்கிடக்கும் கூழாங்கற்கள்.

காட்சிகள் யாவிலும்
உன் எழிற் சாயலென்றால்
நீயென்
அருகில் இல்லையென்பதே
அரும்பொருள்.

தொடரும்
கயல் <dr.kayalvizhi2020@gmail.com>

KAYAL

Amrutha

Related post