தருமமிகு சென்னை 1 | விமான நிலையம் என்னும் விண்ணகரம் | சந்தியா நடராஜன்

 தருமமிகு சென்னை 1 | விமான நிலையம் என்னும் விண்ணகரம் | சந்தியா நடராஜன்

னக்கு ஏழெட்டு வயதிருக்கும்.

ஒருநாள் என் வயதொத்த சிறுவர்கள் வானில் ஒரு ‘ஏரோப்ளேன்’ பறப்பதைக் கண்டு தெருவில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

நானும் அந்தப் பரவசத்தில் பங்கு கொண்டேன். மேகக் கூட்டங்களுக்கு அப்பால் எங்கோ ஒரு விமானம் செல்வது கண்களுக்குப் புலப்பட்டது. அது ஒரு ‘ஏரோப்ளேன்’ பொம்மை போலத்தான் தெரிந்தது. எல்லோரும் ‘பூப்போடு பூப்போடு’ என்று கூவினார்கள். தெற்காக ஏன் அந்த விமானம் பூப்போட வேண்டும் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு என் இருப்பதைந்தாவது வயது வரையில் பறக்கும் விமானம் எதுவும் என் பார்வையில் விழுந்ததில்லை. ‘சிவந்த மண்’ணிலும் ‘வசந்த மாளிகை’யிலும் தான் வெள்ளித்திரை விமானங்களைக் கண்டிருக்கிறேன். அந்தத் திரைப்படங்கள் விமானப் பணிப்பெண்களை இந்திரலோகத்துப் பெண்களாக மனதில் பதிய வைத்திருந்தன. விமானத்தில் பயணம் செய்பவர்களைப் ‘பெரும்புள்ளி’களாகவே கற்பனை கண்டுகொண்டிருந்தது. விமானப் பயணம் குறித்து யோசித்தால் பயமும் திகிலும் முன்வந்து நிற்கும்.

1985 மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னைக்கு வந்து சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன். துவக்கத்தில் சுங்கத் துறையின் எல்லாப் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாகச் சென்னை விமான நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.

வெள்ளைச் சீருடையில் ‘அசோகச் சிங்கம்’ சிரிக்கும் கேப் அணிந்துகொண்டு மீனம்பாக்கம் விமானநிலையத்திற்குள் நுழைந்தேன். அது பழைய விமான நிலையம். இன்று அது ‘கூரியர் டெர்மினல்’ ஆகிவிட்டது. பயணிகளுக்கு இடமில்லை. பார்சல்கள் வந்துபோகும் ஜட விமானதளமாகிவிட்டது. விமானநிலையக் கட்டடத்துக்கு உள்ளும் புறமும் தமிழ்நாடு போலீஸ்தான் காவல் பணியில் இருந்தது. வெளியே கருப்பு மஞ்சள் கலரில் பழைய ‘பியட்’ வாடகைக் கார்கள் வலம்வந்து கொண்டிருந்தன. இரண்டு சுங்க அதிகாரிகள்தான் காரில் பணிக்கு வருவார்கள். பயணப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் டிராலிகள் வரிசையாகவும் சிதறியும் கிடந்தன.

விமான நிலையத்தின் ‘வருகைக் கூட’த்திற்குள் நுழைந்தவுடன் பரவசம் பற்றிக் கொண்டது. வெள்ளைச் சீருடையில் சுங்க அதிகாரிகள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். புதியவனான என்னைச் சக அதிகாரிகள் யாரும் கைகுலுக்கி வரவேற்கவில்லை. பாச உணர்வுக்கு வழியில்லை என்றாலும் பரவாயில்லை, பயஉணர்வு மேலிட்டது. பணிவுதான் சீருடைப் பணியின் லட்சணம் என்று சூழ்நிலை சொல்லிக் கொடுத்தது. ஓடுபாதைக்கருகில் நிற்கும் ஓரிரு விமானங்களைக் கண்ணாடிச் சுவர் வழியே பார்க்கமுடிந்தது.

விமானநிலைய சுங்கத்துறை அஸிஸ்டென்ட் கலெக்டர் முன்பு ஆஜரானேன். அதிகம் பேசாத ஆபிஸர் அவர். தலையசைத்து விடை கொடுத்தார். மாநகரம் எனக்குப் புதியதுதான்; விமான நிலையமோ விநோதமாகக் காட்சியளித்தது.

ஏர் இந்திய நிறுவனத்தின் விமான நிலையப் பெண்கள் சிவப்பு நிறப் புடவைகளில் தென்பட்டார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெண்கள் குட்டைப் பாவாடைகளில் குறுக்கும் நெடுக்கும் குதிகால் உயர்ந்த காலணிகளுடன் குமிழ் சிரிப்புடன் தலையசைத்துத் தோள் குலுக்கிப் பயணிகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏர்லைன்ஸின் எல்லாப் பெண்களும் உடுப்பிலும் எடுப்பிலும் நகல் எடுத்ததுபோல் காட்சியளித்தார்கள். இடரினும் தளரினும் இன்முகத்துடன் பணிபுரிதல் பதவிப்பயன் என்பதை பறக்கும் பணிப்பெண்களிடமிருந்தும் விமான நிலைய கவுன்டர்களில் பயணியர் பணியில் ஈடுபடும் விமானநிறுவனப் பணியாளர்களிடமிருந்தும் தான் நான் கற்றுக்கொண்டேன். நள்ளிரவு நேரத்திலும் கசங்காத முகங்கள்; நடையிலும் உடையிலும் மிடுக்கு, கோபம் தலைக்கேறிக் கடுஞ்சொற்களைக் கொப்பளிக்கும் பன்னாட்டுப் பயணிகளிடம் கனிவு ஒன்றையே மறுமொழியாகக் கற்றுக் கொடுத்திருக்கும் இந்த விமான நிறுவனங்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம் உண்டு. இந்த உணர்வே இன்று வரை என் உலகத்தில் தொடர்பறாமல் இருப்பவர்களில் ஏர்லைன்ஸ் நண்பர்களின் எண்ணிக்கை குறைவுபடாமல் இருப்பதற்குக் காரணம்.

முழுவதும் குளிரூட்டப்பட்ட வருகைக் கூடத்தில் நானும் அங்குமிங்கும் பழக்கப்பட்டவன்போல நடந்துகொண்டிருந்தேன். சற்று நேரத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கப் போவதாக ஒலிபெருக்கி அறிவித்தது. அதே நேரத்தில் கள்ளழகர் பவனி வரும் குதிரையைப் போல ஓடுபாதையில் ‘மாஸ்’ விமானம் தன் முகத்தை விண்ணோக்கி உயர்த்தியபடி தரைதொட்டு விரைந்தோடிக் களைப்பற்றுத் தன் வேகம் குறைத்து மெல்லத் திரும்பி ஒரு டாக்ஸியைப் போல மெதுவாக வந்து நிற்கவேண்டிய இடத்தில் (‘பே’) நின்றது. அதன் இரைச்சல் மட்டும் நிற்கவில்லை. விமானநிலையக் கட்டிடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் நின்றிருந்த விமானத்தை நோக்கி இரண்டு ஏணிப்படி’ (Step ladder) வாகனங்கள் நகர்ந்து சென்று விமானத்தின் முன்புற, பின்புறக் கதவுகளுடன் ஏணிப்படிகளைப் பொருத்தின. விமானப் பயணிகள் ஏணிப்படிகள் மூலம் இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பேருந்துகளில் ஏறி விமான நிலையத்திற்கு வந்தார்கள்.

இப்போது ஏணிப்படி வாகனங்களின் காலம் மலையேறிவிட்டது. விமானநிலையக் கட்டடத்தை ஒட்டியே விமானங்கள் வந்துவிடுகின்றன. ஏர்வே பிரிட்ஜ் மூலம் பயணிகள் விமானத்திலிருந்து வந்து சேர்கிறார்கள்; விமானத்திற்குள் போய்விடுகிறார்கள். ஏர்வே பிரிட்ஜ்களிலும் விமானங்கள் நிற்கும்போது அடுத்து வரும் விமானங்களுக்குத் தான் ஏணிப்படி வாகனங்கள் தேவைப்படும்.

முதல் முறையாக ஒரு விமானத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன்.

வருகைக் கூடத்திலிருந்து பத்துபடிகள் மேலே ஏறி கீழே இறங்கி இமிகிரேஷன் பகுதிக்கு வந்தேன். பயணிகள் வரத்தொடங்கினார்கள். அந்தப் பயணிகள் எல்லாம், சினிமா நட்சத்திரங்களாகவும் பெரும் தொழிலதிபர்களாகவும் படோடபமானவர்களாக இருப்பார்கள் என்று மனம் கனவு கண்டது. இமிகிரேஷன் பகுதியில் மூன்று அதிகாரிகள் தான் பயணிகளின் கடவுச்சீட்டுகள் பரிசோதித்தபடி இருந்தார்கள். அதாவது மூன்று வரிசைகளில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.

முதல் வகுப்புப் பயணிகள் கடந்த பிறகு வந்த பயணிகளில் சிலரது கோலம் பேருந்து நிலையக் காட்சிகளை நினைவூட்டியது. தலைச்சுமையுடன் வந்த ஒருவரைக் கண்டவுடன் எனது முன் அனுமானங்கள் முறிந்து விழுந்தன. இன்னும் சில இளைஞர்கள் ஒற்றைக் கைப்பையுடன் வந்தார்கள். அவர்கள் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. எந்த விதத்திலும் அவர்களிடம் ஒரு விமானப் பயணிக்குரிய குறைந்தபட்ச லட்சணம் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் டூரிஸ்ட் விசாவில் மலேசியா சென்று உரிய அரசு அனுமதி இல்லாமல் அங்கே வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. வாழ்வில் எப்படியாவது கடைத்தேற வேண்டும் என்று பெரும் கனவுடன் அவர்கள் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலிருந்து கடன் வாங்கிக் கடல் கடந்தவர்கள். ‘அயல்நாடுகளில் வேலை’ என்ற விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு மோசடி ஏஜன்ட்களின் சதிவலையில் சிக்கியவர்கள். வாழத் தகுதியற்ற வாழிடங்களில் தங்கி வேலை செய்தவர்கள். இறுதியில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டு மலேசியாவில், சிறைத்தண்டனை பெற்றவர்கள். சிறையில் கசையடியும் உண்டு. உள்ளூரில் ஏஜென்ட்டுகளால் மொட்டையடிக்கப்பட்டவர்களை மலேசிய போலீஸ் மழுங்க மழுங்க மொட்டையடித்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.

மீண்டும் பயணிகள் சுங்கச் சோதனைக்கு ஆட்படும் வருகைக் கூடத்திற்கு வந்தேன். பயணியர்களின் பதிவு செய்யப்பட்ட உடைமைகள் விமானத்திலிருந்து இறக்கிக் கொண்டுவரப்பட்டு கன்வேயர் பெல்ட்டுகளில் போடப்பட்டன. பயணப் பொதிகளுடன் சுழன்று கொண்டிருந்த நீண்ட கன்வேயர் பெல்ட்டுகளைச் சுற்றித் தத்தம் உடைமைகளை எடுத்துச் செல்ல பன்னாட்டுப் பயணிகள் பொறுமையுடன் காத்திருந்தனர்.

1980களின் முற்பகுதியில் சென்னை விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளைச் சோதனை செய்யும் ஸ்கேனிங் கருவிகள் அறிமுகமாகவில்லை.

தமது பெட்டிகளைச் சேகரித்துக் கொண்ட பயணிகள் சுங்க அதிகாரிகள் முன்பு சோதனைக்காகக் காத்திருந்தார்கள். வேடனைக் கண்ட மானின் மருட்சி அவர்கள் கண்களில் குடிகொண்டிருந்தது. ஒவ்வொரு சுங்க மேஜைக்கு வெளியிலும் ஒரு வெள்ளுடை வேந்தர் (சுங்கக் கண்காணிப்பாளர்) ஓர் உயர்ந்த இருக்கையில் அமர்ந்தபடி சோதனைக்கு வரும் பயணியிடம் அவர் கொண்டு வந்திருக்கும் பொருட்களின் மொத்த மதிப்பைக் குறிப்பிட்டிருக்கும் படிவத்தில் கையெழுத்திட்டுக் கவுன்டருக்கு உட்புறம் நிற்கும் அதிகாரியிடம் கொடுத்தார். பயண உடைமைகள் திறக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டது. பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அல்லாமல் புதிதாக வாங்கிவரப்பட்ட பொருட்களின் பட்டியல் அனுமார் வால் போல், மளிகைக் கடைக்காரர் பட்டியல் போல, தீபாவளிக்கு வாங்கும் பட்டாசுப் பட்டியல் போல நீண்டு கொண்டே போனது. அப்போது சுங்கத் தீர்வையின்றி விமான நிலையத்திலிருந்து வெளியேற வேண்டுமானால் ஒரு பன்னாட்டுப் பயணி கொண்டுவரும் பொருட்களின் மதிப்பு 1200 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு லிட்டர் மதுவும் ஒரு கார்ட்டன் சிகரெட்டும் கொண்டு வரலாம்.

1980களில் ‘சைனா சில்க்’ என்ற பளபளக்கும், கண்ணைப் பறிக்கும், கண்ணைக் கூசவைக்கும் புடவைகள் சிங்கப்பூர், மலேசியப் பயணிகள் கொண்டு வரும் பொருட்களில் பிரதானமானவை. ஜப்பானில் தயாரிக்கப்பட்டு ஓரங்களில் தமிழ்ப் பெயர்களுடன் வரும் புடவைகளுக்கும் தமிழ்நாட்டில் மவுசு அதிகம். சென்னை பர்மா பஜாரில் இவற்றை வாங்கவரும் ஆந்திர தேசத்து மகளிரைக் கண்டுவிட்டால் பஜார் வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம்தான். என்ன விலை சொன்னாலும் வாய் பேசாது வாங்கிச் செல்லும் மகளிர் குழாம் அது.

ஒரு சேலையின் சுங்க மதிப்பு 100 ரூபாய் ஒரு பயணி ஐந்தாறு சேலைகளும் ஐந்தாறு பேண்ட் பிட்களும் யார்ட்லி பவுடரும் ஒரு டஜன் ரெட் லீப் பால்பாயின்ட் பேனாக்களும் கொஞ்சம் சாக்லெட், பிஸ்கட் வகைகளும் கொண்டு வந்தாலே அவற்றின் மதிப்பு 1200 ரூபாயை எட்டிவிடும். மற்ற பொருட்களுக்கான சுங்கத் தீர்வை மருண்ட மானை மயக்கத்தில் ஆழ்த்திவிடும்.

‘எல்லாம் எங்களுக்காக வாங்கி வந்தது சார். வெளிநாடு போயிட்டு வந்திய… என்ன வாங்கிட்டு வந்த என்று உறவுக்காரர்களும் கேட்பாங்கதான சார்… எதுவும் விக்கறதுக்கு வாங்கினது இல்ல சார்’ என்று முறையிடும் பயணிகள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவகாசம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பார்கள் அதிகாரிகள்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான துறை சுங்கத்துறை. ஈறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட சோழ மன்னன் கரிகாலன் என்கிற திருமாவளவனின் சுங்க அதிகாரிகள், மடல் கொண்ட தாழை மல்கியிருக்கும் பூம்புகார் நகரத்துக் கடற்கரையில் உள்ள அகன்ற தெருக்களில், மன்னனின் நிதிவளம் பெருக்கக் கடும்சினம் கொண்ட கதிரவனின் தேரில் பூட்டிய புரவிகளைப் போலச் சுங்கவரி வசூலித்தார்கள் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய ‘பட்டினப்பாலை’யில் பதிவாகியிருக்கிறது.

அந்த வேகம் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. இன்றுவரை மத்திய அரசின் வருவாயில் பெரும்பகுதி சுங்கம் மற்றும் கலால் துறையின் மூலம்தான் கிடைக்கிறது. சமீபத்தில் கலால்துறை ஜிஎஸ்டி துறையாகப் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. வேலை ஒன்றுதான். சுங்கத் துறை தனது தனித்துவத்துடன் இயங்கி வருகிறது.

அடிக்கடி சிங்கப்பூர் மலேசியா சென்று அங்கிருந்து வியாபாரச் சாமான்களைக் கொண்டு வரும் பயணிகள் சிலர் இருந்தனர். அவர்களைத் தீவிரச் சோதனைப் பகுதிக்குச் சுங்கக் கண்காணிப்பாளர்கள் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பகுதிக்கு வரும் வியாபாரிகளின் பெட்டிகள் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு அக்குவேறு ஆணி வேறாகக் குடைந்து எடுத்து மதிப்பீடு செய்யப்பட்டன. அவர்களுக்குத் தண்டமும் அபராதமும் விதிக்கப்படும். விதிமீறியவர் மீது விதிக்கப்படுவது தண்டம் (Penalty). விதிமீறிக் கொண்டு வரப்பட்ட பொருட்கள் மீது விதிக்கப்படுவது அபராதம் (fine). 80களில் மறைத்துக் கடத்தி வரும் பொருட்கள் அல்லது முறையாகச் சுங்க அதிகாரியிடம் தெரிவிக்காத பொருட்களின் மதிப்பு பத்தாயிரம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் வானத்தில் பறந்து மத்திய சிறைச்சாலைக்குப் பயணப்படவேண்டி வரும்.

அப்படித்தான் மலேசியச் சிறையிலிருந்து மொட்டைத் தலையுடன் வந்தவர்களில் இருவர் மாட்டிக் கொண்டார்கள். ஒருவர் மன்னார்குடியில் சைவ ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். இன்னொருவர் ஒரத்த நாட்டைச் சேர்ந்தவர். மலேசியச் சிறையிலிருந்து விடுதலையாகித் தாயகம் திரும்ப கோலாம்பூர் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த விமான நிலையத்திற்கு வெளியே இருந்த முன்பின் தெரியாத ஒருவர், ஆளுக்கு ஒரு ‘P’ பேக் ஒன்றைக் கொடுத்துச் சென்னைக்கு எடுத்துச் செல்லும்படியும், அவற்றை விமானநிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் நபர் அவர்களை அடையாளம் கண்டு வாங்கிக் கொள்வார் என்றும், அவர்களிடம் சென்னை நபர் தலைக்கு 1000 ரூபாய் தருவார் என்றும் கூறி அந்த ‘P’ பேக்குகளை ஒப்படைத்திருக்கிறார்.

‘P’ பேக் என்பது P என்ற எழுத்து பையின் இருபுறம் முழுவதும் காணப்படும் ஒரு கைப்பை. 80களில் பிரபலம். இவர்களும் அதை அப்படியே நம்பியிருக்கிறார்கள். சுங்க அதிகாரிகளின் சோதனையின் போது ஒவ்வொரு பேக்கிலும் ஒரு எம்ர்சின்ஸி லைட் இருந்திருக்கிறது. அந்த எமர்சன்ஸி லைட்டுகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைச் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துக் கைப்பற்றியிருக்கிறார்கள். அவ்வளவுதான். மலேசியச் சிறையிலிருந்து வந்தவர்கள் சென்னை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள்.

இப்படி ஏமாந்துபோன எளியவர்களின் கண்ணீர்க் கதைகள் 1995 வரை சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறையினர் பதிவு செய்யும் வாக்குமூலங்களில் தொடர்ந்து பதிவாகி வந்தன. திறந்தவெளிச் சந்தை உருவானபின், சுங்கச்சட்டங்கள் தளர்த்தப்பட்டபின் கடத்தல் தொழில் நசிந்து போனது. கடந்த 25 ஆண்டுகளாக ‘மொட்டைத் தலை’ பயணிகளை சென்னை விமானநிலையம் வரவேற்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.

மலேசியாவிலிருந்து வரும் தமிழர்கள் தங்கள் நாட்டுக்கே உரித்தான பலவண்ணச் சட்டைகளை அணிந்து வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். பெண்களின் தோற்றத்தில் ஒரு அந்நியத்தன்மை கலந்திருக்கும். தமிழில் பேசினாலும் பேசும் தொனியிலும் மொழிநடையிலும் வித்தியாசமிருக்கும் ‘whatla, whyla’ (வாட்லா, ஒய்லா) என்ற வார்த்தைகள் பொங்கிவழியும். பாஸ்போர்ட்டைப் பிரித்தால் அவர்களின் பெயர்கள் மாரியாயி, சின்னாயி என்றெல்லாம் தமிழ் மணக்கும்.

1985இல் சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா என நான்கு விமான கம்பெனிகளின் விமானங்கள்தான் இயங்கிக் கொண்டிருந்தன. கொழும்பிலிருந்து வரும் விமானங்கள் மூலம் அதிகபட்சம் 200க்கும் குறைவான பயணிகளே வருவார்கள். கொழும்புப் பயணிகளின், பயணச் சுமைகள் பரிசோதிக்கப்படும்போது வருகைக்கூடம் முழுவதும் கிராம்பு வாசனை வீசும்.

சிலோன்காரர்களுக்குச் சென்னையில் பணம் ஈட்டித்தரும் பொருள் கிராம்பு. கிராம்புப் பைகளில் ஓரிரண்டு ஜான் வாக்கர் விஸ்கி பாட்டில்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அவை கைப்பற்றப்பட்டால் சுங்க அதிகாரிகளிடம் தமது மன்றாட்டைத் தொடங்குவார்கள். “அங்கதான் கரைச்சல் என்று இங்கு வந்தால் இங்கேயும் கரைச்சல். நாங்கள் பாவம்தானே” என்று கதைத்துப்போடுவார்கள். இப்படி கிராம்பு கொண்டு வருபவர்களில் சிங்களப் பெண்களும் ஈழத்தமிழ்ப் பெண்களும் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் சென்னைக்கு சீசன் டிக்கட் வாங்காத குறையாகத்தான் இருக்கும். எல்லோரும் மண்ணடியில்தான் தங்குவது வழக்கம் திரும்பிப் போகும்போது லுங்கிகளும் சேலைகளும் வாங்கிப் போவார்கள். அவை மூட்டை மூட்டையாக டிராலிகளில் அடுக்கப்பட்டிருக்கும். சிலோன் பெண்கள் ஸ்கர்ட்டும் சட்டையும் அணிந்தபடி ஈழத்தமிழில் உரையாடுவார்கள். அவர்களில் மெலிந்த பெண்களைப் பார்ப்பது அரிது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மலேசியன் ஏர்லைன் விமானங்கள் வந்தவுடன் ஒருமணி நேரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிவிடும். ஆதலால் அந்த விமானங்களின் பைலட்டும் பணிப்பெண்களும் சென்னைக் காற்றைச் சுவாசிக்காமல் போய்விடுவார்கள். ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் பணிக்குழுவினர் மட்டும் சுங்க அதிகாரிகள் முன்பு வந்துநின்று உரிய அனுமதி பெற்று வெளியேறுவார்கள்.

ஒவ்வொரு விமானமும் வந்திறங்கி அந்த விமானப் பயணிகள் வருகைக்கூடத்தில் வந்து சேரும்போது விமான நிலையத்தின் வண்ணமும் வனப்பும் மொழியும் மாறிக் கொண்டே இருக்கும்.

நிலவுலகின் விண்ணகரமாய் நிலைபெற்றிருக்கிறது விமானநிலையம். இங்கே தேவர்களோடு அசுரர்களும் இருப்பார்கள். தேவதைகளுக்குக் குறைவில்லை. ஆனால், பூச்சூடிய பெண்களைத் தான் பார்க்கமுடிவதில்லை. இக்குறையை நீக்குவதற்கென்றே இந்து என்ற ஏர் இந்தியாவின் அலுவலர் இரண்டு முழம் மல்லிகைப் பூவுடன் நடமாடிக் கொண்டிருப்பார். இப்போது அவர் பணி ஓய்வு அடைந்திருக்கலாம். இந்துவின் வாசம் சென்னை விமான நிலையத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும்.

தொடரும்

சந்தியா நடராஜன் <sandhyapathippagam@gmail.com>

Sandhya Natarajan

Amrutha

Related post