அமைதியைத் தேடி | ஜான் போஸ்

 அமைதியைத் தேடி | ஜான் போஸ்

நேர்கண்டவர்: மெர்வ் எம்ரே 

தமிழில்: ஸிந்துஜா 

 

நார்வேயின் சறுக்குப் பாறைகளுக்கு இடையே ஓடும் பனியாறுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கும் ஹார்டஞ்சர் பனியாறு, வட திசைக் கடலிலிருந்து, மேற்குச் சமதளத்தில் நிற்கும் மலைகளை நோக்கி ஓடுகிறது. அவ்வழியில் ஒரு கரைப் பகுதி இருட்டாகவும் ஆற்று நீரின் கறுப்பில் ஒளிபட்டு வெள்ளியைப் போல மினுமினுக்கின்றதாகவும் உள்ள இடத்தில் ஸ்ட்ராட்பார்ம் என்னும் சிறிய கிராமத்திலிருந்து போஸ் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற ஜான் போஸ் 1959இல் இங்குதான் பிறந்து வளர்ந்தார். உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஜான் போஸ் ஒருவர். தவிர ஐரோப்பாவில் உருவான மிகச் சிறந்த நாடக ஆசிரியராகவும் கட்டுரையாளராகவும் திகழ்கிறார்.

இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் துறைமுக வளைவை நோக்கிக் கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் தங்கள் கூட்டத்தை நடத்துவது வழக்கம். இதற்கு அருகிலுள்ள இரண்டு வெண்ணிறக் கட்டிடங்களில் ஒன்றில் போஸ் வளர்ந்தார். அவரது அன்னை இன்றும் அங்கே வசித்து வருகிறார். அந்த வீடு போஸின் பாட்டனாருக்குச் சொந்தமானது.

இந்த ஆகஸ்டில் போஸ் அறக்கட்டளை ஜான் போஸ் படைப்புகளின் மீதான ஓர் உலகளாவிய கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பகத்தினர், பத்திரிகை நிருபர்களை அழைத்திருந்தது. அந்த நிகழ்ச்சி நடந்த கட்டிடத்தின் மேல் மாடியில் ஹார்டன்ஜர் வயலின் விற்பன்னரின் இசையில் சுழல் நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கீழ்த்தளத்தில் ஆடை அலங்காரக் கலைஞர் அசே ஜோன்ஸின் கண்காட்சியைப் பார்வையிட வசதி தரப்பட்டிருந்தது. படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், இரவு ஆடைகள் ஆகியவற்றில் போஸின் எழுத்துக்கள் தைக்கப்பட்டிருந்தன. அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் ஜோன்ஸின் ஒரு துணியை எடுத்து அதிலிருந்த போஸின் வரிகளை அங்கு கூடியிருந்த மொழிபெயர்ப்பாளிகளில் யாராவது ஒருவர் மொழிபெயர்க்க முன் வருகிறாரா என்று கேட்டார். கூட்டத்தில் சலசலப்பும் முணுமுணுப்பும் கேட்டன. சூழலில், போட்டியில் பங்கு பெரும் உற்சாகமும் வெல்லும் ஆசையும் நிரம்பி வழிந்தன.

ஒளி, இசை, தூய நீர், கவரும் ஆடைகள் ஆகியவை நிரம்பிய இந்தச் சூழ்நிலையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டுமென்றால் அது: ‘புனித யாத்திரை!’ வாழும் படைப்பாளிகளுக்கு மிக்க மரியாதை கொடுத்து நடத்தப்படும் இம்மாதிரி நிகழ்ச்சி மிகவும் அபூர்வமானது. தான் மேற்கு நார்வேயின் கிராமப்புரத்தைச் சேர்ந்த சாதாரண ஆசாமி என்று போஸ் என்னிடம் கூறினார்.

அவர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஒரே சமயம் கம்யூனிஸ்ட்டாகவும் அராஜகவாதியாகவும் ஹிப்பியாகவும் வலம் வந்தார். வயலின் வாசிப்பதில் அவருக்கு மிகவும் ஈடுபாடு இருந்தது; புத்தகங்கள் படிப்பதிலும்! பெர்கன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஒப்பீடு இலக்கிய இயலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தார். மேற்கத்திய நார்வேயின் கிராமப்புறங்களில் வெகுவாகப் புழங்கிய நீனாக்ஸ் மொழியில் தன் படைப்புகளை உருவாக்கினார். அவர் கல்வி கற்க ஆரம்பித்ததும் இம்மொழியில் தான் என்று ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூறினார். அவரது நாவலான ‘சிவப்பு, கறுப்பு’ 1983இல் பிரசுரமாயிற்று. தொடர்ந்து வந்த முப்பது ஆண்டுகளில் அவர் ‘துயரம் I’, ‘துயரம் II’, ‘காலையும் மாலையும்’, ‘அலிஸும் நெருப்பும்’, ‘மூன்று தொகுப்பு’ ஆகியவற்றை எழுதினார். அதன் பின்னர் நாடக ஆசிரியராக மாறிப் பிரமிக்கத்தக்க அளவில் வெற்றி பெற்றார். 2012ஆம் ஆண்டில் கத்தோலிக்கராக மாறினார். குடியை விட்டொழித்தார். மறுமணம் செய்துகொண்டார்! அதன் பின் ஏழு வால்யூம்கள் அடங்கிய எண்ணூறு பக்க ‘செப்டாலஜி’ நாவலை ஒரு வாக்கியத்தில் எழுதி முடித்தார். அச்சமயம் தனது எழுத்தில் ‘ஆசுவாச நடையை’ப் புகுத்தினார்.

செப்டாலஜியின் கதை சொல்லி அஸ்லே என்ற ஓவியன், கத்தோலிக்கனாக மாறியவன். தன் மனைவியை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருப்பவன். கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய இரவில் அஸ்லே தனது பழைய நண்பன் ஒருவனைப் பார்க்கிறான். அவன் பெயரும் அஸ்லே. அந்த நண்பன் விஷ மது அருந்தி நகரத்துத் தெரு ஒன்றில் மயங்கி விழுந்து மரண நிலையில் கிடக்கிறான். அவர்களின் நினைவுகள் இரட்டிப்பாகின்றன. திரும்பத் திரும்ப எழுகின்றன. சேர்ந்து மயங்கிய நிலையில் பேசுவது எல்லாம் ஒரு குரலாக ஒலிக்கின்றது. ஒரே நேரத்தில் பல நேரங்களும் இடங்களும் தோன்றி மறையும் மனநிலை ஏற்பட்டு விடுகின்றது.

போஸின் நாடகங்களையும் நாவல்களையும் படிக்க விரும்பும் ஒருவர் அவற்றுடன் ஐக்கியமாகி விடத் தயாராக இருக்க வேண்டும். ஆரவாரமற்று ஒதுங்கிய மனநிலை கொண்ட ஆசிரியரின் எழுத்தில் காணப்படும் அழுத்தம் அவரது படைப்புத் தளமெங்கிலும் பரவிக் கிடக்கிறது. அவரது பெரும்பாலான பாத்திரங்கள் ஆண், பெண், அம்மா, குழந்தை என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். பெயர் என்று எதுவும் தனியாக இல்லாது. நினைவுகளின் அடியாழத்துக்குச் சென்று உறவுகளின் உண்மையான அர்த்தத்தைப் பரிசீலிக்கும் இப்பெயர்கள் வாசகரைப் படைப்புடன் ஒன்ற வைக்கின்றன. நான் படித்தவற்றுள் ‘செப்டாலஜி’, இறையாண்மையின் நடப்பு பற்றி எனக்கு நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

ஜோஸ் மிகவும் மதித்த பதினான்காம் நூற்றாண்டு வேதாந்தி எக்கார்ட் இவ்வாறு கூறுகிறார்: ‘இருட்டில்தான் ஒருவர் வெளிச்சத்தைக் காண்கிறார். அது போலவே நாம் துக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் போது இந்த ஒளிதான் நமக்கு அருகாமையில் ஆதரவாக இருக்கிறது.’

மற்றவர்களை ஒப்பிடுவது போஸுக்கு அவ்வளவு சரியாகப்படவில்லை. பெர்னார்ட்? ஆக்கிரமிப்பாளர்! பெக்கெட்? அடக்க முயற்சிப்பார்! இப்சன்? ‘இருப்பதிலேயே அவர்தான் எனக்குத் தெரிந்து அழித்தல் வேலையில் மிக்க ஆர்வம் காட்டியவர்!’ என்கிறார் போஸ். மேலும், ‘எனக்கு அவ்வளவாகச் சரியாக வராத ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் என் எழுத்து சமாதானத்தை விரும்புகிறது, கிறிஸ்துவ பாஷையில் சொல்வதென்றால் அமைதியை நாடுகிறது!’ என்கிறார்.

இந்தக் கூட்டத்துக்கு போஸ் வரமுடியவில்லை. காரணம் அவர் அதற்கு முந்திய இரவு நார்வே கலாச்சார அமைச்சகம் தந்த விருந்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. விருந்துக்கு வந்த நார்வே வெளியுறவு அமைச்சர் ஓட்விக் விட்ஜென்ஸ்டெய்ன், ‘எங்கு ஒருவரால் பேச முடிவதில்லையோ அங்கு அவர் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது’ என்று கூறினார்.

அந்த விருந்துக்குப் பின் நாங்கள் ‘இலக்கிய இல்லத்தில் போஸ் அறையில்’ உட்கார்ந்து உரையாடினோம். அந்த அறையில் தலையைக் குனிந்தபடி போஸ் அமர்ந்திருக்கும் ஓவியம் சுவரில் இருந்தது. அந்த ஓவியத்தில் காணப்பட்டதை விட போஸ் அவர் படைப்பில் வர்ணித்த அஸ்லேயைப் போல இருந்தார். நீண்ட வெள்ளைப் போனி டெயில், கறுப்பு ஓவர்கோட்டு, கறுப்பு ஷூக்கள், சட்டைப் பையில் மூக்குப்பொடி டப்பா… உரையாடுவது அவருக்குச் சற்று அயர்ச்சியைத் தருவது போலக் காணப்பட்டாலும் பேசிய வார்த்தைகளில் உறுதி தெரிந்தது.

எங்கள் உரையாடலில் அவர் எழுத்து தரும் பல்வேறு உணர்ச்சிகளை நான் கவனித்தேன். அறிவார்ந்த ஆர்வம், பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றை. கதைகளில் சந்தேகத்துடன் தென்படும் மெய்யுணர்வு பற்றிய வருணனைகள் எப்போதும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கின்றன. ஆனால், இவைகளுக்கு அப்பால் அவர் அன்பான மனிதராக விளங்கினார். காதல், கருணை, பொறாமை, சமாதானம், குழப்பம், சாவுக்கு அருகாமையில் சென்று திரும்பிய அனுபவம், மொழிபெயர்த்தல் மீது அவர் கொண்டுள்ள காதல் என்று பல்வேறு விஷயங்களை எவ்விதத் தயக்கமும் இன்றிப் பேசினார்.

அவருடனான உரையாடல் தெளிவைத் தரும் பொருட்டு இங்கு செம்மைப்படுத்தப்பட்டுள்ளது.

– எம்ரே

நீங்கள் ஏன் நேர்காணல்களை அனுமதிப்பதில்லை?

நான் என் நேர்காணல்களை மின்னஞ்சல் மூலமாகத் தருகிறேன். பெரும்பாலும் ஆங்கிலம் எழுதுவது எனக்கு எளிதாயிருக்கிறது, பேசுவதை விட.

நான் பலரைப் பேட்டி கண்டுள்ளேன். அவர்கள் எழுதித் தர ஆர்வமாயிருப்பதற்கு காரணம் பேச இயலாததால்தான் என்று கூறியிருக்கிறார்கள்.

எனக்கும் அப்படித்தான். விட்ஜென்ஸ்டெய்ன் கூறியபடி நம்மால் பேச முடியாத போது அமைதியாக இருப்பது நல்லது. ஜாக்விஸ் தெரிதா என்ன சொன்னார் தெரியுமா? ‘உன்னால் சொல்ல முடியாததை எழுதிக் காண்பித்து விடு.’ நான் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

‘ஒரு தேவதை மேடையில் நடக்கிறாள்’ என்னும் உங்களுடைய ஆரம்பக் காலக் கட்டுரைகளில் தெரிதா மிக அதிகமாக வலம் வருகிறார். உங்களின் நாவல்களிலும் நாடகங்களிலும் கூடப் பேச்சும் அமைதியும் பற்றிய தெரிதாவின் சிந்தனையைக் காண முடிகிறது.

நான் 1979இல் தெரிதாவைப் படிக்க ஆரம்பித்தேன். இங்கே நார்வேயில் பல்கலைக்கழகங்களில் மார்க்ஸீயத்தின் தாக்கம் அதிகம். தீவிர மாவோ கட்சி ஒன்று இங்குள்ள கல்வியாளர்களையும் எழுத்தாளர்களையும், இவர்களைப் போன்றவர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அது அன்றைய தினத்துப் பொறி. இதில் நானும் கட்டுண்டு கிடந்தேன். நான் சமூகவியலைப் படிக்க ஆரம்பித்த போது அது படுமுட்டாள்தனமான கருத்துக்களைக் கொண்டிருந்தது போல எனக்குப் பட்டது. ஆகவே, நான் தத்துவ இயலுக்கு மாறினேன். அந்தச் சமயத்தில் மார்க்ஸீயத்திலிருந்து வெளியேறி, பிந்திய கட்டமைப்பு வாதத்துக்கு மாறிச் செல்லும் உந்துதல் வலிமையாக இருந்தது. எனக்குத் தெரிதாவை முதன் முதலாகப் படித்த சம்பவம் தெளிவாக நினைவில் இருக்கிறது. டேனிஷ் மொழிபெயர்ப்பில் வந்த மொழிக் கட்டுடைப்பு பற்றிய தெரிதாவின் Grammatology என்னும் புத்தகம் அது.

அந்தப் புத்தகத்தின் தாக்கம் எனக்கு அதிக அளவில் இருந்தது. மார்ட்டின் ஹெடக்கரின் ’இருத்தலும் காலமும்’ புத்தகத்தை நீங்களும் படித்திருக்கலாம். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அது படிக்கக் கடினமாக இருந்தாலும் நான் அதனால் கவரப்பட்டேன். ஹெடக்கரின் முக்கிய கேள்வி: ‘எல்லா உயிர் வாழ்க்கைக்கும் பொதுவானது என்ன?’

ஆனால், தெரிதாவின் முக்கிய கேள்வி இதற்கு நேரெதிராக இருந்தது: ‘எது உயிர் வாழ்க்கையில் வித்தியாசத்தைக் கொண்டு வருகிறது?’ அப்போது எழுதுவது ஒரு புதிராக எனக்கு இருந்தது. அது பேசுவதைப் போன்றதல்ல. வித்தியாசமானது. மிக வித்தியாசமானது. அதனால்தான் தெரிதாவுடனும் அவரது எழுத்துடனும் எனக்குத் தொடர்பு இருந்தாற் போல உணர்ந்தேன்.

இதன் பிறகு நான் ஒப்பிலக்கியம் படிக்க ஆரம்பித்தேன். அப்போது நான் என் முதல் நாவலையும் சில கட்டுரைகளையும் எழுதி விட்டேன். நாவல் கோட்பாடு பற்றிதான் எனது படிப்பு இருந்தது. இக்கோட்பாடுகள் கதை சொல்லியை முன்வைத்து எழுந்தவை. கதை சொல்லி, பாத்திரங்கள், அவர்களுக்கிடையேயுள்ள வெவ்வேறான பார்வைகள், சம்பவங்கள் – இவையெல்லாம் முக்கியமானவையே. ஆனால், கதை என்பதன் முக்கியத்துவம் கதை சொல்லியிடம் இல்லை. வாய்வழிக் கதையாடல்களால் ஆரம்பத்தில் இந்த முக்கியத்துவம் கதை சொல்லியிடம் சென்றது. ஆனால், கால மாற்றத்தில் கதை என்பது படைப்பாளியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது என்றாகி விட்டது என்று நான் கருதுகிறேன். எழுத்தாளன் என்பவன் அவன் எழுத்தின் ஒரு பாகம், அதன் அமைப்பு அவனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். என் எழுத்து இக்கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று தீர்மானித்தேன். என் இசைப் பின்னணி இதற்கு உறுதுணையாக இருந்தது என்று கூற வேண்டும். நான் முதலில் எழுத ஆரம்பித்தது, என் பனிரெண்டாவது, பதிமூன்றாவது வயதில்- ஒரு கவிதையை. பிறகு சில கவிதைகளும் கதைகளும் எழுதினேன். அவை நான் எனக்காக, நானே எழுதியவை, பள்ளிக்காக இல்லை. என்றும் அவை என் அந்தரங்கத்துக்கு உரித்தானவை என்று உணர்ந்தேன். நான் தங்குவதற்கு ஒரு தனியிடம் கிடைத்து விட்டதைப் போல இருந்தது.

அந்த இடத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

அது ஒரு பாதுகாப்பான இடம். அதை என் பனிரெண்டாவது வயதில் கண்டுபிடித்து விட்டேன். இப்போது என் வயது அறுபத்தியிரண்டு. அந்த இடம் – அது நானல்ல – என்னுள் இருப்பது. நான் வழக்கமாக என்னை ஜான் என்று சொல்லுவேன். எனக்கு ஒரு வெளிமுகமும் உண்டு. அது ஜான் போஸ். ஆனால், எழுத்தாளன்? அவனுக்கு ஒரு பெயரும் கிடையாது.

அந்த இடம் நடமாடுவதற்கும் கேட்பதற்குமானது. தங்குவதற்கு மிகவும் பத்திரமானது. அது பயத்தை விளைவிப்பதும் சாத்தியம். ஏனென்றால் அது நான் அறிந்திராததை அடைய என்னை இட்டுச் செல்லும் வழி. என் சிந்தனையின் எல்லைகளுக்கு நான் செல்ல வேண்டும். இந்த எல்லைகளை நான் கடக்க வேண்டும். நீங்கள் சற்று வலிவற்றவராக இருந்தால் இந்த எல்லைகளைக் கடக்கும் முயற்சி ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். பல வருடங்கள் நான் இம்மாதிரி உணர்ந்தபடி கிடந்தேன். என் விஷயங்களை எழுதாமல், என் எல்லைகளைக் கடக்க முடியாதவனாக சில காலம் இருந்தேன்.. நான் சிறப்பாக எழுதும் போது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது – நான் எழுதிக்கொண்டிருப்பவை ஏற்கனவே எழுதியாகி விட்டது என்று. எனது எல்லை எங்கோ வெளியில் இருக்கிறது; அது மறைவதற்கு முன்பு நான் எழுதி விட வேண்டும்.

சில சமயங்களில் இவற்றை ஒரு மாதிரி சமாளித்து விடுவேன். உதாரணமாக ‘காலையும் மாலையும்’ நாவலை எழுதும் போது இரு பாகங்களையும் எந்த வித மாற்றமும் இல்லாமல் முடித்தேன். ‘யாரோ வரப் போகிறார்கள்’ என்னும் என் முதல் நாடகத்தை ஒரே தடவையில் எழுதி முடித்து விட்டேன். ஆனால், ‘செப்டாலஜி’யைப் போன்ற பெரும் நாவலை எழுதும் போது பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான சில பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

ஒரு புதிய இடத்தில் நுழைந்து புதிய உலகத்தைத் தரிசிக்க நான் செய்யும் முயற்சி என்னைச் சிறப்பாக எழுத வைக்கிறது. எதிர்காலத்தில் என்னால் எதுவும் எழுத முடியாமல் போகலாம் என்னும் நிச்சயம் என்னிடம் இப்போதே இருக்கிறது. அதனால் பாதகம் எதுவுமில்லை. யாரோ எதுவோ எனக்குத் தந்த பரிசுதான் நான் படைப்பில் இறங்கியது என்று நினைத்துக்கொள்கிறேன்.

பனியாற்றின் கரையிருட்டும் கறுப்பு நீரின் மீது பாயும் ஒளி வெள்ளமும் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் இளைமைப் பருவத்தின் பெரும் பகுதியைப் படகில் செலவழித்திருக்கிறீர்கள். அந்த இடத்துக்குச் சென்ற போது உங்கள் எழுத்தின் சூழல் பற்றிக் கற்பனை செய்ய முடிந்தது.

நானும் என்னையொத்த சிறுவர்களும் வெகு சுதந்திரமான சூழலில் வளர்க்கப்பட்டோம். ஏழெட்டு வயதிருக்கும் போதே தனியாகப் படகில் செல்ல அனுமதிக்கப்பட்டோம். பல நினைவுகளில் முக்கியமானது, தந்தையுடன் கோடைக்காலப் பகலிலும் இரவிலும் மீன் பிடிக்கச் சென்ற தருணங்கள்! இரவின் சுற்றுப் புறமும் இயற்கை அழகும் கடற்கரையின் விரிந்த பரப்பும் மனதில் எழுப்பியது – அதை ஒரு சித்திரம் என்று சொல்ல விரும்பவில்லை என்றாலும் – அந்தச் சித்திரம் வெளிப்படுத்திய வண்ணங்களும் இசையொலியும் மறக்க இயலாதவை. அந்த வண்ணத்தையோ கேட்ட ஒலிகளையோ எழுத்தில் கொண்டு வர இயலாது. அது ஒரு கேட்கும் செயல். நான் கேட்கிறேன்.

உங்கள் காதில் விழுவது என்ன?

நான் எழுதுவது எனக்கு ஒலிக்கிறது. ஆனால், பார்க்க முடியவில்லை. கற்பனை செய்ய முடியவில்லை. அது எங்கிருந்து வருகிறது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னுடையதுதான். அது என் மொழியென்று உபயோகித்துக்கொள்ள முயலுகிறேன். எழுதுவதின் பின்புலம் என் படைப்பின் உருவத்தை நிர்ணயிக்கிறது. உள்ளடக்கம் உருவம் சார்ந்து நிற்கிறது. ஒவ்வொரு உரைப் பகுதிக்கும் புதிதான உருவம் உண்டாகிறது. ஒரு தனித்த அண்ட பேரண்டத்தை இந்த உருவம் பெரிதும் தொடர்புகொள்கிறது. நானே அதை உருவாக்குகிறேன். உதாரணமாக’ செப்டாலஜி’ என்பது ஓர் அண்டம். ‘மூன்று தொகுப்பு’ என்பது இன்னோர் அண்டம்.

jon fosse

உங்கள் உலகங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக உள்ளன. அவை அவற்றுக்கான தர்க்கத்தையும் உருவத்தையும் தம்முள் கொண்டுள்ளன. அல்லது பாத்திரங்களின் பெயர்களில் மட்டுமாவது. ‘செப்டாலஜி’யின் கதைசொல்லியான அஸ்லே வருணிப்பது போல ‘அவை உள்ளார்ந்த சித்திரத்தை’ வெளிப்படுத்துகின்றன. ஒரு விதத்தில் முழுமை பெற்ற உருவங்களாகக் காட்சியளிக்கின்றன.

இது மற்றொரு பக்கம். தனித்துவம் பெற்ற உலகமாக ஒவ்வொன்றும் விளங்க வேண்டும். ‘மூன்று தொகுப்’பில் ஒவ்வொரு பாகமும் தனிப்பட்ட உலகம். ஆனால், அதே சமயம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. அதனால் அது நாவலாகிறது. மூன்று குறுநாவல்களின் சேகரம் என்று அழைக்கலாம். ‘மூன்று தொகுப்பு’ம் ‘செப்டாலஜி’யும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. நான் ஒரே மாதிரி பெயர்களை, இடங்களை நாவல்களில் உபயோகிக்கிறேன். இச்சித்திரங்கள் திரும்பத் திரும்பத் தலை காட்டுகின்றன. ஏகப்பட்ட மனிதர்கள் நீரில் மூழ்குகிறார்கள், ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறார்கள்; பெரும்பாலும் கடலை அல்லது பனியாற்றை. ஓர் ஓவியன் மரத்தை வரைகின்ற மாதிரி. இதற்கும் முன்னால் பலர் அதை வரைந்திருக்கக் கூடும். ஆனால், அவன் தனது ஓவியத்தை வரைகிறான். நல்லதொரு ஓவியன் ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்கிறான். ஆனால், ஒவ்வொரு முறையும் அவனுக்குப் புதிய படிமம் கிடைக்கிறது. என் எழுத்தில் நான் செய்ய முயலுவது இதைத்தான்.

எப்படி மதத்தையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் காணுகிறீர்கள்?

நான் அறியாததைத் தேடிச் சென்ற போது மதத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டேன். நான் ஒரு நாஸ்திகனாக இருந்தேன். ஆனால், நான் எப்படி எழுத வந்தேன், என்ன நடந்தது எனக்கு என்று தெரியவில்லை. யார் எனக்கு இதைத் தந்தார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. நீங்கள் உங்கள் மூளையை விஞ்ஞானத்தால் பகுத்துப் பார்த்து விடலாம். ஆனால், உள்ளொளியை எப்படிப் பிடிக்க முடியும்? அது வேறு விதமான ஏதோ ஒன்று என்று எனக்குத் தோன்றியது. இலக்கியக் கோட்பாடுகளை, அவைகளை விட, இலக்கியம் அறிந்திருப்பது மிக மிக அதிகம்!

அஸ்லே கடவுளைப் பற்றிக் கூட இம்மாதிரிதான் நினைக்கிறான். ‘கடவுள் என்பவர் கைக்கெட்டாதவர்; ஆனால், மிக மிக அருகில் நிற்பவர்!’ என்று.

‘செப்டாலஜி’ சுயசரிதை எழுத்து இல்லை என்றாலும் அதில் காணப்படும் சிந்தனைகளும் பண்புக் கூறுகளும் என்னோடு பெருமளவில் ஒத்துப் போகின்றன. உதாரணமாக அஸ்லேயின் தோற்றம், வெண்முடி… அதில் வரும் கதாநாயகனின் பாத்திரம் என்னைப் போல் காணப்படுவதாக ஓர் ஆட்டோஃபிக்‌ஷன் எழுதினேன். என் சமகாலத்தவரின் நோக்குகளுடன் கதை உருவாயிற்று. ஆனால், கட்டுரையைப் போல வெளிப்படும் எண்ணங்கள் என் சொந்த வாழ்க்கையில் நிலவிய எண்ணங்களே. உதாரணமாகக் ‘கடவுள் உனக்கு அருகாமையில் உள்ளார்; ஆனால், தொட முடியாது. அவர் தொலைவில் உள்ளார்; ஆனால், உன் நினைப்புக்கு எட்டாதவர்’ போன்ற கருத்துக்கள். உண்மையில் இவ்வுலகில் உள்ள சில மகிழ்ச்சியான மனிதர்கள் தங்கள் அனுபவங்களைக் கடவுளின் வடிவத்தில் பார்க்கிறார்கள்.

அஸ்லே மதத்தைக் கொள்கைப்பிடிப்பு அல்லது சித்தாந்த வழிமுறை என்று சொல்கிறான். கடவுளுக்கும் சர்ச்சுக்கும் சித்தாந்தங்களுக்குமான உறவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் கடவுளின் மீது உண்மையான பற்றைக் கொள்ளும் போது சித்தாந்தங்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. கடவுள் இருப்பதை நம்புபவர் என்றால் நீங்கள் சார்ந்திருக்கும் வட்டம் வித்தியாசமானது. அதற்காக சித்தாந்தங்களோ நிறுவனங்களோ இருக்க வேண்டாம் என்று ஒருவர் நினைக்கக் கூடாது. நம்பிக்கையின் மீதான மறைபொருள், இரண்டாயிரம் ஆண்டுகளாக நின்று நிலைத்திருப்பதால்தான் சர்ச் ஒரு நிறுவனமாக முடிந்தது. இதைப் புரிந்துகொள்வது அவசியம். ஆனால், சித்தாந்தங்கள் மதரீதியாக உண்மையை எதிரொலிப்பதில்லை.

நாம் இன்றிருக்கும் உலகில் பொருளாதாரத்தின் ஆதிக்கம் அளவற்ற சக்தியுடன் நடமாடுகிறது. உலகை நடத்துவதே அதுதான். இதற்கு எதிர்நிலையில் நடமாடும் சில சக்திகளில் சர்ச்சும் ஒன்று. சர்ச் நின்று நிலை பெற – முக்கியமாகக் கத்தோலிக்க சர்ச் பலம் பொருந்தியது – மதத்தைப் பரப்பியாக வேண்டும். சர்ச், முதலாளித்துவ முறைகளுக்கு எதிரானது. நம்மிடம் இலக்கியமும் கலையும் சிறந்த நிறுவனங்களாக நிற்கின்றன. ஆனால், அவை சர்ச்சைப் போல் பலம் நிறைந்தவை அல்ல.

கருணை என்று எதை நம்புகிறீர்கள்?

நான் அதைப் பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு அது முக்கியமானது.

எனக்கும்தான். அது முக்கியமான ஒரு கருத்தாக்கம். சில சமயம் நான் எழுதும் போது என் படைப்புத் திறன் எனக்கு ஒரு பரிசாக, சற்று இரக்கத்துடன் அனுப்பப்பட்டதாக நினைக்கிறேன். எனக்குத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி என்னில் எப்போதும் இருக்கிறது. உதாரணமாக நீங்கள் இப்போது என்னுடன் உட்கார்ந்திருக்கிறீர்கள். இந்த அனுபவத்துக்கு நான் தகுதியானவனா என்ற சந்தேகம் எழாமலில்லை. நாடகத் தயாரிப்பில் நடிகர்கள் தங்கள் வரிகளைக் கற்கிறார்கள். மேடை, காட்சி அமைப்பு என்று நாடகத்துக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. இவற்றைச் செய்யுமாறு நான் பணிக்கிறேன். இம்மாதிரி செய்ய எனக்குத் தகுதியில்லை; என் தகுதிக்கும் மீறியது எனக்கு கிடைத்திருக்கிறது என்று எண்ணுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

நான் எழுதுவதும் நன்றாக எழுதுவதும் எனக்கு கிட்டிய கருணையினால்தான். வாழ்க்கையே ஒரு விதத்தில் கருணை நிரம்பியதாகத்தான் இருக்கிறது. இவ்வுலக வாழ்க்கையை வெறுப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பல விதங்களில் வாழ்க்கை சற்றுப் பிசகிய அமைப்புதான். சாவைக் கூடக் கருணை என்று நீங்கள் நினைப்பது தவறல்ல. எப்போதும் இங்கிருப்பது ஒரு வித சகிக்க முடியாத அச்சத்தைத் தருகிறது.

அது துன்பத்தை உள்ளடக்கியிருக்கிறது.

கிறிஸ்துவத்தில் கூறுகிறபடி வாழ்க்கை ஒரு பரிசு: கருணையினால் ஆனது. ஆனால், அதுவே முரண்களின் இருப்பிடமாக இயங்கித் துயர்களை எடுத்து வீசுகிறது. என்னிடம் நான் காண்பதிலேயே பலவும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. சில சமயம் என்னை முரண்பாடுகளின் பிரகிருதியாகக் காண்கிறேன். இப்படியிருந்தும் எப்படி நான் என்னைத் தனியொருவனாக நினைக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை.

உங்கள் படைப்புகளில் குழந்தைப் பருவத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். குழந்தைப் பருவம் முரண்பாடுகள் அற்றதா; பேதைமை காரணமாக?

அதைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். என் வாழ்வின் ஆதாரம் அதில் அடங்கியிருக்கிறது. என் ஏழாவது வயதில் ஒரு விபத்தில் சிக்கி சாவுக்கு அருகாமையில் கிடந்தேன். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து தொலைவில் என்னைப் பார்த்தேன். என்னை அமைதி சூழ்ந்திருந்தது. என் வீட்டைச் சுற்றியிருந்த வீடுகள் கண்ணில் பட்டன. அவற்றை நான் பார்ப்பது அதுதான் கடைசி முறை என்று எனக்குத் தோன்றிற்று. நான் டாக்டருடன் சென்றேன். எங்கும் அமைதி சூழ்ந்திருந்ததாகவும் மகிழ்ச்சி நிரம்பியிருந்ததாகவும் ஒளியூட்டுவதாகவும் தோன்றின. என் குழந்தைப் பருவத்தில் எனக்கு கிடைத்த இந்த அனுபவம் எனக்கு மிகவும் முக்கியமானது. அது என்னைச் சில நேரங்களில் நல்லவனாகவும் சில நேரங்களில் மோசமானவனாகவும் உணர வைத்த தருணம். அவ்வனுபவம் என்னை ஒரு கலைஞனாக உருவாக்கிய, உணர வைத்த தருணம் கூட.

 

முதலில் உங்களின் நாவல்கள் அனைத்தையும்தான் படித்தேன். பிறகுதான் உங்கள் எல்லா நாடகங்களையும் பார்த்தேன். உங்கள் நாடகங்களில் அழுத்தம் நிரம்பிய வலியை ஊட்டும் விவரணைகளாகப் பாலுணர்வு சார்ந்த பொறாமை வெளிப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் நாவல்களில் இது மேலோட்டமாக வர்ணிக்கப்படுகின்றன.

ஒரு நாடகத்தின் பிரதான அம்சம் பொறாமைதான். இது ஆதிகாலத்திலிருந்து நடந்து வந்திருக்கிறது. மேடையில் இருவர்; அப்போது மூன்றாவது நபர் வருவார். உடனே ஒரு நாடகம் நடந்து விடும். இருவருக்கு இடையேயும் ஒரு நாடகத்தை உருவாக்கலாம். என்னுடைய ‘அம்மாவும் குழந்தையும்’ அப்படி ஒரு நாடகம்தான்.

அதைப் படித்ததும் மிகவும் துக்கமாக உணர்ந்தேன்.

ஆம், அது சற்று டென்னஸி வில்லியம்ஸின் நாடகத்தைப் போன்றதுதான். பொறாமையை வைத்து நாடகங்கள் எழுதுவது எளிது என்பதால் நாடகங்கள் எழுதுவதில் எனக்கு அலுப்பு ஏற்பட்டது. பாலுணர்வு சார்ந்த பொறாமை நாடகத்தில் எழும் போது அது சாவைச் சுட்டிக்காட்டுவதாக எனக்குத் தோன்றும்.

வாழ்வும் சாவும் ஒன்றோடொன்று பின்னிச் செல்பவைதானே?

ஆம். அவை தொடர்புள்ளவை. அவை இரண்டையும் சமாளிப்பது ஒரு நல்ல நிலைப்பாட்டைத் தரும். ஒரு நாடகத்தை வெறும் பாலுணர்வுப் பொறாமையைச் சித்தரிப்பது என்ற நோக்கில் மட்டும் நெருங்கினால் அது நிறைவைத் தராது.

உங்களின் ‘யாரோ வர போகிறார்கள்’ நாடகத்தில் என்னை நாடகத்தோடு ஒன்றை வைத்தது, அதன் கதாபாத்திரங்களான ஆணும் பெண்ணும், எப்படி ஆழமாக, அந்த ஆழத்தை உணராமலே, தாங்கள் இருவர் மட்டும் ஒருவருக்கொருவர் தனித்து இருக்க வேண்டும் என்று விரும்புவதைத்தான்.

அது அவர்களின் வழி. இந்த உலகம் வாழத் தகுதியற்றது என்னும் எண்ணத்தில் அதை விட்டுத் தப்பித்து வெளியேற நினைக்கிறார்கள். எப்படியாவது தப்பித்து விட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், உலகிலிருந்து ஒருவர் தப்பிவிட முடிவதில்லை.

அதுதான் முக்கியமான விஷயம். அவர்கள் தங்கள் உலகத்தை உருவாக்கிக் கொண்ட பின்னர், யாரோ வரப் போகிறார்கள். அல்லது வருவார்கள். தாங்கள் இருவர் மட்டுமே கொண்ட உலகத்தை அவர்கள் விரும்புவது அவர்களின் கனவு. நம்மில் அன்பு என்பது முழுமையை அடைவது என்பதுதான். அன்பை அடைந்து விடலாம். ஆனால், அவர்கள் விரும்பும் வழியில் அல்ல. நான் வழக்கமாக எழுதுவது போல இந்த நாடகத்திலும் பல்வேறு விஷயங்கள் பொதிந்துள்ளன. அம்மாதிரி என் எழுத்து அமைந்திருந்தது. நாடகம் உண்மையில் சொல்ல விரும்பியது சேர்ந்திருத்தல் என்பது இயலாத காரியம் என்பதைத்தான்.

உங்களின் ‘இலையுதிர் காலக் கனவி’ல் வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்தமானது. ஓர் ஆணும் பெண்ணும் பெஞ்சில் உட்கார்ந்து குலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவனது திருமணம் அவர்களின் காதலுக்குக் குறுக்கே வந்து நிற்கிறது. அவன், அவளிடம் ‘எனக்குக் காதல் என்பதில் நம்பிக்கை கிடையாது. நான் சொல்வது சாதாரண அர்த்தத்தில் அல்ல. தகப்பன்களிடமிருந்து குழந்தைகளை பிரித்துச் செல்லும் அன்பைப் பற்றி!’ என்கிறான்.

அது ஒரு முட்டாள்தனமான சிந்தனை இல்லை என்று நான் நினைக்கிறேன்.

நானும் அது முட்டாள்தனமான எண்ணம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தடுமாற்றங்கள் நிறைந்த இவ்வுலகில், எந்தவிதமான காதலை நாம் நம்ப முடிகிறது?

நான் இப்போது பேசிய இரண்டு நாடகங்களும் காதலைப் பற்றியதுதான். காதல் என்றால் என்ன என்று இரண்டு நாடகங்களும் வரையறுக்க முயலுகின்றன. நான் எழுதியது உண்மையைத்தான் என்று நம்புகிறேன். அது யதார்த்தமோ வெறும் கதையோ அல்ல. இப்படித்தான் என்னால் சற்றுப் புத்திசாலித்தனமாக உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியும்: அது என் எழுத்தில் உள்ளது.

எழுத்தாளன் தன்னை அறிந்ததற்கும் மேலான புத்திசாலித்தனத்துடன் எழுதுகிறான். இது ஒரு பெரிய விஷயம். தலை சிறந்த இலக்கியம் தரும் பரிசு இது. என்னைப் பொறுத்தவரை காதல் என்பது தனித்துவம் நிரம்பியது. அதே சமயம் அது உலகலாவியதும் கூட. மனிதனுக்கும் இது பொருந்தும். தனித்துவமும் உலகலாவியதுமான ஒன்று முழுமையாக மனிதனுக்கு கிடைக்கிறது. ஆனால், காதலின் தனித்துவத்தை அழுத்தமான இலக்கியமாகப் படைக்க ஒருவனிடம் படைப்புத் திறன் பெருகியிருக்க வேண்டும்.

உங்களது கட்டுரை ஒன்றில் பிரத்தியேகத்திற்கும் அந்தரத்திற்கும் வித்தியாசமுள்ளது என்கிறீர்கள். பல விஷயங்களில் பிரத்தியேகமானவை உலகாவியதாகவும் இருக்கும் சாத்தியம் உள்ளது. உதாரணமாக, முக்கோணக் காதல், வாழ்வதற்கும் சாவதற்கும் உள்ள பந்தம்… இந்த அனுபவங்கள் ஆளுக்கு ஆள் மாறியிருக்கலாம். ஆனால், அவை அடிப்படையில் அனுபவத்தின் கட்டமைப்பில்தான் இயங்குகின்றன.

ஆம். அது உண்மைதான். நான் என் பாத்திரங்களை நபர்களாகக் கருதுவதில்லை. அவர்களை ஒருவித ஒலியாக உணர்கிறேன். இந்த சப்தம், அந்த சப்தம் என்று அவை ஒன்றையொன்று நெருங்கி இயங்குகின்றன. இரு சப்தங்களுக்கிடையே ஒருவித உறவு இருக்கிறது. அந்த உறவே இன்னொரு சப்தமாக உருக்கொள்கிறது. நான் நன்றாக எழுதும் போது இந்த ஒலிகள் ஒன்றாக ஒரு பாடலென மேலெழுந்து வருகின்றன. இன்னும் விஸ்தாரமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு கீர்த்தனை உருவாகி விடுகின்றது.

என் நாடகங்கள் பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் பெற்றதற்குக் காரணமாக, என் வார்த்தைகளையும் அவற்றில் கலந்திருக்கும் தாளம் அல்லது இசையையும் சொல்ல வேண்டும். இவை ஒரு பாடலுக்கான உருவத்தைக் கொடுக்கின்றன. பல்வேறு மொழிகளில் நீங்கள் இவற்றைப் பாடலாம். நாட்டுப்புறக் கதை பாடல் (Ballad), இசை நாடகம் (Opera) போலப் பாடிக் கேட்கலாம். ஆனால், கதைகளை விட நாடகங்களுக்குத் தான் இவை பொருத்தமாக இருக்கின்றன.

jon fosse

வாழ லாயக்கில்லாத ஓர் உலகில் நடமாடுபவர்களென உங்கள் பாத்திரங்கள் தோன்றக் காரணம் என்ன?

வாஸ்தவம். ஒரு நாடக நடிகர் தான் ஏற்றிருக்கும் பாத்திரமாகவே நாடகத்தில் மாறிவிட வேண்டும். இயக்குனரும் அம்மாதிரி நிலையைத் தன் பார்வையில் கொண்டு வந்து இயங்க வேண்டும். என் எழுத்தில் நான் இதைச் செய்வதில்லை. ஒரு எழுத்தாளனான நான் நாடகக்காரனில்லை. நாடகத்தின் கலையுருவம் என்பது முற்றிலும் வேறானது. அதனால்தான் என் நாடகங்களைப் பிரசுரித்து விடுகிறேன்.

உங்கள் நாவல்களும் நாடகங்களும் சில சமயம் ஒரே தளத்தில் இயங்குகின்றன. பேச்சுக்கும் சிந்தனைக்கும் நடுவே வேண்டுமென்றே நிதானமாக ஓர் இசைலயத்துடன் இரண்டும் இயங்குகின்றன.

ரிதம் (Rhythm) என்று சொல்கிறோமே அது ஓவியத்திலும் இருக்கிறது. இந்த ரிதம் என்ற வார்த்தையைச் சொல்லுவது எளிது. ஆனால், அது தன்னுள் அடங்கியிருப்பது, வெளிப்படுத்துவது ஆகியவற்றை விளக்குவது கடினம். கருணை, காதல், ரிதம் – இவற்றைச் சொல்லாடல்களில் பார்க்கலாம். ஆனால், அவற்றின் அர்த்த மேன்மையைப் புரிந்துகொள்வது கடினம். ரிதம் இருக்குமிடத்தில் அதை உணருகிறீர்கள். காதலும் அப்படியே. ஏன், என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுளுக்கும் இது பொருந்தும். கடவுள் எங்கும் எப்போதும் இருக்கிறார் என்பது நிச்சயம். ஆனால், அவரை உணர முடிவது?

மதிய உணவின் போது உங்களுடைய மொழிபெயர்ப்பாளர்களிடையே ஒரு வாக்குவாதம் நடந்தது. உங்கள் நடை மிக மெதுவாகச் செல்கிறது என்று. ஆனால், சிலர் – நான் உள்பட – இதை ஒப்புக்கொள்ளவில்லை. இம்மாதிரி ஒரு கருத்து உண்டானதற்குக் காரணம் என்ன?

பதினைந்து வருடங்களாக நாடகங்கள் எழுதினேன். ‘காலையும் மாலையும்’ நாடகத்தின் இரு பாகங்களையும் இருமுறை பிரேக் எடுத்துக் கொண்டு எழுதினேன். இந்த இடைவெளியில் ‘நெருப்பருகே ஆலிஸ்’ நாவலை எழுதினேன். ஆனால், அப்போது நான் எழுதியது எல்லாம் நாடகங்கள், நாடகங்கள், நாடகங்கள்தாம். நாவலை எழுதிய போதுகூட அது நாடகம் போலத்தான் இருந்தது. ‘நெருப்பருகே ஆலிஸ்’, ‘ஒரு கோடை நாள்’ என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் ‘உன்னை நான் ஒரு கோடை இரவோடு ஒப்பிடவா?’ என்னும் லிரிக்ஸிலிருந்து எழுந்த எழுத்து.

நான் இறுதியாக ஒரு நாடகம் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். என் கடைசி நாடகத்தின் பெயர்: ‘இந்தக் கண்கள்’. இச்சந்தப்பத்தில் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே திரும்பிச் செல்லும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது – கவிதைகளும் கட்டுரைகளும் எழுத வேண்டுமென்று. ‘இனி அவ்வளவுதான். எல்லாம் செய்தாயிற்று’ என்று நாடகத்துக்கு ஒரு முழுக்குப் போடத் தீர்மானித்து விட்டேன்.

அச்சமயத்தில் நான் அதிகமாகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அதிகக் குடி வேறு. அதை ஒழித்துக் கட்ட நான் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் நான் கத்தோலிக்கக் கிறிஸ்துவனாக மாறினேன். என் மனைவியை அப்போதுதான் சந்தித்தேன். பெருமளவுக்கு என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு விட்டேன். படிப்பதை நிறுத்தி விட்டேன். எப்போதாவதுதான் பேட்டி கொடுத்தேன். எல்லாவற்றுக்கும் முழுக்குப் போட்டுவிட்ட நிலைதான். எப்போதாவது, ஏதாவது பரிசளிப்பு விழா என்ற கட்டாயம் ஏற்பட்டால் வெளியே வந்தேன்.

ஆம். உங்களுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பம் இல்லை என்று சொன்னார்கள்.

ஆனால், நான் ஒரு மாதிரி அலைபாயும் மனதுள்ளவன். அதனால் அதிகமாகப் பிரயாணங்களை மேற்கொண்டேன். எங்களுக்கு ஆஸ்திரியாவில், ஒஸ்லோவில், நார்வேயின் மேற்குப் பகுதியில் இரண்டு இடங்களில் தங்குமிடங்கள் இருந்தன. அங்கு மாறி மாறிச் செல்வேன். வேறெங்கும் பிரயாணம் என்பது எப்போதாவது ஒரு தடவை நடக்கும். அல்லது என் குடும்பத்துடன் செல்வேன். குடியை முற்றிலும் நிறுத்திய பிறகு, காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போது, ‘எங்கே இருக்கிறேன்? டாய்லெட் இந்தப் பக்கம்?’ என்ற எண்ணம் வரும்.

முன்னிருந்த மாதிரிதான் இப்போதுமா? அல்லது ஏதோ பிளவு ஏற்பட்டு சேதமாகி விட்ட உணர்வு உள்ளதா?

என் எழுத்தில் ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கிறது. நான் பேசுவதெல்லாம் வெளியுலகை முன்னிட்டு. எழுத்து என்பது வேறு. என்னுள் உள்ள எழுத்தாளன் எப்போதும் ஒரே மாதிரியாக உலவுகின்றவன். அவன் அடக்கமும் அமைதியும் நிரம்பியவனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இருப்பதென்னவோ எப்போதும் ஒரே மாதிரிதான்.

இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது மெதுவே நகரும் ஆசுவாசமான எழுத்து நடை பற்றி. என்னைப் பொறுத்தவரை நாடகத்தில் அதிக வேலையில்லை. பார்வையாளரிடம் உண்மைத்தன்மையை உணர வைப்பது வெகு ஆதாரமான, எல்லையற்ற கவனத்துடன் செய்யப்பட வேண்டிய காரியம். ஒரு அடர்த்தியான படைப்பை உருவாக்குவது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், எழுதும் போது படைப்பாளியையும் அவனது தீவிர கவனத்தையும் அப்படைப்பு தன்பால் இழுத்துக்கொள்கிறது. மிக வேகமாக என்னால் எழுதி விட முடியும். ஆனால், மேலே சொன்ன தீவிரம் நான் எழுதும் போது என்னை ஆக்கிரமித்துக்கொள்வதையே நான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

என் எழுத்து, வாழ்வு, என்னைச் சுற்றியுள்ளவை எல்லாவற்றிலும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள ஒரு நாள் விரும்பினேன். அதன்பின் என் வசன நடை மெதுவாகச் செல்லும். நீண்ட வாக்கியங்கள் என் எழுத்தில் தோன்ற ஆரம்பித்தன. ‘செப்டாலஜி’ நீண்ட படைப்பு. நான் அதை நான் முடித்த போது ஆயிரத்து ஐந்நூறு பக்கங்கள் வந்திருந்தன. பிறகு சிலவற்றை எடிட்டிங் செய்தேன். நூற்றுக்கும் அதிகமான இறைசார் கட்டுரைகளை நீக்கி விட்டேன்.

அவை அஸ்லேயின் மனைவியான அலேஸின் கருத்துக்கள் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆம். சில அஸ்லேயுடனான அவளது உரையாடல்கள். மற்றவை அவளுடைய நீண்ட விரிவுரைகள். ஆனால், இப்போது யாருக்கும் அலேஸின் எண்ணங்கள், மன ஓட்டங்கள் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

இன்று நான் இதைப் பற்றி யோசிக்கிறேன். நான் செய்தது சரிதானா என்று. ஆனால், எனது எடிட்டரான சிசிலி, அலேஸ் போன்ற இளம்பெண் நம்ப முடியாத அளவுக்குப் புத்திசாலியாக இருந்தது சரியாகப்படவில்லை என்று சொல்லி விட்டார். ஓரளவு நம்பக்கூடிய யதார்த்தமான சிந்தனையோட்டமாக இருக்க வேண்டும் என்று கூறி விட்டார்.

விடுபட்ட அவற்றைத் தனியாகப் பிரசுரிக்கும் எண்ணம் உள்ளதா?

ஆம். இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னால் அவற்றை மறுபடியும் படிக்க வேண்டும். அலேஸ் புத்திசாலித்தனமான எண்ணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறாள். ‘செப்டாலஜி’ யதார்த்தமான நாவல் அல்ல. ஆகையால் அலேஸின் எண்ணக் கோவையைத் தவறாகக் கணிக்க வேண்டியதில்லை. அவற்றைக் கூற அவளால் முடியும் என்பதுதான் உண்மை. ஒருவர் மிகச் சிறந்த புத்திசாலியாக இளம் வயதில் இருக்க வாய்ப்புண்டு. அது சரியென்றோ தவறென்றோ யாராலும் சொல்ல முடியாது.

நீங்கள் நாவல்கள் எழுதும் போது இடையிடையே மொழிபெயர்ப்புகளும் செய்வதாகக் கேள்விப்பட்டேன். அதிக எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பில் இறங்குவது நல்லது.

மொழிபெயர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது. அது ஆழமான படிப்பைக் கோருகிறது. நான் இளைஞனாக இருந்த போது ஓலவ் ஹாக்கின் மொழிபெயர்ப்புகளைப் படித்தேன். ‘மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள்’ என்பது அத்தொகுப்பின் பெயர். ஆஸ்திரியக் கவியான ஜார்ஜ் ட்ராக்கல் கவிதையை ஹாக் மொழிபெயர்த்திருந்தார். அப்போது எனக்கு ஜெர்மன் மொழி அவ்வளவாகத் தெரியாது. அதனால் கற்றுக்கொண்டேன். அந்தக் கவிதை என்னை வெகுவாக ஈர்த்தது. அதன் பிறகு ட்ராக்கல்லின் ஜெர்மன் மொழிக் கவிதைகளை வாங்கிப் படித்தேன். அக்கவிதைகளை நான் மிகவும் விரும்பியதற்குக் காரணம், ட்ராக்கல்லும் என்னைப் போலத் திரும்பத் திரும்ப அவரது எழுத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஒரு விதத்தில் அவர் இதை என்னை விட அதிகமாகச் செய்தார் என்று சொல்லலாம். அவரது எல்லாக் கவிதைகளும் சேர்ந்து ஒரு கவிதைதான்! அவரது கவிதைகளை நான் மொழிபெயர்த்தேன். சிலவற்றை எனது கவிதைத் தொகுப்பில் சேர்த்துக்கொண்டேன்.

என்னுடைய பதின்ம வயதில் ட்ராக்கல்லை முதன்முதலாகப் படித்தேன். இப்போது இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு அவரது ‘கனவில் செபாஸ்டியன்’ என்ற தொகுப்பை மொழிபெயர்த்தேன். இத் தொகுப்பு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் இருக்கிறது. இந்த வருடம் அவருடைய ‘இரங்கற்பா’வை மொழிபெயர்த்திருக்கிறேன்.

நீங்கள் காஃப்காவின் ‘விசாரணை’யை மொழிபெயர்த்துள்ளீர்கள்.

ஆம். அதைப் பற்றிச் சிறந்த விமரிசனங்கள் வெளி வந்தன. மகிழ்ச்சிக்குரிய விஷயம். அதைப் பிரசுரித்த என் பிரசுரகர்த்தர் ஒரு ஜெர்மானியர். நான் மொழிபெயர்த்த ஒவ்வொரு வரியையும் ஆழமாகப் படித்துப் பார்த்து ஒப்புக்கொண்டார். ஸ்காண்டிநேவிய மொழியில் அது மிகவும் சிறப்பான மொழிபெயர்ப்பு என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு நாவலை முதன் முதலாக மொழிபெயர்த்தது இதைத்தான். என் சொந்தப் படைப்புகளை விட்டு விட்டு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துதான் காஃப்காவை எடுத்துக்கொண்டேன். ‘விசாரணை’ எனக்கு மிகவும் நெருக்கமான நாவல். கிரேக்க நாடக மேதைகளான அக்குலஸ், யியூரோபிடிஸ், சோபக்லிஸ் ஆகிய மூவரின் நாடகங்களை மொழிபெயர்த்துள்ளேன். புராதனக் குரலைக் கேட்கும் அனுபவம் இங்கு ஒருவருக்கு கிட்டும். அம்மேதைகள் தனித்த ஒரு குரலைக் கொண்டிருக்கிறார்கள். அக் குரல்களைக் கேட்டு என் மொழியில் என் வழியில் எழுதுவது எனக்கு எளிதாக இருந்தது.

நீங்கள் ஜெரால்டு முர்னெனின் ‘சமதளங்கள்’ நாவலையும் மொழிபெயர்த்தீர்கள் இல்லையா?

நான் எப்படி முர்னெனைச் சென்றடைந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நார்வேஜிய மொழியில் அவரது ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்படவில்லை. எங்கோ அவருடைய எழுத்தைப் படித்த போது அவர் ஒரு சுவாரஸ்யமான எழுத்தாளர் என்று நான் நினைத்தேன். ‘சமதளங்கள்’ பல மொழிகளில் பிரசுரமான பிரசித்திப் பெற்ற நாவல். அது சுவீடிஷ், டேனிஷ் மொழிகளிலும் பிரசுரமாயிருந்தது. எனக்கு ஆங்கிலமும் ஜெர்மனியும் தெரியுமென்றாலும் ‘சமதளங்கள்’ நாவலை ஸ்காண்டிநேவிய மொழியில் படிக்க விரும்பினேன். சுவீடிஷ் மொழியில் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பிறகு நானே மொழிபெயர்ப்பதென்று முடிவு செய்தேன்.

நீங்களும் முர்னெனும் சில அர்ப்பணிப்பு நிரம்பிய செயல்களைப் பகிர்ந்துகொள்கிறீர்கள் அல்லவா?

ஆம். ஓர் இலக்கியக் குரல் உங்களுடன் மனம்விட்டுப் பேசுவது அபூர்வமானது. அது புதியதொரு நட்பு கிடைத்து விட்டதைப் போன்றது. எப்போதாவதுதான் இது நடக்கிறது.

நீனாக்ஸ் மொழியில் எப்படி ‘சமதளங்க’ளை மொழிபெயர்த்தீர்கள்?

முர்னெனிடம் தனித்தவொரு பார்வையும் குரலும் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் ‘சமதளங்கள்’ போன்ற ஒரு நாவலைப் படித்ததில்லை. ஆனால், அது என் எழுத்தைப் போல இருக்கிறது – அருகாமையும் தொலைவும் இணைந்து செல்வது போல. நாங்கள் வெவ்வேறு விதமாக எழுதுகிறோம். ஆனால், அவ்வெழுத்துக்களுக்குப் பின்னிருக்கும் எங்கள் நோக்கு ஒத்த மாதிரியான உணர்வைத் தருகிறது.

ஒரே மாதிரியான ஒழுங்கு அல்லது ஈடுபாடு என்று சொல்லலாமா?

நான் எழுதும் போது என் எழுத்து உண்மையானதாகவும் சுருங்கச் சொல்வதாகவும் இருக்க வேண்டும் என்று பாடுபடுவேன். ஒரு கமா சரியாக விழாவிட்டால் மேற்கொண்டு செல்லமாட்டேன். அது எனக்குத் தெரியும். உதாரணமாக நான்காவது பக்கத்தில் ஒரு மாறுதலை நான் செய்தால் அது இன்னொரு இடத்தில் மாறுதலைச் செய்ய நிர்ப்பந்திக்கும். இதை நான் ஒரு பிரக்ஞையுடன் செய்வதில்லை. இம்மாதிரிப் பல தொடர்புகள் உள்ளன. நீங்கள் புகுந்து உலாவும் உலகு உங்களின் வெளி உலகிலிருந்து விடுபட்டு நிற்கிறது. உங்களுடைய சொந்த உலகை நீங்கள் உருவாக்குகையில் அது உங்களுடையது இல்லை என்பதுதான் உண்மை.

உருவத்தைப் பொறுத்த வரை அது ஒரு பேதமற்ற தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது.

எழுத்தாளனுக்கு அது முக்கியம் என்று நான் நம்புகிறேன். அது ஏதோ ஒன்றாக அமையக் கூடும். ஆனால், வாசகன் அதனை லாஜிக் என்று நம்புகிறான். அவசியம் ஏற்படாது எழுதுவது வீண் வேலை என்று நான் நினைக்கிறேன். அவசியம்தான் எழுத்துக்கான வீர்யத்தைத் தருகிறது. ஒரு நாவலை நான் எழுதும் போது ஆயிரக்கணக்கான விதிகள் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. அவற்றை நான் பின்பற்ற வேண்டுமென்று. பெரும்பாலானவை இது இருக்கட்டும் அல்லது இது வேண்டாம் என்று சொல்பவை. இந்த விதிகளைப் பின்பற்றுவதற்கும் அவற்றைக் கேட்டுணர்வதற்கும் தேவையான ஞாபகசக்தியும் மனவலிமையும் என்னிடம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று அவை பலவந்தப்படுத்துகின்றன. ஆனால், நாம் நம்மைப் பற்றி அறிந்ததை விட மேலானவர்கள்; விநோதமானவற்றை எதிர்கொள்ளும் சக்தியுடையவர்கள்.

நாவலின் பல கூறுகளைப் புரிந்துகொண்டு பரிபூரணத்தை அடைவதுதான் லட்சியமாக இருக்க வேண்டுமா?

ஆம். அனைத்துமே பரிபூரணத்தை நோக்கி இயங்குபவை. இப் பரிபூரணம் எழுத்தின் ஆத்மாவாகத் திகழ வேண்டும். பரிபூரணத்திலிருந்துதான் அதன் மௌனத்திலிருந்துதான் நமக்குச் செய்திகள் வருகின்றன. பரிபூரணத்தின் மொத்தமும் மௌனத்தைச் சார்ந்தது என்பதுதான் பரிபூரணம் வலியுறுத்தும் விதி. இத்தகைய முழுமைக்கு ஒவ்வொரு தனிப் பகுதியும் தங்கள் பங்கைச் செம்மையாக ஆற்ற வேண்டும். அமைதி இதை சாத்தியமாக வல்லது. பிரக்ஞையுடன் ஒருவர் இதைச் செய்து விட முடியாது.

இதனால்தான் நான் எதையும் திட்டமிடுவதில்லை. எதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் அவசியம் எதுவும் கிடையாது. ஒரு நம்பிக்கையில் நான் இயங்குகிறேன். நான் ஒரு பத்து, பதினைந்து, இருபது வரிகளை எழுதியதும் அது ஏற்கனவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன.

நீங்கள் சாவைப் பற்றி நினைக்கிறீர்களா?

இல்லை. அது உங்களை நெருங்குகையில் அல்லது உங்களுக்கு வயதாகி விடும் போது சாவைப் பற்றி நினைப்பது குறைந்து விடுகிறது. சிசீரோ சொன்னது போல, வேதாந்தம், சாவை எப்படி அடைவது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. இலக்கியமும் அப்படித்தான். வாழ்வைப் பற்றியும் சாவைப் பற்றியும் கற்பிக்கிறது. தலைசிறந்த இலக்கியத்தைப் போன்றது சாவு. நீங்கள் உருவாக்கும் போது கலைக்கு உயிர் வருகிறது. அதை ஒரு வாசகர் மறுபடியும் உயிர்ப்பிக்கிறார். ஆனால், ஒரு முடிவாகக் கலை என்பது சவம்தான்.

ஸிந்துஜா” <weenvy@gmail.com>

sinthuja, t.r. natarajan

 

 

 

 


படைப்பாக்கம் மற்றும் விமரிசனப் பேராசிரியராக அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் பணிபுரியும் மெர்வ் எம்ரே, ‘நியூயார்க்கர்’ (13-11-2022) இதழுக்காக ஜான் போஸை எடுத்த நேர்காணலின் முழு வடிவம் இது. இந் நேர்காணலுக்குப் பின் சில மாதங்கள் கழித்து ஜான் போஸ் இலக்கியத்துக்கான 2023ஆம் வருட நோபல் பரிசைப் பெற்றார்.

Amrutha

Related post