சமத்துவத்தை வலியுறுத்துவதே எனது படங்களின் மையப் பண்பாக இருக்கிறது | விம் வெண்டர்ஸ்

 சமத்துவத்தை வலியுறுத்துவதே எனது படங்களின் மையப் பண்பாக இருக்கிறது | விம் வெண்டர்ஸ்

விம் வெண்டர்ஸ்

தமிழில்: ராம் முரளி

 

ண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜெர்மனிய இயக்குநரான விம் வெண்டர்ஸ் தொடர்ந்து படைப்பாக்கச் செயல்பாடுகளில் தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறார். Perfect Days திரைப்படமும் Anselm ஆவணப்படமும் அவரது சமீபத்திய படைப்புகள்.

Perfect Days கழிவறைகளைச் சுத்தம் செய்யும் ஒருவரின் அன்றாட வாழ்க்கைத் தருணங்களைப் பதிவு செய்கிறது. தொழில்முறையாக வாழ்வாதாரத்திற்காக அவர் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றாலும் அவர் தனது அறையைப் பராமரிக்கும் விதம், ஃபால்க்னர் உள்ளிட்ட எழுத்தாளர்களை வாசிப்பது, இசையில் தனித்துவம் மிக்க ரசனையைக் கொண்டிருப்பது, புகைப்படக் கலையின் மீதான அவரது ஆர்வம் ஆகியவை அச்சூழலுக்கு அவர் அந்நியமானவர் எனும் அறிதலைக் கிளர்த்துவதாக இருக்கின்றன. எனினும், வேறொருவராக வாழும் இச்சூழலில் இந்தச் சின்ன சின்ன கண்டுபிடிப்புகள்தான் அவரது வாழ்க்கையை முன்னகர்த்துவதாகவும் இருக்கின்றன. வார்த்தைகள் அவசியமற்ற ஒரு தனியுலகில் செடிகளுடனும் மரங்களுடனும் சூரியக் கதிர்களுடனும் சிறுவர்களுடனும் ஒலிகளுடனும் அகவயமாகப் பிணைக்கப்பட்டவராகவும் இந்தப் பிணைப்புகளே அவரது தற்காலத்திய வாழ்க்கையின் சாரமாகவும் இருக்கின்றன. இதில் ஏதோவொரு சிறு தொந்திரவு உண்டாகும்போதும் அவர் பதற்றமடைந்துவிடுகிறார். வாழ்க்கையின் எளியத் தருணங்களையும் அத்தருணங்களில் உண்டாகும் சிறுசிறு சந்தோஷங்களையும் எளிமையின் பிரமாண்டத்தையும் அதனிடம் சரணாகதி அடைவதையும் ஹிராயமா எனும் பாத்திரத்தின் வழியே விம் வெண்டர்ஸ் Perfect Days திரைப்படத்தில் துலக்கியிருக்கிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகர் விருதை கோஜி யகுசோ வென்றிருக்கிறார்.

Anselm ஆவணப்படம் சர்ச்சைக்குரியவராகக் கருதப்படும் ஜெர்மனிய ஓவியரும் சிற்பக் கலைஞருமான அன்செல்ம் கெயிஃபெரின் கலைச் செயல்பாடுகள் குறித்தது. சமீபத்திய படைப்புகளான இவ்விரு ஆக்கங்கள் குறித்தும் Progressive இதழில் விம் வெண்டர்ஸ் பகிர்ந்தளித்த பதில்களே இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

ராம் முரளி

 

அமெரிக்காவில், பெரும்பாலும் குற்றவியலை மையப்படுத்தும் திரைப்படங்களும் சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தும் திரைப்படங்களும் உருவாக்கப்பட்டு வரும் ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அப்படியிருக்கும்போது பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் குறித்த திரைப்படத்தை உருவாக்க ஏன் முடிவுசெய்தீர்கள்?

ஏனெனில், கதையின் போக்கில் அவனும் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆகிறான் இல்லையா! [சிரிக்கிறார்]. ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கைச் சூழலில் இருக்கும் அவன் சில அசாதாரணமான செயல்களையும் செய்கிறான். இன்றைய காலத்தில் சந்தோஷமாக வாழ்வதும் தன்னிடம் இருப்பவற்றைப் புகாரின்றி ஏற்றுக்கொள்வதும் சூப்பர் ஹீரோவின் பண்பு; இல்லையெனில், வேறு எதைத்தான் சூப்பர் ஹீரோக்கள் செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

உங்களுடைய படைப்புகளில் வர்க்கம் என்னவிதமான பங்களிப்பைச் செய்கிறது?

மக்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் அடிப்படையில்தான் எனது அனைத்துத் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது எனது எல்லா திரைப்படங்களிலும் முதன்மைப் பண்பாகச் செயல்படுகிறது. Wings of Desire திரைப்படத்தில் வருகின்ற தேவதைகள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றன. மக்கள் எல்லோரும் மக்கள்தான் என்பதை அவை புலப்படுத்துகின்றன. அதில் மேலாண்மையோ கீழிறக்கமோ இல்லை. அவர்கள் முக்கியமானவர்களோ முக்கியமற்றவர்களோ இல்லை. இந்தத் திரைப்படத்தில் ஹிராயமாவும் அதையேதான் பார்க்கிறான். கழிவறைக்கு அருகில் வசிக்கும் வீடற்ற நபரைப் பார்ப்பதைப் போலவேதான், அவனை ஒருபோதும் பொருட்படுத்தாத வசதிப் படைத்தவர்களையும் பார்க்கிறான். ஹிராயமாவைப் பொருத்தவரையில், எல்லா மனிதர்களும் ஒரேபோலவே பார்க்கவும் மதிக்கப்படவும் வேண்டும். அவன் எல்லோருக்கும் ஒரேவிதத்தில்தான் மதிப்பளிக்கிறான். என்னைப் பொருத்தவரையில், பிரஞ்சு புரட்சியில் சமத்துவம்தான் முக்கியமானது. சுதந்திரமோ சகோதரத்துவமோ அல்ல.

Perfect Days திரைப்படம் டி சிகா, ரோஸாலினி ஆகியோர் போருக்குப் பிறகு உருவாக்கிய இத்தாலிய நியோ ரியலிசத் திரைப்படங்களை நினைவூட்டுவதாக இருந்தது. அப்படங்களின் தாக்கம் உங்களின் மீதோ Perfect Days திரைப்படத்தின் மீதோ உள்ளதா?

அரிதாகவே குறிப்பிடப்படுகின்ற அமெரிக்க இயக்குநரான ஃபிரான்க் காப்ராவையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இத்திரைப்படத்தை உருவாக்கும்போது உண்மையாகவே எங்கள் மனதில் இருந்த இயக்குநர் யாரென்றால் ஜப்பானின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான யாசுஜிரோ ஓஸு அவர்கள்தான். ஹிராயமா எனும் பெயரே அவர் உருவாக்கிய Tokyo Story [1953] படத்தில் வருகின்ற பிரதான கதாபாத்திரத்தின் பெயர்தான். திரைப்படங்கள் சார்ந்த எனது அனுபவத்தில் மிக முக்கியமான படம் அது.

perfect days
Perfect Days

Perfect Days ஓஸுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறதா?

ஆமாம்.

‘வளமான முன்காலத்தைக் கொண்ட ஒருவன் வர்க்கரீதியாக மிக அடிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே’ இத்திரைப்படத்தின் மையச் சரடு என்று பத்திரிகைக் குறிப்பில் இருந்தது. அவ்வகையில் 1970களில் வெளிவந்த Five Easy Pieces திரைப்படத்தையும் இது எனக்கு நினைவூட்டியது.

ஹிராயமாவிடம் ஒரு பழைய பழுதடைந்த வேனும் அதில் ஒரு கேஸட் பிளேயரும் மட்டுமே உள்ளது. அதில் அவன் இசையைக் கேட்கிறான். நல்லவேளையாக 70, 80களில் தன்னிடம் இருந்த கேஸட்களை அவன் தொலைத்திருக்கவில்லை. இசை இங்குக் கதையின் ஓர் அங்கமாகச் செயல்படுகிறது. வசனம் அதிகம் இதில் பயன்படுத்தப்படவில்லை. சில சமயங்களில் கதைச் சொல்லலே இசையின் வாயிலாகத்தான் கையாளப்பட்டிருக்கிறது. ம்ம்ம். ஆமாம். ஹிராயாமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேறொரு கடந்த காலம் இருந்திருக்கிறது. நீங்கள் Five Easy Pieces திரைப்படத்தை நினைவு கூர்ந்தது எனக்குப் பிடித்திருக்கிறது. அது எனக்கு மிகப் பிடித்தமான படங்களில் ஒன்று. அது மிகச் சிறந்த சாலை-மையத் திரைப்படங்களில் ஒன்றும்கூட. படத்தின் இறுதியில் ஜாக் நிக்கல்சன் டிரக்கில் ஏறுவது திரைப்பட வரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று.

இசை, ஹிராயமாவின் வாழ்க்கையிலும் இருப்பதை வைத்து வாழும் அவன் போக்கிலும் ஓர் அங்கமாகவே இருக்கிறது. அவனிடம் அதிகத் தொழில்நுட்பச் சாதனங்கள் எதுவும் இல்லாததால் அவன் கேஸட்களில் இசை கேட்கிறான். அவனது அறையில் ஒரு தொலைக்காட்சி கூட இருப்பதில்லை. டிஜிட்டல் மீடியாவில் இருந்தும் அவன் விலகியே இருக்கிறான். இருப்பினும், அவனிடம் சில உபகரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஒரு கேமராவும் இந்தக் கேஸட் பிளேயரும். இவையே அவனுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கிவிடுகின்றன. அவனுக்கு விருப்பமான சிலவற்றை அவன் படம்பிடிக்கிறான். பொதுவாக மரங்களையும் மரங்களுக்குள் ஊடுருவும் ஒளியையுமே அவன் படம்பிடிக்கிறான். இதை ஜப்பானியர்கள் Komorebi என அழகாகச் சுட்டுகிறார்கள். படம் நெடுக அவனைச் சந்திக்கும் இளம் தலைமுறையினர் அவனையும் அவனது உடைமைகளையும் காலாவதியாகிவிட்ட ஒன்று என்றே கருதுகின்றனர். கேஸட்டை அந்தப் பிளேயரில் எப்படிச் சொருக வேண்டும் என்றே அவர்கள் அறிந்திருப்பதில்லை. எனினும், அதில் ஏதேவொன்று இருப்பதாக அவர்கள் உணருகின்றனர். இறுதியில், அது அமைதியாகவே முடிந்துவிடுகிறது. அந்தக் கேஸட்களை மதிப்புமிக்க பழம்பொருட்கள் என்று நம்மால் விற்பனை செய்ய முடியும். பெரும் பணம் கொடுத்து அவற்றை வாங்கிக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். அது புனைவு அல்ல. அத்தகைய கேஸட்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் டோக்கியோ நகரத்திற்கான உங்கள் அடுத்த பயணத்தையே திட்டமிட முடியும்.

லூயி ரீடின் ‘Perfect Day’ பாடல் உங்கள் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே?

ஹிராயமா அந்தப் பாடலைக் கேட்கும் காட்சியைப் படமாக்கிய தினத்தில்தான், இத்திரைப்படத்தின் தலைப்பு Perfect Days என்று இருக்கப்போவதை நாங்கள் முடிவுசெய்தோம். திரைக்கதையை எழுதியபோதும், படப்பிடிப்பு தினங்களின் துவக்கத்திலும் அதன் தலைப்பு Komorebi என்பதாகவே இருந்தது. ஹிராயமா தரையில் படுத்துக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்கும் காட்சியைப் படமாக்கியபோது நானும் இத்திரைப்படத்தின் இணை எழுத்தாளருமான டாகுமா டக்காஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, எங்களுக்குள் ரகசியமாக இதுதான் இத்திரைப்படத்திற்கு ஏற்ற அசலான தலைப்பு என முணுமுணுத்துக் கொண்டோம். அதே சமயத்தில், இப்பாடலையும் தலைப்பையும் இவ்வகையில் பயன்படுத்தினால் அதற்கான உரிமத்தை வாங்க வேண்டுமென்கிற முன்யோசனையும் எங்களுக்கு இருந்தது. நல்லவேளையாக எவ்விதச் சிரமமும் இல்லாமல் எங்களால் அவற்றுக்கான உரிமத்தைப் பெற முடிந்தது. படத்தில் நீங்கள் கேட்கும் அனைத்துப் பாடல்களையும் படப்பிடிப்புத் தருணங்களிலும் நாங்கள் ஒலிக்கச் செய்தோம். படத்தின் இறுதியில், அவன் கேட்கும் Feeling Good பாடல் நினா சிமோனுடையது. அந்தப் பாடலையும் ஒலிக்கச் செய்துதான் அக்காட்சியைப் படம்பிடித்தோம். முழு படமும் இவ்வகையில்தான் உருவாக்கப்பட்டது. எப்போதுமே நாங்கள் படத்தில் இடம்பெறும் பாடலைத்தான் அந்தந்தக் காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் ஒலிக்கச் செய்தோம். அது எங்களுக்குக் கதையைச் சொல்வதற்கும் இசையை எங்கள் கதைச் சொல்லும் செயல்முறையில் ஓர் அங்கமாக மாற்றுவதற்கும் பேருதவி செய்தது.

ஹிராயமாவின் கதாபாத்திரம் Five Easy Pieces திரைப்படத்தில் வருகின்ற ஜாக் நிக்கல்ஸனின் கதாபாத்திரத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறது. அதிலும் அவன் மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். ஆனால், சில காரணங்களால் அவனது ஆர்வமான இசைத்துறையில் உள்நுழையாமல் வேறொரு வாழ்க்கையைத் தேர்வுசெய்துகொள்கிறான். இதில் ஹிராயமா கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியைத் தேர்வுசெய்கிறார். படத்தில் சொல்லப்படாத அவரது முன்கதை என்னவென்று சொல்ல முடியுமா?

இந்த வகையில் அப்படி வழங்க நான் விரும்பவில்லை. ஹிராயமா கதாபாத்திரத்தில் நடித்திருந்த கோஜி யகுசோவுக்கு அப்படியான முன்கதையுடன் கூடிய திரைக்கதையை வழங்கினேன். அவர் அதை வாசித்திருக்கிறார் என்பதால் அவருக்கு அது தெரியும். ஆனால், இதைத் தவிர படத்தைப் பார்ப்பவர்கள் அவர்களாகத் தங்களுடைய கற்பனையின் மூலம் அவனுடைய முன்கதையைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன். உங்களுக்கு இதை மட்டும் சொல்கிறேன்: அவன் ஒரு தொழிலதிபர். பெரும் பணக்காரன். ஆனால், மகிழ்ச்சி இல்லாதவன். அதனால் குடியின் பிடியில் வீழ்ந்து மெல்ல மெல்ல தன்னையே அவன் தகர்த்துக்கொள்கிறான். ஒருநாள் இந்த அலங்கோலமான ஹோட்டல் அறையில் அவன் கண் விழிக்கிறான். அங்கு எப்படி வந்தோம் என்பதை அவன் அறிருந்திருப்பதில்லை. என்ன நடந்தது என்றோ யாருடனாவது பாலியல் உறவுகொண்டோமா என்றோ அவன் அறிந்திருப்பதில்லை. அவன் வாழ்க்கை சீரழிந்துள்ளது என்று அவன் நினைக்கிறான். அச்சூழலை அவன் விரும்பவில்லை. உண்மையில் அச்சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானத்தைத்தான் கையில் எடுக்கிறான். ஆனால், அதியற்புதமாக, அதிகாலையில் அவனுக்கெதிரில் இருக்கும் சுவரில் சூரிய ரேகைகள் பட்டுப் பிரதிபலிக்கின்றன. ஜன்னலுக்கு அருகில் இருக்கும் மரத்தின் மீதும் அவ்வொளி பிரகாசிக்கிறது. இலைகளுக்கும் சூரிய ஒளிக்கும் நிழல்களின் அசைவுகளுக்கும் இடையில் ஒரு நாடகம் அரங்கேறுகிறது. இதைப் பார்க்கும் அவன் அழத் தொடங்கிவிடுகிறான். இவ்வளவு அழகான ஒன்றை இதுவரை அவன் பார்த்ததே இல்லை. ஒருவேளை அவன் பார்த்திருக்கலாம், ஆனால், அதை அவன் கவனத்துடன் அணுகியதில்லை. அவனுடைய இருத்தலியல் சிக்கலுக்கான பதில் அதுதான் (அவற்றைக் கவனிக்கும் ஒருவனாக மாறுவது) என்று அவன் திடீரென்று கண்டுபிடிக்கிறான். அவன் தனது விலையுயர்ந்த காரையும் தனது வேலையையும் துறந்துவிடுகிறான். முதலில் ஒரு தோட்டக்காரனாகவும் அதன்பிறகு, கழிவறைகளைப் பாதுகாக்கக் கூடியவனாகவும் மாறிவிடுகிறான். ஏனெனில் அவையெல்லாம் சிறிய சிறிய பூங்காக்களில் இருக்கின்றன. அவற்றைப் பராமரிப்பதற்கு ஏற்ற நபர் அவன்தான் என்பதை நிர்வாகம் கண்டுகொள்கிறது. இதுதான் அவனது முன்கதை. நான் அதைத் தெரிவித்துவிட்டேன் – இப்படிச் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும்கூட.

ஆவணப்படங்களையும் திரைப்படங்களையும் இயக்குகின்ற ஒருசில இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். ஏன் அப்படி இரண்டின் உருவாக்கத்திலும் ஈடுபடுகிறீர்கள்?

உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ஆமாம், தெரிந்துகொள்ளத்தான் விரும்புகிறீர்கள். மிக மிகக் குறைவான விஷயங்களைக் கையாளும்போதுதான் நான் சிறப்பாகச் செயல்படுவதாக உணர்கிறேன். புனைக்கதைகளோ திரைக்கதையோ இல்லாமல் செயல்படும்போதுதான் என்னால் சிறந்த முறையில் செயல்பட முடிகிறது. என்னுடைய Paris, Texas திரைப்படத்தை அடிப்படையான ஒரு திரைக்கதை இல்லாமல்தான் உருவாக்கினேன். Wings of Desire திரைப்படத்தையும் அடிப்படையான ஒரு திரைக்கதை இல்லாமல்தான் உருவாக்கினேன். படமாக்கச் செயல்பாட்டின்போதுதான் அதன் எழுத்தாக்கப் பணி மெல்ல மெல்ல வளர்ச்சியுற்றது. Kings of the Road திரைப்படத்திற்கு முதலில் அரை பக்கத் திரைக்கதையே எழுதப்பட்டிருந்தது. மற்றவை அனைத்தும் படைப்பாக்கச் செயல்பாட்டில் உருதிரண்டவையாகவே இருந்தன. சாலையை மையப்படுத்தும் கதைச் சொல்லலை நான் பெரிதும் விரும்புகிறேன். ஏனெனில் சாலை மட்டும்தான் நம்மை படத்தின் காட்சி வரிசையின்படியே படம்பிடிக்க அனுமதிக்கும். அவ்வரிசையில் படமாக்கும்போது, கதையை உங்களுக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. படத்தின் முடிவை முதல் வாரத்தில் படம்பிடித்துவிட்டால், ஒருபோதும் அதை மாற்றுவதற்கான சாத்தியம் நமக்கு இருக்கப்போவதில்லை. படப்பிடிப்பைத் துவங்கிய பிறகு, அதை எனக்கு ஏற்றாற்போல வளைத்துக்கொள்ளும் முறையை நான் பெரிதும் விரும்புகிறேன். அதனாலேயே பலவற்றையும் நான் மறுக்க வேண்டியிருந்தது. 90களிலும் சமீப காலங்களில் மிக அதிகமாகவும் பலவற்றையும் நான் மறுக்கவே செய்திருக்கிறேன். திரைப்படங்கள் ரொம்பவே திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் திருத்தியெழுதப்படுகின்றன. அவற்றை உருவாக்குவதற்குப் பணம் செலவு செய்பவர்களுக்கு, படப்பிடிப்பு துவங்கும் முன்பாக இறுதியில் தங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்கிற புரிதல் நிச்சயமாக இருந்தாக வேண்டும். நாம் அதை அவர்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும். இந்த முறையியல் எனக்கு ஒத்துவராது என்று கருதுகிறேன். என்னளவில் இனிமேல் அதற்குச் சாத்தியமும் இல்லை. ஆனால், ஆவணப்படங்களில் இது சாத்தியம் என்று பின்னர் உணர்ந்தேன். யாரும் ஆவணப்படங்களுக்குத் திரைக்கதை எழுதும்படி உங்களை நிர்பந்திப்பதில்லை. எனினும், இப்போது சிலர் அதற்கும் திரைக்கதைகள் எழுதுகிறார்கள். எனக்கு அதிகளவிலான சுதந்திரம் இருக்கிறது என்கிற காரணத்தினாலேயே மீண்டும் மீண்டும் ஆவணப்படங்களை உருவாக்கினேன். புனைவுப் படங்களை மட்டுமே உருவாக்கியுள்ள இயக்குநர்கள் தமது சிந்தனையை இன்னும் தெளிவாக்கிக்கொள்ள ஆவணப்படங்களையும் உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

Anselm
Anselm

உங்கள் சமீபத்திய ஆவணப்படம் Anselm. அன்செல்ம் கெய்ஃபெரின் கலைப் படைப்புகளை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் போதவில்லை. உங்களால் அவற்றை விவரிக்க முடியுமா?

இல்லை. என்னாலும் முடியாது. அது மிகவும் பரந்த அளவிலானது என்பதோடு ரொம்பவும் சிக்கலானதும் கூட. இந்தப் பிரபஞ்சத்தில் தனக்கு தோன்றும் எதையும் வரைவதற்கு அஞ்சாத ஒரே ஓவியர் அவர்தான் என்று கருதுகிறேன். ஒவ்வொன்றுமே கலைப் படைப்பாக மாற்றுவதற்குச் சாத்தியமுள்ளதுதான் என்றும் எதை வேண்டுமானாலும் வரையலாம் என்றும் அவர் நினைக்கிறார். பிரபஞ்சத்தையும் (அதோடு மேக்ரோஸோமையும் மைக்ரோஸோமையும்), அறிவியல் மற்றும் வரலாற்றையும் தொன்மங்கள் மற்றும் மதங்களையும் பிற எல்லாவற்றையும் கூட வரைய முடியும் என்று அவர் கருதியிருக்கிறார். ஓவியத்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்த பரந்த யோசனைகளையும் தைரியத்தையும் கொண்டிருந்த வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் இருவருமே போருக்குப் பிறகு 1945ல் ஜெர்மனியில் பிறந்தோம். அதனால், வரலாறு இல்லாத ஒரு நாட்டில் சொல்லப்படும் அதே கதைகளுடன்தான் இருவரும் வளர்ந்திருக்கிறோம். வரலாறோ கடந்த காலமோ இல்லாத ஒரு நாட்டில் எங்களுக்கான ஓர் உலகத்தை நாங்கள் மறுவுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. கடந்தகால வரலாற்றுத்தன்மையை மிகுந்த தைரியத்துடன் அன்செல்ம் எதிர்கொண்டார். நம்மைச் சுற்றியுள்ள பலரும் அழிக்கவும் மறக்கவும் நடந்தவற்றை மாற்ற முடியா நிலையிலும் இருக்கும் ஜெர்மனியின் வரலாற்றுப் பக்கங்களில் சிலவற்றைத் திறந்து ஜெர்மனியர்களுக்கும் உலகிற்கும் மீண்டும் அவர் வெளிப்படுத்தினார். அவரது கலை எப்படியானது என்பது மக்கள் அனுபவம்கொள்ளும் வகையில் நான் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறேன். அவரது கலை குறித்த எனது நிலைப்பாடு அல்ல அது. நான் இதுவரை உருவாக்கிய எதை விடவும் ஒரு பெரும் அனுபவத்தை அப்படைப்பு உருவாக்குவதாக இருக்கிறது. அதனால்தான் அது ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.

ஏன் சில ஜெர்மனியர்கள் அவருடைய படைப்புகளைச் சர்ச்சைக்குரியவையாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அவற்றில் நாஜி எதிர்ப்புப் பண்பை விளக்க முடியுமா?

ஃபாஸிசம், நாஜி ஜெர்மனி, இனப் படுகொலை ஆகியவற்றைப் பற்றிப் பேசக்கூடாது என்கிற ஒருமித்த கருத்து நிலவிவந்த 1960, 70களில் அன்செல்ம் அவை குறித்த கருத்துகளை முன்வைக்கலானார். பல ஜெர்மனியர்கள் நாஜிக்களால் தவறாகப் பிரயோகிக்கப்பட்ட தொன்மங்களைக் கையாள்பவராக அவரைக் கருதினார்கள். நாஜிக்கள் ஜெர்மனியின் பல்வேறு கலாச்சாரக் கூறுகளையும் ரொமாண்டிசம் உள்ளிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல்வேறு போக்குகளையும் தன்வயப்படுத்தி அவற்றைத் தமது இயங்குமுறையின் ஒரு கூறாக மாற்றிக்கொண்டனர். நாஜிக்களால் சிதைக்கப்பட்ட அனைத்தையும் மீண்டும் அணுகுவதற்கான வாய்ப்பை உருவாக்குபவராக அன்செல்ம் இருக்கிறார். ‘இதுபோன்றவற்றை விரும்புகிறார் என்றால், நிச்சயம் அவரும் ஒரு நாஜியாகத்தான் இருந்தாக வேண்டும்’ என்று பலரும் அவரைப் பற்றி நினைத்தார்கள். ஆனால், அவருடைய நோக்கம் என்பது எந்தளவிற்கு ஜென்மனியின் வரலாறும் தொன்மங்களும் கலையும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதுதான். நாங்கள் மிக ஆழமாகப் புதைத்து அதன் மீது போர்வையை வைத்து மூடியிருந்த ஒன்றைத் தோண்டி அவர் அதன் மூடியைத் திறந்துவிட்டார். மிகுந்த மன தைரியம் உடையவர் அவர். அதனாலேயே உலகத்தில் வேறு எங்கேயும் விட ஜெர்மனியர்களால் அதிகளவில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவராக அவர் இருக்கிறார். அமெரிக்கர்கள்தான் அவரைக் கண்டுகொண்டனர். அதனால் அவருடைய படைப்புகள் நியூ யார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன. வாழ்ந்து வரும் தலைசிறந்த கலைஞர் என அவரைக் கொண்டாடிய அதே நேரத்தில் ஜெர்மனியில் அவர் எந்தளவிற்குச் சர்ச்சைக்குரிய ஒருவராகக் கருதப்படுகிறார் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், அவருடைய படைப்புகளின் மேதமைகளை மதிப்பிட வரலாற்றுடனான அவரது ஈடுபாட்டை அவர்கள் கருத்தில்கொள்ளவில்லை. அல்லது அவர்களுக்கு அந்தப் பளு தேவைப்படவில்லை.

அடுத்து என்ன செய்யவிருக்கிறீர்கள்?

ஏற்கெனவே பல வருடங்களாக ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி வருகிறேன். அதுவொரு நீண்ட காலத் திட்டப்பணியாகும். அதனால், அதை நிறைவுசெய்ய இன்னும் கூடுதலாகச் சில வருடங்கள் தேவைப்படும். பிரிட்ஸ்கர் விருது பெற்றிருக்கும் மிகச் சிறந்த கட்டடவியல் கலைஞர் குறித்தது அந்த ஆவணப்படம். அவர் ஏராளமான வடிவமைப்புகளைச் செய்திருக்கவில்லை என்றாலும், அவரது சமகாலத்திய கட்டடவியல் கலைஞர்களிடம் அத்துறையில் தமக்கு விருப்பமானவர் யாரென்று கேட்டால் எல்லோருமே அவருடைய பெயரைத்தான் சொல்வார்கள். ஆமாம். அவரேதான். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஜூம்தோர். லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட்டுக்காக ஒரு கட்டடத்தை அவர் வடிவமைத்து வருகிறார். அவர் மிகவும் தீவிரமானவர். எதைப் பயனுள்ளது என்றும் அவசியமானது என்றும் கருதுகிறாரோ அதை மட்டுமே அவர் கட்டமைக்கிறார். அவரைப் பற்றிய இந்த ஆவணப்படத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கினேன்.

ராம் முரளி <raammurali@gmail.com>

raam murali

Amrutha

Related post